Skip to content
Home » மதம் தரும் பாடம் #15 – என் கேள்விக்கென்ன பதில்?

மதம் தரும் பாடம் #15 – என் கேள்விக்கென்ன பதில்?

அவர்கள் இருவருமே ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். எட்டாம் நூற்றாண்டு. இருவருமே பேரறிஞர்கள், இஸ்லாமிய சட்ட நிபுணர்கள், இறையியலாளர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இருவருமே சூஃபிகள், ஞானிகள். அதில் ஒருவர் இறைவனின் இறுதித்தூதர் நபிகள் நாயகத்தின் பரம்பரையில் வருபவர். அவர் பெயர் ஜாஃபர் சாதிக். அவரை இமாம் ஜாஃபர் சாதிக் என்ற பெயரில் உலகம் அறியும். ஷியா முஸ்லிம்களாலும் பெரிதாகக்கொண்டாடப்படுபவர் அவர். இறைவனின் இறுதித்தூதரான நபிகள் நாயகத்துக்குப்பின் இமாம்கள் வழிகாட்டுவார்கள் என்ற கருத்தின் விளைவு அது. சரி, மத அரசியல் நமக்கு வேண்டாம்.

இமாம் அபூ ஹனிஃபா அவர்கள் மாபெரும் அறிஞர். இன்று உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ‘மதஹப்’ எனப்படும் நான்கு வழிமுறைகளைத்தான் பெரும்பாலும் பின்பற்றுகிறார்கள். குறிப்பாகத் தொழுகை முறையில். அதில் ஹனஃபி மதஹப் எனப்படும் வழி முறையை உருவாக்கிக்கொடுத்தவர் அபூ ஹனிஃபா அவர்கள்தான்.

ஒருமுறை ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் ஒரு பிரச்னை ஏற்பட்டது. மனைவியின் தாயார் இறந்துவிட்டிருந்தார். ஆனால் மாமியாரைப் பிடிக்காதோ என்னவோ, தன் அம்மாவின் இறப்புக்கு அவரது வீட்டுக்குத் தன் மனைவி சென்றால் ‘உன்னை விவாகரத்து செய்துவிடுவேன்’ என்று கணவன் மிரட்டினான்.

என்ன செய்வதென்று தெரியாமல் அந்த மனைவி இமாம் அபூ ஹனிஃபாவிடம் சென்று முறையிட்டாள். ஒரு நல்ல தீர்வை நீங்கள் சொல்லவேண்டும் என்று கேட்டாள்.

‘நீ உன் அம்மா வீட்டுக்கு உன் அம்மாவின் ‘மய்யித்’தை (இறந்த உடலை) பார்க்கப்போனால் உன்னை விவாகரத்து செய்துவிடுவதாகத்தானே உன் கணவர் சொன்னார்? அப்படியானால் நீ தாராளமாக உன் அம்மாவின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்போகலாம். அவரால் உன்னை விவாகரத்து செய்ய முடியாது. ஏனெனில், இஸ்லாமிய சட்டப்படி உன் அம்மா இறந்துவிட்டதால் இனி அது உனக்கு பாத்தியதை உள்ள வீடு. உன் வீட்டுக்கு நீ செல்லலாம் அல்லாவா?’ என்று சொல்லி அப்பிரச்னைக்கு ஒரு சுமூகமான தீர்வைக்கொடுத்தார் அபூ ஹனிஃபா!

ஒருநாள் இமாம் அபூ ஹனிஃபா, இமாம் ஜாஃபர் சாதிக் ஆகிய இரண்டு பேரறிஞர்களும் சந்தித்துக்கொண்டார்கள். அதுவும் ஒரு வகுப்பில். இமாம் அபூ ஹனிஃபா அப்போது பாடம் நடத்திக்கொண்டிருந்தார், வழக்கம்போல.

அப்போது இமாம் ஜாஃபர் சாதிக் அவர்கள் சொன்ன மூன்று விஷயங்களைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதையெல்லாம் பொறுமையாக இமாம் ஜாஃபர் சாதிக் அவர்களும் கேட்டுக்கொண்டு அங்கே இருந்தார்கள்.

சரி, இமாம் அபூ ஹனிஃபாவால் ஏற்றுக்கொள்ள முடியாத அந்த மூன்று விஷயங்கள் என்ன?

முதல் விஷயம் அல்லாஹ்வை யாரும் பார்க்க முடியாது என்று இமாம் ஜாஃபர் சாதிக் அவர்கள் சொன்னது. ஒரு விஷயம் இருக்கிறதென்றால் அதை ஏன் பார்க்க முடியாது? பார்க்க முடியாததை இருக்கிறது என்று எப்படி ஏற்றுக்கொள்வது என்பதுதான் அபூ ஹனிஃபாவின் தர்க்கரீதியான கேள்வி.

இரண்டாவதாக, சாத்தானை நரக நெருப்பு எரித்துக்கரியாக்கும் என்று இமாம் ஜாஃபர் சாதிக் சொல்லியிருந்தார்கள். சாத்தானே நெருப்பால் படைக்கப்பட்டவன். நெருப்பை நெருப்பே எப்படி எரிக்கும் என்பதுதான் அபூ ஹனிஃபா அவர்களின் தர்க்கரீதியான இரண்டாவது கேள்வி.

மனிதனின் செயல்பாடுகளுக்கெல்லாம் மனிதனே பொறுப்பாவான் என்று இமாம் ஜாஃபர் சாதிக் சொல்லியிருந்தார்கள். மனிதனின் விதியை நிர்ணயிப்பவன் இறைவனே. அவனது விருப்பப்படியே எல்லாம் நடக்கும்போது, அவனன்றி அணுவும் அசையாதெனும்போது, மனிதனின் எல்லாச் செயல்களுக்கும் மனிதனையே எப்படிப் பொறுப்பாக்க முடியும்? அதில் இறைவனின் பங்கே இல்லையா? இது அபூ ஹனிஃபாவின் மூன்றாவது கேள்வி அல்லது சந்தேகம்.

இது மாணவர்களுக்கு மத்தியில் கேட்கப்பட்டதால் இமாம் ஜாஃபர் சாதிக் அவர்களுக்கு சங்கடத்தைக் கொடுத்திருக்கும் என்று நினைத்தால் தவறாகிவிடும். ஏனெனில் இமாம் ஜாஃபர் சாதிக் அவர்கள் கொடுத்த பதில்களால் அபூ ஹனிஃபாவுக்குத்தான் சங்கடம் ஏற்பட்டது. அப்படி என்ன பதிலை இமாம் ஜாஃபர் சாதிக் சொன்னார்கள்?

அபூ ஹனிஃபா பேசிமுடித்தவுடன் பதிலுக்காகக் காத்திருந்தார். ஆனால் இமாம் ஜாஃபர் சாதிக் பதிலேதும் உடனடியாகச் சொல்லவில்லை. அருகிலிருந்த அல்லது கீழே கிடந்த ஒரு செங்கல் துண்டை எடுத்து அபூ ஹனிஃபாவின் நெற்றியை நோக்கி வீசினார்கள். அது அபூ ஹனிஃபாவின் நெற்றியில்பட்டுக் காயம் ஏற்பட்டது.

அதனால் அந்த வன்முறைக்கான தீர்வுக்காக கலீஃபா அவர்களிடம் அந்த இருவரின் வழக்கும் சென்றது.

ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று இமாம் ஜாஃபர் சாதிக்கை கலீஃபா கேட்டபோது, ‘நான் ஒன்றுமே செய்யவில்லை. அவர் கேட்ட மூன்று கேள்விகளுக்கும் பதிலைத்தான் அப்படிச் சொன்னேன்’ என்றார்கள்!

அது எப்படி என்று விளக்குங்கள் என்று கலீஃபா கேட்டுக்கொண்டார்.

‘இறைவன் இருக்கின்றான் என்றால் அவனைப்பார்க்க முடியவேண்டும். பார்க்க முடியாத ஒன்றை இருக்கிறது என்று எப்படி ஒத்துக்கொள்ள முடியும் என்று கேட்கிறார். ஆனால் நான் அந்தக் கல்லை அவர் நெற்றியை நோக்கி எறிந்ததால் இப்போது தன் நெற்றியில் வலியும் வேதனையும் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் வலி எங்கே இருக்கிறது என்று அதை அவர் காட்டினால்தான் அவர் சொல்வது உண்மை என்று என்னால் நம்ப முடியும்.’

‘இரண்டாவதாக, நெருப்பை நெருப்பு எரிக்க முடியாது என்று கூறுகிறார். மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டவன். நான் எறிந்த கல்லும் களிமண்ணால் ஆனது. களிமண்ணை களிமண்ணால் காயப்படுத்த முடியுமெனில், நெருப்பை நெருப்பு ஏன் எரிக்காது?’

‘தன் செயல்களுக்கு மனிதன் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்று கூறுகிறார். ஆனால் நான் அவரை அடித்ததற்காக நீதிகேட்டு உங்களிடம் வந்திருக்கிறார். அப்படியானால் தண்டனையும் அல்லாஹ்வுக்குத்தானே கொடுக்கவேண்டும்? என்னை ஏன் குற்றம் சுமத்துகிறார்?’ என்று கேட்டார்கள்.

சபை அதிர்ந்தது. ஆச்சரியப்பட்டது. அமைதியானது. நபிகள் நாயகத்தின் குடும்பத்தைச் சேர்ந்த இமாம் ஜாஃபர் சாதிக் அவர்களின் ஞானத்தை எண்ணி அபூ ஹனிஃபா அவர்களுக்கு பிரமிப்பாக இருந்தது. தான் தோற்றதற்காக அவர் சந்தோஷப்பட்டார்.

(தொடரும்)

பகிர:
நாகூர் ரூமி

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *