கிரேக்கர்களுக்கு அடுத்ததாக, இந்தியாவுக்குச் சென்ற சீனர்கள் இந்துக்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்தால், அவர்களும் இந்துக்களின் நேர்மை மற்றும் நாணயம் பற்றி ஒருமனதாகப் புகழ்ந்துதான் எழுதியிருக்கிறார்கள். மிகவும் புகழ் வாய்ந்த சீன பெளத்த புனித யாத்திரைப் பயணியான சுவான் சாங் (யுவான் சுவாங்) ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார்.
‘இந்தியர்கள் லகுவான மனநிலை கொண்டவர்கள் என்றாலும் நேர்கொண்ட பார்வை மற்றும் நாணயம் ஆகியவை அவர்களுடைய தனிச்சிறப்பான குணங்கள். வளங்களைப் பெருக்குவதை எடுத்துக்கொண்டால் அவர்கள் நியாயமற்ற எதையும் செய்வதில்லை. நீதியை எடுத்துக்கொண்டால் மிக மிக நெகிழ்வான தண்டனை முறையையே பின்பற்றுகிறார்கள். அவர்களுடைய நிர்வாக விஷயங்களைப் பார்த்தால் நேர்கொண்ட பார்வையே அவர்களின் விசேஷ அம்சமாகத் திகழ்கிறது’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவை ஆக்கிரமித்த முஹமதியர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தால், 11-ம் நூற்றாண்டில் இத்ரிஸி எழுதிய படைப்பில் இந்தியர்களைப் பற்றி சாராம்சமான தன் கருத்தாக அவர் சொல்பவை:
‘இந்தியர்கள் இயல்பிலேயே நீதியின் பக்கம் இருக்கிறார்கள். அதிலிருந்து அவர்களுடைய செயல்பாடுகள் ஒருபோதும் விலகுவதில்லை. அவர்களுடைய நன்னம்பிக்கை, நேர்மை, தமது கடமைகளுக்கு அவர்கள் காட்டும் அர்ப்பண உணர்வு ஆகியவற்றிலெல்லாம் அவர்கள் புகழ்பெற்று விளங்குகிறார்கள். உலகின் அத்தனை நாடுகளில் இருந்தும் இந்தியாவைத் தேடி மக்கள் பெருந்திரளாக வரும் அளவுக்கு அவர்கள் இந்த நற்குணங்களில் சிறந்தும் புகழுடனும் திகழ்கிறார்கள்’.
13-ம் நூற்றாண்டில் மார்க்கோ போலோ, அப்ரயமன் (பிராமணர்களைக் குறிக்கிறார் என்றே தோன்றுகிறது) பற்றிச் சொல்லும்போது ‘இவர்கள் வணிகர்கள் அல்ல. என்றாலும் மிகப் பெரிய வணிக – நிதிப் பரிமாற்றங்களுக்கு மன்னர்கள் இவர்களையே பயன்படுத்துகிறார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். தர்ம சாஸ்திரங்கள் தடை செய்த பல விஷயங்கள் தடையற்று நடக்கத் தொடங்கிய நெருக்கடி மிகுந்த காலம் என்று பிராமணர்கள் வருத்தத்துடன் குறிப்பிடும் காலகட்டம் இது. இப்படியான காலத்தில் இருக்கும் பிராமணர்கள் பற்றி மார்க்கோ போலோ சொல்கிறார்: ‘இந்த அப்ரயமன்கள் உலகில் இருப்பவர்களிலேயே ஆகச் சிறந்தவர்கள். மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள். இந்த உலகில் எது நடந்தாலும் எது கிடைத்தாலும் பொய்யே சொல்லமாட்டார்கள்’.
14-ம் நூற்றாண்டில் ஃப்ரெயர் ஜோர்டானஸ் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் வாழும் இந்தியர்கள் பற்றிச் சொல்லும்போது ‘வாக்கு சுத்தம் மிகுந்தவர்கள்; நீதி நெறிகளில் அதி சிறந்தவர்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கமாலுதீன் அப்தர் ரஸாக் சமர்கண்டி (1413-1482) காளிகட் மன்னர் மற்றும் விஜயநகர மன்னரின் (1440-1445) அவைக்கு துருக்கிய சுல்தானின் தூதராகச் சென்றபோது, தான் பார்த்தவற்றைப் பதிவு செய்திருக்கிறார். அவர் சொன்னவையெல்லாம் இந்தியாவில் வணிகர்களுக்கு இருந்த முழுமையான பாதுகாப்பு பற்றிய வாக்குமூல ஆவணமாகத் திகழ்கிறது. ‘கலிலாவும் திம்னாவும்’ என்ற பாரசீகப் படைப்பானது (பஞ்ச தந்திரக் கதைகள் போன்றவை) அறிவார்ந்தவர்களான இந்தியர்களிடமிருந்து இரவல் பெற்றதாக இருக்கும் என்று முதன் முதலில் சொன்னவர் இவரே.
பதினாறாம் நூற்றாண்டில் அக்பரின் அவையில் இருந்த அமைச்சர் அபு ஃபசல் தான் எழுதிய அய்னி அக்பரியில் சொல்லியிருப்பவை: ஹிந்துக்கள் மத நம்பிக்கை மிகுந்தவர்கள்; நற்குணங்கள் கொண்டவர்கள், நட்பார்ந்தவர்கள், உற்சாக மனநிலை கொண்டவர்கள், நீதியைப் பெரிதும் மதிப்பவர்கள் (நேசிப்பவர்கள்), உள்ளொடுங்கியிருப்பவர்கள், வணிகத்தில் தேர்ந்தவர்கள், சத்தியத்தைப் போற்றுபவர்கள், நன்றி மிகுந்தவர்கள், எல்லையற்ற விசுவாசம் கொண்டவர்கள். போர்க்களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஓடுவதென்பது இவர்களுக்கு அறவே தெரியாது’.
ஓரளவுக்கு நவீன காலகட்டங்களில் கூட முஹமதியர்களைவிட ஹிந்துக்கள் முஹமதியர்களுடனான அனைத்துவிதமான பரிமாற்றங்களிலும் மிகவும் நேர்மையாகவே நடந்துகொள்வதாக முஹமதியர்களே நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள்.
முஹமதியர்களால் பெரிதும் போற்றப்படும் வயது முதிர்ந்த மீர் சுலாமத் அலி, ‘ஒரு ஹிந்து ஒரு முஸ்லிமை எளிதில் தைரியமாக ஏமாற்றுவார். அப்படிச் செய்வது பாராட்டுக்குரியது என்றும் நினைப்பார். ஆனால் அவரது மதத்தைச் சேர்ந்த இன்னொருவரை அப்படி ஏமாற்றிவிடமாட்டார். முஹமதியர்களில் சுமார் 72 பிரிவுகள் இருக்கின்றன. இந்த 72 பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் உலகின் பிற மதத்தினரை மட்டுமல்ல; இந்த 72 பிரிவுகளில் இருக்கும் அனைவரையும் எளிதில் ஏமாற்றுவார்கள். தனது பிரிவுக்கு சமூக அந்தஸ்தில் அருகில் இருப்பவர்களைக் கூடுதல் உற்சாகத்துடன் ஏமாற்றுவார்கள்’ என்று கூறியதாக கர்னல் ஸ்லீமென் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுபோல் நான் பல்வேறு நபர்கள் சொல்லியிருப்பவற்றை மேற்கோள்காட்டிக் கொண்டே செல்லமுடியும். இந்தியாவுடன் தொடர்பில் வந்த இவர்கள் அனைவருமே நம்பகத்தன்மை, சத்திய வேட்கை இவையே இந்தியாவில் வசித்தவர்களின் பிரதான நற்குணமாக இருந்திருப்பதாகச் சொல்லியிருப்பதை நாம் பார்க்கமுடியும். இந்தியர்களிடம் பொய்மை இருந்ததாக ஒருவர் கூடக் குறிப்பிட்டிருக்கவில்லை. இப்படி அவர்கள் இந்தியர்களைப் புகழ்ந்து பேசியதற்கு நிச்சயம் அழுத்தமான காரணம் இருந்திருக்கும். ஏனென்றால் பொதுவாக அயல்நாடுகளில் பயணம் செய்பவர்கள், இன்றைய காலகட்டத்தில்கூட, அந்த நாடுகளில் இருப்பவர்கள் நேர்மையானவர்கள் என்று சொல்வதை நாம் பார்க்கவே முடிவதில்லை. ஃப்ரான்ஸில் பயணம் செய்த ஆங்கிலேயப் பயணிகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஃப்ரெஞ்சுக்காரர்களின் நேர்மை, நம்பகத்தன்மை பற்றி வெகு சொற்பமாகவே புகழ்ந்து பேசியிருப்பார்கள். இங்கிலாந்தினர் பற்றி ஃப்ரெஞ்சுக்காரர்கள் எழுதியிருப்பவையோ பெர்ஃபைட் அல்பியான் (சுய நலம், ஏமாற்று, நம்பிக்கை துரோகம் மிகுந்தவர்கள்) என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.
முன்னாளில் இந்தியாவுக்குச் சென்ற அயல் நாட்டுப் பயணிகள் அனைவருமே இப்படி இந்தியாவைப் புகழ்ந்து கூறியிருக்கும் நிலையில் இங்கிலாந்தில் இந்தியர்களைப் பற்றி, வெளிப்படையான நட்புணர்வு இல்லாத ஒரு பொதுக் கருத்தாக்கம் எப்படி உருவாகியிருக்கிறது என்ற கேள்வி உங்களுக்கு நிச்சயம் வரும். இந்தியர்களைச் சகித்துக் கொள்ளலாம்; அவர்களுக்கு மேட்டிமை குணத்துடன் ஏதேனும் உதவிகள் செய்யலாம் என்றுதான் சொல்லப்படுகின்றனவே தவிர அவர்களை நம்பகமானவர்களாக, சமமாக நடத்த வேண்டியவர்களாகச் சொல்வதே இல்லையே ஏன்? என்று நீங்கள் கேட்கக்கூடும்.
இதற்கான சில காரணங்களை நான் முன்பே கோடிகாட்டியிருக்கிறேன். கல்கத்தா, பம்பாய், மதராஸ் அல்லது இந்தியாவின் பிரதான நகரங்களில் மட்டுமே வசித்த ஐரோப்பியர்களால்தான் இந்தியாவைப் பற்றிய இப்படியான சித்திரம் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படியான நகரங்களில் வசிக்கும் இந்தியர்களிடம் இருக்கும் பாதகமான குண நலன்கள் எல்லாம் இந்திய ஒட்டு மொத்த மக்களின் உண்மையான பிரதிபலிப்பே அல்ல. நகரங்களில் வசிப்பவர்களுடைய மேட்டுக்குடிகளின் உள்ளார்ந்த குண நலன்களையுமே கூட நம்மவர்களால் சரியாகப் புரிந்துகொள்ளவும் முடிவதில்லை. அப்படியே அவர்களைப் பற்றி எவையேனும் அறியக் கிடைத்தால், அவற்றில் எவையெல்லாம் சரியானவை, கண்ணியமானவை, மரியாதைக்குரியவை என்று அவற்றை நம்முடைய அளவுகோல்களின்படி மதிப்பிடுவதும் மிகவும் சிரமமே. பெரும்பாலான நேரங்களில் இந்தியர்கள் செய்வதைத் தவறாகப் புரிந்துகொண்டிருப்போம். அல்லது மிகவும் விகாரமாகப் புரிந்துகொண்டிருப்போம்.
ஹிந்துக்களின் குண நலன்கள் பற்றி மாறுபட்ட விஷயங்களை, பல நேரங்களில் ஒன்றுக்கொன்று முரண்படும் விஷயங்களை, நாம் கேள்விப்படும்போது ஹிந்துக்களிடம் இருக்கும் நற்குணங்கள் தொடர்பாக நமக்கு ஏற்கெனவே இருக்கும் பிழையான எண்ணங்களினால் அவர்களுடைய குண நலன்கள் பற்றிய பாதகமான விஷயங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்போம். மனித இயல்பு அதுதானென்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
நான் இந்தியருக்கு அதிகம் சாதகமாகப் பேசுவதாகவும் ஹிந்துக்களின் குண நலன்கள் பற்றிச் சரியான தீர்மானத்தை எடுக்கமுடியாது என்பதை மிகைப்படுத்திச் சொல்வதாகவும் உங்களுக்குத் தோன்றலாம். உண்மை அது அல்ல. இந்தியக் குடிமையியல் சேவையில் சேரவிருக்கும் மதிப்புக்குரிய, அறிவார்ந்த உங்களிடம் இந்திய வரலாறு (ஹிஸ்டரி ஆஃப் இந்தியா) என்ற நூலை எழுதிய மவுண்ட் ஸ்டூவர்ட் எல்ஃபின்ஸ்டன் எழுதிய ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
‘இந்தியாவில் வசித்த ஆங்கிலேயர்களுக்கு உள்ளூர்வாசிகளான இந்தியர்களின் குண நலன்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே கிடைத்தன. இங்கிலாந்திலேயேகூட தமது சொந்த வர்க்கத்தினரைத் தாண்டி, மற்றவர்கள் பற்றி நமக்கு அதிகம் தெரிந்திருப்பதில்லை. மற்றவர் பற்றிப் பெரிதும் செய்தித்தாள், புத்தகங்கள் இவற்றைப் படித்தே தெரிந்துகொள்ளமுடியும். இந்தியாவில் இந்தியர்களைப் பற்றி அப்படியான படைப்புகள் எதுவும் கிடைப்பதில்லை. மதமும் சடங்கு சம்பிரதாயங்களும் அயல் நாட்டினரை உள்ளூர் மக்களுடன் நெருங்கிப் பழக விடுவதுமில்லை. இரு தரப்புக்கிடையிலான பரிமாற்றங்கள் மிகவும் குறைவே. வெளிப்படையாக, சுதந்தரமாகக் கருத்துப் பரிமாற்றங்களும் நடப்பதில்லை.
உள் நாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பற்றி நமக்கு எதுவுமே தெரியாது. அந்தப் பகுதிகளைப் பற்றிய வெறும் ஆவண, ஆய்வறிக்கைகளை மட்டுமே படித்திருப்போம். மக்களின் குண நலன்களை வெளிப்படுத்தும்படியான அல்லது புரிந்துகொள்ள உதவும் படியான தரவுகள் எவையும் அவற்றில் இருக்காது. வேறு மதத்தின் போதகர்கள், நீதிபதிகள், காவல் அதிகாரிகள், வருவாய் சுங்க அதிகாரிகள் ஏன் ராஜ தந்திரிகள் கூட ஒரு தேசத்தின் உயிர்த்துடிப்பான பெரும்பாலான பகுதிகளைப் பார்த்திருக்கவே மாட்டார்கள். அவர்களுடைய சொந்த விருப்பம் அல்லது சொந்த தேவை சார்ந்துதான் ஏதேனும் ஒரு பகுதி பற்றி கொஞ்சம் போல் தெரிந்துகொண்டிருப்பார்கள்.
நாம் எதைப் பார்க்கிறோமோ அதை நமது அளவுகோல்களின்படி மதிப்பிடுவோம். அவமானப்படுத்தப்படும்போது அழும் நபரை நாம் கண்ணியமாக சோகத்தையும் வலியையும் வெளிப்படுத்தத் தெரியாதவன் என்ற முடிவுக்கே வருவோம். தன்னைப் பொய்யன் என்று அழைக்க அனுமதிக்கும் ஒரு நபர் எந்தவித மலினத்துக்கும் அவமானப்படாதவராகவே இருப்பார் என்றும் முடிவுகட்டுகிறோம். நம் எழுத்தாளர்களுமேகூட காலம் மற்றும் இடத்தின் மாறுபாடுகளைப் புரிந்துகொள்ளாமல் குழப்பவும் செய்கிறார்கள். மராட்டியரையும் வங்காளியையும் ஒரே பிரிவினராகப் பார்க்கிறார்கள். மஹாபாரத நாயகர்கள் செய்த தவறுகளுக்கெல்லாம் இன்றைய தலைமுறையினரைப் பொறுப்பேற்கச் சொல்லிப் பழிக்கிறார்கள்.
பாதகமான குறிப்புகளை மறுதலிக்கும் வகையில் இன்னொன்றையும் சொல்ல முடியும். இந்தியாவில் அதிக காலம் வசித்தவர்களுக்கே இந்தியர்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கும். ஆனால், இது மனித இயல்புக்கும் வாழ்க்கைக்கும் தரவேண்டிய பாராட்டே அல்லாமல் அந்த நபர்களுக்கான பாராட்டு அல்ல. ஏனென்றால் இது உலகம் முழுவதுமுள்ளவர்களுக்கும் பொருந்தக்கூடியதுதான். இந்தியாவில் இருந்து ஓய்வு பெற்று வந்துவிட்டவர்கள் அனைவரும் விட்டு வந்த தேசத்தினர் பற்றி, மிகவும் நியாயமான முறையில் பாராட்டப்படும் தேசங்களில் வாழ்பவர்களையும் விடச் சிறந்தவர்களாகவே சொல்வதை நாம் பார்க்க முடிகிறது.
இருந்தும் ஹிந்துக்கள் பற்றிச் சொல்லப்படும் பாதகமான விஷயங்களை இங்கிலாந்தினர் உடனடியாக வெகு எளிதில் ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள். இதைவிட, நம்பமுடியாததாக எது இருக்கிறதென்றால் குடிமைப் பணியில் உயர் நிலையில் திறம்படச் செயல்பட்ட அதிகாரிகள், ராஜ தந்திரிகள் பலரும் இந்துக்களைப் பற்றி பலமுறை சாதகமான பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள்; என்றாலும் ஒரு சில விமர்சகர்கள் ஹிந்துக்களைப் பற்றி பாதகமாகச் சொன்னவையே இங்கிலாந்து மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கின்றன. இங்கும் பொதுப் புத்திக்கு மாற்றாகச் சொல்லப்பட்டிருக்கும் சில விஷயங்களை மேற்கோள் காட்டவிரும்புகிறேன்.
ஹிந்துக்கள் பற்றி வாரன் ஹேஸ்டிங்க்ஸ் பொதுவாகச் சொல்லியிருக்கும் ஒரு கூற்று: ‘ஹிந்துக்கள் இதமானவர்கள், நற்குணங்கள் கொண்டவர்கள். அவர்களுக்கு நாம் காட்டும் அன்புக்கு மிகவும் நன்றியுடன் இருப்பார்கள். உலகில் பிற எந்தப் பகுதியில் இருப்பவரைவிடவும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் குறைவாகக் கொண்டவர்கள். நம்பிக்கை, பாசம், சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படுதல் ஆகிய குணங்கள் கொண்டவர்கள்’.
பிஷப் ஹெபர் சொல்கிறார்: ‘ஹிந்துக்கள் வீரம் மிகுந்தவர்கள்; மரியாதை தெரிந்தவர்கள். புத்திசாலிகள். அறிவுத் தேடலும் மேம்பாட்டுச் சிந்தனைகளும் கொண்டவர்கள். போதைகளுக்கு அடிமையாகாதவர்கள். கடின உழைப்பு, பெற்றோருக்குக் கீழ்ப்படிதல், குழந்தைகள் மீது பாசம் கொண்டிருப்பது அவர்களுடைய குணம். பொதுவாகவே இதமும் பொறுமையும் மிகுந்தவர்கள். அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள். நான் பார்த்தவர்களிலேயே தமது தேவைகள் மற்றும் உணர்ச்சிகளுக்கு மிகுந்த அக்கறை கொடுப்பவர்கள் இவர்களே’.
எல்ஃபின்ஸ்டன் சொல்கிறார்: ‘நமது நகரங்களில் ஒழுக்கம் கெட்டுத் திரிபவர்கள் போல் ஹிந்துக்களில் எந்தப் பிரிவினரும் இல்லை. கிராமங்களில் வசிப்பவர்களெல்லாம் நட்பார்ந்தவர்கள்; குடும்பத்தினர் மேல் பாசம் மிகுந்தவர்கள். அண்டை அயலாருடன் அன்பாக இருப்பார்கள். அரசாங்கத்தைத் தவிர மற்ற அனைவரிடமும் அனைத்திலும் நேர்மையும் அர்ப்பண உணர்வும் கொண்டவர்கள். தக்கள் ஒருவகையில் தனி ராஜ்ஜியமாக வாழ்பவர்கள். கொள்ளையர்கள் எல்லாம் மிகவும் கொடூரமான கொலைகள், செயல்களைச் செய்யக்கூடியவர்கள். தக்கள், கொள்ளையர்கள் செய்பவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு பார்த்தாலும் இந்தியாவில் குற்றச் செயல்கள் எல்லாம் இங்கிலாந்தில் இருப்பதைவிட மிகவும் குறைவு.
ஹிந்துக்கள் மிதமான, இதமான மனிதர்கள். ஆசியாவில் இருக்கும் பிற நாட்டினரைவிடக் குற்றவாளிகள் மீது மிகுந்த கருணை கொண்டவர்கள். மது, மாது போன்றவற்றுக்கு அடிமையாகாமல் இருந்ததென்பது அவர்களுக்கு மிகப் பெரிதும் சாதகமான விஷயமாக இருந்திருக்கிறது. நமது சுய கெளரவம் போலவே குண நலன்களில் தூய்மை மிகுந்தவர்கள்’.
இப்படிச் சொன்னபோதிலும் இந்தியர்களின் உள்ளார்ந்த குறைபாடுகளை எல்ஃபின்ஸ்டன் மிகவும் கடுமையாகக் கண்டித்துமிருக்கிறார். ‘இன்று இந்தியர்களின் நம்பகத்தன்மை மிகவும் குறைந்துவிட்டது. அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பவர்களிடையே இந்த விஷயம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் இப்படியானவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. நில வருவாய் விஷயத்தில் கிராமத்தில் கடைக்கோடியில் இருப்பவர் கூட அதிகாரவர்க்கத்தை ஏய்ப்பவராகவே இருக்கிறார்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
சர் ஜான் மால்கம் சொல்கிறார்: ‘மொழியைப் புரிந்துகொள்ளும் திறமை இருந்தாலோ மிகவும் பொறுமையான முறையில் ஒரு விஷயத்தை விளக்கிச் சொன்னாலோ சரியான விளைவுகளே ஏற்படும் என்பதே நான் பார்த்த அளவில் பெரும்பாலும் நடந்திருக்கின்றன. இதற்கு மாறானதை நான் பார்த்ததே இல்லை. யாரேனும் சொன்ன விஷயங்கள் பொய்யானதாகத் தெரியவந்தால் முன்னால் சொன்னவை பயத்தினாலோ தவறான புரிதலினாலோதான் அப்படி நடந்திருக்கும். நமது (பிரிட்டிஷ்) இந்தியக் குடிகள் பொய் சொல்லும் தீய வழக்கத்தில் இருந்து பெருமளவுக்கு விலகி நிற்கிறார்கள். உலகின் பிற நாடுகளில் பொய் சொல்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சரி பாதியாக இருக்கும். இந்தியர்கள் உண்மைக்கு அடிமைப்பட்டவர்கள்’.
சர் தாமஸ் மன்றோ இதையும்விட அழுத்தமாகச் சொல்கிறார்: ‘திறமையான விவசாய நடைமுறை, ஒப்புமை இல்லாத உற்பத்தித் திறமை, தேவைக்கும் ஆசைக்குமான அனைத்தையும் உற்பத்தி செய்யும் திறமை, அனைத்துக் கிராமங்களிலும் எண்ணும், எழுத்தும், வாசிப்பும் கற்றுத் தரும் பள்ளிகள், பொதுவான விருந்தோம்பல், பரஸ்பர உதவிகள், சேவைகள், எல்லாவற்றுக்கும் மேலாகப் பெண்களை மதிப்பு மரியாதையுடன் நடத்துதல், வசீகரம் இவையெல்லாம் நாகரிகமான சமூகத்தின் அடையாளம் என்று வைத்துக் கொண்டு பார்த்தால் ஐரோப்பாவில் இருக்கும் எந்தவொரு தேசத்துக்கும் ஹிந்துக்கள் இந்த விஷயங்களில் சளைத்தவர்கள் அல்ல. இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே நாகரிகப் பரிமாற்றம் நடக்குமென்றால் இந்தியாவைவிட இங்கிலாந்தே இறக்குமதி மூலம் கூடுதல் நன்மையை அடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’.
மதராஸ் பிரசிடென்ஸியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு குழந்தை பள்ளிகளில் கல்வி பெற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இது மிகவும் குறைவான சதவிகிதம் தான். என்றாலும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் மிகச் சமீப காலம் வரையிலும் இருந்த கல்விப் பரவலைவிட நிச்சயம் இது அதிகம்தான் (எல்ஃபின்ஸ்டன், ஹிஸ்டரி ஆஃப் இந்தியா, பக் 205).
வங்காளத்தில் 80,000 இந்தியப் பள்ளிகள் இருந்தன. ஆனால் பள்ளிகளின் கல்வித் தரம் மிகவும் சுமாராகவே இருந்தது. 1835-ல் பிரிட்டிஷ் இந்திய அறிக்கையின்படிப் பார்த்தால் சுமார் 400 பேருக்கு ஒரு கிராமப்பள்ளி இருந்திருக்கிறது (மிஷனரி இண்டலிஜென்சர், தொகுதி 9; பக் 183-193).
லாட்லோ, ‘பழமை மாறாமல் இருக்கும் இந்து கிராமங்களில் இருக்கும் குழந்தைகள் எல்லாருக்கும் எழுத, படிக்கத் தெரிந்திருந்தது. கணிதமும் தெரிந்திருந்தது. ஆனால் வங்காளத்தில் கிராம அமைப்பை நாம் முற்றாக அழித்ததைத் தொடர்ந்து கிராமப் பள்ளிகள் எல்லாம் மறைந்துவிட்டன’ என்று பிரிட்டிஷ் இந்தியா, முதல் பாக, பக் 62-ல் குறிப்பிட்டிருக்கிறார்.
(தொடரும்)