ஊழிப் பெருவெள்ளமும் வேத, புராணங்களும்
வேத இலக்கியங்களில் பாபிலோனிய அல்லது செமிட்டிக் கலாசாரங்களின் செல்வாக்கு இருப்பதாகச் சொல்லப்படுவதை நாம் அலசிப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் சொல்லப்படும் இன்னொரு விஷயம் ஊழிப் பெருவெள்ளம்.
பல்வேறு இனங்களில் இதுதொடர்பான பழங்காலக் கதைகள் இருப்பதைப் பார்க்கமுடியும். யார் வேண்டுமானாலும் யாரிடமிருந்து வேண்டுமானாலும் இதை இரவலாகப் பெற்றிருக்கமுடியும். இந்தியாவின் பின்னாளைய இதிகாச, புராணங்களில் பல்வேறு ஊழிப் பெருவெள்ளங்கள் பற்றி மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்திய மதப் பாரம்பரியங்களில் ஊழிப் பெருவெள்ளம் பற்றிய கதைகள் நன்கு பரிச்சயமானதாகவே இருக்கின்றன. வேதங்களிலும் அவை பற்றிய குறிப்புகள் பிற கலாசாரங்களில் இருந்து இரவலாகப் பெறாமல் இயல்பாகவே, மறைமுகமாகவாவது இடம்பெற்றிருக்கக்கூடும் என்று ஏன் எடுத்துக்கொள்ளமுடியாது?
விஷ்ணுவின் மூன்று அவதாரங்களான மீன் (மச்யாவதாரம்), ஆமை (கூர்மமாவதாரம்), பன்றி (வராக அவதாரம்) ஆகியவை ஊழிப் பெருவெள்ளத்துடன் தொடர்புடையவையே. உலகம், ஊழிப் பெருவெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டபோது விஷ்ணு மீனாவும் ஆமையாகவும் பன்றியாகவும் வந்து காப்பாற்றினார் என்று இந்தப் புராணங்கள் சொல்கின்றன.
அதி பழங்கால இந்தியப் படைப்புகளில் இவைபற்றிக் குறிப்பிட்டிருக்கவில்லையென்றாலே இந்தப் புராணக் கதைகளின் காலத்துக்குப் பின்னரே இந்தியாவில் இவை பரவியிருக்கும் என்ற நியாயமான முடிவுக்கு ஒருவர் வரமுடியும். ஆனால், வேத காலப் படைப்புகள் பற்றி உலகுக்குத் தெரியவரத் தொடங்கிய பின்னர் ஆரம்பகால வேதச் செய்யுள்களில் இல்லையென்றாலும் பிந்தைய பிராஹ்மண கால உரைநடைகளில் இவை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கமுடிகிறது. மனுவுக்கும் மீனுக்கும் இடையிலான உரையாடல் இடம்பெறும் கதை மட்டுமல்ல; கூர்ம, வராக அவதாரங்கள் பற்றிய கதைகளுமே கிட்டத்தட்ட முழுமையாக இடம்பெற்றிருக்கின்றன. எனவே அந்நிய கலாசாரங்களில் இருந்து இரவலாகப் பெற்றிருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதையே இவை காட்டுகின்றன.
சதபத பிராஹ்மணத்தில் ஊழிப் பெருவெள்ளம் பற்றி இடம்பெற்றிருக்கும் விவரணைகளை இங்கு குறிப்பிடுகிறேன். பைபிளின் ஊழிப் பெருவெள்ளத்துக்கும் இதற்கும் இடையிலான ஒப்புமைகளை நீங்களே அலசிப் பார்த்து, ஹிந்துக்கள் அண்டையில் இருந்த செமிட்டிக் மரபுகளிலிருந்துதான் அதைப் பெற்றிருக்கிறார்களா இல்லையா என்ற முடிவுக்கு வந்துகொள்ளுங்கள்.
சதபத பிராஹ்மணம் I.8:1
காலையில், மனுவுக்கு நீர் கொண்டுவந்து கொடுத்தார்கள். அதில் கைகளைக் கழுவியபோது ஒரு மீன் வந்து சேர்ந்தது.
மனுவிடம் அந்த மீன் சொன்னது : என்னைக் காப்பாற்றுங்கள்.
எதனிடமிருந்து உன்னைக் காக்கவேண்டும் என்று மனு கேட்டார்
ஒரு பெருவெள்ளம் வந்து உலக உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கப் போகிறது. என்னை அதிலிருந்து காப்பாற்றுங்கள்.
நீரில் வசிக்கும் உன்னை நான் எப்படிக் காப்பாற்ற?
சின்னதாக இருக்கும்வரையில் நீரில் இருக்கும் பெரிய மீன்களே எங்களைத் தின்றுவிடும். எனவே என்னை ஒரு குடத்து நீரில் போட்டுக் காப்பாற்றுங்கள். நான் அதைவிடப் பெரிதாகிவிட்டால் ஒரு குழிவெட்டி நீர் ஊற்றி அதில் என்னை வாழவிடுங்கள். நான் அதையும் தாண்டி வளர்ந்துவிட்டால் என்னைக் கடலில் போடுங்கள். அப்போதுதான் நான் அழிவிலிருந்து தப்பிக்க முடியும்.
மீன் சொன்னபடியே மனுவும் செய்தார். அந்த மீனும் அதி வேகமாக வளர்ந்தது. குழியைவிடப் பெரிதானதும் ஒரு நாள் மீன் சொன்னது: இன்ன வருடத்தில் ஊழிப் பெருவெள்ளம் வரப்போகிறது. நீங்கள் ஒரு படகு செய்துகொள்ளுங்கள். என்னையே மனதில் தியானம் செய்யுங்கள். வெள்ளம் வந்ததும் அதில் ஏறிக் கொள்ளுங்கள். நான் உங்களை அந்த வெள்ளத்திலிருந்து காப்பாற்றுகிறேன்.
மீன் இப்படிச் சொன்னதைக் கேட்ட மனு அதைக் கடலில் கொண்டு விட்டார். மீன் சொன்ன காலத்துக்குள் ஒரு படகு தயார் செய்துகொண்டார். மீனையே தியானம் செய்ய ஆரம்பித்தார். சொன்னபடியே வெள்ளம் வந்தது. மனு படகில் ஏறிக் கொண்டார். மீன் படகை நோக்கி நீந்தி வந்தது. மீனின் கொம்பில் படகைக் கட்டிக் கொண்டார். வட பகுதியில் இருந்த உயரமான மலைக்கு மீன் அந்தப் படகை இழுத்துச் சென்றது.
இந்த உயரமான மலைக்கு அழைத்துவந்து நான் உங்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிவிட்டேன். படகை இங்கிருக்கும் மரத்துடன் கட்டிப் போட்டுக்கொள்ளுங்கள். மலையில் இருக்கும் உங்களை வெள்ளம் அடித்துச் செல்லாமல் இருக்கும். வெள்ளம் வடிய வடிய நீங்கள் கீழே இறங்கிவந்துவிடலாம் என்றது மீன்.
அதுபோலவே வெள்ளம் வடியத் தொடங்கியதும் படகில் சறுக்கியபடி இறங்கிவந்தார். வட பகுதி மலையில் இருக்கும் அந்த மலைச் சரிவு மனுவின் சரிவு என்று அழைக்கப்படுகிறது. உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் வெள்ளம் வாரிக் கொண்டுசென்றுவிட்டது. மனு மட்டுமே அங்கு மிகத் தனிமையில் நின்றுகொண்டிருந்தார்.
அதன்பின் மனு பரம்பொருளைத் துதித்தார். யாகம் செய்தார். நெய், பால், தயிர் ஆகியவற்றை அர்க்யம் கொடுத்தார். ஒரு வருட காலத்தில் ஒரு பெண் அவற்றிலிருந்து மனுவுக்கும் தெரியாமலே உயிர் பெற்று வந்தார். அதன் பின் மித்ரனும் வருணனும் அந்தப் பெண்ணைப் பார்க்க வந்தனர்.
நீ யார் என்று கேட்டனர்.
நான் மனுவின் மகள் என்றாள்.
நீ எங்களுக்குச் சொந்தமானவளாவாயா?
இல்லை. எனக்கு உயிர் கொடுத்த மனுவின் சொந்தம் நான்.
அப்படியானால் நீ எங்கள் சகோதரியாவாயா?
பாதி சம்மதமும் பாதி மறுப்புமாகப் பதில் சொல்லிவிட்டுச் சென்றாள்.
அவள் மனுவைச் சென்று சந்தித்தாள்.
நீ யார் என்று கேட்டார் மனு.
நான் உங்கள் மகள் என்றாள்.
நீ எப்படி எனக்கு மகள் ஆகியிருக்கிறாய்?
நீங்கள் நீரில் அர்க்யம் கொடுத்த நெய், தயிர், பால் ஆகியவற்றிலிருந்து நான் உயிர் பெற்று வந்திருக்கிறேன். என்னுடன் சேர்ந்து யாகம் செய்யுங்கள். உங்களுக்கு வாரிசுகளும் ஆநிரைகளும் செல்வ வளங்களும் கிடைக்கும். நீங்கள் என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும்.
மனுவும் அந்தப் பெண் சொன்னபடியே அவளுடன் இணைந்து துதிகள் பாடி, மந்திரங்கள் சொல்லி யாக யக்ஞங்கள் செய்தார். மனுவுக்கு வாரிசுகள் பிறந்தனர். செல்வ வளம் பெருகின. ஆநிரைகள் பெருகின. கேட்ட வரமெல்லாம் கிடைத்தன. அவளே இடா. இந்த உண்மை அறிந்து யாக யக்ஞங்கள் செய்பவர்களுக்கு மனுவுக்குக் கிடைத்த அனைத்தும் அவளுடைய .ஆசிகளால் கிடைக்கும்.
இந்தக் கதை சந்தேகமே இல்லாமல் ஊழிப் பெருவெள்ளம் பற்றியதுதான். நோவாவுக்குப் பழைய ஏற்பாட்டில் என்ன பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதோ கிட்டத்தட்ட அதையே மனுவும் செய்திருக்கிறார். இதுபோன்ற சில ஒப்புமைகள் இருக்கும் அதே நேரத்தில் வேற்றுமைகளும் இருக்கின்றன. ஒருவேளை இந்தக் கதை செமிட்டிக் மூலப் படைப்பிலிருந்து இரவல் பெறப்பட்டிருந்தாலும் பழைய ஏற்பாட்டிலிருந்து பெறப்படவில்லை என்பது உறுதி. ஏனென்றால் இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் வேற்றுமைகளை எப்படி விளக்கமுடியும்?
வேறு ஏதோவொரு செமிட்டிக் படைப்பிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அப்படியான எந்தவொரு படைப்பிலிருந்தும் பெறப்பட்டிருப்பதாக நிரூபிக்கவும் முடியவில்லை. ஒருவேளை அப்படி ஏதேனும் ஒன்று இருக்குமென்றால் சமஸ்கிருதப் படைப்பு கடனாகப் பெற்றிருக்கும் ஒரே செமிட்டிக் விஷயம் அது ஒன்றுமட்டுமே இருக்கும்!
கூர்ம மற்றும் வராக அவதாரக் கதைகளின் மூலங்களும் வேதப் படைப்புகளில் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. தைத்ரிய சம்ஹிதையில், ‘ஆதியில் நீர் நிரம்பியிருந்தது. உயிர்களைப் படைத்த ப்ரஜாபதி காற்றாக நிரம்பினார். வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த பூமியைப் பார்த்தவர் வராக வடிவமெடுத்து நீரிலிருந்து அதை மேலே கொண்டுவந்தார். விஸ்வகர்மாவாகி பூமியைத் தூய்மைப்படுத்தி, உருவாக்கினார். உலகம் பரந்து விரிந்து உருவானது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சதபத பிராஹ்மணத்தில் உள்ள கீழ்க்காணும் கதை கூர்ம அவதாரம் பற்றிய புராணத்தின் சாயலைக் கொண்டிருக்கிறது.
‘கூர்ம வடிவம் எடுத்த பிரஜாபதி அனைத்து உயிர்களையும் மீட்டெடுத்தார். கூர்மத்துக்கு (ஆமைக்கு) கஷ்யப என்றொரு பெயரும் உண்டு. எனவே எல்லா உயிர்களும் கஷ்யபரால் உருவாக்கப்பட்டது என்றும் சொல்லப்படும். கூர்ம வடிவில் வந்தது உண்மையில் ஆதித்யரே’.
‘வெள்ளம் வடிந்தது. மனுமட்டுமே எஞ்சியிருந்தார்’ என்று கபிஷ்டலகட சம்ஹிதையிலும் ஒரு குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. இதுவும் ஊழிப் பெருவெள்ளம் பற்றிய குறிப்புதான்.
உலகம் வெள்ளத்தில் மூழ்கியது, தெய்வ சக்தியால் மீட்கப்பட்டது ஆகியவையெல்லாம் இந்திய மரபில் பழங்காலத்திலிருந்தே இடம்பெற்றிருக்கும் நம்பிக்கை என்பதைக் காட்டுகின்றன. பின்னாட்களில் அந்த தெய்வ சக்தியெல்லாம் விஷ்ணுவின் அவதாரம் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
உலகின் அனைத்து நாட்டு இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ள ஊழிப் பெருவெள்ளம் பற்றிய குறிப்புகளை நாம் அலசி ஆராய்ந்து பார்த்தால் அவையெல்லாம் ஒரே ஒருமுறை நிகழ்ந்ததைப் பற்றிப் பேசவில்லை. ஆண்டுதோறும் இடம்பெறும் மழைக்கால வெள்ளம் பற்றித்தான் பேசுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.
பாபிலோனியப் படைப்பில் இது மற்ற நாடுகளைவிட மிகத் தெளிவாகத் தெரிகிறது. நிம்ராட் அல்லது இஸ்துபார் நெடுங்கவிதையின் 12 காண்டங்கள் என்பவை ஆண்டின் 12 மாதங்களைக் குறிக்கின்றன; ராசி மண்டலத்தின் 12 குறியீடுகளைக் குறிக்கின்றன என்று முதலில் சொன்னவர் சர் ஹென்றி ராவ்லின்சவ்தான். இரண்டாவது காண்டத்தில் இடம்பெறும் அறிவார்ந்த காளை மனிதரான எபானி இரண்டாவது மாதமான இஜாரைக் குறிக்கிறார் என்று டாக்டர் ஹெளபட் குறிப்பிட்டிருக்கிறார். ஏப்ரல் – மே மாதங்கள் ராசி மண்டலத்தில் காளையால் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மூன்றாவது காண்டத்தில் இடம்பெற்றிருக்கும் எபானிக்கும் நிம்ராதுக்கும் இடையிலான இணைப்பு மூன்றாவது மாதமான சிவன் என்பதைக் குறிக்கிறது. மே-ஜூன் இரண்டும் ராசி மண்டலத்தில் இரட்டையராகக் குறிக்கப்பட்டிருக்கிறது. ஏழாம் காண்டத்தில் நிம்ராதின் நோய்மை என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஏழாவது மாதமான திஷ்ரியைக் குறிக்கிறது. அதாவது செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் சூரியன் வலுவிழப்பதை அது குறிக்கிறது.
11வது காண்டத்தில் வெள்ளமாகக் குறிக்கப்பட்டிருப்பதென்பது 11வது மாதமான சபத்துவைக் குறிக்கிறது. அது புயல் கடவுளான ரிம்மனுடையது. ராசிமண்டலத்தில் நீர்க்கடவுளாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.
