Skip to content
Home » மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #16 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 1

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #16 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 1

உயிரில்லையா சமஸ்கிருத மொழிக்கு?

இந்தியா நமக்கு மிகவும் அந்நியமான தேசமாக இருக்கிறது; அப்படியேதான் தொடர்ந்து இருக்கவும் வேண்டும் என்ற பிழையான முன் அனுமானங்களைப் போக்குவதே என் முதல் விரிவுரையின் நோக்கமாக இருந்தது. இந்தியாவில் பணிபுரியவும் வசிக்கவும் நேரும் ஐரோப்பியர்களுக்கு மிகவும் நெருக்கடி தருவதாக இந்தியா இருக்கும். இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் என்னவிதமான உயிரோட்டம் நிறைந்த சிந்தனைப் போக்குகள், முன்னேற்றங்கள் எல்லாம் இருக்கின்றனவோ அவற்றிலிருந்து அந்த தேசம் மிகவும் அந்நியப்பட்டு, விலகி நிற்கிறது என்ற முன் அனுமானங்களைப் போக்குவதே என் முதல் விரிவுரையின் நோக்கமாக இருந்தது.

இரண்டாவது விரிவுரையானது, தமது வாழ்க்கையின் மிகச் சிறந்த வருடங்களை இந்தியாவில் குடிமையியல் நிர்வாகப் பணியில் ஈடுபட்டுக் கழிக்கவிருக்கும் அதிகாரிகள் மனதில் இந்தியா தொடர்பாகப் பதிந்திருக்கும் பிழையான முன் அனுமானங்களைக் களைவதை இலக்காகக் கொண்டிருந்தது. இந்தியர்கள் ஒழுக்கச் சீர்கேடு நிரம்பியவர்கள், குறிப்பாக உண்மையாக இருப்பது, உண்மையைப் பேசுவது ஆகியவற்றில் துளியும் அக்கறை இல்லாதவர்கள்; அவர்கள் எப்போதும் நமக்கு அந்நியமானவர்களாகவே இருந்தாகவேண்டும். அவர்களுடன் எந்தவொரு நட்புறவோ சக ஜீவ உணர்வோ கொள்வதென்ற பேச்சுக்கே இடமில்லை என்ற எண்ணங்களைக் களைவதை இலக்காகக் கொண்டிருந்தது.

மூன்றாவது பிழையான முன் அனுமானம் பற்றி இந்த விரிவுரையில் விவரிக்கப் போகிறேன். இந்திய இலக்கியம், குறிப்பாக சமஸ்கிருத செவ்வியல் இலக்கியம், ஓர் ஆய்வாளருக்கு அல்லது பழங்காலவியல் நிபுணருக்கு எப்படியான பயன்தரக்கூடியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இளைய தலைமுறையினருக்குப் பிற எந்த நாட்டு இலக்கியப் படைப்புகள் தரமுடியாத எந்தவொரு சிறிய பாடத்தைக்கூடக் கற்றுத் தரும் தன்மை கொண்டது அல்ல. ஹிந்துஸ்தானி அல்லது தமிழ் மொழி போன்றவற்றைப் பேசவும் புரிந்துகொள்ளவும் முடிந்தால் போதும். அன்றாடக் கடமைகள், குடிமக்கள் (இந்தியக் குடிமக்கள்) ஆகியோரை நிர்வகிக்க வேண்டிய பணிகள்தான் மிகவும் முக்கியம்.. எனவே அதற்கு ஐரோப்பியக் குடிமையியல் படிப்பில் தேர்ச்சி பெற்றுச் செல்லும் நபர்கள் இந்த உலக நடைமுறைகள், தமது வேலை ஆகியவற்றில்தான் அதிகக் கவனம் செலுத்தவேண்டும். மாறாகப் பழங்கால மதங்கள், புராணங்கள், தத்துவங்கள் ஆகியவற்றில் கவனத்தைச் செலுத்தினால் பேரபாயமாகிவிடும் என்று சொல்கிறார்கள்.

நான் இதற்கு முற்றிலும் எதிரான கருத்தை முன்வைக்கிறேன். இந்தியாவில் பணி புரியவும் வசிக்கவும் விரும்பும் ஒவ்வொரு இளைஞரிடமும் உங்களுக்கும் உங்களால் மற்றவர்களுக்கும் நன்மைகள் விளையவேண்டுமென்றால் கட்டாயம் சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளுங்கள். அதுவும் மிகவும் தீவிரமாக நன்றாகக் கற்றுக் கொள்ளுங்கள் என்றே ஆலோசனை சொல்ல விரும்புகிறேன்.

இன்றைய காலகட்டத்தில் சமஸ்கிருதம் படிப்பதால் என்ன பயன்? அது இறந்துவிட்ட மொழி அல்லவா? இந்துக்களே தமது பழங்கால இலக்கியம் குறித்து வெட்கப்படத்தானே செய்கிறார்கள். அவர்கள் இன்று ஆங்கிலம்தானே ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறார்கள். இந்தியாவின் பழங்காலப் புலவர்கள், தத்துவ ஞானிகள் ஆகியோரைவிட ஜான் லாக், ஹ்யூம், மில் ஆகியோரின் படைப்புகளைத்தானே அதிகம் விரும்பிப் படிக்கிறார்கள் என்றெல்லாம் கேட்பீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும்.

ஒருவகையில் சமஸ்கிருதம் உயிரிழந்த மொழிதான். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அது இறந்துவிட்டது என்றே நானும் கருதுகிறேன். கி.மு. 500 வாக்கில் புத்தர், மக்களின் பேச்சு மொழியில் தமது போதனைகளைப் பரப்பும்படி தன் சீடர்களுக்கு வழிகாட்டினார். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மன்னர் அசோகர், தனது அரசாணைகளை வெளியிட்ட போது மக்கள் வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் முடியும்படியான வகையில் பல்வேறு மொழிகளில் அதை வெளியிட்டார். வடக்கில் காபூல் தொடங்கி தெற்கில் பாலாபி வரையிலும் கங்கை, யமுனை பாயும் வழித்தடங்கள், அலஹாபாத் பாட்னா மற்றும் ஒரிஸ்ஸா வரையான பகுதிகளில் பேசப்படும் மொழிகளில் அவை வெளியிடப்பட்டிருந்தன.

லத்தீன் மொழியில் இருந்து இத்தாலிய மொழி கிளை பிரிந்து வந்ததுபோல் இந்த இந்தியப் பகுதிகளின் பேச்சு மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து கிளைபிரிந்து வந்திருந்தன. எனவே கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வாக்கில், அதற்கு முன்பாக என்று சொல்லமுடியாவிட்டாலும், சமஸ்கிருதம் பெருமளவுக்குப் பேச்சு வழக்கில் இருந்து அகன்றுவிட்டிருக்கும் என்ற முடிவுக்கு நிச்சயம் வரமுடியும்.

புத்தரின் காலகட்டத்தில்கூட பிறப்பால் பிராமணராக இருந்த, அவருடைய சீடர்கள் சிலர், மக்கள் ஒவ்வொருவரும் புத்தருடைய போதனைகளைத் தத்தமது பேச்சு மொழியில் (நிருதியில்) வெவ்வேறுவிதமாக உச்சரித்துத் திரித்துவிடுகிறார்கள் என்று புகார் தெரிவித்திருக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் புத்தரின் போதனைகளை மொழிபெயர்த்துப் பாதுகாக்க விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார்கள். புத்தரோ அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, ஒவ்வொருவரும் அவர்களுடைய (தாய்) மொழியிலேயே தமது போதனைகளைப் படித்துப் புரிந்துகொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்று குலவாகா நூலில் சுவாரசியமான குறிப்பு ஒன்று இடம்பெற்றிருக்கிறது.

பெளத்தக் கையேடு (மேனுவல் ஆஃப் புத்திஸம்) என்ற தனது நூலில் பக்:186-ல் ஹார்டி, ‘புத்தர் தனது முதல் சொற்பொழிவை ஆற்றியபோது மகதி மொழியில் பேசினார். ஆனால் கூடியிருந்த மக்கள் ஒவ்வொருவரும் புத்தர் தாம் ஒருவருக்காகத் தமது மொழியில் பேசுவதுபோல் உணர்ந்ததாக’ குறிப்பிட்டிருக்கிறார்.

அப்படியாக கி.மு.மூன்றாம் நூற்றாண்டு வாக்கிலேயே சமஸ்கிருத மொழி பெருந்திரள் மக்கள் கூட்டத்தின் பேச்சு வழக்கிலிருந்து அகன்று விட்டதாகத் தெரியவருகிறது.

பல்வேறு சமூக மாற்றங்கள், மதச் சீர்திருத்தங்கள், அந்நியப் படையெடுப்புகள் என நடந்திருக்கும் நிலையிலும் இந்தியாவில் கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையிலான மகத்தான தொடர்ச்சி இருந்துவருகிறது. இன்றும் இந்தப் பரந்து விரிந்த தேசம் முழுவதிலும் பேசப்பட்டுவரும் (புரிந்துகொள்ளப்பட்டுவரும்) ஒரே மொழியாக சமஸ்கிருதமே இருந்துவருகிறது.

பெளத்த அரசுகள் தமது அரசாணைகளைப் பல்வேறு வட்டார மொழிகளில் வெளியிட்டபோதிலும் கல்வெட்டுகள், தனிப்பட்ட அதிகாரபூர்வ ஆவணங்கள் எல்லாம் கடந்த 2000 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திலேயே இடம்பெற்றும் வந்திருக்கின்றன. பெளத்தர்கள், ஜைனர்களின் புனித நூல்கள் வட்டார மொழிகளில் இருந்தபோதிலும் இந்தியாவின் இலக்கியம் பாணினிய சமஸ்கிருதத்தில் எழுதப்படுவது குறையவே இல்லை. காளிதாஸருடைய மற்றும் சிலருடைய படைப்புகளில் பெண்கள் மற்றும் தாழ் நிலை கதாபாத்திரங்கள் பிராகிருத மொழி பேசுவதாக இடம்பெற்றிருக்கின்றன என்றாலும் இவற்றுக்கெல்லாம் எந்தவொரு சரித்திர முக்கியத்துவம் இல்லை.

இன்றும் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான ஆங்கிலேய ஆட்சியும் ஆங்கிலக் கல்வியும் இந்தியாவில் அறிமுகமான பின்னரும் தாந்தேயின் காலத்தில் ஐரோப்பாவில் எத்தனை பேருக்கு லத்தீன் மொழி தெரிந்திருந்ததோ அதைவிட இந்தியாவில் இன்றும் சமஸ்கிருதம் பரவலாகப் புரிந்துகொள்ளப்படுகிறது என்றே நம்புகிறேன்.

இந்தியாவிலிருந்து கல்வி அறிவு மிகுந்த நபர்கள் எனக்கு ஏதேனும் கடிதங்கள் எழுதுவதாக இருந்தால் சமஸ்கிருதத்திலேயே எழுதி அனுப்புகிறார்கள். சட்டம், மதம் தொடர்பாகச் சிக்கலான கேள்விகள், வாதங்கள் ஏதேனும் எழும்போது அது தொடர்பான விளக்கங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் எல்லாம் சமஸ்கிருத மொழியிலேயே அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. வட்டார மொழிகளைவிட சமஸ்கிருதத்துக்கு முன்னுரிமை தருபவர்களை மட்டுமே சந்தாதாரராகக் கொண்ட இதழ்கள், பத்திரிகைகள் இப்போதும் சமஸ்கிருதத்தில் வெளியாகிவருகின்றன. பனாரஸிலிருந்து ‘பண்டிட்’ என்ற இதழ் வெளியாகிறது. பழங்காலச் செவ்வியல் படைப்புகள் மட்டுமல்ல; நவீன கால விஷயங்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள், இங்கிலாந்தில் வெளியாகும் புத்தகங்களின் விமர்சனங்கள், சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசும் கட்டுரைகள் எல்லாம் அந்த இதழில் சமஸ்கிருதத்திலேயே வெளியாகின்றன.

ப்ரத்னா காம்ர நந்தினி – பழம் பெருமையை நேசிப்பவர்களின் மகிழ்ச்சி – என பனாரஸில் இருந்து வெளியாகும் செய்தித்தாளில் ஏராளமான மதிக்கத் தகுந்த படைப்புகள் தொடர்ச்சியாக வெளியாகின்றன.

வித்யோதயா – ஞானத்தின் உதயம் – என்ற, கல்கத்தாவில் இருந்து வெளிவரும் சமஸ்கிருதப் பத்திரிகையிலும் சில நேரங்களில் நல்ல படைப்புகள் வெளியாவதுண்டு. இன்னும் பல இதுபோல் இருக்கின்றன. அவை பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை.

பம்பாயிலிருந்து வரும் இதழில் எம்.மோரேஷ்வர் கந்தே எழுதும் ‘ஷட் தர்சன சிந்தனிகா – இந்திய தத்துவ தரிசனங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரை மாதாந்தர தொடர் கட்டுரையாக வெளியாகிறது. அதில் பழங்காலத் தத்துவ தரிசனங்கள், அவற்றின் மூல நூல்கள், பத உரைகள், விளக்க உரைகள் எல்லாம் சமஸ்கிருதத்தில் வெளியாகின்றன. இவற்றுடன் மராத்திய, ஆங்கில மொழிபெயர்ப்புகளும் சேர்ந்து வெளியாகின்றன.

சமஸ்கிருத நூல்களிலேயே மிகவும் பழமையான ரிக் வேதத்தின் இரண்டு புதிய பதிப்புகள் மாத இதழில் வெளியாகின்றன. சுதந்தர சிந்தனை கொண்ட அமைப்பு (கட்சி) என்று அழைக்க முடிந்த ஒன்றின் மூலம் பம்பாயிலிருந்து ஒரு பதிப்பு வெளியாகிறது. இன்னொரு பதிப்பு, பிரயாக் (அலஹாபாத்) பகுதியில் இருந்து இந்திய மரபான தத்துவ தரிசனத்தின் பிரதிநிதியான தயானந்த சரஸ்வதி மூலம் வெளியாகிறது. பம்பாயிலிருந்து வெளியாகும் பதிப்பில் சமஸ்கிருதத்தில் மூல ஸ்லோகங்கள், மராத்திய, ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளியாகின்றன. இரண்டாவது பதிப்பில் தயானந்த சரஸ்வதி, மூல உரைகளின் விளக்க உரையை சமஸ்கிருதத்தில் தருகிறார். கூடவே பிராந்திய மொழி விளக்கமும் இடம்பெறுகின்றன. இந்த மாத இதழ்கள் முழுக்கவும் சந்தாதாரர்களிடமிருந்து கிடைக்கும் தொகை கொண்டே வெளியாகின்றன. கணிசமான இந்திய சந்தாதாரர் பட்டியலைக் கொண்டதாக இவை இருக்கின்றன.

பேசு மொழிகளாக இருக்கும் வங்காளி, மராத்தி, ஹிந்தி ஆகியவற்றில் பல இதழ்கள் வெளியாகின்றன. ஆனால், அவற்றில் சமஸ்கிருதப் படைப்புகளும் வெளியாகின்றன. ‘ஹரிஷ்கந்தரகந்ந்திரிகா’ பனாரஸிலிருந்தும் ‘தத்வபோதினி’ கல்கத்தாவிலிருந்தும் வெளியாகின்றன. இதுபோல் வேறு சில இதழ்களும் நாடு முழுவதும் வெளியாகின்றன.

கேசவ் சந்திர சென்னின் கட்சி சார்பில் வெளியாகும் ‘லிபரல்’ இதழில் நதேயா பகுதியில் இருந்து வந்த வேத பண்டிதர் பிரம்மவர்த்த சமாத்யாயிக்கும் பம்பாய் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற காசிநாத திரியம்பக் தேலன்குக்கும் இடையிலான உரையாடல் இடம்பெற்றிருக்கிறது. ஒருவர் இந்தியாவின் மேற்குக்கோடியில் இருந்து வந்தவர். இன்னொருவர் கிழக்குப் பகுதியிலிருந்து வந்தவர். எனினும் இருவரும் சரளமாக சமஸ்கிருதத்தில் உரையாடுகிறார்கள்.

ஏராளமான சமஸ்கிருத நூல்கள் இந்தியாவில் அச்சிடப்படுகின்றன. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. ஒரு வருடம் கழித்து அந்த நூல்களின் பிரதிகள் வேண்டும் என்று இங்கிலாந்தில் இருந்து நாம் கேட்டு அனுப்பினால், அவையெல்லாம் இந்தியாவிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன என்ற செய்தியே நமக்குக் கிடைக்கின்றன. இங்கிலாந்தில் வெளியாகும் ஆங்கிலோ சாக்ஸன் படைப்புகள், இத்தாலியில் வெளியாகும் லத்தீன் படைப்புகள் எல்லாம் இங்கு அப்படி விற்றுத் தீர்ந்துவிடுவதில்லை.

அதுமட்டுமல்லாமல் பழம் பெரும் காப்பியங்களான இராமாயண, மஹாபாரதமெல்லாம் கோவில்களில் தினமும் பாராயணம் செய்யப்படுகின்றன. கிராமங்களில் பெருந்திரளான மக்கள் மத்தியில் கதாகா (கதாகாலக்ஷேபங்கள்) நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. காப்பியங்களில் இடம்பெறும் சமஸ்கிருதப் பாடல்களை உணர்ச்சிபூர்வமாக ஒருவர் சொல்லும்போது உதாரணமாக, காட்டுக்கு அனுப்பப்படும் நிகழ்ச்சியை விவரிக்கும்போது பார்வையாளர்கள் கண்ணீர் சிந்துவார்கள். ராஜ்ஜியத்துக்கு வெற்றியுடன் திரும்புவதைக் கேட்கும்போது உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்வார்கள். பட்டாபிஷேகம் பற்றிய நிகழ்ச்சிகள் விவரிக்கப்படும் நாளில் ஊரே விளக்குகளும் தோரணங்களுமாகக் கொண்டாட்டமாகத் திகழும்.

முழு மஹாபாரதப் புராணக் கதை சொல்லும் நிகழ்ச்சிகள் 90 நாட்களுக்கு நடக்கும். சில இடங்களில் ஆறு மாதங்களுக்கு இந்த நிகழ்ச்சி நீடிக்கும். புராணப் பாடல்களைக் கதைசொல்லி, வட்டார மொழியில் விளக்கிச் சொன்னால்தான் பார்வையாளர் பலருக்கும் புரியும் என்பது உண்மையே. ஆனால் கூட்டத்தில் இருக்கும் சிலர் வியாசரும் வால்மீகியும் எழுதிய மூல பாடல்களை எந்த விளக்கமும் இன்றி புரிந்துகொள்ள முடிந்திருப்பார்கள். அல்லது புரிந்துகொண்டதாக நினைத்துக்கொள்வார்கள்.

வேதப் படிப்புகளுக்கு எந்தவொரு சாதகமான சூழலும் இல்லாத இன்றும்கூட ரிக் வேதம் முழுவதையும் மனப்பாடமாகச் சொல்ல முடிந்த பிராமணர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ரிக் வேதம் மட்டுமல்ல; பல சமஸ்கிருத ஸ்லோகங்கள், நூல்களையும் மனப்பாடமாகத் தெரிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

சமஸ்கிருதம் பெருமளவுக்குப் பேச்சுவழக்கில் இல்லாத நிலையிலும் இந்தியாவின் அனைத்து ஆரிய, திராவிட மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து தமது ஜீவனையும் ஆத்மாவையும் பெற்றுச் செயல்படுகின்றன. சமஸ்கிருத அறிவு கொஞ்சம் இருந்தால் கூடப் போதும் பிற இந்தியப் பிராந்திய மொழிகளை கற்றுக் கொள்வதற்குப் பெரிதும் உதவும். நானும், என்னைவிட நிறைய விஷயம் தெரிந்தவர்களும் இது பற்றி நிறையவே பேசியிருக்கிறோம். எனவே அதை நான் மீண்டும் இங்கு சொல்ல விரும்பவில்லை. சமஸ்கிருத இலக்கணம் தெரிந்த ஒருவர் நான் சொல்வதை நன்கு புரிந்துகொள்வார். அவருடைய மொழி வங்காளி, ஹிந்துஸ்தானி அல்லது ஏன் தமிழாகக் கூட இருக்கலாம். அவருக்குமேகூட இந்த உண்மை நன்கு புரிந்திருக்கும்.

செவ்வியல் மொழி ஆய்வாளருக்கு நான் ஒரே ஒரு விஷயத்தைத்தான் சொல்ல விரும்புகிறேன். சமஸ்கிருதமும் ஹிந்துஸ்தானி மொழியும் தெரிந்த ஒரு குடிமைப் பணி அதிகாரியும் ஹிந்துஸ்தானி மொழி மட்டுமே தெரிந்த அதிகாரியும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த இருவரில் இந்தியா பற்றியும் இந்தியர்கள் பற்றியும் யாருக்கு அறிவார்ந்த புரிதல் முதலாமவருக்குத்தான் இருக்கும். லத்தீன் மொழி தெரிந்து இத்தாலிக்குச் செல்பவருக்கும் குக் அன் கோ நிறுவனம் மூலம் ரோமாபுரிக்குச் சுற்றுலா சென்று வருபவருக்கும் இடையிலான வித்தியாசம்தான் அது.

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures
பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *