Skip to content
Home » மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #21 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 6

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #21 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 6

அதி ஆதி காலமும் வேத காலமும்

பொதுவான மதம் என்பதற்கும் ஏதேனும் ஒரு மதம் என்பதற்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். பொதுவாக மொழி என்பதற்கும் ஒரு மொழி என்பதற்கும் உள்ள வித்தியாசம்தான் அது. ஒரு நபர் ஏதேனும் ஒரு மதத்தை ஏற்றுக்கொள்ளலாம். கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்படலாம். தனது மதத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ளவும் செய்யலாம். ஒரு நபர் பல மொழிகள் பேசுவதுபோல் பல மதங்களை ஒருவர் பின்பற்றவும் செய்யலாம். ஆனால் ஒரு மதத்தை ஏற்பதென்றால் ஏதேனும் ஒரு மதத்தை அவர் பின்பற்றியாகவேண்டும். இந்த உலகின் எல்லைகளைத் தாண்டிய விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். எல்லையற்ற ஒன்றைப் பற்றிச் சிந்தித்திருக்கவேண்டும். அது அவர் மனதில் இருந்து ஒருபோதும் விலகிச் செல்லாது.

இந்த உலகம் தொடர்பான புலன் உணர்வுகளிலேயே திருப்தியடையும் நபர், எல்லையற்ற ஒன்றின் சிந்தனையே இல்லாமல், குறுகிய புலன் எல்லைகள் கொண்டவர் மத நம்பிக்கைகள், கோட்பாடுகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடியாதவராகவே இருப்பார். அனைத்து மனித அறிவுகள், அறிதல்கள் சார்ந்தவற்றின் வரையறைக்குட்பட்ட குறுகிய அம்சத்தைப் புரிந்துகொள்ளும்போதுதான் மனித மனதுக்கு அவற்றைத் தாண்டிய எல்லையற்ற, பார்க்க முடியாத, பார்க்கப்படாத, மீ மெய்யியல் அல்லது தெய்விகம் என்ற ஒன்றைப் புரிந்துகொள்ளமுடியும். எந்தவொரு மதமும் மத உணர்வும் உருவாவதற்கு முன்பே அந்தப் படிநிலை உருவாகியிருக்கும். அதன் பின் ஒருவர் எந்த மதத்தினராக ஆகிறார் என்பதும் என்னவிதமான மதமாக அது உருவாகிறது என்பதும் என்னவிதமான இனம் அதை முன்னெடுத்துச் செல்கிறது, இயற்கைச் சூழல் என்னவாக இருக்கிறது…. வரலாற்று அனுபவங்கள் என்னவாக இருக்கிறது ஆகியவற்றைப் பொறுத்தது.

நமக்கு இப்போது பல மதங்கள் பற்றித் தெரியவந்திருக்கிறது. நான் இங்கு பழங்கால மதங்கள் பற்றிப் பேசுகிறேன். அதாவது தேசம் முழுவதும் தழுவிய அல்லது பூர்வ குடி மதங்கள் பற்றிப் பேசுகிறேன். தனி இறைத்தூதர்கள் அல்லது சீர்திருத்தவாதிகளால் ஆரம்பிக்கப்படாத மதங்கள் பற்றிப் பேசுகிறேன்.

இப்படியான பழங்கால மதங்களைப் பொறுத்தவரையில் அவற்றின் மிக முக்கியமான விஷயங்களான தொடக்கம் அல்லது அவற்றின் வளர்ச்சி பற்றி நமக்கு எதுவுமே தெளிவாகத் தெரிந்திருப்பதில்லை. யூத மதமானது ஆதியிலிருந்தே முழுமையானது, மிகவும் அற்புதமானது என்றே நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. மிகுந்த சிரமங்களுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் பின்னரே அவற்றின் உண்மையான தொடக்கங்கள் மற்றும் வரலாற்றுப்பூர்வமான வளர்ச்சி பற்றியெல்லாம் நமக்குத் தெரியவந்திருக்கிறது.

கிரேக்க, ரோமானிய மதங்களை எடுத்துக் கொள்வோம். ட்யூடானிக் மற்றும் ஸ்லோவிய அல்லது செல்டிக் பழங்குடிகளின் மதங்களை எடுத்துக் கொள்வோம். நமக்கு அவை பற்றித்தெரியவரும் முன்பே அவற்றின் வளர்ச்சிநிலைகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன. நமக்குத் தெரியவந்த பின்னர் அவற்றின் மாற்றங்கள் எல்லாம் முழுக்கவும் உருமாற்ற வகையானவையே. ஏற்கெனவே வரையறுக்கப்பட்டு கைவசம் முழுமையாகக் கிடைத்திருப்பவற்றில் நடந்த மேலோட்டமான மாற்றங்கள் மட்டுமே.

இந்தியாவின் பூர்வ குடிகளைப் பற்றிப் பார்ப்போம். அங்கு மதம் என்பது ஒருபடைத்தன்மை கொண்டதாக இருந்திருக்கவில்லை. அனைத்து அம்சங்களை உள்ளடக்கியதாக அது இருந்தது. வழிபாடு, பிரார்த்தனை ஆகியவற்றை மட்டுமல்ல; தத்துவம், நல்லொழுக்கம், சட்டம், அரசு என அனைத்தையும் தழுவியதாக அனைத்தையும் நெறிப்படுத்துவதாக மதம் இருந்தது. அவர்களுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையுமே மதம் சார்ந்தது. மற்றவையெல்லாம் வாழ்க்கையின் நிலையற்ற தேவைகளுக்காகச் செய்யப்படும் சாதாரண விஷயங்கள் மட்டுமே.

இந்தியப் பழங்கால மத இலக்கியங்கள் அல்லது வேதங்களில் இருந்து எவற்றை நாம் கற்றுக் கொள்ள முடியும்?

கிரேக்கக் கடவுள்கள் எந்த பெளதிக அம்சத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள கிரேக்க மதம் பற்றியோ கிரேக்க மொழி பற்றியோ அதிகப் புலமை தேவையே இல்லை. ஒரு பள்ளிக்கூட மாணவருக்குக் கூட ஜீயஸ் என்றால் ஆகாயம் தொடர்புடைய கடவுள். போஸிடான் என்றால் கடல்; ஹடேஸ் என்றால் பாதாள உலகம்; அப்பல்லோ என்றால் சூரியன்; அர்டெமிஸ் என்றால் நிலவு; ஹெலெஸ்டாஸ் என்றால் நெருப்பு என்று எளிதில் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் கிரேக்கக் கோணத்தில் பார்த்தால் ஜீயஸுக்கும் ஆகாயத்துக்கும் இடையில் நிறைய வேறுபாடு உண்டு. போஸிடானுக்கும் கடலுக்கும், அப்பல்லோவுக்கும் சூரியனுக்குக், அர்தெமிஸுக்கும் நிலவுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் உண்டு என்பது உண்மையே. ஆனால் வேதங்களில் நாம் எதைக் காணமுடிகிறது?

வேதங்களின் சில தத்துவார்த்த ஸ்லோகங்கள் பலராலும் மேற்கோள்காட்டப்படுகின்றன. வேதங்கள் என்றால் புதிரான மந்திரங்கள் என்று நினைக்கும் அளவுக்கு அவை சொல்லிக்காட்டப்படுகின்றன. ஹோமரின் காவியங்களில் இருப்பதுபோல் நாடகிய அம்சங்களைக் கொண்டவர்களாக தேவர்கள் அல்லது தெய்வங்கள் சில வேதப் பாடல்களில் புராண அம்சங்களுடன் இடம்பெறுவதையும் பார்க்க முடிகிறது.

ஆனால், பெரும்பாலான வேதச் செய்யுள்கள் நெருப்பு, நீர், ஆகாயம், சூரியன், புயல்கள் (காற்று) ஆகியவற்றை எழுந்தருளச் செய்யும் மந்திரங்களாகவே இருக்கின்றன. வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் அதே பெயரிலேயே ஹிந்து தெய்வங்களாகவும் அவை பின்னாளில் ஆகிவிட்டிருக்கின்றன. இவையெல்லாம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவை, புராணங்கள் என்று சொல்லிவிட முடியாதபடியாக இருக்கின்றன. இவற்றில் பகுத்தறிவற்றதென்று எதுவும் இல்லை.

புயல் காற்றை நிற்கச் சொல்லி வேண்டுகிறார்கள். மழை பொழியச் சொல்லி வேண்டுகிறார்கள். சூரியனை ஒளிரச் சொல்கிறார்கள். இவற்றில் எந்தவொரு பகுத்தறிவுக்கு ஒவ்வாததன்மையும் இல்லை என்று நான் ஏன் சொல்கிறேனென்றால் மனித காரண காரிய சிந்தனைகள் எப்படியெல்லாம் வளர்ச்சியடைந்துவந்திருக்கின்றன அல்லது ஆரம்பநிலை – சிறுபிள்ளைத்தனமான சிந்தனைகள் எப்படியெல்லாம் வளர்ந்துவந்திருக்கின்றன என்பதைப் பற்றி ஆராய்ந்து தெரிந்துகொண்டிருப்பவர்களுக்கு இதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை.

காரண காரியத் தொடர்புகள், தானாகத் தோன்றிய உலகம் இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளச் சிறுபிள்ளைத்தனமான ஆரம்பகட்ட மனம் கண்டுசொன்னவற்றை நாம் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். இயற்கை வழிபாடு, குறியீட்டுப் பிரதிநிதித்துவம், உருவகம், கவிதை என்றெல்லாம் சொல்லும்போது இதனால் எதைக் குறிக்கிறோம் என்பது நமக்கு நன்கு புரியத்தான் செய்கிறது. இந்தப் பதங்கள் சொல்வதன் பொதுப்படையான அர்த்தம் நமக்கு நன்கு தெரியும். தான் தவறி விழுந்துவிட்டால் நாற்காலியை அடிக்கும் குழந்தைகளை நமக்குத் தெரியும். நாயைத் திட்டும் குழந்தையைப் பார்த்திருப்போம். மழையே மழையே ஸ்பெயினுக்குப் போ என்று பாடும் குழந்தையைத் தெரியும். இவையெல்லாம் என்னதான் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவையாகத் தோன்றினாலும் இவையெல்லாம் இயல்பானவை… பகுத்தறிவுக்கு உட்பட்டவை. சிந்தனையின் ஆரம்ப கட்டத்தில் அல்லது மனித மனதின் குழந்தைப் பருவ நிலையில் தவிர்க்க முடியாதவையே.

மன வளர்ச்சியின் இந்த ஆரம்ப காலகட்டத்தில்தான் பழங்கால மதங்கள் உருவாகியிருக்கின்றன. அவையெல்லாமே முன் அனுமானம் அல்லது யூகங்களை அடிப்படையாகக் கொண்டவை. இவை உலகின் பிற பகுதிகளில் காணக்கிடைக்கவில்லை. இவை பற்றி ரிக்வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மனித மனதின் ஆரம்ப கால கட்ட வளர்ச்சியின் பழங்கால அத்தியாயங்களான அவை இந்திய இலக்கியங்களில் பொதிந்து பாதுகாக்கப்பட்டுள்ளன. கிரேக்க அல்லது ரோமாபுரி இலக்கியங்கள் அல்லது பிற எங்குமே காணக்கிடைக்காதவை.

மனிதர்களை (மனித வரலாற்றை) ஆராய்பவர்கள் அல்லது மானுடவியலாளர்கள் எல்லாம் அதி ஆரம்ப கால அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் மனிதனின் வளர்ச்சியைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் பூர்வகுடி தேசங்களைப் பற்றி ஆராயவேண்டும் என்று சொல்வதைப் பார்த்திருப்போம். ஆசியா, ஆஃப்ரிக்கா, பாலினீசியா, அமெரிக்கா போன்ற பகுதிகளில் இப்படியான பூர்வ குடி மதங்கள் இப்போதும் இருந்தும் வருகின்றன.

வெய்ட்ஸ், டெய்லர், லுப்போக் மற்றும் பலர் எழுதிய படைப்புகளில் இருந்து நமக்குப் பல பயனுள்ள விஷயங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பது உண்மையே. ஆனால், இங்கு நாம் சார்ந்திருக்க வேண்டியிருக்கும் படைப்புகள் எதுவுமே முழுவதும் நம்பத் தகுந்ததல்ல என்பதை முதலிலேயே ஒப்புக்கொண்டாகவும் வேண்டும்.

இவையே எல்லாமும் அல்ல. ஆதி பழங்குடிகள் பற்றி அவர்களுடைய வரலாற்றின் கடைசி அத்தியாயம் அல்லாமல் நமக்கு வேறு என்னதான் தெரியும்? அவற்றுக்கு முன்னாலானவை பற்றி நமக்கு ஏதேனும் உள்ளொளி கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? அவர்கள் எப்படியானவர்களாக இருந்தார்களோ அப்படியானவர்களாக அவர்கள் எப்படி ஆனார்கள் என்ற மிகவும் முக்கியமான மற்றும் பல உண்மைகளைக் கற்றுத் தரக்கூடிய விஷயத்தை நம்மால் புரிந்துகொள்ளமுடியுமா? அவர்களுடைய மொழி நமக்குக் கிடைத்திருப்பது உண்மையே. ஹோமரின் கிரேக்க மொழி, வேதங்களின் சமஸ்கிருத மொழி ஆகியவற்றில், தொல் பழங்காலத்திய வளர்ச்சி நிலைகள் பற்றிச் சில தடயங்கள் கிடைக்கத்தான் செய்கின்றன.

சிக்கலான புராணவியல், சடங்கு சம்பிரதாயங்கள், புதிரான சிந்தனைகள், பழங்கால அம்சங்கள் இவற்றையெல்லாம் பார்க்கும்போது புறச்சமயிகள் என்று சொல்லப்படக்கூடியவர்கள் எல்லாம் இன்றோ நேற்றோ வாழ்ந்தவர்கள் அல்ல என்பது நமக்குத் தெளிவாகப் புரியவருகிறது. இந்தப் பழங்குடி அம்சங்கள் எல்லாம் ஹிந்துக்களைப் போல் கிரேக்க, ரோமானியர்களைப் போல் நம் மரபுகளைப் போல் மிக மிகப் பழங்காலத்தையவை என்பதை நாம் ஒப்புக் கொண்டாகவேண்டும்.

இவர்களுடைய வாழ்க்கை, காலம் எல்லாம் எந்த மாற்றமும் அடையாமல் தேங்கி நின்றன என்று நாம் விரும்ப விரும்பினால் விரும்பலாம். 3000 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தார்களோ அப்படித்தான் இப்போதும் ஹிந்துக்கள் இருக்கிறார்கள் என்று நாம் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அது வெறும் யூகம் மட்டுமே. அவர்களுடைய மொழியைப் பார்த்தால் இதற்கு முற்றிலும் மாறுபட்ட சித்திரமே நமக்குக் கிடைக்கும். பல்வேறு மாற்றங்களைத் தாண்டி வந்திருப்பார்கள்.

நாம் தொன்மையான காலத்தவை என்று நினைப்பவையெல்லாம் அதற்கு வெகு காலத்துக்கு முன் பகுத்தறிவுடனும் அறிவார்ந்தும் இருந்தவையெல்லாம் நலிவுற்று வந்தடைந்த ஒரு நிலையாகக்கூட இருக்கலாம். அவர்களுடைய சிக்கலான அம்சங்கள் எல்லாம் முன் அனுமானங்கள், மூட நம்பிக்கை, பெருமிதம், மடத்தனம் ஆகியவற்றின் தொகுப்பாகத் தோன்றலாம். ஆனால் காரண காரியமற்ற அவற்றில் ஆங்காங்கே தர்க்கபூர்வ அம்சங்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அறிவார்ந்தவை எப்படி அறிவு வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன; சடங்குகள் எப்படி சம்பிரதாயமானவையாக ஆகிவிட்டிருக்கின்றன. வெற்று சம்பிரதாயங்கள் எப்படிக் கேலிக்கூத்துகளாகிவிட்டிருக்கின்றன என்பவற்றையும் தெரிந்துகொள்ளமுடிகிறது.

மனித வாழ்க்கையின் தாழ் நிலை அடுக்கு, நாகரிகத்தின் தொடக்க நிலை பற்றியெல்லாம் இந்த ஆதி பழங்குடி காலத்திலிருந்துதான் நான் தெரிந்துகொண்டாகவேண்டுமா..? இதற்கும் முந்தைய காலகட்டம் பற்றி நம்மால் தெரிந்துகொள்ள முடியாதென்பதால் இந்த தொல் பழங்காலத்தை மட்டுமே சார்ந்திருக்கவேண்டுமா?

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்தவிரும்புகிறேன். இன்று நாம் படிக்கக்கூடிய நீதி போதனைக் கதைகள், தேவதைக் கதைகள், மரபுகள், பழங்குடி தேசங்களின் செய்யுள்கள் ஆகியவற்றுக்கு எவ்வளவு ஆய்வு முக்கியத்துவம் தருகிறேனோ அதற்கு அதிகமாக இந்திய இலக்கியத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் தருவதாகத் தவறாக நினைத்துவிடவேண்டாம். மனித அறிவியல் தொடர்பான ஆய்வுகளுக்கு இரண்டுமே முக்கியமான ஆவணங்கள்தான். வேதங்கள் மனித நாகரிகத் தொடக்கத்துக்கு மிக நெருங்கிய இடத்தில் மிக நெருங்கிய காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கின்றன என்று மட்டுமே சொல்கிறேன். நம்மால் யூகித்தறிய முடியாத ஆதி ஆரம்ப காலம். புதர் மனிதர்கள் அல்லது ஹோட்டேனாட் பழங்குடிகளையும்விடத் தொல் பழங்காலம்.

ஆதி காலம் என்று நான் சொல்லும்போது உண்மையான ஆதி காலம் பற்றிக் குறிப்பிடவில்லை. எல்லாவற்றுக்கும் முந்தைய அதி ஆதி காலமான அனைத்துக்கும் தொடக்கமான காலம் பற்றிச் சொல்லவில்லை. நான்கு கால்களில் நடந்துகொண்டிருந்த மனிதன் இரண்டு கால்களில் எழுந்து நிற்கத் தொடங்கியதுமே வேதங்களை வெள்ளம்போல் பொழிய ஆரம்பித்துவிட்டதாக நான் சொல்லவில்லை. ஆனால் இதை முதலில் பாடியது யார்? வேதச் செய்யுள்களைப் பார்க்கும் ஒருவருக்கு, காட்டில் இருக்கும் அதி பழமையான மரத்தில் வளையத்துக்குள் வளையம் என அதன் பழமையைக் காட்டும் அம்சத்தைப் போல் வேதங்களின் ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் அதி பழமையின் வளையங்கள் சூழ்ந்திருப்பதைக் கண்ணுள்ள எல்லாருக்கும் காணமுடியும்.

முன்பும் சொல்லியிருக்கிறேன். அதை இப்போதும் சொல்கிறேன். வேதச் செய்யுள்கள் கி.மு. 1500-1000 காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கும். இவ்வளவு பழங்காலத்தில் எப்படி இவை எழுதப்பட்டிருக்கக்கூடும் என்பதை நம்மால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இன்றும் நமக்கு நவீனமாகத் தோன்றும் பல சிந்தனைகளை இந்தியர்கள் அந்தப் பழங்காலத்தில் எப்படி எழுதியிருக்கமுடியும்? பத்து புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கும் வேதச் செய்யுள்கள் எல்லாம் பெளத்தம் ஆரம்பிப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டுவிட்டன என்பதை மறுதலிக்கும்படியான எனக்கு ஏதேனும் சான்று கிடைத்தால் அதற்கு என் உயிரையே தரத் தயார்.

இவையெல்லாம் பின்னாளில்தான் எழுதப்பட்டன என்று சுட்டிக்காட்டக்கூடிய தரவுகள் இனிமேல் கண்டுபிடிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று சொல்லவில்லை. நான் என்ன சொல்கிறேனென்றால், இன்று நம் அறிவுக்கு எட்டியவரையில் இன்றைய நேர்மையும் நாணயமும் மிகுந்த சமஸ்கிருத ஆய்வாளர்கள் சொல்வதன் அடிப்படையில் பார்த்தால், பெளத்தத்துக்கு முந்தைய வேத இலக்கியங்களை அந்த ஐநூறு ஆண்டு காலத்தைவிட பெளத்தத்துக்கு நெருக்கமான ஒரு காலகட்டத்துக்குக் கொண்டுவர முடியாதென்றே சொல்கிறேன்.

அப்படியானால் இப்போது நாம் என்ன செய்யவேண்டும்? தொல் பழங்குடி மனித இனம் பற்றிய நம்முடைய முன் அனுமானங்களை நாம் சிறிது காலத்துக்கு ஓர் ஓரமாக வைத்துவிடுவது நல்லது. இன்று 19-ம் நூற்றாண்டில் நாம் புதுமையானதாக, நவீனமானதாக நினைக்கும் சிந்தனைகளை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மனிதர்கள் சிந்தித்துவிட்டிருக்கிறார்களென்றால் தொல் பழங்குடிகள் பற்றிய நம் தீர்மானங்களை நாம் மாற்றிக் கொண்டேயாகவேண்டும். பெரியவர்களுக்கெல்லாம் தெரியாத பல பேருண்மைகள் குழந்தைகளுக்குத் தெரிந்துவிட்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டாகவேண்டும்.

மனிதர்களைப் பற்றிய மூல ஆய்வுகளுக்கு (நீங்கள் விரும்பினால் ஆரிய மனித மூலம் பற்றிய ஆய்வுகளுக்கு என்று சொல்லிக் கொள்ளலாம்) வேதங்களைப் போல் மிக முக்கியமான படைப்புகள் இந்த உலகில் எங்குமே இல்லை. தன்னைப் பற்றி, தன் முன்னோர்களைப் பற்றி, வரலாறு பற்றி அல்லது தன்னுடைய அறிவு எப்படியெல்லாம் வளர்ந்துவந்திருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் ஒருவர் தெரிந்துகொள்ள விரும்பினால் அவருக்கு வேதங்கள் பற்றிய படிப்பும் ஆய்வும் தவிர்க்கவே முடியாதது என்று உறுதியாகச் சொல்கிறேன். தாராளக் கல்வி என்ற வகையில் பாபிலோனிய, பாரசீக மன்னர் ஆட்சிகளைவிட யூதா, இஸ்ரேலின் பல மன்னர்களின் காலத்தையும்விட மிகப் பழமையானது; மிக முக்கியமானது இந்த வேத காலம் பற்றிய கல்வி என்று தெளிவாகச் சொல்கிறேன்.

இந்தக் கருத்துகள் மிகுந்த தயக்கத்துக்குப் பின்னரே ஏற்றுக்கொள்ளப்படும் என்பது எனக்குத் தெரியும். அதுவும் யார் இவற்றை மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்க வேண்டுமோ அவர்களே அதாவது மானுடவியல் மாணவர்கள் கூட இதை ஏற்கத் தயங்கி நிற்பதையும் பார்க்கிறேன். ஓர் அற்புதம் போல் நம் கைக்குக் கிடைத்திருக்கும் இந்த வேதப் படைப்புகளைப் படிப்பதற்காகவே தமது முழு சக்தியையும் காலத்தையும் செலவிடுவதற்குப் பதிலாக, இவற்றையெல்லாம் படிக்கக்கூடாது என்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதிலேயே வீணடிக்கிறார்கள்.

ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ஜெர்மன் எனப் பல மொழிகளில் ரிக்வேதத்துக்கு பல்வேறு மொழிபெயர்ப்புகள் வெளியாகிவிட்டன. எனவே வேதங்களில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய எல்லாவற்றையும் நாம் கற்றுக் கொண்டாகிவிட்டது. இனியும் தெரிந்துகொள்ள அதில் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம். உண்மை முற்றிலும் மாறானது. இந்த மொழிபெயர்ப்புகள் எல்லாம் ஒரு வகையில் உத்தேசமான படைப்புகள் மாத்திரமே.

நானுமே கூட சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பல்வேறு முக்கிய வேதச் செய்யுள்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறேன். இவையுமே கூட வேதம் என்றால் என்னவாக இருக்கும் என்ற என்னுடைய உத்தேசமான புரிதலின் அடிப்படையில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டவையே. அதில் வெறும் 12 செய்யுள்களை மட்டுமே ஒரு தொகுப்பு முழுவதுமாக எழுதி வெளியிட்டிருக்கிறேன். இதை மிகவும் திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்த மொழிபெயர்ப்புகள் என்றே சொல்ல விரும்புகிறேன்.

நாம் வேத இலக்கியத்தின் மேலடுக்கில் மட்டுமே நின்றுகொண்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய விமர்சகர்களோ மனிதர்களின் ஆரம்பப் பழங்கால நிலை பற்றி வேதங்களால் பெரிதாக எதையும் நமக்குக் கற்றுத் தரவே முடியாது என்ற முடிவுக்கு அதற்குள் வந்துவிட்டார்கள். பழங்காலம் என்பதன் மூலம் அவர்கள் அதி ஆதி காலத்தில் இருந்ததைப் பற்றிக் கேட்கிறார்களென்றால் ஒருபோதும் கிடைக்க வாய்ப்பே இல்லாத ஒன்றையே அவர்கள் கேட்கிறார்கள் என்று அர்த்தம். ஆதாமும் ஏவாளும் தமக்குள் எழுதிக் கொண்ட கடிதங்கள் கிடைத்தால் கூட அல்லது முதல் ஹோமோ மற்றும் ஃபெமினா செப்பியன்ஸ் எழுதியவை கிடைத்தால்கூட அந்த அதி ஆதி காலப் படைப்பாக இருக்காது.

தொல் பழங்காலப் படைப்பு என்று சொல்வதன் மூலம், நம்மால் அறிந்துகொள்ள முடிந்த ஆதிகால மனிதர்கள் பற்றிய தகவல்கள் என்றுதான் சொல்லவருகிறோம். மொழியின் அடுக்குகளில் புதைந்து கிடக்கும் பழங்கால அம்சங்கள் தாண்டி அனைத்து ஆரியப் பழங்குடிகளுக்கும் பொதுவான வார்த்தைகளின் பொக்கிஷக் கிடங்கில், ஒவ்வொரு வார்த்தையும் எப்படியெல்லாம் உருவாகி வந்திருக்கிறது என்ற சிந்தனைகளில், ஒரு மானுடவியலாளருக்கு அதாவது உண்மையான மனித குலம் பற்றி ஆராய விரும்பும் நபருக்கு ரிக் வேதம் அல்லாமல் வேறு எந்தவொரு இலக்கியமும் இவ்வளவு கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களுடன் இல்லவே இல்லை.

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures
பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *