வற்றாமல் பாயும் வரலாற்று நதிகள்
வேத கால நதிகள் – கிரேக்கர்கள் பார்த்த நதிகள் – இன்றும் பாயும் நதிகள்
நதிகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் வேதச் செய்யுள்களை இப்போது மொழிபெயர்த்துச் சொல்கிறேன். நதிகளை தெய்வங்களாகச் சொல்வதென்றால் அவை பூலோக தெய்வங்கள் என்ற வகைப்பாட்டுக்குள் வருவார்கள். இந்தச் செய்யுள்களுக்கு நான் தனியாக, மிகுந்த முக்கியத்துவம் தருவதற்கு இறையியல் சிந்தனைகளின் வரலாறு தொடர்பாக இவை புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன என்பது மட்டுமல்ல; பழங்கால வேதக் கவிகள் (வேத காலத்தினர்) எந்த இடத்தில் வாழ்ந்தார்கள் என்பது குறித்து நாம் உத்தேசமாகச் சொல்வதில் சில தெளிவுகளை ஏற்படுத்த இந்தச் செய்யுள்களால் முடிகிறது என்பதால் இதைச் சிறப்பித்துக் குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த ரிக்வேதச் செய்யுளில் எழுந்தருளும்படிச் சொல்லப்பட்டிருக்கும் நதி தெய்வங்கள் (நதிகள்) எல்லாம் பஞ்சாப் பகுதியில் பாயும் உண்மையான நதிகளே. ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்த ஆதி காலப் புலவரால் எழுத முடிந்த நிலவியல் என்று நாம் நம்புவதைவிட மிக மிகப் பரந்து விரிந்த நிலப்பகுதியைப் பற்றி இவை பேசுகின்றன.
ஓ நதியே… விவஸ்வாதின் இருப்பிடத்தில் உங்கள் மகிமைகள் பொங்கிப் பாய்கின்றன. ஏழேழு நதிகள் மூன்று பேரொழுக்குகளாகப் பாய்கின்றன. மற்ற அலை பாயும் நதிகள் அனைத்தையும்விட சிந்து நதி வலிமையை மிகுந்தது.
(விவஸ்வாத் என்பது சூரியனைக் குறிக்கும். அதன் இருப்பிடம் என்பது பூமியையே குறிக்கும். அல்லது பலிகள் தரப்படும் யாக குண்டத்தைக் குறிக்கும்).
வருணன்… நீங்கள் (நதிகள்) பாய்ந்தோடிச் செல்ல வழித்தடம் அமைத்துத் தந்தார். பூமியின் வண்டல் படுகைகளினூடாக நீங்கள் பாய்கிறீர்கள்.
மண்மேலே விண்ணதிரப் பெரும் சப்தம் எழுப்புகிறது. எல்லையற்ற வலிமைகொண்டு சுழித்தோடுகிறீர்கள். மழை மேகங்கள் இடியுடன் பொழிய சிந்து நதி சீறிப் பாயும் காளையைப் போல் பாய்ந்தோடி வருகிறது.
ஓ சிந்து நதியே… மற்ற நதிகள் மடி கனத்த பசுக்கள் தன் கன்றை நோக்கி ஓடிவருவதுபோல் உன்னை நோக்கி ஓடி வந்து உன்னில் கலக்கின்றன. இருபக்கம் படைச் சிறகுகள் விரித்து கம்பீரமாக ஒரு மன்னர் முன்னேறுவதுபோல் முன்னணியில் பாய்ந்தோடி வருகிறாய்.
கங்கை, யமுனை, சரஸ்வதி (சுர்சுதி) சுதத்ரி (சட்லெஜ்), பருஷ்ணி (ஐராவதி – ரவி) நதிகளே என் போற்றுதலை ஏற்றுக்கொள்ளுங்கள். அஸிக்னியுடனும் விதஸ்வாவுடனும் இருக்கும் ஓ மருத்விருதா, ஓ ஆர்கிக்யா, சுஷோமாவுடன் சொல்வதைக் கேளுங்கள்.
சுஸர்த்துவுடனும் ஸ்வேதியுடனும் த்ரிஸ்தாமாவாக (மூன்று நதிகளாக) பாயும் ஓ சிந்துவே… குபா (காபூல் நதி) தொடங்கி கோமதியும் (கோமல் நதி) அதன் பின் மேஹந்து நதி முதல் க்ருமு நதியுமாக உன்னுடன் இணைந்து முன்னேறுகிறாய்.
பிரகாசமாக ஜொலித்தபடி கம்பீர அழகுடன் சமவெளிகளை நனைத்துச் செல்லும் வெல்லற்கரிய (வற்றாத) சிந்து நதியே… வேகமாகப் பாயும் நதிகளிலேயே அதி வேகமாகப் பாயும் நதியே… அழகிய பெண் குதிரையைப்போல் துள்ளிக் குதித்துப் பாயும் நீ கண்ணாறக் கண்டு மகிழவேண்டிய நதியல்லவா…
குதிரைகள், தேர்கள், அழகிய ஆடைகள், தங்கம், பரிசுகள், குளிராடைகள் (ஊர்னாவதி), புல், வைக்கோல் (சிலமாவதி) என அனைத்தையும் அபரிமிதமாக வழங்கும் சிந்து நதியே… அழகிய இளம் பெண் போல் இனிமையான மலர்களை (மதுவிருத்) ஆடையாக அணிந்தபடி செல்கிறாய்….
தடையற்று ஓடும் தேரில் விரைந்து பாயும் குதிரைகளைப் பூட்டியிருக்கிறாய்… போட்டியில் (போரில்) எமக்கு வெற்றிப் பரிசுகளைப் பெற்றுத் தருவாயாக.
சிந்து நதியின் அற்புதமான தேரானது தடுத்து நிறுத்தவே முடியாதது; தன்னிகரற்றது… அதி வலிமையானது என்று புகழப்பட்டிருக்கிறது.
யத் வாகன் அபி ஆத்ரவாஹ் த்வாம் – நீ (நதியே) வேகமாக, பரிசுகளை வெல்ல ஓடுகிறாய் என்று முதலில் மொழிபெயர்த்திருந்தேன். கிராஸ்மனும் இதை ‘ஓ சிந்து நதியே போரின் வெற்றியில் கிடைக்கும் பரிசுகளைத் தேடி ஓடுவதுபோல் பாய்கிறாய்’ என்றே மொழிபெயர்த்திருந்தார். வாகன் என்ற வேதச் சொல்லுக்கு வேக, வியோக, விஜில் (ஆங்கிலச் சொல்) போன்றவற்றுடன் தொடர்பு இருக்கிறது. இந்த வேத கால வார்த்தையின் அர்த்தம் இதுதான் என்று உறுதியாக எதையும் சொல்லமுடியவில்லை. யூகமாகத்தான் சொல்ல முடிகிறது. பீட்டர்ஸ்பர்க் அகராதி இந்தச் சொல்லுக்கு வேகமான, பந்தயம், பந்தயத்தில் கிடைக்கும் பரிசு, ஆதாயம், செல்வம், பந்தயக் குதிரை என்றெல்லாம் பல அர்த்தங்களைச் சொல்கிறது. வலிமை, மோதல், போட்டி, நட்பார்ந்த பந்தயம் அல்லது போர் போன்ற பந்தயம் என்ற அர்த்தத்தில் முதலில் எடுத்துக் கொள்ளலாம். அதன் பின் பந்தயத்தில் வெல்லப்பட்ட பரிசு, போரில் கிடைத்த பரிசு, செல்வம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இறுதியாக, பொதுவான செல்வம், பரிசுகள், கைப்பற்றப்பட்டவை என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம். போர் என்ற அர்த்தத்திலிருந்து (போரில் கிடைத்த) பரிசு என்ற அர்த்தம் வந்ததைக் குறிக்கும் ஸ்லோகம் ஒன்று இருக்கிறது.
வாகான் இந்த்ர ஸ்ரவாய்யான் த்வாயா ஜேஷ்ம ஹிதம் தானம்…
ஓ இந்திரா… உன் அருளால் போர்களில் பெரும் வெற்றியைப் பெற உதவுவாயாக; பெரும் பரிசுகள் கிடைக்கச் செய்வாயாக.
வாகேபிஹிஹ் குஹ்யு மஹத் தானம்
போர்களில் பெரும் செல்வத்தை வென்றனர்.
சிந்து நதி பற்றிச் சொல்லும்போது வாகஸ் என்பது தடைகளைப் போராடிக் கடந்து செல்லுதல், மற்ற நதிகளினுடனான பந்தயத்தில் மலைகளினூடாக முன்னேறிச் செல்லுதல் என்பதையே குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
யாஸ்கரைப் பொறுத்தவரையில் சுஷோமா நதிதான் சிந்து நதி. ஆர்கிக்யா என்பது விபாஸ் நதி.
வாகினிவதி என்பது அர்த்தம் புரிந்துகொள்ள மிகவும் கடினமான வார்த்தை. வில்லியம் முய்ர் இதை ‘வளங்கள் தரக்கூடியது’ என்று சொல்கிறார். ஜிம்மர், ‘ஏராளமான குதிரைகள் கொண்ட’ என்று அர்த்தம் சொல்கிறார். லுட்விக் இதை ‘வலிமையான குதிரை’ என்று சொல்கிறார். வாகின் என்றால் வலிமையான குதிரை, பந்தய வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் வாகினி என்பது குதிரை என்ற அர்த்தத்தில் ரிக்வேதத்தில் எங்குமே பயன்படுத்தப்படவில்லை. வாகினிவதி என்பது பொதுவாக உஷஸ், சரஸ்வதி இங்கே சிந்து நதி ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வாகேபிஹி என்ற பதமும் இடம்பெற்றிருக்கிறது. வாகினி என்பது குதிரையைக் குறிக்குமென்றால் இதற்கு ஏராளமான குதிரைகள் கொண்ட என்று அர்த்தம் வரலாம்.
சம் நஹ் மிமிஷ்வா வாகீக வாகினிவதி என்றால் ‘வலிமையான குதிரைகளைக் கொண்டவரே எங்களுக்குக் குதிரைச் செல்வத்தைக் கொடு’ என்று பிரார்த்தனை செய்வதாக எடுத்துக்கொள்ளலாம். வாகினிவதி என்ற பதம் வரும் இடங்களெல்லாம் செல்வத்தின் அதிபதியான பெண் தெய்வத்தையே நோக்கி, செல்வ வளம் கொடுக்கும்படியே பிரார்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. எனவே வாகினி என்பதை முதலில் போரில் கிடைக்கும் செல்வம் என்றும் அதன் பின் பொதுவான செல்வ வளம் என்றும் மாறிய சொல்லாகவே எடுத்துக்கொள்கிறேன்.
ஊர்ணாவதி என்றால் குளிராடைகள் – கம்பளி ஆடைகளுக்கான ஆடுகள் மிகுதியாக வாழ வழிவகுக்கும் நதி என்று அர்த்தம். வட மேற்கு இந்தியா கம்பளி ஆடுகளுக்குப் புகழ் வாய்ந்தது.
சிலமாவதி – சிலமா என்றால் சணல் உற்பத்தி செய்ய உதவும் தாவரம் என்று சயணர் குறிப்பிட்டிருக்கிறார். சிலமா என்றால் என்னைப் பொறுத்தவரையில் வைக்கோல் என்பதைக் குறிக்கும். சாலா – குடிசை வீடு, ஸ்தூணா – தூண் மற்றும் சிந்து நதியையும் இது குறிக்கும் என்று தோன்றுகிறது. இது பழங்காலச் சொல்லாக இருக்கும் என்று லுட்விக் சொல்கிறார். மேலும் சுலைமான் மலைத்தொடருக்கு இந்தப் பெயர் வந்ததற்கும் இதுவே காரணமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
மதுவிருத் என்பது ‘இனிமையான மலர்களை ஆடையாக அணிந்த நதியே’ என்றும் அர்த்தம் தரலாம். இனிப்பான கரும்பை விளைவிக்கும் நதி என்றும் அர்த்தம் தரலாம். சிந்து நதியின் வட பகுதி கரும்பு விளைச்சலுக்குப் புகழ் பெற்றது.
இந்தச் செய்யுள்கள் அத்தனை கவித்துவமாக இல்லைதான். இருந்தும் இதை எழுதிய வேத காலக் கவியின் எண்ணவோட்டங்களை இதிலிருந்து புரிந்துகொள்ளமுடிகிறது. அழுத்தமான, வளமான கற்பனை இல்லாமல் இவற்றை எழுதியிருக்க முடியாது.
தேம்ஸ் நதிக்கரையில் வசிக்கும் இன்றைய நவீன கால விவசாயிகளை எடுத்துக் கொள்ளுங்கள். பல்வேறு இங்கிலாந்துப் படை வரிசைகளின் முன்னணியில் தலைமை தாங்கியபடி ஒரு படைத் தளபதி கம்பீரமாகப் போருக்கு அல்லது பந்தயத்துக்குச் செல்வதுபோல் தேம்ஸ் நதி பல கிளை நதிகளைச் சேர்த்துக் கொண்டு முன்னோக்கிப் பாய்கிறது என்று அவர் கவித்துவமாகச் சொல்லக்கூடும். இன்று அவருக்கு இங்கிலாந்து முழுவதும் எளிதில் பயணம் செய்து இந்தக் காட்சிகளைக் கண்டு இப்படிச் சொல்வது எளிது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் அல்லது அந்தக் குறிப்பிட்ட பகுதியில்கூட இப்படி நீண்ட தொலைவுக்குப் பயணம் செய்து பார்ப்பது மிகவும் கடினமானதாகவே இருந்திருக்கும்.
வட மேற்கிலிருந்து வந்து பாயும் நதி, வட கிழக்கில் இருந்து வந்து பாயும் நதி, மற்றும் வெகு தொலையில் அதனுடன் கலக்கும் கங்கை மற்றும் யமுனை நதிகள் எல்லாம் மூன்று மாபெரும் படை வரிசைபோல் சிந்து நதியில் வந்து கலப்பது பற்றி வேத காலக் கவி பாடியிருக்கிறார். இன்றைய வரைபடத்தைப் பார்த்தால் நமக்கு இந்த மூன்று பெரு நதிகள் தன் கிளைகளுடன் சிந்து நதியில் கலப்பதைத் தெளிவாகப் பார்த்துப் புரிந்துகொள்ளமுடியும். வேதப் பழங்காலத்தில் அப்படியான வரைபடம் எதுவும் இருந்திருக்காது. உயரமான மலைகள், கூர்மையான பார்வை ஆகியவற்றைக் கொண்டே இந்த திரிகோணமிதி (முக்கோணவியல்) நிலச் சித்திரத்தை உருவாக்கியிருக்கிறார். இப்படிப் படையெடுத்துச் செல்லும் மூன்று நதிகளை முதலில் ‘கண்ட’ நபரை நான் மாபெரும் கவிஞர் என்றே அழைக்கிறேன்.
இந்த ஸ்தோத்திரச் செய்யுளில் (அப்படி இதை அழைக்கலாமென்றால்) இந்த பெரிய, சிறிய நதிகள் அனைத்துமே தமக்கென தனிப் பெயர்களைக் கொண்டவையாக இருக்கின்றன என்ற விஷயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இது நாகரிகத்தில் மிகவும் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்ததன் அடையாளம். வட இந்தியப் பகுதியைக் கைப்பற்றிய மக்கள் குலங்களின் ஒத்திசைவு அல்லது ஃபிரெஞ்சுக்காரர்கள் சொல்வதுபோன்ற உறுதியான ஒருமுகத்தன்மையை இது எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கிறது.
எந்த நதிக்கரையில் குடியமர்கிறார்களோ அந்த நதியை அவர்கள் தமது நதியென்று அழைப்பதுண்டு. நதிகளுக்கு ஏராளமான பெயர்கள் உண்டு. ஆறு, காட்டாறு, வளம் சேர்க்கும் புனல் என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு. வேகமாகப் பாய்ந்தோடுவதால் அம்பு, குதிரை என்பதுபோன்ற குறியீட்டுப் பெயர்களிலும் வளம் தருவதால் பசு என்றும் தந்தை என்றும் தாய் என்றும் காவல் தெய்வம் என்றும் மலையின் குழந்தை என்றும் பல்வேறு உருவகப் பெயர்களில் அழைப்பார்கள். ஒரே நதி, அது பாய்ந்தோடும் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களால் அழைக்கவும்படும். பல்வேறு பகுதிகளில் குடியேறி இருப்பவர்களிடையே தகவல் தொடர்புப் பரிமாற்றங்கள் அடிக்கடி நடந்த பின்னரே அந்த நதிக்கு ஒரே பெயரின் தேவையை உணர்ந்துகொள்வார்கள். அதன் பின்னரே ஒரு நாட்டின் நதிகளுக்கு முறையான பெயர்கள் சூட்டப்பட்டு ஆவணப்படுத்தப்படும். நாம் இப்போது மேற்கோளாகப் பார்த்த ரிக் வேதப் பாடல்கள் எழுதப்படுவதற்கு வெகு முன்பாகவே இந்தப் பெயர் சூட்டல்கள் நடந்து ஒருமுகத்தன்மை உருவாக்கிவிட்டிருக்கவேண்டும்!
இங்கு நாம் இன்னொரு அதிரவைக்கும் விஷயத்தையும் பார்க்கவேண்டும். கி.மு. ஆயிரத்தைச் சேர்ந்த வேத காலக் கவி ஒருவருக்குத் தெரியவந்திருக்கும் பல்வேறு இந்திய நதிகளை இங்கு பார்த்தோம். அதன் பின் அலெக்சாண்டரின் காலம் வரையிலும் நமக்கு வேறு எவையும் அறியக் கிடைக்கவில்லை. அலெக்சாண்டருடன் வந்தவர்கள் இந்தியாவுக்கு மிகவும் அந்நியமானவர்களே. அவர்களுடைய மொழியும் எழுத்துகளும் அந்நியமான மொழிதான். இருந்தும் வேத காலத்தில் வைக்கப்பட்ட பெயர்கள் கிட்டத்தட்ட எந்தவிதப் பெரிய சிரமமும் இல்லாமல் அலெக்சாண்டார் காலத்து ஆவணங்களிலும் அப்படியே இருப்பதைப் பார்க்கிறோம்.
இந்தியாவில் உள்ள நகரங்களின் பெயர்களைவிடவும் இந்த நதிகளின் பெயர்களுக்கு மிகப் பெரியதொரு முக்கியத்துவமும் சாதகமான அம்சமும் இருக்கின்றன. தில்லி, டெல்லி என்று இன்று நாம் அழைக்கும் ஊர் அந்நாட்களில் இந்திரபிரஸ்தம் என்றும் பின்னாளில் ஷாஜஹான்பாத் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. அயோத்யாவானது அவுத் என்று பெயர் மாறியிருக்கிறது. சாகேதபுரி என்ற பெயர் மறந்தேபோய்விட்டது. பாடலிபுத்ரம் என்ற நகரமானது கிரேக்கர்களால் பாலிம்போத்ரா என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இப்போது அது பாட்னா என்று ஆகிவிட்டது.
இப்போது வேத கால நதிகளின் பெயர்கள் அப்படியே அச்சு அசலாக எந்த மாற்றமும் இன்றி பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதைப் பார்க்கும்போது எனக்கு ஓர் அதிர்ச்சி ஏற்படுகிறது. இது இப்படி இருக்க முடியாதே… ஏதோ ஒரு தவறு நடந்திருக்கவேண்டும். சிந்து, கங்கை என்ற பெயர்கள் எனக்கு அதிக ஆச்சரியத்தைத் தரவில்லை. சிந்து (ஸிந்து) என்பது ஆதிகால வணிகர்கள், நிலம் வழி வந்தவரானாலும் கடல் வழி வந்தவரானாலும், அவர்களுக்குத் தெரிந்த பெயர்தான். புஷ்துஷ் என்று ஆஃப்கானியர்கள் இன்றும் அழைக்கும் பக்தஸ் நகரத்திலிருந்து ஸ்கைலாக்ஸ் பயணம் மேற்கொண்டு சிந்து நதி முகத்துவாரம் வரை வந்திருக்கிறார். அது டேரியஸ் ஹைஸ்டஸ்பஸின் காலம் (கி.மு. 521-486)
இதற்கு முந்தைய காலகட்டங்களில்கூட இந்தியர்களும் இந்தியாவும் அங்கு பாய்ந்த பிரதான நதியான சிந்து நதியின் பெயரால் அறியப்பட்டிருக்கிறார்கள். பாரசீகர்களைப் போலவேதான் அருகில் இருந்த இரானிய மொழி பேசிய குலத்தினர் அனைவரும் ‘ஸ’ என்பதை ‘ஹ’ என்றே உச்சரித்தனர். அப்படியாக ஸிந்து என்பது ஹிந்து என்று ஆனது. அதன் பின் ஹிந்து என்பது இந்து என்றானது. அப்படியாக பாரசீர்களிடமிருந்து முதன் முதலாக சிந்து நதியைப் பற்றிக் கேள்விப்பட்ட கிரேக்கர்கள் இந்தஸ், இந்தோய் என்று இதை அழைத்திருக்கிறார்கள்.
ஸிந்து என்றால் இரண்டாகப் பிரிக்கக்கூடியது, காக்கக்கூடியது, தடுக்கக்கூடியது என்று பொருள். ஸித் என்று எடுத்துப் பார்த்தால் விலக்கி வைக்கக்கூடியது என்று பொருள். அது ஆண்பாற் பெயர். பின்னாளில் பெண்பாற்பெயரானது. நிலத்தை இரண்டாகப் பிரித்தபடி பாயும், மிகவும் அகன்ற நதிக்கு, தன் கரையருகில் குடியேறியவர்களைக் கொடிய விலங்குகள் மற்றும் பகைக் குலங்களின் தாக்குகுதல்களிலிருந்து காக்கக்கூடிய நதிக்கு ஸிந்து நதி என்று பெயர் வைத்தது மிகப் பொருத்தமே. இந்தியாவில் ஆரியர்கள் குடியேறிய பகுதிகளுக்குப் பொதுவாக வைக்கப்பட்ட பெயர் சப்த நதி தீரம். சப்த சிந்தவா. சமுத்ரே ந சிந்தவா யாதாமானா என்று ரிக்வேதத்தில் நதி என்பதற்கு சிந்து என்ற பெயர் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டபோதிலும் இந்தியாவின் வலிமையான பிரமாண்ட நதியான சிந்து நதியையே ஆதிமுதல் குறித்துவருகிறது.
ரிக்வேதத்தில் சில பத்திகளில் சிந்து நதி என்பதை சிந்து சாகரம் என்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். வேத தேசத்தின் நிலவியல் அம்சங்களைப் புரிந்துகொள்ள இது பெரிதும் பயன்படுகிறது. சிந்து நதியானது சில இடங்களில் நீந்திக் கடக்கும் முடியும்படியாக குறுகியதாக இருக்கும். சில இடங்களில் நதியா கடலா என்று சொல்லமுடியாத அளவுக்குப் பரந்து விரிந்ததாகவும் இருக்கும். இந்தப் பெயர் இரண்டுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு மாலுமிக்கு சிந்து என்ற நதியின் பெயர் எப்படி, எதனால் சிந்து சாகரமாக அழைக்கப்படுகிறது என்பது நன்கு புரிந்துமிருக்கும்.
சிந்து மற்றும் கங்கை ஆகிய இந்த இரண்டு மகத்தான நதிகள் அல்லாமல் பல்வேறு சிறிய நதிகள் இருக்கின்றன. வேத காலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதே பெயரிலேயே அலெக்ஸாண்டருடன் வந்தவர்கள் எழுதியவற்றிலும் இடம்பெற்றிருக்கின்றன.
பிளினி யமுனையை ஜொமொனஸ் (ஜமுனா) என்றும் ஏரியன் ‘ஜோபரெஸ்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். சதத்ரி அல்லது சதத்ரு என்று நூறு கால்வாய்களாக ஓடும் நதி அழைக்கப்பட்ட நதியானது தாலமியால் ‘ஸபதஸ்’ என்றும் பிளினியால் ‘சய்த்ரஸ்’ என்றும் குறிப்பிட்டிருக்கின்றன. மெகஸ்தனிஸுக்குக்கூட ஸபதஸ் என்ற பெயர் தெரிந்திருக்கிறது. விபாஸ் நதியுடன் சேர்ந்து சதத்ரு நதி பஞ்சாபின் எல்லையாக இருந்ததாக வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விபாஸ் மற்றும் சதத்ரி மலைகளில் இருந்து அருகருகே இரண்டு குதிரைகள் கட்டவிழ்க்கப்பட்டுப் பாய்வதுபோல் இரண்டு தாய்ப் பசுக்கள் தன் கன்றை நாவால் வருடிக்கொடுப்பதுபோல் பாய்கின்றன;
இந்திரனின் உத்தரவைக் கேட்டு இரண்டு தேரோட்டிகள் அருகருகே தேரோட்டிச் செல்வது போல் அருகருகே ஒன்றுடன் ஒன்று கலந்தபடி நதிகளே நீங்கள் பாய்கிறீர்கள் என்று ரிக்வேதம் 3:33-1 சொல்கிறது.
அந்த நதிக்கரையில் மிகக் கடுமையான யுத்தம் வேத காலத்தில் நடந்திருக்கிறது. 1846-ல் சர் ஹூ கோவுக்கும் சர் ஹென்றி ஹார்டிங்கேவுக்கும் இடையிலான சட்லெஜ் போரும் இதே இடத்தில்தான் நடந்திருக்கக்கூடும். விபஸ் (பின்னாளில் விபாஸா) சட்லெஜ் நதியின் கிளை நதி. அலெக்சாண்டரின் படை திரும்பிச் சென்ற இடம். அப்போது அது ஹைபா(ஹ்)சிஸ் என்று அவர்களால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிளினி இதை ஹைபாசிஸ் என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘தடைகளைத் தகர்த்து முன்னேறும்’ என்பது அர்த்தம். அந்த நதியின் நவீன காலப் பெயர் பியாஸ் அல்லது பேஜா.
மேற்கில் இருக்கும் அடுத்த நதி வேதங்களில் சொல்லப்படும் ப்ருஷ்ணி. ஐராவதி என்ற பெயரில் நன்கு அறியப்பட்டிருக்கிறது. ஸ்ட்ராபோ இதை ஹயரோடிஸ் என்றும் ஏரியன் இதை மேலும் அதிக அளவுக்கு கிரேக்கமயப்படுத்தி ஹயட்ரேடஸ் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதன் நவீன காலப் பெயர் ரவி. வேதங்கள் குறிப்பிடும் தச ராஜ யுத்தம் நடந்த இடம் இதுவே. சுதஸ் மன்னரின் மீது படையெடுத்த பத்து அரசர்களின் படை மேற்குப் பக்கமாக இருந்து இந்த நதியைக் கடக்க முற்பட்டனர். முடியாமல் மூழ்கிப் போனார்கள் (ரிக்வேதம் 7:18: 8-9)
அஸிக்னி என்றால் கறுப்பு. அந்த நதிக்கு சந்திரபாகா என்றொரு பெயரும் உண்டு. அந்தப் பெயரை கிரேக்கர்கள் தவறாக உச்சரித்தனர். அவர்கள் பயன்படுத்திய கிரேக்கச் சொல்லுக்கு ‘அலெக்சாண்டரை அழிப்பவர்’ என்ற அர்த்தம் வந்தது. எனவே அந்த நதியின் பெயரை ‘சுகம் தருபவர்’ என்ற அர்த்தம் வரும் கிரேக்கச் சொல்லுக்கு மாற்றினர் என்று ஹெசிசியஸ் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நதியின் இன்னொரு பெயரான அஸிக்னி என்பதற்கான கிரேக்கச் சொல்தான் அது என்பதை அவர் குறிப்பிடவில்லை. அது இன்றைய செனாப் நதியைக் குறிக்கிறது.
பஞ்சாபின் கடைசி நதி வேத கால விதஸ்தா. இதை கிரேக்கர்கள் ஹைதாஸ்பஸ் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அலெக்சாண்டர் திரும்பிச் சென்ற நதிக்கரை. இதற்கு மேல் சிந்து நதியில் பயணம் செய்வதைத் தவிர்த்துவிட்டு பாபிலோனுக்குத் திரும்பினார். இன்றைய ஜீலம் நதி இதுவே.
மேலும் பல வேத கால நதிகளை நம்மால் அடையாளம் காண முடிகிறது. உதாரணமாக, குபா நதி. கிரேக்கர்கள் இதை கோபென் நதி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். நவீன காலத்தில் இது காபுல் நதி என்று அழைக்கப்படுகிறது. இந்த குபா நதிக்கு முன்பாக சிந்து நதியுடன் சேரும் வேறு கிளை நதி எதையும் நம்மால் அடையாளம் காணமுடியவில்லை. மூன்று அல்லது நான்கு ஆயிரம் ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் வேத காலப் பெயர்களை அடையாளம் காணமுடியவில்லை என்று பல ஆய்வாளர்கள், பயணிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சிந்து நதியுடன் குபா நதி இணைந்த பின்னர் வேறு இரண்டு நதிகள் கோமதி, குர்மு ஆகியவை இணைகின்றன. இவை இன்றைய கோமல் மற்றும் குர்ரம் நதிகளாக இருக்கும் என்று நினைக்கிறேன். தேரா இஸ்மாயில் கான் கிராமம் மற்றும் பாராப்பூர் ஆகியவற்றுக்கு இடையே சிந்து நதியுடன் கோமல் நதி கலக்கிறது. இது மழைக்காலங்களில் மட்டுமே நீர்வரத்து உள்ள நதி என்று எல்ஃபின்ஸ்டன் குறிப்பிட்டிருக்கிறார். கோமல் நதிக்கு வடக்குப் பக்கத்தில் குர்ரம் நதி சிந்து நதியுடன் கலக்கிறது. ஆனால் வேதக் கவிகள் தென் பக்கத்தில் கலப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். புவியியலாளர்களைப் போல் கவிஞர்கள் பேசவேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இதை ஒரு முக்கிய விமர்சனமாக எடுத்துக்கொள்ளவேண்டுமென்றால் கோமதி நதியைத்தான் சரியாகக் குறிப்பிடவில்லை என்று எடுத்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் இந்த இரண்டு நதிகளில் குர்ரம் நதியே மிகவும் பெரியது. ‘குர்மு நதிக்கான இன்னொரு பண்புப் பெயராக ‘கால்நடைச் செல்வம் மிகுந்த’ என்பதைக் குறிக்கவே கோமதி என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்’ என்று ஜெனரல் கன்னிங்ஹாம் ‘பழங்கால இந்தியப் புவியியல்’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இது 1871-ல் ‘நேச்சர்’ என்ற இதழில் செப் 14-ல் வெளியாகியிருக்கிறது.
அப்படியாக வேத காலம் தொடங்கி அலெக்சாண்டர் காலம் வரையிலும் இருந்த இந்த நதிகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் இன்றைய பெயர்கள் என்ன என்பதுவரை என்னால் (ஆய்வாளர்களால்) கண்டுசொல்ல முடிந்திருப்பதென்பதே வேதங்களின் உண்மையான சரித்திர முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள நமக்குப் போதுமானவையாக இருக்கின்றன. வேதங்கள் எல்லாம் அலெக்சாண்டரின் காலத்துக்குப் பின்னர் தான் போலியாக, பொய்யாக எழுதப்பட்டிருக்கின்றன என்று ஒருவர் சொல்லக்கூடும். அப்படியானால் இந்த நதிகளின் பெயர்களை ஒருவர் எப்படி விளக்கிச் சொல்லமுடியும்? அவையெல்லாமே சமஸ்கிருதத்தில் தனிச் சிறப்பான அர்த்தம் கொண்டவையாக இருக்கின்றன. கிரேக்கத்தில் இவை பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதம் தெரியாத மக்கள் எழுதிய அந்த மூல சம்ஸ்கிருதப் பெயர்களின் சொற் திரிதல்களாகவே இருக்கின்றன. இந்த இடத்தில் என்ன வரலாற்றுத் திரிபு நடந்திருக்க முடியும்?
இந்த வேதச் செய்யுள்களை நான் இரண்டு காரணங்களுக்காக ஆய்வுக்கு எடுத்துக்கொண்டேன். முதலாவதாக, இந்த நதிகளைப் பற்றிய செய்யுள்கள் வேத காலத்தினர் (கவிகள்) வாழ்ந்த நிலப்பரப்பு பற்றித் தெளிவாக அறியத் தருகின்றன. வடக்கே பனி படர்ந்த மலைகள், மேற்கே சிந்து நதி மற்றும் சுலைமான் மலைத்தொடர்கள், தெற்கில் சிந்து நதி அல்லது சிந்து சாகரம், கிழக்கே யமுனை மற்றும் கங்கைச் சமவெளி என இந்த நான்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதியில் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதற்கு அப்பாற்பட்ட நிலப்பரப்புகள் வேதக் கவிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
இந்த ஸ்லோகங்களை எடுத்துக் கொண்டதன் இரண்டாவது காரணம் இவை வேத காலம் எந்த வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்ற சான்றுகளைத் தருகின்றன. இன்று நாம் பார்ப்பதுபோலவே இந்த நதிகளை அலெக்சாண்டரும் மாசிடோனியர்களும் பார்த்திருக்கிறார்கள். அதுபோலவேதான் வேத காலத்தினரும் பார்த்திருக்கிறார்கள்.
இதில் ஒரு மாபெரும் வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது. இந்த வேதப் பாடல்கள் மிகவும் விசித்திரமான முறையில், கிட்டத்தட்ட நம்பவே முடியாத அளவிலான வகையில் கால வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன. புரோகிதர்கள் அல்லது சரியாகச் சொல்வதென்றால் தெய்வங்களின் தாசர்கள், மந்தைகளை மேய்த்த இடையர்கள், குல வழி நில உடைமையாளர்கள் ஆகியோரால் கைமாற்றிக் கொண்டுவரப்பட்டுள்ளன. இவர்கள் இந்த மலைச்சரிவுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வேலியிடப்பட்ட தமது வீடுகளுக்குள் நிலங்களுக்குள் ஆங்காங்கே வசித்துவந்திருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் கோட்டைகள் போல் வலிமையாகப் பாதுகாப்பரண்கள் இருந்திருக்கலாம். உலகின் பிற பகுதிகளில் வாழும் மனிதர்களைப் போலவே குறுகிய கால வாழ்க்கை… அதிக நெரிசலும் போட்டிகளும் மோதல்களும் இல்லாமல் கோடை, வசந்தம், மழை, குளிர் என அனைத்தையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.
தினமும் உதித்து மறைந்த சூரியன் அவர்களுக்கு மிகவும் பிடித்த புல்வெளிகள், தோப்புகளில் இருந்து அவர்களுடைய பார்வையையும் சிந்தனைகளையும் மேலெழச் செய்து அவர்கள் புறப்பட்டு வந்த கிழக்கு நோக்கி அல்லது மேற்குப் பகுதிகளுக்கு நகரச் செய்திருக்கின்றன. அவர்களிடம் இருந்த வழிபாட்டு நம்பிக்கைகள் மிகவும் எளிமையானதாக இருந்திருக்கிறது. ஒரு தனி பிரமாண்ட மதம் என்பதாக வளர்ந்திருக்கவில்லை. அவர்கள் உணர்ந்ததும் அறிந்ததும் எல்லாம் ‘இந்த உலகுக்கு அப்பால்’ ஏதோ ஒன்று இருக்கிறது என்பதைத்தான். முடிந்தவரையில் அந்த அப்பாலான அம்சத்துக்குப் பல பெயர்களைக் கொடுத்தனர். அவர்களுடைய ஆதி வழிபாட்டு மரபுகளை ஒரு மதமாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் காலகட்டம் வரையிலும் அவர்களுடைய கடவுளுக்கு ஓர் இறுதியான உறுதியான பெயரை உருவாக்கியிருக்கவில்லை. நாம் கடவுள் என்று சொல்லும் அர்த்தத்தில் ஒன்றை நிச்சயம் உருவாக்கியிருக்கவில்லை. பல கடவுள்களுக்கு ஒரு பொதுவான பெயரைக்கூட உருவாக்கியிருக்கவில்லை. இயற்கை சக்திகளில் அவர்கள் பார்த்த மற்றும் உணர்ந்த அம்சங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாகப் பல பெயர்களைச் சூட்டி அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சி செய்துவந்திருக்கிறார்கள். இருந்தும் ‘எல்லாவற்றுக்கும் அப்பாலான’ அந்த ஒன்றின் உண்மையான முழுமையான சாரம் நமக்கு இப்போதும் புரிந்துகொள்ள முடியாததாக இருப்பதுபோலவே அவர்களுக்கும் புரிந்துகொள்ளவோ பார்க்கவே முடியாததாகவே இருந்திருக்கிறது.
*