ஒரு பரிந்துரை… ஓர் எச்சரிக்கை
கேம்பிரிட்ஜ் பல்கலையில் பிரிட்டிஷ் இந்தியக் குடிமையியல் பணிக்குத் தம்மைத் தயார்செய்துகொண்டுவரும் ஐரோப்பியர்களுக்கு, ‘இந்தியர்களைப் பற்றிய ஒரு முக்கியமான புத்தகம் இருக்கிறது. அதைப் படியுங்கள்’ என்று நான் தொடர்ந்து பரிந்துரை செய்து வந்திருக்கிறேன். இன்னொரு புத்தகம் இருக்கிறது. ‘அதைப் படிக்காதீர்கள்’ என்று எச்சரித்தும் வந்திருக்கிறேன். எனது பரிந்துரையும் எச்சரிக்கையும் சில நேரங்களில் நல்ல பலனைத் தந்துள்ளன.
மிகவும் மோசமான புத்தகமாக நான் கருதும் புத்தகம், இந்தியாவுக்கு நேர்ந்த மிக மிக மோசமான தீமைகள் சிலவற்றுக்கு முக்கிய காரணமாகியிருக்கிறது. ‘பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு’ என்ற ஜேம்ஸ் மில்லின் புத்தகம்தான் அது. பேராசிரியர் வில்சன் அந்த நூலின் விஷத்தை முறிக்கும் விஷ முறிவு மருந்தைக் கொடுத்திருந்தபோதிலும் ஜேம்ஸ் மில்லின் நூல் மிக மிக விஷமத்தனமானது.
நான் பரிந்துரைக்கும் புத்தகம் கர்னல் ஸ்லீமன் எழுதிய ‘ராம்பிள்ஸ் அண்ட் ரீகலெக்ஷன்ஸ் ஆஃப் அன் இந்தியன் அஃபிஷியல்’. இது 1835-1836-ல் எழுதப்பட்டு 1844-ல் வெளியானது. இந்தப் புத்தகத்தின் மலிவுப் பதிவு மீண்டும் வெளியிடப்பட்டு அனைவருக்கும் எளிதில் கிடைக்கும்படிச் செய்யவேண்டும்.
மில் எழுதிய பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு பற்றிய நூல் பிரிட்டிஷ் இந்தியக் குடிமைப் பணிக்குத் தயாராகும் உங்களுக்கு மிக மிக நன்றாகத் தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த நூல் நீங்கள் படிக்கவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக ஆய்வுகளும் வைக்கப்படுகின்றன. இதை வருத்தத்துடனே சொல்கிறேன். அந்த நூலை நான் ஏன் ஏன் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்பதற்குச் சில உதாரணங்கள் தருகிறேன்:
ஹிந்துக்களின் குண நலன்கள் பற்றிய மில்லின் பார்வை, ஃபிரெஞ்சு மிஷனரி துபோய்ஸ் மற்றும் ஓர்ம், புக்கனன், டென்னட் மற்றும் வார்ட் ஆகியோர் எழுதியதையே பெரிதும் அடிப்படையாகக் கொண்டது. இவர்களில் எவருமே இதற்கான தகுதியுடையவர்களோ ஒரு விஷயத்தை நடுநிலையோடு அணுகுபவர்களோ அல்ல. இவர்கள் எழுதியவற்றில் இந்துக்களைப் பற்றி மிகவும் பாதகமாகச் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை மட்டுமே மில் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். இந்துக்களை முழுவதுமாக விமர்சித்து எழுதுவதை நோக்கமாகக் கொண்ட இவர்கள்கூட இந்துக்களிடம் இருக்கும் சில குணங்களைப் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள். மில்லோ அவற்றையும் ஒதுக்கிவைத்துவிடுகிறார்.
‘ஒரு பிராமணர் என்பவர் பொய்கள் மற்றும் புரட்டுகளின் மர்மச் சுரங்கம்’ என்று வேடிக்கையாகச் சொன்னதை மில் உண்மைபோலவே நம்பி மேற்கோள் காட்டுகிறார். அடுத்ததாக இந்துக்களின் நம்பகத்தன்மை பற்றிப் பேசும்போது ‘அவர்கள் எதற்கெடுத்தாலும் வழக்கு தொடுக்கும் வம்புக்குணம் கொண்டவர்கள்’ என்று விமர்சிக்கிறார். அவர் எழுதுகிறார்: ‘இந்துக்களுடைய வன்மமும் பழிவாங்கும் குணமும் மிக அதிகமாக இருக்கிறது. தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் வழக்குத் தொடுத்து அந்தக் கோபங்களுக்கு வடிகால் தேடிக் கொள்கிறார்கள்’.
இதே விஷயத்தை எந்தவித அவமானப்படுத்தும் உள்நோக்கமும் இல்லாமல் வேறு கோணத்தில் சொல்லவும் முடியும். ‘தமது கோபம் அல்லது வெறுப்பைக் கொலை செய்தோ விஷம் வைத்தோ வெளிப்படுத்தாமல் ஆங்கிலேய நீதிமன்றத்தை நம்பி அதன் சட்ட திட்டங்களை மதித்து அதன் முன்னால் வழக்குத் தொடுக்கிறார்கள்’ என்றும் இதைச் சொல்லமுடியும்.
‘இந்தியா பற்றிய வரலாற்று ஆய்வேடு’ என்ற தலைப்பில் டாக்டர் ராபர்ட்ஸன் எழுதிய நூலில் இந்துக்களின் வழக்கு தொடுக்கும் மனநிலையைக் காட்டுமிராண்டித்தனமாக அல்லாமல் அதி உயர்ந்த நாகரிகத்தின் வெளிப்பாடாகவே குறிப்பிட்டிருக்கிறார். இதையும் விமர்சிக்கும் மில், ‘மூர்க்கத்தனமான அயர்லாந்தில்கூட இப்படியான நிலை இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முஹமதியர்களின் நீதிமன்றங்கள், அரசபைகளில் லஞ்சமும் ஊழலுமே தீர்ப்புகளைத் தீர்மானித்துவந்தன. அப்படியான நிலையில் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய சட்ட திட்டங்கள், நீதியமைப்பு எல்லாம் ஹிந்துக்களுக்கு மிகவும் உவப்பானவையாக இருந்திருக்கும். இதில் நாம் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஆனால் ஹிந்துக்கள் பிற தேசத்தினரைவிட வழக்கு விவகாரங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்பது உண்மையா?
மதராஸின் புகழ்பெற்ற கவர்னரான சர் தாமஸ் மன்ரோ என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். ரயத்வாரி கணக்கு வழக்குகளை அவர் முழுமையாக ஆதரிக்கக்கூடியவர். அவற்றைப் பெருமளவில் கையாண்டவர். ‘ஹிந்துக்களை அத்தனை சந்தர்ப்பங்களிலும் அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அவர்கள் வம்பு வழக்கு விவகார எண்ணம் கொண்டவர்கள் அல்ல என்று உறுதியாகச் சொல்லமுடியும்’ என்றுதான் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மனுஸ்மிருதி 8:43-ல், ‘மன்னரோ அவருடைய அரசவையினரோ தாங்களாகவே ஒரு வழக்கைத் தொடங்கவோ வேறொருவர் தங்கள் முன் கொண்டுவந்த வழக்கை முடக்கவோ கூடாது’ என்று சொல்கிறது.
‘பிராமணர் தன்னிடம் விசாரணைக்கு வரும் நபருக்கு மரண தண்டனை விதிப்பார்’ என்று ஓர் இடத்தில் மில் குறிப்பிடுகிறார். ஹிந்துக்களை மிக மோசமான குணங்கள் கொண்டவர்கள் என்று சுட்டிக்காட்டும் நோக்கில் மில் இதைச் சொல்கிறார். கர்னல் வான்ஸ் கென்னடி இதுபற்றி என்ன சொல்கிறாரென்றால் ‘ஒரு சமூகத்தில் இப்படியானவர்கள் (நீதி வழங்குபவர்களாக) இருந்தால் அந்தச் சமூகம் நிலைத்து நிற்கமுடியாது’.
இங்கிலாந்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 232 வழக்குகளில் 64-ல் மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால், வங்காளத்தில் 59 மரண தண்டனைத் தீர்ப்புகளில் 50 பேருமே தூக்கிலிடப்பட்டனர் என்று எல்ஃபின்ஸ்டன் எழுதிய ஹிஸ்டரி ஆஃப் இந்தியா பக் 219-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜேம்ஸ் மில், கர்னல் வான்ஸ் கென்னடி ஆகியோர் தமது கூற்றின் முழுப் பரிமாணத்தைப் புரிந்துகொள்ளவில்லை.
ஒருவேளை ஒருவருக்கு மரண தண்டனை வழங்கும் அதிகாரம் பிராமணர்களுக்கு இருந்தது என்பதை உண்மையென்றே எடுத்துக்கொண்டாலும் அது அவர்களுடைய நல்லம்சத்துக்கான வலுவான சான்றாகவே கருதப்படவேண்டும். இங்கிலாந்தில் பத்தாயிரம் பேரில் ஒருவருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது. வங்காளத்திலோ பத்து லட்சம் பேரில் ஒருவருக்குத்தான் தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது. பிராமணர்கள் தம்மிடம் இருந்த நீதி வழங்கும் அதிகாரத்தை வைத்து மிகக் குறைவான மரண தண்டனையே தந்திருக்கின்றனர் என்பதையே இது உறுதிப்படுத்துகிறது.
