இஸ்லாமிய வரலாற்றில் நபிபெருமானாரின் தோழர்களில் இரண்டுபேர் ஒரு விஷயத்துக்காக குறிப்பிடப்படவேண்டியவர்கள். ஒருவர் ஹஸ்ஸான் இப்னு தாபித். இன்னொருவர் நம் கட்டுரை நாயகி உம்மு உமாரா என்றழைக்கப்பட்ட க’அபின் மகள் நுசைபா.
முன்னவர் கவிஞர், வார்த்தைகளால் போர் செய்தவர். பின்னவர் நிஜமான போராளி. முன்னவர் போருக்குச் செல்லவே அஞ்சியவர். எந்தப் போரிலுமே கலந்துகொள்ளாதவர். மனைவியோடு மட்டும்தான் போராடியிருப்பார் போலும்!
உம்மு உமாரா பல போர்க்களங்களைக்கண்ட வீரப்பெண்மணி. இஸ்லாமிய வரலாற்றில் ஈடு இணையற்ற போர் வீரராகவும் தளபதியாகவும் செயல்பட்டவர் காலித் இப்னு வலீத். ஒரு போரில் போருக்கான கவச உடை தரித்து, ஒரு போர்வையை மேலே போர்த்திக்கொண்டு உம்மு உமாரா செல்வதைப் பார்த்த வீரர்கள் அது தளபதி காலித் என்றே நினைத்தனர் என்றால் பார்த்துக்கொள்ளலாம். நாயகி உம்மு உமாராவின் வாழ்க்கை ரத்தத்தாலும் காயங்களாலும் தியாகங்களாலும் நிரம்பியது.
தியாகங்களின் தாய் என்று இவரைச் சொன்னாலும் அது சரியானதே. தனது இரண்டு மகன்களையும் இஸ்லாமியப் போரில் பறிகொடுத்தவர் இவர். முஹம்மது நபியவர்களிடம் நேரடியாக இஸ்லாத்தில் இணைவதாக சத்தியம் செய்துகொடுத்த இரண்டு பெண்களில் இவர் ஒருவர். இவரது இரண்டு சகோதரர்களும் பெருமானாரின் தோழர்களாக இருந்தவர்கள்.
நபிகள் நாயகத்துக்கு ஆதரவு கொடுத்த மதினா மண்ணின் மைந்தர்கள் அன்சாரிகள் என்று அழைக்கப்பட்டனர். அன்சாரி என்றால் ஆண் ஆதரவாளர் என்று பொருள். அவர் பெண்ணாக இருந்தால் அன்சாரிய்யா. உம்மு உமாரா ஒரு அன்சாரிய்யா. அதுமட்டுமல்ல. நபிகள் நாயகத்துக்கு சத்தியப்பிரமாணம் செய்துகொடுத்த இரண்டு பெண்களில் உம்மு உமாராவும் ஒருவர்.
ஆண்களுடைய கைகளைப் பிடித்து சத்தியப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்ட நபிகளார் அந்நியப் பெண்களுடைய கைகளைத் தொட்டதில்லை. எனவே உம்மு உமாரா, சைபா மற்றும் இன்னொரு பெண்ணின் சத்தியப்பிரமாணத்தை வாய்வழியாகச் சொல்ல அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
நபிகளாருக்காகப் பல போர்களில் பங்கெடுத்துக்கொண்ட வீரப்பெண் உம்மு உமாரா. உஹது, ஹுனைன், யமாமா, யர்முக் ஆகிய இடங்களில் நடந்த புகழ்பெற்ற யுத்தங்களிலும் அகழ்ப்போரிலும் பங்கெடுத்துக்கொண்ட வீரப்பெண் என்றாலும் இவரது வீரம் பெருமளவு வெளிப்பட்டது உஹது போரில்தான்.
அந்தப் போரில் ஒரு கட்டத்தில் நபிகளார் தனித்து விடப்பட்டார்கள். அவர்களைக் கொல்ல எதிரிகள் சரமாரியாக அம்புகளை விட்டுக்கொண்டிருந்த நேரமது. அப்போது நபிகளாரின் பாதுகாப்புக்காக அவர்களை நோக்கி ஓடிய சிலரில் உம்மு உமாராவும் ஒருவர்.
உஹது போரில் பங்கெடுத்துக்கொள்ள முடியாதவர்கள் அனைவரும் அந்தப் போரைப் பற்றி உம்மு உமாராவிடம்தான் வந்து கேட்டறிந்துகொண்டார்கள். போரில் காயமுற்ற வீரர்களுக்கு உடனுக்குடன் மருத்துவ உதவிகள் செய்த பெண்கள் குழுவில் உம்மு உமாரா இருந்தார்.
உம்மு உமாராவின் கணவரும் இரண்டு மகன்களும் நபிகளாருக்கு அருகில் நின்று போரிட்டுக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் திரும்பிக்கொண்டிருந்தது. நபிகளாரைக் கொல்ல எதிரிகள் நெருங்கிக்கொண்டிருந்தனர். அவர்களைக் காப்பாற்ற அருகே ஒரு சில தோழர்கள் மட்டுமே இருந்தனர்.
பலர் தன் கவச உடைகளையும் வாட்களையும் போட்டுவிட்டு ஓடத்தொடங்கினர். அதில் ஒருவரின் கவச உடையையும் வாளையும் எடுத்துக்கொண்டு போர்க்களத்துக்குள் நபிகளாரை நோக்கி விரைந்தார் உம்மு உமாரா. நபிகளாரின் அருகில் அப்போது ஒரு சில தோழர்களே நின்றுகொண்டிருந்தனர். அதில் உம்மு உமாராவும் அவர் கணவரும் இரண்டு மகன்களும் இருந்தனர்.
நான் என் வலது, இடது பக்கங்களிலும், எனக்கு முன்னாலும் பின்னாலும் பார்த்தேன். எல்லாப் பக்கங்களிலும் உம்மு உமாரா எதிரிகளை நோக்கித் தன் வாளை வீசிக்கொண்டிருந்தார் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
ஒரு கட்டத்தில் காயமுற்றுக் கீழே விழுந்த தன் மகனுக்குக் கட்டுப்போட்டுவிட்ட உம்மு உமாரா ‘ஓடு, ஓடிப்போய் நபிகளாரைக் காப்பாற்ற மீண்டும் போரிடு’ என்று உத்தரவிட்டார். பின்னர் எதிரிகளை நோக்கி மீண்டும் தன் வாளைச் சுழற்றத்தொடங்கினார்.
‘ஓ, உங்களைத்தவிர வேறு யாரால் இப்படிச் செய்யமுடியும்!’ என்று நபிகளார் உம்மு உமாராவை அந்த நேரத்திலும் பாராட்டினார்கள்.
தன் மகனைக் கீழே வீழ்த்திய எதிரியைக் கண்டுபிடித்து அவனைத் தன் வாளால் அடித்துக் கீழே தள்ளினார். உடனே அங்கே வந்த சில முஸ்லிம் வீரர்கள் அவனை வெட்டி வீழ்த்தினர்.
இன்னொரு எதிரி தன் குதிரையில் வேகமாக வந்து உம்மு உமாராவைத் தாக்க வந்தார். ஆனால் சட்டென நகர்ந்த உம்மு உமாரா அந்தக் குதிரையைக் குத்திக் கீழே விழவைத்து அவனைக் கொன்றார்.
நபிகளார் என்று நினைத்துக்கொண்டு முஸ்’அப் என்ற நபித்தோழரை இப்னு கமீஆ என்ற எதிரி தாக்கிக்கொன்றான். அது நபியல்ல என்று தெரிந்ததும் நபிகளார் நின்ற இடத்தை நோக்கி விரைந்தான்.
அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த உம்மு உமாரா சடேரெனப் பாய்ந்து இப்னு கமீஆவுக்கு முன்னால் நின்று அவன்மீது தன் வாளை வீசினார். ஆனால் அவன் இரட்டைக்கவசம் அணிந்திருந்ததால் அவனுக்கு காயமேற்படவில்லை. பதிலுக்கு அவன் வெட்டியதில் உம்மு உமாராவின் தோளில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டது.
அந்த யுத்தகளத்தில் மட்டும் உம்மு உமாராவுக்கு பதிமூன்று விழுப்புண்கள் உண்டாயின. இப்னு கமீஆ வெட்டியதால் ஏற்பட்ட ஆழமான காயம் ஆற ஒரு ஆண்டுக்கு மேலானது.
இதே இப்னு கமீஆதான் நபிகளாரையும் அந்தப் போரில் காயப்படுத்தியவன். அவர்களது தலைக்கவசத்தில் அடித்து சில பற்களை உடைத்தவன். கவசத்தின் இரண்டு கூரான பகுதிகள் அவர்களது கன்னத்தில் பதியும்படி அடித்தவன்.
காயப்பட்டுக் கீழே விழுந்துவிட்ட உம்மு உமாராவின் மகன்களிடம் விஷயத்தைச் சொன்னது நபிகளார்தான். மகன்கள் இருவரும் அம்மாவைத் தூக்க, உம்மு உமாரா மீண்டும் போர் செய்யத்தொடங்கினார்!
உஹது போரின்போது தன்னை விட்டு நீங்காத சில தோழர்களை நபிகளார் என்றுமே மறந்ததில்லை. அப்படிப்ப ஒருவராக உம்மு உமாராவும் அவரது கணவரும் இரண்டு மகன்களும் இருந்தனர்.
நான் வலது பக்கமும் இடது பக்கமும் பார்த்துக்கொண்டே இருந்தேன். எல்லாப் பக்கமும் உம்மு உமாரா எதிரிகளை நோக்கித் தன் வாளை வீசிய வண்ணமிருந்தார் என்று நபிகளார் நினைவுகூர்ந்தார்கள்.
‘ஓ நபிபெருமானே உங்களோடு நாங்கள் சொர்க்கத்தில் இருக்க வேண்டும்’ என்று மட்டுமே உம்மு உமாரா சொன்னார், ஆசைப்பட்டார். பெருமானாரும், ‘ஓ அல்லாஹ், சுவனத்தில் என் தோழர்களாக உம்மு உமாராவையும் அவரது குடும்பத்தினரையும் ஆக்குவாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்.
‘இதற்கு மேல் எங்களுக்கு எதுவும் தேவையில்லை பெருமானே. இனி இந்தப் போரில் நாங்கள் இறந்தாலும் எனக்குக் கவலையில்லை’ என்று உம்மு உமாரா கூறினார். அதன் பின்னர் மேலும் கடுமையாக யுத்தம் செய்ய கூடுதல் வேகம் பிறந்தது உம்மு உமாராவுக்கு!
(தொடரும்)