Skip to content
Home » மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #29 – வேத கால தெய்வங்கள் – 2

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #29 – வேத கால தெய்வங்கள் – 2

பர்ஜ் என்பதிலிருந்து அவருடைய பெயர் பர்ஜன்யா என்பது உருவாகியிருக்கிறது. பர்ஸ், பர்ஷ் போன்ற இணையான சொற்கள் எல்லாம் தெளித்தல், நீர்ப்பாசனம், ஈரப்படுத்துதல் போன்ற அர்த்தங்களைக் கொண்டதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  ‘ஸ்’ அல்லது ‘ஷ்’ என்பதற்குப் பதிலாக ‘ஜ்’ என்று மருவுவதென்பது பொதுவாக நடப்பதில்லை. இருந்தும் சமஸ்கிருதத்தில் அதற்கான உதாரணங்கள் இல்லாமலும் இல்லை. உதாரணமாக, பிஞ்ச் – பிஞ்சரே, பிஷ் போன்ற வேர்ச் சொற்கள் அழுந்தத் துடைத்தல் என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன. பிஸ் என்பது அழகுபடுத்துதல் என்பதைக் குறிக்கிறது. மிரிஜ் என்பது துடைப்பது என்றும் ம்ரிஷ் என்பது துடைத்தழிப்பது, மறப்பது என்றும் பொருள்தருகின்றன.

மிர்ஜ் என்பது மிரிஷ்தா என்று ஆகும். யஜ் என்பது இஷ்தா என்றும் விஸ் என்பது விஷ்தா என்றும் ஆகும். துரு என்பது துருத் என்றோ துருக் என்றோ ஆகும்.

அந்தவகையில் பர்ஜன்யாவில் இருக்கும் பர்ஜ் என்பதை பரிஷ்தா, பரிஷதி – தெளிக்கப்படும் நீர்த்துளி என்ற வார்த்தையுடன் இணைத்துப் பார்க்கலாம். பர்ஸு – மேகம். பரிஸ்னி – தெளிக்கப்பட்ட, மேகம், பூமி.

பர்ஜ் என்பதிலிருந்து பர்ஜன்யா என்பது உருவாகியிருந்தால் அது ஆரம்பத்தில் நீர்ப்பாசனத்துக்கு உதவுபவர் அல்லது மழையைத் தருபவர் என்ற அர்த்தத்தையே தந்திருக்கவேண்டும்.

ஆரியக் குடும்பத்தில் இருந்தவர்கள் எல்லாம் பிரிந்து சென்றதைத் தொடர்ந்து ஹிந்துக்கள் மட்டுமல்லாமல் பிற ஆரியக் கிளைகளான கிரேக்கர்கள், செல்டிக்கள், ட்யூடான்கள், ஸ்லாவ்கள் ஆகியோரும் மேகம் என்பதைக் குறிக்க அந்தப் பெயரைத் தமது மொழியில் கொண்டுசென்றிருக்கவேண்டும். ஆதி பழமையான பொதுவான மொழியிலிருந்து பிரிந்து சென்ற கிளை மொழிகளில் ஒரு சில வார்த்தைகள் அப்படியே பாதுகாக்கப்பட்டு வந்திருப்பதைப் பல இடங்களில் பார்த்திருப்போம். அனைத்துக் கிளைமொழிகளிலும் அல்லது ஆறு மொழிகளில் மட்டும் அல்லது ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு ஏன் ஒரே ஒரு வாரிசுக் கிளை மொழியில் மட்டும் ஒரு வார்த்தை தக்கவைக்கப்பட்டிருக்கும். இந்த மூல மொழிக் குடும்பத்தினர் பிரிந்து சென்ற பின்னர் எந்தவொரு வரலாற்றுக்காலத் தொடர்பும் இருந்திருக்காது. நாம் வரலாற்றுக் காலம் என்று அழைக்கும் காலகட்டத்துக்கு முன்பாக இரண்டு ஆரியக் குடும்ப மொழிகள் ஒரே வார்த்தையை ஒரே பொருளில் தக்கவைத்திருப்பதைப் பார்க்கும்போது அந்த வார்த்தை மூல ஆரிய மொழியின் பழம் பெரும் பொக்கிஷமான சிந்தனையின் அழுத்தமான நிரூபணமாகவே இருக்கிறது.

கிரேக்கம், லத்தீன் அல்லது  செல்ட்டிக் மற்றும் ட்யூடானிக் மொழியிலும் பர்ஜன்ய என்பதற்கு இணையான சொல் எதுவும் இல்லை. ஸ்லோவேனிய மொழியிலும் அப்படி எதுவும் இல்லை என்றே முதலில் நினைத்தோம். ஆனால் அதன் மறக்கப்பட்ட கிளை மொழியான லிதுவேனிய, லத்விய மற்றும் பழைய வழக்கொழிந்துவிட்ட புருஷ்ய மொழியை ஆராயும்போதுதான் நமக்கு வேறொரு விஷயம் தெரியவருகிறது. லிதுவேனியா இப்போது தனி நாடு அல்ல. அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பாக ரஷ்யா மற்றும் போலந்து ஆகியவற்றின் பிடியில் சிக்காத கிராண்ட் ட்யூக் வசமிருந்த பகுதியாக இருந்திருக்கிறது. 1235லிருந்து ஆட்சி செய்த ரிங் கோல்ட் தான் அதன் முதல் ட்யூக். ரஷ்யப் பகுதிகளை அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் வெற்றிகரமாகப் போரிட்டுக் கைப்பற்றியிருந்தனர்.

1368-ல் இந்த கிராண்ட் ட்யூக்கள், போலந்தின் மன்னர் ஆகினர். 1569-ல் இந்த இரண்டு நாடுகளும் இணைந்தன. ரஷ்யாவும் புருஷ்யாவும் போலந்தைப் பங்கிட்டுக் கொண்டபோது லிதுவேனியாவின் ஒரு பகுதி ரஷ்யாவின் பக்கம் போனது. இன்னொரு பகுதி புருஷ்யாவிடம் சென்றது. ரஷ்யாவிலும் புருஷ்யாவிலும் லுதுவேனிய மொழி பேசும் பத்து லட்சம் பேர் இருக்கிறார்கள். கர்லாந்து மற்றும் லிவோனியாவில் லத்விய மொழி பேசும் பத்து லட்சம் பேர் இருக்கிறார்கள்.

எளிய மக்கள் பேசும் லிதுவேனிய மொழியில் பழங்காலச் சொற்கள் இருக்கின்றன. அவை பெரிதும் சமஸ்கிருதம் போலவே இருக்கின்றன. இவை எண்ணிக்கையில் மிகவும் குறைவுதான். பிற வார்த்தைகள் எல்லாம் காலப்போக்கிலான சிதைவுகளுக்கும் திரிபுகளுக்கும் உள்ளானவையாக இருக்கின்றன.

பழங்கால லிதுவேனிய மொழியில் பர்ஜன்யா என்ற சொல் இருக்கிறது. இந்தியாவில்கூட இந்தப் பெயர் மறக்கப்பட்டுவிட்ட நிலையிலும் அங்கு இன்று வரை அந்தப் பெயர் பேச்சு வழக்கில் இருந்துவருகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக கிறிஸ்தவர்கள் அல்லது பெருமளவுக்கு கிறிஸ்தவமயமாக்கப்பட்டிருந்த லிதுவேனியர்கள் மழைக் கடவுளை வேண்டிக் கொண்டு பிரார்த்தனைகள் செய்திருக்கிறார்கள். அது ரிக்வேதத்திலிருந்து நான் மொழிபெயர்த்துக் காட்டியிருப்பதைப் போலவே இருக்கின்றன. லிதுவேனிய மொழியில் இடியின் கடவுளின் பெயர் பர்குனாஸ். இன்றும் லிதுவேனிய மொழியில் இடியைக் குறிக்கவும் அந்தச் சொல்லே பயன்படுத்தப்படுகிறது. பழைய புருஷ்ய மொழியில் இடி என்பதைக் குறிக்கப் பயன்படுத்தியிருக்கும் சொல் பெர்குனோஸ். லத்விய மொழியில் இன்றும் இடி மற்றும் இடியைக் கொண்டுவரும் கடவுளின் பெயர் பெர்கோன்ஸ்.

வேத கால பர்ஜன்யாவுக்கும் (பர்கன்யாவுக்கும்) பழங்கால ஸ்லோவேனிய பெரூன், போலந்தின் பியருன், பொஹீமியாவின் பெரெளன் ஆகியவற்றுக்கும் இடையிலான ஒற்றுமையை முதலில் சொன்னவர் ஜேக்கப் கிரிம் தான். பெரு என்ற வேர்ச்சொல்லில் இருந்து இந்தச் சொற்கள் பிறந்திருப்பதாக டப்ரோவ்ஸ்கியும் மற்றும் பலரும் குறிப்பிட்டிருந்தார்கள். ட்யூடானிக் புராணவியல் என்ற ஜெர்மானிய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் பக்கம் 171-ல் பர்குனாஸ், பஹ்ர்கோன்ஸ், பெர்குனாஸ் போன்ற முழுச் சொற்கள் லிதுவேனிய, லத்விய மற்றும் பழைய புருஷ்ய மொழிகளில் இருப்பதை ஜேக்கப் கிரிம் சுட்டிக்காட்டியிருந்தார். மோர்திவினியர்கள் கூட இடி மின்னல் கடவுளைக் குறிக்க பொர்குய்னி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதைச் சொல்லியிருக்கிறார்.

சைமன் க்ரூனெள 1521-ல் எழுதி முடித்த தன் படைப்பில், படோல்லோ, பட்ரிம்போ, பெர்குனோ ஆகிய மூன்று கடவுள்களைப் பழைய புருஷ்யர்கள் வணங்கியதாகவும் புயல் – மழைக்காக பெர்கினோ கடவுளை வேண்டிக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் சரியான நேரங்களில் நல்ல மழை பெய்யவேண்டும்; நல்ல கால நிலை நிலவ வேண்டும்; இடியும் மின்னலும் அவர்களைக் காயப்படுத்தக்கூடாது என்று வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

லாசிட்ஸ்கி கீழ்க்காணும் லிதுவேனிய பிரார்த்தனையைக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஓ பெர்குனா… என் விளைநிலத்துக்கு கெடுதலைக் (இடி மின்னலைக்) கொடுத்துவிடாதே. நான் உனக்கு இந்த பலி தருகிறேன்’

லத்வியர்களின் அண்டையில் இருந்த எஸ்தோனியர்களுடைய மொழியில் ஆரிய அம்சம் கிடையாது. இருந்தும் அவர்களுடைய ஆரிய அண்டை அயலாரிடமிருந்து  இந்த பிரார்த்தனையைக் கேட்டிருப்பார்கள். அவர்களுடைய இடி மின்னல் கடவுளான பிக்கர் அல்லது பிக்கனை நோக்கி முதிய விவசாயிகள், 17 –ம் நூற்றாண்டுவரையிலும் கூட இதுபோல் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். 

‘அன்பான பிக்கர் கடவுளே (இடி மின்னல் கடவுளே) நாங்கள் உமக்கு இரண்டு கொம்புகளும் நான்கு குளம்புக் கால்களும் கொண்ட ஓர் எருது பலி தருகிறோம். எங்கள் நிலங்களை நன்கு உழவும் நாற்று நடவும் உம்மை வணங்கிப் பிரார்த்தனை செய்கிறோம். எங்கள் நிலங்களில் பயிர்களின் வைக்கோல் சிவந்த நிறத்திலும் தானியங்கள் பொன் மஞ்சள் நிறத்திலும் மின்னச் செய்யுங்கள். அடர்ந்த புயல் மழை மேகங்களையெல்லாம் காடுகள், மலைப்பகுதிகளுக்கு விரட்டிவிடுங்கள். ஏர் பிடித்து உழும், விதை நட்டு வாழும் எங்களுக்கு இதமான மழையையும் செழிப்பான பருவ காலங்களையும் தாருங்கள். எங்கள் பயிர் நிலங்களைப் பாதுகாத்து நில்லுங்கள். தாளில் நல்ல வைக்கோலும் மேலே செழுமையான கதிர்களும் உள்ளே வளமான தானியங்களும் இருக்கும்படிச் செய்யுங்கள்’.

நமது காலத்தில் 17-ம் நூற்றாண்டில் எஸ்தோனியாவில் பாடப்பட்ட பாடலென்றாலும் நமது காலத்துக்கு 17 நூற்றாண்டுகளுக்கு முன்பாக சிந்து நதிதீரத்தில் பாடப்பட்ட பாடலாக இருந்தாலும் இந்தப் பழங்காலப் பிரார்த்தனைப் பாடலின் கவிதை அழகைப் பாராட்டும்படி நான் சொல்லவில்லை. கவிதை ரசனையாளர்கள் இந்தப் பாடல்களின் கவித்துவம் பற்றி விமர்சித்துக் கொள்ளட்டும். இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக போற்றப்பட்ட மழை – இடி – மின்னல் கடவுளான பர்ஜன்யாவை அலெக்சாண்டர் (கிரேக்கர்தான்) கண்டுபிடித்தனர் என்று சொல்ல முடியுமா? கிழக்கு புருஷ்யாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த லிதுவேனிய விவசாயிகள் கூட அதை மறக்காமல் நினைவில் கொண்டிருக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் மழைப் பொழிவு என்ற அர்த்தம் கொண்ட பர்ஜன்யா (பர்கன்யா) என்ற வார்த்தையை பர்குனா என்று பயன்படுத்தியிருக்கிறார்கள். அதெல்லாம் வெறும் பெயர் மட்டுமே. அதில் எந்தவொரு மொழியியல் உள் அர்த்தம் எதுவும் கிடையாது என்று சொல்லமுடியுமா என்ன? 

சில ஆய்வாளர்கள் சொல்வதுபோல் இடி அல்லது புயல் மழைக் கடவுளைக் குறிப்பிட  ஸ்லோவேனிய மொழிகளில் அதாவது பழைய ஸ்லோவேனியச் சொல்லான பெருன், போலந்தின் பியோரெளன், பொஹீமிய மொழியின் பெரெளன் ஆகிய சொற்களில் இருந்துதான் வந்திருக்கும் என்று நம்பவேண்டுமா என்ன?

இந்த உண்மைகள் எல்லாம் இறந்து கிடக்கும் மம்மியின் நாளத்தில் பாயும் ரத்தம்போல் என்னைச் சிலிர்த்து எழவைக்கிறது. அல்லது எகிப்தின் கருங்கல் சிலைகள் எல்லாம் பேச ஆரம்பித்ததுபோல் ஓர் அதிர்ச்சி உருவாகிறது. பழைய உலகங்கள் நவீன கால வெளிச்சம் பட்டதும் அவை உயிரற்ற மம்மியானாலும் சிலைகளானாலும் மீண்டும் உயிர் பெற்றுவிடுகின்றன.  பழங்கால தெய்வங்கள், நாயகர்களின் பெயர்கள் மீண்டும் உயிர் பெற்றுவிடுகின்றன. பழையவையெல்லாம் புதியவையாகிவிடுகின்றன. புதியவையெல்லாம் பழையவையாகிவிடுகின்றன.

பர்ஜன்யா என்ற ஒற்றை வார்த்தை ஒரு மந்திரச் சொல் போல் நம் கண்களின் முன்னே தொல் பழங்காலத்தின் இருண்ட குகையைத் திறந்துவிடுகின்றன. நம் ஆரிய முன்னோர்கள் பால்டிக் பகுதியைச் சேர்ந்தவர்களோ இந்தியப் பெருங்கடல் பகுதியைச் சேர்ந்தவர்களோ அனைவரும் ஒன்று கூடி பர்ஜன்யாவின் விண்ணுலக மழை நீர்க் கலசத்திலிருந்து தப்பி அடைக்கலம் தேடியபடி அந்தக் குகைக்குள் அஞ்சி நடுங்கிக்கொண்டு, ஓ பர்ஜன்யா… மழையை அனுப்புபவரே… பாலைவனங்களைக் கடக்க உதவுபவரே… விதைகளை முளைக்கச் செய்பவரே… உலக மக்களால் போற்றிப் புகழப்படுபவரே… இந்தப் புயல் மழையை நிறுத்துங்கள் என்று பிரார்த்தனை செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

விண்ணுலக தெய்வங்கள் மற்றும் மண்ணுலக தெய்வங்கள் அல்லாமல் மூன்றாம் வகை தெய்வங்கள் பற்றியும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. வாயு மற்றும் மேகங்களின் போர்க்கடவுள்களையும் தாண்டிய விண்வெளிக்கும் அப்பாலான பகுதியில் வாழும் தெய்வங்கள்… மனிதக் கண்களால் பார்க்கவே முடியாத தெய்வங்கள்… மண்ணுலக மற்றும் வளி மண்டலத்தில் இருக்கும் தெய்வங்களைவிடவும் புதிரான வழிகளில் தமது சக்தியை வெளிப்படுத்தும் மூன்றாம் வகை தெய்வங்கள் அவர்கள்.

ஆரியர்கள் தனிக் கிளைகளாக, பல மொழிகள் பேசுபவர்களாகப் பிரிவதற்கு முன்பாக வணங்கிய தெய்வம் ஆகாயக் கடவுளான தயுஸ் என்பதில் சந்தேகமே இல்லை. கிரேக்கர்களிடம் ஜீயஸ் என்ற பெயரிலும் இத்தாலியரிடம் ஜூபிடர் என்ற பெயரிலும் ட்யூடானிக் பிரிவினரிடையே தியு அல்லது தியூர் என்றும் அழைக்கப்படுகிறார். வேதங்களில் தயாவா ப்ருத்வி என விண்ணுலக மற்றும் மண்ணுலக தெய்வமாகப் போற்றப்பட்டிருக்கிறார். அவரே அவரை எழுந்தருளும்படியும் சொல்லியிருக்கிறார். மெள்ள மெள்ள அவர் மறைந்து இளமையும் துடிப்பும் மிகுந்த இந்திரன் வேதப் பாடல்களில் அவருடைய இடத்தை விரைவில் பிடித்துக்கொண்டுவிட்டிருக்கிறார்.

விண்ணுக்கும் அப்பாலான பகுதியில் வாழ்ந்தபடி உலகில் உள்ள அனைத்தையும் அரவணைத்தபடியும் காப்பாற்றியபடியும் தழுவியபடியும் இருக்கும் இன்னொரு கடவுள் வருணன். ‘வர்’ என்ற வேர்ச்சொல்லுக்கு ‘மூடக்கூடிய’ என்று பொருள். வருணன் என்பது கிரேக்க மொழியில் ஒளரனஸ் என்ற சொல்லுக்கு இணையானது. ஹிந்து மனம் உருவாக்கிய மிகவும் அதி சுவாரசியமான தெய்வம் இவர். பரந்து விரிந்த, நட்சத்திரங்கள் நிறைந்த, அற்புதமான விண்ணிலிருந்து  எழுந்தருளுவதாகச் சொல்லப்பட்டிருக்கும் வருணனின் குண நலன்கள், செயல்பாடுகள் பிற எந்தவொரு வேதக் கடவுளையும்விட மிகப் பெரிய அளவுக்கு மாறுதல்களைச் சந்தித்திருக்கிறது. உலகம் முழுவதையும் கண்காணிப்பவராகவும் தீயவர்களைத் தண்டிப்பவராகவும் குற்றங்களை ஒப்புக்கொள்பவர்களை மன்னிப்பவராகவும் இவரை வேதப் பாடல்கள் போற்றுகின்றன.

வருணனைப் பற்றி வேதங்களில் இடம்பெற்றிருக்கும் சில ஸ்லோகங்களை இங்கே தருகிறேன். 

ஓ வருணதேவனே… உமது அருளாசிகள் எமக்குக் கிடைக்கட்டும். ஏனென்றால் நாங்கள் உம்மையே எப்போதும் புகழ்ந்து போற்றிவருகிறோம். தினமும் உம்மையே வாழ்த்தி வணங்கி வருகிறோம். பிரகாசமான அதிகாலைகள் புலரும் நேரத்தில் யாக குண்டத்தில் ஏற்றிய அக்னி போல் எம்மைத் துலங்கச் செய்யுங்கள்.

ஓ வருண தேவனே… நீவிரே என் வழிகாட்டியாக இருங்கள். உமது அரவணைப்பிலேயே நாங்கள் என்றும் இருக்கவேண்டும். திக்கெட்டும் உம் புகழ், சாகசங்கள் எல்லாம் பரவியிருக்கின்றன. அதிதியின் வெல்லற்கரிய புத்திரரே… எம்மை உமது அன்புக்குரியவராக்கிக் கொள்ளுங்கள்.

அனைத்தையும் ஆளும் ஆதித்யர் இந்த நதிகளை உற்பத்தி செய்தார். அவை வருண தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகின்றன. அவற்றுக்குத் தளர்ச்சியே இல்லை… வற்றுதலே இல்லை. பறவைகளைப் போல்  எல்லா இடங்களிலும் சிறகடித்து அதி விரைவாகப் பாய்ந்து செல்கின்றன.

எமது பாவத் தளைகளை அறுத்துவிடுங்கள். எங்கள் குலம் பெருகட்டும். ஓ வருண தேவனே….. என் பாடலை நான் நெய்யும்போது அது அறுபடாமல் இருக்கட்டும். நாங்கள் அரும்பாடுபட்டு உருவாக்குபவை உரிய காலத்துக்கு முன் உடைந்துபோகாமல் இருக்கட்டும்.

ஓ வருண தேவனே இந்தப் பயங்கரத்திலிருந்து என்னை வெகு தூரத்துக்கு இட்டுச் செல்லுங்கள். ஓ நீதியின் அரசரே… என் மீது கருணை காட்டுங்கள். கயிற்றிலிருந்து அவிழ்க்கப்படும் கன்றைப்போல் என்னைப் பாவத்தளைகளிலிருந்து விடுவியுங்கள். நீவிரன்றி என் கண்ணைக்கூட என்னால் இமைக்க முடியாது.

தீயவர்களைத் தாக்கி அழிக்கும் உமது ஆயுதங்கள் கொண்டு எங்களைத் தாக்கி வீழ்த்தாதீர்கள் வருண தேவரே… உமது ஒளி இல்லாத இடங்களுக்கு நாங்கள் போகாமல் காத்தருளுங்கள். எமது பகைவர்களைச் சிதறி ஓடச் செய்யுங்கள். எம்மை வளமுடன் வாழ வையுங்கள்.

முன்பும் இன்றும் என்றும் ஓ வருணதேவரே உம் புகழையே பாடி மகிழ்வோம்.. ஓ பலவானே… வெல்லற்கரிய நாயகனே… உமது கட்டளைகள் எல்லாம் கல்லில் பொறித்தவை போல் காலத்தால அழியாதவையன்றோ.

என்னிடமிருக்கும் குறைகள், குற்ற உணர்ச்சிகள் அனைத்தையும் போக்குவாயாக. ஓ அரசனே… மற்றவர் செய்த தவறுகளுக்கு நான் தண்டனை பெறாமலிருக்கட்டும். இன்னும் பல விடியல்கள் புலர வேண்டியிருக்கிறது. நாங்கள் அவற்றிலும் வாழ அருளுங்கள் வருண தேவனே.

சில பாடல்களில் வருணனை ஆதித்யர் என்றும் அதிதியின் மகன் என்று சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். தித என்றால் வரையறுக்கப்பட்ட, வரையறுக்க முடிந்த என்று பொருள். சமஸ்கிருதத்தில் ‘அ’ என்ற முன்னொட்டு எதிர்மறையைக் குறிக்கும். அ-திதி என்றால் எல்லையற்ற, அளவிடமுடியாத, பூரணத்துவம் நிறைந்த என்று பொருள். வேத ஸ்லோகங்கள் பலவற்றில் அதிதி – அனைத்தையும் கடந்த அம்சமாக, தேவனாகப் போற்றி எழுந்தருளும்படிப் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். அவர் மண்ணுக்கும் விண்ணுக்கும் சூரியனுக்கும் உஷஸுக்கும், அப்பாலான வெளியில் உறையும் தெய்வம். மனிதர்களின் மதம் சார்ந்த சிந்தனைகளின் அதி தொடக்க காலகட்டத்தில் இப்படியான ஒரு கருத்து இருந்ததென்பது மிக மிக ஆச்சரியகரமானது.

அதிதி மட்டுமல்லாமல் விண்ணையும் மண்ணையும் தாண்டி கண்ணுக்குத் தெரியாத வெளியில் வாழும் கடவுள்களாக ஆதித்யர்கள் என்ற கடவுள்களையும் வேதங்களில் பார்க்க முடிகிறது. ஆதித்யர்கள் என்றால் அதிதியின் மகன்கள் என்று அர்த்தம். ஒருவகையில் எண்ண முடியாத அளவுக்கான கடவுள்கள். அப்படியான ஆதித்யர்களில் ஒருவர்தான் வருணன். மித்ரன், அர்யமான் (பாகா, தக்ஷன், அம்சன்) எனப்  புரியாத புதிரான பெயர்கள் கொண்ட தெய்வங்கள் பல இடம்பெறுகிறார்கள். இவர்களின் இருப்பிடமானது விண்ணுக்கும் அப்பால் இருக்கிறது. சொர்க்கத்தின் பேரொளியே இவர்களின் மூலாதாரத் தோற்றுவாய் என்றும் சொல்லப்படுகிறது. இவை பின்னாளில் பெரிதும் மறக்கப்பட்டதாகவும் இருக்கிறது.

மித்ரனையும் வருணனையும் யாகங்களில் எழுந்தருளச் சொல்லும்போது இரவு, பகல் என்றோ இருட்டு- ஒளி என்பதையோ குறிப்பதாக நாம் கருத இடம் இருக்கிறது. ஆனால் இரவு பகல் பற்றிச் சொல்லும்போது வேத புராணவியலில் அஸ்வினி தேவர்கள் என்ற இரட்டையராக, குதிரைகளில் பயணம் செய்பவர்களாகவே சொல்லப்படுகிறது. 

அதிதி என்பதுமேகூட முடிவற்று நிகழும் சூரிய உதயத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என்று எண்ண இடமிருக்கிறது. ஆனால் உஷஸ் (உதய கால தேவதை) தனிச் சிறப்புடன் குறிப்பிடப்படும்போது அதிகாலையின் தேவதையான கிரேக்க ஈதோஸ் போலவே வேதங்களிலும் இடம்பெற்றிருக்கிறார். அஸ்வினி குமாரர்கள், சூரியன் ஆகியோரால் உஷஸ் நேசிக்கப்படுபவராகச் சொல்லப்படுகிறார். ஆனால் சூரியன் தன் பொன் கிரணங்களால் ஆறத் தழுவ முற்படுவதற்குள் மறைந்து போகும் தேவதையாகச் சொல்லப்படுகிறார். சூரியனுமேகூட வாயு, ஆகாயம், ப்ருத்வி ஆகியவற்றின் தெய்வாம்சக் குறியீட்டு வடிவமாகவே சொல்லப்படுகிறார். சில நேரகளில் தனியாக முழு ஆளுமையாக சூரியன் (ஹீலியஸ்), சாவித்ரி, புஷன், விஷ்ணு எனப் பல பெயர்களிலும் வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

வேதக் கடவுள்கள் அனைவரையும் இப்படியாக சூரியக் குடும்பக் கோட்பாடுகளாகக் குறுக்குவதும் அதுமட்டுமே அவை என்றும் சொல்வதுமெல்லாம் மிகவும் தவறான பார்வையாகவே இருக்கும்.  பூமி, வாயு, ஆகாயம் ஆகியவையெல்லாம் வேத ஆரியர்களின் மதம் மற்றும் புராணப் படைப்புகளின் உருவாக்கத்துக்குப் பெரும் பங்காற்றியிருப்பதைப் பார்க்க முடிகிறது. நாம் புராணங்கள் என்று அழைக்கும் அந்த ஆதி ஆரிய சிந்தனையின் பழம் பெரும் தொகுப்பில் சூரியன் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. நமது சிந்தனைகளில் கூட பல்வேறு பெயர்களில் அந்த சூரியன் மிக முக்கியமான இடத்தை இன்றும் வகித்துவருகிறது.

நாம் அதிகாலை என்று அழைப்பதை வேத ஆரியர்கள் உஷஸ் என்று அழைத்தனர். ‘சரியாகச் சிந்திக்கும் ஓர் உயிருக்கு விடியற்காலையைப் போல அற்புதமான புனிதம் எதுவும் இல்லை’ – இது என் கூற்று அல்ல. இயற்கையை உண்மையாக நேசிக்கும் மகத்தான கவிஞர்களில் ஒருவரான நம் ஜான் ரஷ்கின் சொன்னது. நாம் நண்பகல், மாலை, இரவு என்று அழைப்பவற்றை, நாம் வசந்தம், குளிர் காலம் என்று அழைப்பவற்றை, நாம் ஆண்டுகள், காலம், வாழ்க்கை, அழிவின்மை என்று அழைப்பவற்றைப் பழங்கால வேத மரபினர் சூரியன் என்று அழைத்தார்கள். இருந்தும் கற்றறிந்தவர்கள்கூட இந்தப் பழங்கால ஆரியர்களின் சூரிய புராணக் கட்டுக்கதைகளெல்லாம் எவ்வளவு விசித்திரமாக இருக்கின்றன என்று சொல்கிறார்கள்.

நாம் ஒவ்வொரு நாளும் ஒருவரைப் பார்க்கும்போது ‘காலை வணக்கம்’ என்று சொல்கிறோமே அப்போது நாம் ஒரு சூரிய வணக்கத்தைத்தான் சொல்கிறோம்.  ‘மே மாதம் வயலிலிருந்து குளிர் காலத்தை விரட்டட்டும்’ என்று பாடும் ஒவ்வொரு கவிஞரும் சூரிய புராணத்தைத்தான் பாடுகிறார். ‘பழைய ஆண்டைப் போகச் சொல்லிவிட்டு புதிய ஆண்டை மணி அடித்து வரவேற்கும்’ கிறிஸ்மஸ் செய்தித்தாள்கள் எல்லாம் சூரியக் கதைகளின் குவியலாகத்தான் திகழ்கின்றன. சூரிய புராணக் கதைகள், நம்பிக்கைகள் குறித்து அதிர்ச்சியோ அச்சமோ படத்தேவையில்லை. எப்போதாவது பழங்கால சூரிய புரணம் எதையாவது கேட்க நேரும்போது அதில் பயன்படுத்தப்படும் வார்த்தையானது சூரியன், உதயம், காலை, இரவு, வசந்தம், குளிர்காலம் என எதை வேராகக் கொண்டதாக இருந்தாலும் அதை அதன் நேரடி அர்த்தத்திலேயே புரிந்துகொள்ளுங்கள். சூரியபுராணத் தாக்கத்தில் சொல்லப்படும் கதைகளைக் கண்டு பெரிதும் அதிர்ச்சியோ ஆச்சரியமோ படவேண்டாம்.

பல்வேறு கலாசாரங்களில் இருக்கும் புராணங்களையெல்லாம் சூரிய புராணமாக மாற்றுவதை என் அளவுக்குக் கடுமையாக எதிர்த்தவர் யாரும் இருக்கமுடியாது. இந்தப் புதிய சிந்தனைப் போக்குக்கு எதிராகச் சொல்லப்படும் வாதங்களைப் படித்துப் பார்த்திருக்கிறேன். அவையெல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக, பூமிப் பந்தில் ஒரு பகுதிக்கு நேர் எதிர்முனையாக இன்னொரு பகுதி இருக்கிறது என்று சொன்னபோது அதற்கு எதிராகச் சொல்லப்பட்ட விமர்சனங்களையே எனக்கு நினைவூட்டுகின்றன. மக்கள் அப்போது பொதுவான அடிப்படை அறிவைக் கொண்டு சிந்திக்கும்படி சொன்னார்கள். அப்படி ஒரு நேர் எதிர் பகுதி இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தால் அது பிறழ்ந்து விழுந்துவிடும் என்று சொன்னார்கள். அன்றைய வானவியலாளர்கள் சொன்னதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்: ‘போய் பாருங்கள் தெரியும்’.

பல்வேறு கலாசாரங்களின் புராணக் கதைகளை ஒப்பிட்டு ஆராயும் ஒப்பீட்டுப் புராணவியல் கோட்பாடுகளை மறுதலிக்கும் அறிவார்ந்த நபர்களிடம் நான் சொல்லவிரும்புவதும் அதுவே: போய் (படித்துப்) பாருங்கள்.

அதாவது போய் வேதங்களைப் படித்துப் பாருங்கள். ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தைப் படித்து முடிப்பதற்குள்ளாகவே இந்தியாவிலும் கிரேக்கத்திலும் இத்தாலியிலும் ஏன் இங்கிலாந்திலும் இருக்கும் சூரிய புராணக் கதைகளைக் கேட்டு உங்கள்  தலையை ஆட்டி மறுப்புத் தெரிவிப்பதை உடனே நிறுத்திக் கொண்டுவிடுவீர்கள். இத்தனைக்கும் அந்த முதல் மண்டலத்தில் சூரியனைப் பற்றி மிகவும் குறைவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. பருவ நிலை மாற்றங்கள் பற்றி அதாவது சூரிய புராண நம்பிக்கைகளே அதிகமாக இருக்கிறது.

ரிக்வேதத்தில் பாதுகாக்கப்பட்டு நமக்குக் கிடைத்திருக்கும் பாடல்கள், பிரார்த்தனைகள் ஆகியவற்றைப் பார்த்தால், எண்ணற்ற தேவர்கள், பிரகாசமான சூரிய அம்சம் கொண்டவர்கள், கடவுள்கள் எல்லாரும் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும். உலகம் முழுவதுமே அவர்களால் நிரம்பியிருக்கிறது. இயற்கையின் செயல்பாடுகள் விண்ணிலானாலும் மண்ணிலானாலும் அவற்றுக்கு அப்பாலானாலும் எல்லாமே இந்த சூரிய குலத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவே சொல்லப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும்.

நாம் இடி இடிக்கிறது என்கிறோம். அவர்கள் இந்திரன் இடி இடிக்கிறான் என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் மழை பெய்கிறது என்று சொல்கிறோம். அவர்கள் பர்ஜன்யா தன் மழை நீர்க் கலசத்தைக் கவிழ்க்கிறார் என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் அதிகாலை புலர்கிறது என்று சொல்கிறோம். அவர்கள் அழகிய உஷஸ் தேவதை நடன மங்கைபோல் நளினமாகத் தோன்றுகிறாள் என்று சொல்லியிருக்கிறார்கள். இரவு கவிழ்கிறது என்று நாம் சொல்கிறோம். சூரியன் தன் தேரிலிருந்து குதிரைகளை அவிழ்த்துவிடுகிறார் என்று சொல்கிறார்கள்.

ஒட்டு மொத்த இயற்கையுமே வேதக் கவிகளுக்கு எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் அம்சமாக, வெளிப்பாடாக, செயல்களாகத் தோன்றியிருக்கின்றன. அந்த கடவுள் நம்பிக்கையிலிருந்தே மதம் சார்ந்த நல்லொழுக்கங்கள் முளைவிட்டிருக்கின்றன. சொந்த மனிதர்களின் கண் பார்வையில் செய்யத் தயங்கும் (வெட்கப்படும்) தவறுகளையெல்லாம் தெய்வத்தின் முன்னாலும் செய்யத் தயங்கும் அளவுக்கு அந்தக் கடவுள் நம்பிக்கை அழுத்தமாக அவர்களை நல்வழிப்படுத்தியிருக்கிறது.

ஆகாயத்தின் கடவுளான வருணனைப் பற்றிச் சொல்லும்போது, ‘உலகங்களின் அதிபதியான வருணன் நம் பக்கத்தில் இருப்பதுபோல் அனைத்தையும் பார்க்கிறார்’ என்று வேதக் கவி சொல்கிறார். ‘ஒரு மனிதர் நிற்கிறாரோ நடக்கிறாரோ ஒளிந்துகொள்கிறாரோ கிடக்கப் போகிறாரோ இரண்டு பேர் அருகருகே அமர்ந்திருந்தால் மூன்றாவதாக அங்கு வருணனும் இருந்து அனைத்தையும் பார்ப்பார்’ என்று அவர்கள் நம்பினார்கள். பரந்து விரிந்த மண்ணுலகமும் விண்ணுலகமும் வருணனுக்கு சொந்தமானது. அவரே இதன் அதிபதி. வானும் கடலும் வருணனின் ஆடைகள். அதே நேரம் சிறு துளியிலும் அவர் உறைகிறார். விண்ணுக்கு அப்பால் பறந்து சென்றாலும் ஒருவர் வருண தேவனின் எல்லைதாண்டி அவரிடமிருந்து தப்பிச் சென்றுவிடமுடியாது. விண்ணிலிருந்து உலகில் நடக்கும் அனைத்தையும் அவர் கண்காணித்துவருகிறார். அவருடைய தூதர்கள் விண்ணிலிருந்து இறங்கி வருகிறார்கள். ஆயிரம் கண்களால் அவர்கள் உலகில் நடக்கும் அனைத்தையும் கண்காணிக்கிறார்கள்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் அப்பாலும் இருக்கும் அனைத்தையும் வருணன் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு மனிதர் எத்தனை முறை இமைக்கிறார் என்பதுகூட அவருக்கு நன்கு தெரியும். பகடையை உருட்டும் நபரைப் போல்  நிகழ்வுகளை, மீள முடியாத அளவுக்கு அவரே தீர்மானிக்கிறார். ஏழேழு உலகங்களிலும் பரவியிருக்கும் அவரது வலையானது பொய் சொல்லும் நபரைப் பிடித்து உண்மையை மட்டுமே பேசும் அவர் முன் கொண்டுவந்து நிறுத்தும்.

இவையெல்லாம் பைபிளில் சங்கீதம் வசனங்களில் இருப்பவற்றைப் போலவே இருக்கின்றன.

சங்கீதம் 131:1 – கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.

என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீவிர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.

நான் வானத்திற்கு ஏறினாலும், நீவிர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீவிர் அங்கேயும் இருக்கிறீர்.

நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.

இருந்தும் நமக்கு அப்படி ஒரு தேவரோ, கடவுளோ வருணரோ யாரும் இருந்திருக்கவில்லை என்பது தெரியும். உலகம் முழுவதும் இருக்கும் அனைத்தையும் தழுவும் அல்லது மூடியிருக்கும் ஓர் அம்சம் என்ற ஒன்று கண்ணுக்குத் தெரியும் நட்சத்திரங்கள் நிரம்பிய வானை மூடிய ஒன்றுக்குச் சூட்டப்பட்ட ஒரு பெயர் மாத்திரமே என்பது தெரியும். அதன் பின் அந்தக் கண்ணுக்குத் தெரியாத அம்சத்துக்கு ஓர் உருவம் தரப்பட்டு மனித மற்றும் அதி மானுட சக்திகள் தரப்பட்டது என்பதையும் நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது.

வருண தேவனுக்குப் பொருந்துபவை எல்லாமே வேதக் கடவுள்கள் அனைவருக்கும் வேத மதம் முழுமைக்கும் அப்படியே பொருந்தும். மூன்று தெய்வங்களானாலும் முப்பத்து மூன்று தெய்வங்களானாலும் முப்பத்து மூவாயிரத்து முன்னூற்று முப்பத்தொன்பது தெய்வங்களானாலும் அனைவருக்கும் அது பொருந்தும். ஜூபிடர், அப்பல்லோ, மினர்வா என்பவை போல் அவையெல்லாம் வெறும் பெயர்களே. எல்லா மதங்களிலும் இதுபோல் சிறப்புப் பட்டங்களுடன் அழைக்கப்படும் தெய்வங்களைப் போன்றவர்களே.

இந்த உண்மையை இந்தியாவில் வேத காலத்திலோ கிரேக்கத்தில் பெரிகிளியன் காலத்திலோ சொல்லியிருந்தால் சாக்ரடீஸ் போல் நாத்திகர் என்றும் மத விரோதி என்றும் பழிக்கப்பட்டிருப்பார். இருந்தும் இதைவிடப் பேருண்மையும் தெளிவான விஷயமும் வேறு எதுவும் இருக்கவும் முடியாது. வேதக் கவிகள் சிலரும் பின்னாளைய வேதாந்தத் தத்துவ ஞானிகள் சிலரும் கூட இந்த உண்மையை அன்றே புரிந்துகொண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

அவையெல்லாம் வெறும் பெயர்கள்தான் என்று சொல்வதற்கு முன்பாக எந்தப் பெயருமே வெறும் பெயர் அல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். எல்லாப் பெயருமே ஆரம்பத்தில் ஏதோ ஒன்றைக் குறிப்பிட ஏதோ ஒரு வலுவான காரணப் பின்னணியில் சூட்டப்பட்டிருக்கும். எதை உணர்த்த வேண்டுமோ அதை உணர்த்தமுடியாமல் போய் வலுவிழந்து, உள்ளீடற்று, வெறும் பெயர்தான் என்று ஆகியிருக்கும். அதுவே வேத காலக் கடவுள்களின் பெயர்கள் அனைத்துக்கும் நேர்ந்திருக்கும்.

அனைத்தையும் கடந்து நிற்கும், கண்ணுக்குத் தெரிபவற்றுக்குப் பின்னால் இருக்கும் காண முடியாத, வரையறுக்க முடிந்தவற்றுக்குள் இருக்கும் வரையறுக்க முடியாத, இயற்கை சக்திகளுக்கும் மேலான அதி இயற்கை சக்தியாக, தெய்விகமாக எங்கும் நிறைந்திருக்கும் எல்லாம் வல்ல ஒன்றைச் சுட்டிக்காட்ட அவை எல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எதை விளக்கிச் சொல்லவே முடியாதோ அதை விளக்கிச் சொல்ல முடியாமல் அவை இயல்பாகவே தோற்றுப் பின்வாங்கியிருக்கும். ஆனால் அந்த விளக்கிச் சொல்ல முடியாத அம்சம் அனைத்துத் தோல்விகளுக்குப் பின்னரும் பழங்காலக் கவிகள், சிந்தனையாளர்கள் மனதிலிருந்து அழியாமல் மறையாமல் வீழ்ச்சியடையாமல் நீடித்துவந்திருக்கும். புதிது புதிதான பெயர்களில் அதை அவர்கள் குறிப்பிட்டபடி வந்திருப்பார்கள். இன்றும் அது தொடர்கிறது. மனிதர்கள் இந்த உலகில் வாழும் காலம் முழுவதும் அது அப்படியே தொடரவும் செய்யும்.

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *