அவர் இயற்பெயர் ம’அபா. ஆனால் வரலாற்றில் அவர் சல்மான் என்றே அறியப்படுகிறார். ஈரான் நாட்டின் அஸ்ஃபஹான் நகருக்கு அருகிலிருந்த ‘ஜிய்யே’ என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். குடும்பம் வசதியானது. தந்தைக்கு நிறைய நிலபுலன்கள். மகன்மீது ரொம்பப்பிரியம். தன் பார்வையை விட்டு மகன் போக அனுமதிக்கமாட்டார்.
ஒருமுறை வேறு வழியின்றி மகனை ஒரு வேலையாக வெளியே அனுப்பினார். விரைவில் திரும்பிவிடவேண்டும் என்ற உத்தரவோடு. வழியில் மகன் ஒரு சர்ச்சில் நடந்துகொண்டிருந்த பிரார்த்தனையை வெளியிலிருந்து கேட்டார். அவருக்கு அது பிடித்திருந்தது. உள்ளே சென்றார். கிறிஸ்தவம் பற்றி அவருக்கு எதுவும் தெரியாதென்றாலும் ஏதோ ஒரு வகையில் அது அவரை ஈர்த்தது.
வந்த வேலையை மறந்து இரவுவரை அங்கேயே இருந்துவிட்டார். அங்கே இருந்தவர்களிடம் நிறைய கேள்விகளைக் கேட்டார். அவர்களது தலைமை சிரியாவில் இருந்தது என்பதையும் தெரிந்துகொண்டார்.
சல்மானின் முன்னோர்கள் நெருப்பை வணங்கியவர்கள். அவரும் அந்த வழியையே பின்பற்றி வந்தார். நெருப்பை எந்நேரமும் எரியவைக்க வேண்டியது அவரது பொறுப்பு. அதை அவர் மிகச் சரியாகச் செய்துவந்தார். ஆனால் சத்தியத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை நெருப்பும் உயர உயரக் கிளம்பிக்கொண்டே இருந்தது. அவரது மதத்தைவிட கிறிஸ்தவம் மேலானது என்பதை உணர்ந்துகொண்டார்.
வீட்டுக்குத் திரும்பியபோது அனைவரும் அவருக்காகக் கவலையுடன் காத்திருந்தனர். தன் அனுபவத்தை எல்லாருக்கும் சொன்னார். தங்கள் மார்க்கம்தான் சிறந்தது என்று தந்தை எவ்வளவோ எடுத்துரைத்தும் சல்மானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மகனை வெளியே விட்டால் ஆபத்து என்று புரிந்துகொண்ட தந்தை அவரை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படிச் செய்தார். ஆனால் சிரியாவுக்கு ஏதாவது கூட்டுப் பயணக் குழு போகிறதா என்று ரகசியமாக கிறிஸ்தவர்களுக்கு ஒரு செய்தியை சல்மான் அனுப்பினார். கொஞ்சநாள் கழித்து, ‘ஆமாம், போகிறது’ என்று பதில் கிடைத்தது. சங்கிலியால் கட்டி வைத்திருந்ததையும் மீறி வீட்டை விட்டு வெளியேறினார். எப்படியாவது சிரியாவுக்குப் போய் கிறிஸ்தவம் பற்றி இன்னும் தெளிவாக, ஆழமாக அறிந்துகொண்டுவிட வேண்டும் என்ற வெறி அவரை உந்தியது. அவரது சத்தியத்தேடலின் துவக்கமாக அது இருந்தது.
சிரியாவில் சில பாதிரியார்களோடு தங்கும் வாய்ப்புக்கிடைத்தது. ஆனால் அவர்களில் பலர் தசம பாகத்தைத் தனக்காகப் பயன்படுத்தியவர்களாக இருந்தனர். கடைசியில் அமூரியா என்ற ஊரிலிருந்த ஒருவரோடு அவர் இறக்கும்வரை சல்மான் தங்கினார். அவர் தன் இறுதிக்கணத்தில், ‘இறைவனின் தூதரான இயேசு சொன்னபடி இறைவனின் இறுதித்தூதர் அரேபியாவில் தோன்றவிருக்கிறார் என்றும் அவர் இறைத்தூதர் என்று தெரிந்துகொள்வதற்கு மூன்று அடையாளங்களையும் சொன்னார்:
1. அவர் தர்மமாகக் கொடுக்கப்பட்ட உணவை ஏற்றுக்கொள்ள மாட்டார்.
2. ஆனால் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வார்.
3. அவரது தோள் பட்டையில் நபித்துவ முத்திரை இருக்கும்.
அது சல்மானின் வாழ்வில் திருப்பு முனைச்செய்தியாக இருந்தது. எப்படியாவது அரேபியாவுக்குச் சென்று அந்த இறைத்தூதரை சந்தித்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் சல்மான்.
ஒருநாள் அவரிடமிருந்த ஆடுகளுக்காக அவரைத் தங்கள் பயணக் குழுவில் அரேபியாவுக்கு அழைத்துச் செல்ல சில வணிகர்கள் ஒத்துக்கொண்டனர். ஆனால் அல்குரா என்ற பள்ளத்தாக்குக்கு வந்தவுடன் ‘இவர் எங்கள் அடிமை’ என்று சொல்லி சல்மானை ஒரு யூதரிடம் விற்றுவிட்டனர். சல்மான் அந்த யூதரிடம் அடிமையாகக் கடுமையான ஊழியம் செய்தார்.
மதினாவின் கபா என்ற பகுதியிலிருந்து, பனூகுரைளா என்ற குலத்திலிருந்து வந்த அந்த யூதரின் உறவினர் சல்மான் கடுமையாக வேலை பார்ப்பதைக் கவனித்துவிட்டு, தனக்காக ஊழியம் செய்ய அவரை விலைக்கு வாங்கிக்கொண்டார்.
அந்த நேரத்தில்தான் இறைவனின் இறுதித்தூதர் மதினாவிலிருந்த கபா என்ற பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அது சல்மான் ஊழியம் செய்துவந்த பனூகுரைளா என்ற யூதக்கூட்டம் இருந்த பகுதிக்கு அருகில்தான் இருந்தது.
அந்த நேரத்தில் தன் எஜமானன் உத்தரவின்படி பேரீச்ச மரத்திலிருந்து பழங்களைப் பறித்துக்கொண்டிருந்தார் சல்மான். அவரது எஜமானன் கீழேயிருந்து அவரைக் கண்காணித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது உறவினர் ஒருவர் அங்கே வந்து, ‘கபாவுக்கு ஒருவர் மக்காவிலிருந்து வந்திருக்கிறார். அவர் தன்னை இறைவனின் தூதர் என்று சொல்கிறார். அந்த அன்சாரிகள் (மதினா முஸ்லிம்கள்) அவரை நம்புகிறார்கள்’ என்று சொன்னார்.
அந்த செய்தியை இறைவன் சல்மானுக்காகவே அனுப்பிய மாதிரி இருந்தது. அந்தக் கணத்துக்காகவேதான் அதுவரை காத்திருந்தது புரிந்தது. இனி தன்னுடைய வேலை ஒன்றே ஒன்றுதான்: அந்த இறைத்தூதரைப் போய்ப்பார்க்க வேண்டும்.
ரொம்ப ஆர்வமாக மரத்திலிருந்து இறங்கி சல்மான் இறைத்தூதரைப் பற்றிப் பல கேள்விகளைத் தன் எஜமானனிடம் கேட்டார். சல்மானை ஓங்கி அறைந்த அவன், ‘போய், உன் வேலையைப் பார்’ என்று கடுப்படித்தான்.
ஆனாலும் எப்படியாவது போய் அந்த மனிதரைச் சந்தித்து இறைத்தூதருக்கான அந்த மூன்று அடையாளங்கள் அவரிடம் உள்ளனவா என்று பார்க்க வேண்டும் என்று சல்மான் முடிவு செய்துகொண்டார்.
ஒரு திர்ஹம் விலைகொண்ட ஒட்டகக்கறியை சந்தையிலிருந்து வாங்கி அதைவைத்து ஓர் உணவைத் தயார் செய்து எடுத்துக்கொண்டு இறைத்தூதரைக் காணச் சென்றார். தான் கபாவிலிருந்து வருவதாகவும், சில ஏழைத்தோழர்களோடு தங்கியிருப்பதாகவும், இந்த உணவைப் பெருமானார் தர்மமாக ஏற்றுக்கொண்டால் சந்தோஷமாக இருக்கும் ஏன்றும் கூறினார்.
இறைவனின் தூதர் அவ்வுணவை வாங்கி, தான் அதை உண்ணாமல் தன் தோழர்களுக்குக் கொடுத்ததைக்கண்ட சல்மான் மகிழ்ந்தார். முதல் பரிசோதனையில் வெற்றி. இறைவனின் தூதரானவர் தர்மத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்!
அடுத்த முறை பெருமானாரைப் பார்க்கச் சென்றபோது ஒரு தட்டு நிறைய பேரீச்சம் பழங்களைக் கொடுத்து, ‘இவை என் அன்பளிப்பு’ என்று சொன்னார். பெருமானார் அதை ஏற்றுக்கொண்டு சில பழங்களை அவர்கள் சுவைத்துவிட்டு மீதியைத் தன் தோழர்களுக்குக் கொடுத்தார்கள். இரண்டாவது பரிசோதனையும் வெற்றி; இறைத்தூதர் அன்பளிப்பை ஏற்றுக்கொள்வார்!
ஒரு அன்சாரித்தோழர் மறைந்தபோது பெருமானார் அவரது அடக்க நிகழ்வில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அங்கே சென்ற சல்மான் காற்றில் விலகிய நபிகளாரின் முதுகுத்துணியின் வழியே நபித்துவ முத்திரையைப் பார்த்து அழ ஆரம்பித்துவிட்டார். ஏன் அழுகிறீர்கள் என்று பெருமானார் கேட்கவும் தன் முழுக்கதையையும் சொன்னார்.
சல்மானை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க 300 பேரிச்ச மரங்களை சல்மான் நடவேண்டுமென்றும், 40 கிராம் தங்கம் கொடுக்கவேண்டுமென்றும் அவரது முதலாளி சொன்னான். கஷ்டப்பட்டு அவற்றையெல்லாம் செய்து அவர் விடுதலை பெற்றார்.
ஆனால் இதை அவர் தனியாகச் செய்யவில்லை. நபித்தோழர்கள் பலர் உதவினார்கள். பெருமானாரே தன் கையால் அந்த மரங்களை நட்டார்கள். அதோடு தனக்குக் கிடைத்த ஒரு தங்கக்கட்டியையும் சல்மானுக்குக் கொடுத்தார்கள். ஆனால் அது 40 கிராம் எடையுள்ளதாக இல்லை. எனவே அதைத் தன் புனித நாக்கால் தொட்ட பிறகு மீண்டும் எடைபோடப்பட்டது. அப்போது அது மிகச்சரியாக 40 கிராம் இருந்தது! இப்படியெல்லாம் செய்து சல்மான் விடுதலை பெற்றார்.
‘சல்மான் என் குடும்பத்தில் ஒருவராகக் கருதப்படவேண்டும்’ என்று பெருமானார் கூறினார்கள். அவர்கள் எப்போது பள்ளிவாசலுக்கு வந்தாலும் உடனே போய் அவர்களோடு சல்மான் சேர்ந்துகொள்வார்.
ஒருமுறை ஒரு மரக்கிளையை எடுத்து சல்மான் வேகமாக உலுக்கினார். அதன் இலைகளெல்லாம் உதிர்ந்து விழுந்தன. ‘ஒரு முஸ்லிம் வளூ செய்து ஐந்து வேளையும் தொழும்போது இந்தக் கிளையின் இலைகள் உதிர்ந்ததைப்போல அவருடைய எல்லாப் பாவங்களும் உதிர்ந்துவிடும்’ என்று சொன்னார்.
எதிர்பாராத ஒரு காலகட்டத்தில் மக்காவின் குறைஷியர் அபூசுஃப்யானின் தலைமையில் முஸ்லிம்களை எதிர்த்து போர் செய்ய வந்தனர். சல்மானின் கருத்துப்படி, மதினாவுக்குள் அவர்கள் நுழைய முடியாமல் மதினாவின் வடக்குப்பகுதியைச் சுற்றி கிட்டத்தட்ட 12 அடி அகலமும் 15 ஆழமும் கொண்ட ஒரு அகழ் தோண்டப்பட்டது.
அகழ்ப்போரின் கதாநாயகனே அந்த அகழ்தான். ஏனெனில் அது மக்கா குறைஷியருக்குப் புதிய அனுபவம். அந்த எதிரிகளுக்கு அது ஒரு வினோதமான பிரச்னையாகவும் முஸ்லிம்களின் சாதனையாகவும் ஆனது.
அந்தப் போரில் பெருமானார் மூன்று முறை பாறையை உடைக்க அடித்தபோது பொறி கிளம்பியதை சல்மான் பார்த்தார். ரோமானிய சாம்ராஜ்ஜியமும் பாரசீக சாம்ராஜ்ஜியமும் யெமென் ராஜ்ஜியமும் தனக்குக் கொடுக்கப்படுவதாக பெருமானார் அதற்கு விளக்கம் சொன்னார்கள். அந்த தீர்க்கதரிசனம் கலீஃபா உமர் அவர்கள் காலத்தில் மெய்யானது.
ஒருநாள் வெளியூரிலிருந்து வந்த ஒருவர் சல்மானைப் பார்த்துத் தன் சாமான்களைத் தூக்கி வரமுடியுமா என்று கேட்டார். அவர்தான் மதாயின் நகரின் ஆளுநர் என்று தெரியாமல்! சல்மானும் அவரது சாமான்களைத் தூக்கிச்சென்றார். மக்கள் அதைப் பார்த்துவிட்டு அந்த வெளியூர்க்காரரிடம் சல்மான் யாரென்று கூறினார்கள். அவர் மன்னிப்புக்கேட்டார். ‘பரவாயில்லை. உங்கள் இருப்பிடம்வரை நான் தூக்கி வருகிறேன்’ என்று சொன்னார் சல்மான்.
சிரியாவின் ஆளுநராகக் கொஞ்சகாலம் இருந்த சல்மான் மிக எளிய ஆடைகளுடன் அங்கு சென்றார். ஏன் இப்படி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது, ‘ஆடம்பரமெல்லாம் மறுமைக்குத்தான்’ என்று பதில் சொன்னார்.
தன் சம்பளம் முழுவதையும் ஏழைகளுக்குக் கொடுத்துவிடுவார். பாய் தயாரிக்கும் வணிகத்தில் கிடைத்த பணத்திலும் மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய்துவிடுவார். பனைமர ஓலைகளால் பாய் செய்து விற்று கிடைக்கும் 5000 திர்ஹம்களையும் ஏழைகளுக்குக் கொடுத்துவிடுவார்.
ஒருமுறை தன் மாணவர் ஒருவரை அழைத்து நதியில் குதிரைக்குத் தண்ணீர் புகட்டச் சொன்னார். அது முடிந்தவுடன், குதிரை வயிறு நிறைய தண்ணீர் குடித்ததால் ஆற்றின் தண்ணீர் குறைந்துவிட்டதா என்று கேட்டார். இல்லை என்று மாணவர் சொன்னதும், கல்வியும் இப்படித்தான். கொடுக்கக்கொடுக்கக் குறையாது என்றார்.
இறந்து போவதற்கு முன் சல்மான் தன் மனைவியிடம் சொன்னார்: ‘ஜன்னல்களையெல்லாம் திறந்துவிடுங்கள். வானவர்கள் வருவதைப் பார்க்கிறேன். எந்த வழியிலும் அவர்கள் உள்ளே வரலாம்’.
தன் படுக்கையைச் சுற்றிக் கொஞ்சம் தண்ணீர் தெளிக்கச் சொன்னபின் தன்னைக் கொஞ்சநேரம் தனியாக விட்டுவிட்டுச் செல்லுங்கள் என்றும் சற்று நேரம் கழித்துப் பார்க்கலாம் என்றும் சொன்னார். கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தபோது இறந்துவிட்டிருந்தார்.
அகழ்ப்போரில் முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றி சல்மானின் மாற்றுச் சிந்தனைக்குக் கிடைத்த வெற்றி.
ஈராக்கில் மதாயின் என்ற நகரில் அவரது அடக்கஸ்தலம் உள்ளது.
(தொடரும்)