இந்திய வேதங்களில்
அந்நிய நாட்டினரின் தாக்கம் உண்டா?
வேதங்கள் தொடர்பான பெரும்பாலான மறுப்புகள் கற்பிதமானவையே. மிகுந்த சலுகை கொடுத்துச் சிலவற்றைப் பொருட்படுத்தி பதில் சொன்ன பின்னர், நமக்குத் தெரியவரும் உண்மை என்ன? ரிக்வேதக் கவிதைகள் (ஸ்லோகங்கள் – செய்யுள்கள்) அற்புதமான மொழி நடையில் எழுதப்பட்டுள்ளன. நுட்பமான தாள லயத்தில் அமைந்திருக்கின்றன. கடவுள்கள், மனிதர்கள், யாகங்கள், போர்கள், இயற்கையின் பல்வேறு அம்சங்கள், சமூகச் சூழல் மாறுபாடுகள், கடமை, இன்பம், தத்துவம், நல்லொழுக்கம் எனப் பல விஷயங்கள் பற்றிச் சொல்கின்றன. நாம் அதற்கு முன் சிறு சலனம் கூடக் கேட்டிருக்காத தொல் பழங்காலத்திலிருந்து முழுமையடைந்த இலக்கியமொன்று கிடைத்திருக்கிறது. இப்படியான அற்புதமான கண்டுபிடிப்பைப் பார்த்துப் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழவேண்டிய தருணத்தில் சில விமர்சகர்கள் அனைத்திலிருந்தும் விலகி நின்று, வெறும் குறைகளைமட்டுமே சொல்லிவருகிறார்கள். ஏனென்றால் இந்த இலக்கியப் படைப்பை உருவாக்கிய தொல் பழங்காலத்தினர் எல்லாம் பழங்குடிகள், காட்டுவாசிகள் எப்படி இருப்பார்கள் என்று இந்த விமர்சகர்கள் யூகம் செய்திருக்கிறார்களோ அப்படி இருக்கவில்லை. பாபுவா கினியா பழங்குடிகள் அல்லது புதர் மனிதர்கள் போல் அரை மிருக நிலையில், மரங்கள், குகைகளில் வசிப்பவர்களாக இல்லாமல் கல்லையோ மரங்களையோ வணங்குபவர்களாக மூடத்தனங்களை நம்புபவர்களாக ரிக்வேத காலத்தினர் இல்லை. மனித அறிவுப் பரிணாம வளர்ச்சியில் பழங்கால யூதர்கள் அல்லது கிரேக்கர்களுக்கு இணையான ஓர் இடத்தைத் தரும் அளவுக்கானவர்களாகவே இருக்கிறார்கள்.
பழங்குடி என்றால் பனியுகம் முடிந்ததுமே இந்த உலகில் குடியேறிய ஆதி பழங்குடிகள் என்று நாம் நினைப்போமென்றால் வேத காலத்தினர் நிச்சயம் அப்படியான பழங்குடிகள் அல்ல. ஆதிவாசிகள் என்றால் நெருப்பு பற்றித் தெரிந்திராத, முனை மழுங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்திய, மீன்களைப் பச்சையாகப் பிடித்து விழுங்கியவர்கள் என்று சொல்வோமென்றால் வேத காலத்தினர் அப்படியான ஆதிவாசிகள் அல்ல. விவசாயம் செய்யாத, ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வசிக்காத, மன்னர்கள், யாக பலிகள், சட்ட திட்டங்கள் எதுவுமே இல்லாதவர்கள்தான் பழங்குடிகள் என்று சொல்வோமென்றால் வேத காலத்தினர் அப்படியான பழங்குடிகள் அல்ல. ஆனால், பழங்குடிகள் என்றால் இந்த உலகில் வாழ்ந்த, ஆரிய இனத்தில் முதன் முதலாக இலக்கியப் படைப்புகளை எழுதிச் சென்றிருக்கும் குழு என்று சொல்வோமென்றால் வேத காலத்தினர் அப்படியான ஆதி குடியினரே. வேத மொழி அதி பழமையானது. வேத மதம் அதி தொன்மையானது. இந்த உலகில் நம்முடைய இனத்தின் அம்சங்கள் என்று வேத காலத்துக்கும் பழமையானது உலகில் எதுவுமே இல்லை.
வேதங்கள் தொடர்பான அனைத்து மறுப்புகளும் தோல்வியடைந்த நிலையில் கடைசியாக ஒரு துருப்புச்சீட்டை இறக்குவார்கள். வேத காலப்படைப்புகள் அந்நியச் செல்வாக்குக்கு அதாவது குறிப்பாக செமிட்டிக் செல்வாக்குகளுக்கு உட்பட்டதுதான் என்று சொல்வார்கள். வேத இலக்கியங்களின் மிக முக்கியமான சிறப்பான விஷயம் என்னவென்றால் மனித குலத்தின் மதம் சார்ந்த நம்பிக்கைகளில் அதி ஆரம்ப காலகட்டத்தை அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றே வேத ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அந்நிய சக்திகளின் செல்வாக்கு எதுவுமே இல்லாமல் செழித்து வளர்ந்திருக்கிறது. பிற எந்தவொரு மதத்தையும்விட பல நூற்றாண்டு காலத் தொடர்ச்சியைப் பார்க்கமுடிகிறது என்று சமஸ்கிருத அறிஞர்கள் சொல்கிறார்கள்.
இவற்றில் முதல் விஷயத்தை எடுத்துக்கொள்வோம்:
பழங்கால ரோமானிய மதத்தை இத்தாலிய, கிரேக்க செல்வாக்கு இல்லாததாக அல்லது எட்ரூஸிய, ஃபொனீஷிய தாக்கம் இல்லாததாகச் சொல்வது எவ்வளவு கடினம் என்பது நமக்குத் தெரியும். கிரேக்கர்களின் மதத்தில் எவையெல்லாம் அவர்களுடைய மண்ணில் இருந்து மட்டுமே உருவானது என்றும் எகிப்து, ஃபொனீஷியா, சைத்தியாவில் இருந்து எந்தெந்த அம்சங்கள் அதில் கலந்திருக்கின்றன என்றும் பிரித்துப் பார்க்கவே முடியாது. அந்நிய சிந்தனைகளின் தாக்கம் இவற்றில் எதில் இல்லை என்று சொல்லிவிடவே முடியாது. ஹீப்ரூக்களின் மதத்தில்கூட பாபிலோனியர்கள், ஃபொனீஷியர்கள், பிற்காலத்திய பாரசீகர்களின் செல்வாக்கு இருப்பதைக் காணமுடிகிறது. நவீன காலத்தை நோக்கி நெருங்கிவந்தால் சிந்தனைகளின் கலப்பு அதிகமாகிக் கொண்டே வந்திருக்கிறது. உலகப் பொது அறிவுப்புலத்தில் எந்தெந்த நாட்டின் பங்களிப்பு என்னென்னவையாக இருந்திருக்கிறது என்று சொல்வது சாத்தியமே இல்லை. ஆனால், இந்தியாவில் மட்டுமே அதிலும் குறிப்பாக வேத கால இந்தியாவில் மட்டுமே பூர்விக மண்ணிலிருந்து பூர்விகக் காற்றையும் நீரையும் ஒளியையும் மட்டுமே உட்கொண்டு வளர்ந்த ஒரு கலாசார செடியைப் பார்க்கமுடிகிறது. அந்நியத் தொற்றுகள் அனைத்திலிருந்தும் இந்த வேத மதம் பாதுகாக்கப்பட்டுவிட்டிருப்பதால் மதங்கள் பற்றிக் கற்றுக்கொள்ள விரும்பும் ஒருவருக்கு வேறு எதிலிருந்தும் கிடைக்கமுடியாத பாடங்கள் வேதங்களில் இருந்து மட்டுமே கிடைக்கமுடியும்.
வேதங்களை மறுப்பவர்கள் இதற்கு என்ன மறுப்பு சொல்கிறார்கள் தெரியுமா? வேதச் செய்யுள்களில் பாபிலோனியத் தாக்கம் மிகத் தெளிவாக இருக்கிறது என்கிறார்கள்.
சிறியதாகத் தோன்றினாலும் நான் சில விஷயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏனென்றால் அவை மிக மிகப் பரந்து விரிந்த பின்விளைவுகளோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன.
ரிக்வேதம் எட்டாம் அத்தியாயம் 78:2 என்ன சொல்கிறது தெரியுமா: ‘ஓ இந்திரா, அற்புதமான உணவுகள், பசு, குதிரை, நகைகள், தங்க மனா அனைத்தையும் கொடுத்தருள்வாய்’.
ஆ நோ வ்யாஞ்சனம் காம், அஸ்வம், அப்யாஞ்சனம் சசா மனா ஹிரண்யாய
‘தங்க மனா’ என்றால் என்ன? வேதங்களில் வேறு எங்கும் இது இடம்பெறவில்லை. இதை வேதங்கள் பற்றிய அறிஞர்கள் லத்தினீன் முனா, கிரேக்கத்தின் மெனா, ஃபொனீஷிய மனா(ஹ்) ஆகியவற்றுடன் அதாவது மனா என்ற எடை அளவுடன் இதை ஒப்பிட்டுச் சொல்கிறார்கள். பாபிலோனியா மற்றும் நினவே பகுதிகளில் இருந்து பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் எடைக்கல்லுடன் ஒப்பிட்டுச் சொல்கிறார்கள்.
இது சரியான மொழிபெயர்ப்பென்றால் பாபிலோனியாவுக்கும் இந்தியாவுக்கும் தொல் பழங்காலத்திலேயே வர்த்தகத் தொடர்பு இருந்திருக்கிறது என்பதை அழுத்தமாக எடுத்துக்காட்டும் ஆதாரமாக இது திகழும். ஆனால் இதைவைத்தும் இந்திய வேத சிந்தனையில் செமிட்டிக் செல்வாக்கு இருக்கிறது என்று சொல்லிவிடமுடியாது. இப்போது தங்க மனா என்பது எதைக் குறிக்கிறது என்பதைப் பார்ப்போம். ‘சசா மன ஹிரண்யாய’ என்பதை ‘தங்கக் குவியல்’ என்று எடுத்துக்கொள்ளலாம். சசா என்பது கருவிகள் பொருட்கள் பற்றிக் குறிப்பிடக்கூடியதல்ல. இந்த மனா என்ற பதம் ரிக்வேதத்தில் இதைத் தவிர வேறு எந்த இடத்திலும் இடம்பெறவில்லை. ‘மனா ஹிரண்யாய’ என்பது இரட்டையைக் குறிப்பதாக அதாவது ‘இரண்டு தங்க கை காப்புகளைக் கொடு’ என்று கேட்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
பாபிலோனியர்களிடமிருந்து வேத காலக் கவிகள் இந்த ஒரே ஒரு வார்த்தையை மட்டுமே கடன்பெற்றிருப்பார்கள் என்பது வரலாற்று ஆய்வின் விதிகளுக்கு முரணானது. ‘மனா’ என்ற சொல் வேதங்களில் வேறு எங்கும் இடம்பெறவும் இல்லை. வேறு பாபிலோனிய எடைகளும் சமஸ்கிருத இலக்கியத்தில் எங்குமே இடம்பெறவில்லை. பசு, குதிரை ஆகியவற்றை அருளச் சொல்லிக் கேட்கும் வேதக் கவி தங்கத்தை மட்டும் அந்நிய நாட்டு எடை அளவில் கேட்பார்; அதுவும் 60 பவுன் அளவிலான எடையைக் குறிப்பிட்டுக் கேட்பார் என்று நம்ப எந்த முகாந்தரமும் இல்லை.
இந்தியர்கள் பாபிலோனியரிடமிருந்து கடனாக வேறொன்றையும் பெற்றிருக்கிறார்கள். 27 நட்சத்திரங்கள் என சந்திரமான நாட்காட்டியில் இந்தியர்கள் குறிப்பிடுபவை பாபிலோனியாவில் இருந்து பெறப்பட்டவைதான் என்று சொல்கிறார்கள்.
பாபிலோனிய ராசிமண்டலம் சூரியனை மையமாகக் கொண்டது. எவ்வளவோ விரிவான ஆய்வுகள் செய்து முடித்திருக்கும் நிலையிலும் சந்திர ராசி மண்டலம் பற்றி பாபிலோனியாவில் க்யூனிஃபார்ம் கல்வெட்டுகளில் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. சந்திர ராசி மண்டலக் கணிப்பு பாபிலோனியாவில்தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாகவே வைத்துக்கொண்டாலும் வேத இலக்கியங்கள் மற்றும் அதில் இடம்பெறும் யாக யக்ஞங்கள் பற்றிப் படித்த ஒருவருக்கு ஹிந்துக்கள் இந்த எளிய நட்சத்திரக் கணக்கை பாபிலோனியர்களிடமிருந்துதான் தெரிந்துகொண்டிருப்பார்கள் என்று சொல்லவே மாட்டார்.
வேத கால யாகங்கள் எல்லாமே சூரிய நகர்வைவிட சந்திரனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்பட்டிருக்கின்றன. ரிக்வேதம் 10:85:18-ல் ‘சுய வலிமையில் சூரியனும் சந்திரனும் ஒருவர் பின்னால் ஒருவர், குழந்தைகள் யாக குண்டத்தைச் சுற்றி ஓடுவதுபோல் நகர்கிறார்கள். ஒருவர் அனைத்து உலகங்களையும் நிர்வகிக்கிறார். இன்னொருவர் பருவ காலங்களை நிர்ணயிக்கிறார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
’சந்திரன் பிறக்கும்போதெல்லாம் புதிது புதிதாகவே தோன்றுகிறார். சூரிய உதயத்துக்கு முன் மறைகிறார். யாகங்களில் தேவதைகளுக்கான பங்கைத் தீர்மானிக்கிறார். தீர்க்க ஆயுளை வழங்குகிறார்’ என்று இன்னொரு செய்யுள் சொல்கிறது.
ஆக, வேதங்களில் சந்திரனே பருவங்களைத் தீர்மானிப்பவராகவும் தெய்வங்களுடைய அவிஸ் பங்கைத் தீர்மானிப்பவராகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறார். பழங்கால இந்துக்களைப் பொறுத்தவரையில் பருவ காலங்களும் யாகங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. ‘ரித்விக்’ பருவகாலங்களுக்கு ஏற்ப உரிய யாகங்கள் செய்பவர் என்பது வேதங்களில் அடிக்கடிக் குறிப்பிடப்படும் பெயர்.
தினமும் செய்யவேண்டிய பஞ்ச மஹா யக்ஞங்கள், காலை மாலையில் செய்ய வேண்டிய அக்னிஹோத்ரங்கள் நீங்கலாக வேத காலத்தில் மிக முக்கியமான யாகங்கள் வேறு பல இருக்கின்றன. அமாவாசை, பௌர்ணமி காலங்களில் செய்யவேண்டிய தர்ஸபூர்ணமாஸ யக்ஞம், சதுர்மாஸ்ய யக்ஞம் (ஒவ்வொரு பருவத்தில் செய்யவேண்டிய யக்ஞங்கள். ஒவ்வொரு பருவமும் நான்கு மாதங்களைக் கொண்டது), சங்கராந்தி கால யக்ஞங்கள் எனப் பல இருக்கின்றன. இலையுதிர் காலம், கோடைகாலம் ஆகியவற்றில் செய்யவேண்டிய அக்ராயண யக்ஞங்கள் மற்றும் நெல்லும் கோதுமையும் அறுவடைக்குத் தயாராகும் குளிர் மற்றும் வசந்த காலங்களில் செய்ய வேண்டிய யக்ஞங்களும் உண்டு.
தொடக்க நிலை சமூகத்தில் பருவ காலக் கணிப்புகள் மிகவும் முக்கியமானதாகவே இருக்கும். பருவ காலங்களையும் உலக நிகழ்வுகளையும் கட்டுப்படுத்தும் சக்தி கொண்ட தெய்வங்களுடைய வழிபாடுகளுடன் பருவ காலப் பகுப்பு நெருங்கிய தொடர்புகொண்டதாக இருக்கும். வேத கால புரோகிதர்களின் மனதில் கடவுள்களுக்கு யாக யக்ஞங்கள் செய்வதா பருவ காலக் கணக்குகளை முறையாகக் கணக்கிட்டு வைப்பதா எது இந்த யாக யக்ஞங்கள் செய்வதில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கும் என்று சில நேரங்களில் சொல்லவே முடியாது.
27 நட்சத்திரங்கள் என்பவை சந்திரனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்பட்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட புள்ளியில் உதித்து ஒவ்வொருநாளும் நகர்ந்துகொண்டே செல்லும் சந்திரன் மீண்டும் அந்தப் புள்ளியில் உதிக்கும் நாளை வந்தடைவதென்பதுதான் நாள், மாதம், பருவ காலம் ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கான எளிய, இயல்பான, இயற்கை வழிமுறை. நாள் அல்லது மாதக் கணக்கில் சூரியனின் நகர்வையும் இடத்தையும் கணக்கிடுவதைவிட இது மிகவும் எளிது. ஏனென்றால் சூரியனின் உதயம் மற்றும் அஸ்தமன நேரங்களில் நட்சத்திரங்களைத் துல்லியமாகப் பார்க்கமுடியாது. சூரியனின் நகர்வைச் சில நட்சத்திரங்களுடனான ஒத்திசைவை வைத்துக் கணக்கிட முடியாது.
மாறாக, சந்திரன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் குறிப்பிட்ட நட்சத்திரங்களுடன் தொடர்பில் அடுத்தடுத்து வரும். ஒரு கடிகார முள்ளைப் போல் அந்த நட்சத்திரங்களுடன் வந்து ஒத்திசைந்து நிற்கும். வானில் ஒரு வட்ட வடிவில் ஒவ்வொரு நட்சத்திரத்துடன் சுழற்சி முறையில் தொடர்பில் வந்து செல்லும். அமாவாசை தொடங்கி பெளர்ணமி வரையிலான 27 நட்சத்திரங்களுடன் மூன்றில் ஒரு பாதம் இணைத்துக் கொண்டு கணக்கிடுவது ஆரம்ப கால மனிதர்களுக்குச் சிரமமானதல்ல. சந்திரனின் உதயத்தை அடிப்படையாகக் கொண்டு 27 புள்ளிகளைக் கணக்கிட்டுவிட்டால் நாட்கள், மாதங்கள், பருவ காலங்கள் என அனைத்தையும் இதன் அடிப்படையில் கணக்கிட்டுவிடமுடியும்.
27 பாகங்களாகப் பிரிக்கப்பட்ட ஒரு வட்டம் அல்லது ஒரு மையப்புள்ளியைச் சுற்றி சம தொலைவில் ஊன்றப்படும் 27 முளைக்கம்புகள் வேத கால விண்வெளி ஆராய்ச்சிக்கூடமாக எளிதில் பங்களித்திருக்கமுடியும். எந்த ஜோடி முளைக் கம்புகளுக்கு இடையில் சந்திரனின் உதயம் அல்லது அஸ்தமனம் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் போதும். கணக்கிடும் நபர் தினமும் ஒரே மையப் புள்ளியில் நின்று கணக்கிட்டால் போதும்.
நாட்கள், மாதங்கள், பருவ காலங்கள், வருடங்கள் ஆகியவற்றை ஆரம்ப கால மக்கள் எப்படிக் கணக்கிட்டிருப்பார்கள் என்பதை நம்மால் ஓரளவுக்கு எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஏதேனும் ஓர் இடையருக்கு சந்திர, சூரிய நகர்வுகள், நட்சத்திரங்கள், பருவ காலங்கள் பற்றி என்ன தெரிந்திருக்குமோ அதைவிடப் பழங்காலத்தினருக்கு அதிகம் தெரிந்திருக்கும் என்று நாம் நினைக்கமுடியாது. ஆதி சமூகத்தின் நடைமுறைத் தேவைகள் தாண்டி விண் வெளி ஆய்வுகளில் அவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும் என்றும் சொல்லமுடியாது.
வானத்தை 27 சம பங்குகளாகப் பிரித்து ஒவ்வொரு அலகையும் ஒரு நட்சத்திரத்தால் குறிக்கும்படியாக இந்தியாவில் இயற்கையாகவே ஒரு வழிமுறை தோன்றியிருக்க வாய்ப்பு உண்டு. சந்திரனின் நகர்வுகள் அல்லாமல் வேறு வழியில் கணக்கிட்டு வேத காலத்தினர் தமது யாக யக்ஞங்களைச் செய்திருப்பார்கள் என்று சொல்வோமேயானால் வேத கால இடையர்கள் அல்லது புரோகிதர்கள் பாபிலோனியாவுக்குச் சென்று அதைத் தெரிந்துகொண்டிருக்கலாம் என்ற அர்த்தமற்ற கற்பிதத்தைச் சொல்லலாம். சிந்து நதியின் கரையில் இருந்து பார்த்தாலே தெரிந்துகொள்ள முடிந்த சந்திர நகர்வுகளை ஹிந்துக்களுக்குப் புரியாத மொழி பேசப்பட்ட பாபிலோனியாவுக்குச் சென்று தெரிந்துகொண்டு தமது வேத இலக்கியங்களிலும் யாக யக்ஞங்களிலும் பயன்படுத்திக்கொண்டார்கள் என்று சொல்லலாம்.
இயற்கை நிகழ்வுகள் எல்லாம் ஒரு நாட்டில் இருப்பதுபோலவேதான் இன்னொரு நாட்டிலும் இருக்கும் என்பதை நாம் நினைவில் கொண்டாகவேண்டும். வேத இலக்கியங்களில் இந்துக்களின் ஆரம்ப நிலை வானவியல் கருதுகோள்கள் எல்லாம் அந்நிய நாட்டின் செல்வாக்கினால் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன என்று சொல்லக்கூடிய ஒரு சான்றும் கிடைக்கவில்லை என்று இதிலிருந்து நாம் தெளிவாக உறுதியாகச் சொல்லலாம்.
அரேபியர்கள் சந்திரனின் 28 மன்ஸில் நிலைகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். முஹம்மதுவும் பாலைவனவாசிகளான பெடோயின்களும் இந்தியாவில் இருந்த வேத காலக் கவிகளைப்போலவே வானவியல் சார்ந்து கண்டுபிடித்திருக்கமுடியாதா என்ன? ‘மன்ஸில் கணிப்பில் வானவியல் சார்ந்து இருப்பவை எல்லாம் இந்திய வேர்களைக் கொண்டவையே’ என்று கோல்ப்ரூக் தெளிவான சான்றுகள், வாதங்கள் மூலம் நிரூபித்திருக்கிறார் என்பதையும் இங்கு ஒப்புக்கொள்ளவே செய்கிறேன்.
சீனர்களும் இதுபோல் நிலவின் நகர்வுகள் பற்றி சியூ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் 24 நிலைகளாக இருந்தது. பின்ன 28 ஆகக் கணக்கிடப்பட்டது. ஹிந்துக்கள் நிலவின் எளிய நகர்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள சீனாவுக்குச் சென்றார்கள் என்று நம்ப எந்த ஆதாரமும் இல்லை. முதலில், சீனர்கள் நிலவின் உதய அஸ்தமன நிலையாக முதலில் 24 இடங்களைக் கணக்கிட்டனர். அதன் பின் 28 நிலைகளைக் கணக்கிட்டனர். அடுத்ததாக, இந்த 28 நிலைகளில் ஹிந்துக்களின் 27 நட்சத்திரங்களில் 17 மட்டுமே ஒத்துப் போகின்றன. ஒரு விஞ்ஞானக் கணிப்பு முறையை இரவல் வாங்குகிறார்களென்றால் முழுமையாகத்தான் வாங்கியிருப்பார்கள். கிறிஸ்தவ ஆண்டுக் கணக்குக்கு முன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வானவியல் சார்ந்து எதுவும் பரிமாறப்பட்டிருக்கும் என்று நம்ப எந்தச் சான்றும் இல்லை.
சீன இலக்கியங்களில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பாதி வாக்கில்தான் இந்தியாவைப் பற்றி முதன் முதலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிந்தைய கால சமஸ்கிருதப் படைப்புகளில் சினாஸ் என்று குறிப்பிடப்பட்டிருப்பது சீனர்களைத்தான் என்று எடுத்துக்கொண்டாலும் (இது சந்தேகம்தான்) ரிக் வேத காலப் படைப்புகளில் அந்தப் பெயர் குறிப்பிடப்படவே இல்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
மஹாபாரதத்திலும் வேறு சமஸ்கிருதப் படைப்புகளிலும் இந்தியாவின் கிழக்கே வட பகுதியில் உள்ள தஸ்யுகள் அல்லது ஆரியரல்லாத இனங்களில் ஒன்றாக சினாஸ் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பகதத்த மன்னருடைய படையில் சினாஸ்களும் கிராதர்களும் இருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பாண்டவர்கள் சினாஸ், தக்காரஸ், தாராதஸ் வழியாக கலிந்தாஸ் மன்னருடைய நகருக்குச் சென்று சேர்ந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் தெளிவற்றவையே. கிராத, சினாஸ் படைவீரர்கள் எல்லாம் தங்க அல்லது மஞ்சள் கங்கண நிறத்தினர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதென்பது மஞ்சள் மலர்கள் பூத்துக் குலுங்கும் கர்னிகர்களின் (மஞ்சள் கொன்றை) காடு பற்றிய குறிப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படவேண்டியதுதான். மஹாபாரதம் VI:9-ல் காம்போஜர்கள், யவனர்கள் ஆகியோருடன் சினாஸ் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதுவும் தெளிவாக எதையும் சுட்டிக்காட்டவில்லை.
சீன அறிஞர்கள் ‘சீனா’ என்ற பெயர் மிகவும் நவீன காலத்திய பெயர் என்றே சொல்கிறார்கள். கி.மு.247 வாக்கில் ஆட்சியில் இருந்த புகழ் பெற்ற ஷி ஹோங் தி யின் காலத்திலிருந்து அல்லது திசின் வம்ச ஆரம்பத்திலிருந்துதான் புழக்கத்தில் வந்திருக்கும் என்கிறார்கள். ஆனால் இந்தப் பெயர் மட்டும் முந்தைய காலப் படைப்புகள் சிலவற்றில் இடம்பெற்றிருக்கத்தான் செய்கிறது. லாஸேன் குறிப்பிடுவதுபோல் சீனாவின் மேற்குப் பக்க அண்டை நாடுகளில் இந்தப் பெயர் புழக்கத்தில் இருந்திருக்கிறது. ஏசாயா 49:12-ல் ‘பாபிலோனியாவுக்கு வணிகர்களாக, பயணிகளாக வந்த சினிம்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது சீனர்களையே குறிப்பதாகப் பழங்கால ஆய்வாளர்கள் கருதியிருக்கின்றனர்.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நாம் சொல்வதற்கு முந்தைய காலகட்டத்தில் எந்தப் பரிமாற்றமும் இருந்திருக்காது என்று சொல்லும்போது வேறு சிலர் சீனர்களின் வானவியல் அறிவானது இந்தியாவுக்கு சீனாவிலிருந்து நேராகச் செல்லவில்லை; நிலவின் 28 நிலைகள் பற்றிய கணிப்பானது சீனாவிலிருந்து மேற்கு ஆசியப் பகுதிகளுக்கு கி.மு. 1100 வாக்கில் சென்றது. செமிட்டிக் அல்லது இரானியர்கள் அதைக் கற்றுக் கொண்டனர். அவர்கள் அதைப் புதிய வடிவுக்குக் கொண்டு சென்றனர். அந்த 28 நட்சத்திர நிலைகளை ராசி மண்டலத் தொகுப்புகளாக ஆக்கினர். சில நேரங்களின் அவற்றின் இடத்தை மாற்றி அமைத்து நீள் வட்டம் சூரியப் பாதைக்குப் பொருத்தமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாறிய வடிவமானது, ஏற்கெனவே கிரஹ நிலைகளைத் தாமே தெரிந்துகொண்டிருந்த ஹிந்துக்களுக்கு கைமாற்றித் தரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் தம்மிடம் இருந்த வானவியல் அறிதல்களுடன் இதையும் சேர்த்துக் கொண்டார்கள். அதன்பின் அது அங்கிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து அராபியர்கள் வசம் சென்று சேர்ந்தது’.
இந்தக் கற்பிதக் கருத்தைச் சொல்பவர்களின் வானவியல் அறிவை நான் மதிக்கிறேன். ஆனால், இந்தக் கற்பிதம் புதுமையான கருத்து மட்டுமே என்று சொல்லவே விரும்புகிறேன். புதுமை என்பதைத் தாண்டி அதில் எதுவும் இல்லை. இதை நிரூபிக்க எந்தவொரு சான்றும் இல்லை.
‘ஹிந்துக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி வானவியல் துறையில் பருவ காலக் கணிப்புகள் சார்ந்து கணிசமான சாதனைகள் செய்திருக்கிறார்கள்’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பே கோல்புரூக் ஆணித்தரமாகச் சொல்லியிருப்பதைத்தாண்டி இதில் சொல்ல எதுவும் இல்லை. அன்றாட மற்றும் மதச் சடங்குகள் சார்ந்த அவர்களுடைய நாட்காட்டி பெரிதும் சந்திரனுடைய நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டவையே. சூரியனுடைய நகர்வுகளை அல்ல. இந்த வானத்து கிரஹங்களின் நகர்வுகளை அவர்கள் மிகத் துல்லியமாகக் கணித்திருக்கிறார்கள். சந்திரமாதத்தையும் அது சார்ந்த நிலவின் நகர்வுகளையும் கிரேக்கர்களைவிடத் துல்லியமாக இந்துக்கள் கணித்திருக்கின்றனர். சூரிய நீள் வட்டப் பாதையை அவர்கள் 27 அலகுகளாகவும் 28 அலகுகளாகவும் பிரித்திருந்தனர். சந்திர மாதத்தைத் தமதான ஒரு வழியில் கணக்கிட்டிருக்கிறார்கள் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இதுவே அரேபியர்களால் கடன் வாங்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.
(தொடரும்)