கறுப்பாகவும், ஒல்லியாகவும், உயரமாகவும் அவர் இருந்தார். அவர் நிறம் ரொம்ப கறுப்பாக இருந்ததற்குக் காரணம் அவர் ஒரு அபிசீனிய நீக்ரோ அடிமை. அதுவும் அரேபியாவில். அவரது பெயர் பிலால் இப்னு ரபா. சுருக்கமாக பிலால் என்றே முஸ்லிம் உலகம் இவரை அறியும்.
இன்றைக்கு உலகெங்கிலும் இருக்கின்ற பத்து முஸ்லிம்களில் ஏழு பேருக்காவது பிலாலின் பெயர் தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட அரிய சாதனைகளை, சேவைகளைச் செய்தவர் அவர். அப்படி என்ன செய்தார்?
அதைச் சொல்வதற்கு முன் அவர் எப்படிப்பட்ட வேதனைகளை அனுபவித்தார் என்று கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவரது பெருமை புரியும்.
அரேபியாவில் மக்காவின் குறைஷி கோத்திரத்தைச் சேர்ந்த உமய்யா இப்னு கலஃப் என்ற ஒரு பணக்காரரிடம் பிலால் அடிமையாக இருந்தார். பிலாலின் அப்பாவும் மக்காவில் ஓர் அடிமையாக இருந்தவர்தான். சொந்தம் என்று வேறு யாரும் கிடையாது.
தன் எஜமானனின் ஒட்டகங்களை மேய்ப்பது, குளிப்பாட்டுவது என அது தொடர்பான எல்லா வேலைகளையும் பிலால் செய்தார். கூலி என்ன தெரியுமா? பணமோ பொருளோ அல்ல. சில பேரீச்சம் பழங்கள்! அவ்வளவுதான். அரேபியாவில் மனிதன் உயிர்வாழ பேரீச்சம்பழங்கள் போதும். அவர்களுக்கு அதுதான் சோறு, அதுதான் இட்லி, அதுதான் தோசை, அதுதான் பிரியாணி!
ஓர் அரேபிய அடிமைக்கென்று தனியாக எந்த எண்ணமும் இருக்கக்கூடாது. பொழுது புலர்ந்தது முதல் பொழுது சாயும்வரை அவன் என்னென்ன செய்ய வேண்டுமென்று எஜமானன்தான் முடிவெடுத்தான்.
பிலாலுடைய மிகச் சிறந்த திறமை ஆண்டவனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட ஆழமான மயக்கும் குரல். அது பின்னாளில் மனிதகுலத்தால் மறக்க முடியாத அரிய பங்காற்றப்போகிறது என்று அப்போது அவருக்கே தெரியாது.
தன் எஜமானனும் அவரது சகாக்களும் அடிக்கடி நபிகள் நாயகத்தைப் பற்றியும் அவர்களது புதிய மார்க்கத்தைப் பற்றியும், அல்லாஹ் ஒருவனே இறைவன் என்று அவர்கள் சொல்வதைப்பற்றியும் கடுப்புடனும் கெட்ட எண்ணத்துடனும் பேசிக்கொண்டிருப்பதை பிலால் கேட்டார்.
அதே சமயம் நபிகளாரின் உயர்குடிப்பிறப்பு, உண்மை, நேர்மை ஆகிய குணங்களைப்பற்றி எஜமானர்கள் சிலாகித்துப் பேசியதையும், முஹம்மது பொய்யரோ, பைத்தியமோ, கவிஞரே அல்ல என்று அவர்கள் ஒப்புக்கொண்டதையும் பிலால் கவனிக்கத் தவறவில்லை.
சத்தியத்தின் ஒளி லேசாக அவர் மீது பட ஆரம்பித்தது. ஒருநாள் அவரே போய் நபிகளாரைச் சந்தித்துப்பேசி இஸ்லாத்தில் இணைந்துகொண்டார்.
அந்த விஷயம் எஜமானர்களுக்குத் தெரியவந்தபோது எரிமலை வெடித்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தனர். குறிப்பாக பிலாலின் எஜமானன் உமய்யா கடுப்பின் உச்சத்திலிருந்தான்.
பிலாலை நிர்வாணமாக்கி எரியும் கரிக்கட்டைகள்மீது படுக்க வைத்தனர். உன் புதிய மார்க்கத்தை விட்டுவிடு, நாங்கள் வணங்கும் சிலைகளையே நீயும் வணங்கவேண்டும் என்று கூறினார்கள்.
ஆனால் அஹதுன், அஹதுன் என்றே பிலால் கூறிக்கொண்டிருந்தார். அஹதுன் என்றால் ஒருவனே என்று அர்த்தம். அதாவது இறைவன் ஒருவனே, அவனுக்கு உருவம் கிடையாது என்று அர்த்தம்.
அது எஜமானர்களுக்கான செருப்படியாக இருந்தது. அவர்களது சுய கர்வம் பெருமளவு காயப்பட்டது. ஏனெனில் உமய்யாவும் அவனைப்போன்ற பல தலைவர்களும் லாத், மனாத், உஸ்ஸா, ஹுபல் போன்ற உருவச்சிலைகளையே வணங்கிக்கொண்டிருந்தனர். அவைதான் கடவுள்கள் என்று நம்பிக்கொண்டிருந்தனர்.
பாலை மணலில் பிலாலை நிர்வாணமாகப் படுக்க வைத்து, நாலைந்து பேர் சேர்ந்து கொதிக்கும் பாறையை இழுத்துவந்து அவர் நெஞ்சின் மீது ஏற்றி வைத்தனர்.
சூரியன் அஸ்தமித்த பின்னர் ஒரு பொம்மையைப்போல சிறுவர்களை விட்டு, பிலாலைக் கட்டி தெருத்தெருவாக இழுத்துச்செல்ல வைத்தனர். நிர்வாணமாக. இப்படி என்னென்னவோ செய்து பார்த்தனர். அப்போதும் அஹதுன் என்று சொல்வதை பிலால் விடவே இல்லை.
சித்ரவதைகள் தொடர்ந்துகொண்டிருந்தன. ஒருநாள் அந்தப் பக்கமாக வந்த அபூபக்கர் பிலாலின் எஜமானன் உமய்யாவிடம், ‘இவரை எனக்கு விலைக்குக் கொடுத்துவிடு’ என்று கேட்டார்.
உமய்யா சந்தோஷமடைந்தான். ஏனெனில் இனிமேல் பிலாலால் முன்போல் வேலைகள் எதுவும் செய்ய முடியாதென்று அவனுக்குத் தெரிந்திருந்தது. செத்துக்கொண்டிருந்த மாட்டை வாங்க வந்தவரைப்போல அபூபக்கரை அவன் பார்த்தான். அவர் சொன்ன பணத்துக்கு பிலாலை விடுதலை செய்ய, விற்க, ஒத்துக்கொண்டான்.
பணம் கொடுத்து பிலாலை வாங்கிக்கொண்ட அபூபக்கர் நபிகளாரிடம் பிலாலை அழைத்துச்சென்று விஷயத்தைச் சொன்னார்.
அதன் பிறகுதான் பிலால் நிம்மதியாக வாழத்தொடங்கினார். மக்கா வெற்றிகொள்ளப்பட்டபோது நபிகளார் க’அபா ஆலயத்தின் மீதேறி பிலாலைத்தான் அவரது கணீர்க்குரலால் தொழுகைக்கான அழைப்பைக் கொடுக்கச் சொன்னார்கள்.
பத்ர் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும் குறைஷியருக்கும் நடந்த மிக முக்கியமான முதல் போரில் தன் எஜமானனாக இருந்த, தன்னை சித்ரவதைகள் செய்த உமய்யாவை பிலால் கொன்றார்.
இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான ஐவேளைத்தொழுகைக்கான அழைப்பை முதலில் கொடுத்தவர் பிலால். அதுவும் நபிகளார் உத்தரவின் பேரில்.
பிலாலின் தொழுகைக்கான அந்த கந்தர்வ அழைப்பில் ஒரு மகத்துவம் இருந்தது. ஒருமுறை நபிகளார் இல்லாதபோது பிலாலுக்குப் பதிலாக வேறு ஒருவரை முஸ்லிம்கள் பாங்கு சொல்ல வைத்தனர். வெளியில் அல்லது வெளியூர் போயிருந்த நபிகளார் திரும்பி வந்தபிறகு, ‘பிலால் பாங்கு சொல்லவில்லையா?’ என்று விசாரித்தார்கள்.
‘இல்லை, அவர் அஷ்ஹது என்பதை அஸ்ஹது என்று தவறாக உச்சரிக்கிறார். அதனால் சரியான உச்சரிப்புடன் ஒருவரை பாங்கு சொல்ல வைத்தோம்’ என்று தோழர்கள் சொன்னார்கள்.
‘இல்லை. இனி அப்படிச் செய்யாதீர்கள். பிலாலே பாங்கு சொல்லட்டும். ஏனெனில் அவர் பாங்கு சொன்னால் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் வானவர்கள் பதில் சொல்வார்கள். இன்றைக்கு பாங்கு சப்தம் கேட்கவில்லையே ஏன் என்று வானவர்கள் கேட்டார்கள். இனி பிலாலே பாங்கு சொல்லட்டும். உச்சரிப்பைவிட உணர்வு முக்கியம். நாக்கைவிட நேசம் முக்கியம். அது பிலாலிடம்தான் உள்ளது’ என்று நபிகளார் கூறினார்கள்.
நபிகளாரின் மறைவுக்குப் பின் பிலால் பாங்கு சொல்வதை நிறுத்திக்கொண்டார். துக்கம் அவரைத் தடுத்தது. ஹஸ்ரத் உமர் அவர்கள் கலீஃபாவாக இருந்த காலகட்டத்தில் சில முறைகள் கலீஃபா கேட்டுக்கொண்டதற்கிணங்க பிலால் பாங்கு சொன்னார்.
ஐவேளைத் தொழுகைக்கான அழைப்பொலியை முதலில் கொடுத்தவர் பிலால். கந்தர்வக்குரல் கொண்ட கருப்பு பிலால். உள்ளத்தால் உச்சரித்த உண்மையாளர் பிலால். உலக முடிவு நாள் வரையிலும் ஐந்து வேளைத்தொழுகைக்கான அழைப்பு பிலாலின் புகழையும் சேர்த்துச் சொல்லிக்கொண்டிருக்கும்.
(தொடரும்)