அது ஒரு வீரமான குடும்பம். தந்தையும் தாத்தாவும் ராணுவத்தில் இருந்தவர்கள். அப்பா பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சுபேதாராக சேவையாற்றியவர். வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அவரது ஒரு மகனைப்பற்றித்தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.
வரலாற்றில் தன் சேவைகளால் அந்த மகன் முக்கிய இடம் பிடிப்பான் என்று குடும்ப உறவினர் ஒருவர் ஏற்கனவே முன்னறிவிப்பு செய்திருந்தார். இவ்வளவுக்கும் அந்த சுட்டிப்பையன்தான் குடும்பத்தின் கடைசிக்குழந்தை. பதினாலாவது குழந்தை! ராணுவத்தில் பணியாற்றினாலும் குடும்ப விஷயங்களிலும் தந்தை ரொம்ப ‘ஈடுபாட்டுடன்’ இருந்துள்ளார்.
பையனுக்கு மஹாபாரதத்தின் ஐந்து சகோதரர்களில் ஒருவரான பீமனின் பெயரைத்தான் வைத்திருந்தார்கள். பீம் பாயின் அம்மாவின் பெயர்கூட பீமா பாய்தான். ஆனால் பீமனைப்போல சாப்பிடுபவரல்ல இந்த பீம். அறிவில் மட்டும் ராட்சசன்! அவரது வரலாறு அதை நிரூபித்தது.
1893-ல் ராணுவத்திலிருந்து அப்பா ஓய்வு பெற்றார். தபோலி என்ற ஊருக்குக் குடும்பம் குடிபெயர்ந்தது. பையனுக்கு ஐந்து வயதாக இருந்தபோது பள்ளிக்கூடத்தில் பீம் சேர்க்கப்பட்டார். குடும்பம் பெரிசு. ராணுவத்திலிருந்து வந்த பென்ஷன் அப்பாவுக்குப் போதவில்லை. எனவே சத்தாரா என்ற ஊரில் வேறு ஒரு வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் சத்தாராவுக்குக் குடும்பம் போய்ச்சேர்ந்த கொஞ்ச காலத்தில் அம்மா இறந்து போனார். எனவே அப்பாவின் பொறுப்பு அதிகமாகிப்போனது.
படிப்பது, எழுதுவது, கணிதம் மூன்றையும் தன் குழந்தைகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் அப்பா ரொம்ப கவனமாகவும் கண்டிப்பாகவும் இருந்தார். அதோடு ஒவ்வொரு நாளும் மஹாபாரதம், ராமாயணம், பக்த கபீரின் பாடல்கள் போன்றவற்றிலிருந்து தன் குழந்தைகளுக்குப் பல நல்ல விஷயங்களை சொல்லிக்காட்டுவார்.
நம்ம பீம் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றார். அங்கேதான் பல கசப்பான நிஜங்களை அவர் சந்திக்கவேண்டியிருந்தது. கோரெகாவோன் என்ற ஊரில் காஷியராக அப்பா வேலை செய்துகொண்டிருந்தார். அவரைப்பார்ப்பதற்காக பீமும் அண்ணன் ஆனந்தும் ஒரு கடிதம் போட்டுவிட்டுக் கடுமையானதொரு வெயில் காலத்தில் மசூர் என்ற ஸ்டேஷன்வரை ரயிலில் சென்றனர். ஆனால் அவர்கள் அனுப்பிய கடிதம் அப்பாவுக்குக் கிடைக்கவில்லை என்பது அவர்களுக்குத் தெரியாது.
அப்பா வருவார் என்று மசூர் ஸ்டேஷனில் அவர்கள் பல மணி நேரங்கள் காத்துக் கொண்டே இருந்தனர். ஆனால் அப்பா வரவில்லை. கடைசியாக கோரெகாவோன் செல்வதற்காக ஒரு மாட்டுவண்டி ஓட்டியிடம் பேசி அதில் உட்கார்ந்துகொண்டனர்.
ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்த உயர்ஜாதி மாட்டுவண்டியோட்டிக்கு ஒரு உண்மை தெரிந்துபோனது. சிறுவர்கள் இருவரும் தொடத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட ஜாதியினர்! உடனே அவன் அச்சிறுவர்களை அங்கேயே இறக்கிவிட்டான். கடைசியில் இரண்டு மடங்கு பணம் தருகிறேன் என்று சொன்னவுடன்தான் ஒத்துக்கொண்டான். அதுவும் எப்படித்தெரியுமா? பீமின் அண்ணன் ஆனந்துதான் வண்டியை ஓட்டவேண்டும்.
தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட சிறுவர்கள் உட்கார்ந்த வண்டியில்கூட உட்காராமல் அந்த வண்டியோட்டி நடந்தே வந்தான்! ஆனால் தீண்டத்தகாதவர்கள் கொடுத்த காசு மட்டும் தீண்டத்தகுந்ததாக இருந்தது!
இதைவிட மோசமான விஷயம் என்னவெனில், வழிநெடுகிலும் அச்சிறுவர்களின் தாகம் தீர்க்க யாரும் தண்ணீர்கூட கொடுக்கவில்லை! காரணம் அவர்கள் தீண்டத்தகாதவர்களாம்!
ஆனால் மனிதர்கள் எப்போதுமே ஈவு இரக்கம் இல்லாதவர்களாக இல்லை. ஒருமுறை மழையில் தொப்பலாக நனைந்து நடுங்கிக்கொண்டே பீம் பள்ளிக்கூடத்துக்குச் சென்றபோது ஒரு பிராமண ஆசிரியர் பீமைப்பார்த்து இரக்கப்பட்டு தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று தன் மகனிடம் சொல்லி பீமுக்குப் புதிய உடைகளும், சூடான உணவும் கொடுக்கவைத்தார்.
பள்ளிக்கூடத்தில் இன்னொரு பிராமண ஆசிரியர் இருந்தார். அவர் தன் மகனைப்போல பீமை நேசித்தார். ஒவ்வொரு நாளும் தான் கொண்டுவந்த சாப்பாட்டிலிருந்து ஒரு பகுதியை அவர் பீமோடு பகிர்ந்துகொண்டார். அந்த ஆசிரியரின் பெயராலேயே பின்னாளில் பீம் இந்த உலகில் அறியப்பட்டார். அறியப்படுகிறார். அந்த ஆசிரியரின் பெயரைப் பிறகு சொல்கிறேன்!
அப்பா மறுமணம் செய்துகொண்டது பீமுக்குப் பிடிக்கவில்லை. அப்பாவின் பிரச்னை மகனுக்குப்புரியுமா என்ன?! அப்பாவிடமும் சின்னம்மாவிடம் பணம் கேட்காமலிருக்க ஏதாவது வேலைக்குப்போய் சம்பாதிக்கலாமா என்றுகூட பீம் நினைத்தார். ஆனால் அது வேண்டாம் என்று கடைசியில் முடிவெடுத்து படிப்பில் மென்மேலும் கவனம் செலுத்தினார்.
குடும்பம் மும்பைக்குக் குடிபெயர்ந்தது. அங்கிருந்த எல்ஃபின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த பீம் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தினார். ஆனால் ஜாதிப்பிரச்சனை அங்கேயும் தலைதூக்கியது. தீண்டத்தகாதவர் என்று கருதப்பட்டதால் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை. பாரசீக வகுப்புக்கே அனுப்பப்பட்டார். ஆனாலும் பீம் விடவில்லை. கடுமையாக முயற்சி செய்து சமஸ்கிருதம் நன்றாகக் கற்றுக் கொண்டார். பாரசீகத்திலும் தூள் கிளப்பினார். பீமின் திறமையை அதிகரிக்கும் சவால்களை சமுதாயம் கொடுத்துக்கொண்டே இருந்தது.
கெலுஸ்கர் என்ற சமூக சீர்திருத்தவாதியின் உதவியால் பரோடா மகாராஜாவின் அறிமுகம் பீமுக்குக் கிடைத்தது. பீமோடு பேசிய மகாராஜா அவரது உண்மையான ஆர்வத்தையும் அறிவின் ஆழத்தையும் புரிந்துகொண்டார். பீம் மேற்கொண்டு படிக்க மாதம் 25/- ரூபாய் உதவித்தொகை வழங்கினார்! அந்தக்காலத்தில் அது பெரிய தொகை!
இதே பரோடா மகாராஜாவின் உதவியால்தான் நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரமும் லண்டனில் சட்டமும் படிக்கும் வாய்ப்புப்பெற்றார் பீம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் படிப்பாராம்! பதினெட்டு நிமிடங்கள் படிப்பதற்குள் நமக்கு 18 முறைகள் கொட்டாவி வந்துவிடுகிறது!
யாரைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று இந்நேரம் புரிந்திருக்கும். ஆமாம். தாதா சாஹிப் அம்பேத்கர்தான். தனக்கு உணவு கொடுத்து பிள்ளையைப்போல கவனித்துக்கொண்ட அந்த பிராமண ஆசிரியரின் பெயரும் அம்பேத்கர்தான். அவர் பெயராலேயே இவர் அறியப்படுகிறார் என்பது வரலாறு நமக்குத்தரும் வியப்புகளில் ஒன்று.
பிரதமர் நேருவின் வேண்டுகோளின்படி தனியொரு மனிதனாக இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கிய அறிவு ராட்சசன் இவர்தான். ஏழுபேர்கொண்ட குழு கான்ஸ்ட்டிட்யூஷனை உருவாக்க ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதில் ஒருவர் ராஜினாமாக் கடிதம் கொடுத்துவிட்டுப்போய்விட்டார். ஒருவர் இறந்துபோனார். ஒருவர் அமெரிக்கா போனார். இன்னும் இரண்டுபேர் டெல்லியிலிருந்து தூரமாக இருந்தனர். உடல்நிலையைக் காரணம் காட்டி வரவில்லை. கடைசியில் அம்பேத்கர் மட்டும்தான் இதை உருவாக்கினார் என்று வரைவுக்குழுவின் உறுப்பினராகவும் மனசாட்சி உள்ள மனிதராகவும் இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி சொன்னார்!
1956-ல் ஐந்து லட்சம் தலித் ஆதரவாளர்களோடு நாக்பூரில் அம்பேத்கர் புத்த மதத்தைத்தழுவினார். அவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் இந்நேரம் தலித் என்று அழைக்கப்படுவதிலிருந்து ஓர் இனமே காக்கப்பட்டிருக்கும். சமத்துவமும் சகோதரத்துவமும் அன்றாட அனுபவமாகியிருக்கும். அறிவுலக ராட்சசனின் ராட்சச சறுக்கலாக அதை நான் பார்க்கிறேன்.
(தொடரும்)
Dr. Bhimrao Ambedkar: His Life and Work. M.L.Shahare. National Council of Educational Research and Training. 1987.