Skip to content
Home » மார்க்கோ போலோ #2 – போப் பதவியேற்பும் மார்க்கோ போலோ பயணமும்

மார்க்கோ போலோ #2 – போப் பதவியேற்பும் மார்க்கோ போலோ பயணமும்

பட்டுப் பாதையில் பயணத்தைத் தொடங்கிய நிகோலா போலோவும், அவரது உறவினர் மாப்பியோ போலோவும் செங்கீஸ்கானின் பேரன் குப்ளாய்கானைச் சந்தித்தனர்.

மங்கோலிய அரசன் குப்ளாய்கானின் நன்மதிப்பைப் பெற்ற நிகோலோ போலோ, அரசனின் தூதராகச் சில செய்திகளைப் போப் தலைவரிடம் கொண்டு செல்லும் பணியை விரும்பி ஏற்றுக்கொண்டார். அதன்படி கிறித்தவ அறிஞர்கள் நூறு பேரையும், இயேசுவின் கல்லறையில் இருக்கும் புனித எண்ணெய்யும் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வெனிஸ் நகரத்தை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தனர்.

வெனிஸ் நகரத்தில் மகனையும் உறவுகளையும் சந்தித்து குப்ளாய்கானின் தூது பணிக்காக அடுத்த பயணத்தைத் திட்டமிட்டபோது தனது மகன் மார்க்கோ போலோவும் உடன் வர, பெரும் பயணம் தொடங்கியது. தனது தந்தையுடன் பயணத்தைத் தொடங்கிய மார்க்கோ போலோ பல நிகழ்வுகளைக் கண்ணுறும் வாய்ப்பைப் பெற்றார். இதையடுத்து குப்ளாய்கானின் தூது பணிக்காக எல்லோரும் போப் தலைவரைச் சந்திக்கச் சென்றனர்.

1269-ல் போப் தலைவர் போப் க்ளெமென்ட் மரணமடைய, புதிய போப் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பதை அறிந்த மார்க்கோ போலோவின் தந்தை, தனக்கு நெருக்கமான கிறித்தவ ஆலயத்தின் தலைவர் கிரிகோரி எக்ஸ் என்பவரைச் சந்தித்து மங்கோலிய அரசன் குப்ளாய்கானின் செய்திகளைக் கூறினார். இதற்குப் பதிலளித்த கிரிகோரி எக்ஸ், கார்டினல்கள் இன்னும் புதிய போப் யாரையும் தெரிவு செய்யவில்லை எனப் பதிலளித்தார்.

1269 முதல் 1971 வரை புதிய போப் தேர்ந்தெடுப்பதில் கடுமையான சிக்கல்களைக் கத்தோலிக்க திருச்சபை சந்தித்தது. கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் கிட்டத்தட்ட 33 மாதங்கள் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படாத நிலை இந்தத் தேர்தலில்தான் நீடித்து வந்தது.

உலகின் சக்தி வாய்ந்த அரசன் குப்ளாய்கானின் நட்பைக் கைவிட விரும்பாத போலோக்கள், தம் மகன் மார்க்கோ போலோவையும் அழைத்துக் கொண்டு ஏக்ரே என்ற நகரத்தை மீண்டும் அடைந்தனர். அங்கு ஏற்கெனவே சந்தித்த கிரிகோரி எக்ஸ் என்ற திருச்சபைத் தலைவரைச் சந்திக்கக் காத்திருந்தும் அவரைச் சந்திக்க இயலவில்லை.

புதிய போப்பும் தேர்வாகவில்லை என்ற செய்தி கிடைக்க, வேறு வழியில்லாமல் ஆசியாவை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்க இருந்த நேரத்தில் அவர்களை ஒரு தூதர் சந்தித்தார். அவர்களுக்கு ஆச்சரியமூட்டும் ஒரு செய்தி கிடைத்தது.

புதிய போப் தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்றும், 2 வருடம் ஒன்பது மாதங்களாக நடைபெற்ற தேர்தலில் நிகோலோவின் நண்பரான கிரிகோரி எக்ஸ்தான் இப்போது போப் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற செய்து அது. இதைக் கேட்டதும் போலோக்கள் மகிழ்ந்தனர்.

போப் தங்கியிருக்கும் அரண்மனைக்குச் சென்று, புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிகோரிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பின் சில நாட்கள் கழித்து மங்கோலிய அரசன் குப்ளாய்கான் கேட்ட சில விபரங்களைப் புதிய போப்பிடம் தெரிவித்தார். உடனே அவரும் புனித எண்ணெய்யை ஒரு குடுவையில் அளித்தார்.

அதே சமயம் குப்ளாய்கான் கேட்ட நூறு கிறிஸ்தவ அறிஞர்களை உடனடியாக அனுப்ப இயலாது என்றும், சிறிது காலத்திற்குப் பின்னர் அனுப்புவதாகவும் கூறிய கிரிகோரி, இப்போதைக்கு இரண்டு கிறித்தவ அறிஞர்களை மட்டும் போலோக்களுடன் அனுப்புவதாகக் கூறினார். இதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு போலோக்களும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.

ஆனால் அவர்களது பயணத்தில் இடையூறு ஏற்பட்டது. போலோக்களுடன் வந்த இரண்டு கிறித்தவ அறிஞர்களும் மங்கோலியர்களைப் பற்றி அறிந்து, அங்கு சென்றால் உயிர் வாழ்வது சிரமம் என அஞ்சினர். இதையடுத்து போலோக்களுக்குத் தெரியாமலேயே தப்பிச் சென்றனர். இது தெரிந்தவுடன் போலோக்கள் திகைத்துவிட்டனர்.

ஆனால் வேறு வழியின்றி மீண்டும் பயணத்தைத் தொடங்கிய நிகோலோ, மார்க்கோ போலோவுக்கு பயணங்களின் நிலைகளையும், மங்கோலிய அரசு பற்றியும், அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் எடுத்துக்கூறினார்.

புதிய போப் தேர்வு செய்வதற்கு எவ்வாறு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆனதோ அதேபோல மார்க்கோ போலோ குழுவினரின் பயணமும் கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளைக் கடந்தது. போலோக்கள் தங்களின் பயணத்தின் வழியில் கடுமையான பாலைவனங்களைக் கடக்க மிகவும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

வழியில் குளிர்காலங்களையும், கடும் கோடைக் காலங்களையும், மழைக்காலங்களையும் அவர்கள் சந்தித்தனர். ஆனாலும் மங்கோலிய அரசனைக் காண வேண்டும் என்ற முனைப்பில் அவர்களது பயணத்தைத் தொடர்ந்தது. பல நகரங்களைக் கடந்து வந்த போலோக்கள், வழியில் பாக்தாத் என்ற நகரை அடைந்தனர்.

வழியில் பார்த்த அழகிய நகரங்களில் அனைத்திலும், மிக முக்கிய நகரமாக பாக்தாத்தைக் குறிப்பிடும் மார்க்கோ போலோ, பாக்தாத் நகரத்தின் நடுவில் பாயும் நதி இந்தியப் பெருங்கடலுக்கு அழைத்துச் செல்லும் பயண நதியாகவும் திகழ்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.

பாக்தாத் நகரிலிருந்து கடலுக்குப் பயணிக்கச் சுமார் 18 நாட்கள் ஆகின்றன என்றும், இந்தப் பகுதியில் சுவையான பேரிச்சம் பழங்கள் கிடைக்கின்றன என்றும் பதிகிறார்.

பாக்தாத் பற்றி வியப்பாகப் பல செய்திகளைக் கூறினாலும், குறைவான செய்திகளையே மார்க்கோ போலோ குறிப்பிடுகிறார். பாக்தாத் நகரை அடுத்து வழியில் ஈரானின் தப்ரீஸ் நகரை அடைந்தபோது சிறிய இளைப்பாறுதலை மார்க்கோ போலோ குழுவினர் அடைந்தனர்.

தப்ரீஸ் நகரில் சில நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டு அடுத்து பெர்சியா சென்றனர். அங்கிருந்து மிக அழகியக் குதிரைகள், நிலப்பகுதி வழியாக இந்திய அரசர்களுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன என்பதையும் போலோ பதிவு செய்துள்ளார்.

பெர்சியாவுக்கு அடுத்து அவர்கள் பயணப்பட்ட நகரம் யாஸ்ட். யாஸ்ட் என்பது ஈரானில் உள்ள ஒரு பழமையான நகரம். இது யாஸ்ட் மாகாணத்தின் தலைநகராகத் திகழ்ந்தது.

யாஸ்ட் என்பதற்கு ‘தூய்மையானது’ மற்றும் ‘புனிதமானது’ என்று பொருள். இந்நகரத்தை ‘நல்ல மற்றும் உன்னத நகரம்’ என்று மார்க்கோ போலோ குறிப்பிடுகிறார். (2017-ம் ஆண்டு யுனெஸ்கோ இந்த நகரத்தை உலகின் மிகப் பாரம்பரிய நகரம் என்று அடையாளப்படுத்தியும் உள்ளது).

யாஸ்ட் நகரம் பாரசீக ஈரானையும் கெர்மானையும் இணைக்கும் நகராக விளங்கியது என்று மார்க்கோ போலோ குறிப்பிடுகிறார். தப்ரீஸ், யாஸ்ட் நகரங்களில் பல்வேறு அனுபவங்களைப் பெற்ற போலோ குழுவினர், தங்களின் பயணத்தை அதே பாதையில் மீண்டும் ஒரு கோடைக் காலத்தில் தொடர்ந்தனர்.

இத்தாலியிலிருந்து பயணத்தைத் தொடங்கிய மார்க்கோ போலோ குழுவினர், சில நகரங்களில் இளைப்பாறுதலை ஏற்படுத்திக் கொண்டு ஈரான் நாட்டின் தென் கிழக்கு மூலையில் உள்ள கெர்மான் நகரை அடைந்தபோது கடுமையான கோடைக் காலத்தின் நிலையை இயல்பாகவே உணர்ந்தனர்.

கெர்மான், மலைகளால் சூழப்பட்டு ஆனால் மழையை ஆண்டுக்கணக்கில் காணாத நகராகவே இருந்தது. கெர்மன் நகரத்தின் சரிவுப் பகுதியில் மட்டும் கடும் குளிர் இருந்ததை மார்க்கோ போலோ பதிவு செய்கிறார்.

கெர்மான் நகரில் ஹார்முஸ் என்ற சமவெளிப் பகுதி, நீண்ட பாதைகளைக் கொண்டது. அதில் கொள்ளையர்களின் ஆபத்தும் உள்ளது என்பதை மார்க்கோ போலோ பதிவு செய்து, அந்நகரில் துறைமுகம் ஒன்று உள்ளது என்பதையும் குறிப்பிடுகிறார். அந்தத் துறைமுகத்திற்கு இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலிருந்தும் வணிகர்கள் வந்து பொருட்களை விற்பனை செய்கின்றனர் என்று தந்தை நிகோலோ மூலம் அறிந்தார்.

தனது தந்தை நிகோலோவுடன் பல ஆண்டு பயணத்தை நிதானமாகக் கடந்த மார்க்கோ போலோ, உலகின் பல அதிசயங்களைக் கண்டார். கெர்மான் நகரில் பல சிறு நகரங்களைக் கண்ணுற்று தமது குழுவுடன் பயணித்த நிகோலோ குழுவினர், அடுத்துச் சில நாட்களுக்கு மிகக் கடுமையான நீர் அறவே இல்லாத ஒரு நிலப்பகுதியைக் கடக்கும் பயணத்தைத் தொடங்கினர்.

வழியில் ஏழாம் நாளில்தான் அந்தக் குழுவினருக்குப் பருக நீர் கிடைத்தது. அந்தப் பாதைகளைக் கடந்து குஹானன் நகரைக் கடந்து பல நிலங்களின் வாழ்வியலைக் கூர்ந்து நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தார் மார்க்கோ போலோ.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *