ராணியான அவரது மனைவி மஹா மாயா நிறைமாத கர்ப்பவதியாக இருந்த நேரத்தில் மஹாராஜா ஒரு போருக்குச் சென்றிருந்தார். மாயாவுக்குப் பிரசவ வேதனை மெள்ளத் தொடங்கியிருந்தது. காட்டு வழியாக ஒரு பல்லக்கில் வைத்து அவள் தூக்கிச் செல்லப்பட்டாள். பிறக்க இருக்கும் குழந்தை அசாதாரணமான குழந்தையாக இருக்கும் என்று ஜோசியர்களும் மருத்துவ சாஸ்திர நிபுணர்களும் கூறியிருந்தனர். பிரசவத்துக்குத் தன் அம்மா வீட்டுக்குப் போகவேண்டுமென்றே அவள் நினைத்திருந்தாள்.
விருப்பமில்லாமல் அதற்கு அவள் கணவனான மஹாராஜா சுத்தோதனர் அனுமதி கொடுத்திருந்தார். ஏன்? அவள் சபை நடுவே அந்த வேண்டுகோளை அவரிடம் மாயா வைத்தாள். தனியாக அந்தப்புரத்தில் கேட்கவில்லை. சபை முன்னர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ராணியின் வேண்டுகோளை மறுத்தால் அது ராஜாவுக்குத்தான் கெட்டபெயரைக் கொடுக்கும்.
ஆனாலும் அப்படிப்போவது அபாயங்கள் நிறைந்ததாக இருந்தது.
‘உன்னோடு யார் வருவார்கள்?’ என்று மன்னர் கேட்டார்.
‘என் தோழிகள் மற்றும் உதவியாளர்கள்’ என்று ராணி பதில் சொன்னாள்.
‘பெண்களா?’ என்று ராஜா கேட்டார். அதில் பல அர்த்தங்கள் பொதிந்திருந்தன. காட்டு வழியில் செல்லவேண்டும். மிருகங்களும் மிருகங்களைப்போன்ற மனிதர்களையும் விரட்ட பெண்களால் முடியுமா? இதுவே ராஜாவின் கேள்வியின் பின்னால் இருந்த கவலை.
‘சரி போ. ஆனாலும் சில வீரர்களும் உன்னோடு வரட்டும்’ என்று அனுமதி கொடுத்தார்.
மாயா புன்னகைத்தாள். சரி சில வீரர்களும் உடன் வரட்டும் என்று அதற்கு அர்த்தம்.
அவளோடு விவாதம் செய்ய சுத்தோதனர் விரும்பவில்லை. அவள் பிடிவாதக்காரி. ஆபத்து உள்ளது என்று சொன்னாலெல்லாம் அவள் கேட்கமாட்டாள். துணிச்சல்காரி.
ராஜாவின் படை புறப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன் ராணி மஹாமாயா கபிலவஸ்துவிலிருந்து கிளம்பினாள். உதவியாளர்கள், சில வீரர்கள் என ஒரு பட்டாளமே அவளோடு சென்றது. அதன் தலைவியாக அரசவை ஊழியர்களில் மூத்தவளான கும்பீராவும் சென்றாள். ஆறு வீரர்கள் மட்டுமே உடன் சென்றனர்.
அவர்கள் அரசன் சுத்தோதனரோடு போருக்குச் செல்லாதவர்கள். காரணம் அவர்களுடைய வயதுதான். அவர்களல்லாமல் ராணியின் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு நான்கு ஊழியர்கள். பல்லக்குத்தூக்கிகள்.
ஏற்ற இறக்கங்களில் பல்லக்கு சற்று மேலும் கீழுமாக ஆடியபோது மட்டும் ராணி மஹாமாயா கொஞ்சம் முனகினாள். மற்றபடி அமைதியாகத்தான் வந்தாள். பல்லக்கின் பின்னால் மூன்று பெண்கள் நடந்து வந்துகொண்டிருந்தனர். வழியில் கொள்ளையர் தொல்லை இருக்கலாம் என்று மூதாட்டி கும்பீரா அஞ்சினாள். ஏனெனில் மான் தோல், வாசனைப்பொருள்களையெல்லாம் நேபாளத்துக்குக் கொள்ளையர் கடத்திச்செல்லும் பாதையாக அது இருந்தது. அதோடு புலிகளின் தொல்லையும் அதிகமாக இருந்த பகுதி அது. பகல் வேளையில்கூட புலிகள் பாய்ந்துவரலாம்.
விரைந்து சென்ற கும்பீரா தலைமைக் காவலரான பாலகங்காதரரிடம் போனாள்.
‘ரொம்ப நேரம் ராணியால் தாக்குப்பிடிக்க முடியாது’ என்றாள்.
‘ஆனால் தூரத்தை என்னால் குறைக்க முடியாதே’ என்றார் பாலகங்காதரர்.
‘ஆனால் விரைந்து போகலாம் அல்லவா?’ என்றாள். சரியான பதிலடி. சுத்தோதனருடன் போருக்குப் போகமுடியவில்லையே என்ற வருத்தம் பாலகங்காதரருக்கு இருந்தது. ஆனால் தன் மனைவியோடு துணையாக ஒரு மூத்தவர் செல்லவேண்டுமென்று ராஜா சுத்தோதனர் விரும்பினார்.
நல்ல நிலவொளியில் அவர்கள் பயணம் ஒரு முடிவுக்கு வந்தது. லும்பினித் தோட்டத்துக்குள் அவர்கள் நுழைந்தனர். அந்த ராஜ்ஜியத்திலிருந்த மிகப் புனிதமான இடங்களில் அதுவும் ஒன்று. வழியிலெல்லாம் குழந்தை பிறக்காது என்று மாயாவுக்குத் தெரிந்திருந்தது. தனக்குப் பிறக்க இருக்கும் குழந்தை ஒரு தெய்விகக்குழந்தை என்று அவள் உள்ளுணர்வு சொல்லியது.
பிரசவ வேதனையின் இறுதிக்கட்டத்தில் மாயா இருந்தபோதுதான் பல்லக்கு லும்பினித் தோப்புக்குள் நுழைந்தது. அங்கே ஒரு ராட்சசத் தூணைப்போல இருந்த சால மரத்தின் தண்டை கெட்டியாக மாயா பிடித்துக்கொண்டாள். அவளைச்சுற்றி அரசவைப்பெண்கள் நின்றுகொண்டனர். கணவர் சுத்தோதனர் மிகவும் ஆசைப்பட்டவாறே ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது மாயா தேவிக்கு.
பிறந்த குழந்தையை முதலில் வாங்கியவள் கும்பீராதான். அதன் உடம்பில் ஒட்டிக்கொண்டிருந்த ரத்தத்தையெல்லாம் அவள்தான் கழுவித்துடைத்தாள். ராணி மாயா கொஞ்சநேரம் அமைதியாக இருந்தாள். கும்பீராவுக்கு கொஞ்சம் அச்சமாக இருந்தது. ஏனெனில் மாயாவின் பிரசவ வேதனை வழக்கத்துக்கு மாறாக ரொம்ப நேரம் நீடித்திருந்தது.
‘என் கணவர் இனி நிம்மதியாகச் சாகலாம். நான் போனபிறகு என்னை அவர் சபிக்க மாட்டார்’ என்று மாயா சொன்னாள்.
இந்த நேரத்தில் இறப்பைப்பற்றி அவள் ஏன் பேசவேண்டும்? வேதனைகளெல்லாம்தாம் முடிந்துவிட்டனவே?! இனி பஞ்சணைக்கும் பட்டு மெத்தைக்கும் திரும்ப வேண்டியதுதானே? இப்படி அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கையில் வானத்தில் மேலேறியது பௌர்ணமியின் முழுநிலவு. ஒரு ஆசீர்வாதத்தைப்போலப் பரவியது அதன் வெளிச்சம்.
அந்த நேரத்தில் உட்பட்டி என்ற ஒரு பெண் சட்டென்று மாயாவின் மார்புத்துணியை விலக்கி அவள் மார்பகங்களில் நிலவொளி படுமாறு செய்தாள்.
‘என்ன செய்கிறாய்?’ என்று மாயா கேட்டாள்.
‘இல்லையம்மா, நிலவொளியில் மார்பகங்களைக் காட்டினால் பால் நிறைய சுரக்கும்’ என்று உட்பட்டி சொன்னாள். மாயாவும் உடன்பட்டாள். ஏற்கெனவே அவள் மார்பங்களில் பால் நிறைந்திருந்தது.
என்னவோ ஒரு உணர்வு அவளுக்குள் எழுந்தது. குழந்தையைத் தூக்கி பௌர்ணமி நிலவில் உயர்த்திக் காட்டினாள்.
‘பாருங்கள். இப்போது இவன் அழாமல் இருக்கிறான். நான் உணர்வது போலவே இவனும் உணர்கிறான்’ என்றாள். ஏற்கனவே ஒரு வெள்ளை யானை ஒரு வெண்தாமரை மலரோடு தன்னைச் சுற்றிவந்து தனக்குள் புகுந்து மறைந்த மாதிரி கனவு கண்டிருந்தாள்.
குழந்தையை இன்னும் கொஞ்சம் மேலே தூக்கி, ‘சித்தார்த்தா’ என்று சொன்னாள். எல்லா ஆசைகளும் நிறைவேறப்பெற்றவன் என்று அதற்குப்பொருள். சுற்றியிருந்த எல்லாப் பெண்களும் தலை தாழ்த்தி மரியாதை செய்தனர்.
சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாள் மாயா தேவி இறந்து போனாள்.
புத்தர் பிறந்ததும், பல ஆண்டுகளின் கடுமையான முயற்சிகளுக்குப்பிறகு ஞானமடைந்ததும் ஒரு பௌர்ணமியன்றுதான். புத்த பூர்ணிமா அவர் பிறப்பையும் ஞானத்தின் சிறப்பையும் குறிக்கும்.
(தொடரும்)
Ref:
Buddha : A Story of Enlightenment by Deepak Chopra. Harper Collins.
Buddha : His Life and Teachings – The Gospel of Buddha by Paul Carus and Nyanatiloka’s ‘The Word of Buddha’. Peter Pauper Press