ஹெராக்லியஸ். ஏழாம் நூற்றண்டில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கிழக்கு ரோமானியப் பேரரசின் மன்னராக இருந்தவர். இந்த நிகழ்ச்சி நடக்கும்போது அவர் பாரசீகர்களை வெற்றிகொண்டிருந்தார். அந்தக் காலத்தில் உலகையே ஆட்டி வைத்துக்கொண்டிருந்த, அச்சப்படுத்திக்கொண்டிருந்த இரண்டு பேரரசுகளில் ஒன்று கிழக்கு ரோமானியப் பேரரசு அல்லது பைசாந்தியப் பேரரசு. இன்னொன்று பாரசீகப் பேரரசு. ரோமானிய மன்னர்கள் கைசர் என்றும் பாரசீக மன்னர்கள் கிஸ்ரா என்றும் அரேபிய வரலாற்றில் அறியப்படுகின்றனர்.
இந்த நிகழ்ச்சி நடந்தபோது மன்னர் கைசர் ஹெராக்லியஸ், கான்ஸ்டாண்டிநோப்பிளில் இருந்தார். அப்போது அபூசுஃப்யான் என்ற குறைஷி குலத்தின் அரேபியத்தலைவர் ஒருவர் வாணிப நிமித்தமாக அங்கே சென்றிருந்தார். அவர் இஸ்லாத்தின் பரம விரோதிகளில் ஒருவராக இருந்தார். ஆனால் வாழ்க்கையின் வினோதங்களில் ஒன்று அவரது அருமை மகளார் உம்மு ஹபீபா என்பவர் நபிகள் நாயகம் அவர்களின் மனைவிகளில் ஒருவராக இருந்தார். அவர் பெருமானாரின் எதிரி மாமனார்!
ஒருமுறை அபூசுஃப்யான் மதினா நகருக்குச் சென்றிருந்தபோது தன் மகளின் வீட்டுக்கு, அதாவது நபிகள் நாயகத்தின் மனைவியின் வீட்டுக்குச் சென்றார். அங்கேயிருந்த ஒரு விரிப்பில் அவர் அமர முயன்றபோது அதைச் சட்டென்று மகளார் உருவிவிட்டார். அதிர்ச்சியடைந்த அபூசுஃப்யானைப் பார்த்து அந்த மகள் சொன்னார்: ‘இது இறைவனின் இறுதித்தூதர் அமரும் விரிப்பு. இதில் உட்காரும் தகுதி உங்களுக்கு இல்லை’.
வரலாற்றில் காணக்கிடைக்கும் அற்புதமான, ரசமான காட்சிகளில் ஒன்று அது. நபிகள் நாயகம் எந்த அளவுக்கு மதிக்கப்பட்டார்கள் என்பதற்கு அழகிய உதாரணம் அந்த அரிய நிகழ்வு.
அந்த அபூசுஃப்யான் வியாபார நிமித்தமாக கான்ஸ்டாண்டிநோப்பிளுக்குச் சென்றிருந்தபோது ஹெராக்லியஸால் அழைக்கப்பட்டார். அவரும் சில தோழர்களும். ஏன்?
நபிகள் நாயகம் அவர்கள் உலகின் பெரும் பெரும் மன்னர்களுக்கெல்லாம் இஸ்லாத்தை எடுத்துரைத்து, இஸ்லாத்தில் இணைந்துகொள்ளும்படி முத்திரையிடப்பட்ட கடிதங்களை அனுப்பிக்கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு கடிதம் ஹெராக்லியஸுக்கும் வந்திருந்தது.
எனவே கடிதம் அனுப்பிய முஹம்மது என்பவர் எப்படிப்பட்டவர் என்று அறிந்துகொள்ள ஊருக்கு அரேபியர்கள் யாரும் வந்திருந்தால், அவர்களில் முஹம்மது நபியைத் தெரிந்தவர்கள் இருந்தால் அழைத்துவரும்படி ஹெராக்லியஸ் உத்தரவிட்டார். அவ்வுத்தரவின் தொடர்பில் அபூசுஃப்யான் தன் தோழர்களுடன் ஹெராக்லியஸின் சபைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவரிடம் ஹெராக்லியஸ் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு அபூசுஃப்யான் சொன்ன பதில்களும் ஒரு திரைப்படக்காட்சியைப்போல சுவை மிகுந்தவை.
‘தான் ஒரு இறைத்தூதர் என்று சொல்லும் முஹம்மதுவுக்கு உறவினர் இதில் யாரும் இருக்கிறார்களா என்று கேட்டுச் சொல்லுங்கள்’ என்றார் ஹெராக்லியஸ்.
‘அவருக்கு நான் உறவுதான்’ என்றார் அபூசுஃப்யான்.
‘அவருக்கு நீங்கள் என்ன உறவு’?
சொன்னார் அபூசுஃப்யான். அபூசுஃப்யான் பிறந்த அப்து மனாஃப் கோத்திரமும் நபிகளார் பிறந்த ஹாஷிம் கோத்திரமும் சகோதர கோத்திரங்கள்.
‘முஹம்மதின் குடும்பம் எப்படிப்பட்டது?’
‘மிக உயர்ந்தது.’
‘அவரது குடும்பத்தில் அரசர்கள் யாரும் இருந்ததுண்டா?’
‘இல்லை.’
‘அவரது மார்க்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள் ஏழைகளா பணக்காரர்களா?’
‘ஏழைகளும் அடிமைகளும்.’
ஹெராக்லியஸுக்கு ஆர்வம் அதிகமானது.
‘அவரைப் பின்பற்றும் கூட்டம் அதிகரித்துக்கொண்டுள்ளதா… குறைகிறதா?’
‘அதிகரித்துக்கொண்டுள்ளது.’
‘அவர் பொய் சொல்லி நீங்கள் அறிந்ததுண்டா?’
‘இல்லை.’
‘அவர் ஒப்பந்தங்களை மீறியுள்ளாரா?’
‘இதுவரை இல்லை. ஆனால் சமீபத்தில் நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்துகொள்கிறார் என்று இனிமேல்தான் தெரியும்’.
ஒப்பந்தங்களை, கொடுத்த வாக்கை எப்போதுமே நபிகள் நாயகம் மீறியதில்லை. ஆனால் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஏதாவது சொல்ல ஆசைப்பட்ட அபூசுஃப்யானுக்கு அந்தக் கேள்வி மட்டுமே லேசாக இடமளித்தது!
‘அவருடன் போர் செய்துள்ளீர்களா?’
‘செய்துள்ளோம்.’
‘அவற்றின் விளைவு என்ன?’
‘சில நேரங்களில் அவருக்கும், சில நேரங்களில் எங்களுக்கும் வெற்றி கிடைத்துள்ளது.’
‘அவர் என்ன சொல்கிறார்?’
‘ஓரிறையை வணங்குங்கள், இணை வைக்காதீர்கள், சிலைவணக்கம் செய்யாதீர்கள். இறைவனைத் தொழுங்கள், கற்புள்ளவர்களாக இருங்கள், உண்மையைப் பேசுங்கள், உறவினர்களோடு அன்பு பாராட்டுங்கள் என்று கூறுகிறார்.’
தான் இப்படி பதில்சொன்னது இஸ்லாத்தின் பரம எதிரியாக இருந்த அபூசுஃப்யானுக்கே ஆச்சரியமாக இருந்தது. இஸ்லாத்தைத் தானே எடுத்துரைத்த மாதிரி உணர்ந்தார். ஆனால் உடன் வந்தவர்களிடம் தனது நேர்மை பிம்பத்தை உறுதிப்படுத்தவே அபூசுஃப்யான் வேறுவழியின்றி அப்படிச்சொல்ல நேர்ந்தது. ஏனெனில் நபிபெருமானாரின் பரம எதிரிகளில் ஒருவராக நீண்ட காலம் அவர் இருந்தார். நபிகளாரை எதிர்த்து செய்யப்பட்ட மிக முக்கியமான உஹதுப்போரில் முஸ்லிம்களுக்கு எதிரிகளாக இருந்த படைகளின் தலைவரே அவர்தான்! முஹம்மது நபியவர்களால் மக்கா வெற்றிகொள்ளப்பட்டபோதுதான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
அவர் சொன்னதையெல்லாம் கேட்ட ஹெராக்லியஸ் எழுந்தார்.
‘நீங்கள் சொன்னதெல்லாம் உண்மையென்றால், இப்போது நான் நின்றுகொண்டிருக்கிறேனே, இதுவரை அந்த இறைத்தூதரின் ராஜ்ஜியம் வியாபிக்கும். ஓர் இறைத்தூதர் வரப்போகிறார் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் அவர் அரேபியாவிலே, உங்கள் மத்தியிலிருந்து வருவார் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நான் அங்கே சென்றால், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வேன். அவரது பாதங்களைக் கழுவிவிடுவேன்’ என்றார்.
வரலாறும் மதமும் சேரும்போது பல வினோதங்கள் நிகழத்தான் செய்கின்றன.
(தொடரும்)