வடபுல ஆரியரான ஐரோப்பியரும் தென்புல ஆரியரான இந்தியரும்
நவீன கால சமஸ்கிருதப் படைப்புகள் நமக்கு முதலில் தெரியவந்தபோது, பொதுவாகப் பலருடைய ஆர்வத்தைத் தூண்டியது உண்மையே. இந்திய இலக்கியம் மீது மேலோட்டமான கரிசன உணர்வை இப்போதும் தக்கவைக்கவும் அவை உதவுகின்றன. ஆனால், ஆழ்ந்த அக்கறை கொண்ட ஆய்வாளர்கள் கிரேக்கம், லத்தீன், இத்தாலி, ஃப்ரான்ஸ், ஆங்கிலேயர், ஜெர்மானியர் ஆகியோரின் இலக்கியங்களுக்கு அருகில் இப்போது, இந்த சமஸ்கிருத இலக்கியத்தை வைத்து மதிப்பதில்லை.
இந்திய இலக்கியம் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியவை அனைத்துமே முழுவதுமாகத் தெரிந்துகொண்டாகிவிட்டது; சர்வ தேசப் பல்கலைக்கழகங்களில் மொழியியல் ஆய்வுத்துறை சார்ந்து மட்டுமே இந்த இலக்கியங்களுக்கு ஓர் ஓரமாக இடம் ஒதுக்கப்படமுடியும் என்று பலரும் கருத ஆரம்பித்திருந்தனர்.
அதே நேரத்தில், அதாவது அந்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திலேயே சமஸ்கிருத இலக்கியங்கள் தொடர்பாகப் புதிய ஆய்வு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. அவை சமஸ்கிருத இலக்கியங்களுக்குப் புதியதொரு முக்கியத்துவத்தைத் தந்தன. அந்த ஆய்வு இயக்கத்தின் தலைவர் என்று பாரிஸில் காலேஜ் தெ ஃப்ரான்ஸில் இருந்த பேராசிரியர் பர்னாஃபையே சொல்லவேண்டும். அற்புதமான அறிஞரான அவர் உலக இலக்கியம் குறித்த பரந்த அறிவும் வரலாற்று உள்ளுணர்வுகளும் கொண்டவர். ஆனால் வெறும் நள சரிதம், சாகுந்தலம் ஆகியற்றிலேயே தன் ஆய்வுக் காலத்தை முழுவதும் வீணடித்தவர்களில் கடைசி நபரும் அவரே.
ஃப்ரான்ஸின் மரபார்ந்த வழிமுறைகளில் கல்வி பெற்றிருந்த அவர் (அவருடைய தந்தை கிரேக்க இலக்கணம் பற்றி அற்புதமான நூல்கள் எழுதியவர்) சிறிது காலம் வழக்கறிஞர் தொழிலில் துடிப்புடன் செயல்பட்டார். அவருக்கு கஸியாட், தெய்ர்ஸ், மிக்னெட், விலேமைன் போன்ற பிரபலங்களுடன் நட்பு இருந்தது. ஒரு பிரகாசமான எதிர்காலம் அவர் முன்னால் இருந்தது. சாதாரண சமஸ்கிருத செய்யுள்களில் தன் வாழ்க்கையை முழுவதுமாக மூழ்கடித்துக் கொள்பவராக அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சமஸ்கிருதம் பற்றி அவருக்கு ஓர் ஆர்வம் உருவானபோது வரலாறு, மனித வரலாறு, உலக வரலாறு ஆகியவற்றின் மீதான ஆர்வமே அதற்கு அடிப்படையாக இருந்தது. அதன் மூலம் அவர் வேதகால இலக்கியங்கள், பெளத்த இலக்கியங்கள் ஆகியவற்றில் நிபுணரானார். இந்திய இலக்கிய ஆய்வின் அடிப்படை ஆதாரப் படைப்புகளாக இவையே இருப்பதையும் கண்டு சொன்னார்.
இளம் வயதிலேயே இறந்துவிட்டார். எனவே அவருடைய ஆய்வு மாளிகையின் சொற்ப வளைவுகள், விதானங்களை மட்டுமே அவரால் கட்டியெழுப்ப முடிந்தது. ஆனால், அவருடைய லட்சியக்கனல் அவருடைய மாணவர்கள் மற்றும் நண்பர்களிடையே பற்றிக்கொண்டது. வேத, பெளத்த இலக்கியங்கள் தொடர்பான பிந்தைய கால ஆய்வுகளைச் செய்தவர்கள் அனைவரிருக்கும் காலேஜ் தெ ஃப்ரான்ஸில் பேராசிரியர் பர்னாஃப் ஆற்றிய உரைகளே நேரடியாகவோ மறைமுகமாகவோ உந்துதலாக இருந்திருக்கின்றன என்பதை நிச்சயம் மறுக்கவே முடியாது.
பழங்காலச் செவ்வியல் சமஸ்கிருத இலக்கியங்களில் உலகில் வேறு எங்குமே காணமுடியாதவகையில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற கேள்வி இங்கு எழும்.
இதற்கான என் பதில் : சமஸ்கிருத இலக்கியங்களில் மாறுபட்ட ஆரியரைப் பார்க்க முடிகிறது. கிரேக்க, ரோமானிய, ஜெர்மானிய, செல்டிக், ஸ்லோவ் எனப் பல அம்சங்கள் கொண்டவர்களாக நாம் கருதும் ஆரியர் அங்கு முற்றிலும் புதிய குணாம்சங்கள் கொண்டவராக வெளிப்பட்டிருக்கிறார். வட திசையிலான ஆரியர்களுடைய புலம் பெயர்தல்கள் ஆவேசமான துடிப்பும் அரசியல் உணர்வும் மிகுந்தவர்களாக அதில் முழுமையடைந்தவர்களாக ஆக்கியிருக்கின்றன. மனித குலத்தின் மறுபக்கமான சகிப்புத்தன்மை மற்றும் ஆழ்ந்த உள் ஒடுங்கிய சிந்தனை ஆகியவை இந்தியாவில் இருந்த ஆரியர்களிடையே முழு வளர்ச்சியை அடைந்திருக்கின்றன.
ரிக் வேதத்தின் சில செய்யுள்களில் இதற்கும் முந்தைய காலத்தின் தடயங்களைக் காண முடிகிறது. நில உடமை கொண்டவர்களாக இருப்பது, கறுப்புத் தோல் கொண்ட பூர்வ குடியினருக்கு எதிரான போரில் போர்க்கடவுள்களான இந்திரன், மருத்களின் வழிகாட்டலில் வெற்றி பெறுதல், பிந்தைய ஆரிய காலனியாக்க சக்திகளை சமாளித்தல் ஆகியவற்றை இந்த வேத காலப்படைப்புகளில் இருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது.
ஆனால், இந்தப் போர்கள் எல்லாம் முடிவுக்கு வந்த பின்னர், பெருந்திரளான மக்கள் தமது நிலங்களில் நிலைகொண்டதைத் தொடர்ந்து ராணுவ, காவல் கடமைகள் எல்லாம் நாம் இன்று ஜாதி என்று அழைக்கும் சமூகக் கட்டமைப்பினால் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டன. அதாவது அரச அதிகாரம் குறுநில மன்னர்கள் வசம் குவிந்தது. பெரும்பாலான எளிய மக்கள் தமது அன்றாடப் பணிகளில் ஈடுபட்டபடி கிராமங்களின் குறுகியவெளிகளில் வாழ்ந்துவந்தனர். புற உலகம் பற்றி எந்தவொரு அக்கறையும் இன்றி, அதிகக் கடின முயற்சிகள் இன்றி, இயற்கை அவர்களுக்கு வழங்கிய வளங்களைக் கொண்டு திருப்தியடைந்தவர்களாக வாழ்ந்துவந்தனர்.
ரிக் வேதச் செய்யுள்களில் சொல்லப்பட்டிருப்பது போன்ற படையெடுப்பு மற்றும் இடப்பெயர்ச்சி காலகட்டத்தில், மனுவின் சட்ட நூல்களில் விவரித்திருப்பது போன்ற ஜாதி அமைப்பு நடைமுறையில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. இப்படியான ஒரு சமூகக் கட்டமைப்பு லட்சியக் கட்டமைப்பாகச் சொல்லப்பட்டதா என்பதே சந்தேகம்தான். சப்த நதி தீரத்தை முதன் முதலில் ஆரியர்கள் தமதாக்கிக் கொண்டபோது இப்படியாக சமூகக் கட்டமைப்பை லட்சியமாகக் கொண்டிருந்தாலும் அதற்கான உள்ளார்ந்த அம்சங்கள் பலவும் தேவைப்படும் நிலையிலேயே இருந்திருக்கும். மாறாக, அந்த ஆரம்ப காலகட்டத்தில் கூட உழைப்பின் அடிப்படையில் சமூகப் பாகுபாடு இருந்திருக்கும்.
பஞ்ச தேசங்களின் கிராமங்களில் நாம் இவற்றுக்கான தடயங்களைப் பார்க்க முடிகிறது. க்ஷத்ரியர்கள் – சில நேரங்களில் நிலப்பிரபுக்கள், மன்னர்கள் என்றழைக்கப்பட்ட ஒரு பிரிவினர்; அமைச்சர்கள் – சிலநேரங்களில் புரோகிதர்கள், நீதிமான்கள், இறை வழிகாட்டிகள் (தூதர்கள்) என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஒரு பிரிவினர்; உழைப்பாளர்கள் – உழவர்கள், கட்டுமானப்பணியாளர்கள் அல்லது சாலைப் பணியாளர்கள் என்ற பிரிவினர். இந்த மூன்று பிரிவினர் இருந்திருக்கக்கூடும் என்பதை ஆரம்ப கால ரிக் வேதச் செய்யுள்களில் இருந்து நாம் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிகிறது.
மஹாபாரதம் (8:22) – ல் இடம்பெறும் செய்யுள் சொல்கிறது:
‘எல்லா வனங்களிலும் மரங்களில் கனிகள் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் எந்த சிரமும் இன்றி அவற்றைப் பறித்துக்கொள்ளமுடியும். இங்குமங்கும் ஓடும் ஓடைகளில் குளிர்ந்த சுவையான தண்ணீர் பாய்கின்றது. அழகிய மரங்களின் பலகைகள் கொண்டு இதமான படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இருந்தும் செல்வந்தர்களின் (வீடுகளின்) முன்னே நலிவடைந்தவர்கள் துன்பத்தை அனுபவித்துவருகிறார்கள்’.
முதல் பார்வைக்கு இந்த மிதமான அமைதியான வாழ்க்கை முறை என்பது வளர்ச்சி நிலையாக அல்லாமல் தேக்க நிலையாகத் தோன்றலாம். வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்று ஐரோப்பியரான நாம் நினைக்கிறோமோ அதிலிருந்து மிகவும் வேறுபட்டதாக இருக்கிறது. மேலான தளத்திலிருந்து பார்க்கும்போது, தென்புல ஆரியர்கள் நன்மையின் பகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அல்லது தமக்கு எது நல்லதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வட புல ஆரியர்களான நாமோ பல்வேறு விஷயங்கள் சார்ந்து கூடுதல் கவனமும் குழப்பங்களும் நிரம்பியவர்களாக இருந்திருக்கிறோம்.
இயற்கையில் தெற்கு வடக்கு என்று இருப்பதுபோல் மனிதரிலும் இடதுபக்க மூளை; வலதுபக்க மூளை என்று இருக்கத்தான் செய்கின்றன. ஆவேசம், போர்க்குணம், அரசியல் அணுகுமுறைகள் ஒருபக்கம்; மிதமான தன்மை, ஆழ்ந்த சிந்தனைகள், தத்துவார்த்தப் பார்வை ஆகியவை மறுபக்கம். இவை சார்ந்த பிரச்னைக்கான தீர்வாக ரிக் வேதச் செய்யுள்கள் தொடங்கி உபநிடதங்கள் வரையிலான வேதப் படைப்புகள் மிகப் பொருத்தமான அம்சங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன.
அத்தனை வசீகரம் எதுவும் இல்லாத அல்லது குறைந்தபட்சம் நமக்கு வசீகரமாகத் தோன்றாத ஓர் உலகுக்குள் உங்களை அழைத்துச் செல்கிறேன். ஆனால், அந்த உலகில் ஒரு வசியம் நிச்சயம் இருக்கிறது. அந்த உலகம் நிஜமானது. இயல்பான வளர்ச்சியை அடைந்தது. இயற்கையாக வளர்ந்த அனைத்தையும் போலவே இந்த உலகுக்கும் ஒரு மறை நியாயம், காரணம் உண்டு என்று நம்புகிறேன். நாம் கற்றுக்கொள்ளவேண்டிய, வேறு எங்கும் கற்றுக்கொள்ளவே முடியாத சில பாடங்களை அது நமக்குக் கற்றுத் தருவதற்காகவே இருக்கிறது. நாம் அந்தப் பழம் பெரும் வேதப் படைப்புகளைப் புகழவோ இகழவோ தேவையில்லை. நாம் அவற்றை அலசி ஆராய்ந்து, புரிந்துகொள்ள முயற்சி செய்தாலே போதும். வேறொன்றும் செய்யத் தேவையில்லை.
உலகிலேயே இந்திய மனமே (சிந்தனைகளே) எல்லாவற்றையும்விட உயர்வானது என்று சொல்லக்கூடிய அற்ப நபர்களும் இருக்கிறார்கள். பழங்காலத்தில் நம் எல்லாரையும் விட மிகச் சிறந்த ஒரு மதம் இருந்திருக்கிறதா? தூய நல்லொழுக்கம் இருந்திருக்கிறதா? அதிநுட்பமான தத்துவப் பார்வை இருந்திருக்கிறதா என்றெல்லாம் யார் வேதங்கள், பௌத்த படைப்புகளை எல்லாம் படித்துப் பார்க்கப் போகிறார்கள் என்று நினைத்து அப்படியெல்லாம் சொல்லிக்கொள்கிறார்கள் போலிருக்கிறது. அப்படி எழுதும் நபர்கள், அவர்களுடைய படைப்புகள் ஆகியவை பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. அதே நேரம் இந்தியாவின் பழங்காலப் படைப்புகள் என்று எதுவுமே இல்லை. அவை எல்லாம் 19-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை மட்டுமே. அதோடு நாம் எதிர்த்து அழிக்கப்பட வேண்டியவை. எந்தக் கருணையும் காட்டும் தேவையில்லை என்று சொல்லக்கூடியவர்களையும் நான் கடுமையாக, நிதானமிழந்து கையாளவே விரும்புகிறேன்.
வேதங்கள் எல்லாம் சிறுபிள்ளைத்தனமானவை; மடத்தனமானவை; மலைபோல் குவிந்து கிடக்கின்றன என்றெல்லாம் சொன்னால் யாரும் அதை மறுக்கப் போவதில்லை. ஆனால், அப்படி மலைபோல் குவிந்து கிடப்பவை சுவாரசியமானவையாகவும் அறிவைப் புகட்டுபவையாகவும் இருக்கின்றன. மாறுபட்ட சிந்தனைகள், மொழி ஆகியவற்றுக்கு இடமளித்துப் பார்த்தோமென்றால் அவற்றில் பெரும்பாலானவற்றில் உண்மையும் ஒளியும் இருக்கின்றன. அடர்ந்த இருள் கவிழ்ந்த இரவின் ஊடாக பாயும் ஒளி போல் அது நம்மை பிரமிக்கவைப்பதாகவும் இருக்கிறது.
இந்த இடத்தில்தான் இந்தியாவின் பழங்காலப் படைப்புகளில் மனித குலத்துக்கு ஆர்வமூட்டும் விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. அது கீழைத்தேய ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல; பழங்கால வரலாற்று ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல; கற்றறிந்த ஆண் பெண் அனைவருடைய கவனத்தையும் கவரும் அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது.
நமக்குச் சில பிரச்னைகள் வரும்; அவற்றை நாம் அப்போதைக்குச் சற்று தள்ளி வைப்போம். நாம் ஒவ்வொருவரும் நமக்கான வாழ்வாதாரங்களைத் தேடிக் கொண்டாக வேண்டி இருக்கிறது. ஆனால் அந்தப் பிரச்னைகள் மீண்டும் தலை தூக்கும். எவ்வளவு கவனம் கொடுக்க வேண்டும் என்று நாம் விரும்புவோமோ அதைவிடக் கூடுதல் கவனம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். வாரத்தின் ஏழு நாட்களில் ஒரு நாளை ஓய்வுக்காக, தியானத்திற்காக, கிரேக்கர்கள் ‘மகத்தான விஷயங்கள்’ என்று சொன்ன விஷயங்களுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறோம். ஆனால் அந்த ஏழாவது நாளுமே கூட வெறுமனே சர்ச்சுக்குப் போய்வருவது, எதுவும் செய்யாமல் ஓய்வெடுத்துக் கழிப்பது என்பதாக வீணாகிக் கொண்டுதானிருக்கிறது. வார நாளோ விடுமுறை நாளோ… இளைஞரோ முதியவரோ… நம் வாழ்வின் மிக முக்கியமான நெருக்கடியான தருணம் ஒன்று வரும். அப்போது ‘நாம் யார்’ என்ற எளிய பழைய ஆதி கேள்வி முழு வேகத்துடன் நம்மை வந்து தாக்கும். இந்த உலக வாழ்க்கையின் அர்த்தம் என்ன? அண்டை அயலாரை வேதனைப்படுத்தி நமக்கான மகிழ்ச்சியை உருவாக்குவதற்கு ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்துக் கொண்டே இருக்கிறோமே… பூமியில் போதிய கதகதப்பு, எரிவாயு, மின்சாரம் மற்றும் எல்லா வசதிகளும் கொண்ட ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டுவிட்டோம் என்றால் ஒரு குடிசையில் வாழும் பழங்குடி இந்துவைவிட நாம் மகிழ்ச்சியானவர்களாகிவிடுவோமா என்ன?
நான் சற்று முன் சொன்னதுபோல், வட புலங்களில் வாழ்க்கை எப்போதுமே கடினமாகத்தான் இருக்கிறது. முதுமையின் நிச்சயமின்மைகள், நமது சமூக வாழ்க்கையில் தவிர்க்க முடியாமல் நடக்கக்கூடிய விபத்துகள் இவற்றின் காரணமாகச் செல்வம் குவிப்பது மிக மிக அவசியமானதாகவே இருக்கிறது. பல மணிநேர ஓய்வு, தியானம் இவையெல்லாம் நமக்கு மிகவும் அரிதாகவே கிடைக்கின்றன. ட்யூடானிக் இனங்களுடைய வரலாற்றிலும் இதுதான் இருக்கிறது. ரோமானிய கிரேக்க வாழ்க்கையும் அப்படித்தான் இருந்திருக்கிறது.
ஐரோப்பிய தட்பவெப்பநிலையானது நீண்ட நெடிய பனிக்காலத்தைக் கொண்டது. விவசாயம் பல பகுதிகளில் மிகவும் சிரமமாகவே இருக்கிறது. குறுங்குழுக்களின் நலன் சார்ந்த மோதல்கள் காரணமாக சுய பாதுகாப்பு உணர்வு (கேளிக்கை கொண்டாட்டங்கள் கூட) மிகுதியாகியிருக்கிறது. ஐரோப்பிய சமூகத்தின் நல்ல குணங்கள் மற்றும் கெட்ட குணங்கள் அனைத்துக்கும் இந்த அம்சமே ஆதாரமாகவும் இருக்கிறது. நமது குண நலன்கள் எல்லாம் இந்தச் சூழ்நிலைகளின் தாக்கத்தினாலும் பரம்பரை வழியிலும் கல்வியின் மூலமாகவும் தேவைகளின் அடிப்படையிலும் உருவாகியிருப்பவையே.
நாம் போராட்டம் மிகுந்த வாழ்க்கையை வாழ்கிறோம். போர்க்குணத்துடனான வாழ்க்கையே நம்முடைய உயரிய இலக்கு. களைத்து விழும் வரையிலும் உழைக்கிறோம். உடம்பு திடகாத்திரமாக இருக்கும்போது உயிர் பிரிவதையே விரும்புகிறோம். ஒரு குடும்பம், வர்த்தகம், நகரம் அல்லது ஊரை, கஷ்டப்பட்டு நம் முன்னோர்கள் உருவாக்கியதை நினைத்து உள்ளுக்குள் பெருமிதம் அடைகிறோம். அற்புதமான நகரங்கள், அருமையான சாலைகள், பாலங்கள், கப்பல்கள், ரயில் பாதைகள், தந்தி, மின் விளக்கு, ஓவியங்கள், சிலைகள், இசை, நாடகங்கள் என நமது கலாசாரம் என்று நாம் அழைக்கும் சாதனைகளை உயர்வாக மதிக்கிறோம். இந்த பூமியில் வாழ்க்கையை குறைகள் அற்றதாக ஆகியிருப்பதாக நினைத்துக் கொள்கிறோம். சில விஷயங்களில் அவற்றை எவ்வளவு முழுமையானதாக ஆக்கியிருக்கிறோமென்றால் உலகை விட்டுச் செல்லவே விரும்பாதவராக ஆகியிருக்கிறோம். ஆனால் பிராமணர்களும் பெளத்தர்களும் ஒரே ஒரு விஷயத்தையே சளைக்காமல் நமக்கு கற்றுத் தருகிறார்கள்: ‘மரணம் என்பது ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்குப் போவதைப் போன்றது. வாழ்க்கை என்பது நிலையானது அல்ல’.
ஒரு மனிதர் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்குப் போகும்போது வழியில் ஓர் இரவில் திறந்தவெளியில் தங்குகிறார். மறு நாள் காலையில் தன் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்கிறார். அப்படியாக அப்பா, அம்மா, மனைவி, செல்வம் எல்லாமே ஓர் இரவில் நம் இளைப்பாறுவது போன்றவையே. ஞானிகள் இவற்றைப் பிடித்துக்கொண்டு தொங்குவதில்லை என்கிறார்கள்.
இந்தியர்களின் வாழ்க்கை குறித்த இந்தப் பார்வையை நாம் வெறுமனே இகழாமல் அவர்கள் சொல்வது முழுவதும் தவறா… நாம் சொல்வது மட்டுமே முழுவதும் சரியா என்று ஒரு கணமேனும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்த உலகம் களைத்துப்போகும் அளவுக்கு உழைக்கமட்டுமேயானதா (நம்மிடையே கொண்டாட்டம் கூட வேலை என்று ஆகிவிட்டிருக்கிறது); எப்போதுமே பரபரப்பும் ஆவேசமும் நிறைந்த வாழ்க்கைக்கானதா? வட பகுதி ஆரியர்களான நாம் கொஞ்சம் குறைவான வேலையினால் நிம்மதி அடைபவர்களாக இருக்கக்கூடாதா… கேளிக்கை, கொண்டாட்டம் என்று சொல்லப்படுவதைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளக்கூடாதா..? இன்னும் கொஞ்சம் ஆழ்ந்த சிந்தனை… கொஞ்சம் கூடுதல் ஓய்வு என்று நாம் வாழக்கூடாதா? நம் வாழ்க்கை குறுகியதுதான். ஆனால் நாம், காலையில் பிறந்து இரவுக்குள் அழியும் பூச்சிகள் அல்ல. நமக்கு நினைத்துப் பார்க்க ஒரு கடந்த காலம் இருக்கிறது. கனவு காண ஓர் எதிர்காலம் முன்னால் இருக்கிறது. எதிர்காலப் புதிர்கள் சிலவற்றுக்குக் கடந்த காலம் பற்றிய ஞானம் சில நேரங்களில் தீர்வுகளைத் தரக்கூடும்.
அப்படியான நிலையில் ஏன் நாம் நிகழ்காலத்தில் மட்டுமே நம் முழுக் கவனத்தையும் குவிக்கிறோம்? நாம் எப்போதும் ஏன் பணம், புகழ், அதிகாரம் என ஏதோவொன்றின் பின்னால் பரபரவென ஓடிக் கொண்டேயிருக்கிறோம். நாம் கொஞ்சம் நின்று நிதானித்து ஓய்வெடுத்து, நன்றி உணர்வுடையவர்களாக ஏன் ஆக மறுக்கிறோம்?
(தொடரும்)