துரானியப் படையெடுப்புக்கு முன்
சமஸ்கிருதம் இறந்துவிட்டது அல்லது அதன் இலக்கியம் செயற்கையானது என்ற விமர்சனத்தைக் கொஞ்சம் கூடுதலாக அலசிப் பார்ப்போம். சமஸ்கிருத இலக்கியத்தில் நிஜ வாழ்க்கை என்பதோ உயிர்மை அம்சம் என்பதோ எதுவும் கிடையாது. அது வெறும் பண்டிதக் குவியல் மாத்திரமே. எனவே அது நமக்கு எதையும் கற்றுத் தர முடியாது. குறிப்பாக ஹிந்து மனம் தொடர்பான வரலாற்று வளர்ச்சி தொடர்பாக எதையும் அதிலிருந்து தெரிந்துகொள்ளமுடியாது என்ற சிலர் சொல்கிறார்கள். வேறு சிலரோ நூறாண்டுக்கு மேலான ஆங்கிலேய ஆட்சிக்குப் பின்னர் இந்தியாவில் சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளும் ஆர்வம் யாருக்கும் இல்லை. இன்று இந்துக்களின் மனதில் என்னென்ன சிந்தனைகள் ஓடுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளவும் அதன் அடிப்படையில் நன்மையோ தீமையோ விளையும் வகையில் செல்வாக்கு செலுத்தவோ எந்த விதத்திலும் சமஸ்கிருதப் படைப்புகள் நமக்குப் பயன்படப் போவதே இல்லை என்கிறார்கள்.
உண்மைத் தரவுகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.
சமஸ்கிருத இலக்கியம், சமஸ்கிருதப் படைப்புகள் என்பது மிகவும் பரந்து விரிந்த பொதுப்படையான பதம். இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் வேதங்கள் கி.மு. 1500 வாக்கில் எழுதப்பட்டவையென்றால், இன்றும் கணிசமான படைப்புகள் அந்த மொழியில் எழுதப்பட்டுவருகின்றன என்றால் சுமார் 3400 ஆண்டு காலம் விரிந்து வியாபித்து இருக்கும் படைப்புகள் நம் முன் இருக்கின்றன என்று அர்த்தம். சீன இலக்கியங்கள் தவிர்த்து ஒட்டுமொத்த உலகிலும் சமஸ்கிருதம் போன்ற மரபு வேறு எங்குமே இல்லை.
சமஸ்கிருத இலக்கியத்தின் விரிவு மற்றும் வகைமைகள் பற்றி ஒருவருக்குச் சொல்லிப் புரிய வைப்பதே மிக மிகக் கடினம். இன்று கையெழுத்துப் பிரதிகளில் ஓலைச்சுவடிகளில் இருக்கும் விளக்கப்படாத பொக்கிஷங்கள் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தெரிந்து கொண்டு வருகிறோம். முற்காலத்தில் இருந்த ஏராளமான படைப்புகளின் பெயர் மட்டுமே நமக்குத் தெரிய வந்திருக்கிறது. அவையெல்லாம் கடந்த மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முந்தைய படைப்பாளர்களாலும்கூடக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
பிந்தைய கால எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டு, நூலகங்களில் அதன் பிரதிகள் காணக் கிடைக்காத சமஸ்கிருதப் புத்தகங்களின் பட்டியல் ஒன்றை இளம் ஆய்வாளர் ஒருவர் தொகுத்தாரென்றால் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
சமீபகாலத்தில் பிரிட்டிஷ் இந்திய அரசு இந்திய சமஸ்கிருதப் பண்டிதர்கள் மற்றும் ஐரோப்பிய அறிஞர்கள் பலரை சமஸ்கிருத மூலப் படைப்புகள், தொகுப்புகள் இருக்கும் இடங்களுக்கு அனுப்பி அனைத்து நூல்களையும் பட்டியலிடும்படி கேட்டுக்கொண்டிருக்கிறது. அப்படியான சில பட்டியல்கள் வெளியிடப்பட்டும் இருக்கின்றன. அதன் அடிப்படையில் பார்த்தால் கையெழுத்துப் பிரதிகளாக, சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனிப் படைப்புகள் சமஸ்கிருதத்தில் இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. கிரேக்கம், இத்தாலி ஆகிய இரண்டின் ஒட்டுமொத்தச் செவ்வியல் படைப்புகளை ஒன்று சேர்த்தாலும் இந்த அளவுக்கு வராது. அவற்றில் பெரும்பாலானவை பொருட்படுத்தத் தகுந்தவை அல்ல என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்றைய காலகட்டத்தில்கூட மிகவும் புகழ் வாய்ந்த தத்துவவாதிகளின் படைப்புகளே பொருட்படுத்தத் தகுந்தவை அல்ல என்று சொல்லப்படுவதை நாம் பார்க்க முடிகிறது.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறு முழுவதிலும் 3000-4000 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு மிகப் பெரிய நெடுஞ்சாலை, சரியாகச் சொல்வதென்றால், மிகப் பிரம்மாண்டமான மலைப்பாதை இலக்கிய வெளியில் இருந்துவருகிறது. சமவெளிப் பகுதியின் கூச்சல் குழப்பங்களிலிருந்து அது விலகி, தனித்து இருந்திருக்கக்கூடும். அன்றாடப் பிரச்னைகளில் உழலும் லட்சக்கணக்கான மனிதர்களின் கண் பார்வைக்கு எட்டாததாக அந்தப் பாதை இருந்திருக்கக்கூடும். தனித்துப் பயணம் செய்த நாடோடிகளின் கால்தடம் மட்டுமே அதில் பதிந்து இருக்கக்கூடும். ஆனால், மனித இனம் தொடர்பான வரலாற்று ஆசிரியர் ஒருவருக்கு, மனித மனங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆராயும் ஒரு மாணவருக்கு, இந்தத் தனித்த காலடித்தடங்கள் எல்லாமே இந்தியா தொடர்பான உண்மையான, துல்லியமான, அழுத்தமான தடயங்களே.
எந்தவித மன மயக்கமும் இங்கு கொள்ளவேண்டாம். உலகின் உண்மையான வரலாறு என்பது ஒரு சிலரின் வரலாறாகவே எப்போதும் இருக்கும். எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தையே இமயமலையின் உயரம் என்று நாம் எடுத்துக்கொள்வது போல் இந்தியாவைப் பற்றி மதிப்பிடும்போது, வேதகாலக் கவிஞர்கள், உபநிடத ரிஷிகள், வேதாந்த சாக்கிய தத்துவங்களை நிறுவியவர்கள், அதி பழங்கால நீதி சாஸ்திர – சட்ட புத்தகங்களை எழுதியவர்கள் ஆகியவர்களைக் கொண்டே மதிப்பிட வேண்டும். மந்தமான அன்றாட வாழ்க்கையிலிருந்து ஓர் அடி கூட மேலே எடுத்து வைத்திராத, பிறந்த கிராமத்திலேயே வாழ்ந்து மடிந்த கோடிக்கணக்கான சாதாரண கிராமத்தினரைக் கொண்டு மதிப்பிடக்கூடாது.
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு சமஸ்கிருதம் இறந்த மொழியே. அவர்களைப் பொறுத்தமட்டில் அப்படி ஒன்று இருக்கவே இல்லை என்பது உண்மையே. ஆனால் பழம் பெரும் உலகின் எல்லா இலக்கியப் படைப்புகளுக்கும் உண்மை நிலை அதுவே.
இன்னும் ஒரு படி மேலே சென்று கிரேக்க ரோமாபுரி இலக்கியங்கள் அந்த தேசத்தில் எந்த அளவுக்குப் பரந்து விரிந்து புழக்கத்தில் இருந்ததோ அதுபோல் சமஸ்கிருதத்தின் பெரும்பாலான படைப்புகள் இந்தியாவில் தேச முழுமைக்கும் வாழும் இலக்கியமாக இருந்திருக்கவில்லை என்ற விமர்சனத்தையும் ஓர் எல்லைவரை உண்மை என்று ஏற்றுக் கொள்கிறேன். பலருக்கும் தெரிய வந்திருந்த சமஸ்கிருதப் படைப்புகள் எல்லாம் இந்திய மறுமலர்ச்சி காலகட்டம் என்று சொல்லப்பட்ட காலகட்டத்தில் எழுதப்பட்டவையே. அதை எழுதியவர்கள் லத்தீன் மொழியைக் கற்றுக்கொண்டு நாம் எழுத வேண்டி இருந்தது போலவே சமஸ்கிருதத்தையும் தனியாகக் கற்றுக்கொண்டுதான் எழுத வேண்டி இருந்தது. மேலும் அந்தப் படைப்புகளை அவர்கள் கற்றறிந்த குழுவினருக்கு மட்டுமே எழுதுகிறோம் என்ற புரிதலுடன்தான் கதை எழுதினார்கள். வெகுஜனங்களுக்காக அதை எழுதி இருக்கவில்லை.
இதற்கான பதிலை விளக்கமாகச் சொல்ல வேண்டும்.
ரிக்வேத காலம் தொடங்கி தயானந்த சரஸ்வதி ரிக் வேதத்துக்கு அறிமுக விளக்க உரை எழுதியது வரையான காலத்தை இரண்டு பெரும் பிரிவாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். துரானிய ஆக்கிரமிப்புக்கு முன்; துரானிய ஆக்கிரமிப்புக்குப் பின்.
முதல் காலகட்டத்தில் வேத காலப் படைப்புகளும் புத்த மதத்தின் பழம்பெரும் படைப்புகளும் அடங்கும். மற்றவை எல்லாம் இரண்டாம் காலகட்டத்தில் அடங்கும்.
இந்தியாவை எந்தப் பழங்குடிக் குலம் ஆக்கிரமித்தது என்பது தொடர்பாக என்னால் உறுதியாக, தெளிவாக எதுவும் சொல்ல முடியவில்லை. அதனால்தான் சாக வம்சம், சைதியர்கள் அல்லது இந்தோ சைதியர்கள், அல்லது துருஷ்கர்கள் ஆகியோரின் படையெடுப்பை துரானியப் படையெடுப்பென்றே சொல்கிறேன். கி.மு. முதல் நூற்றாண்டு தொடங்கி கி.பி. மூன்றாம் நூற்றாண்டுவரையான காலகட்டத்தில் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் பற்றித் துல்லியமாக வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.
சீன பயணியர்கள் ‘யூஹ் சி’ என்று இவர்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தியா மீதான படையெடுப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டத்திய இந்தப் பழங்குடி குலம் குறித்து நமக்குக் கிடைத்திருக்கும் மூலப் படைப்புகள் சீனர்களுடையவையே. பிற மனிதக் குழுக்களுடன் இவர்களுடைய தொடர்புகளைப் பற்றி பல்வேறு கருத்துக்கள், கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்டவர்கள். குதிரையின் மேல் இருந்து அம்பு எய்பவர்கள். அவர்களுடைய சீனப் பெயரான யூஹ் சி என்பதற்கும் ரெமுசத், இவர்களை கோதி, கோத் என்று அடையாளம் கண்ட ஜெர்மானிய குலங்களின் பெயர்களுக்கும் இடையில் ஒருவித ஒப்புமை இருக்கிறது. மற்றவர்கள் இவர்களை கோத்களின் அண்டைவாசிகளான கெட்டேக்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றனர். டாட் மேலும் ஒருபடி சென்று இந்தியாவைச் சேர்ந்த ஜாட்கள், ராஜபுத்திரர்கள் ஆகியோரை இந்த ‘யூஹ் சி’ மற்றும் கோத்-களுடன் இணைத்துச் சொல்கிறார். இவர்கள் யார் என்பது தொடர்பாகப் புதிய வெளிச்சங்கள் விரைவில் கிடைக்கக்கூடும். ஆனால் இப்போதைக்கு நமது கிறிஸ்து சகாப்தத்துக்கு முந்தைய நூறாண்டு காலம் தொடங்கி பிந்தைய 300 ஆண்டு காலம் வரையில் இந்தியாவில் நடைபெற்ற மாபெரும் அரசியல் மாற்றங்களுக்கு இந்தத் தொடர் படையெடுப்பு காரணம். வடக்கத்திய பழங்குடியினர் என்ற கூடுதல் ஏற்புடைய பதத்தின் மூலமும் அவர்களை அடையாளப்படுத்தலாம்.
இந்தியாவில் இவர்களுடைய இருப்பு தொடர்பாக சீனர்கள் குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் அங்கு கிடைத்த நாணயங்கள், கல்வெட்டுகள், வாய்மொழிக் கதைகள் ஆகியவற்றின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்த ஆக்கிரமிப்புக்கு, கிமு முதலாம் நூற்றாண்டில் இருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டு வரையான இந்தியாவின் பிராமண இலக்கியத்தில் இடம்பெறும் இடைவெளியே மிகச் சிறந்த, சரியான ஆதாரமாகத் தோன்றுகிறது.
இந்தியாவின் அரசியல் மற்றும் சமூகச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் ஒரு போர்க்குலத்தின் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் மூலம் அங்கு என்னவெல்லாம் நடக்கும் என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஆக்கிரமிப்பாளர்கள் முதலில் கோட்டைகள் மற்றும் வலிமையான பகுதிகளைக் கைப்பற்றி அதன் ராஜாக்களை அப்புறப்படுத்துவார்கள். அல்லது தமக்குக் கீழாக இருந்து ஆட்சி செய்யும்படி ஆக்குவார்கள். மற்றவை எல்லாம் முன்பு போலவே நடந்து கொண்டிருக்கும். கப்பங்கள் கட்ட வேண்டியிருக்கும். வரி வசூலிக்கப்படும். எளிய கிராம மக்களின் வாழ்க்கை அதாவது இந்தியாவில் பெரும்பான்மையோரின் வாழ்க்கையானது ஆட்சி மாற்றத்தினால் எந்த மாற்றமும் அடையாமல் முன்பு போலவே இருக்கும்.
அப்படியான எல்லா மாற்றங்களின் போதும் (புதிய ஆட்சியாளர்களுடன் சமரசத்துக்கு வராமல் போகும்போது) பெருமளவுக்கு பாதிக்கப்படுபவர்கள் புரோகித மார்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். இந்த புரோகித ஜாதியினர்தான் கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருப்பார்கள். முந்தைய ராஜாக்களின் ஆதரவு அற்றுப்போகும்போது இலக்கியப் படைப்புகள் உருவாவது முற்றிலும் நின்று போகும். பௌத்தத்தின் எழுச்சியும், மன்னர் அசோகர் அதைத் தழுவியதும் பிராமணிய அதிகாரத்தின் செல்வாக்கு மற்றும் வலிமையைப் பெருமளவுக்கு பாதித்திருந்தது.
வடக்கிலிருந்து வந்த இந்த துரானிய ஆக்கிரமிப்பாளர்களின் மதம் எதுவாக இருந்தபோதிலும் அவர்கள் நிச்சயம் வேத நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. அவர்கள் பௌத்தத்துடன் ஒரு சமரசத்துக்குத் தயாராக இருந்தார்கள். இதன் காரணமாக அல்லது சாக வம்சத்தின் புராணங்கள், பௌத்த படைப்புகள் ஆகியவற்றுடனான கலப்பினால் மகாயான பௌத்த படைப்புகள் உருவாகியிருக்கின்றன. குறிப்பாக அபிதபா வழிபாடு. கிபி முதல் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட துரானிய ஆட்சியாளர்களில் ஒருவரான கனிஷ்கரின் காலத்தில் இவை வலுவாக வேரூன்றின.
ஒட்டுமொத்த சமஸ்கிருத இலக்கியத்தையும் இந்த இரண்டு பிரிவுகளாகப் பிரித்தால் துரானிய ஆக்கிரமிப்புக்கு முந்தைய காலகட்டத்திய சமஸ்கிருத இலக்கியத்தை, பழங்கால இலக்கியம் மற்றும் இயல்பான இலக்கியம் என்று அழைக்கலாம். ஆக்கிரமிப்புக்கு பிந்தைய கால சமஸ்கிருத இலக்கியத்தை நவீனமானது மற்றும் செயற்கையானது என்று அடையாளப்படுத்தலாம்.
முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த இலக்கியங்களில் வேதங்கள் என்று அடையாளம் காணப்படும் படைப்புகள் கணிசமான அளவுக்கு இருக்கின்றன. இருந்தும் அவற்றில் மிக மிகக் குறைவானவையே மீட்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவதாக, பௌத்த திரிபீடகப் படைப்புகளாகத் தொகுக்கப்பட்டு இருப்பவை பெரிதும் பாலி, கதா என்று அழைக்கப்படும் மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. சமஸ்கிருதப் படைப்புகளும் இதில் இருக்கின்றன. ஆனால் அவை பிந்தைய காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கக்கூடும். பிற சமஸ்கிருதப் படைப்புகள் எல்லாம் இரண்டாவது காலகட்டத்தில் எழுதப்பட்டவை. இந்த இரண்டு பெரிய காலகட்டங்களைக்கூட பல்வேறு சிறு அலகுகளாகப் பிரிக்க முடியும். ஆனால், அது நம்முடைய இப்போதைய அக்கறைக்கு உரியது அல்ல.
இரண்டாவது காலகட்ட நவீன சமஸ்கிருத இலக்கியங்கள் தேசிய இலக்கியமாகவோ வாழும் இலக்கியமாகவோ ஒருபோதும் இருந்திருக்கவில்லை என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஆங்காங்கே இலக்கிய, மத, ஒழுக்க மதிப்பீடுகளுக்கு ஏற்ப தழுவப்பட்ட முந்தைய காலகட்டத்தின் எச்சங்கள் அதில் தென்படுகின்றன. இந்தப் பழங்கால அம்சங்களை நாம் தனியே எடுத்துப் பார்க்கும்போது அவை பழங்காலம் தொடர்பான பல விஷயங்களை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டும். வேதகாலப் படைப்புகளில் இழக்கப்பட்டவற்றை ஓரளவுக்குப் பதிலீடு செய்து காட்டும்.
செய்யுள் வடிவிலான நீதி சாஸ்திர சட்ட நூல்களில் வேதகாலத்தில் இருந்த அம்சங்கள் சூத்திரங்கள் வடிவிலும் அதற்கு முந்தைய காலகட்டத்தில் காதா பாடல் வடிவிலும் இடம்பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது. ராமாயண மகாபாரதக் காவியங்கள், பழங்கால இதிகாச, ஆக்யானங்களின் இடத்தைப் பிடித்திருக்கின்றன. வேதகாலப் படைப்புகளில் புராணம் என்று அழைக்கப்பட்ட அவற்றின் மாறுபட்ட படைப்புகள் இரண்டாம் காலகட்டப் புராணங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன.
பிந்தைய காலகட்டத்துப் படைப்புகளில் பெரும்பாலானவை செயற்கையானவை; அல்லது பண்டித அம்சங்கள் நிரம்பியவை. இவற்றில் சுவாரசியமான படைப்புகள் சுயம்பானதாகவும் ஆங்காங்கே கலை அழகும் கொண்டுதிகழ்கின்றன. என்றாலும் இவையெல்லாம் கீழேத்தேய ஆய்வாளருக்கு உகந்த தேவையே தவிர ஒரு வரலாற்று ஆசிரியர், மற்றும் தத்துவவாதியின் உலகளாவிய மனித குல ஆய்வுகளுக்கு இவற்றில் அதிகமாக எதுவும் இல்லை.
(தொடரும்)