இது நடந்தது மக்காவில். ரொம்ப காலத்துக்கு முன்னே நியாய தர்மத்தை நிலைநாட்ட குசய், ஹாஷிம் போன்ற பெரியவர்கள் இருந்தார்கள்.
மேலே சொன்ன குசய் மக்காவில் தாருந்நத்வா என்ற மண்டபத்தைக் புனித ஆலயமான க’அபாவின் தென்மேற்குப் பக்கமாகக்கட்டினார். அதில்தான் முக்கியமான சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும்தான் அதில் உறுப்பினராக இருக்க முடியும் என்ற விதியும் இருந்தது. நபிபெருமானாருக்கு நாற்பது வயதில்தான் இறைவனின் முதல் செய்தி கிடைத்தது. நாற்பதுகளின் மகத்துவங்களில் அதுவும் ஒன்று.
ஆனால் நீதி சொல்லும் மண்டபம் கட்டியவர்களெல்லாம் மறைந்து போனார்கள். அறியாமை என்ற இருளில் அரேபியா மூழ்கிக்கிடந்தது. ரொம்ப காலம் பெரியவர்கள், நியாயவான்கள் யாருமில்லாமல்தான் மக்கா இருந்தது, ஒரு சிலரைத்தவிர.
அந்த ஒருசிலர் சிலைவணக்கம் செய்யாதவர்களாக, தனிமையையும் தியானத்தையும் நாடியவர்களாக இருந்தனர். ஊரில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்க ஜுபைர் இப்னு அப்துல் முத்தலிப் என்பவரின் தூண்டுதலால் ‘ஹில்ஃபுல் புதுல்’ என்ற ஓர் அமைப்பு தொடங்கப்பட்டது.
அந்த அமைப்பு தொடர்பான முதல் சந்திப்பு அப்துல்லாஹ் இப்னு ஜுதான் என்பவரது வீட்டில் நடந்தது. வீட்டுக்கு வந்தவர்களுக்கு அவர் ஒரு விருந்தும் கொடுத்தார். ஹாஷிம், ஜொஹ்ரா, தமீம் ஆகிய மூன்று கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் அதில் கலந்துகொண்டனர். அதில் கதீஜா பிராட்டியாரின் கணவராக இருந்த முஹம்மது அவர்களும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இறைவனின் தூதராக அவர்கள் அப்போது அறிவிக்கப்படவில்லை.
விருந்து முடிந்ததும் அந்த அமைப்பின் இளைஞர்கள் புனித க’அபாவுக்குச் சென்று அங்கே ஜம்ஜம் நீரூற்றின் புனித நீரை அருந்தினர். பின் அந்த நீரில் கொஞ்சத்தை புனித கறுப்புக்கல்லின்மீது ஊற்றி அநியாயம் இழைக்கப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடுவோம் என்று உறுதி எடுத்துகொண்டனர். அப்படி அவர்களால் நியாயம் செய்ய முடியவில்லையெனில் அவர்களது சொந்தப்பணத்திலிருந்து அநியாயம் இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்வது என்றும் முடிவு செய்தனர்.
அப்போது க’அபா ஆலயம் மேற்கூரை இல்லாமல் இருந்தது. மழையாலும் வெயிலாலும் அது பாதிக்கப்பட்டது. அதோடு, ரொம்ப உயரமாகவும் அது அப்போது இருக்கவில்லை. அதன் நுழைவாயில் தரைமட்டத்துக்கு இருந்ததால் கடும் மழை வந்தபோதெல்லாம் க’அபாவுக்கு உள்ளே தண்ணீர் சென்றுகொண்டிருந்தது.
க’அபாவுக்கு உள்ளே அதன் நடுப்பகுதியில் இறைத்தூதர் இப்ராஹீமால் ஒரு கிணறு வெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனுள்ளே பல பரிசுப்பொருள்களும் வேண்டுதலில் போடப்பட்ட பொருள்களும் இருந்தன. மேற்கூரை இல்லாமல் இருந்ததால் அடிக்கடி திருடர்கள் உள்ளே சென்று கைவரிசையைக் காட்டி அதன் புனிதத்தைக் கெடுத்துவந்தனர்.
ஒருமுறை ஒரு பெண் சாம்பிராணி காட்டி க’அபாவில் பிரார்த்தித்துக்கொண்டிருந்தபோது அதன் விளைவாக தீ பற்றிக்கொண்டது. அது க’அபாவின் சுவர்களைச் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சேதப்படுத்தியது. மட சாம்பிராணி என்ற பதம் அங்கிருந்துதான் உருவாகி இருக்குமோ. அதையெல்லாம் இடித்துவிட்டு புதிதாகக் கட்டுவது பற்றி அரேபியர் அப்போது சிந்திக்கவில்லை. அது இறைவனின் கோபத்தைக் கிளறிவிடுமோ என்று அவர்கள் அஞ்சினர்.
ஆனால், ஒரு கடுமையான மழை மற்றும் வெள்ளத்தின் மூலம் இறைவனே அந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவைக்கொடுத்தான்.
அபீசீனியாவுக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு கிரேக்க கப்பல் ஜித்தா துறைமுகத்துக்கு அருகே விபத்துக்குள்ளானது. இரும்பு, பளிங்குக்கற்கள், மரச்சாமான்கள் ஆகியவை அதில் இருந்தன.
அவ்விஷயத்தைக் கேள்விப்பட்டதும் வலீத் இப்னு முகீரா என்ற தலைவரும் இன்னும் சிலரும் அந்த கப்பலில் இருந்த இரும்பு, பளிங்கு போன்ற பொருள்களை க’அபாவை மறுசீரமைப்பதற்காக விலைக்கு வாங்க நினைத்துச் சென்றனர்.
அவர் அவற்றை விலைக்கு வாங்கியது மட்டுமல்ல; அக்கப்பலின் தலைவராகவும், எகிப்து நாட்டு கட்டடக்கலை வல்லுனராகவும் தச்சராகவும் இருந்த பகும் என்பவரையும் அழைத்து வந்து க’அபாவைப் புனரமைக்க அவர் சேவைகளைப் பயன்படுத்திக்கொண்டார்.
ஆனால் புனரமைக்க வேண்டுமெனில் முதலில் க’அபாவை இடிக்கவேண்டுமல்லவா? அதற்கு யாரும் தயாராக இல்லை. இறைவனின் வீட்டை இடித்தால் அவன் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் அனைவருக்கும் இருந்தது.
ஆனால் துணிச்சலாக முகீரா இடிக்கத்தொடங்கினார். ஒன்றும் ஆகாமல் அவர் மறுநாள் காலை ஆரோக்கியமாகத் திரும்ப வந்ததைப் பார்த்ததும்தான் மற்றவர்களும் அந்த வேலையில் கலந்துகொண்டனர்.
க’அபாவின் ஒரு மூலையில் ஹஜ்ருல் அஸ்வத் என்ற ஒரு கறுப்புக்கல் இருந்தது. அது சொர்க்கத்திலிருந்து வந்ததாகவும், பாலைவிட வெள்ளையாக இருந்ததாகவும், மனிதர்கள் செய்யும் பாவங்களினால் அது கறுப்பாகிவிட்டதாகவும் நபிபெருமனார் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. அக்கல்லின் இன்னொரு சிறப்பு, அது நீரில் போட்டால் மூழ்காது மிதக்குமாம்! முதல் மனிதர் ஆதாம் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்தபோது அக்கல்லும் இறங்கியதாக நம்பப்படுகிறது.
க’அபா ஐந்தடிக்கு மேல் உயர்ந்துவிட்டது. இப்போது அந்தப் புனிதக் கறுப்புக்கல்லை மீண்டும் அது இருந்த இடத்தில் பொருத்தவேண்டும். அங்கேதான் பிரச்னை ஆரம்பமானது. அதை யார் பொருத்துவது?
ஒவ்வொரு கோத்திரமும் நாங்கள்தான் பொருத்துவோம் என்று விவாதம் செய்தது. நான்கு நாட்கள் இவ்விஷயமாக அக்கோத்திரங்கள் வாதிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் எந்த முடிவுக்கும் அவர்களால் வரமுடியவில்லை.
கடைசியில் வாளால் முடிவு செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தனர். அதாவது ஒருவரோடு ஒருவர் வாள் சண்டை போட்டு, கடைசியில் உயிரோடு இருப்பவர் அக்கல்லைப் பொருத்தவேண்டும். அந்த முடிவுக்குத்தான் அவர்களால் வர முடிந்தது. அந்தக் கால அரேபியர்கள் மூளையைப் பயன்படுத்தியதைவிட வாளைத்தான் அதிகமாகப் பயன்படுத்தினர்.
ஒரு கோப்பை நிறைய ரத்தம். அது மனித ரத்தமா மிருக ரத்தமா என்று தெரியவில்லை. அதற்குள் விரல்களை விட்டு அப்துத்தார் என்ற கோத்திரமும், அதீ என்ற கோத்திரமும் ரத்தம் தோய்ந்த விரல்களை நக்கி, வாள் சண்டை போட்டு, கறுப்புக்கல்லை எந்தக் கோத்திரத்தார் அதனிடத்தில் வைப்பது என்று முடிவு செய்யப்போவதாக சத்தியம் செய்தனர். புனிதக்கல், புனித ரத்தம், புனிதச்சண்டை!
நல்லவேளை அங்கே அபூ உமய்யா இப்னு அல் முகீரா என்று ஒரு அறிவார்ந்த பெரியவர் இருந்தார். அவர் ஒரு கருத்தைச் சொன்னார்.
‘சகோதரர்களே, உணர்ச்சிவசப்படாமல் நான் சொல்வதைக் கேளுங்கள். வன்முறை வெடித்து நம்மில் பலரின் ரத்தம் சிந்தப்படலாம் என்ற சூழ்நிலை வந்துவிட்டது. நமது உணர்ச்சிகள் நம்மை அடக்கியாளக்கூடாது. உணர்ச்சிகளை நாம்தான் அடக்கி ஆளவேண்டும். நான் சொல்வதைக் கேளுங்கள். நாம் எடுக்கும் முடிவுகள் நமது எதிர்காலச் சந்ததியினருக்கு பெருமையைத் தரவேண்டும். தலைகுனிவைத் தரக்கூடாது. எனவே எங்கள் கோத்திரம்தான் உயர்ந்தது என்ற சிந்தனை தேவையில்லை. சுமூகமான முடிவையே நாம் எடுக்கவேண்டும்’ என்று கூறினார்.
‘என்ன சொல்ல வர்றீங்க… சுமூகமான முடிவுன்னா என்ன?’ என்று ஒருவர் கேட்டார்.
‘உங்க திட்டம்தான் என்ன, சொல்லுங்கள்’ என்றார் இன்னொருவர்.
‘அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். இது கருக்கல் நேரம். இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்துவிடும். நாம் சற்று ஓய்வெடுப்போம். அதிகாலையில் பனீ ஷைபா வாசல் வழியாக யார் வருகிறார்களோ அவரிடம் பொறுப்பை விட்டுவிடுவோம். அவரே நமக்கு நடுவராக இருக்கட்டும். அவர் சொல்வதையே செய்யலாம்’ என்று சொன்னார்.
களைப்பு காரணமாகவோ நம்பிக்கை காரணமாகவோ, ‘சரி அப்படியே செய்வோம்’ என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். அதுவே ஒரு அதிசயம்தான். பனீஷைபா கோத்திரம் என்பது க’அபாவுக்கான சாவிகளை வைத்திருக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்ட கோத்திரம். அவர்கள் பெயரால் இருந்த வாசலைத்தான் அபூ உமய்யா இப்னு அல் முகீரா குறிப்பிட்டார்.
பொழுது விடிந்துகொண்டிருந்தது. உங்கள் அனைவருக்கும் முன்னால் நான் விழித்துவிட்டேன் பார்த்தீர்களா என்று சொல்வதுபோல் பெருமிதத்துடன் சேவல் கூவியது. அப்போது பனீ ஷைபா வாசல் வழியாக யாரோ வருவது நிழல்போல் தெரிந்தது. அந்த விடியலின் அரையிருளில் வந்தது யார் என்று முடிவு செய்யமுடியவில்லை. ஆனால், அருகே வரவும் யாரென்று தெரிந்துவிட்டது.
‘அல் அமீன், அல் அமீன்’ என்று அனைவரும் கத்திவிட்டனர். வந்தது நபிபெருமானார்தான். அல் அமீன் என்பது அரேபியர்களால் நபிகளாருக்குக் கொடுக்கப்பட்ட குன்யா. அதாவது பட்டப்பெயர், பண்புப் பெயர். ‘நம்பிக்கைக்கு உரியவர்’ என்று அதற்கு அர்த்தம். இறைவனின் தூதர் என்று அறியப்படுவதற்கு முன்பே நம்பிக்கைக்கு உரியவர் என்று அரேபியர்களால் புகழ்ப்பட்டம் கொடுக்கப்பட்டவர்கள் அவர்கள்.
ஏற்கனவே க’அபாவைப் புதுப்பிக்கும்போது தன் தோளில் கற்களைச் சுமந்து சென்றவர்கள்தான் அவர்கள். அது அனைவருக்குமே தெரியும். அப்போது தன் சிற்றப்பா சொன்னதற்காக இஸார் எனப்படும் கீழாடையைக் களையும்போது நிர்வாணமாகிவிடுவோமே என்ற நாண உணர்வால் மூர்ச்சையாகி விழுந்தவர்கள். அச்சம், மடம், நாணம் என்பதெல்லாம் ஆண்களுக்கும் உரியதுதான் என்பதைத் தன் வாழ்வில் நிரூபித்தவர்கள்.
வயதில் இளையவராக இருந்தாலும் அந்த அல் அமீனிடம் பிரச்னையைச் சொல்லி என்ன செய்யலாம் என்று அந்த அரேபியர்கள் கேட்டார்கள். திடீரென்று தன்மீது ஒரு பெரும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பதை அல் அமீன் உணர்ந்தார்கள். சற்று நேரம் ஆழமான யோசனைக்குப் பின் ஓர் அழகிய தீர்வுக்கு வந்தார்கள்.
தனது துண்டை எடுத்துத் தரைமீது விரித்தார்கள். அந்தக் கறுப்புக்கல்லை அவர்களே எடுத்து அதன்மீது வைத்தார்கள். பின் ஒவ்வொரு கோத்திரத் தலைவரையும் பெயர்சொல்லி அழைத்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் அந்தத் துணியின் ஒவ்வொரு மூலையைப் பிடித்துத் தூக்கச்சொன்னார்கள்.
ஜமா, அபூ ஹுசைஃபா, கைஸ் இப்னு அதீ, அப்து மனாஃப் இப்னு ராஃபியா ஆகிய நான்கு கோத்திரத்தலைவர்களும் அல் அமீன் சொன்னபடியே செய்தார்கள். இப்போது புனிதக் கறுப்புக்கல்லைத் தூக்குவதில் எல்லாருக்கும் பங்கு வந்துவிட்டது.
ஏற்கனவே அந்தக் கல் இருந்த கிழக்கு மூலையில் அதை அல் அமீனே மீண்டும் பொருத்தினார்கள். உலக வரலாற்றில் இஸ்லாத்தின் அடிப்படையை நிறுவியது அந்த நிகழ்வு. ஞானம், சமாதானம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது இஸ்லாம் என்பதைக் காட்டியது. ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கம் அது என்று அப்போது அல் அமீனுக்கேகூடத் தெரியாது. அதைப்பார்த்த அல் அமீனின் பெரியப்பா ஹஸ்ரத் அபூதாலிப் ஒரு கவிதையே எழுதினார்.
சொல்லுக்காகவும் கல்லுக்காகவும் மனிதர்களுக்கிடையே நிலவும் அமைதி கெட்டுவிடக்கூடாது என்பதை இந்த இஸ்லாமிய வரலாறு எடுத்துக்காட்டுகிறது.
(தொடரும்)