மருத்துவர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள் அனைவரின் வாய்களும் ஓயாமல் புகழ்ந்துகொண்டிருந்த ஒரு பெயர் அவரது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் தன்னை ஆதரித்துப் பேசியவர்கள், கடுமையாக விமர்சித்தவர்கள் இரு தரப்பினரையுமே அவர் பொருட்படுத்தவில்லை. அவர் பாட்டுக்குத் தன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தார்.
மருத்துவ மேதைகளான ஹிப்போகிரேடஸ், காலன் ஆகியோருக்கு நடுவில் அவரது உருவப்படம் அல்லது சிலை மேற்கத்திய உலகின் பல புகழ்பெற்ற தேவாலயங்களில் வைக்கப்பட்டது. இத்தாலியக் காவிய நாயகரான தாந்தேயும் தனது காவியத்தில் அவரது பெயரை மேற்சொன்ன இருவரது பெயர்களுக்கும் நடுவில் கொண்டுவந்தார்.
அவர் பெயர் உலகப்புகழ் அடைந்தது. சீனாவின் எல்லைகள், மத்தியகால பாரிஸ், ஆக்ஸ்ஃபோர்ட் என எல்லாப் பகுதிகளிலும் நாடுகளிலும் வாழ்ந்த மருத்துவர்களும், தத்துவவாதிகளும் அவரது பெயரை உச்சரிக்கத் தவறியதில்லை. ஆக்ஸ்ஃபோர்டு நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படமே அதற்குச்சான்று.
இதுமட்டுமல்ல. இஸ்லாமிய தத்துவம் என்று சொன்னால் மேற்கத்தியர்களால் கொண்டாடப்படும் முஸ்லிம்கள் மூன்று பேர்கள்தான். அராபியரான அல் கிந்தி, துருக்கியரான அல் ஃபராபி, பாரசீகரான அவிசென்னா என்று அறியப்படும் இப்னு சீனா.
அவரது இயற்பெயர் அபூ அலீ சீனா. ஆனால் ஆங்கிலேயர்கள் அதைத்தவறாக உச்சரித்தார்கள். ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழிப்பெயரும் அவர்களது வாயில் சரியாக நுழைந்ததே இல்லை! முஸ்லிம் பெயரென்றால் கொத்துக்கறி போட்டுவிடுவார்கள். இப்படித்தான் அபூஅலிசீனா அவிசென்னா ஆனார்!
‘மருத்துவர்களின் மன்னர்’ என்று அழைக்கப்பட்ட அவர் கிபி 980-ல் ஆகஸ்ட் மாதம் புகாரா நகருக்கு அருகிலிருந்த கார்மைதான் (சூரிய நிலம்) என்ற ஊரில் பிறந்தார். ஓர் அறிஞராகவும் அதேசமயம் ஞானியாகவும் இருந்தார். பொதுவாக அறிஞர்கள் ஞானியாகவோ, ஞானிகள் அறிஞர்களாகவோ இருப்பதில்லை! அறிவு போனால்தான் ஞானமே வருமோ! ஹுஜ்ஜத்துல் ஹக் (சத்தியத்தின் சாட்சி) என்று அவர் அழைக்கப்பட்டார். ‘ஹக்’ என்பது இறைவனைக் குறிக்கும் அரபிச்சொல்லாகும்.
பல்க் நகரிலிருந்து அப்பா புகாராவுக்குக் குடிபெயர்ந்தார். அங்கே புகழ்பெற்ற ஓர் புத்த மடாலயம் இருந்தது. முஸ்லிம்கள் அந்நகரை வெற்றி கொண்டதிலிருந்து இஸ்லாமிய மத ஆராய்ச்சி அங்கே மலர்ந்தது. மன்சூரின் மகன் இரண்டாம் நூர் என்பவர் அப்போது அதை ஆண்டுகொண்டிருந்தார்.
கார்மைதானில் இப்னு சீனாவின் தந்தை ஓர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கே அவருக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் இப்னு சீனா மூத்தவர். அம்மா சத்தேரா (நட்சத்திரம்) ஒரு பாரசீகப்பெண்மணி. (ஸ்டார் என்ற ஆங்கிலச்சொல் ‘சத்தேரா’விலிருந்துதான் வந்திருக்குமோ!) குடும்பம் புகாராவுக்குத் திரும்பியதால் இப்னு சீனாவின் குழந்தைப்பருவம் புகாராவில்தான். பத்து வயதில் திருமறையை ஓதி முடித்துவிட்டார் இப்னு சீனா.
தனக்குத் தத்துவம் தெரியும் என்று சொல்லிக்கொண்டு புகாராவுக்கு வந்த நத்தேலி என்பவரைத் தன் வீட்டில் தங்கி மகனுக்கு தத்துவம் சொல்லிக்கொடுக்கச் சொன்னார் அப்பா. ஒருமுறை பேரினம் என்பதை வரையறை செய்யுமாறு ஆசிரியர் சொன்னார். இப்னு அலீ சீனா அதை வரையறை செய்த முறையைப்பார்த்து ஆசிரியர் ஆச்சரியப்பட்டார். படிப்பில் மட்டுமே அவர் கவனம் செலுத்தவேண்டும் என்று அவர் அப்பாவிடம் ஆசிரியர் சொன்னார்.
இப்னு அலீ சீனா பாடங்களையெல்லாம், ப்ளேட்டோ அரிஸ்டாட்டில் போன்றோரையும், அவராகவே படித்துப் புரிந்துகொண்டார். அவராகவே படித்துப் புரிந்துகொண்டார். பின்னர் அப்போதிருந்த மருத்துவம் தொடர்பான நூல்களையெல்லாம் படிக்கத் தொடங்கினார்.
பதினாறு வயதில் பல பாடங்களில் விற்பன்னரானார். அரிஸ்டாட்டிலின் மெடஃபிசிக்ஸ் மட்டும் பிடிபடவில்லை. ஆனால் ஃபராபி என்ற அறிஞரின் நூலின் மூலம் அதையும் புரிந்துகொண்டார். அதன்பிறகு அவர் படிக்கவேண்டியது என்று எதுவும் இல்லாமல் போனது. விரும்பினால் இன்னும் ஆழமாகச்செல்லலாம் என்ற சூழ்நிலை மட்டுமே நிலவியது. படிக்க வேண்டியதையெல்லாம் பதினெட்டு வயதிலேயே படித்து முடித்துவிட்டார்.
அவரது மருத்துவ அறிவு உச்சத்தை எட்டியிருந்ததால் அரசவையின் கதவுகளும் அரண்மனை நூலகத்தின் கதவுகளும் அவருக்காக எப்போதும் திறந்தே இருந்தன. ஆனால் அரசியல் மாற்றங்களினால் அவர் ஜுர்ஜான் என்ற ஊருக்குக் குடிபெயர்ந்து போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் கிபி 11-ல் ராய் என்ற கிராமத்துக்குக் குடிபெயர்ந்தார்.
பின்னர் ஹமதான் நகரிலிருந்த மன்னர் ஷம்சுத்தௌலாவை சந்தித்தார். உடல் நலமில்லாமலிருந்த அவர் இப்னு சீனாவின் மருத்துவத்தால் குணமடைந்தார். அதனால் அவர் அரசவையில் வஸீர் என்ற பதவிக்கு உயர்த்தப்பட்டார். ஷம்சுத்தௌலாவின் இறப்புவரை அவர் அந்தப்பதவியில் இருந்தார். அதன்பின்னர் அப்பதவியில் தன்னால் தொடரமுடியாது என்று சொன்னதால் கைது செய்யப்பட்டார். ஆனால் ஒரு சூஃபியைப்போல உடையணிந்து சிறையிலிருந்து அவர் தப்பித்தார்.
0
பல இளவரசர்களுக்கு அரசு மருத்துவராக இப்னு சீனா செயல்பட்டுள்ளார். ஒரு சமயம் அரசையே வழிநடத்தும்படியும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. இரவுகளில் வெகு நேரம் விழித்திருந்து சமுதாயச் செயல்பாடுகளில் ஈடுபட்ட பிறகும் வீட்டுக்குச்சென்று ஏதாவது எழுதும் பழக்கம் அவருக்கு இருந்தது. அது தத்துவம் அல்லது விஞ்ஞானம் பற்றிய கட்டுரையாக இருக்கும்.
சமயங்களில் அரசரோடு குதிரைமீதமர்ந்து போருக்குச் சென்றபோதுகூட தான் சொல்லச்சொல்ல ஒருவரை எழுதிக்கொள்ளவைத்துள்ளார். சுறுசுறுப்பான அரசியல் வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும் ஹிப்போக்ரேடஸ், காலன் போன்றோரின் மருத்துவம், இஸ்லாமியக் கலைகள், விஞ்ஞானம் பற்றியெல்லாம் எழுதியவராகவும் எழுத வைத்தவராகவும் இருந்துள்ளார்.
நிறைய எழுதிக்குவித்த இப்னு சீனாவின் 250-க்கும் மேற்பட்ட படைப்புகளும் கடிதங்களும் நமக்குக் கிடைத்துள்ளன. அவை பெரும்பாலும் அரபி மொழியிலும் கொஞ்சம் பாரசீகத்திலும் உள்ளன. இசைத்துறையிலும் இப்னு சீனா பெரும் பங்களிப்பு செய்துள்ளார். ‘அல் ஷிஃபா’, ‘நஜாத்’ ஆகிய நூல்களை அரபியிலும் ‘தானிஷ்நாமா’ என்ற நூலை பாரசீகத்திலும் எழுதினார்.
‘அல் ஷிஃபா’ என்ற நோய் நிவாரணம் பற்றிய நூல் அவரது மிகச்சிறந்த படைப்பாக கருதப்படுகிறது. ஒரு தனிமனிதனால் எழுதப்பட்ட மிகப்பெரிய நூல் இதுதான் என்று சொல்லப்படுகிறது. ஆல்ஃப்ரட் ஷராசல் என்பவர் இந்நூலை லத்தீனில் மொழிபெயர்த்தார்.
‘அல் இஷாரத் வல் தன்பீஹாத்’ (கட்டளைகளும் குறிப்புகளும்) என்ற நூல் அவர் இறுதியாக எழுதிய ஆகச்சிறந்த படைப்பு என்று கருதப்படுகிறது. இதுதவிர, தர்க்கம், உளவியல், வானவியம் தொடர்பாகவும் அவர் பல நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய மேலும் பல முக்கியமான நூல்கள் எங்கே போயின என்று தெரியவில்லை.
பௌதீகம், வால் நட்சத்திரம் பற்றி அவர் பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். உயிரியல், தாவரவியல், நிலவியல், கனிமவியல், உளவியல் பற்றியெல்லாம் அவர் ஷிஃபாவில் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய மருத்துவ நூலானா ‘கானூன்’ (நெறிமுறை) கிழக்கின் மருத்துவ உலக வரலாற்றில் ஈடுசெய்யமுடியாத ஒரு பெருநூலாக இன்றுவரை விளங்குகிறது. கிழக்கத்திய நாடுகளில் அது இன்றும் பாடமாக சொல்லித்தரப்படுகிறது. அவரது மருத்துவக்கவிதைகள் (உர்ஜூஸா ஃபில் திப்) மிக எளிமையாக சிறுசிறு கவிதை வடிவில் நோயையும் அதற்கான தீர்வையும் சொல்லுகின்றன.
இதல்லாமல் அரபி மற்றும் பாரசீக மொழிகளில் கவிதைகளும் எழுதியுள்ளார். அதில் ‘கஸீதத்துல் அய்னிய்யா’ என்பது மிகவும் பிரபலமானதாகும். இதல்லாமல், விதி, சுதந்திரம், திருமறையின் பல அத்தியாயங்கள் பற்றியெல்லாம் அவர் பல நூல்களை எழுதியுள்ளார். அவரது ‘ரிசாலத்தல் நைரூஸியா’ என்ற நூல் வானவியலின் இஸ்லாமியப் பார்வையை வெளிப்படுத்துகிறது.
(தொடரும்)