பிற நாடுகளில் ஊழிப் பெருவெள்ளம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதுபோலவே இந்தியாவிலும் இயல்பாக, தாமாகவே அந்தக் கதை உருவாகியிருக்கும் என்ற முடிவுக்கு நாம் தைரியமாக வரலாம். ஒருவேளை அந்நிய நாட்டுக் கலாசாரங்களின் தாக்கம் இருப்பதான தடயங்கள் தென்பட்டாலும் அவையெல்லாம் இந்தியாவின் பின்னாளைய நவீனப் படைப்புகளில்தான் இடம்பெற்றிருக்கின்றன. ஆதி பழங்கால ரிக்வேதப் படைப்புகளில் அப்படியான தடயம் எதுவும் இல்லை.
பழங்காலத்து இந்தியக் கவிகள் எல்லாம் பாபிலோனியத் தாக்கம் பெற்றவர்கள் என்று சொல்லப்படும் கூற்றுகள் எல்லாம் இதைவியும்விட பலவீனமான அஸ்திவாரத்தைக் கொண்ட கூற்றுகளே. இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் காலத்தையும்விட வெகுபழங்காலத்திலேயே பாரசீகம், பார்தியா, பாக்டிரியா போன்ற இந்தியாவுக்கு வெகு அப்பாலான பகுதிகளிலும் சீன கலாசாரத் தாக்கம் இருந்திருக்கிறது. அப்போது இந்தியா தனி ராஜ்ஜியங்களாகத் தனி அரசாங்கங்களாக உருத்திரண்டுவந்திருக்கவே செய்யாத காலம். விரட்டியடிக்கப்பட்ட பழங்கால யூதர்கள் ஆஃப்கானிஸ்தானுக்குச் சென்றிருப்பதற்கான தடயங்கள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவுக்கு வந்ததாக வேதப் படைப்புகளில் எந்தத் தடயமும் இல்லை.
அப்படியாக, வேதங்கள் மற்றும் பழங்கால இந்தியப் படைப்புகளில் அந்நியச் செல்வாக்கு இருப்பதாகப் பலர் சொன்னதையெல்லாம் விரிவாக, கவனமாக ஆராய்ந்து பார்த்த பின்னர், இந்தியாவின் வேத காலத்தினரின் மொழி, மதம், சடங்கு சம்பிரதாயங்கள் என எதிலுமே அந்நியக் கலாசாரங்கள் மற்றும் நாடுகளின் தாக்கம் துளியும் இல்லை என்ற முடிவுக்கே வந்திருக்கிறேன்.
வடக்கே இமயம், மேற்கே சிந்து நதி மற்றும் பாலைவனம், தெற்கே சிந்து சாகரம், கிழக்கே கங்கை ஆகியவற்றால் அந்நியத் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு, வளர்ந்து, இன்று இருப்பதுபோல் நம் முன் எழுந்து வந்திருக்கிறது. உள் நாட்டில் வளர்ந்த கவிதை, இலக்கியங்கள்; உள் நாட்டில் உருவான பூர்விக மதம் ஆகியவற்றைக் கொண்டதாகவே இருக்கிறது. உலகில் எந்தவொரு கலாசாரமும் தன்னளவில் தானாக வளரும்படி விடப்பட்டால், இயற்கை எழில் அரண்களாலும் சூழ்நிலைகளாலும் சூழப்பட்டிருந்தால், பூவுலக வாழ்க்கையை சொர்க்கமாக ஆக்கிக் கொள்ளமுடியும் என்பதன் தடயங்களை மனித இனத்துக்கு அறியத் தரும் கலாசாரப் பொக்கிஷமாக (மிச்சங்களாக) இந்தியா திகழ்கிறது. மனிதருக்கு சொர்க்கத்தையும் நரகமாக ஆக்கிக்கொள்ளும் விசித்திரமான குணம் மட்டும் இல்லாதிருந்தால் அது சொர்க்கமாகவே நீடிக்கும் என்பதையே இந்தியா நமக்குக் கற்றுத் தருகிறது.
(தொடரும்)