Skip to content
Home » மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #1 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 1

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #1 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 1

இந்தியக் குடிமைப் பணியில் சேர விரும்புபவர்களுக்கென்று விசேஷமாக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் தொடர் விரிவுரைகள் ஆற்றும்படி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையிடமிருந்து அழைப்பு வந்தபோது நான் முதலில் சிறிது தயங்கினேன். அந்த மாணவர்கள் பரீட்சைகளில் தேர்ச்சி பெறும் வகையில் சில விரிவுரைகளில் பயனுள்ளதாக ஏதேனும் சொல்லிவிடமுடியுமா என்று எனக்கு மிகவும் சந்தேகமாக இருந்தது. இளம் மாணவர்களைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வைத்துவிடவேண்டும் என்பது பல்கலைக்கழகங்களின் ஒரே இலக்காகிவிட்டது என்று சொல்லமுடியாவிட்டாலும் பிரதான இலக்குகளில் ஒன்றாக அதுவே ஆகிவிட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. பரீட்சைகளில் தேர்ச்சி பெறவேண்டும்; அதுவும் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற விஷயம் வேறு துறை மாணவர்களைவிட இந்திய குடிமைப் பணிக்குப் படிக்கும் மாணவர்களுக்கு மிக முக்கியமானதாகிவிட்டது.

ஆனால், மிகவும் கடினமான மூன்று லண்டன் தேர்வுகளை வேறு அவர்கள் முடித்தாகவேண்டியிருக்கும்; இந்நிலையில் நான் வழங்கவிருப்பது போன்ற ஒரு சில விரிவுரைகளைக் கேட்பதால் அந்த மாணவருக்குப் பெரிய அளவில் பயன்தருமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. எனினும் இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தை நான் கவனத்தில் கொண்டாகவேண்டியிருந்தது.

பல்கலைக்கழகங்கள் எல்லாம் தேர்வு எழுதி வெற்றிபெற்றுத் தொழில் வாழ்க்கையில் மேலேற உதவும் படிக்கட்டுகள்தான் என்றாலும் மதிப்பெண்களைத் தாண்டியும் அவற்றால் சில விஷயங்களைக் கற்றுத் தரமுடியும். கற்றுத் தர வேண்டும். உண்மையில் அவைதான் அவற்றின் முக்கிய நோக்கம் என்று கூட நான் சொல்வேன். அப்படி அவை மதிப்பெண்கள் தாண்டிக் கற்றுத் தரவேண்டிய விஷயங்கள் தேர்வுக் குழுவின் பார்வையில் வேலைச் சந்தையில் வெற்றி பெற உதவுபவையாகப் பார்க்கப்படாமல் இருக்கலாம். ஆனால், அந்தப் பாடங்களுக்கு மனித வாழ்க்கையில் நிரந்தரமாக ஒரு முக்கிய மதிப்பு உண்டு. அந்தக் கல்வியைத் தருவதே எங்களைப் போன்றோருக்கு மிகவும் விருப்பமானது; அதுவே எங்கள் பணியை நேசிக்க வைக்கிறது; அதுவே எங்கள் பணிகளுக்கு உண்மையான மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது.

ஒரு பல்கலைக்கழகம் அப்படியான ஒரு கல்வியைக் கற்றுத் தந்துவிட்டால், வாழ்க்கைப் போராட்டத்தில் தம்மைத் தகுதிப்படுத்திக்கொள்ள இங்கு வந்து படிக்கும் இளம் மனங்களில் ஒரே ஒரு உயிர்த்துடிப்பான விதையை ஊன்றமுடிந்தால் அதுவே அந்தப் பல்கலைக்கழகம் செய்த மிகப் பெரிய சாதனையாக இருக்கும். மிகவும் கடினமான பரீட்சைகளில் வெறுமனே நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றுச் செல்லவைப்பதோடு, சமூகத்தின் மேல் தட்டில் ஒருவராக ஆக்குவதோடு நிறுத்தாமல் மாணவர்களின் வாழ்க்கையில் நீடித்து நிலைத்து இருக்கக்கூடிய ஒரு நன்மையைச் செய்திருப்பதாக உறுதியாக நம்புவேன்.

ஆனால், துரதிஷ்டவசமாக தேர்வுக்கு மேல் தேர்வுகள் எழுதியாகவேண்டுமென்ற இன்றைய சூழலில், எதையும் புரிந்துகொள்ளாமல் மனப்பாடம் செய்தல், மூளைக்குள் திணித்துக் கொள்ளுதல் ஆகிய விஷயங்களே உச்சத்தை எட்டிவிட்டிருக்கின்றன. கல்வி, வேலை மீது இவை ஆர்வத்தைத் தூண்டுவதற்கு பதிலாக, வாழ்நாள் முழுவதும் அவற்றின் மீது ஒருவித விலகலை, அறிவுசார் ஒவ்வாமையைத் தூண்டுவதாக ஆகிவிட்டன.

இந்திய குடிமைப் பணிக்கான படிப்பில் இந்த விஷயங்கள் மிக மிக மோசமான எல்லையை எட்டியிருக்கின்றன. இந்திய குடிமைப் பணி படிப்பில் இடம் கிடைத்ததும் (லண்டன்) மாணவர்கள் திடீரென்று அதுவரை படித்த விஷயங்கள், பழைய நண்பர்கள் ஆகியவற்றிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு, முற்றிலும் அந்நியமான விஷயங்களைப் படிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுகிறார்கள். அதுவரையில் (லண்டனில்) ஆரம்பப் பள்ளி, உயர் நிலைப் பள்ளிகளில் என்னவிதமான செவ்வியல் இலக்கியங்கள், வரலாறு, கணிதம் என கற்றுக் கொண்டிருந்தார்களோ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றைப் படிக்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்படுகிறது.

இந்தியாவின் எழுத்துகள், மொழிகள், வித்தியாசமான பெயர்கள், இலக்கியங்கள், சட்ட திட்டங்கள் என அனைத்துமே அவர்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. இது அவர்கள் விரும்பிக் கற்பவை; வேறு வழியின்றிக் கற்றுக் கொண்டாகவேண்டியவை. இரண்டு வருடக் கல்வி, வரையறுக்கப்பட்ட பாட புத்தகங்கள், ஒழுங்குபடுத்தப்படும் தேர்வுகள் என அனைத்தையும் நல்லமுறையில் எந்தவித இடைஞ்சல்களும் நெருக்கடிகளும் இன்றி நல்லபடியாக முடித்தாகவேண்டுமென்றால் இங்குமங்கும் திரும்பக்கூட நேரமின்றி மிகுந்த சிரமத்துடன் அனைத்தையும் கற்றுக்கொண்டே ஆகவேண்டியிருக்கும்.

இதைத் தவிர்க்கவே முடியாது. பொதுவான தேர்வு முறைகளுக்கு எதிராக நான் இவற்றைச் சொல்லவில்லை. நானே முன்பு இது போன்ற தேர்வுகளை முன்னின்று நடத்திய பேராசிரியர்தான். இந்தத் தேர்வுகளில் படித்து முடிக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டிருக்கும் பாடங்களையெல்லாம் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. ஆனால், தேர்வுத் தாளிலோ நாட்களின், வருடங்களின் பட்டியல், மன்னர் பெருமக்களின் பெயர் பட்டியல், போர்களின் பட்டியல், புள்ளி விவரங்கள், சிக்கலான மொழிப் பதங்கள், வினைச் சொற்கள் என என்னவெல்லாமோ விடைத்தாளை நிரப்புகின்றன. இதன் விளைவாக உருவாகும் எழுத்துக் குவியலில் ஒற்றை சுய சிந்தனையோ ஏன் புத்திசாலித்தனமான பிழையையோ கூடப் பார்க்க முடியாது. கட்டாயத்தின் பேரில், கொஞ்சம் இதமாகச் சொல்வதென்றால், கடனே என்று செய்யப்படும் வேலைபோல் செய்யப்படுகின்றன. இந்தியக் கல்வியில் ஆர்வமோ பிடிப்போ துளியும் இருப்பதில்லை.

ஏன் இப்படி இருக்கிறது? ஏன் அப்படி இருக்கவேண்டும்? கிரேக்க அல்லது லத்தின் பாடம், கவிதை, தத்துவம் சட்டம், கிரேக்க கலைகள், இத்தாலியக் கலைகள் எல்லாம் (மேற்கத்தியரான) நமக்கு இனிமையாக, இதமானவையாகத் தோன்றுகின்றன. ஒருவித உற்சாகத்தை ஊட்டுவதாக இருக்கின்றன. நம்மிடம் நல்ல மரியாதையைப் பெறுவதாக இருக்கின்றன. ஆனால் சமஸ்கிருதப் படிப்பு, இந்தியாவின் பழங்கால செய்யுள்கள், தத்துவங்கள், சட்ட திட்டங்கள், கலை எல்லாம் ஒருவகையில் ஆர்வமூட்டுவையாக இருக்கின்றன என்றாலும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு பயனற்றவையாக, கடினமானவையாக ஏன் அபத்தமானவையாகக் கூடத் தோன்றுகின்றன. இது ஏன்?

உண்மையில், பிற எந்த நாடுகளைவிடவும் இங்கிலாந்தில் இப்படியான மனநிலை இருக்கிறது. இது எனக்கு விசித்திரமாகவே தோன்றுகிறது. ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஏன் டென்மார்க், ஸ்வீடன், ரஷ்யா போன்ற நாடுகளில்கூட இந்தியா குறித்து ஒருவித வசீகரம் இருக்கவே செய்கிறது. ஜெர்மன் மொழியின் அற்புதமான கவிதைகளில் ஒன்றான ரூகெர்ட் எழுதிய ‘பிராமணர்களின் ஞானம்’ என்னைப் பொறுத்தவரையில் கதேயின் ‘மேலைக் கிழக்கு திவான்’ கவிதையைவிட சிந்தனையிலும் செழுமையிலும் பரிபூர்ணமானது.

ஜெர்மனியில் சமஸ்கிருதம் பற்றிப் படிக்கும் ஒருவர் புதிரான ஆழமான பழம்பெரும் ஞானம் பற்றி கற்பவராக மதிக்கப்படுகிறார். இந்தியாவுக்குச் சென்று வந்திருந்தால் – வெறுமனே கல்கத்தா, பம்பாய், சென்னை மட்டும் பார்த்துவிட்டு வந்திருந்தாலும் – மார்க்கோ போலோவைப் போல் சாகசப் பயணம் செய்தவராகவே அவருடைய பயண அனுபவங்களை அனைவரும் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துகொள்வதுண்டு. ஆனால், இங்கிலாந்திலோ சமஸ்கிருதம் கற்றுக் கொள்பவர் மிகவும் சலிப்பூட்டுவராகவே கருதப்படுகிறார். அதிலும் அவர் எலிஃபண்டா குகைகள்பற்றியோ பார்ஸிகளின் தக்மா அமைதி கோபுரங்கள் பற்றியோ பேச ஆரம்பித்தால் அனைவரும் விழுந்தடித்து ஓடிவிடுவார்கள்.

கீழைத்தேயம் பற்றி எழுதிய சிலருடைய படைப்புகள் நல்ல வரவேற்பு பெறவும் செய்திருக்கின்றன. இங்கிலாந்தில் அவர்கள் புகழ் பெற்றுமிருக்கிறார்கள். அவர்களெல்லாம் அசாதாரண மேதமைத்திறன் கொண்டவர்கள். இங்கிலாந்தின் மகத்தான சாதனையாளர்களின் பட்டியலில் இடம்பெற வேண்டியவர்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் இந்தியாவைப் பற்றி எழுதவே தமது முழு திறமையையும் காலத்தையும் செலவிட நேர்ந்துவிட்டது. ‘இங்கிலாந்தின் தலை சிறந்த ஞானம் மிகுந்த புதல்வர்களில் ஒருவர்’ என்று டாக்டர் ஜான்சன் போற்றிய சர் வில்லியம் ஜோன்ஸையும் தாமஸ் கோல் ப்ரூக்கையும் பற்றித்தான் குறிப்பிடுகிறேன்.

அதே காலகட்டத்தைச் சேர்ந்த பாலண்டைன், புக்கனன், கேரி, க்ராஃபர்ட், டேவிஸ், எலியட், எல்லிஸ், ஹாட்டன், லேடன், மெக்கின்ஸி, மார்ஸ்டன், மூயிர், பிரின்செப், ரென்னல், டர்னர், உபாம், வில்ச், வாரென், வில்கின்ஸ், வில்சன் மற்றும் பல மாபெரும் மேதைகள் இருக்கிறார்கள். ஆனால் கீழைத்தேய ஆய்வாளர்கள் என்பதைத் தாண்டி அவர்கள் வெளி உலகுக்கு அதிகம் தெரியவந்திருக்கவில்லை. இங்கிலாந்தின் குறிப்பிட்ட சில முக்கிய அறிவுத் துறைகளில் முழுமையானவையாகத் திகழும் அவர்களுடைய படைப்புகள் நூலகங்களில் எடுத்துப் படிப்பார் யாருமின்றி முடங்கிக் கிடக்கின்றன.

இந்திய குடிமைப் பணியில் சேரப் படிக்கும் / பயிற்சி பெறும் இளைஞர்களிடம் நான் மற்றவற்றையெல்லாம் படிப்பதற்கு முன்பாக ‘சமஸ்கிருதம் படித்து முடியுங்கள்’ என்று சொல்வதுண்டு. அவர்கள் உடனே, ‘சமஸ்கிருதம் படிப்பதால் என்ன பயன்? சாகுந்தலம், மனு, ஹிதோபதேசம் ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகள் ஏற்கெனவே கிடைக்கின்றன. அவற்றைத் தவிர சமஸ்கிருதத்தில் படிக்கத் தகுந்தவை என்ன இருக்கின்றன? காளிதாஸர் நல்ல எழுத்தாளராக இருக்கலாம். மனுவின் சட்டங்கள் எல்லாம் ஆர்வமூட்டுபவைதான். ஹிதோபதேச கதைகள் எல்லாம் வசீகரமானவைதான். ஆனால் கிரேக்க இலக்கியங்களுடன் சமஸ்கிருத இலக்கியங்களை ஒப்பிடவே முடியாது. எங்களுக்குத் தெரிந்திராத எதையும் புதிதாகத் கற்றுத் தராத அல்லது நாங்கள் தெரிந்துகொள்ள விரும்பாததைக் கற்றுத் தரக்கூடிய சமஸ்கிருத நூல்களை நகலெடுத்தோ தொகுத்து எழுதியோ எங்கள் வாழ்நாளை வீணாக்கும்படி எங்களிடம் பரிந்துரைக்காதீர்கள்’ என்றே அனைவரும் சொல்லியிருக்கிறார்கள்.

இது மிக மிக வருத்தத்துக்குரிய, பிழையான புரிதல். இந்தப் பிழையான எண்ணத்தைப் போக்குவதே என்னுடைய விரிவுரைகளின் முக்கிய நோக்கமாக இருக்கும். இந்தப் பிழையான புரிதலை முழுவதும் அகற்றமுடியாவிட்டாலும் முடிந்தவரை மாற்றுவதே என் இலக்காக இருக்கும்.

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures
பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *