ஜெருசலம் வெல்லப்பட்டுவிட்டது. ஆனால் கலீஃபாவே நேரில் வந்தால்தான் நகரை ஒப்படைக்க முடியும் என்று பிரதம பாதிரி சொன்னார். அதாவது ஆசைப்பட்டார். அது ஒரு வேண்டுகோள் மட்டுமே. ஏனெனில் அது முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றி. நகரை அவர்களிடம் ஒப்படைத்துத்தான் ஆகவேண்டும். வேறு யாரும் அது தொடர்பாக முடிவெடுக்க முடியாது.
ஆனாலும் பிரதம பாதிரியின் ஆசையை நிறைவேற்ற முடிவுசெய்தார் இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா ஹஸ்ரத் உமர். பாரசீக மற்றும் பைசாந்திய (கிழக்கு ரோமானிய) ஆட்சிகளை வீழ்த்தி வென்ற கலீஃபா. உலகம் முழுவதும் இஸ்லாம் பரவ வழிவகுத்த கலீஃபா. யூதர்கள் மீண்டும் ஜெருசலத்தில் வந்து தங்கிக்கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்த கலீஃபா. ஹிஜ்ரி காலண்டர் முறையை உருவாக்கிக்கொடுத்த கலீஃபா. எளிமையின், வீரத்தின், ஞானத்தின் உறைவிடமாகத் திகழ்ந்த கலீஃபா. கொல்லப்படுவார் என்று நபிகள் நாயகத்தால் முன்னறிவிக்கப்பட்ட கலீஃபா. எனக்குப் பிறகு ஒரு நபி வருவதாக இருந்தால் அது அவராகத்தான் இருக்கும் என்று நபிகள் நாயகத்தால் பாராட்டப்பட்ட கலீஃபா.
துணைக்கு ஒரேயொரு சேவகரை மட்டும் அழைத்துக்கொண்டு மதினாவிலிருந்து ஒரு ஒட்டகத்தில் கிளம்பினார். கொஞ்சதூரம் அவர் ஒட்டகத்தின் மேலே பயணிப்பார். கொஞ்சதூரம் துணைக்கு வரும் ஊழியர் பயணிப்பார். கலீஃபாவின் உத்தரவு அப்படியிருந்தது.
ஊழியருக்கும் கலீஃபாவுக்கும் உடையில் பெரிய வித்தியாசங்களில்லை. இரண்டு பேருமே ஆங்காங்கு ஒட்டுப்போட்ட முரட்டுத் துணியைத்தான் அணிந்திருந்தனர். அது ஊருக்காக அவர் போட்ட வேஷமல்ல. அவர் எப்போதுமே அப்படித்தான் எளிமையாக இருந்தார்.
ஜெருசலத்தை நெருங்கியபோது அது ஊழியரின் முறை. ஒட்டகத்தின்மீது ஊழியர் அமர்ந்திருக்க கலீஃபா ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்து அதைச் செலுத்திக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார். ஊழியர் மறுக்க முடியாது. மறுத்தால் கலீஃபாவின் உத்தரவை மீறியதற்காக அவர் உயிர் போகலாம்.
அந்தக் காட்சியைப் பார்த்த தலைமைப் பாதிரி, ஒட்டகத்தின்மேல் இருப்பவர்தான் கலீஃபா என்று நினைத்தார். ஆனால் அருகில் வந்து நின்றபோதுதான் அழைத்துக்கொண்டு வந்தவர்தான் கலீஃபா உமர் என்று தெரிந்து ஆச்சரியப்பட்டார். ஆனாலும் உடையில் இருவருக்கும் பெரிய வித்தியாசமில்லை.
இரவு நகர்வலம்
கலீஃபா உமருக்கு ஒரு பழக்கமிருந்தது. இரவுகளில் தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் நகர்வலம் வருவார். மக்களின் பிரச்னைகளைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வார். பிரச்னையைக் கண்டுபிடித்தால் அதை மறுநாளே சரிசெய்வார். என் ஆட்சியில் ஒரு நாய் பட்டினியாகக் கிடந்தாலும் மறுமையில் அதற்கு நான் இறைவனிடம் பதில்சொல்லவேண்டி வருமே என்று அஞ்சினார். அந்த அச்சத்தை அவர் தன் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்தினார்.
ஒருநாள் அஸ்லம் என்ற ஊழியரோடு இரவில் நகர்வலம் சென்றார். அது அவரது வழக்கம். தூரத்தில் நெருப்பு எரிவது தெரிந்தது. அதைநோக்கி இருவரும் சென்றனர். ஒரு பெண் குழந்தைகளுடன் இருந்தாள். பசியால் குழந்தைகள் அழுதுகொண்டிருந்தன.
‘இருங்க, இருங்க, இதோ ஆயிடிச்சு, இப்ப தர்றேன்’ என்று சொல்லி பானையைக் கிண்டிக்கொண்டிருந்தாள். பானைக்குள் உணவு எதுவும் சமைக்கப்படவில்லை. வெறும் கூழாங்கற்களைப்போட்டு ஒரு அகப்பையால் அவற்றைக் கிண்டிக்கொண்டிருந்தாள். சாப்பிடுவதற்கு அம்மா ஏதோ சமைக்கிறாள் என்று நினைத்து குழந்தைகள் அழுகையை நிறுத்தினர். கொஞ்சநேரம் கழித்து மீண்டும் அழும்போது, ‘இதோ ஆயிடுச்சு’ என்று சொல்லி மீண்டும் பானையைக் கிண்டுவாள். இப்படியே நேரம் சென்றது. ஒரு கட்டத்தில் குழந்தைகள் உறங்கிப்போயினர்.
என்ன பிரச்னை உங்களுக்கு என்று உமர் கேட்டார். உமரை யாரென்று தெரியாத அந்தப்பெண், ‘எங்க கஷ்டம் கலீஃபாவுக்கு எங்கே தெரியப்போவுது? குளிரிலும் பசியிலும் நாங்கள் இப்படிக் கஷ்டப்படுகிறோம்’ என்றார்.
உடனே கருவூலத்துக்கு விரைந்து சென்ற உமர், உணவு தானியங்களை எடுத்துத் தன் தோள்மீது போட்டுக்கொண்டார். நான் தூக்கிக்கொண்டு வருகிறேன் கலீஃபா அவர்களே என்று ஊழியர் அஸ்லம் சொன்னார்.
‘மறுமை நாளில் என்னுடைய சுமையை நீ தூக்குவாயா?’ என்று கேட்டுவிட்டு மூட்டையுடன் விரைந்து சென்றார் உமர்.
அந்தப் பெண்மணிக்கு வேண்டிய உணவுப்பொருள்களையெல்லாம் கொடுத்துவிட்டு அவரை அடுப்பைவிட்டு நகரச்சொன்னார். பின் அவரே உணவைக் கொஞ்சம் சமைத்து அந்தத் தாய்க்கும் குழந்தைகளுக்கும் கொடுத்தார். குழந்தைகள் உறங்கும்வரை அங்கேயே இருந்தார். மறுநாள் கலீஃபா உமரைப்போய்ப் பார்க்கும்படி சொல்லிவிட்டு வந்தார்!
மருமகள் தேர்வு
இன்னொரு நாள் இரவு கலீஃபா உமர் வழக்கம்போல நகரைச் சுற்றிவந்தபோது களைப்பாக இருந்ததால் ஒரு வீட்டின் சுவற்றில் சாய்ந்தார். உள்ளே பேச்சுச் சத்தம்கேட்டது. ஒரு அம்மாவும் மகளும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பால் வியாபாரம் செய்பவர்கள்.
‘இந்தப் பாலில் கொஞ்சம் தண்ணீர் கலந்துகொள். அப்போதுதான் நமக்கு லாபம் கிடைக்கும்’ என்று அம்மா சொன்னாள்.
‘அம்மா, அப்படிச் செய்யக்கூடாது என்று அமீருல் மூமினீன் கலீஃபா உமர் சொல்லியிருக்கிறார் அல்லவா… அவருக்குத் தெரிந்தால் என்னாகும்?’ என்று மகள் கேட்டார்.
‘உமர் என்ன இந்த இரவு நேரத்தில் நம் வீட்டுக்குள் எட்டிப்பார்த்துகொண்டா இருக்கிறார்?’ என்று அம்மா கேட்டாள்.
‘கலீஃபா எட்டிப்பார்க்கவில்லை. ஆனால் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் அல்லவா?’ என்று சொன்ன அந்த மகள் பாலில் தண்ணீர் கலக்க மறுத்துவிட்டாள்.
அந்த உரையாடலைக் கேட்ட உமர் ரொம்ப சந்தோஷப்பட்டார். மறுநாள் அந்த அம்மாவையும் மகளையும் அரசவைக்கு வரும்படி உத்தரவு கொடுத்தார். பயந்துகொண்டே அவர்கள் வந்தனர். தன் மூன்றாவது மகனான ஆசிமுக்கு அந்தப் பெண்ணை அவள் அனுமதியுடன் மணமுடித்து வைத்தார்.
பிரசவத்தில் உதவி
இன்னொரு நாள் இரவு வழக்கம்போல நகர்வலம் சென்றபோது ஒரு கூடாரத்துக்குள்ளிருந்து ஒரு பெண் அலறும் சப்தம் கேட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் அவள் கணவர் வெளியில் நின்றுகொண்டிருந்தார். அந்தப் பெண் பிரசவ வேதனையில் இருந்தாள் என்பதைப் புரிந்துகொண்ட உமர் உடனே தன் வீட்டுக்கு விரைந்தார்.
நபிபெருமானாரின் மருமகனான ஹஸ்ரத் அலீ அவர்களின் மகளும் தன் மனைவியுமான உம்மு குல்சும் வீட்டில் இருந்தார். ‘அல்லாஹ் உனக்கு எளிதாகத் தர இருக்கும் வெகுமதி வேண்டுமா?’ என்று உமர் கேட்டார். ’உங்களுக்கு அதில் விருப்பமானால் எனக்கும் விருப்பமே’ என்றார் உம்மு குல்ஸும்.
பிரச்னையை அவரிடம் சொல்லி, ‘துணி போன்ற தேவையான பொருள்களை எடுத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு ஒரு பானையில் அரிசி, கோதுமை, வெண்ணெய் போன்றவற்றைப் போட்டு எடுத்துக்கொண்டு இருவரும் சென்றனர்.
அங்கே போய் கூடாரத்துக்குள் மனைவி பிரசவம் பார்க்க, வெளியே பானையை அடுப்பில் வைத்து உணவு தயார் செய்தார் உமர். கொஞ்ச நேரம் கழித்து, ‘அமீருல் மூனினீன் அவர்களே, ஆண் குழந்தை பிறந்திருக்கிறது’ என்று உம்மு குல்ஸும் சொன்னதும்தான் அங்குவந்து தனக்கு உதவிக்கொண்டிருந்தது அந்த நாட்டின் கலீஃபா என்று அந்தக் கணவருக்குத் தெரிந்தது! ஆனந்த அதிர்ச்சியில் அவர் உறைந்துபோனார்.
ஆனாலும் அச்சப்படவேண்டாம் என்று தைரியம் சொன்ன உமர், சமைத்த உணவை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, நாளைக் காலையில் என்னை வந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
மகனுக்கு சாட்டையடி
மது குடித்தார் என்பதற்காக தன் மகன் அபூ ஷஹ்மா என்பவருக்கு சாட்டையடி தண்டனை கொடுத்தார். ‘குடி’மக்களுக்குக் கொடுப்பதைப்போல. ஒரு மாதம் கழித்து அந்த மகன் அடியின் பாதிப்பால் இறந்தே போனார். நம்ம ஆட்சியாளர்களுக்கு இந்த வரலாற்றைப் படிக்கக் கொடுக்கவேண்டும். பள்ளியில் பாடமாகவும் வைக்கவேண்டும்.
ஏழை செய்தது சரி
ஜபலா என்ற ஒரு சிரிய ஆட்சியாளர் க’அபாவை இடஞ்சுற்றி வந்துகொண்டிருந்தார். அப்போது அவரைப்போலவே செய்துகொண்டிருந்த ஒரு சாதாரண மனிதரின் கால் அவர் ஜிப்பாவில் பட்டுவிட்டது. உடனே அவர் அவனுக்கு ஒரு அறைவிட்டார். பதிலுக்கு அந்த மனிதரும் சிரிய ஆட்சியாளரின் கன்னத்தில் திருப்பி அறைந்தார்.
இவ்விஷயத்தை உமரிடம் கொண்டுபோனார் அந்த ஆட்சியாளர். ஆனால் அவர் செய்தது சரிதான், இஸ்லாத்தின் பார்வையில் நியாயம், நீதி என்று வரும்போது பணக்காரர், ஏழை, அந்தஸ்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது என்று தீர்ப்பளித்தார் உமர்!
ஹிஜ்ரி காலண்டர் முறையைக் கொடுத்ததும் திர்ஹம் என்ற வெள்ளி நாணயத்தை அறிமுகப்படுத்தியதும் உமர்தான். முஸ்லிம்கள் ஜகாத் கொடுக்கவேண்டும், முஸ்லிமல்லாதவர்கள் ஜிஸ்யா என்ற வரிகொடுக்க வேண்டும் என்றெல்லாம் உமரின் ஆட்சியில் சட்டமிருந்தது. ஆனால் ஜகாத்தைவிட ஜிஸ்யா குறைவானதாக இருந்தது.
கிட்டத்தட்ட 1444 நகரங்கள் உமர் அவர்களால் வெற்றிகொள்ளப்பட்டிருந்தன. குறுகிய காலகட்டத்தில் இருபத்திரண்டு லட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து முப்பது சதுர மைல்களுக்கு உமரின் ஆட்சி விரிந்திருந்தது.
ஆனால் அவருடைய எளிமையோ காவியத்தன்மை கொண்டது. ரோமானியப் பேரரசர் கெய்சரின் தூதர்கள் உமரைக் காண வந்தபோது தோலால் ஆன தன் சவுக்கை மடித்துத் தலையணைபோல தலைக்குக்கீழ் வைத்து மண்ணில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார் உமர்.
இறப்பு
ஒரு நாள் தொழுகையில் இமாமாக (தலைவராக) நின்று தொழவைத்துக் கொண்டிருந்தபோது அபூலூலூ என்ற கயவன் தன் குறுவாளால் ஆறுமுறைகள் உமரைக் குத்தினான். கடைசியில் அவன் தன்னையும் குத்திக்கொண்டான்.
உமரின் அடிவயிற்றில் கடுமையாகக் குத்தப்பட்டிருந்ததால் குடல் அறுந்து போனது. மருத்துவர்களால் கொடுக்கப்பட்ட மருந்துகளும் பானங்களும் அதன் வழியாக வெளியாகிக்கொண்டிருந்தன.
கடைசியில் இறந்து போகுமுன், நபிகள் நாயகம் அவர்களுக்கு அருகில் தன்னை அடக்கம் செய்ய அனுமதிக்கமுடியுமா என்று நபிபெருமானாரின் மனைவி ஆயிஷா அம்மையாரிடம் கேட்டு ஆளனுப்பினார். ஏற்கனவே அன்னை ஆயிஷாவின் வீட்டில்தான் நபிபெருமானாரின் பக்கத்தில் ஆயிஷாவின் தந்தை அபூபக்கர் அடக்கமாகியிருந்தார். இன்னொரு பக்கம் தான் அடக்கமாகிவிடலாம் என்றுதான் நபிபெருமானாரின் மனைவியும் அபூபக்கரின் மகளுமான அன்னை ஆயிஷா நினைத்திருந்தார். ஆனால் உமர் இப்போது இப்படிக் கேட்கவும் அனுமதி கொடுத்தார்.
அதன்படியே நபிபெருமானாரின் வீட்டினுள், அவர்களுக்கு வலம் இடமாக ஹஸ்ரத் அபூபக்கரும் ஹஸ்ரத் உமரும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
‘உமரே, இறப்பு என்பது போதுமான எச்சரிக்கையாகும்’ என்று அவரது மோதிரத்தில் பதிக்கப்பட்டிருந்தது.
‘அபூபக்கர், உமர் ஃபாரூக் ஆகியோரின் பெயர்களை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை அவர்கள் ஆண்டார்கள். ஆனாலும் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்’ என்று 1937-ல் காங்கிரஸ் அரசு அமைந்தபோது மகாத்மா சொன்னார்.
‘எனக்குப் பிறகும் ஒரு நபி வருவது இறைநாட்டமெனில் அதற்குத் தகுதியானவர் உமர்’ என்று இறுதித்தூதர் நபிகள் நாயகம் சொன்னது உமரின் பெருமையை உணர்த்தும்.
வீரம், விவேகம், கடுமை, மென்மை, அறிவு, ஆற்றல், நீதி, நியாயம் ஆகியவற்றின் உருவமாக இருந்தவர் இஸ்லாத்தின் இரண்டாவது அமீருல் மூமினீன் (நம்பிக்கையாளர்களின் தலைவர்) ஹஸ்ரத் உமர் அவர்கள்.
0