Skip to content
Home » மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #2 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 2

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #2 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 2

நான் கிரேக்க இலக்கியம்போலவே சம்ஸ்கிருந்த இலக்கியமும் சிறந்தது என்று ஒப்பிட்டு நிறுவப்போவதில்லை. எதற்காக இவை இரண்டையும் ஒப்பிடவேண்டும்? கிரேக்க இலக்கியம் படிப்பதென்றால் அதற்கென்று தனியான காரணம் இருக்கிறது. சமஸ்கிருத இலக்கியம் படிப்பதென்றால் அதற்கென தனி நியாயம் இருக்கிறது.

சமஸ்கிருத இலக்கியத்தைச் சரியான வகையில் படித்தால் அதில் கிரேக்க இலக்கியம்கூட கற்றுத் தரமுடியாத அளவிலான மனித குலம் பற்றிய விஷயங்களும் பாடங்களும் நிறைந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். இதை நான் புரிந்துகொண்டும் இருக்கிறேன். உங்களுக்குப் புரியவைக்கவும் விரும்புகிறேன். இந்திய குடிமைப் பணியாளர்கள் தமது ஓய்வு நேரத்தை மட்டுமல்ல; அதற்கும் மேலான தருணங்களிலும் படிக்க அதில் ஏராள விஷயங்கள் இருக்கின்றன.

இந்தியாவில் 25 ஆண்டுகள் வேலை பார்த்தாக வேண்டியிருக்கும் ஒருவருக்கு இந்தியர்களிடமிருந்து அந்நியராகத் தன்னை உணராமல் இருக்கவும் சக பணியாளராக நெருக்கமாக உணரப்படவும் அது பெருமளவுக்கு உதவும். அதைக் கற்றுக் கொள்வதால் நிறைய பலன்கள் கிடைக்கும். எந்தவொரு வேலையையும் விருப்பத்துடன் செய்தாலே பலன் கிடைக்கும்.. இல்லையென்றால் இத்தாலியிலா கிரேக்கத்திலா எகிப்தில் பிரமிடுகளிடையேவா பாபிலோனின் அரண்மனைத் தோட்டங்களிலா எங்கு பணி புரிந்தாலும் மனம் ஒப்பிச் செய்யாவிட்டால் அது வீணாகவே முடியும்.

இந்தியா என்னவெல்லாம் (உலகுக்கு) கற்றுத் தரமுடியும் என்று இந்தத் தொடர் விரிவுரைகளுக்கு நான் ஏன் தலைப்பு வைத்தேன் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியா நம்மிடமிருந்து (ஐரோப்பியரிடமிருந்து) நிறைய கற்றுக் கொள்ளவேண்டியிருப்பது உண்மைதான்… ஆனால் இந்தியாவிடமிருந்து நாமும் பல விஷயங்களை, குறிப்பாக பல முக்கியமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

இயற்கை இந்த உலகில் தன் முழு செல்வமும் முழு பலமும் முழு அழகும் தந்து சொர்க்கமாக ஆக்கியிருக்கும் ஓர் இடத்தைக் காட்டு என்று என்னிடம் கேட்டால் என் கைகள் இந்தியாவையே சுட்டிக் காட்டும்.

மனித மனம் இந்தப் பரந்து விரிந்த வானத்துக்குக் கீழே எந்த தேசத்தில் அதி மகத்தான விஷயங்களை உருவாக்கியிருக்கிறது என்று கேட்டால் என் பதில் அது இந்தியா என்பதே. உயிர் வாழ்க்கையின் ஆகக் கடுமையான சிக்கல்களை அதி ஆழமாக சிந்தித்த தேசம் எது என்று கேட்டால் என் பதில் அது இந்தியா என்பதே.

பிளேட்டோவையும் காண்டையும் கற்றறிந்தவர்கள்கூட கவனம் கொடுத்துக் கேட்கவேண்டிய தீர்வுகளைச் சொன்ன தேசம் எது என்று கேட்டால் என் கைவிரல்கள் இந்தியாவையே சுட்டிக் காட்டும்.

கிரேக்கர்கள், ரோமானியர்கள், யூதர்கள் ஆகியோரின் சிந்தனைகளால் மட்டுமே அதி சிறப்பாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் ஐரோப்பியரான நம்முடைய அக உலக வாழ்க்கையை மேலும் முழுமையடைவும் மேலும் விரிவாகவும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் சுருக்கமாகச் சொல்வதென்றால் முழு மனிதத்துவம் நிறைந்த வாழ்க்கையாக ஆக்கவேண்டுமா… இந்த வாழ்க்கை மட்டுமல்ல… முழுவதுமாக மாறிய நித்திய ஜீவனை வாழ வேண்டுமென்றால் எந்த தேசத்தை நோக்கித் திரும்பவேண்டும் என்று என்னிடம் கேட்டால் என் கைகள் இந்தியாவையே சுட்டிக் காட்டும்.

நான் இப்படிச் சொல்வதைக் கேட்டு நீங்கள் ஆச்சரியமடைவீர்கள் என்பது எனக்குத் தெரியும். குறிப்பாக கல்கத்தா, பம்பாய் அல்லது மதராஸில் அதிக காலத்தைக் கழித்தவர்கள் அங்கு சந்தித்த மனிதர்கள் சந்தைக் கடையானாலும் நீதிமன்றங்களானாலும் பூர்விக சமூதாயத்தினரானாலும் அங்கெல்லாம் இருப்பவர்கள் நமக்கு ஏதேனும் கற்றுத் தரமுடியுமா என்ன என்று அதிர்ச்சியில் உறைந்துபோவார்கள்.

ஆரியவர்த்தத்தில் கால் பதித்திராதவர்களைவிட குடிமைப் பணியாளர்களாக, அதிகாரிகளாக, மிஷனரிகளாக, வணிகர்களாக இந்தியாவில் பல காலம் வாழ்ந்த என் அருமை நண்பர்களுக்கு அந்த தேசம் பற்றி மிக அதிக அளவுக்குத் தெரிந்திருக்கும். எனவே நான் முதலில் அவர்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவாக விளக்கிவிட விரும்புகிறேன். ஆயிரம், இரண்டாயிரம் ஒருவேளை மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவைப் பற்றியே நான் பேசுகிறேன். அவர்களோ இன்றைய இந்தியாவைப் பற்றிச் சொல்கிறார்கள். அதிலும் கூட அவர்கள் கல்கத்தா, பம்பாய், அல்லது மதராஸ் போன்ற நகரங்களைப் பற்றியே பேசுகிறார்கள். நானோ கிராமப்புற சமுதாயங்களை அதாவது உண்மையான இந்தியர்கள் வாழும் இந்தியாவைப் பற்றிப் பேசுகிறேன்.

நான் இந்திய குடிமைப் பணியாளர்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் ஏன் மூவாயிரம் ஆண்டு பழமையான இந்தியாவைப் பற்றிமட்டுமல்ல; இன்றைய இந்தியாவையும் பற்றிய ஒரு சித்திரத்தையே உருவாக்கிக் காட்ட விரும்புகிறேன். இன்றைய இந்தியாவோ 19-ம் நூற்றாண்டு ஐரோப்பாவில் இருக்கும் நம்மைக்கூடக் கவலை கொள்ளவைக்கும்படியான பிரச்னைகளுடன் இருந்துவருகிறது.

இங்கிலாந்தில் உங்களுக்கு விசேஷ விருப்பங்கள் ஏதேனும் இருந்தால் இந்தியாவில் அவற்றை நீங்கள் பெரிய அளவில் பூர்த்திசெய்துகொள்ளமுடியும். பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து மாபெரும் தேடல்கள், தீர்வுகள், பிரச்னைகள் ஆகியவற்றைத் தீர்க்க விரும்பும் மாபெரும் சிந்தனையாளர்கள், நிபுணர்கள், பணியாளர்கள் இந்தியாவில் சென்று வசித்தால் அறிவார்ந்த விஷயங்களிலிருந்து அந்நியப்பட்டுப் போய்விடுவோமோ என்றெல்லாம் அஞ்சத் தேவையே இல்லை.

நீங்கள் ஒரு விலங்கியலாளரா… ஒளி மிகுந்ததோர் லட்சிய தொழில் வாழ்க்கை வாழ விரும்புகிறீர்களா… இந்தியா உங்களை இனிதே வரவேற்கிறது. ஹெக்கலை நினைத்துப் பாருங்கள். அவர் இப்போது இந்தியக் காடுகளில் கடல்களில் புகுந்து புறப்பட்டு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். அவருடைய மகத்தான கனவுகள், தேடல்கள் எல்லாம் அங்கு பூர்த்தியாகிக் கொண்டிருக்கின்றன.

நீங்கள் புவியியலாளரா… இமய மலை தொடங்கி இலங்கை வரை உங்களுக்காக எண்ணற்ற பொக்கிஷங்களுடன் காத்திருக்கிறது.

நீங்கள் தாவரவியலாளரா… எல்லையற்ற தாவர உலகம் உங்களுக்காக அங்கு ஏக்கத்துடன் காத்திருக்கிறது.

நீங்கள் இனவரைவியலாளரா… இந்தியாவில் இனவரைவியல் அருங்காட்சியகம் ஒன்று, உயிருடன் உங்கள் கண் முன் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அகழ்வாராய்ச்சியில் ஆர்வம் கொண்டவரா… இங்கிலாந்தில் ஏதேனும் சிறு மணல் மேட்டை அகழ்ந்தாராய உதவி செய்திருக்கிறீர்களா… ஏதேனும் தொன்மைக்கால எலும்புத்துண்டு, பழங்கால சிறு கத்தி, அல்லது சிக்கி முக்கிக் கல் போன்றவற்றை மணல் குவியலிலிருந்து கண்டெடுப்பதில் கிடைக்கும் சுகத்தை அனுபவித்திருக்கிறீர்களா… ஜெனரல் கன்னிங்ஹாமின் இந்திய அகழ்வாராய்ச்சி ஆண்டு அறிக்கைகளைப் படித்துப் பார்க்க மட்டுமே செய்திருக்கிறீர்களா… நீங்களே ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு இந்திய பெளத்த மன்னர்கள் கட்டிய பழங்கால விஹாரைகள், பல்கலைக்கழகங்களைத் தோண்டி எடுத்து உலகின் பார்வைக்குக் கொண்டுவரும் ஆர்வத்தை இந்தியாவுக்குச் சென்றால் உங்களால் தள்ளிப் போடவே முடியாது.

பழங்கால நாணயங்கள் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவரா… பாரசீக, கேரிய, திரேசிய, பார்த்திய, கிரேக்க, மேசிடோனிய, சித்திய, ரோமானிய, மொஹமதிய உலகின் அத்தனை பழங்கால நாணயங்களையும் ஒரே இடத்தில் கண்டெக்க வேண்டுமா… இந்தியாவுக்குச் செல்லுங்கள். பிளினி தனது காலத்தில் இந்தியாவில் இருந்து கிடைத்த விலைமதிப்பு மிக்க பொருட்களுக்காக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தொகை ஐநூற்று ஐம்பது மில்லியன் செஸ்டர்டியர் நாணயங்கள் அளவுக்கு இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார் (தொகுதி ஆறு: 26). மேலும் பார்க்க ஈ.தாமஸ், தி இந்தியன் பலாரா பக் 13.

வாரன் ஹேஸ்டிங்கஸ் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது ஒரு மண் பானையை காசி நகர் கங்கை நதிக்கரையோரம் கண்டெடுத்தார். அதில் 172 தங்க தாரிக்ஸ் பாரசீக நாணயங்கள் இருந்தன. வாரன்ஹேஸ்டிங் தன் லண்டன் எஜமானர்களுக்கு ஆகப் பெரிய பரிசாக இந்த அரிய நாணயக் குவியலை அனுப்பினார். அவர்கள் அதை அவர் இங்கிலாந்துக்கு வந்து சேர்வதற்குள் உருக்கி விட்டனர். நீங்கள் அப்படியான நாசவேலைகளைத் தடுக்க முடியும்.

ஆசியாட்டிக் ஜர்னல் ஆஃப் பெங்கால் பத்திரிகையின் சமீபத்திய இதழில் மைசீனிய பகுதிகளில் டாக்டர் ஷெலிமன் தோண்டி எடுத்தது போன்ற புதையல் பற்றி எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். மைசீனிய கல்லறைகளில் கிடைத்தவற்றுக்கும் வங்காளத்தில் கிடைத்தவற்றுக்கும் தொடர்பு இல்லை என்று சொல்லவும் முடியாது. இருந்தும் இங்கிலாந்தில் இந்த இந்தியப் புதையல் பற்றி எந்த அக்கறையும் காணப்படவே இல்லை.

வெகு பழங்கால இந்திய வேத புராணவியல் என்பது புராணவியல் ஆய்வுகளில் மாபெரும் ஒளியைப் பாய்ச்சியிருக்கிறது. புராணவியல் தொடர்பான தெளிவான ஆய்வுப்புல அஸ்திவாரம் இப்போது போடப்பட்டுவிட்டிருக்கிறது. எனினும் இன்னும் நுட்பமான பல விஷயங்கள் வடிவமைக்கப்படவேண்டியிருக்கிறது. இந்தியாவைத் தவிர (இந்தியப் புராணங்களின் ஆய்வுகளைத் தவிர) வேறு எங்கு அந்தப் பணியைத் திறம்படச் செய்துமுடிக்க முடியும்..

நீதிக்கதைகள்/தேவதைக் கதைகளின் மூலத்தைத் தேடிச் சென்றால் கிழக்கிலிருந்து அவை மேற்குக்குப் பயணமான பாதை புரியவரும். பௌத்தமே நமது நீதிக்கதைகள், மரபு வழிக் கதைகள் ஆகியவற்றின் மூலாதாரமாகத் திகழ்கிறது. ஆனால், இந்த விஷயத்திலும் பல விடை தெரியாத கேள்விகள் நீடிக்கவே செய்கின்றன.

உதாரணமாக பிளேட்டோவின் க்ரேடிலஸ் படைப்பில் இடம்பெறும் சிங்கத் தோல் போர்த்திய கழுதை என்ற நீதிக் கதையை எடுத்துக் கொள்வோம். அது கீழை நாடுகளிலிருந்து இரவலாகப் பெறப்பட்டதா? மர நாய் ஒன்று பெண்ணாக அஃபோரோடைட்டினால் மாற்றப்பட்ட கதையை எடுத்துக் கொள்வோம். ஒரு எலியைப் பார்த்ததும் அவள் பாய்ந்து அதைப் பிடிக்கவும் செய்கிறாள். இதுவும் ஒரு சமஸ்கிருத நீதிக் கதை போலவே இருக்கிறது. ஆனால் கி.மு.400 வாக்கிலேயே எழுதப்பட்ட கிரேக்க ஸ்ட்ராட்டிஸ் போன்ற ஆதிகாலப் படைப்பில் இது எப்படி இடம்பெற்றிருக்கமுடியும்? இந்த இடத்திலும் நாம் நிறைய ஆராய்ந்து பார்க்கவேண்டியிருக்கிறது.

நாம் இன்னும் பழம் பெரும் காலத்துக்கு ஆய்வுகளைப் பின்னோக்கிக் கொண்டு சென்றால் இந்தியாவில் உள்ள நீதிக் கதைகளுக்கும் மேற்குலக மரபு வழிக் கதைகளுக்கும் இடையில் மிகுந்த விசித்திரமான ஒற்றுமைகள் இருப்பதைப் பார்க்கமுடியும். கிழக்கிலிருந்து மேற்குக்கு வந்தனவா… மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்றனவா என்பதை இன்னும் நம்மால் உறுதி செய்யமுடியவில்லை.

ஆனால், சாலமனின் காலத்தில் இந்தியாவுக்கும் சிரியாவுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்புகள் இருந்திருப்பதை நிச்சயம் மறுக்கவே முடியாது.

பைபிளில் ஓபிர் பகுதியிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன. அதுபோல் அதில் இடம்பெற்றிருக்கும் தந்தங்கள், குரங்குகள், மயில், சந்தனக் கட்டைகள் போன்றவை இந்தியா அல்லாமல் வேறெங்கிருந்து வந்திருக்க முடியும்?

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures
பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *