Skip to content
Home » மார்க்கோ போலோ #4 – மங்கோலியப் பேரரசு பற்றி அறிதல்

மார்க்கோ போலோ #4 – மங்கோலியப் பேரரசு பற்றி அறிதல்

பகலிரவு பலவற்றையும், கடுமையான மழைக்காலங்களையும் கடந்து வந்த நிகோலா குழுவினர், சமர்கண்ட் பகுதியில் சகதை அரசனின் விருந்தினர்களாகச் சில நாட்கள் தங்கினர். மார்க்கோ போலோவின் உடல் நலம் பெற்றவுடன் பயணம் தொடர்ந்தது.

நிகோலோ குழுவினரின் வருகை ஒற்றர்களின் மூலமாக குப்ளாய்கானுக்குத் தெரிவிக்கப்பட்டது. வழியில் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரும்படி அந்தந்தப் பகுதி ஆட்சியாளர்களுக்கு குப்ளாய்கான் உத்தரவிட்டிருந்தார்.

பெரிய மலைகளை எல்லாம் கடந்து திபெத் பகுதிக்குள் நிகோலோ குழுவினர் சென்றனர். திபெத், எட்டு ராஜ்ஜியங்களையும், ஏராளமான நகரங்களையும் உள்ளடக்கிய பெரிய பரப்பளவாக இருந்தது. இந்தப் பகுதி முழுமையும் ‘கிரேட் கான்’ என்றழைக்கப்படும் குப்ளாய்கானுக்கு உரிய பகுதியாக இருந்ததால் எவ்வித சிரமும் இன்றி அவர்களுடைய பயணம் தொடர்ந்தது.

திபெத் பகுதி மக்கள் சிலை வழிபாடுகளில் ஆர்வமுடையவர்களாகத் திகழ்ந்தனர். அதிகமான வாசனைப் பொருட்களை உற்பத்தி செய்து வணிகத் தொழிலில் சிறந்து விளங்கினர். மலைகளால் சூழப்பட்ட இப்பகுதியைக் கடந்து மங்கோலிய அரசனைக் காண நிகோலோ குழுவினர் பயணப்பட்டனர்.

மங்கோலிய சாம்ராஜ்ஜியம் குறித்தும், செங்கிஸ்கான் வழிவந்த குப்ளாய்கான் பற்றியும், நிகோலோ தனது மகன் மார்க்கோ போலோவுக்கு எடுத்துரைத்தார். மங்கோலியப் பேரரசு, இராஜ்ஜியம் அமைத்த வரலாற்றைக் கேட்கத் தொடங்கினார் மார்க்கோ போலோ.

வெற்றி பெற வேண்டும் என ஓடத் தொடங்கியவர்களில் பாதிப் பேர், பயணத்தைத் தொடங்கிய இடத்திலேயே விட்டுவிடுகின்றனர். மீதிப் பேர் ஓடினாலும் வெற்றி என்பது எதிராளியை வீழ்த்தியவருக்குத்தான் கிடைக்கிறது. அப்படி வெற்றி பெற்றவரின் பூமியில் நாம் நடந்துகொண்டிருக்கிறோம் என்றபோது மார்க்கோ போலோ ஆர்வமுடன் கேட்கலானார்.

இன்றிலிருந்து சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் மங்கோலிய அரசை உருவாக்கிய செங்கிஸ்கான் பிறந்தார். செங்கிஸ்கான் பிறந்தபோது மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. பல நாடோடிக் கூட்டங்களாக மங்கோலிய மக்கள் சிதறி வாழ்ந்து வந்தனர். இதனால் பல எதிரிக்கூட்டங்கள் மங்கோலிய நாடோடி மக்களைத் தாக்கி வந்தனர்.

நாடோடி குழுக்களின் சண்டையில், செங்கிஸ்கானின் தந்தையும் நண்பர்களும் கொல்லப்பட்டனர். 12 வயதிலேயே போருக்குத் தயாரானார் செங்கிஸ்கான். நாடோடி மக்கள் குழுக்களை ஒருங்கிணைத்து, ‘மங்கோலியா’ என்ற வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டும் என்று செங்கிஸ்கான் கனவு கண்டார். தமது கனவுக்குச் செயல் வடிவம் அளிக்கப் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார்.

செங்கிஸ்கான் மங்கோலிய இனக்குழுக்களை ஒன்றிணைத்து, மங்கோலியப் பேரரசைக் கட்டமைத்தார். வலிமையான இராணுவத்தை உருவாக்கி, வட சீனாவின் அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினார். இப்போது நாம் நடந்து செல்லும் பாதைகளை, நகரங்களை செங்கிஸ்கான் கைப்பற்றி மிக வலிமையான தேசமாகக் கட்டமைத்தார்.

உலகின் பெரும்பாலான நிலப்பகுதிகளை வென்றெடுத்து ஆட்சிபுரிந்த ஆசிய மன்னன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் செங்கிஸ்கான். ஐரோப்பாவின் சில பகுதிகளையும் செங்கிஸ்கான் தனது மங்கோலியப் பேரரசின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றார்.

தனது தந்தை கூறிவரும் மங்கோலிய அரசின் வெற்றிகளை ஆர்வமுடன் கேட்டு வந்த மார்க்கோ போலோ, இவ்வளவு பரந்த நிலப்பகுதியை எவ்வாறு வென்றெடுத்தார் என்று தந்தையிடம் கேட்டார்.

செங்கிஸ்கானின் மங்கோலிய அரசின் வெற்றிக்கு முக்கியக் காரணம், ராணுவத்தைக் கையாளும் முறை என்று தந்தை நிகோலோ கூறினார். செங்கிஸ்கான் மூன்று பிரிவாக இராணுவத்தை வைத்திருந்தார். ஒரு பிரிவு சண்டையிட்டால் இன்னொரு பிரிவு ஓய்வெடுக்கும். இன்னொரு பிரிவு மோதலுக்குத் தயாராக இருக்கும். எதிரிப் படைகளின் முழுமையான பலத்தை அறிந்து அவர்கள் சோர்வடையும்போது மிகத் தீவிரமாகத் தாக்கும் உத்தியை மங்கோலிய வீரர்களுக்கு செங்கிஸ்கான் பயிற்றுவித்தார்.

நாடோடி இனக்குழுவை இராணுவமாக மாற்றி, மங்கோலிய அரசை உருவாக்கி, மிகச் சிறந்த ஆட்சி அளித்த செங்கிஸ்கான், ஒரு போரில் மர்மமான முறையில் இறந்து விட்டதாக வரலாறு கூறுவதை நிகோலோ தனது மகனுக்குக் கூறினார்.

செங்கிஸ்கானுக்குப் பிறகு அவரது மகன்களில் ஒருவரான ஒக்தாயி என்பவர் மங்கோலிய அரசின் தலைமையை ஏற்று அவர் வழியிலேயே பல இராஜ்ஜியங்களை மங்கோலிய எல்லைக்குப்படுத்தினார். ஒக்தாயி, செங்கிஸ்கானால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன் என்பதால் எவ்விதச் சிரமமும் இன்றி இராணுவத்தை வழிநடத்தி செங்கிஸ்கானின் கனவுக்குத் துணை நின்றார்.

ஒக்தாயி ஒரு பெரிய படையெடுப்புக்கு ஆயத்தமான நிலையில் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் வழிவந்த தற்போதைய ககான் குப்ளாய்கான் மங்கோலிய அரசை வழிநடத்தி வருகிறார். சமவெளிகள், பாலைவனங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள், கடல்கள் என அனைத்தையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வலிமையான அரசனாக குப்ளாய்கான் திகழ்கிறார்.

செங்கிஸ்கான் சீனாவின் ஒரு பகுதியை வெல்ல, அவரின் வாரிசுகள் அடுத்தடுத்த பகுதிகளை வெல்ல, குப்ளாய்கான் ஒட்டுமொத்தச் சீனாவையும் வென்று தன் மங்கோலிய அரசின் கீழ் கொண்டு வந்தார். உலகின் மிகச் சக்தி வாய்ந்த மங்கோலிய அரசன் குப்ளாய்கானின் தூதுவர்களாக நாம் இப்போது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

சென்ற முறை நாங்கள் மங்கோலியப் பயணம் வந்தபோது நூறு கிறிஸ்தவ அறிஞர்களையும், இயேசுவின் புனிதக் கல்லறை எண்ணெய்யையும் கொண்டு வாருங்கள் என்று கேட்டதற்காக நாம் மீண்டும் குப்ளாய்கானைச் சந்திக்க வந்துள்ளோம்.

செங்கிஸ்கான் உருவாக்கிய மங்கோலிய அரசின் கனவை நனவாக்கி முழுமையான சீனாவையும் ஆட்சி புரியும் குப்ளாய்கானை நாம் காணச் செல்கிறோம் எனச் சொல்லி முடித்தார்.

வளமும் செல்வங்களும் நிறைந்த மங்கோலிய அரசனைக் காண மார்க்கோ போலோ சென்ற வழிகளில் நிறைய மரங்கள் நடப்பட்டுப் பேணப்பட்டு வந்ததை மார்க்கோ போலோ கண்டார். குப்ளாய்கான் ஆணையால் அடுத்த ஒரு மாதம் தங்களின் பயணம் இனிமையாக இருக்கும் என்று போலோக்கள் எண்ணினர்.

கிழக்கு நோக்கிய பயணத்தில் சரசென்ஸ், சாகன் ஆகிய நகரங்களைக் கடந்து ஷாங்டு என்ற நகரத்தை போலோ குழுவினர் அடைந்தனர். அந்த நகரத்தில்தான் தற்போது குப்ளாய்கான் இருப்பதாக வீரர்கள் கூற, நிகோலோ குழுவினர் மிக மகிழ்வோடு பயணித்தனர்.

மிக நீளமான அழகான அரண்மனையைக் கண்டு ரசித்துக் கொண்டே சென்றார் மார்க்கோ போலோ. பதினேழு வயதில் பயணத்தைத் தொடங்கிய மார்க்கோ போலோ தற்போது இருபத்தியோர் வயது இளைஞராகத் தன் தந்தையுடன் குப்ளாய்கானைச் சந்திக்க அரண்மனை மதிலுக்குள் நுழைந்து அரசவையை அடைந்தார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *