Skip to content
Home » மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #20 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 5

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #20 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 5

அனுபவ அறிவுகளுக்கு அப்பால்…

ஆண்மை கலந்த துடிப்பு, விடாமுயற்சி, சமூக உத்வேகம், தனிப்பட்ட நற்குணங்கள் இவையெல்லாம் ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களின் ஒரு பக்கத்தை, குறிப்பாக மிக முக்கியமான பக்கத்தை, எடுத்துக்காட்டுகின்றன என்பதை நான் மறுக்கவில்லை. மனித குலம் இந்த பூமியில் செய்யவேண்டிவையே அவை என்பதும் உண்மையே. ஆனால், மனித குலத்துக்கு இன்னொரு பக்கமும் உண்டு.

இந்தப் பூவுலக வாழ்க்கையில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. அதை நாம் முழுவதுமாகப் புறக்கணிக்கக்கூடாது. கீழைத்தேயம் நோக்கி நாம் திரும்பிப் பார்த்தால், குறிப்பாக இந்தியாவை எடுத்துக்கொண்டு பார்த்தால், அங்கு வாழ்க்கை, போராட்டம் மிகுந்ததாக ஒருபோதுமே இருந்ததில்லை. மிதமான தட்பவெப்பம்; வளமான மண்; தாவர உணவுகளே உடல் ஆரோக்கியத்தையும் பலத்தையும் தக்கவைக்கப் போதுமானதாக இருந்திருக்கிறது. ஒரு சிறிய குடிசை அல்லது குகை போன்ற வீடு போதுமானதாக இருந்திருக்கிறது. லண்டன் அல்லது பாரிஸ் போல் அங்கு சமூக வாழ்க்கை என்றுமே பிரமாண்டப் பேருருவை எட்டியிருக்கவில்லை. சிறிய கிராம சமூகங்களாகவே பெரிதும் இருந்திருக்கின்றன. அந்த தேசத்துக்கு அதுவே மிகவும் இயல்பானது. அல்லது அங்கு அப்படித்தான் வாழ்ந்தாகவேண்டும் என்ற நிலை இருந்தது.

மனித குலத்தின் (மனதின்) இன்னொரு அம்சம் அங்கு வளர்ச்சியடைந்திருக்கிறது. பரபரப்பும், போர்க்குணமும், விஸ்தரிப்பு மனநிலையும் இல்லாமல் உள்ளொடுங்கிய, அக உலக, ஆழ்ந்த சிந்தனைவயப்பட்டதோர் அம்சம் அங்கு வளர்ந்துவந்திருக்கிறது. சிந்து அல்லது கங்கையின் சந்தோஷம் நிறைந்த சமவெளிகளில் பள்ளத்தாக்குகளில் காலடி எடுத்துவைத்தபோது ஆரியர்கள் அங்கிருந்த மிதமான வாழ்க்கையை வாரத்தின் ஏழு நாட்களுமே ஞாயிறு போல அல்லது ஓய்வு நாள் போன்ற வாழ்க்கையாக இருப்பதைப் பார்த்திருப்பார்கள். அல்லது முடிவற்ற விடுமுறைக்காலம் போல் நினைத்திருப்பார்கள். எவ்வளவு காலம் நீடிக்கிறதோ அது அப்படியே நீடிக்கட்டும் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் அது சீக்கிரமே அல்லது சிறிது காலம் கழித்தோ முடிவுக்கு வந்த ஒன்றுதான்.

எதற்காகச் செல்வங்களைக் குவிக்கத் தொடங்கியிருக்கிறோம்? எதனால் பெரிய பெரிய அரண்மனைகளைக் கட்டத் தொடங்கினோம்? ஏன் இரவும் பகலும் கடின உழைப்பில் ஈடுபட்டோம்? என்ற கேள்விகள் எல்லாம் அவர்கள் மனதில் எழுந்திருக்கும். வாழ்வின் உடம்பின் அடிப்படைத் தேவைகளுக்கு மிதமாக உழைத்து பூர்த்தி செய்துகொண்டபின்னர், இந்தப் புதிய விசித்திரமான அந்நிய தேசத்தில் உள்முகமாகத் தம்மைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியிருப்பார்கள். தம்மைத் தாண்டிய உயர்வான ஒன்றைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்திருப்பார்கள். வாழ்க்கை என்று நாம் சொல்கிறோமே அதன் உண்மையான அர்த்தம் என்ன என்ற தேடலை ஆரம்பித்திருப்பார்கள். அதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முயற்சிகள் எடுக்க ஆரம்பித்திருப்பார்கள்.

இப்படியான சிந்தனைகள், உள் முகப் பயணங்கள் ஆகியவற்றைக் கற்பனை, நிஜமற்றவை, நடைமுறை சாத்தியமற்றவை என்றெல்லாம் நாம் சொல்லலாம். நமது வாழ்க்கையின் லட்சியங்களாக நாம் சொல்பவற்றையெல்லாம் குறுகிய பார்வை கொண்டவையாக, தேவையற்ற விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்துகிற, நடைமுறை சாத்தியமற்றவையாக அவர்களும்தான் சொல்கிறார்கள். வாழ்க்கை கேளிக்கை, கொண்டாட்டங்களுடன் வாழ்வதற்கே என்று நினைக்கும் நம்மை வாழ்வின் உண்மை அர்த்தத்தைக் கோட்டைவிடுபவர்களாக அவர்கள் சொல்கிறார்கள்.

இந்த இரண்டுமே இரு துருவப் பார்வைகள் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த எல்லைகள் அவை எந்தக் கீழைத் தேசத்தாலும் மேலைத் தேசத்தாலும் முழுவதுமாக உணரவோ வாழவோ பட்டிருக்காது என்பதும் உண்மையே. நாம் எப்போதும் கடினமாக உழைத்துக் கொண்டே இருக்கவில்லை. நாமும் சிறிது நேரம் ஓய்வெடுத்து, அமைதியாக அமர்ந்து, சிந்திக்கவும் செய்திருக்கிறோம். இந்தியர்கள் எப்போதும் வாழ்க்கையின் ஆதாரத் தேடல்கள், கேள்விகள் பற்றிய தியானத்திலேயே ஆழ்ந்துமிருக்கவில்லை. கற்பனைகளிலேயே உழன்றிருக்கவும் இல்லை. தேவைப்பட்டபோது அவர்களும் வீரத்துடன் நம் நாயகர்கள் போல் போராடியிருக்கிறார்கள். போதிய தொழில்நுட்பங்கள், எந்திரங்கள் இல்லாமல் மிகச் சிறிய கைவினைப் பொருளைக்கூட உற்பத்தி செய்பவருக்கும் வாங்குபவருக்கும் மகிழ்ச்சியைத் தரும்வகையில் அற்புதமான கலை அழகுடன் உருவாக்கவும் செய்திருக்கிறார்கள்.

எனவே உங்கள் முன்னால் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் தன் வாழ்க்கைக் கடமையைப் பூர்த்திசெய்ய வேண்டியிருந்த ஆரியர்கள், நிச்சயமாக வடபுலத்து ஆரியர்களைவிடப் போராட்ட, போர்க்குணங்களில் குறைவுபட்டவராகவே இருந்திருப்பார். வட புல ஆரியர்களுக்கு அந்தப் போர்க்குணங்கள் இருந்திருக்கவில்லையென்றால் பனிப்பிரதேசம் போன்ற நெருக்கடியான பகுதியில் உயிர் வாழ்ந்திருக்கமுடியாது. எனவே அப்படியான போராட்டக் குணங்களுடன் தென் புலத்து ஆரியர்கள் இல்லை என்பதால் அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் மந்தமாகி, வீணாகிவிட்டதாகவும் சொல்லமுடியாது.

தென்புல ஆரியர்களின் (இந்தியர்களின்) வாழ்க்கைப் பார்வையை நாம் வட புலத்தில் பின்பற்ற முடியாது. எனினும் அந்த வாழ்க்கைப் பார்வை நமக்கு ஓர் எச்சரிக்கையை, பாடத்தைக் கற்றுத் தரமுடியும். கேளிக்கை நிறை வாழ்க்கைக்காக அல்ல; வாழ்க்கையின் உயரிய நோக்கங்களுக்காகத் தியாகங்கள் செய்யத் தயாராகவேண்டும் என்று லட்சியத்தைக் கற்றுத் தரமுடியும்.

பழங்காலத்தில் மாபெரும் வெற்றிகளைப் பெற்ற மாமன்னர் (அலெக்சாண்டர்) இந்தியத் துறவியிடம் அவருடைய மொழியில் பேச முடியவில்லையே; அவருடைய ஞானத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ளமுடியவில்லையே; துபாஷியாக இருக்கும் சாதாரண நபரின் மூலம்தானே பேசிக்கொள்ள முடிகிறது என்று மௌனமாக வருந்தியிருக்கிறார்.

இன்றும் அப்படியான நிலை நீடிக்கத் தேவையில்லை. சமஸ்கிருதம் கற்பதற்குக் கடினமான மொழியல்ல. அதைக் கற்றுக் கொள்வதன் மூலம் ஒவ்வொரு பிரிட்டிஷ் இந்தியக் குடிமைப்பணி அதிகாரியும் இந்திய ஞானத்தின் ஊற்றுக்கண்ணுக்கு அருகில் செல்ல முடியும். அங்கு பயனற்ற, விசித்திரமான பல விஷயங்கள் இருக்கும். என்றாலும் அவற்றில் வாழ்க்கை தொடர்பாகக் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்களும் இருக்கவே செய்யும். நமது அவசர புத்தியினால் வெறுத்து புறமொதுக்கி வந்திருக்கும் பல ஞானங்கள் அங்கு இருக்கின்றன.

இந்தியாவில் அடிக்கடிச் சொல்லப்படும் சிலவற்றை உங்களுக்கு வாசித்துக் காட்டுகிறேன். ஒரு நாளின் வேலைகள் எல்லாம் முடிந்த பின்னர் முதியவர்களும் இளையவர்களும் கிராமத்தில் இருக்கும் பெரிய மரத்தின் கீழே ஒன்றுகூடுவார்கள். அப்போது அங்கு அவர்கள் சொல்லும் விஷயங்கள் அவர்களுக்கு சத்திய வாக்குகள். தத்துவார்த்த உண்மைகள் நமக்கோ அவை சலிப்பூட்டும் சாதாரண விஷயமாகத் தெரியலாம்.

நாமெல்லாரும் ஒருநாள் இந்த மண்ணுக்குள் போகத்தான் போகிறோம். பின் எதற்காக வாழும்போது ஒருவருக்கு ஒருவர் தீமை செய்ய விரும்புகிறோம்.

நிலையற்ற உலக இன்பங்களை அடையத் துடிக்கும் மூடன் அனுபவிக்கும் வேதனையில் நூறில் ஒரு பங்குகூட அனுபவிக்காமல் நிரந்தரப் பேரின்பத்தை (மோக்ஷத்தை) அடைய விரும்பும் ஒருவர் அதை அடைந்துவிடுவார்.

ருசிக்குத் தின்னும் பணக்காரனின் உணவைவிடப் பசித்துத் தின்னும் ஏழையின் உணவே அதிக ருசியாக இருக்கும். பசித்துப் புசி.

நமது உடல் என்பது கடலில் தோன்றும் நுரை போன்றது. நமது வாழ்க்கை மரத்திலிருந்து பறந்து செல்லும் பறவை போன்றது. நமது அன்புக்குரியவர்கள் நம்முடன் எப்போதும் இருக்கமாட்டார்கள். அப்படி இருக்கும்போது அன்புக் குழந்தாய் மாயையில்/அறியாமையில் ஏன் மூழ்கிக் கிடக்கிறாய்?

கடலில் மிதக்கும் இரண்டு கட்டைகள் ஓர் அலையில் அருகருகே வந்து அடுத்த அலையில் விலகிச் செல்வதுபோன்றதுதான் வாழ்க்கையில் உயிர்களின் நெருக்கமும் விலகலும்.

வாழ்க்கை ஒரு முடிவற்ற பயணம். மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் பயணத்தில் வரும் வழிப்போக்கர்களே. எனவே ஒரு மனிதர் தமது பயணம் எந்த இடத்தை நோக்கியது… எங்கிருக்கிறோம்… எதனால் இங்கிருக்கிறோம்… எதை நினைத்தும் ஏன் வருந்தவேண்டும் என்பதையெல்லாம் தெளிவாகப் புரிந்துகொண்டாகவேண்டும்.

மனைவி, குழந்தைகள், உறவினர்கள், உடல், செல்வம் அனைத்தும் நிலையற்றவை. ஒரு நாள் கைவிட்டுச் சென்றுவிடும். அவை எதுவும் நமக்கு சொந்தமல்ல. அப்படியானால் நம்முடையது எது? நாம் செய்யும் நன்மை தீமைகளே நம்முடன் இறுதிவரை வரும்.

இந்த பூமியைவிட்டுச் செல்லும்போது ஒருவருடன் வேறு யாரும் துணைக்கு வரமாட்டார்கள். ஒருவர் செய்த நற்காரியங்களும் தீய காரியங்களும் மட்டுமே எங்கு சென்றாலும் தொடர்ந்து வரும்.

நன்மையோ தீமையோ எதைச் செய்தாலும் அதற்கான பலனை ஒருவர் அனுபவித்தே தீரவேண்டும்.

வேதங்களைப் பொறுத்தவரையில், ஆன்மா அழிவற்றது. ஆனால் உயிரினங்களின் உடல்கள் அழியக்கூடியவை. உடல் இறந்ததும் (அழிந்ததும்) ஆத்மா அந்த உடல் செய்த நன்மை, தீமைச் சங்கிலியால் கட்டுண்டு, அதன் பலாபலன்களைச் சுமந்துகொண்டு வேறொரு இடத்துக்கு (உடலுக்கு) செல்கிறது.

எனது உடல் அல்ல நான். எனது உடல் என்னுடையதல்ல; ஆனால் இந்த ஒட்டு மொத்த உலகமும் என்னுடையது என்பது எனக்குப் புரிந்துவிட்டால் அதாவது அந்தப் பரம்பொருளே நான்; நானே அந்தப் பரம்பொருள் (அஹம் பிரம்மாஸ்மி) என்பது புரிந்துவிட்டால் எந்தத் தீங்கும் எனக்கு நேராது.

மனிதர்கள் புதிய உடைகளை அணிவதுபோல், முன்பு அணிந்த உடையைக் கழற்றி ஓரமாக எறிவதுபோல், ஆத்மாவானது கர்ம பலன்களுக்கு ஏற்ப புதிய உடல்களை அணிந்துகொள்கிறது. பழைய உடல்களைக் களைகிறது.

ஆத்மாவை எந்த ஆயுதத்தாலும் அழிக்கமுடியாது. தீயால் எரிக்க முடியாது. நீரால் மூழ்கடிக்க முடியாது. காற்றால் அடித்துச் செல்ல முடியாது.

ஆத்மா அழிவதில்லை. நெருப்பால் சுடுவதில்லை. நீரால் நனைவதில்லை. காற்றால் உலர்வதில்லை. ஆத்மாவுக்கு அழிவு கிடையாது. மாறாதது; அசைக்க முடியாதது. ஆதி அந்தம் இல்லாதது.

ஆத்ம ஞானமே அனைத்துக்கும் மேலானது. எதைக் கண்டும் கலங்காதே.

பரமாத்மாவே அனைத்து உயிர்களிலும் இருக்கிறார். அனைத்து ஜடப் பொருள்களிலும் உறைந்திருக்கிறார். அவருக்கு அழிவில்லை. மாசு மருவற்றவர். அழியும் உடலுக்குள் இருக்கும் அழிவற்ற ஆத்மாவை உணர்பவர்கள் அழிவற்ற நிலையை அடைவார்கள்.

மற்ற அனைத்தையும் வெறுத்து ஒதுக்கிவிட்டு ஞானவான்கள் ஆத்ம ஞானத்தையே தேடிச் செல்வார்கள்.

– இந்த போதனைகளை நாம் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

இந்த ஆத்மம் ஞானம் என்பதுதான் வேதாந்தத்தின் சாரம். அதாவது வேதங்களின் அந்தமான, உன்னதமான, உயர்ந்த இலக்கு.

கிரேக்கமும் ‘நம்மை நாம் அறிதலே ஆகப் பெரிய ஞானம்’ என்று சொல்கிறது. ‘தன்னைத் தான் அறிதலே உன்னத ஞானம்’ என்று இந்தியா சொல்கிறது.

இந்தியாவின் தனித்தன்மை வாய்ந்த அம்சத்தை ஒரே ஒரு வார்த்தையில் சொல் என்று என்னிடம் கேட்டால், ஆழ்ந்த சிந்தனை (அப்பாலான ஞானம்) என்று சொல்வேன். காண்ட் என்ன அர்த்தத்தில் இந்தப் பதத்தைச் சொன்னாரோ அதில் அல்ல. அனுபவ அறிவுகளின் எல்லைகளைத் தாண்டிய விஷயங்களில் ஆழ்ந்து நிற்கும் மனம் என்று அதைச் சொல்கிறேன்.

அனுபவ அறிவுகள் மூலம் கிடைப்பவற்றிலேயே திருப்தியடையும் மனங்கள் உலகில் இருக்கின்றன. தரவுகளின் அறிவு, நன்கு உறுதியான அறிவு, நன்கு வகைப்படுத்தப்பட்ட அறிவு, நன்கு முத்திரையிடப்பட்ட அடையாளப்படுத்தப்பட்ட அறிவு இவற்றிலேயே திருப்தியடையும் மனங்கள் நிறைய இருக்கின்றன. இப்படியான அறிவு மிகப் பெரிய அளவுக்கு இருக்கும். அறிவே வலிமை என்று சொல்லமுடியுமென்றால், இது மிகப் பெரிய வலிமையைத் தரும். உண்மையான அறிவார்ந்த ஆயுதம் மிகுந்த வலிமையை, அதிகாரத்தைப் பயனைக் கொடுக்கும். நமது நவீன காலம் அப்படியான அறிவைப் பெற்றிருப்பது மற்றும் சேகரிப்பதைப் பெருமையாக, பெருமிதமாகச் சொல்கிறது. அதோடு திருப்தியும் அடைகிறது. அனுபவ அறிவைத் தாண்டி எதையும் தெரிந்துகொள்ள முயற்சி செய்வதே இல்லை. இப்படியானது மிகுந்த சந்தோஷத்தைத் தரும் மனநிலைகளில் ஒன்று என்று நானும் நம்புகிறேன்.

ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி அப்பால்-ஆழ்ந்த என்ற ஒன்று இருக்கிறது. அந்த ஞானத்தை தரிசித்திருப்பவர் – சூரியனை நேருக்கு நேர் பார்த்ததுபோல் எங்கு பார்த்தாலும் சூரிய பிம்பத்தையே பார்ப்பதுபோல் – அந்த ஞானத்தையே அதன் தேடலையே அனைத்திலும் பார்ப்பார். கண் முன் தெரியும் பருப்பொருள் பற்றி நீங்கள் அவரிடம் பேச ஆரம்பித்தால் எல்லையற்ற ஒன்று இல்லாமல் இந்த எல்லைக்குட்பட்ட ஒன்று சாத்தியமே இல்லை; அர்த்தமே இல்லை என்பார். காலம் பற்றி அவரிடம் பேசுங்கள். அநாதியானதன் நிழலே அது என்பார். மரணம் பற்றிப் பேசுங்கள்… அவர் அதை இன்னொரு ஜனனம் என்பார்.

நம்மைப் பொறுத்தவரையில் மனித உணர்ச்சிகள் எல்லாம் அறிவை சேகரிக்க உதவும் கருவிகள், வலிமையான எந்திரங்கள் என்று சொல்வோம். அவர்கள் இவற்றை மாயை என்பார்கள். இவை எல்லாம் ஆத்மாவின் விட்டு விடுதலையாகும் தன்மையைக் கட்டிப்போடும் தளைகள் என்பார். நாம் பார்க்கும், கேட்கும் உணரும் இந்த உலகம், இந்த வாழ்க்கை எல்லாமே நிஜமானவையே. இதுவே நம் உலகம் என்று நம்புகிறோம். இங்கே நமது கடமைகள், மகிழ்ச்சிகள் எல்லாம் இருக்கின்றன என்று நம்புகிறோம். அவர்களுக்கோ இந்த உலகம் இதற்கு முன் இருந்திராதது. ஒரு காலத்தில் இல்லாமல் ஆகப் போகிறதும் கூட. வாழ்க்கை என்பது குறுகிய காலக் கனவு மாத்திரமே. சீக்கிரமே நாம் விழித்துக் கொண்டுவிடுவோம். இந்தக் கனவு முடிவுக்கு வந்துவிடும். நாம் பார்ப்பதும், கேட்பதும் உணர்வதும் எல்லாம் உண்மை என்று நம்புவதே ஆகப் பெரிய அறியாமை என்று அவர் கருதுகிறார். நமது இந்த உலகம் பற்றிச் சொல்லும்போது நம் மறு உலகம் எங்கு இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் இந்த உலகம் நம்முடைய ‘வீடு’ அல்ல என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இந்தச் சிந்தனை கொண்டவர்கள் வெறும் கனவு அல்லது கற்பனை உலகில் வாழ்கிறார்கள் என்று நினைக்கவேண்டாம். அவர்கள் அதிலிருந்து வெகுதூரம் உயர்ந்து நிற்கிறார்கள். நாம் நமக்கு உண்மையாக நடந்துகொள்வோமென்றால் நம் மரபிலும் இப்படியான ஆழ்ந்த சிந்தனைகள், அப்பாலான உலகம் பற்றிய சிந்தனைகள் நமக்கும் தோன்றியிருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்வோம். வேர்ட்ஸ்வொர்த் போன்றவர்கள் இதுபோல் சொன்னவற்றை நாம் புரிந்துகொள்ளவும் செய்திருக்கிறோம்.

உணர்வுகள், புறத் தோற்றங்கள்
ஆகியவற்றின் பிடிவாதமான கேள்விகள் தர்க்கங்கள்
(இவையெல்லாம்)
நம் வீழ்ச்சிகள்… அழிவுகள்
உணரப்படாத உலகங்களில் சஞ்சரிக்கும் உயிரின்
அப்பட்டமான பிழைகள்

இவ்வுலகுக்கு அப்பாலான ஆழ்ந்த விஷயங்களை அலசி ஆராய்வதில் இந்திய மனமே இந்த உலகிலேயே முழுமையான மேலாதிக்கத்தைப் பெற்றிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் வேறு எந்தவொரு தேசமும் எந்தவொரு தனி நபரும் அப்படியான அப்பாலான ஞானத் தேடலில் ஈடுபடவே இல்லை என்றும் சொல்லமுடியாது. நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான ஒன்றின் பேரில் இவை எல்லாவற்றையும் நாமும் செய்துகொண்டுதான் வருகிறோம். அதன் பெயர் தான் மதம்!

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures
பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *