நமக்கு விருப்பமான பொருள் எங்கே கிடைக்குமென்று நாம் தேடித்தேடிப் போவதுபோல கல்வி எங்கெல்லாம் கிடைக்கும் என்று தேடித்தேடி அந்தக் காலத்தில் பல மேதைகள் பயணம் செய்துள்ளார்கள்.
கல்வி கற்றுக்கொள்வதற்காக அந்த இளம் வயதில் தூஸ் என்ற ஊரிலிருந்து ஜுர்ஜான் என்ற ஊருக்கு நம் கதாநாயகர் சென்றுகொண்டிருந்தார். பயணம் முடிவடையை பத்து நாட்களுக்கு மேலாகும். ஏனெனில் இது நடந்தது பதினோறாம் நூற்றாண்டில்.
அபூ நஸ்ர் என்ற பேராசிரியர் சொன்னதையெல்லாம் குறிப்புகள் எடுத்துக்கொண்டு அந்த மாணவர் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். திடீரென்று வழியில் பல திருடர்கள் வழிமறித்து, ஆயுதங்களைக்காட்டி பயமுறுத்தி அவர்களிடம் இருந்ததையெல்லாம் எடுத்துக்கொண்டார்கள்.
ஆனால் இவர் மட்டும் திருடர்களைத் தொடர்ந்து அவர்கள் பின்னால் போய்க்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் திருடர் கூட்டத்தலைவன் அவரை நோக்கித்திரும்பி, ‘திரும்பிப் போய்விடு. இல்லையென்றால் கொன்றுவிடுவேன்’ என்று கூறினான்.
‘அந்த இறைவன் மீது ஆணையாக நான் உன்னை வேண்டிக்கொள்கிறேன், நான் எழுதிய குறிப்புகளை மட்டும் எனக்குத் திருப்பிக்கொடுத்துவிடு. அவற்றால் உனக்கு எந்தப் பயனும் கிடையாது’ என்றார் அந்த இளைஞர்.
‘குறிப்புகளா… அவை எங்கே உள்ளன?’ என்று கேட்டான் திருடர்கூட்டத்தலைவன்.
‘அந்தப்பையில் உள்ள புத்தகங்கள்தான் அவை. அவற்றைக் கேட்பதற்காகவும் படிப்பதற்காகவும்தான் நான் என் ஊரை விட்டு வந்தேன்’ என்றார் அவர்.
‘நான்தான் அவற்றை எடுத்துக்கொண்டுவிட்டேனே. பின்னே, உனக்கு அவற்றிலிருக்கும் அறிவு எப்படிக் கிடைக்கும்?’ என்று சொல்லிச் சிரித்தான் திருடர் தலைவன். படித்தவன் போலிருக்கிறது. பின்னர், தன் கூட்டத்தில் இருந்தவர்களிடம் அவரது பையைக் கொடுக்கச் சொன்னான்.
அந்த அனுபவத்தை அவரால் தன் வாழ்நாளில் மறக்கவே முடியவில்லை. ஏனெனில் அந்தத் திருடர்கூட்டத்தலைவனிடம் வாளும் தயாராக இருந்தது, அவன் நாக்கும் தயாராக இருந்தது.
தனது ஊருக்குத் திரும்பிய பிறகு தான் எழுதி வைத்திருந்த குறிப்புகளையெல்லாம் மனப்பாடம் செய்தார். அப்படிச்செய்தால் யாராலும் திருடமுடியாதல்லவா? கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தைத் தனதாக்கிக்கொள்ளும்வரை கற்றுக்கொண்டுவிட்டதாகச் சொல்ல முடியாது என்று கருதினார். ஆனால் இந்தக் காரியம் முடிய அவருக்கு மூன்று ஆண்டுகள் ஆகின. மனப்பாடப்பகுதிகளைக்கூட மறந்து போகும் நமக்கு அவரது வாழ்வில் உள்ள அற்புதமான பாடமல்லவா இது.
ஈரானிலிருக்கும் நிஷாபூருக்குச் சென்ற அவர் அங்கே நிறைய படித்தார்; எழுதினார்; பேசினார்; விவாதம் செய்தார்; அவ்வூரிலிருந்த அறிஞர்களிடையே தனக்கென ஒரு இடத்தை ஸ்தாபித்துக்கொண்டார்.
ஹிஜ்ரி 484-ல் பாக்தாதிலிருந்த உலகப்புகழ்பெற்ற நிஜாமியா பல்கலைக்கழகத்துச் சென்றார் நம் கட்டுரை நாயகர். அங்கே விரிவுரைகள் நிகழ்த்திக்கொண்டும் எழுதிக்கொண்டுமிருந்தார். ஒரு பேராசிரியராக. அவரது விரிவுரையைக் கேட்க ஒவ்வொரு வகுப்புக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்தார்கள்.
ஏதாவது ஒரு மாணவர் சந்தேகம் கேட்டால் நம் நாயகர் பதில் சொல்லமாட்டார். ஆனால் அதற்கு பதிலாக ஒரு புத்தகம் எழுதிக்கொடுப்பார்.
அவ்வளவு புகழ்பெற்ற பேராசிரியராக இருந்தும், இன்னும் ஏதோ முக்கியமான ஒன்று விடுபட்டுள்ளது என்ற உணர்வு அவருக்குள் உறுத்திக்கொண்டே இருந்தது. சூஃபிகள் பாதையில் சென்றால்தான் சத்தியத்தை உணர முடியும் என்று அவரது உள்ளுணர்வு சொல்லியது.
சரி அப்படியே செய்யலாம் என்று நினைத்தார். ஆனால் உடனே காரியத்தில் இறங்கிவிடவில்லை. காலம் சென்றுகொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இறைவனே அதற்கான ஏற்பாட்டைச் செய்தான். ஆமாம். அவருக்குப் பேச முடியாமல் போய்விட்டது. பேராசிரியர் எப்படிப் பேசாமலிருக்க முடியும்? இறைவனின் வேலை இது என்று உணர்ந்துகொண்ட அவர் பேராசிரியர் வேலையை விட்டுவிட்டு சூஃபி வாழ்க்கை வாழ பாக்தாதை விட்டுக் கிளம்பினார்.
ஹிஜ்ரி 488-ல் அங்கிருந்து சிரியாவுக்குச் சென்றார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தனிமையில் பல சூஃபி பயிற்சிகளிளும் தியானங்களிலும் ஈடுபட்டார். டமாஸ்கஸில் இருந்தபோது அங்கிருந்த பள்ளிவாசல் மினாரா ஒன்றில் ஏறி, கதைவைத் தாளிட்டுக்கொண்டு தியானங்கள் செய்தார். அங்கிருந்து ஜெருசலம் சென்றபோது அங்கேயிருந்த புகழ்பெற்ற ‘பாறைக்குவிமாடம்’ (Dome of the Rock) சென்று அங்கேயும் தியானம் செய்தார்.
கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் அவர் சூஃபிகளோடும் தனிமையிலும் பல தியானப்பயிற்சிகளைச் செய்துகொண்டு வாழ்ந்தார். அம்முயற்சிகளுக்குப்பின் புனிதப்பயணம் செல்லவேண்டும் என்று தோன்றியது.
ஜெருசலத்திலிருந்து ஹெப்ரான் என்ற இடத்திலிருந்த இப்ராஹீம் நபியின் (ஆப்ரஹாம்) அடக்கஸ்தலத்துக்குச் சென்றுவிட்டு மக்கா, மதீனாவுக்குச் சென்றார். கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிஜாமியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
நிஜாமியாவுக்கு அவர் மீண்டும் சென்ற அந்தக் காலகட்டத்தில்தான் தனது மகத்தான நூலை எழுதினார். அதுதான் ‘இஹ்யா உலூமித்தீன்’. ‘மார்க்கத்துக்குப் புத்துயிரூட்டுதல்’ என்பது அதன் பொருள். (எங்களுடைய ஞானாசிரியர் நாகூர் ஹஸ்ரத் மாமா, அந்த ஒரு நூலை கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களாக, தலைப்பு வாரியாக, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்).
டமாஸ்கஸிலிருந்தபோது ஷெய்கு அல் மக்திஸி என்ற சூஃபி பெரியவர் அடிக்கடி அமர்ந்த மூலையொன்றில்தான் இவர் அமர்ந்தார். அதன் காரணமாக அது ‘கஸ்ஸாலி ஜாவியா’ (கஸ்ஸாலி மூலை) என்று பெயர்பெற்றது. ஆமாம். அவர் பெயர் அபூஹாமித் அல் கஸ்ஸாலி (இதுகூட சுருக்கமான பெயரே). இமாம் கஸ்ஸாலி என்று மார்க்க அறிவுலகம் அவரை அறியும்.
ஷெய்கு நஸ்ர் என்ற பெரியவரைச் சந்திக்க கஸ்ஸாலி விரும்பி அவர் வாழ்ந்த ஊருக்குச்சென்றார். ஆனால் அன்றுதான் ஷெய்கு நஸ்ர் இறந்திருந்தார். சற்று நேரத்தில் சில மாணவர்கள் அங்கே வந்தனர். அவரிடம் பல கேள்விகள் கேட்டனர். கஸ்ஸாலி சொன்ன பதில்களிலிருந்து அவர் ஒரு வற்றாத ஞானக்கடல் என்பதை உணர்ந்துகொண்டனர்.
ஷெய்கு நஸ்ர் அவர்கள் எங்கே என்று கஸ்ஸாலி விசாரித்தபோது அம்மாணவர்கள் ஆச்சரியமான ஒரு தகவலைச் சொன்னார்கள்.
‘ஷெய்கு நஸ்ர் சற்றுமுன்னர்தான் இறந்தார். நாங்கள் அவரை அடக்கம் செய்துவிட்டுத்தான் வருகிறோம். உங்களைவிட்டால் எங்களுக்கு சொல்லித்தர யார் இருக்கிறார்கள் என்று கேட்டோம். இறக்கும் முன் அவர் எங்களிடம் ஒரு விஷயம் சொன்னார். ‘என்னை அடக்கம் செய்தபிறகு நான் வழக்கமாக அமரும் ஜாவியாவுக்குச் செல்லுங்கள். அங்கே ஒரு ஷெய்கு உட்கார்ந்திருப்பார் என்று சொல்லி உங்களைப்பற்றி வர்ணித்துச் சொன்னார். நான் சலாம் சொன்னதாக அவரிடம் சொல்லுங்கள். எனக்குப்பிறகு உங்களுக்கு அவர்தான்’ என்று சொன்னார்’ என்று கூறினார்கள்.
அது ஒரு திங்கட்கிழமை. ஃபஜ்ர் எனப்படும் காலைத்தொழுகைக்கான நேரம். மேதை கஸ்ஸாலி முறைப்படி ‘வளூ’ எனப்படும் உடல் சுத்தம் செய்துவிட்டுத் தொழுது முடித்துவிட்டு தன் சகோதரரைப் பார்த்து, ‘என் கஃபன் துணியைக் கொண்டு வாருங்கள்’ என்றார் (இறந்த முஸ்லிம் உடலைப்போர்த்தும் தையலில்லாத வெள்ளைத்துணிக்கு கஃபன் என்று பெயர்). அதை முத்தமிட்டுவிட்டுத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டார்.
’எனக்குக் கேட்கிறது. என் அரசன் என்னை அழைக்கிறான். அவன் அழைப்புக்குப் பதில் சொல்ல நான் போகவேண்டும்’ என்று சொல்லி கால்களை நீட்டி ‘கிப்லா’ எனும் தொழுகை செய்யப்படும் மேற்குத்திசையை நோக்கித் திரும்பினார். அப்படியே அவர் உயிர் பிரிந்தது.
(தொடரும்)
_______
இக்கட்டுரை எழுதப்பயன்பட்ட நூல்: Al-Ghazali. Rev. W.R.W.Gardner. Christian Literature Society for India. Madras. 1919.3