அண்ணன் ஒரு பேரரசன், புகழ்மிக்கவன். அது மட்டுமல்ல. அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? யானைகளோடு போர் செய்தவன். தன் தோளால் இடித்து மலைகளைப் பெயர்த்து எடுத்தவன். பத்து மகுடங்களைக்கொண்டவன். சிவபெருமான் கொடுத்த வாளை வைத்திருந்தவன்.
அவ்வளவும் இருந்தும் போரில் அன்று எல்லாவற்றையும் இழந்து வெறுங்கையனாகத் திரும்பி வந்தான். ஆனாலும் போர் முடிந்துவிடவில்லை. மீண்டும் நடக்கும். நாளை போருக்கு எப்படித் தயார் செய்வது? யாரை அனுப்பலாம்? என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தான்.
தன் எதிரியை எளிதாக வென்றுவிடலாம் என்று எண்ணியிருந்தான். ஆனால் துரும்பு என்று நினைத்தது இரும்பானதைப்போல, காய்ந்த இலை என்று நினைத்தது பெரும் மலையானதைப்போல இருந்தான் அவனோடு பொருதியவன்.
தன் அரசியல் எதிரிகள், வானவர்கள், குடிமக்கள் எல்லாரும் சிரிப்பார்களே என்றுகூட அவனுக்கு வருத்தமாக இல்லை. நீண்ட கண்களையும் சிவந்த வாயையும் மென்மையான இயல்பையும் கொண்ட, தான் கடத்திக்கொண்டு வந்த அந்தப்பெண் சிரிப்பாளே என்றுதான் அவன் மனதுக்குள் அவமானப்பட்டான்.
ஆனால் அவள் ஒரு பெண் மட்டுமல்ல, அடுத்தவன் மனைவி என்பது மட்டும் அவன் மூளைகளுக்குள் உரைக்காமல் போய்விட்டது. ஆமாம் மூளைகளுக்குள்தான். ஒரு தலைக்கு ஒரு மூளை எனில் பத்து தலைகளுக்கு பத்து மூளைகள் இருக்கவேண்டுமல்லவா? ஆமாம், நான் ராவணனைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்.
அடுத்த நாள் போருக்கு யாரை அனுப்பலாம் என்று அவன் யோசித்தான். தம்பி கும்பகர்ணனை அனுப்பலாம் என்று அவனது அமைச்சர்களில் ஒருவனான மகோதரன் யோசனை சொன்னான்.
மிக நல்ல யோசனை. ஆனால் அதை நிறைவேற்றுவதில் ஒரு ‘தொழில்நுட்பப் பிரச்னை’ இருந்தது. தம்பி கும்பகர்ணன் ஆறு மாதங்கள் தூங்குவான், ஆறு மாதங்களுக்கு விழித்திருப்பான். இது அவனது தூங்கும் முறை அல்லது வாழ்முறை. அவன் படுத்து உறங்கி சில நாட்கள்தான் ஆகியிருந்தன! இப்போது அவனை எப்படி எழுப்புவது? ஆனாலும் எழுப்புவது என்று முடிவு செய்து அதற்காக நான்கு ஏவலர்களை அனுப்பினான்.
அவர்கள் வந்து இரும்புத்தண்டினால் அவன் தலையிலும் காதிலும் அடித்தனர். ஆனால் அவர்கள் கைகள்தான் சிவந்தனவே தவிர அவன் எழுந்திருக்கவில்லை. ஆயிரமாயிரம் யானைகள், குதிரைகளைக்கொண்டு அவனை மிதிக்கச் செய்தனர். ஆனால் அவையெல்லாம் அவனுக்கு ஒத்தடம் கொடுத்ததுபோல் இருந்தது! ஆயிரம் அரக்கர்கள் அவன் கன்னங்களில் உலக்கைகளால் அடித்தனர். அதன் பிறகுதான் கும்பகர்ணனின் உறக்கம் கலைந்தது!
எழுந்தவுடனேயே அவனுக்குப் பசிக்க ஆரம்பித்தது. அசுரப் பசி. எழுந்து உட்கார்ந்து அறுநூறு வண்டி உணவையும் பல நூறு குடங்கள் கள்ளையும் உண்டான்! அப்போதும் அவன் பசி அடங்கவில்லை. பின்னர் மன்னராக இருக்கும் அண்ணன் அழைக்கிறான் என்று சொன்னதும் எழுந்து போனான். பாசமான தம்பி.
அண்ணன் அவனை ஆரத்தழுவியபின் சிவபெருமான் கொடுத்த போர்க்கவசத்தை அவனுக்கு அணிவித்தான். என்ன விஷயம் என்று கேட்டதும்தான் முதல்நாள் நடந்ததைச் சொன்னான் ராவணன். இன்று நீ போய்வா என்றான்.
அறநெறியிலிருந்து நழுவிய உனக்கு வெற்றி கிடைக்காது அண்ணா, சீதையைத் திரும்பக் கொடுத்துவிட்டு அவர்களிடம் மன்னிப்புக்கேட்டால் பிழைக்கலாம் என்று சொன்னான் அந்த ஞானவான்.
ஆனால் அவன் சொன்ன பதிலால் கடும் கோபமடைந்தான் ராவணன். ’உன்னை இங்கே அழைத்தது உன் அறிவுரையைக் கேட்க அல்ல. இஷ்டமிருந்தால் போருக்குப்போ. இல்லையெனில் போய்ப்படுத்து நன்றாகத் தூங்கு. அந்த மனிதர்களையும் குரங்குகளையும் கண்டு அஞ்சி நடுங்குவது உனக்கும் உன் சகோதரன் வீடணனுக்கும் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் நான் அதைச்செய்ய மாட்டேன்’ என்று கடுப்படித்தான்.
‘சரி நான் போகிறேன். ஆனால் நிச்சயம் அவர்களை என்னால் வெல்ல முடியாது. நான் திரும்பிவரமாட்டேன். நான் மரியாதைக்குறைவாக நடந்துகொண்டிருந்தால் மன்னித்துவிடு’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
அண்ணனுக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அவன் மனசாட்சி உறுத்தியது. ஆனாலும் ‘ஈகோ’வை அவன் விட்டுவிடவில்லை. ராட்சச ஈகோவல்லவா.
கும்பகர்ணன் சென்ற தேருக்குப் பின்னாலேயே ஆயிரம் வண்டிகளில் மாமிச உணவும் கள்ளும் அவனுக்காகச் சென்றன.
அவனது ராட்சச ஆகிருதியைப் பார்த்த ராமர், ‘இவன் யார்?’ என்று வீடணனைக் கேட்டார்.
‘இவன் என் அண்ணன்தான். ராவணனின் தம்பி. பிறர் மனைவியை விரும்புவது தர்மமாகாது என்று ராவணனுக்கு இரண்டு முறைகள் இவன் சொன்னான். ஆனால் அவன்தான் கேட்கவில்லை. தான் இறப்பது உறுதி என்று தெரிந்தும் அண்ணனுக்காக இங்கே வந்திருக்கிறான்’ என்றான் வீடணன்.
இவனை நம்மோடு சேர்த்துக்கொள்ளலாம் என்று சுக்கிரீவன் ராமனிடம் சொல்ல ராமரும் அதை ஏற்றுக்கொண்டார். அந்த விஷயம் பற்றிப்பேச அவனை நோக்கி வீடணனே சென்றான். ‘அடுத்தவன் மனைவியை அபகரிப்பவனுக்காகப் போரிட்டு இறந்தாலும் நரகத்துக்குத்தானே நீ போயாகவேண்டும்? வேண்டாம், ராமனோடு வந்து சேர்ந்துகொள்’ என்று கும்பகர்ணனை வேண்டினான் வீடணன்.
‘இல்லை, என்னை வளர்த்தெடுத்த ராவணனுக்காக உயிர் விடுவதே உசிதமானது. அன்பாக வளர்க்கப்பட்ட தம்பிகள் யாருமே இல்லாமல் அநாதையாக ராவணன் இறக்கக்கூடாது’ என்று கும்பகர்ணன் சொன்னான்.
போர் நடந்தது. கும்பகர்ணன்மீது அனுமன் வீசிய மலை அவன் தோளில் பட்டு தூள்தூளாகியது. ராமரது அம்பு மட்டுமே இவனை அழிக்கும் என்று எண்ணி அப்பால் சென்றான் அனுமன். ஒரு கட்டத்தில் கும்பகர்ணனது வலது கை அறுந்து விழுந்தது. அதை இடது கையால் எடுத்து அதைக்கொண்டு சண்டையிட்டான். அந்தக் கையும் வெட்டுப்பட்டு விழ, கால்களாலேயே சண்டையிட்டான். கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்ட போதும் தன் உடம்பால் உருண்டு உருண்டு சண்டையிட்டான்.
பின் ஒருகட்டத்தில் கும்பகர்ணனே வேண்டிக்கொண்டபடி, அவன் கழுத்தை அறுத்த ராமர் அதைக் கடலில் சென்று விழவைத்தார். அத்துடன் கும்பகர்ணனின் வாழ்வு முடிந்துபோனது.
அதிகமாக உண்டால் மூளை மழுங்கும் என்று சொல்வதைப் பொய் என்று நிரூபிக்கும் விதமாக இருக்கிறது கும்பகர்ணனின் கதை. இறுதியாக எனக்கொரு சந்தேகம். அதிகமாக உண்பவர்களை ஏன் ‘சாப்பாட்டு ராமன்’ என்கிறோம்? ‘சாப்பாட்டு கும்பகர்ணன்’ என்றுதானே சொல்லவேண்டும்?!
0