Skip to content
Home » மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #18 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 3

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #18 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 3

சமஸ்கிருதப் படைப்புகள்: பழமை, வசியம், அவசியம்

வேத, பௌத்த மதங்களின் படைப்புகள் மிகுதியாக இருக்கக்கூடிய இந்தியாவின் பழங்கால இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் வேறு பல விஷயங்கள் தெரிய வரும்.

மனித இனத்தின் கல்வி (வளர்ச்சி வரலாறு) என்று நாம் அழைக்க முடியும்படியான படைப்புகள் இதில் ஆரம்பிக்கின்றன. இதற்கு இணையானவற்றை உலகில் வேறு எங்குமே நாம் பார்க்க முடியாது. நமது மொழி, நமது சிந்தனைகள் ஆகியவற்றின் வளர்ச்சியின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள்; மதம் மற்றும் புராணவியல் தொடர்பான அறிவார்ந்த முதல் சிந்தனைகள் பற்றி அக்கறை கொண்டவர்கள்; வான சாஸ்திரம், இலக்கணம், தாள கதியிலான இசை, மொழியியல் என்றெல்லாம் நாம் பின்னாளில் அழைக்கும் அறிவியல் துறைகளின் ஆரம்ப அஸ்திவாரம் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்; தத்துவார்த்த சிந்தனைகளின் முதல் கீற்றுகள், குடும்ப வாழ்க்கை, கிராம வாழ்க்கை, அரசு ஆகியவற்றை மதம், சடங்கு சம்பிரதாயம், பாரம்பரியம், தார்மிக விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒழுங்குபடுத்துவது தொடர்பான முதல் முயற்சிகள் ஆகியவை பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கிரேக்கம், ரோமானியம் மற்றும் ஜெர்மனி ஆகியவற்றின் இலக்கியப் படைப்புகளுக்குத் தரும் அதே முக்கியத்துவத்தை வேதகால இலக்கியத்துக்கும் தந்தாக வேண்டும்.

ஆரம்பகால பௌத்தப் படைப்புகள் நமக்கு கற்றுத் தரக்கூடிய விஷயங்கள் தொடர்பாக நான் இப்போது அதிகம் பேசப் போவதில்லை. பௌத்தத்துக்கும் கிறிஸ்துவத்துக்கும் இடையிலான அழுத்தமான ஒற்றுமைகள் தொடர்பாக என்னிடம் கேட்கப்படும் ஏராளமான கேள்விகளிலிருந்து, அந்த மதம் பொதுத்தளத்தில் பலருடைய கவனத்தை ஏற்கனவே ஈர்த்துவிட்டது என்பது நன்கு புலனாகவே செய்கிறது. இனியும் அது மேலும் மேலும் கவனம் பெறும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தக் குறுகிய விரிவுரைகளில் அந்த மிகப் பெரிய பௌத்த இலக்கியம் தொடர்பாக அதிகம் பேச விரும்பவில்லை. வேதகால இலக்கியம் பற்றியும் கூட இந்த உரைகளில் பொதுவான மேலோட்டமான ஆய்வுகளைக்கூட முழுமையாகச் செய்து முடிக்க முடியாது. அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப் பாடங்கள் என்ற வகையில் சமஸ்கிருத ஸ்லோகங்கள், பிரமாணங்கள், உபநிடதங்கள், சூத்திரங்கள் ஆகியவற்றிலிருந்து சிலவற்றை நாம் முதல் கட்டமாகத் தெரிந்துகொள்வோம் என்று தீர்மானித்திருக்கிறேன்.

இரண்டாவது அல்லது மறுமலர்ச்சி என்று நான் அழைக்கக்கூடிய காலகட்டத்தைச் சேர்ந்த சமஸ்கிருதப் படைப்புகளே ஐரோப்பாவில் இருக்கும் அறிவார்ந்த சமூகத்துக்கு முதலில் தெரிய வந்திருக்கிறது. இது உண்மையிலேயே மிகப் பெரிய துரதிர்ஷ்டமே. பகவத் கீதை, சகுந்தலம் அல்லது ஊர்வசி போன்ற காளிதாஸரின் நாடகங்கள், மகாபாரத இராமாயணங்களில் இருந்து நள சரிதம், யக்ஞதத்த பாதம், ஹிதோபதேச நீதிக்கதைகள், பத்ருஹரியின் படைப்புகள் இவையெல்லாம் ஆர்வத்தைத் தூண்டுபவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஐரோப்பாவில் அறிமுகமானபோது இவை மிக மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தவையாகவே கருதப்பட்டன. அதிகம் படித்துத் தெரிந்துகொள்ள முடியாமல் இருந்தவர்கள் எல்லாம் இங்கிலாந்தில் சர் வில்லியம் ஜோன்ஸ், ஜெர்மனியில் ஹெர்டர் மற்றும் கதே போன்று சமஸ்கிருத இலக்கியத்தின் இரண்டாம் கட்ட படைப்புகள், படைப்பாளிகளை மிக உயர்வாகப் பேசியவர்கள் பக்கமே எளிதில் ஈர்க்கப்பட்டுவிட்டனர். காளிதாஸரைப் புகழ்ந்து பேசுவது ஒருமோஸ்தராகவே ஆகிவிட்டது.

அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் கூட தன்னுடைய சமீபத்திய படைப்பான காஸ்மாஸ் நூலில் ‘விர்ஜில் மற்றும் ஹொரேஸின் காலகட்டத்தில் மாமன்னர் விக்ரமாதித்தரின் அரண்மனையில் வாழ்ந்த மாபெரும் கவிஞர் காளிதாஸர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். சம்வத சகாப்தத்தை நிறுவியவரான இந்த விக்ரமாதித்யர் கி.மு. 56 ஐச் சேர்ந்தவர் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்தக் கருத்துகள் எல்லாம் இப்போது மாறிவிட்டன.

சாக வம்சத்தை வீழ்த்தி சம்வத சகாப்தத்தை நிறுவிய இந்த விக்ரமாதித்தர் யாராக இருந்தாலும் நிச்சயம் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கவில்லை. இந்தியர்கள் கல்வியறிவு அற்றவர்கள்; அவர்களுடைய செய்யுள்கள் இலக்கியங்கள் எல்லாம் சாதாரணமானவை; கலை நயம் அற்றவை என்ற பார்வையும் இப்போது மாறிவிட்டது. பாரசீகர்கள், அராபியர்கள், இத்தாலியர்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள் ஆகியவர்களைப் போலவே இந்தியர்கள் இருந்தனர் என்று இன்று கருதப்படுகிறார்கள். காளிதாஸரின் நாடகங்கள் நம்முடைய நூலகங்களில் தூசி படிந்து மட்கிக் கிடக்கும் ஏராளமான நாடகங்களைவிட அப்படி ஒன்றும் மேலானதல்ல என்றே இன்று சொல்லப்படுகின்றன. ஆய்வு நோக்கு மிகுந்த சமஸ்கிருத மாணவர் யாரும் இப்போது அதன் பழமையைப் பற்றி மிகை எண்ணம் எதுவும் கொண்டிருக்கவில்லை. சக வருடம் 507 (கி.பி. 585-586) காலகட்டத்துக் கல்வெட்டில் காளிதாஸரும் பாரவியும் புகழ் பெற்ற படைப்பாளிகளாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். எனவே இந்தக் காலகட்டத்துக்கு முன்பு இருந்தவர் என்று காளிதாஸரைச் சொல்வதில் வேறு எந்த நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

தொல் பழங்காலத்தைச் சேர்ந்ததாகச் சொல்லப்படும் மனுவின் சட்ட விதிமுறை நூலை எடுத்துக்கொண்டு பார்த்தால், மேலோட்டமாக அல்லது பிறர் சொல்லக்கேட்டோ பிற படைப்பைப் பார்த்தோ எழுதுபவர்கள்கூட மனுவின் நூலை மிக மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தது என்றே குறிப்பிடுகிறார்கள். ஆனால், இன்றைய வடிவில் இருக்கும் அது கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்றே நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் அதையும்விடப் பிந்தைய காலத்தைச் சேர்ந்ததாகவே இருக்கும். சில சமஸ்கிருத ஆய்வாளர்கள் நான் பொதுக் கருத்துக்கு மாற்றாகச் சொல்வதாக நினைக்கக்கூடும். ஆனால் நாம் நம் மனசாட்சிக்கும் ஆய்வுகளுக்கும் நேர்மையாக இருந்தாகவேண்டும்.

இன்று நம் கைகளுக்குக் கிடைத்திருக்கும் மானவ தர்ம சாஸ்திரம் தொடர்ச்சியான ஸ்லோகங்கள் கொண்டதாக இருக்கிறது. இதை கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று சொல்ல ஏதேனும் ஒரு சான்றோ வாய்ப்போ இருக்கிறதா என்ன? அப்படி எதுவும் கிடைத்திருக்காத நிலையில் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதுதானே நியாயம். எதிர்க்குரல்களை மறுதலித்து நம் சந்தேகங்களைப் போக்குவதுதானே சரி.

இந்தக் காலகட்டத்துக்கும் முன்பாகவே பெரும் புகழும் செல்வாக்கும் பெற்ற சட்ட நிபுணர் மனு என்பது உண்மையே. பழங்கால நீதி சாஸ்திர நூல்களில் மனுவின் பெயரும் மானவதர்மமும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன என்பதும் உண்மையே. ஆனால் துரானியப் படையெடுப்புகளுக்குப் பிந்தைய காலப் படைப்புகள் எல்லாமே அந்தக் கொடும் தாக்குதலுக்குப் பின் எழுதப்பட்டவையே என்ற உண்மையையே உறுதிப்படுத்துகின்றன. ஜஸ்டினிய காலத்துச் சட்ட திட்டங்களைப் போலவே மனுவின் சட்டங்கள் இருந்திருந்தால் அது முன்னரே எங்கேனும் குறிப்பிடவோ நடைமுறைப்படுத்தப்படவோ செய்திருக்கவேண்டுமே.

மனுவைப் பற்றிப் பல முறை குறிப்பிடும் வராஹமிஹிரர் (கி.பி.587-ல் இறந்தவர்) மானவ தர்ம சாஸ்திரம் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. மேலும் மனு எழுதியதாக அவர் குறிப்பிடுபவை எதுவும் இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் மனுவின் சட்ட நூலில் இடம்பெறவும் இல்லை.

தர்ம சாஸ்திரங்கள் மற்றும் மனு தர்ம சாஸ்திரம் அல்லது சம்ஹிதைகளின் காலம் வேறு வேறுதான் என்பதை, சாட்சி ஆவணங்கள் எழுத்தில் இருப்பதாகக் குறிப்பிடுகிறதா இல்லையா என்பதை வைத்து முடிவுக்கு வரமுடியும். கடன் வாங்கியது, வாக்குறுதிகள் தந்தது போன்றவை தொடர்பான சட்ட விதிகள் இடம்பெறும் இடங்களில் எழுத்துபூர்வ ஆவணங்கள் எழுதப்பட்டிருந்தால் அது அந்தச் சட்ட விதியில் நிச்சயம் குறிப்பிடப்பட்டிருக்கும். கெளதமர், போதாயனர், ஆபஸ்தம்பர் ஆகியோர் எழுதிய தர்ம சாஸ்திரங்களில் எங்குமே சாட்சிப் பத்திரம் எழுத்தில் எழுதப்பட்டதாகக் குறிப்பிடவே இல்லை. வசிஸ்ட சம்ஹிதையில் தான் அதுவும் போகிற போக்கில், இந்த எழுத்துப்பூர்வ ஆவணம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலுமே கூட கடன் விவகாரங்கள் தொடர்பான சட்டங்கள் எல்லாம் ஆரம்பநிலை விதிகளாகவே இருக்கின்றன.

மனுவின் செய்யுள் வடிவிலான சட்ட விதிமுறைகள் உண்மையில் முந்தைய பழங்கால விதிமுறைகளை அப்படியே மறு உருவாக்கம் மட்டுமே செய்திருக்கிறது. அந்த விதிமுறைகள் ஆதி பழங்காலத்தையவை என்பதால் மனுவின் நூலும் அதி பழங்காலத்தில் எழுதப்பட்டிருக்கும் என்ற தோற்றத்தைத் தந்துவிடுகிறது. ஆனால் பல நவீன வழிமுறைகள், சாட்சிகள் ஆகியவற்றையும் அது குறிப்பிடுகிறது. கடன் கொடுக்கும்போது இருக்கவேண்டிய சாட்சிகள் பற்றிப் பேசுகிறது. குறைந்தது மூன்று பேர் முன்னிலையில் தரப்படவேண்டும் என்று சொல்கிறது. அந்த மூவருடைய தராதரங்கள், தகுதிகள், தகுதியின்மைகள் பற்றி மிக மிகத் தெளிவாக, துல்லியமாக வரையறுக்கிறது. ஆனால் எழுத்துபூர்வ ஆவணம் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. வலுக்கட்டாயமாகப் பெறப்பட்ட எழுத்துபூர்வ ஆவணம் பற்றி ஒரே ஒரு இடத்தில் (மனு 8:168) குறிப்பிடுகிறது. அப்படியாக மனுவின் காலத்தில் வணிகப் பரிமாற்றங்களில் எழுத்துபூர்வ ஆவணங்கள் எழுதப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த ஸ்லோகம் நாரத சம்ஹிதையில் (IV:55) இடம்பெற்றிருக்கிறது.

மனு ஸ்மிருதியில் பின்னாளில் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று பேராசிரியர் ஜோலி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் நமக்குக் கிடைத்திருக்கும்படியான மனுவின் நூல் கடன் மற்றும் வணிக பரிமாற்றங்களுக்கு எழுத்துபூர்வ ஆவணங்கள் எழுதப்படாத தொல் பழங்காலத்தைச் சேர்ந்தது என்று நிச்சயம் நாம் சொல்லவே முடியாது. எழுத்துபூர்வ ஆவணங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டிருந்த யக்ஞவல்கியரின் காலத்துக்குச் சற்று முந்தையவர் மனு. விஷ்ணு சம்ஹிதை பெரிதும் யக்ஞவல்கியருடைய படைப்புடன் ஒத்துப்போகிறது. கடன் தொடர்பான சட்ட விதிமுறைகளில் முழுமையான வளர்ச்சி நிலையைக் காண்பிக்கும் நாரத சம்ஹிதை நிச்சயம் அனைத்துக்கும் பிந்தையதாகவே இருக்கும்.

பேராசிரியர் ஜோலி, நாரத சம்ஹிதைக்குப் பிந்தையதாகவே காத்யாயன சம்ஹிதை பிருஹஸ்பதி சம்ஹிதை ஆகியவற்றைச் சொல்கிறார். வியாச சம்ஹிதை, ஹரித சம்ஹிதைகளையும் அப்படியே குறிப்பிடுகிறார்.

வராஹமிஹிரர் வாழ்ந்து இலக்கியம் படைத்த காலகட்டமே இந்திய இலக்கியத்தின் மறுமலர்ச்சி காலகட்டம் என்று நம்புகிறேன். பாரவியும் காளிதாஸரும் அந்தக் காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்தவர்களே. இதற்கான கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில்தான் இந்திய இலக்கியங்கள் பாரசீகத்தையும் சென்றடைந்தன. பாரசீக மன்னர் கொஸ்ரு நஸிர்வான் தனது அரசவை மருத்துவர் பர்ஸோயியை பஞ்ச தந்திர நீதிக் கதைகளை பாரசீக மொழிக்கு மொழிபெயர்க்க அல்லது அவற்றின் மூலப்படைப்பை சமஸ்கிருதத்திலிருந்து பஹ்லவீ மொழிக்கு மாற்ற அனுப்பியிருக்கிறார். நவரத்னங்கள் அல்லது நவ செவ்வியல் படைப்புகள் இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்ததாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருத இலக்கியத்தில் வேத கால மற்றும் பௌத்தப் படைப்புகள் அல்லாமல் பிற எதையும் இந்தக் காலகட்டத்துக்கு முந்தையதாகச் சொல்லமுடியுமா என்பது சந்தேகமே.

நவீன கால சமஸ்கிருதப் படைப்புகள் நமக்கு முதலில் தெரியவந்தபோது, பொதுவாகப் பலருடைய ஆர்வத்தைத் தூண்டியது உண்மையே. இந்திய இலக்கியம் மீது மேலோட்டமான கரிசன உணர்வை இப்போதும் தக்கவைக்கவும் அவை உதவுகின்றன. ஆனால், ஆழ்ந்த அக்கறை கொண்ட ஆய்வாளர்கள் கிரேக்கம், லத்தீன், இத்தாலி, ஃப்ரான்ஸ், ஆங்கிலேயர், ஜெர்மானியர் ஆகியோரின் இலக்கியங்களுக்கு அருகில் இப்போது, இந்த சமஸ்கிருத இலக்கியத்தை வைத்து மதிப்பதில்லை.

இந்திய இலக்கியம் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியவை அனைத்துமே முழுவதுமாகத் தெரிந்துகொண்டாகிவிட்டது; சர்வ தேச பல்கலைக்கழகங்களில் மொழியியல் ஆய்வுத்துறை சார்ந்து மட்டுமே இந்த இலக்கியங்களுக்கு ஒரு ஓரமாக ஓரிடம் ஒதுக்கப்படமுடியும் என்று பலரும் கருத ஆரம்பித்திருந்தனர்.

அதே நேரத்தில், அதாவது அந்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திலேயே சமஸ்கிருத இலக்கியங்கள் தொடர்பாகப் புதிய ஆய்வு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. அவை சமஸ்கிருத இலக்கியங்களுக்கு புதியதொரு முக்கியத்துவத்தைத் தந்தன. அந்த ஆய்வு இயக்கத்தின் தலைவர் என்று பாரிஸில் காலேஜ் தெ ஃப்ரான்ஸில் இருந்த பேராசிரியர் பர்னாஃபையே சொல்லவேண்டும். அற்புதமான அறிஞரான அவர் உலக இலக்கியம் குறித்த பரந்த அறிவும் வரலாற்று உள்ளுணர்வுகளும் கொண்டவர். ஆனால் வெறும் நள சரிதம், சாகுந்தலம் ஆகியற்றிலேயே தன் ஆய்வு காலத்தை முழுவதும் வீணடித்தவர்களில் கடைசி நபரும் அவரே.

ஃப்ரான்ஸின் மரபார்ந்த வழிமுறைகளில் கல்வி பெற்றிருந்த அவர் (அவருடைய தந்தை கிரேக்க இலக்கணம் பற்றி அற்புதமான நூல்கள் எழுதியவர்) சிறிது காலம் வழக்கறிஞர் தொழிலில் துடிப்புடன் செயல்பட்டார். அவருக்கு கஸியாட், தெய்ர்ஸ், மிக்னெட், விலேமைன் போன்ற பிரபலங்களுடன் நட்பு இருந்தது. ஒரு பிரகாசமான எதிர்காலம் அவர் முன்னால் இருந்தது. சாதாரண சமஸ்கிருத செய்யுள்களில் தன் வாழ்க்கையை முழுவதுமாக மூழ்கடித்துக் கொள்பவராக அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சமஸ்கிருதம் பற்றி அவருக்கு ஓர் ஆர்வம் உருவானபோது வரலாறு, மனித வரலாறு, உலக வரலாறு ஆகியவற்றின் மீதான ஆர்வமே அதற்கு அடிப்படையாக இருந்தது. அதன் மூலம் அவர் வேதகால இலக்கியங்கள், பெளத்த இலக்கியங்கள் ஆகியவற்றில் நிபுணரானார். இந்திய இலக்கிய ஆய்வின் அடிப்படை ஆதார ப்படைப்புகளாக இவையே இருப்பதையும் கண்டு சொன்னார்.

இளம் வயதிலேயே இறந்துவிட்டார். எனவே அவருடைய ஆய்வு மாளிகையின் சொற்ப வளைவுகள், விதானங்களை மட்டுமே அவரால் கட்டியெழுப்ப முடிந்தது. ஆனால், அவருடைய லட்சியக்கனல் அவருடைய மாணவர்கள் மற்றும் நண்பர்களிடையே பற்றிக்கொண்டது. வேத, பெளத்த இலக்கியங்கள் தொடர்பான பிந்தைய கால ஆய்வுகளைச் செய்தவர்கள் அனைவரிருக்கும் காலேஜ் தெ ஃப்ரான்ஸில் பேராசிரியர் பர்னாஃப் ஆற்றிய உரைகளே நேரடியாகவோ மறைமுகமாகவோ உந்துதலாக இருந்திருக்கின்றன என்பதை நிச்சயம் மறுக்கவே முடியாது.

பழங்கால செவ்வியல் சமஸ்கிருத இலக்கியங்களில் உலகில் வேறு எங்குமே காணமுடியாதவகையில் அப்படி என்னதான் இருக்கிரது என்ற கேள்வி இங்கு எழும்.

இதற்கான என் பதில் : சமஸ்கிருத இலக்கியங்களில் மாறுபட்ட ஆரியரைப் பார்க்க முடிகிறது. கிரேக்க, ரோமானிய, ஜெர்மானிய, செல்டிக், ஸ்லோவ் என பல அம்சங்கள் கொண்டவர்களாக நாம் கருதும் ஆரியர் அங்கு முற்றிலும் புதிய குணாம்சங்கள் கொண்டவராக வெளிப்பட்டிருக்கிறார். வட திசையிலான ஆரியர்களுடைய புலம் பெயர்தல்கள் ஆவேசமான துடிப்பும் அரசியல் உணர்வும் மிகுந்தவர்களாக அதில் முழுமையடைந்தவர்களாக ஆக்கியிருக்கின்றன. மனித குலத்தின் மறுபக்கமான சகிப்புத்தன்மை மற்றும் ஆழ்ந்த உள் ஒடுங்கிய சிந்தனை ஆகியவை இந்தியாவில் இருந்த ஆரியர்களிடையே முழு வளர்ச்சியை அடைந்திருக்கின்றன.

ரிக் வேதத்தின் சில செய்யுள்களில் இதற்கும் முந்தைய காலத்தின் தடயங்களைக் காண முடிகிறது. நில உடமை கொண்டவர்களாக இருப்பது, கறுப்புத் தோல் கொண்ட பூர்வ குடியினருக்கு எதிரான போரில் போர்க்கடவுள்களான இந்திரன், மருத்களின் வழிகாட்டலில் வெற்றி பெறுதல், பிந்தைய ஆரிய காலனியாக்க சக்திகளை சமாளித்தல் ஆகியவற்றை இந்த வேத காலப்படைப்புகளில் இருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது.

ஆனால், இந்தப் போர்கள் எல்லாம் முடிவுக்கு வந்த பின்னர், பெருந்திரளான மக்கள் தமது நிலங்களில் நிலைகொண்டதைத் தொடர்ந்து ராணுவ, காவல் கடமைகள் எல்லாம் நாம் இன்று ஜாதி என்று அழைக்கும் சமூகக் கட்டமைப்பினால் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டன. அதாவது அரச அதிகாரம் குறுநில மன்னர்கள் வசம் குவிந்தது. பெரும்பாலான எளிய மக்கள் தமது அன்றாட பணிகளில் ஈடுபட்டபடி கிராமங்களின் குறுகியவெளிகளில் வாழ்ந்துவந்தனர். புற உலகம் பற்றி எந்தவொரு அக்கறையும் இன்றி, அதிக கடின முயற்சிகள் இன்றி, இயற்கை அவர்களுக்கு வழங்கிய வளங்களைக் கொண்டு திருப்தியடைந்தவர்களாக வாழ்ந்துவந்தனர்.

ரிக் வேதச் செய்யுள்களில் சொல்லப்பட்டிருப்பது போன்ற படையெடுப்பு மற்றும் இடப்பெயர்ச்சி காலகட்டத்தில், மனுவின் சட்ட நூல்களில் விவரித்திருப்பது போன்ற ஜாதி அமைப்பு நடைமுறையில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. இப்படியான ஒரு சமூகக் கட்டமைப்பு லட்சியக் கட்டமைப்பாகச் சொல்லப்பட்டதா என்பதே சந்தேகம்தான். சப்த நதி தீரத்தை முதன் முதலில் ஆரியர்கள் தமதாக்கிக் கொண்டபோது இப்படியாக சமூகக் கட்டமைப்பை லட்சியமாகக் கொண்டிருந்தாலும் அதற்கான உள்ளார்ந்த அம்சங்கள் பலவும் தேவைப்படும் நிலையிலேயே இருந்திருக்கும். மாறாக, அந்த ஆரம்ப காலகட்டத்தில் கூட உழைப்பின் அடிப்படையில் சமூகப் பாகுபாடு இருந்திருக்கும்.

பஞ்ச தேசங்களின் கிராமங்களில் நாம் இவற்றுக்கான தடயங்களைப் பார்க்க முடிகிறது. க்ஷத்ரியர்கள் – சில நேரங்களில் நிலப்பிரபுக்கள், மன்னர்கள் என்றழைக்கப்பட்ட ஒரு பிரிவினர்; அமைச்சர்கள் – சிலநேரங்களில் புரோகிதர்கள், நீதிமான்கள், இறை வழிகாட்டிகள் (தூதர்கள்) என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஒரு பிரிவினர்; உழைப்பாளர்கள் – உழவர்கள், கட்டுமானப்பணியாளர்கள் அல்லது சாலைப் பணியாளர்கள் என்ற பிரிவினர். இந்த மூன்று பிரிவினர் இருந்திருக்கக்கூடும் என்பதை ஆரம்ப கால ரிக் வேத செய்யுள்களில் இருந்து நாம் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிகிறது.

மஹாபாரதம் (8:22) – ல் இடம்பெறும் செய்யுள் சொல்கிறது:

‘எல்லா வனங்களிலும் மரங்களில் கனிகள் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் எந்த சிரமும் இன்றி அவற்றைப் பறித்துக்கொள்ளமுடியும். இங்குமங்கும் ஓடும் ஓடைகளில் குளிர்ந்த சுவையான தண்ணீர் பாய்கின்றது. அழகிய மரங்களின் பலகைகள் கொண்டு இதமான படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இருந்தும் செல்வந்தர்களின் (வீடுகளின்) முன்னே நலிவடைந்தவர்கள் துன்பத்தை அனுபவித்துவருகிறார்கள்’.

முதல் பார்வைக்கு இந்த மிதமான அமைதியான வாழ்க்கை முறை என்பது வளர்ச்சி நிலையாக அல்லாமல் தேக்க நிலையாகத் தோன்றலாம். வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்று ஐரோப்பியரான நாம் நினைக்கிறோமோ அதிலிருந்து மிகவும் வேறுபட்டதாக இருக்கிறது. மேலான தளத்திலிருந்து பார்க்கும்போது, தென்புல ஆரியர்கள் நன்மையின் பகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அல்லது தமக்கு எது நல்லதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வட புல ஆரியர்களான நாமோ பல்வேறு விஷயங்கள் சார்ந்து கூடுதல் கவனமும் குழப்பங்களும் நிரம்பியவர்களாக இருந்திருக்கிறோம்.

இயற்கையில் தெற்கு வடக்கு என்று இருப்பதுபோல் மனிதரிலும் இடதுபக்க மூளை; வலது பக்கமூளை என்று இருக்கத்தான் செய்கின்றன. ஆவேசம், போர்க்குணம், அரசியல் அணுகுமுறைகள் ஒருபக்கம்; மிதமான தன்மை, ஆழ்ந்த சிந்தனைகள், தத்துவார்த்தப் பார்வை ஆகியவை மறுபக்கம். இவை சார்ந்த பிரச்னைக்கான தீர்வாக ரிக் வேதச் செய்யுள்கள் தொடங்கி உபநிடதங்கள் வரையிலான வேதப் படைப்புகள் மிகப் பொருத்தமான அம்சங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன.

அத்தனை வசீகரம் எதுவும் இல்லாத அல்லது குறைந்தபட்சம் நமக்கு வசீகரமாகத் தோன்றாத ஓர் உலகுக்குள் உங்களை அழைத்துச் செல்கிறேன். ஆனால், அந்த உலகில் ஒரு வசியம் நிச்சயம் இருக்கிறது. அந்த உலகம் நிஜமானது. இயல்பான வளர்ச்சியை அடைந்தது. இயற்கையாக வளர்ந்த அனைத்தையும் போலவே இந்த உலகுக்கும் ஒரு மறை நியாயம், காரணம் உண்டு என்று நம்புகிறேன். நாம் கற்றுக்கொள்ளவேண்டிய, வேறு எங்கும் கற்றுக்கொள்ளவே முடியாத சில பாடங்களை அது நமக்குக் கற்றுத் தருவதற்காகவே இருக்கிறது. நாம் அந்தப் பழம் பெரும் வேத படைப்புகளை புகழவோ இகழவோ தேவையில்லை. நாம் அவற்றை அலசி ஆராய்ந்து, புரிந்துகொள்ள முயற்சி செய்தாலே போதும். வேறொன்றும் செய்யத் தேவையில்லை.

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures
பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *