Skip to content
Home » மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #9 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 2

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #9 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 2

Horace Hayman Wilson

கனவான் ஹிந்துக்கள்

இமயம் தொடங்கி இலங்கைவரை வாழும் இந்தியர்கள் மீது அள்ளி வீசப்படும் அவதூறுகளை மறுதலிக்க விரும்புகிறேன் என்பதால், இந்தியா குறித்த புனிதமான, லட்சிய தேசம் என்றொரு சித்திரத்தை நான் தீட்ட விரும்புவதாகவோ அதன் குறைகளையெல்லாம் மறைக்க விரும்புவதாகவோ நினைக்கவேண்டாம். அங்கு இருளே இல்லை; எங்கும் இனிமையும் ஒளியும் மட்டுமே நிறைந்திருப்பதாகச் சொல்ல முன்வரவில்லை.

இந்தியாவுக்கு நான் ஒரு நாளும் சென்றதில்லை. எனவே வரலாற்று ஆய்வு மற்றும் விமர்சனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் பேசுவதற்கு எந்தவொரு வரலாற்று ஆசிரியருக்கும் உள்ள கடமை மற்றும் உரிமைகளின் அடிப்படையிலேயே என் கூற்றுகளை முன்வைக்கிறேன்.

பழங்கால இந்தியர்களின் தேசிய அடையாளம் மற்றும் உணர்வுகள் தொடர்பாக கிரேக்க எழுத்தாளர்கள், பழங்கால இந்திய இலக்கியங்கள் ஆகியவற்றில் சொல்லப்பட்டிருப்பவற்றையே என்னுடைய ஆய்வின் பிரதான சான்றுகளாக, தகவல் மூலங்களாக எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

அதற்குப் பிந்தைய காலகட்டம் தொடர்பான தகவல்களுக்கு இந்தியாவைப் படையெடுத்து ஆக்கிரமித்த பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் எழுதியவற்றை எடுத்துக்கொண்டிருக்கிறேன். வெல்வது எளிதாகவும் ஆள்வது கடினமாகவும் இருந்த இந்தியர்கள் பற்றி இவர்கள் பரிவுடன் எல்லாம் எதையும் எழுதியிருக்கவில்லை.

கடந்த ஒரு நூற்றாண்டில் இந்தியா எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள இந்தியாவிலும் இந்தியர்கள் மத்தியிலும் தமது வாழ்வின் துடிப்பான காலத்தைக் கழித்தவர்கள் தமது அனுபவங்களின் அடிப்படையில் எழுதி அச்சிட்டிருப்பவற்றை ஆதாரமாக எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் நான் சந்தித்துப் பேசிய மதிப்புக்குரிய குடிமைப் பணி அதிகாரிகள், இந்திய கனவான்கள் ஆகியோர் சொன்ன வாக்குமூலங்களையும் என் ஆய்வின் அடிப்படையாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

வருங்காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்யவும் நிர்வகிக்கவும் போகிறவர்களான உங்கள் மத்தியில்தான் இதைப் பேசுகிறேன் என்பதால் இந்தியக் குடிமைப் பணி அதிகாரிகள் மத்தியில் இந்தியா மற்றும் இந்தியர் தொடர்பாக அழுத்தமாக நிலைபெற்றிருக்கக்கூடிய வெளிப்படையாக அதிகம் பேசப்பட்டிருக்கக்கூடிய முக்கிய விஷயம் பற்றி முதலில் பேசுகிறேன். அதாவது இந்துக்களின் உண்மைத்தன்மை (நம்பகத்தன்மை) அல்லது இந்துக்களுக்குத் தேவைப்படக்கூடிய உண்மைத்தன்மை பற்றி முதலில் பேசுகிறேன்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்குச் சென்ற குடிமையியல் பணி அதிகாரிகள், பழைய கிழக்கு இந்திய கம்பெனியின் சார்பில் பணிபுரிந்தவர்கள் ஆகியோர் இந்தியா பற்றிச் சொன்னதிலிருந்து ஆரம்பிக்கிறேன். அந்த ஐரோப்பியர்களை நான் இங்கிலாந்துக்கு முதலில் வந்தபோது பார்த்துப் பேசும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அவர்கள் இந்தியர்களின் வாழ்க்கை, உள்ளூர் நடைமுறைகள், உள்ளூர் மக்களின் குண நலன்கள் ஆகியவை குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்று சிறப்பாகப் பணிபுரிந்துவிட்டு இங்கிலாந்து திரும்பியவர்களைவிட அதிகம் தெரிந்துவைத்திருந்தார்கள்.

முன்பைப் போல் இந்தியா, இப்போது சென்றடைய முடியாத தொலைவில் இருக்கும் தேசம் அல்ல. முன்பென்றால் அங்கு செல்லும் ஐரோப்பியர்கள் தனித்தீவில் தமக்கான வாழிடத்தை உருவாக்கிக் கொள்வதுபோல் (ராபின்சன் க்ரூஸோ போல்) கஷ்டப்படவேண்டியிருந்தது. இப்போது அப்படி அல்ல. இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் குறுகிய காலத்துக்குள் எளிதாகக் கடல் வழிப் பயணம் செய்ய வழி பிறந்துவிட்டிருக்கிறது. கடிதப் போக்குவரத்து, தந்தி வசதிகள் எல்லாம் வந்துவிட்டன. எனவே மிகச் சிறிய புலம் பெயர்தல் என்பதாக இன்று இந்தியப் பயணமும் பணிகளும் ஆகிவிட்டன. இங்கிலாந்து பெண்கள்கூட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பைவிட அதிக எண்ணிக்கையில் எளிதில் சென்றுவர முடிகிறது. எனினும் புதிய நாட்டில் சென்று வாழ்வது தொடர்பான அடிப்படை சிக்கல்கள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். அவற்றைத் தவிர்க்கவே முடியாது. அவற்றை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். இந்தியாவில் பணிபுரியப் போகும் புதிய குடிமைப் பணி அதிகாரிகளுக்கு உண்மை விஷயங்களை எடுத்துச் சொல்லி உற்சாகமூட்டுவதன் மூலம் அந்த நெருக்கடிகளை அவர்கள் எளிதில் சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன்.

ஆக்ஸ்ஃபோர்டில் சமஸ்கிருதத்துறை பேராசிரியராக இருந்த மறைந்த திரு பேரா.வில்சனை எனக்கு நன்கு தெரியும். இந்தியா குறித்த அவருடைய நினைவுகூரல்களை மிகுந்த ஆர்வத்துடன் பலமுறை கேட்டிருக்கிறேன்.

இந்தியாவில் அவர் சந்தித்த உள்ளூர் நண்பர்கள், உதவியாளர்கள், பணியாளர்கள் பற்றி பேராசிரியர் வில்சன் சொல்லியிருப்பதை இங்கு மேற்கோள்காட்டுகிறேன்:

‘கட்டாயம் மற்றும் விருப்பம் என இரண்டின் பேரிலுமாக இந்தியாவில் இந்துக்கள் மத்தியில் வாழ்ந்திருக்கிறேன். பிற ஐரோப்பியர்களுக்கு எந்த அளவுக்கு அவர்களுடன் பரிச்சயம் ஏற்படுமோ அதைவிடப் பல மடங்குப் பரிச்சயமும் பழகும் சந்தர்ப்பங்களும் எனக்குக் கிடைத்தன. கல்கத்தா சுங்கச் சாவடியில் ஏராளமான கைவினைக் கலைஞர்கள், எந்திர, வாகனத் தொழிலாளிகள், கூலிப் பணியாளர்கள் ஆகியோருடன் தினமும் நேரடியாகப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அவர்கள் மிகவும் உற்சாகமாகச் சளைக்காமல் கடின உழைப்பில் ஈடுபடுவார்கள். தமது மேலதிகாரிகளுடன் நல்லவிதமாக நடந்துகொள்வார்கள். கூடுதல் நேரம் பணி செய்யும்படியோ வேறு என்ன விஷயங்கள் கேட்டுக்கொண்டாலும் அதை உடனடியாக உற்சாகமாகச் செய்ய முன்வருவதைப் பார்த்திருக்கிறேன்.

வேலைக்கு வருபவர்களில் ஒருவர் கூடக் குடித்துவிட்டு வந்ததை நான் பார்த்ததே இல்லை. ஒருவர் கூட மேலதிகாரியை எதிர்த்து எதுவும் பேசியதில்லை. முறையற்று நடந்துகொண்டதில்லை. நம்பிக்கை துரோகம் செய்யவில்லை என்று சொல்லமுடியாது. ஆனால் மிக மிகச் சொற்பமாகவே அப்படி நடந்துகொண்டனர். பிற நாட்டுச் சுங்கச் சாவடிகளில் இருக்கும் அளவுக்குக் கறாராக, கண்காணிப்புடன் நடந்துகொள்ள வேண்டிய அளவுக்கெல்லாம் இருந்திருக்கவில்லை. மிகவும் சொற்பமாகவே அற்ப விஷயங்களில் மட்டுமே அப்படி இருந்திருக்கின்றன.

இந்தியர்கள் திறமைசாலிகளாகவும் எளிதில் பணிந்து நடப்பவர்களாகவும் இருந்தனர். எந்தவிதமான அடிமைத்தனமும் இருந்திருக்கவில்லை. மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் பணிபுரிகின்றனர். எந்தவித பயமுறுத்தலும் இன்றி நம்பிக்கையுடன் பணி புரியும் இடங்களில் வெளிப்படைத்தன்மை மிகுதியாக இருக்கும். அந்த வெளிப்படைத்தன்மையை இந்தியர் அனைவரிடமும் கண்டிருக்கிறேன்.

தமது மேலதிகாரிகளின் நல்லெண்ணம் மற்றும் நற்குணம் பற்றி அவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வழிசெய்யுங்கள். மரியாதையை எந்தவகையிலும் இழக்காமல் நன்கு கலந்து பழகுங்கள்’.

அதன் பின்னர் மிக அதிக அளவுக்கு அவதூறு செய்யப்பட்டிருக்கும் இந்து பண்டிட்கள் பற்றி அவர் சொல்கிறார்:

‘ஓய்வு நேரங்களில் நான் படித்த புத்தகங்கள் இந்தியர்களில் கல்வி அறிவு பெற்றவர்களுடன் தொடர்பு கொள்ள வழிவகுத்தது. அவர்களும் சோம்பலற்று உழைக்கும் குணம், புத்திக் கூர்மை, உற்சாகம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். இந்த பண்டிதர்கள் மற்றும் பொதுவாகவே ஹிந்துக்கள் எல்லாரும் குழந்தைத்தனமான எளிமை கொண்டவர்கள். அன்றாட வாழ்க்கையின் லெளகிக, பிற செயல்பாடுகள் குறித்து துளியும் பரிச்சயம் அற்றவர்கள். ஐரோப்பியர்களுடன் தொடர்பில் இருப்பவர்களிடம் மட்டுமே இந்தக் குணங்கள் மறைந்துபோயிருப்பதைப் பார்க்கமுடியும்.

இந்த பண்டிதர்கள் அல்லது ஹிந்து ஞானவான்களுக்கு ஐரோப்பியர்கள் பற்றி எதுவுமே தெரியாது. ஐரோப்பியர் மீது மிகுந்த பயமும் கொண்டிருக்கிறார்கள். ஹிந்து மற்றும் ஐரோப்பிய அறிஞர்களிடையே எந்தவிதக் கருத்துப் பரிமாற்றமும் இதுவரை நடக்கவில்லை. எனவே இரு தரப்பினரிடையேயும் தவறான புரிதல் நீடித்துவருவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை’.

இறுதியாக, கல்கத்தாவிலும் பிற பகுதிகளிலும் இருக்கும் உயர் வர்க்கத்தினர் பற்றிச் சொல்லும்போது பேராசிரியர் வில்சன் சொல்கிறார்:

‘பண்பான நடவடிக்கைகள், தெளிவு, புரிதல், சுதந்தர மனோபாவம், சுதந்தரமான கொள்கை சித்தாந்தங்கள் ஆகியவற்றைக் கொண்டவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். எந்தவொரு தேசத்தில் இவர்களைப் பார்த்தாலும் கண்ணியமான கனவான்கள் என்று அங்கீகரிக்கவேபடுவார்கள்’. மேலும் சொல்லும்போது, ‘இப்படியான கனவான்கள் சிலருடன் எனக்கு நல்ல நட்பு உருவானது. அது என் வாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக நீடிக்கும் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவில் இருந்த தன்னுடைய நண்பர்கள் குறித்து பேராசிரியர் வில்சன் இதுபோலவே, சில நேரங்களில் இதைவிட அழுத்தமாக, புகழ்ந்து பேசியதைக் கேட்டிருக்கிறேன். கேசவ் சந்திர சென்னின் தாத்தாவான ராம் கமல் சென் இந்து பாரம்பரிய சம்பிரதாயங்களில் ஆழ்ந்த பற்றுறுதி கொண்டவர் (நிச்சயம் மத வெறி கிடையாது). பேராசிரியருக்கும் இவருக்கும் இடையிலான கடிதத் தொடர்புகள் சமீபத்தில் வெளியானது. அதில் என்னதான் ஆங்கிலேயரும் ஹிந்துக்களும் நெருங்கிய நட்புடன் இருந்தாலும் தேடிப் போய் நட்புறவை உருவாக்கியதும் பலப்படுத்திக் கொண்டதும் எல்லாம் ஆங்கிலேயராகவே இருந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை பெருமைப்படக்கூடிய இன்னொரு சம்ஸ்கிருதப் பேராசிரியர் இருக்கிறார். என்னைவிடவும் இந்த விஷயம் சார்ந்து மிகவும் அழுத்தமாகப் பேசமுடிந்தவர். ஹிந்துக்களிடையே நீங்கள் நண்பர்களைத் தேடிச் சென்றால் நிச்சயம் கிடைப்பார்கள். அவர்களை நீங்கள் நிச்சயம் நம்பலாம் என்று அவரைக் கேட்டால் நிச்சயம் சொல்வார். அநேகமாக உங்களிடம் பலமுறை இதற்கு முன்பும் அவர் சொல்லியிருக்கவும் கூடும்.

படம்: H.H. Wilson – first Boden Professor of Sanskrit at Oxford University.

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures
பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *