Skip to content
Home » மதம் தரும் பாடம் #11 – பன்முக மேதை – 2

மதம் தரும் பாடம் #11 – பன்முக மேதை – 2

மருத்துவ நெறிமுறைகள்

இப்னு சீனாவின் ஆகச்சிறந்த மருத்துவப் படைப்பான  ‘மருத்துவ நெறிமுறைகள்’ (Canon) என்ற நூல் மருத்துவத்துறையில் ஓர் ஆதார நூலாகக்கருதப்படுகிறது. மனித உடல், அதன் அமைப்பு, நோய்கள், அதற்கான நிவாரணங்கள் என ஐந்து பாகங்களாகவும் பல அத்தியாயங்களாகவும் அது பிரிக்கப்பட்டுள்ளது.

ஹிப்போக்ரிடஸ், காலன் போன்ற மருத்துவ மேதைகளின் நூல்களில் இல்லாத பல முக்கிய தகவல்களை இப்னு சீனாவின் நூல் தருகிறது. குறிப்பாக என்ன நோய்க்கு என்ன மூலிகையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்றும், மூளையில் ஏற்படும் கட்டிகளைப்பற்றியும், வயிற்றுப்பிரச்சனைகள் பற்றியும் இதில் கூறப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்னு சீனா ‘மருத்துவர்களின் மன்னர்’ என்று அழைக்கப்படுவதன் காரணம் இந்நூலைப்படித்தால் புரியும் என்று மருத்துவ உலகம் கருதுகிறது.

அந்தக் காலகட்டத்தில்தான் அவர் பல முக்கிய நூல்களை எழுதினார். ஒரு வானவியல்கூடத்தையும் நிர்மாணித்தார். ஆனால் கஜினி முஹம்மதுவின் மகன் மசூத் என்பவரின் படையெடுப்பால் அந்த நிம்மதியும் போனது. அவரது பல படைப்புகள் அழிந்துபோக அந்தப்படையெடுப்பு காரணமாக இருந்தது.

படைப்புலகம்

இப்னுசீனா எழுதிக்குவித்தார். மத்தியதர உலகுக்குத் தெரிந்த அத்தனை விஷயங்களைப்பற்றியும் அவர் எழுதியிருந்தார். அவர் எழுதிய 250 நூல்கள் கிடைத்துள்ளன. இந்தப்படைப்புகளில் பெரும்பாலானவை அரபியிலும் சில நூல்கள் பாரசீகத்திலும் உள்ளன. அவருடைய ‘தானிஷ் நாமா’ நவீன பாரசீக மொழியில் எழுதப்பட்ட முதல் தத்துவ நூலாகும்.

அவர் இஸ்ஃபஹானுக்கு வந்த பிறகு அவரது அரபி மொழியாற்றல் மேலும் சிறப்படைந்தது. அதை அவரது ‘இஷாரத்’ போன்ற நூல்களில் கண்டுணரலாம். அவரது ‘ஷிஃபா’, ‘நஜாத்’, ‘உயூனல் ஹிக்மா’, ‘அல் இஷாரத்’ மற்றும் லத்தீன் மொழியில் அவர் எழுதிய ‘சஃபிஷென்ஷியா’ போன்ற நூல்களிலிலிருந்து நன்கு புரிந்துகொள்ளலாம்.

இயற்பியல், விண்கற்கள் தொடர்பாகவெல்லாம் சிறு சிறு கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இப்னு அலி சீனாவும் இஸ்லாமும்

மிகுந்த பக்திமானாக இப்னு சீனா இருந்தார். அவருடைய கவிதைகள் மற்றும் திருமறைக்கான அவரது விளக்கவுரைகள் மூலம் இதைப்புரிந்துகொள்ளலாம். என்னை அவநம்பிக்கையாளன் என்றோ சமயபேதமுள்ளவன் என்றோ யாராவது சொன்னால் இவ்வுலகில் ஒரு முஸ்லிம்கூட இல்லை என்று அர்த்தம் என்று ஒரு கவிதையில் அவர் சொன்னார்!

ஒரு விஞ்ஞானப்பிரச்சனையோ தத்துவார்த்தப் பிரச்சனையோ ஏற்பட்டாலும் படித்தது ஏதும் புரியவில்லை என்றாலும் உடனே பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவார் இப்னு அலீ சீனா. தொழுது இறைவனிடம் கேட்டால் பதில் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த நம்பிக்கை பல முக்கியமான சமயங்களில் அவருக்கு உதவியது. இறைவனிடமிருந்து விடை கிடைக்கத்தான் செய்தது. அவ்வப்போது இறைவனின் நண்பர்களாகிய முஸ்லிம் புனிதர்களின் அடக்கஸ்தலங்களுக்கும் சென்று வரும் நல்ல பழக்கமிருந்தது அவருக்கு.

மதுப்பழக்கம்

இரவில் வெகுநேரம் விழித்திருந்து படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பார். உறக்கம் வருவது போலிருந்தால் கொஞ்சம் மது அருந்துவாராம். பின்னர் மீண்டும் படிக்கவோ எழுதவோ செய்வாராம்.

அரிஸ்டாட்டிலின் மெடஃபிசிகா

அரிஸ்டாட்டிலின் மெடஃபிசிகா நூலை நாற்பது முறைகள் படித்தும் புரியவில்லை. மனமுடைந்தவராக வெளியில் சென்ற அவர் அங்கே தெருவில் ஒருவர் வாங்கச்சொன்ன மெடஃபிசிகா பற்றிய அல்ஃபராபியின் மலிவு விலை நூலை மனமில்லாமல் வாங்கிக்கொண்டு வந்து படித்துப்பார்த்தார். அவருடைய எல்லா கேள்விகளுக்கும் அதில் பதில் இருந்தது. மெடஃபிசிகா முழுமையாகப் புரிந்துவிட்டது! மறுநாள் ஏழைகளுக்கு உணவு, உடை, பணம் என்று கொடுத்து தன் சந்தோஷத்தையும் நன்றியையும் வெளிப்படுத்தினார்.

ஒருமுறை இளவரசர் நூஹ் இப்னு மன்சூருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இப்னு சீனாவிடம் உதவி கேட்கலாம் என்று அரசவை மருத்துவர்கள் சிபாரிசு செய்தனர். அதன்படி அவரும் அழைக்கப்பட்டார். இளவரசரை இப்னு சீனா குணப்படுத்தினார். அதன்பின் அரசரின் சேவையில் அவரும் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

சமானிய ஆட்சியாளர்களின் நூலகங்களுக்குச் சென்று நூல்களை எடுத்து படிக்கும் அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது. அங்கே அடுக்கடுக்காக பல தலைப்புகளில் நூல்கள் இருந்தன. கிரேக்கம் என்று தலைப்பிடப்பட்ட பகுதியில் இருந்த நூல்களை அதுவரை யாரும் பார்த்திருக்கவில்லை என்று இப்னு சீனா குறிப்பிட்டார். அந்தப்புத்தகங்களையெல்லாம் படித்துக் குறிப்புகள் எடுத்துக்கொண்டார்.

இலக்கியத்திலும் கல்வியிலும் ஆர்வம் கொண்ட ஆட்சியாளர்களால் நிறுவப்பட்ட அந்த நூலகம் ஒருநாள் தீக்கிரையானது. அவர்தான் தீவைத்தார் என்று அவரது எதிரிகள் குற்றம் சுமத்தினர்.

புகாராவிலிருந்தபோது தன் 21-வது வயதில்தான் இப்னு சீனா எழுதத்தொடங்கினார். மஜ்மூ என்று அந்நூலுக்குப் பெயரிட்டார். அவரது பல ஆக்கங்கள் அந்த பாணியிலேயே எழுதப்பட்டன.

பின் தனது அண்டை வீட்டுக்காரர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அல் ஹாசில் வல் மஹ்சூல் என்று இருபது பாகங்கள் கொண்ட சட்டவியல் தொடர்பான ஒரு நூலை எழுதினார். அதோடு அல் பிர் வ அல் இல்ம் (நல்ல பணியும் கெட்டதும்) என்று ஒரு நூலை எழுதி தன் நண்பருக்குக் கொடுத்தார்.

தாக்கம்

இப்னு அலீ சீனாவுக்குப் பல சீடர்கள், ரசிகர்கள் இருந்தனர். அபூ உபைத் அல் ஜுஸ்ஜானி, அபூ அப்துல்லாஹ் அல் ம’அசூமி போன்ற எழுத்தாளர்கள் இவரது மாணவர்களாக இருந்தனர். பாரசீகக்கவி உமர் கய்யாம் இவரது ரசிகர்களில் ஒருவர். இவரது கட்டுரைகளில் ஒன்றை பாரசீகத்தில் மொழிபெயர்த்தார். சூஃபி ஞானிகளான சுஹ்ரவர்தி, இப்னு அரபி போன்றோரிடமும் இப்னு சீனாவின் கருத்துக்களின் தாக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய வாழ்க்கை

பின் ஒருநாள் இப்னு அரபியின் அப்பா இறந்துபோனார். சுல்தான் கொடுத்த ஒரு வேலையை ஏற்றுக்கொண்டார் இப்னு சீனா. எனவே புகாராவிலிருந்து குர்கஞ்ச் என்ற ஊருக்குச் செல்லவேண்டியிருந்தது. அவர் வாழ்வின் சோதனைகாலகட்டமாக அது இருந்தது. குர்கஞ்சில் அவருக்கு நல்ல வரவேற்பும் நல்ல சம்பளமும் கொடுக்கப்பட்டாலும் அவர் பல ஊர்களுக்கும் சென்றுகொண்டே இருக்க வேண்டியிருந்தது.

இறப்பு

அங்கிருந்து கல்விக்குப் புகழ்பெற்றிருந்த இஸ்ஃபஹான் நகருக்குச் சென்றார். அங்கே பதினைந்து ஆண்டுகள் நிம்மதியாக வாழ்ந்தார். இந்தக்கால கட்டத்தில்தான் அவர் பல முக்கியமான நூல்களை எழுதினார். வானாசாஸ்திரமும் அதில் அடக்கம். ஒரு வானவியல் ஆராய்ச்சி நிலையத்தையும் அங்கே அவர் உருவாக்கினார். கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு கிபி 1037-ல் ஹமதானுக்குத் திரும்பிய அவர் அங்கேயே இறந்துபோனார். ஒரு பெரிய புத்தகம் எழுதும் அளவுக்கு அவரைப்பற்றிய தகவல்கள் உள்ளன. அவரைப்பற்றிய ஒரு சிறு குறிப்பேஇது.

(தொடரும்)

பகிர:
நாகூர் ரூமி

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *