வேதங்களில் இடம் பெறும் மிகவும் முக்கியமான இயற்கை அம்சம் நெருப்பு. இதை சமஸ்கிருதத்தில் ‘அக்னி’ என்கிறார்கள். அக்னி, வேத காலத்தில் தெய்வமாகப் போற்றப்பட்டிருக்கிறது. லத்தீனில் அது அக்னிஸ் – இக்னிஸ் என்று அழைக்கப்படுகிறது. வேத காலத்தில் அக்னி தெய்வத்துக்குச் செய்யப்பட்ட வழிபாடுகள், போற்றிப் புகழப்படும்விதம் இவையெல்லாம் மனித வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள் மட்டுமல்ல; ஒட்டு மொத்த மனித வாழ்க்கையே நெருப்பைச் சார்ந்ததாக இருந்த காலகட்டத்தை எடுத்துக்காட்டுகிறது. நமக்கு நெருப்பு மிகவும் சர்வசாதாரணமான விஷயமாகிவிட்டிருக்கிறது. எனவே நெருப்பில்லாத வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை நம்மால் நினைத்துப் பார்க்கவே முடியாது. ஆனால் பூமியில் வாழ்ந்த ஆதி மனிதர்கள் எப்படி நெருப்பை உருவாக்கி அதைத் தம் கட்டுக்குள் வைத்திருந்தனர்? வானிலிருந்து மின்னல் வடிவில் அக்னி வந்ததாகவும் பின்னர் அது மறைந்துவிட்டது; மாதரிஸ்வான் என்ற கடவுள் (கிரேக்கர்களின் ப்ராமீதியஸ் போன்றவர்) அக்னியை மீண்டும் கொண்டுவந்து பிருகு வம்சத்தினரிடம் பத்திரமாக வைத்துக்கொள்ளும்படிக் கொடுத்தார் என்று வேத இலக்கியங்கள் சொல்கின்றன. மரக்கட்டைகளை உரசி நெருப்பு பற்றவைக்கப்பட்டதாகவும் சில வேதச் செய்யுள்கள் சொல்கின்றன. நெருப்பு உருவாகப் பயன்படுத்தப்பட்ட மரக்கட்டையை சமஸ்கிருதத்தில் ‘ப்ரமந்தா’ என்று சொல்கிறார்கள். இது ப்ராமீதியஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்கு நெருக்கமானதாக இருக்கிறது என்று அடால்பர்ட் குன் குறிப்பிட்டிருக்கிறார்.
நெருப்பை அக்னி குண்டத்தில் புனிதமாகச் சொல்லிப் பாதுகாத்திருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் அதை உருவாக்கிக் கொண்டிருந்தாலும் ஆரம்ப நாகரிக வளர்ச்சியில் மாபெரும் காலடிவைப்பை அது சுட்டிக்காட்டுகிறது. மாமிசத்தைப் பச்சையாக உண்பதற்குப் பதிலாக வேக வைத்து உண்ண அது வழி செய்திருக்கும். இரவுகளிலும் மனிதர்கள் தமது வேலைகளைச் செய்ய உதவியிருக்கும். பனிக்காலங்களில் குளிரில் உறைந்து மரணத்தைத் தழுவுவதிலிருந்து காப்பாற்றியிருக்கும். இதனால் அனைத்துக் கடவுள்களிலும் கருணை கொண்டவராகவும் மிகச் சிறந்த கடவுளாகவும் அக்னி தேவன் போற்றப்பட்டதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. விண்ணிலிருந்து பூமிக்கு வந்து வாசம் செய்யும் ஒரே தெய்வமாகவும் மனிதர்களின் தோழராகவும் கடவுள்களுடனான தூதுவராகவும் அழியும் பொருட்களிலே அழியாததாகவும் அக்னி போற்றப்பட்டதில் வியப்படைய எதுவும் இல்லை. ஆரியர்களின் வாழிடங்களைக் காப்பவர்; கறுப்புத் தோல் எதிரிகளைப் பயந்தோடச் செய்பவர் என்றும் புகழப்படுகிறார்.
வெகு விரைவிலேயே ஒளி மற்றும் இதம் ஆகிய பொதுவான அம்சங்களைக் கொண்டதாக அக்னி தெய்வக் கோட்பாடு மாற்றமடைகிறது. அடுப்பு, யாக குண்டம், பலி பீடம் இவை மட்டுமல்ல உஷஸ் (உதயம்), சூரியன், சூரியனுக்கும் அப்பாற்பட்ட பிரபஞ்சம் ஆகியவற்றிலும் அக்னி இருப்பதாக நம்ப ஆரம்பித்தனர். அதேநேரம் அக்னியின் வலிமை கனிகள் பழுப்பதுபோல், உணவு வேகுவதுபோல் பக்குவமடைந்துவருவதாகச் சொன்னார்கள். கதகதப்பைத் தந்து மனித வாழ்க்கையை, பூமியில் சாத்தியமாக்கும் அம்சமாகவும் அக்னியைப் பார்க்க ஆரம்பித்தனர். அந்தக் காலகட்டத்திலிருந்து அக்னி தேவன் அனைத்துக் கடவுள்களையும் விட ஆகப் பெரிய கடவுளாக ஆனார். விண்ணையும் மண்ணையும் விரித்துப் பெரிதாக்கியவர் அவரே என்று சொன்னார்கள். அது இயல்பானதுதான். அந்த ஒளி இல்லையென்றால் விண்ணும் மண்ணும் பிரித்துப் பார்க்க முடியாததாக இருண்டுதானே இருந்திருக்கும். விண்ணை, தன் ஒளியால் (வலிமையால்) அதி உயரத்தில் தூக்கி நிறுத்தி விண்ணையும் மண்ணையும் பிரித்துவைத்ததும் அக்னியே என்று அடுத்தகட்ட வேதக் கவி சொல்கிறார். ‘விண்ணையும் மண்ணையும் பெற்றெடுத்ததே அக்னிதான். இந்த உலகில் ஊர்வன, பறப்பன, நிற்பன, நடப்பன எல்லாமே அவரால் உருவாக்கப்பட்டவையே’ என்றும் அக்னிதேவன் போற்றப்படுகிறார்.
இங்கும் அதே பழைய பாணியே நம் முன் தெரிகிறது. ஒரு மரத்தை மின்னல் வெட்டிச் சரிப்பது, முழுக் காட்டை எரிப்பது, இரண்டு மரங்கள் உரசி தீப்பொறி பறப்பது, வண்டிச்சக்கரம் உரசும்போது தீப்பொறி கிளம்புவது, அல்லது திட்டமிட்டு நெருப்பை உராய்ந்து உருவாக்குவது என ஒரே ஒருமுறை அல்லது மீண்டும் மீண்டும் நடக்கும் இயற்கை நிகழ்வைக் கண்டு மனித மனம் கலவரமடைந்திருக்கிறது. மிக எளிய இயற்கை நிகழ்வானது ஆதி மனிதருக்குப் பெரிய அதிசயம் போலிருந்திருக்கிறது. அதைப் பற்றி அவர் சிந்திக்க ஆரம்பிக்கிறார். ஓர் இயற்கை சக்தியின் விளைவுகளை அவரால் பார்க்க முடிகிறது. ஆனால் அதன் மூல காரணத்தை யூகிக்க மட்டுமே முடிகிறது. அதைப் பற்றிச் சொல்லும்போது அது மனிதருக்கு உதவும் நபர், பிரதிநிதி என்று சொல்கிறார். அதன் பின் சிலவகையில் அந்த இயற்கை அம்சம் வெறும் சாதாரண மனிதர் அல்ல; அதி மானுட அம்சம் கொண்டவர் என்று சொல்கிறார்.
அப்படியாக நெருப்பு பற்றிய சிந்தனைகள் மெள்ள மெள்ள விரிவடைகின்றன. அது மேலும் மேலும் பொதுமைப்படுத்தப்பட ஆரம்பிக்கும்போது, மேலும் மேலும் சிக்கலாகவும் புரிந்துகொள்ளக் கடினமானதாகவும் ஆகிறது. அப்படியாக அது மேலும் மேலும் தெய்வாம்சம் கொண்டதாக ஆகிறது. அக்னி இல்லாமல் நெருப்பு, ஒளி, கதகதப்பு எதுவுமே இல்லை. பூமியில் வாழ்க்கையே சாத்தியமில்லை. அப்படியாக அக்னி தேவனே அனைத்தையும் தோற்றுவித்தவராக தாவரங்கள், விலங்குகள், மனிதரென அனைத்துக்கும் உயிர் கொடுத்தவராக ஆகிறார்.
உலகின் ஒளி மற்றும் அனைத்தின் உயிர்ப்புக்கும் காரணமாக அக்னி தேவன் ஆனதைத் தொடர்ந்து சில கவிகளின் மனங்களிலும் கிராம சமூகங்களிலும் அக்னி தேவனே அனைத்து தெய்வங்களையும்விட அதி உயர்ந்தவர்; உண்மையான கடவுள் அவரே என்றெல்லாம் சிந்தனைகள் உருவாகி அவர் அதி தெய்வமாகப் புகழப்பட ஆரம்பித்ததில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை.
காற்று, மேகங்கள், குறிப்பாக இடி, மின்னல், இருட்டு, புயல், மழை ஆகியவையெல்லாம் பழங்காலக் கவிகளின் மனதில் என்னென்ன சிந்தனைகளை உருவாக்கியிருக்கும் என்பதைப் பார்ப்போம். முதலில் அவை இந்த உலகில் மனிதர்கள் மட்டுமே தனித்துவிடப்படவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தியிருக்கும். அனைத்து மதங்களும் அச்சம் அல்லது பயங்கர உணர்விலிருந்தே உருவாகியிருக்கின்றன என்று பல தத்துவமேதைகள் சொன்னதைக் கேட்டிருப்பீர்கள். இடியும் மின்னலும் இருந்திருக்காவிட்டால் நாம் பல கடவுள்கள் அல்லது ஒரு கடவுளை நம்பியிருக்கவே மாட்டோம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
இது ஒருதலைப்பட்சமான மிகைப்படுத்தப்பட்ட கூற்று. புயலும் இடியும் மனித மனங்களில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியதில் மிகப் பெரிய பங்கை வகித்திருப்பது உண்மையே. தனது பலவீனம் மற்றும் வேறொன்றைச் சார்ந்திருக்கும் நிலை ஆகியவற்றை மனிதருக்கு இவையே உணர்த்தவும் செய்திருக்கின்றன. வேதங்களில் இந்திரன் தன்னைப் பற்றிச் சொல்லும்போது, ‘நான் இடியையும் மின்னலையும் அனுப்பும்போதுதான் நீங்கள் என்னை நம்பி ஏற்றுக்கொள்வீர்கள்’ என்று சொல்வதாக இடம்பெற்றிருக்கிறது. ஆனால் நாம் மதம் என்று அழைப்பது வெறும் பயம் மற்றும் பயங்கரத்திலிருந்து மட்டுமே உருவானதாக நிச்சயம் இருக்கமுடியாது.
மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. அந்த நம்பிக்கையானது மனித மனங்கள் மற்றும் சிந்தனையில் இயற்கையின் ஒழுங்கு மற்றும் நிகழ்வுகளினால் ஆரம்பத்தில் ஏற்பட்டன. குறிப்பாக சூரியனின் உதயம் மற்றும் அஸ்தமனம், நிலவு தேய்ந்து பின் தோன்றுவது, பருவ காலங்களின் முறையான சுழற்சி போன்ற திரும்பத் திரும்ப நடக்கும் நிகழ்வுகளில் ஒருவித காரண காரியத் தன்மையை மெள்ள மனித மனம் கண்டுகொண்டது. இந்த நிகழ்வுகள், காரண காரியங்கள் அனைத்துக்கும் மூல காரணமான ஒன்றை ஏதோவொரு பெயரில் அழைக்க ஆரம்பித்தது.
பழங்கால தெய்வங்களை உருவாக்கியதில் இந்த இயற்கை, பருவ கால நிகழ்வுகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வேத கால ரிஷிகளின் பாடல்களில் இவை மிகுதியான இடத்தை இயல்பாகவே இதனால் பிடித்திருக்கின்றன. வேத காலத்தினரின் பிரதான தெய்வம் யார் என்று என்னைக் கேட்டால், நமக்குக் கிடைத்திருக்கும் வேதப் பாடல்களில் இருந்து பார்த்தால், நீல வானின் கடவுளான இந்திரனே பிரதான கடவுள் என்பேன். இந்தியர்களின் ஜீயஸ். மேகங்களைக் கட்டுப்படுத்துபவர்; மழையைத் தருபவர்; இடியை முழங்கச் செய்பவர். மின்னலை உருவாக்குபவர்; இருளை வெல்பவர்; இருளின் அனைத்து சக்திகளையும் வென்றவர்; ஒளியைக் கொண்டுவருபவர்; உயிர்த்துடிப்பு, உயிர்மை, புத்துணர்ச்சி அனைத்தையும் தருபவர். ஒட்டு மொத்த உலகை ஆள்பவர்; அனைத்து உலகங்களின் எஜமானர்.
வேதங்களில் இடம்பெற்றிருக்கும் இந்திரன் இப்படியானவரே. இன்னும் சொல்லப்போனால் இதையும்விட வலிமையானவர். வேதக் கவிகள் பலரின் பாடல்களில் இவரே அதி உன்னத தெய்வமாகப் புகழப்பட்டிருக்கிறார். இந்தியாவின் எண்ணற்ற கிராம சமூகத்தினரின் பிரார்த்தனைகள் எல்லாமே இந்திரனை நோக்கியே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இந்திரனோடு ஒப்பிடும்போது பிற கடவுள்கள் எல்லாம் தளர்ந்து ஒதுங்கி நிற்கும் முது மூப்பர்களே.
அனைத்துக் கடவுள்களின் தந்தையாகச் சொல்லப்பட்ட விண்ணும் மண்ணுமே, அதாவது இந்திரனின் பெற்றோராகிய அந்த விண்ணும் மண்ணுமே இந்திரன் முன்னால் தலை வணங்கி நிற்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பூமியானது (பூமாதாவானது) இந்திரனின் வருகையைக் கண்டு அஞ்சி நடுங்குவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும் ஜீயஸ் அல்லது ஜூபிடர்போல் நிரந்தரமான மேலாதிக்கத்தை இந்திரன் ஒருநாளும் அனுபவித்திருக்கவில்லை இந்திரன் என்று ஒருவர் இருந்ததே இல்லை என்று அவரை மறுதலிக்கும் அவிசுவாசிகளை அதே வேதங்களிலேயே நாம் பார்க்க முடிகிறது.
இந்திரனுடன் போரில் துணை நின்றவர்கள், சில நேரங்களில் அவரிடமிருந்து பிரித்தறியமுடியாதபடியான வாயு தேவன், புயலைக் கொண்டுவரும் மருத்கள் என வேறு கடவுள்களும் வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.
‘கடவுள்களின் மூலாதாரமான, உயிராதாரமான வாயு தேவன் எங்கு பிறந்தார்? எப்போது பிறந்தார்? செல்லுமிடமெல்லாம் அவருடைய ஒலியைக் கேட்க முடியும். ஆனால் அவரைப் பார்க்க முடியாது’ என்று வாயு (தேவன்) பற்றி வேதக் கவி பாடியிருக்கிறார்.
வாயு தேவனைவிட மருத்கள் பயங்கரமானவர்கள். இந்தியாவில் புழுதிப் புயலாகவும் கார் மேகங்களாகவும் வரும் புயல்கள் எல்லாம் மருத்களின் செய்கையாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. மரங்களைப் பெயர்த்தெடுப்பது, கிளைகளை முறிப்பது, மண் அரிக்கப்படுவது. மலைகள் சரிந்து விழுவது, நதிகள் வெள்ளப் பெருக்கில் நுரைத்துப் பொங்கிப் பாய்வது என இவையெல்லாமே மருத்களின் பயங்கரச் செயல்களாகச் சொல்லப்படுகின்றன.
தங்கத் தலைக்கவசம் (கிரீடம்) அணிந்துகொண்டு புள்ளி மான் தோலை அணிந்துகொண்டு, தங்க ஈட்டி எறிந்தபடியும் கோடரிகளை வீசியபடியும், அம்பு மழை பொழிந்தபடியும், சாட்டையால் அடித்தபடியும் இடி மின்னலினூடாகத் தமது தேர்களில் வலம் வருகிறார்கள். அவர்கள் இந்திரனின் படைத்தளபதிகள். இந்திரனைப் போலவே வானத்து தேவனின் குழந்தைகள். மேலும் அவர்கள் ருத்ரன் என்ற இன்னொரு கோபம் நிறைந்த போர் தெய்வத்தின் குழந்தை என்றும் சொல்லப்படுகிறார்கள்.
ருத்ரனைப் போற்றியும் பல பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ருத்ரனை, காக்கும் கடவுள் என்றும் இதமளிப்பவர் என்றும் கூடுதலாகச் சொல்கிறார்கள். கடுமையான வெப்பத்துக்கும் வறட்சிக்கும் பின்னர் மழையையும் வெள்ளத்தையும் கொண்டுவரும் தெய்வம் நோயைக் குணப்படுத்தி புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும் மனிதர்கள் விலங்குகள் அனைத்துக்கும் வலிமையூட்டுவதாகவும் போற்றப்படுவதென்பது இந்தியச் சூழலில் மிகவும் இயல்பானதுதான்.
பர்ஜன்யா, ரிபுக்கள் என வேறு பல கடவுள்கள் வளிமண்டலத்தில் இடைப்பகுதியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. பின்னாளில் தெய்வங்களாகச் சொல்லப்பட்டவர்களின் முன்னேர் வடிவங்களாக இந்தியக் காவியங்களில் புகழப்பட்டிருக்கிறார்கள். யுத்தங்களில் இந்தப் போர்த் தெய்வங்களைப் போற்றி எழுந்தருளச் சொல்வது வழக்கம். இந்திரன் பிரதான போர்க்கடவுள். பிரகாசமான ஆரியர்களைக் காப்பவர்; கறுப்பு நிறப் பூர்வகுடிகளை அழிப்பவர். ஐம்பதினாயிரம் கறுப்பர்களை அவர் வீழ்த்தினார் என்று ஒரு வேதக் கவி சொல்கிறார். அவர்களின் கோட்டைகள் எல்லாம் பொலபொலவென இடிந்து விழுந்தன என்று சொல்கிறார்.
யூத தீர்க்கதரிசிகள் எதிரிகளிடமிருந்து தம்மைக் காப்பாற்றிய ஜொஹோவாவைப் புகழ்ந்து சொல்லியிருப்பதுபோலவே இந்திரன் தமது எதிரிகளிடமிருந்து காப்பாற்றியதாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்படியாக மன்னர் சுதஸை, பத்து அரசர்கள் படையுடன் தாக்கவந்தபோது இந்திரனே கிழக்குப் பக்க நதியில் வெள்ளத்தைப் பெருக்கெடுக்கச் செய்து மன்னர் சுதஸை வெற்றிபெற வைத்தார் என்று வேதப் பாடல் சொல்கிறது.
‘இந்திரதேவா நீவிரே துர்வதி மற்றும் வய்யா இருவருக்காக மகா நதியை அடங்கச் செய்தாய். வெள்ளம் உன் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடந்தது. அதுவே அதை எளிதில் கடக்க உதவியது (ரிக்வேதம் 2.13.12 அரமயஹ சரபஸஸ் தாராய கம் துர்வதி யே ச வய்யாய ச ஸ்ருதிம்).
இந்தப் பாடல், ‘கர்த்தர் கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப் பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார்’ என்ற பைபிளின் சங்கீதம் 78:13 ஐப் போன்றதுதான்.
வேறு சில வேதப் பாடல்கள் ஜோஷுவாவின் போரை நினைவூட்டுவதையும் பார்க்கமுடியும். தமது எதிரிகளை வீழ்த்தி முடியும்வரை சூரியனும் சந்திரனும் உறைந்து நின்றன என்று அதில் இடம்பெற்றிருக்கிறது. இந்திரன் பகல்களை இரவுக்குள் நீளும்படிச் செய்தார்; நாளின் மதியப் பொழுதில் சூரியன் தன் தேரை ஏரக்கட்டினார் என்று வேதங்களில் இடம்பெற்றிருப்பதை, பேராசிரியர் கேகி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
விண்ணுக்கும் இடி மின்னலுக்கும் இந்திரனுக்கும் இடையிலான தொடர்பானது சில வேதப் பாடல்களில் மறக்கப்பட்டும் இருக்கின்றன. இந்திரன் ஆன்மிக தெய்வமாகவும் அனைத்து உலகங்கள், அனைத்து உயிர்களின் தெய்வமாகவும் ஆகிவிட்டிருக்கிறார். ‘இந்திரன் அனைத்தையும் பார்க்கிறார்; அனைத்தையும் கேட்கிறார்; மனிதர்களிடையே நற் சிந்தனைகளை அவரே தூண்டுகிறார். அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் யாரும் இல்லை’ என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன
இந்திரன் என்ற பெயர் இந்தியாவுக்கே உரியதாக இருக்கிறது. ஆரியக் குடும்பம் பிரிந்த பின்னர்தான் இந்தப் பெயர் உருவாகியிருக்கவேண்டும். ஏனென்றால் கிரேக்கம், லத்தீன், ஜெர்மன் என எதிலுமே இந்தப் பெயரைப் பார்க்கமுடியவில்லை. சில வேதக் கடவுள்களின் பெயர் ஆரியக் குழுக்கள் பிரிவதற்கு முன்பாகவே உருவாகியிருக்கவேண்டும். ஏனென்றால் அந்த சில வேதக் கடவுள்களின் பெயருக்கு இணையான சொற்கள் கிரேக்கம், லத்தீன், சில நேரங்களில் செல்டிக், ட்யூடானிக், ஸ்லோவிய மொழிகளில் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. தயுஸ் என்பது ஜீயஸ் அல்லது ஜூபிடரைக் குறிக்கும். உஷஸ் என்பது இஓஸ்; நக்தா என்பது நக்ஸ்; சூர்யா என்பது ஹீலியோஸ்; அக்னி என்பது அக்னிஸ்; பாகா என்பது பழைய பாரசிக மொழியில் பக. பழைய ஸ்லோவேனியா மொழியில் போகு. வருணா என்பது உரானஸ்; வாதா என்பது வோத்தன்; வாக் என்பது வோக்ஸ். புயல் கடவுள்களான மருத் என்பது இத்தாலிய போர்க்கடவுளான மார்ஸ் என்பதின் மூல வடிவம் போலிருக்கிறது.
இதுபோல் பல வேத கால தெய்வங்களின் பெயர்களுக்கும் பிற நாட்டுக் கடவுள்களின் பெயர்களுக்கும் இடையே ஒத்திசைவு இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த நேரடியான ஒத்திசைவு அல்லாமல் சராமேயா – ஹெர்மெஸ்; த்யோனிஸ்யா – டியோனிசஸ்; ப்ரமந்தா – ப்ரோமீதியஸ்; ரிபு – ஓரேபஸ்; சரண்யு – எரின்யஸ்; பாவனா – பான் போன்ற மறைமுக ஒப்புமைகளும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், வானத்தின் இறைவனாகவும் இடி மின்னலைக் கட்டுப்படுத்துபவராகவும் மழை பொழியச் செய்பவராகவும் சொல்லப்படும் இந்திரனின் பெயர் வட மேற்கு ஆரியக் குடும்பத்தில் எதிலுமே இல்லை.
இந்திரன் செய்யும் செயலைச் செய்பவராகச் சொல்லப்படும் பர்கன்யா – பர்ஜன்யா வேதங்களில் குறைவாகவே இடம்பெறுகிறார். இந்திரனுக்கு முன்பாக இந்தக் கடவுள் மக்கள் மனங்களில் இருந்திருக்கக்கூடும். ஏனென்றால் இரண்டு ஆரியக் குடும்ப மொழிப்பாரம்பரியத்தில் அதாவது ஜெர்மனி மற்றும் பால்டிக் மொழிகளில் இந்தப் பெயரைப் பார்க்க முடிகிறது.
பர்ஜன்யா என்ற பெயர் சில நேரங்களில் தயுஸ் என்ற ஆகாயத்தின் கடவுளைக் குறிக்கிறது. அதர்வ வேதம் 12:1;12-ல் ‘பூமியே தாய்; நான் பூமியின் புத்திரன். பர்ஜன்யாவே என் தந்தை; அவர் எனக்கு உதவுவாராக’ என்று இந்திரன் சொல்வதாக இடம்பெற்றிருக்கிறது. இன்னொரு ஸ்லோகத்தில் பூமாதாவானவர் ஆகாயக் கடவுளின் மனைவியாக அல்லாமல் பர்ஜன்யாவின் மனைவியாகச் சொல்லப்பட்டிருக்கிறார்.
பர்ஜன்யா என்பவர் யார்? இவரைப் பற்றிப் பல குழப்பமான விஷயங்கள் சொல்லப்படுகின்றன. தயுஸ் போன்ற ஆகாயத்தின் கடவுளா அல்லது ஆகாயக் கடவுளின் மகனான இந்திரனா? ஆகாயத்தின் கடவுளா… மேகங்கள், மழை ஆகியவற்றின் கடவுளா? என்று சரியாகத் தெரியவில்லை.
ஆகாயக் கடவுள், மழைக் கடவுள் என்று சொல்வதெல்லாம் கால வரிசைப் பிழை மற்றும் சமஸ்கிருத இலக்கணம் புரியாமல் செய்யும் பிழை என்றே எனக்குத் தோன்றுகிறது. பழங்கால உலகின் சிந்தனைகளை நம் நவீன வழிகளில் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், ஒரு பழங்காலச் சொல்லுக்கு நவீன அகராதி வழங்கும் அர்த்தத்தை ஓர் எல்லைக்கு மேல் நாம் நம்பி ஏற்றுக்கொள்ளமுடியாது. தேவர் என்பது நிச்சயம் கடவுளைத்தான் குறிக்கிறது. அதில் சந்தேகமில்லை. பர்ஜன்யா என்றால் மேகம். ஆனால் ‘பர்ஜன்யாஸ்ய தேவாஹ’ என்றால் மேகங்களின் கடவுள் என்று சொல்லிவிடமுடியாது. கடவுள் அல்லது தெய்வம் அல்லது எல்லாவற்றையும் கடந்த ஒன்றின் பெயர். அந்த அப்பாலான ஒன்றிலிருந்து முதலில் உருவாகி மேகம், ஆகாயம், அல்லது பூமி ஆகியவற்றுக்குச் சூட்டப்பட்டிருக்காது. மேகம், ஆகாயம், பூமி ஆகியவற்றில் இருந்துதான் அது உருவாகி காலப்போக்கில் தனியான கோட்பாடாக, தெய்வமாகப் பரிணமித்திருக்கும்.
பழங்காலச் சொற்கள் பலவற்றுக்கு உறுதியான, இறுதியான அர்த்தங்கள் இருக்கவில்லை. அவற்றை உச்சரிப்பவர்களின் நோக்கங்கள், பயன்பாடுகளுக்கு ஏற்ப பல்வேறு அர்த்தம் கொண்டதாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பழங்காலப் பேச்சுவழக்கில் கடவுள்களின் பெயர்களும் இதுபோன்ற நெகிழ்வுத்தன்மையைக் கொண்டதாகவே இருந்திருக்கின்றன. பர்ஜன்யா என்றா மேகம் என்று இடம்பெறும் பாடல்கள் உள்ளன. பர்ஜன்யா என்றால் மழையைக் குறிக்கும்படியான பாடல்களும் இருக்கின்றன. பர்ஜன்யா என்பது ஆகாயக் கடவுள், தயுஸ் அல்லது இந்திரனைக் குறிப்பதாகச் சில பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவையெல்லாம் அறிவியல்பூர்வமாக புராணங்களை ஆராயும் ஒருவருக்குத் தவறானதாக, அறிவியல்பூர்வமற்றதாகத் தோன்றக்கூடும். ஆனால் இதைத் தவிர்க்கமுடியாது. பழங்கால மொழியின் இயல்பு அது. அது அறிவியல்பூர்வமற்றதாகத்தான் இருக்கும். நம்மால் முடிந்தவரை அதைப் புரிந்துகொள்ள (நிபுணத்துவம் அடைய) முயற்சி செய்யவேண்டும். அதில் குறைகள் கண்டுபிடித்தபடியோ நம் முன்னோர்கள் நம்மைப்போல் சிந்திக்கவில்லை என்றோ குறை சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது.
பர்ஜன்யாவே அனைத்துக் கடவுள்களிலும் உயர்ந்தவர் என்று சொல்லும் வேத ஸ்லோகங்களும் இருக்கின்றன. உயிர் கொடுக்கும் கடவுள்: அசுரர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். மிகவும் பழங்காலத்திய மிக உயர்ந்த தெய்வங்களுக்குத் தரப்பட்ட பெயராக இருந்திருக்கிறது. ‘ஒட்டு மொத்த உலகையும் கடவுளைப் போல் காக்கிறார்; அனைத்து உயிர்களும் அவரிடம் தஞ்சமடைகின்றன. அவரே அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் அனைத்தின் உயிராக (ஆத்மாவாக) இருக்கிறார்’ என்று ஒரு வேதக் கவி சொல்கிறார்.
இங்கு பர்ஜன்யாவைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதைவிட உயர்வாக ஓர் அதி உன்னதக் கடவுளைப்பற்றிச் சொல்லிவிடவே முடியாது. இருந்தும் பிற படல்களில் பூமிக்கு மழையை அனுப்பும் பணியைச் செய்பவராகவும் மித்ரன் மற்றும் வருணனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேவராகவும் சொல்லவும்பட்டிருக்கிறார். அவர்களே விண்ணையும் மண்ணையும் அடக்கி ஆள்பவராகச் சொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இன்னும் சில பாடல்களில் தனித்தன்மை கொண்ட தெய்வமாக அல்லாமல் வெறும் மழை அல்லது மேகத்தைக் குறிக்கும் சொல்லாகவும் பர்ஜன்யா என்பது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பகலில் கூட புயல் கடவுளான மருத்கள் மேகங்களை அனுப்பி பூமியை நனைத்து இருட்டைத் தோற்றுவிக்கமுடியும் என்று வரும் ஸ்லோகத்தில் பர்ஜன்யா என்பது வெறும் மழை மேகத்தைக் குறிப்பதாக, பொதுப் பெயராக இடம்பெற்றிருக்கிறது. ஒரு நபரைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாக அல்ல. இதே வார்த்தை பன்மையைக் குறிப்பதாகவும் பூமிக்கு உயிர் கொடுக்கும் பர்ஜன்யாக்கள், மழை மேகங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தேவாபி தன் சகோதரனுக்கு நன்மை தரச் சொல்லி பிரார்த்தனை செய்யும்போது ‘ஓ… பிரஹஸ்பதியே…. நீவிர் மித்ரன், வருணன், புஷன் யாருடன் வேண்டுமானாலும் வந்து எம் யாக அக்னியில் எழுந்தருளுங்கள். ஆதித்யர்கள், வசுக்கள், மருத்களுடன் கூட வேண்டுமானாலும் எழுந்தருளுங்கள். ப்ர்ஜன்யாவை (மேகத்தை) சந்தனுவுக்காக மழையைப் பொழியச் செய்யுங்கள்’ என்று வேண்டிக் கொள்கிறார்.
இன்னொரு இடத்தில் பர்ஜன்யாக்களை (மழை மேகங்களை) தூண்டிப் பொழியச் செய்யுங்கள் என்று சொல்கிறார்.
பர்ஜன்யா என்றால் மழையை வேண்டிப் பிரார்த்தனை செய்கிறார்களா… மேகத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்கிறார்களா என்று பிரித்துப் பார்க்கவே முடிவதில்லை. ஏனென்றால் மழை மூலம் கிடைக்கும் எல்லாமே மேகங்களின் மூலமும் கிடைக்கும்.
மழை பெய்வதற்கு முன்பாக வறண்ட குட்டைகளில் இருக்கும் தவளைகள் கரைக்கு வந்து கத்தத் தொடங்கும். இதை வேதக் கவி, யாகங்களில் புரோகிதர்கள் செய்யும் மந்திர உச்சாடனத்தைப் போல் இருப்பதாகச் சொல்கிறார். தானே ஒரு புரோகிதராகவும் இருக்கும் கவிஞர் இப்படிச் சொல்லியிருப்பது புரோகிதர்களைப் பெருமைப்படுத்தும்படியாக இல்லைதான். தவளைகளின் கத்தல் பர்ஜன்யாவால் ஏற்கப்படுகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது மழை பெய்கிறது என்பதாக இதைப் புரிந்துகொள்ளலாம். வேதக் கவிஞர் இந்த இடத்தில் பர்ஜன்யாவை மேகத்தின் பெயராகவோ மழையின் பெயராகவோ ஏன் பர்ஜன்யா என்ற கடவுளின் பெயராகவோகூடக் குறிப்பிட்டிருக்கலாம்.
பர்ஜன்யாவைக் கடவுளாக மதித்து அல்லது அன்றைய மனித சிந்தனை வளர்ச்சியின் அடிப்படையில் கடவுள் போன்ற ஒருவராக மதித்து அவரை நோக்கிப் பாடப்பட்ட பாடல்களை எடுத்துக்கொள்கிறேன்.
‘அதி வலிமையான தெய்வத்தை எழுந்தருளச் சொல்கிறோம்; ஓ பர்ஜன்யாவே போற்றி. உம்மை மிகுந்த பக்தியுடன் வணங்குகிறோம். சீறும் காளை போன்றவரே… மழைத்துளிகளை அள்ளித் தூவுபவரே… தாவரங்களுக்கு விதைகளை அளிப்பவரே போற்றி’.
‘பர்ஜன்யா மரங்களை வெட்டி வீழ்த்துகிறார்; தீய சக்திகளை அழிக்கிறார்; அவருடைய வலிமை மிகு ஆயுதங்களைக் கண்டு (இடி மின்னலைக் கண்டு) உலகமே நடுங்குகிறது. பர்ஜன்யாவின் மின்னலும் இடியும் தாக்கும்போது அப்பாவிகள் கூட நடுங்குகிறார்கள். தீமை செய்பவர்கள் எல்லாம் வீழ்த்தப்படுவார்கள்’.
‘தேரோட்டியைப் போல் குதிரைகளைச் சாட்டையால் அடித்து ஓட்டி மழையைப் பொழிய வைக்கிறார். பர்ஜன்யா விண்ணை மழையால் நிரப்பும்போது சிங்கம்போல் கர்ஜனை (இடிச்) சத்தம் எழுகிறது’.
‘காற்று வேகமாக வீசுகிறது; மின்னல்கள் வெட்டுகின்றன; வானம் பொழியத் தொடங்குகிறது; தாவரங்கள் முளைக்கத் தொடங்குகின்றன. பூமியை பர்ஜன்யா ஆசீர்வதிக்கும்போது உலகம் முழுவதற்கும் உணவு விளைகிறது’.
‘ஓ பர்ஜன்யா… உமது வலிமையை, பணிகளைக் கண்டு உலகம் வணங்கி நிற்கிறது. குளம்புகள் உள்ள விலங்குகள் உம்மால் பூமியெங்கும் பரவி வாழ்கின்றன. உமது அருளால் பூமியெங்கும் தாவரங்கள் முளைத்து நிற்கின்றன. எமக்கு எப்போதும் உமது மகத்தான பாதுகாப்பை அளியுங்கள்’.
‘ஓ பர்ஜன்யா… கர்ஜியுங்கள்… இடியை முழக்குங்கள். எமக்கு விளைச்சலைக் கொடுங்கள். நீர் நிரம்பிய மேகத் தேரைச் சுமந்து பறந்து கொண்டு சுற்றிச் சுற்றி வாருங்கள். நீர்த் தோலைக் கிழித்து மழையைப் பொழியச் செய்து மேடு பள்ளங்களை நிரப்புங்கள்’.
‘மாபெரும் மழைநீர் கலசத்தைக் கவிழ்த்துக் கொட்டுங்கள். நீரோடைகள் பொங்கிப் பாயட்டும். விண்ணையும் மண்ணையும் நீரால் நிரப்புங்கள். பசுக்கள் செழித்துக் களிக்கட்டும்’.
‘ஓ பர்ஜன்யா தீமை செய்பவர்களை இடியாலும் மின்னலாலும் கர்ஜித்து அழியுங்கள். அதன் பின் பூமியில் வாழ்பவர் எல்லாம் ஆனந்தத்தில் கொண்டாடுவார்கள்’.
‘மழைய அனுப்புபவரே கொஞ்சம் நிறுத்துங்கள். பாலை நிலங்களைக் கடந்து செல்ல உதவியது நீவிரே… உணவுக்கான தாவரங்களை வளர்த்தது நீவிரே. இதனாலன்றோ உலக மனிதர்களால் போற்றித் துதிக்கப்படுகிறீர்’.
பழங்காலப் பாடல்கள் எப்படியானவை என்பதற்கான மிகத் துல்லியமான வகைமாதிரிகளாகவே இந்த வேத காலப் பாடல்கள் இருக்கின்றன. இவற்றில் கவித்துவமோ மகத்தான அம்சங்களோ பெரிதாக எதுவும் இல்லை. இருந்தும் நமது கிராமப்புறங்களில் மழையை எதிர்பார்த்து வாழும் ஆயிரக்கணக்கான மக்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களால் மழையை வேண்டிக்கொண்டு இப்படியான பாடலை எழுதிவிடமுடியாது. இந்தியாவில் பர்ஜன்யாவை நோக்கிப் பிரார்த்தனை செய்யும் இந்தப் பாடல்கள் எழுதப்பட்டு மூவாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டபின்னரும் நம் கிராமத்து மக்களின் நிலைமை இதுதான்.
இந்தப் பாடல்களில் கவிதை அழகும் விவரணைகளும் அறவே இல்லை என்றும் சொல்லிவிடமுடியாது. வெப்பம் மிகுந்த பூமியில் கோடை மழையின்போது இடிக்கும் இடியையும் மின்னலையும் ஒருவர் பார்த்திருந்தாரென்றால், ‘காற்று வேகமாக வீசுகிறது; மின்னல்கள் வெட்டுகின்றன; வானம் பொழியத் தொடங்குகிறது; தாவரங்கள் முளைக்கத் தொடங்குகின்றன’ என்ற வரிகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையைப் புரிந்துகொள்வார்.
பர்ஜன்யா வானத்தில் இருக்கும் ஒரு கிணற்றிலிருந்து நீரை முகர்ந்து கலசத்தால் ஊற்றுகிறார்; மேகத் தோலைக் கிழித்துக் கிழித்து மழையைப் பொழியச் செய்கிறார் என்பதன் பின்னால் அழுத்தமான கற்பனை உண்மை இல்லாமலும் இல்லை.
பர்ஜன்யாவின் மின்னலும் இடியும் தாக்கும்போது அப்பாவிகள் கூட நடுங்குகிறார்கள். தீமை செய்பவர்கள் எல்லாம் வீழ்த்தப்படுவார்கள் என்ற வரிகளைப் பார்க்கும்போது இந்தப் பாடல்களில் ஒருவித தார்மிக ஒழுக்க நிலை இருப்பதையும் புரிந்துகொள்ளமுடியும். புயலும் மழையும் வெறும் ஓர் இயற்கைச் சீற்ற நிகழ்வு மட்டுமே அல்ல; அது உயரிய சக்தி ஒன்றின் சித்தத்தால் நடக்கிறது. அப்பாவிகளையும் குற்றமற்றவர்களையும்கூட அது அஞ்சி நடுங்க வைக்கும் வலிமை கொண்டது என்று சொல்கிறார். ஒருவகையில் இந்த உலகில் குற்றமற்றவர்கள் என்று யார்தான் இருக்கிறார் வேதக் கவி கேட்காமல் கேட்பதாகவும் இந்தப் பாடல் இருக்கிறது.
இங்கு மீண்டும் அந்தக் கேள்வியைக் கேட்கிறேன்: யார் இந்த பர்ஜன்யா? அல்லது பர்ஜன்யா என்பது எதை, யாரைக் குறிக்கிறது? மழையைக் கொடுக்கும் மேகத்தையே ஆரம்பத்தில் குறித்திருக்கும் என்று சொல்லலாம். மழையைக் கொடுப்பது ஒரு தெய்வமே என்ற சிந்தனை உருவானதும் கண்ணுக்குப் புலனாகும் இந்த மேகங்கள் எல்லாம் வெறும் புறக்காட்சி மட்டுமே அல்லது மழைக் கடவுளின் சிறு உருவமே… அந்த மழைக்கடவுள் வேறு எங்கோ இருக்கிறார்; அவர் எங்கே இருக்கிறார் என்பது நமக்குத் தெரியாது என்ற சிந்தனைகள் உருவாகிவிட்டிருக்கும்.
சில வேதப் பாடல்களில் பர்ஜன்யா என்ற சொல் தயுஸ் போன்ற ஆகாயக் கடவுள் என்றும் பிருத்வி என்பது அவருடைய மனைவி என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. வேறு சில பாடல்களில் ஆகாயக் கடவுளின் மகன் என்றும் இந்த பர்ஜன்யா குறிப்பிடப்பட்டிருக்கிறார். இதே பர்ஜன்யா முன்னர் அவருடைய அம்மாவான பிருத்வியின் கணவராகச் சொல்லப்பட்டிருந்தார் என்பதைக் கணக்கில் கொள்ளாமல் இவை சொல்லவும்பட்டிருக்கின்றன என்றும் ஆகிறது. இந்திரனுமே கூட இப்படித் தனது தந்தையின் தந்தையாகச் சொல்லப்பட்டிருப்பதையும் இங்கு நினைவில் கொள்வது நல்லது. இதுவுமே வேத காலக் கவிகளை எந்தவகையிலும் அதிர்ச்சியடையச் செய்யவைக்கவில்லை என்பது நம் வியப்புகளையெல்லாம் தாண்டிய அற்புதமான ஒரு விஷயமாகவே எனக்குத் தோன்றுகிறது.
கிரேக்க ஜூபிடருக்கு இணையான வேதக் கடவுளான இந்திரன் செய்யும் வேலைகளைச் சில நேரங்களில் இந்திரன் செய்வதாக வேதப் பாடல்கள் குறிப்பிட்டிருக்கின்றன. சில நேரங்களில் வாயு, சில நேரங்களில் சோமன் போன்றோர் மழையைப் பொழிய வைத்ததாகவும் சொல்கின்றன. இருந்தும் இந்த பர்ஜன்யா என்பவர் ஆகாயக் கடவுளான தயுஸ் அல்ல; இந்திரனுமல்ல; மருத்களோ சோமனோ வாயுவோ அல்ல. தனியான ஒரு நபராக, கடவுளாகப் பழம் பெரும் ஆரியக் கடவுள்களில் ஒருவராக அவர் இருக்கிறார்.
(தொடரும்)

