Skip to content
Home » மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #3 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 3

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #3 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 3

மொழியியல், மத ஆய்வுகள், மனித சிந்தனைகளின் கருவூலம்

இந்தியாவுக்கும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் செங்கடலுக்கும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கும் இடையில் வணிகப் பரிமாற்றங்கள் விவிலிக ராஜாக்கள் புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் தடைபட்டு இருந்தன என்று தவறாகக் கருத முடியுமா?

யூதர்களிடையே மகத்தான நீதி ஞானம் இருந்ததாகச் சொல்வதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படும் சாலமன் ராஜாவின் நியாயத் தீர்ப்பை நினைவுபடுத்திப் பாருங்கள். எனக்கு சட்ட ஞானமெல்லாம் அதிகம் கிடையாது. எனினும் ‘உயிருடன் இருக்கும் குழந்தையை இரண்டாக வகுந்து ஒருத்திக்கு ஒரு பாதியைக் கொடுங்கள். மறு பாதியை இன்னொருத்திக்குக் கொடுங்கள்’ என்ற அந்தத் தீர்ப்பைப் படித்தபோது அதிர்ந்துபோனேன்.

இப்போது புத்த ஜாதகக் கதையில் இந்தக் கதை எப்படி இடம்பெற்றிருக்கிறது என்று விரிவாகச் சொல்கிறேன். பெளத்த திரிபீடகத்தின் திபெத்திய மொழிபெயர்ப்பான கங்க்யூர் என்ற நூலில் இதுபோலவே இரண்டு பெண்கள் ஒரு குழந்தையைத் தமது குழந்தை என்று சொந்தம் கொண்டாடும் கதை இடம்பெற்றிருக்கிறது. இருவர் தரப்பு வாதங்களையும் பொறுமையாகக் கேட்ட அரசர், யார் உண்மையான தாய் என்று தீர்மானிக்க முடியாமல் தவிக்கிறார். இந்த நேரத்தில் புத்தரின் சிஷ்யையான விசாகா முன்னால் வந்து சொல்கிறார்: ‘இந்தப் பெண்களைக் குறுக்கு விசாரணை செய்து என்ன பலன் கிடைக்கப் போகிறது. அந்தக் குழந்தையை அவர்களிடமே கொடுத்துவிடுங்கள். அவர்களே சண்டையிட்டு ஒரு முடிவை எட்டிக் கொள்ளட்டும்’.

இதைக் கேட்டதும் இரண்டு பெண்களும் பாய்ந்து குழந்தையை வாரி எடுத்துக்கொண்டு தமக்குள் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள். சண்டை மூர்க்கத்தனமாக ஆகத் தொடங்கியதும் குழந்தைக்கு அடிபட்டு அழத் தொடங்குகிறது. அதைத் தாங்க முடியாத ஒருத்தி, சண்டையை நிறுத்திவிட்டு மற்றவளே குழந்தையை எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல்லி ஒதுங்கிவிடுகிறாள்.

பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியாதவரே உண்மையான தாய் என்று மன்னர் தீர்ப்பு வழங்கி குழந்தையை அவரிடம் தந்தார். மற்ற பெண்ணுக்கு பிரம்படி கொடுத்தார்.

இந்தக் கதை சாலமன் மன்னரின் ஞானத்தையும் விட மேலான ஞானத்தைக் கொண்டதாகவும் மனித இயல்பு குறித்த ஆழமான புரிதலைக் கொண்டிருப்பதாகவும் எனக்குத் தோன்றுகிறது.

உங்களில் பலர் பல மொழிகளை படித்ததோடு அல்லாமல் மொழிகளின் அறிவியல் (மொழியியல்) பற்றியும் படித்திருப்பீர்கள். இந்தியர்கள் எல்லாம் கிரேக்க, அரேபிய, பாரசீக, மொகலாய இறுதியாக ஆங்கிலேயர் என பல்வேறு ஆக்கிரமிப்பாளர்களுடைய மொழிகளுடன் தொடர்புகொள்ள நேர்ந்திருக்கிறது. வட்டார மொழிகளின் வளர்ச்சி, சிதைவு, வார்த்தைகள் சார்ந்து மட்டுமல்ல, இலக்கணம் சார்ந்தும் மொழிகளின் கலப்பு ஆகியவை பற்றியெல்லாம் இந்தியாவில் வசிக்கும் அந்த ஆரிய, திராவிட மொழிக் குடும்பத்தினர் மற்றும் முண்டா பழங்குடியினர் போன்றவர்களிடமல்லாமல் உலகில் வேறு எங்கு விரிவாக ஆராய்ந்து பார்க்க முடியும்?

சட்ட திட்டங்கள், நீதி நெறிமுறைகள் பற்றியெல்லாம் கற்றுக் கொள்வதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? கிரேக்கம், ரோமாபுரி, ஜெர்மனி என பிற இடங்களில் சட்ட திட்டங்கள் தொடர்பாக நீங்கள் படித்திருக்கும் வரலாற்றுத் தகவல்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட சட்ட வரலாறை நீங்கள் இந்தியாவில் ஆராய்ந்து தெரிந்துகொள்ளமுடியும். உலக சட்ட திட்டங்கள் பற்றி ஒப்பிட்டு ஆய்வு செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு இந்திய சட்ட திட்டங்களுடன் உலக சட்ட திட்டங்களில் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகள் எல்லாம் மிக மிக அரியதோர் அறிவுத் திறப்பாக அமையும்.

ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாகப் பல நூல்கள் கண்டடைப்பட்டுவருகின்றன. உதாரணமாக புகழ் பெற்ற மனுஸ்மிருதி போன்று பின்னாளில் உருவான பல சட்ட நூல்களின் மூல நூலான தர்ம சூத்ரங்கள் அல்லது சமயாகாரிக சூத்ரங்கள் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

மனுவின் சட்ட விதிகள் என்று அழைக்கப்பட்ட நூல் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய அல்லது கி.மு.500களில் எழுதப்பட்டது என்று உறுதியாகச் சொல்லப்பட்டது. இப்போது அது கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்று சற்று தயக்கத்துடன் சொல்லப்படுகிறது. அது சட்ட விதிகள் என்றோ சட்ட விதிகளின் தொகுப்பு என்றோ அல்லது மனுவின் சட்ட விதிகள் என்றோ கூட அழைக்கப்பட்டக்கூடியது அல்ல என்றும் சொல்லப்படுகிறது.

சட்ட திட்டங்களின் முன்னோடியான அரசியல் சமூகங்கள் பற்றிய ஆய்வுகளின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொண்டிருந்தால் (அந்தப் புரிதல் இந்த கேம்பிரிட்ஜ் பல்கலை அல்லாமல் வேறு எங்கு உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது) இந்தியாவில் இப்போதும் நீடித்து நிலைபெற்று இருந்துவரும் கிராம சமுதாயங்களே அது தொடர்பான ஆய்வுகளுக்கெல்லாம் உரிய பலனை உங்களுக்குத் தரமுடியும்.

நாம் ஏற்கிறோமோ மறுக்கிறோமோ… எந்தவொன்றையும்விட நாம் மிக அதிகமாக மதிக்கும் விஷயம் ஒன்று உண்டு. ஏற்பவர்களைவிட மறுப்பவர்கள் மிக அதிக அக்கறையுடன் பேசிவரும் விஷயம் அது. நமது எண்ணங்கள், நம்பிக்கைகள், செயல்கள் அனைத்துக்கும் வழிகாட்டுவதாகவும் ஆதரவு தருவதாகவும் அனைத்திலும் நிரம்பி வழிவதாகவும் அனைத்தையும் முழுவதுமாக ஆக்கிரமிப்பதாகவும் இருக்கும் விஷயம் அது. அது இல்லாமல் கிராம சமூகம் இல்லை…. சாம்ராஜ்ஜியங்கள் இல்லை. மரபுகள் இல்லை; சட்டங்கள் இல்லை. சரிகள் இல்லை.. தவறுகள் இல்லை. மொழிக்கு அடுத்ததாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான நிரந்தரமான, மிகத் தெளிவான வேறுபாட்டை அடையாளப்படுத்தக்கூடியது. இந்த உலக வாழ்க்கையைச் சாத்தியமாகவும் சகிக்க முடிவதாகவும் ஆக்கும் விஷயம் அது. அனைத்து தேசியங்களின் ஆதார ஊற்று அது. அனைத்து வரலாறுகளின் வரலாறு… அனைத்து புதிர்களின் புதிர்… ஆம்… மதம் பற்றித்தான் சொல்கிறேன். மதங்களின் தோற்றுவாய், இயல்பான வளர்ச்சி, தவிர்க்க முடியாத வீழ்ச்சி இவை பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள இந்தியாவைவிட மிகப் பொருத்தமான தேசம் எதுவாக இருக்கமுடியும்? பிராமண மதத்தின் தாய்வீடு… பெளத்தத்தின் பிறப்பிடம்… ஜெராஷ்டிர மதத்தின் புகலிடம்… பல்வேறு புதிய கற்பிதங்களின் தாயாகத் திகழும் தேசம்… 19-ம் நூற்றாண்டின் புழுதிப் படலத்தில் இருந்து மீட்டுத் தூய்மைப்படுத்தப்பட்டுவிட்டால் அதி தூய மத நம்பிக்கையின் புதிய பிறப்பாக வருங்காலத்தில் ஜனிக்கப் போகிற மதம். அதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள இந்த உலகில் இந்தியாவைத் தவிர வேறு எங்கு செல்லவேண்டியிருக்கும்?

அதி தொல் பழங்காலம் ஒரு பக்கம்… அதி நவீன எதிர்காலம் மறுபக்கம் என இந்தியாவில் எங்கு சென்றாலும் காணக்கிடைக்கும். இன்றைய நிலையில் பற்றியெரியும் எந்தவொரு பிரச்னையையோ கேள்வியையோ வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள்… அனைவருக்கும் கல்வி, உயர் கல்வி, நாடாளுமன்ற பிரதிநிதித்துவம், சட்டங்களின் வரையறைகள், நிதி, புலம் பெயர்தல், நலிவடைந்த சமூகத்தின் நல உதவித் திட்டங்கள் என எதைப் பற்றி வேண்டுமானாலும் கற்றுக் கொடுக்கவோ அமல்படுத்தவோ விரும்பினாலும் கற்றுக் கொள்ளவோ கவனித்துப் புரிந்துகொள்ளவோ விரும்பினாலும் உலகில் எங்குமே இல்லாத அளவுக்கான சோதனைச்சாலையாக இந்தியாவே திகழ்கிறது.

சமஸ்கிருதம் கற்றுக் கொள்வது ஆரம்பத்தில் சிரமமானதாகவும் பயனற்றதாகவும் தோன்றக்கூடும். ஆனால் நீங்கள் முறையாகப் படித்தால் (லண்டனில் அதற்கு கேம்பிரிட்ஜ் போல் சிறந்த ஸ்தாபனம் வேறு எதுவும் இருக்கமுடியாது) உங்கள் முன்னால் எண்ணற்ற சமஸ்கிருத இலக்கியங்கள் அணிவகுத்து நிற்கும். பெரும்பாலானவை உலகுக்குத் தெரிந்திராதவையாக இருக்கும். யாரும் படித்திராதவையாக இருக்கும். உங்களுக்கு இதற்கு முன் இருந்திராத உள்ளொளியை அது தரும். மாபெரும் பாடங்களைக் கற்றுத் தரும். மனித மனங்களின் ஆழங்களை அறியத் தரும்.

இந்தியாவுக்குச் சென்றால் இன்னும் ஏராளமான சமஸ்கிருத நூல்களை நீங்கள் படிக்க முடியும்.

நீங்கள் நினைப்பதுபோல் வெகு தூரத்தில் இருக்கும் விசித்திரமான அல்லது புதிரான ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தேசம் அல்ல இந்தியா. அதன் வருங்காலம் ஐரோப்பாவுக்கு சொந்தமானது. இந்திய ஐரோப்பிய உலகில் அதற்கு மிக முக்கிய இடம் இருக்கிறது. நமது வரலாற்றில் அதற்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது. மனித குல வரலாற்றில், மனித சிந்தனைகளின் வரலாற்றில் அதற்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது.

உலகின் பரிணாம வளர்ச்சி, முதல் செல் தோன்றியது எப்போது, செல்களின் கலப்பு மற்றும் பிரிதல்கள் எப்படி நடந்தன, உயிர்கள் எப்படித் தோன்றின, தாழ்நிலை உயிர்களில் தொடங்கி உயர் நிலை உயிரிகள் வரை எப்படி எல்லாம் பரிணமித்திருக்கின்றன என்பவை சார்ந்த புற உலகம் அல்லது லெளகிகத் தேவைகள் சார்ந்த உலகின் வளர்ச்சி பற்றி இன்றைய உலகின் மகத்தான ஆளுமைகள், மேதைகள் விரிவாக ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். உள்முகமான உலகம், அக உலகத்தின் படிப்படியான மாற்றங்கள், வளர்ச்சிகள் பற்றி இப்படியான ஓர் ஆய்வும் உலகில் நடக்கத்தானே செய்கின்றன.

முதன் முதலாக மனித சிந்தனை துளிர்விட்டது எப்போது…. மனித பகுத்தறிவானது மிகச் சிறிய சிந்தனையில் ஆரம்பித்து படிப்படியாக வளர்ந்து சிக்கலான, உயரிய நிலையை எட்டியது எப்படி? மனித சிந்தனைகளின் பரிணாம வளர்ச்சியில் நம்மைப் பற்றி (உண்மையான நம்மைப் பற்றி) நாம் ஆராய்ந்துவருகிறோம். அந்த அக உலக சிந்தனை வளர்ச்சி பற்றிய ஆய்வுகளில் உலகில் இந்தியா மற்ற எந்த நாடுகளையும் போலவே அதி முக்கியமான இடத்தை வகிக்கிறது.

மொழி, மதம், புராணம், தத்துவம், சட்ட திட்டங்கள், சடங்கு ஆசாரங்கள், தொல் கலை, தொல் விஞ்ஞானம் என மனித மனது தொடர்பான எந்தத் துறையாக இருந்தாலும் அவை பற்றி ஆழமான புரிதல் கிடைக்க, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்தியாவுக்குச் சென்றாகவேண்டும். . ஏனென்றால் அந்த ஆய்வுகள் தொடர்பான அதி முக்கியமான அம்சங்கள், நூல்கள் இந்தியாவில் குவிந்து கிடக்கின்றன. இந்தியாவில் மட்டுமே குவிந்து கிடக்கின்றன.

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures
பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *