ஒரு முறை நபிகள் நாயகம் இப்படிப் பிரார்த்தித்தார்கள்: ‘யா அல்லாஹ், இரண்டு உமர்களில் ஒருவரை இஸ்லாத்தில் இணைத்து என் கரங்களை வலுப்படுத்துவாயாக’.
அந்த இரண்டு உமர்களில் ஒருவர் உமர் இப்னு ஹத்தாப், இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபா. உலகெங்கும் இஸ்லாம் பரவ வழிவகுத்த வீரர். இன்னொருவர் அபூ ஜஹ்ல் என்ற இஸ்லாத்தின் விரோதி!
இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்த குறைஷிகளெல்லாம் மக்காவிலிருந்த ‘தாருந்நத்வா’ என்ற மண்டபத்தில் கூடியிருந்தார்கள். அதுதான் அவர்கள் சந்தித்து, விவாதித்து, முக்கிய முடிவுகளை எடுக்கும் இடம். இஸ்லாத்தின் பரம வைரியாகவும் பிரதான எதிரியாகவும் இருந்த குறைஷித்தலைவர்களின் ஒருவனான அபூ ஜஹ்ல் தீப்பொறி பறக்கப் பேசிக்கொண்டிருந்தார்.
‘ஓ குறைஷிகளே, நம் தெய்வங்களையெல்லாம் முஹம்மதும் அவரது தோழர்களும் அவமானப்படுத்துவதை சகித்துக்கொண்டிருக்கப் போகிறோமா? எவ்வளவு காலம்? நமக்கு அவமானமாக இல்லையா? நம்மிடம் ஆண்மையில்லையா? முட்டாள்களாகவும் கோழைகளாகவும் ஆகிவிட்டோமா? ’ என்று சொல்லிவிட்டு சட்டென்று இளைஞர்களின் பக்கம் திரும்பினார்.
‘இளைஞர்களே, நாம் வணங்கும் தெய்வங்களையெல்லாம் வெறும் கல் என்று சொல்லி முஹம்மது கேவலப்படுத்திவருகிறார். நமக்கெல்லாம் அறிவில்லை என்று நினைக்கிறார். நான் இங்கேயே, இப்போதே ஒரு பரிசை அறிவிக்கிறேன். முஹம்மதின் தலையைக் கொண்டுவருபவர்க்கு கறுப்புக் கண்களும் சிவப்பு முடியும் கொண்ட நூறு ஒட்டகங்களை நான் பரிசளிக்கிறேன். நமது உயர்ந்த இனத்தின் ரத்தம் உங்கள் உடம்பில் ஓடிக்கொண்டிருந்தால், இதை ஏற்றுக்கொண்டு பதில் சொல்லுங்கள். பரிசை வெல்ல ஒருவருக்கொருவர் போட்டி போடுங்கள்’ என்று சொன்னார். அதைக்கேட்ட இளைஞர்களுக்கு ஆசை பிறந்தது.
அதில் ஓர் இளைஞர் இருந்தார். அவரை அரேபியர்களின் ஹெர்குலிஸ் என்று சொல்லவேண்டும். அவரது வீரத்துக்கும் வாளுக்கும் அஞ்சாதவர்களே அரேபியாவில் கிடையாது. அவர் பெயர் உமர் இப்னு கத்தாப்.
‘போதும் உன் வீண் பேச்சை நிறுத்து. நீ சொன்னபடி பரிசளிப்பாய் என்பதற்கு என்ன உத்தரவாதம்? லாத், உஸ்ஸாமீது சத்தியம் செய்து சொல்’ என்றார்.
லாத், மனாத், உஸ்ஸா, ஹுபல் ஆகியவை அந்தக் கால அரேபியர்களால் வணங்கப்பட்ட சிலைகள்.
‘லாத், உஸ்ஸா என்ன, நான் க’அபாவில் வைக்கப்பட்டுள்ள எல்லாம் வல்ல ஹுபல் மீதே சத்தியம் செய்கிறேன்’ என்று அபூ ஜஹ்ல் சொன்னார். சொன்னதுபோலவே அவரும் உமரும் செல்ல, அவர்களைத் தொடர்ந்து மற்ற குறைஷியரும் என்ன நடக்கப் போகிறதென்று பார்க்கும் ஆர்வத்துடன் சென்றனர். சொன்னபடியே சத்தியம் செய்தார் அபூ ஜஹ்ல்.
உடனே ஒரு அங்குல அகலமும் ஏழு அங்குல நீளமும் கொண்ட தன் வாளை எடுத்துக்கொண்டு விழிகளில் தீப்பொறிகள் பறக்க அர்கம் என்பவரின் வீட்டுக்கு விரைந்தார் உமர். ஏன்? அங்கேதான் முஹம்மது நபியவர்களும் அவர்களது தோழர்களும் இருந்தனர். அப்போது உமருக்கு முப்பத்து மூன்று அல்லது முப்பத்தாறு வயது. தெருவில் அவரைப் பார்த்த குழந்தைகள் அச்சத்தில் ஓடி ஒளிந்தனர்.
வழியில் அவரைப் பார்த்த நயீம் அல்லது ச’அத் என்பவர், ‘எங்கே இவ்வளவு வேகமாகப் போகிறீர்கள்?’ என்று கேட்டார்.
’நமது மார்க்கத்தை இழிவுபடுத்திக்கொண்டிருக்கும் முஹம்மதைக் கொல்லப்போகிறேன்’ என்று கர்ஜித்தார் உமர்.
’அப்படியா! முஹம்மதின் ஹாஷிம் குடும்பத்தினரும் ஜொஹ்ரா குடும்பத்தினரும் உம்மை விட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறீரா? முஹம்மதைக் கொல்வது இருக்கட்டும். முதலில் உமது குடும்பத்தைச் சரிசெய்யும்’ என்றார்.
’ஏன், என் குடும்பத்துக்கு என்ன?’ என்று கேட்டார் உமர்.
’உம் தங்கை ஃபாத்திமாவும், மைத்துனர் ஜைதும் உம் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு முஸ்லிமாகிவிட்டனர்’ என்றார்.
அதைக்கேட்டு ஸ்தம்பித்த உமர் உடனே திசையைமாற்றித் தன் தங்கையின் வீட்டை நோக்கி விரைந்தார். ஆனால் கதவு உள்ளிருந்து தாழிடப்பட்டிருந்தது. உள்ளே பேச்சுச் சப்தம் கேட்டது. சாவித்துவாரத்தில் காதை வைத்து உற்றுக்கேட்டார். உள்ளே ஹப்பாப் என்ற நபித்தோழர் திருமறையான குர்’ஆனிலிருந்து ‘தாஹா’ என்ற அத்தியாயத்தின் வசனங்களை இனிமையான குரலில் ஓதிக்கொண்டிருந்தார்.
உடனே தடதடவென கதவை அடித்துத் திறக்கச் சொன்னார் உமர். அவர் குரலைக் கேட்டதும் அவரது சகோதரியின் கணவர் ஓடிப்போய் ஒரு அறையில் ஒளிந்துகொண்டார். ஹப்பாபும் ஒளிந்துகொண்டார். அவர்கள் ஓதிக்கொண்டிருந்த திருமறையின் பிரதிகள் ஒளித்துவைக்கப்பட்டன. கடைசியில் கதவு திறக்கப்பட்டது.
‘என்ன வாசித்துக்கொண்டிருந்தீர்கள்? என்று கேட்டார் உமர்.
‘ஒன்றுமில்லை. நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்’ என்று சொன்னார் தங்கை.
‘நான் என்ன முட்டாளா? நம் சொந்தங்களிடம் என்னை இழிவானவனாக்கிவிட்டாய். உண்மையைச் சொல்’ என்று கர்ஜித்துவிட்டு சட்டென்று சகோதரி கணவர் ஜைத்மீது பாய்ந்து அவரைக் கீழேதள்ளி அவர் நெஞ்சில் ஏறி அமர்ந்தார் உமர். தங்கை மட்டும் குறுக்கே வராமல் இருந்திருந்தால் தன் வாளால் மச்சான் ஜைதை இரு துண்டுகளாக உமர் வெட்டிப் போட்டிருப்பார்.
தங்கைக்குக் கடுமையான அடிகள் முகத்திலும் தலையிலும் விழுந்தன. அவற்றைத் தாங்க முடியாமல் ஃபாத்திமா மயங்கிக் கீழே விழுந்தார். அவர் முகம்பூராவும் ரத்தமாகிவிட்டிருந்தது. ஆக்ரோஷ அடிகளின் விளைவு.
ஆனால் தப்பு செய்கிறோம் என்று உமரின் உள்ளுணர்வு சொல்லியது. அதன் பிறகு கொஞ்சம் அமைதியானார். சின்ன வயதில் தன் தங்கையோடு விளையாடியதெல்லாம் அவருக்கு நினைவு வந்தது.
சற்று நேரத்தில் தங்கை மயக்கம் தெளிந்து எழுந்தார்.
‘அண்ணா, ரொம்ப நாளைக்கு முன்பே நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டோம். எங்கள் நெஞ்சில் அது ஆழமாகப் பதிந்துவிட்டது. இப்போது நீங்கள் எங்களை அச்சுறுத்த முடியாது. என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்’ என்றார். இஸ்லாம் கொடுத்த துணிச்சல். சத்தியம் கொடுத்த துணிச்சல். வேதம் கொடுத்த நாதம்.
தங்கையின் அந்த பதிலால் மிச்சமிருந்த கோபமும் கரைந்துபோனது உமருக்கு. பரிவோடு தங்கையைப் பார்த்தார். ‘சரி, நீங்கள் படித்துக்கொண்டிருந்த அந்த கையெழுத்துப் பிரதியைக் கொண்டுவாருங்கள் நான் பார்க்கிறேன்’ என்றார்.
‘இல்லை, கொண்டுவர மாட்டேன். நீங்கள் அதைக்கிழித்துவிடுவீர்கள்.’
‘இல்லை, சத்தியமாக அப்படிச் செய்யமாட்டேன்’ என்று உறுதிகூறினார். அதே சமயம் திருமறை வசனங்களின் அந்தப் பிரதி கொஞ்ச தூரத்தில் கிடப்பதைப் பார்த்துவிட்டார். சட்டென்று பாய்ந்து அதை எடுத்தார்.
ஆனால் அப்படிச் செய்யக்கூடாது என்று கத்திக்கொண்டே அவர் தங்கை மிகவும் கஷ்டப்பட்டு அதை அவர் கையிலிருந்து பிடுங்கினார். சில வினாடிகள் அமைதியாக இருந்துவிட்டு, ‘சுத்தமில்லாத கைகளால் இதைத் தொடக்கூடாது. இது நாயனின் கட்டளை’ என்றார்.
ஆர்வத்தில் எழுந்து தங்கை சொன்னபடி முகம் கை கால்களைக் கழுவிச் சுத்தப்படுத்திக்கொள்ளச்சென்றார் உமர். அவர் ஒரு முடிவோடு இருந்தார்.
‘ஒரு காஃபிரிடமா நீங்கள் திருமறையைக் கொடுக்கப்போகிறீர்கள்?’ என்று ஹப்பாப் கேட்டார்.
‘என் சகோதரருக்கு அல்லாஹ் சரியான வழியைக்காட்டுவான் என்று நம்புகிறேன்’ என்று ஃபாத்திமா சொன்னார்.
உடல் சுத்தம் செய்துவிட்டு உமர் திரும்புவதைப் பார்த்ததும் மீண்டும் ஓடி ஒளிந்துகொண்டார் ஹப்பாப். உமரின் கைகளில் திருமறை வசனங்கள் எழுதப்பட்ட ஓலை அல்லது எலும்பு கொடுக்கப்பட்டது. அதில் ‘தாஹா’ என்ற அத்தியாயத்தின் வசனங்கள் சில எழுதப்பட்டிருந்தன. ‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் துவங்குகிறேன்’ என்று துவங்கி அது ஓதப்பட்டது.
‘அடடா, என்ன அற்புதமான வாக்கியங்கள்’ என்று உமர் வியந்தார். சட்டென்று அவர் உடல் நடுங்கியது. புனித வாக்கியங்கள் எழுதப்பட்ட அந்தச் சுவடி கீழே விழுந்தது. அதைக் குனிந்து மீண்டும் எடுத்த உமர் தொடர்ந்து படித்தார்.
“வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டுக்கும் இடையே உள்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன” என்ற வசனங்களைப் படித்ததும் ‘இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரன் நிச்சயமாக வணக்கத்துக்குரிய இறைவனே’ என்று உமரின் வாய் முணுமுணுத்தது.
மேலே படிக்கப் படிக்க உமருக்குக் கண்ணீர் பெருகியது. அது இறைவனின் வேதமே என்ற உண்மை அவரது இதயத்தின் ஆழத்துக்கு இறங்கியது. ஆகச் சிறப்பான கவிதையை மிஞ்சும் திருமறையின் புனித வரிகள் உமரின் இதயத்துக்குள் இசைபாடின.
“அல்லாஹ் – அவனைத் தவிர வணக்கத்துக்குரிய நாயன் வேறில்லை; அவனுக்கு அழகிய திரு நாமங்கள் இருக்கின்றன” என்ற எட்டாவது வசனத்தை அவர் படித்தபோது, ‘இந்த குறைஷிகள் இதற்கு எதிராகவா பேசிக்கொண்டும் செயல்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்’ என்று வியந்தார்.
“நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வேறு நாயகன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்குவீராக, என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக” என்ற வரிகளுக்கு வந்தபோது, ‘இவ்வசனங்களை நம்புபவர்கள் எப்படி அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவார்கள்?’ என்று உமர் சப்தமாகச் சொன்னார்.
அவர் சொன்னதை அச்சத்தில் ஒளிந்துகொண்டிருந்த நபித்தோழர் கப்பாப் கேட்டதும். ‘ஓ உமரே, நேற்றுதான் பெருமானார், ‘இறைவா, இஸ்லாத்தை வலுப்படுத்த இரண்டு உமர்களில் ஒருவரைக் கொடுப்பாயாக’ என்று இறைஞ்சினார்கள். இறைவன் அவர்களது பிரார்த்தனையை அங்கீகரித்துவிட்டான்’ என்றார்.
நபிபெருமானார் அர்கம் என்பவரது வீட்டில் இருப்பதை ஹப்பாப் மூலமாகத் தெரிந்துகொண்ட உமர் உடனே அங்கு விரைந்தார். உள்புறமாக தாழிடப்பட்டு சாத்தப்பட்ட கதவைத் தட்டினார். ஆனால் கதவைத் திறக்க உள்ளே இருந்தவர்கள் அச்சப்பட்டனர். உமரின் வாளைவிட அவரது கழிக்குக்கூட அஞ்சியவர்கள் அரேபியர்கள்.
‘அவர் உள்ளே வரட்டும். வரவிடுங்கள். அவரது வாளினாலேயே அவரைக் கொல்வேன்’ என்று கர்ஜித்தார் பெருமானாரின் சிற்றப்பாவான வீரர் ஹம்ஸா.
கதவு திறக்கப்பட்டது. உள்ளே வந்த உமரை சட்டென்று அருகில் இழுத்த நபிபெருமானார், ‘எதற்காக வந்திருக்கிறீர்கள் உமர்? அல்லாஹ்வின் கோபம் உங்கள்மீது இறங்கும்வரை சிலைகளை வணங்கிக்கொண்டிருக்கப்போகிறீர்களா?’ என்று கேட்டார்கள்.
‘ஓ அல்லாஹ்வின் தூதரே, நான் இஸ்லாத்தில் இணையவே வந்திருக்கிறேன்’ என்று சொன்னார்.
உடனே அவரை அணைத்துச்சென்று அமர வைத்த நபிபெருமானார், ‘ஓ இறைவா! நேர்வழியை உமருக்குக் காட்டுவாயாக. இஸ்லாத்தின் புகழை அவரைக்கொண்டு உயர்த்துவாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்.
அவர்கள் பிரார்த்தனை நிறைவேறியது. உலகம் முழுக்க இஸ்லாம் பரவ, இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா ஆன உமரின் ஆட்சிதான் காரணமாக இருந்தது. உமரின் வீரத்தின் பின்னால் பெருமானாரின் பிரார்த்தனை இருந்தது.
(தொடரும்)
_________
படம்: உமர் இப்னு கத்தாப் – ஜெருசலேம் வெற்றியின் போது (பிரெஞ்சு சித்தரிப்பு)