கர்னல் ஸ்லீமனின் ராம்பிள்ஸ் படைப்பு உரிய கவனத்தைப் பெறவே இல்லை. அவருடைய நூலிலிருந்து சில வரிகளை இங்கு தருகிறேன். அவருடைய பார்வைகள் எல்லாம் அவருடைய சகோதரிக்கு எழுதிய கடிதங்களில் இடம்பெற்றிருக்கின்றன.
‘அன்புள்ள சகோதரி,
இந்தியாவில் இருந்தபோது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்த விஷயம் எது என்று ஆங்கிலேயரிடம் யாரேனும் கேட்டால், இங்கிலாந்திலிருந்து தமது சகோதரிகள் அவர்களுக்கு அனுப்பிய கடிதமே மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது என்று பத்தில் ஒன்பதுபேர் பதில் சொல்வார்கள். அந்தக் கடிதங்கள் இப்படி எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு நில்லாமல் எங்களை இந்த மனித குலத்தின் நல்ல குடிமகன்களாக இந்த அரசாங்கத்தின் நல்ல பணியாளர்களாக ஆக்கவும் செய்கிறது. அவை இல்லாவிட்டால் நாங்கள் வேறு நபராகிவிட்டிருப்போம்.
இந்தியாவில் இருக்கும்போது நாங்கள் செய்பவையெல்லாவற்றையும் எங்கள் அன்பான சகோதரிகள் பாராட்டி வரவேற்பார்களா என்று மனதில் நினைத்தபடியே செய்துவருகிறோம். அப்படியாக பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் ‘சம்பளம் பெறாத நீதிநிர்வாக அமைப்பாக’ அவர்களே இருக்கிறார்கள்.’
பழங்கால இங்கிலாந்தின் வீர தீர நாயக மரபில் சகோதரியின் வார்த்தைகளுக்குத் தரும் முக்கியத்துவம் இந்தக் கடிதங்களில் வெளிப்படுகின்றன. அந்த இனிய சகோதரிகளுடன்தான் குளிர்காலங்களைக் கழிக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள். கடிதங்களுக்குப் பதில் எழுதச் சோம்பலாக இருக்கிறது. நீண்ட கடிதங்கள் எழுத நேரமும் கிடைப்பதில்லை என்றெல்லாம் குறிப்பிடுபவர் இப்படியான சூழலில் வலிந்து எடுத்துக்கொண்ட ஓய்வில், நெர்பூதா (நர்மதா) நதிப்படுகையிலிருந்து இமய மலைச்சாரல் நோக்கிய பயண நேரத்தில் ஓய்வெடுத்தபடி இந்தியாவில் தனது அனுபவங்கள், செயல்பாடுகளைச் சகோதரிக்கு விவரித்து எழுதியிருக்கிறார்.
பிரதானமாகத் தன் சகோதரியையும் கூடவே குடும்ப உறுப்பினர்களையும் ஆச்சரியமும் ஆர்வமும் கொள்ளவைக்கும் நோக்கில்தான் இந்தியா பற்றிய விஷயங்களை எழுதியிருக்கிறார். என்றாலும் கொஞ்சம் முக்கியமான நோக்கமும் இதன் பின்னே உண்டு:
‘விவரணையிலும் நினைவுகூரல்களிலும் உரையாடல்களிலும் எதிலுமே நான் இதில் எதையும் கற்பனை கலந்து எழுதவே இல்லை. மற்றவர்கள் சொன்னதாக நான் குறிப்பிட்டிருப்பவை எல்லாம் உண்மையே. நானாகச் சொல்லியிருப்பவையும் அப்படியானவையே’ என்று அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
1844-ல் தன் படைப்பை வெளியிட்டபோது ‘தனது நாட்டினர் (ஆங்கிலேயர்) இந்தியர்களைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால் அவர்களுடைய வாழ்க்கை அந்த தேசத்தில்தான் வாழப்படவிருக்கிறது. அவர்களைப் பாதிக்கப்போகிறது. அந்த இந்தியர்கள் மீது இவர்களுக்கு இதமான எண்ணங்களை உருவாக்குவதே இந்த நூலின் நோக்கம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
படம்: W.H. Sleeman
(தொடரும்)