Skip to content
Home » மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #30 – வேதமும் வேதாந்தமும்

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #30 – வேதமும் வேதாந்தமும்

இந்தியாவில் எழுத்து கி.மு. 500க்கு முன்பே இருந்திருக்கவில்லை என்ற நிலையில் கி.மு. 1500க்கு முன்பே ரிக் வேதங்கள் எல்லாம் எப்படி எழுதப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்று என்னுடைய இந்த உரைகளைக் கேட்ட பலரும் கேள்விகள் எழுப்பியிருக்கிறார்கள். இந்தத் தொடர் விரிவுரையின் கடைசி உரையில் இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்லவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  ரிக் வேதங்களிலேயே மிக மிகப் பழமையான ஸ்லோகம் எப்போது எழுதப்பட்டது என்று செவ்வியல் ஆய்வாளர்கள், மாணவர்கள் இயல்பாகவே கேள்வி எழுப்புகிறார்கள். இத்தனை பழங்காலத்தைச் சேர்ந்தது என்று சொல்லும்படியாக அதில் அப்படி என்ன ஆதாரம் இருக்கிறது என்றும் கேட்கிறார்கள்.

முடிந்தவரை இந்தக் கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன். ரிக்வேதத்தின் மிகப் பழைய ஸ்லோகமாக நமக்குக் கிடைத்திருக்கும் கையெழுத்துப் பிரதி – ஓலைச்சுவடி கி.மு.1500 ஐச் சேர்ந்தது அல்ல; கி.பி. 1500 ஐச் சேர்ந்தது என்பதை முதலில் பணிவுடன் சொல்லிவிட விரும்புகிறேன். அப்படியாக இவற்றுக்கிடையே சுமார் 3000 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது. இதை நிரப்ப வலுவான வாதங்கள் மிகவும் அவசியம்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹோமரின் கவிதைகளின் காலம் பற்றிய விவாதம் எழுந்தது. ஜெர்மன் ஆய்வாளர் ஃப்ரெடரிக் ஆகஸ்ட் உல்ஃப் இரண்டு மிக முக்கியமான கேள்விகளை எழுப்பினார்.

  1.   கிரேக்கர்களுக்கு அகர வரிசை எழுத்துகள் எப்போது அறிமுகமாகின? அவற்றைப் பொது நினைவுச்சின்னங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், கேடயங்கள், அரசு மற்றும் தனியார் கடிதங்கள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் எப்போது பயன்படுத்த ஆரம்பித்தனர்?
  2.   இலக்கியங்களுக்கு எழுத்துகளைப் பயன்படுத்த என்றைக்கு ஆரம்பித்தனர்? எந்தக் கருவிகளைக் கொண்டு எழுத ஆரம்பித்தனர்?

கிரேக்க இலக்கியத்தின் ஆரம்பப் பருவம் தொடர்பான வெளிச்சத்தை இந்த இரண்டு கேள்விகளும் அதற்கான பதில்களும் பாய்ச்சுகின்றன. அயோனியர்கள் (யவனர்கள்) ஃபொனீசியர்களிடமிருந்து அகர வரிசையைக் கற்றுக் கொண்டனர் என்பது கிரேக்க வரலாறு பற்றிய விஷயங்களில் மற்ற எல்லாவற்றைவிடவும் மிக ஆணித்தரமாக நிறுவப்பட்டிருக்கிறது. அயோனியர்கள் தமது எழுத்துகளை ஃபொனீசிய எழுத்துகள் என்றே எல்லா நேரங்களிலும் அழைத்திருக்கிறார்கள். கிரேக்க மொழியில் அகர வரிசைக்கான பெயரே ஃபொனீசிய மொழியில்தான் அமைந்திருக்கிறது.

ஆசியா மைனர் பகுதியில் இருந்த அயோனியர்களுக்கு ஃபொனீசியர்கள் வணிக ஒப்பந்தங்கள் எழுதுவதற்காகவும் பெரிபிளஸ் என்ற வரைபடக் கையேடுகளைப் புரிந்துகொள்வதற்காகவும் தமது அகரவரிசையைக் கற்றுத் தந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது.  மத்திய கால, துணிச்சல் மிகு மாலுமிகளுக்குப் பயன்பட்ட கடல் பயண வரைபடங்களைப் போலவே அதற்கு முந்தைய காலத்தினருக்கு பெரிபிளஸ் பயண ஆவணங்கள் பயன்பட்டிருக்கின்றன. ஆனால் எழுத்தால் வடிக்கப்பட்ட இலக்கியம், படைப்புகள் என்று நாம் சொல்லும் விஷயங்கள் எழுதப்பட மேலும் அதிக காலம் எடுத்துக்கொண்டது.

வடக்குப் பகுதியில் வாழ்ந்த ஜெர்மானியர்கள் கல்லறைகள், கிண்ணங்கள், பொது நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றில் நிறைய எழுத்துக்களைப் பொறித்திருக்கிறார்கள். ஆனால் இலக்கிய வகைமையாக அவற்றைச் சொல்ல முடியாது. மிலேட்டஸ் மற்றும் பிற வணிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வசித்த சில அயோனியர்களுக்கு எழுத்துக் கலை அறிமுகமாகியிருந்ததென்றால் அவர்களுக்கு எழுதும் கருவிகள், பொருட்கள் எங்கிருந்து கிடைத்திருக்கும்? அதையும்விட முக்கியமாக அதைப் படிக்க முடிந்த வாசகர்கள் எங்கிருந்து கிடைத்திருப்பார்கள்? அயோனியர்கள் எழுத ஆரம்பித்தபோது விலங்குத் தோல் அல்லது டிப்தேரா என்று அவர்கள் அழைத்த தோல் துண்டுகளில்தான் எழுதியாகவேண்டியிருந்தது. பண்படுத்தப்பட்ட தோல் காகிதம் மற்றும் கன்றுத் தோல் காகிதம் உருவாக்கப்படுவதுவரை கச்சா தோலில்தான் எழுதி வந்தனர். இந்தக் காலகட்டத்தில் ஓர் எழுத்தாளர் இந்த எழுத்துகளை நம்பி வாழ முடிந்திருக்காது.

நமக்குத் தெரிந்தவரையில், அயோனியர்கள் கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இதை மறுதலித்து என்னதான் யார்தான் சொன்னாலும் ஃப்ரெடரிக் ஆகஸ்ட் உல்ஃபின் கருத்துகளை வைத்துப் பார்த்தால், எழுத்து சார்ந்த இலக்கியப் படைப்புகள் ஆரம்பித்த காலமும் உரைநடை எழுத்து உருவான காலமும் ஒன்றாகவே இருந்திருக்கிறது.

அந்நாட்களில் எழுத்துக் கலை, விசேஷ முயற்சி எடுத்துச் செய்யப்படவேண்டியதாகவே இருந்திருக்கிறது. அந்த முயற்சியானது மிகப் பெரிய நோக்கத்துடனே முன்னெடுக்கவும்பட்டது. எனவே முதன்முதலில் தோல் காகிதத்தில் எழுதப்பட்டவற்றை இன்றைய நம் முர்ரே சுற்றுலா வழிகாட்டிக் கையேடுபோல் மிக முக்கியமானவையாக எடுத்துக்கொள்ளவேண்டும். பெரிஜெஸிஸ் என்றவை கடல் பயணங்களுக்கான வழிகாட்டிக் கையேடாக இருந்திருக்கின்றன. பெரிபிளஸ் என்பவை நகரை அல்லது ஊரைச் சுற்றிவர உதவும் உள்ளூர் பயண வழிகாட்டிக் கையேடாக இருந்திருக்கின்றன. இவற்றுடன் நகர உருவாக்கம் பற்றிய குறிப்புகளைக் கொண்ட கிட்டிசிஸ் நூல்கள் இருந்திருக்கின்றன. கிமு ஆறாம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் ஆசியா மைனர் பகுதிகளில் பயன்பாட்டில் இருந்த இந்த நூல்கள் மற்றும் இதை எழுதியவர்கள் எல்லாம் லோகோகிராபி என்று அழைக்கப்பட்டனர். கவிதை, செய்யுள் எழுதியவர்கள் வேறு பெயரில் அழைக்கப்பட்டனர். கிரேக்க வரலாற்று ஆசிரியர்களின் முன்னோடிகள் இவர்களே. வரலாற்றின் தந்தையாகக் கருதப்படும் ஹெரோடோடஸ் (கி.மு.443) இந்த முன்னோடிகளின் படைப்புகளை  மிக அதிக அளவில் தனது தரவுகளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த எழுத்துகள் எல்லாம் ஆசியா மைனர் பகுதியில் நடந்தவை. நகரங்கள், ஊர்கள் பற்றிய வழிகாட்டிக் குறிப்புகளில் தொடங்கிய படைப்புகள் வாழ்க்கைப் பயணத்தின் வழிகாட்டிக் குறிப்புகள், தத்துவங்கள் எனப் பரிணமித்தன. இவையெல்லாம் அயோனிய அனாக்ஸிமந்தர் (கி.மு.610-547), சைரோஸைச் சேர்ந்த பெரெகிடெஸ் (கி.மு. 540) ஆகியோரின் காலகட்டங்களைச் சேர்ந்தவை. வரலாறு தொடர்பான தெளிவான சித்திரத்தை இவை தருகின்றன. அனாக்ஸாகோரஸைச் சேர்ந்த அனாக்ஸிமெனஸ் மற்றும் பெரிகிள்ஸைச் சேர்ந்த அனாக்ஸாகோரஸ் ஆகியோரின் ஆசிரியரே இந்த அனாக்ஸிமந்தர்.

இவர்களுடைய காலகட்டத்தில் எழுத்து, மறு கட்டமைப்பு பெற்ற கலை வடிவமாக ஆகியிருந்தது. எகிப்துடனான வணிகம் மற்றும் பேப்பரஸின் (காகிதத்தின்) இறக்குமதி ஆகியவற்றின் மூலமாக இது நடந்தேறியது. ஏய்ஷிலோஸ் (கி.மு.500) காலகட்டத்தில் எழுத்துக் கலை நன்கு செல்வாக்கு பெற்றுவிட்டிருந்தது. கவித்துவ உருவகங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் அளவுக்குப் பரிச்சயமாகிவிட்டிருந்தன. எனவே பெசிஸ்ட்ரேடஸ் (கி.மு.528), பாலிகிரேட்டஸ் (கி.மு.523) போன்றோர்தான் முதன் முதல் கிரேக்க எழுத்துப் பிரதிகளைத் தொகுத்தவர்கள் என்று சொல்லும்போது அதை அதிகம் சந்தேகிக்கத் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

ஃப்ரெடரிக் ஆகஸ்ட் உல்ஃப் கேட்ட எளிய கேள்விகள் பழங்கால கிரேக்க இலக்கியங்களின் வரலாற்றை ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவர, குறிப்பாக அதன் தொடக்க காலம் பற்றிய முடிவுகளுக்கு வர, பெரிதும் உபயோகப்பட்டிருக்கின்றன.  

சமஸ்கிருத இலக்கியத்தைப் படிக்கப்போகும் மாணவர்கள் கேட்க வேண்டிய முதல் இரண்டு கேள்விகள்:

  1.   இந்தியர்களுக்கு அகர வரிசை எப்போது அறிமுகமானது?
  2.   எழுத்துகளைக் கொண்டு எப்போது இலக்கியம் படைக்க ஆரம்பித்தனர்?

இந்தக் கேள்விகள் பல காலம் விடை தெரியாமலே இருந்தன. இதன் விளைவாகப் பெரும் குழப்பங்களுக்கு நடுவே இருக்கும் சமஸ்கிருத இலக்கியத்தின் தொடக்க அம்சங்கள் குறித்து எதையும் தெளிவாகச் சொல்வது அசாத்தியமாகவே இருக்கிறது.

இந்த இடத்தில் நான் சில தரவுகளை மட்டுமே சுட்டிக்காட்டமுடியும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பாக இந்தியாவில் எங்குமே கல்வெட்டுகள் எதையும் பார்க்கமுடியவில்லை. சந்திரகுப்தரின் பேரனான அசோகரின் காலகட்டத்தைச் சேர்ந்த பௌத்தக் கல்வெட்டுகள்தான் இந்தியாவில் கிடைத்திருக்கும் முதல் கல்வெட்டுகள். அசோகர், செல்லூகஸ் நிகேடரின் சமகாலத்தவர். இவருடைய தூதுவராகத்தான் அசோகரின் அவையில் மெக்ஸ்தனிஸ் பாடலிபுத்திரத்தில் இருந்திருக்கிறார். இங்கு நாம் சரித்திரக் காலகட்டத்துக்கு வந்துவிட்டோம். கி.மு. 259-222 காலகட்டத்தில் மிகப் பெரிய ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த அசோகர் காலத்துக் கல்வெட்டுகள்தான் இவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இரண்டு எழுத்து வடிவங்களில் இந்தக் கல்வெட்டுகள் எழுதப்பட்டுள்ளன. ஒரு வரி வடிவம் வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. அராமிய அதாவது செமிட்டிய அகரவரிசையிலிருந்து இந்த எழுத்துகள் தோன்றியிருக்கின்றன. இன்னொரு எழுத்து வடிவம் இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. இந்திய மொழிக்கு ஏற்ப செயற்கையாக அல்லது இயல்பாகத் தழுவி மாற்றி அமைக்கப்பட்ட செமிட்டிக் அகரவரிசை எழுத்துகள் அவை. இந்த இரண்டாவது வகை எழுத்து வடிவமே இந்தியாவின் அனைத்து மொழி அகர வரிசைகளின் மூலாதாரமாகத் திகழ்கிறது. இந்த எழுத்துகள் இந்தியா முழுவதும் மட்டுமல்ல; அதைத் தாண்டிய பகுதிகளுக்குக்கூட புத்த பிக்குகளால் கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றன. எனினும் இந்த செமிட்டிக் மூல வடிவத்திலிருந்தே ஆரம்பத் தமிழ் எழுத்துகள் நேரடியாக உருவாகி வந்திருக்கவும் கூடும். அந்த செமிட்டிக் எழுத்து மூலாதாரமே இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழிகளுக்கும் இடமும் வலமுமான ஆதியும் அந்தமுமான ஆதாரமாக இருந்திருக்கிறது.

இங்கு முதல் கேள்விக்கான விடை நமக்குக் கிடைக்கிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பாக இந்தியாவில் எழுத்துகள், எந்தவொரு நினைவுச்சின்னங்களில் எழுதக்கூடப் பயன்படுத்திய சான்றை நம்மால் பார்க்க முடியவில்லை.  ஆனால், வணிக ஒப்பந்தங்களில் எழுத்து வடிவங்கள் அதற்கு முன்பாகவே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ‘இந்தியர்களுக்கு எழுத்து அறிமுகமாகியிருக்கவில்லை; சட்ட திட்டங்கள் எல்லாம் நினைவில் இருந்தே (மனப்பாடமாக்கிக் கொண்டவை மூலமே) அமல்படுத்தப்படுகின்றன’ என்று மெகஸ்தனிஸ் சொன்னது சரிதான்.

மஹா அலெக்சாண்டரின் தளபதியான நியார்கஸ் சிந்து நதியில் கி.மு.325-ல் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்தியத் துறைமுக நகரங்களில் இருந்த வணிகர்களுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. ‘இந்தியர்கள் நன்கு அடித்துப் பக்குவப்படுத்தப்பட்ட பருத்திக் காகிதத்தில் எழுதுகிறார்கள்’ என்று அவர் சொன்னதும் சரிதான். அவையெல்லாம் பொனீசிய அல்லது எகிப்திய மாலுமிகளுடன் செய்துகொண்ட வணிக ஒப்பந்தங்கள், ஆவணங்களாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதை வைத்து இந்தியாவில் அந்தக் காலகட்டத்தில் இலக்கியங்கள், பிற படைப்புகள் எழுதப்பட்டிருக்கும் என்ற முடிவுக்கு நாம் நிச்சயம் வரமுடியாது.

இந்தியாவில் நீதி நெறிகள், சட்டங்கள் எழுத்தில் எழுதப்பட்டிருக்கவில்லை என்று நியார்கஸ் சொன்னதைத்தான் மெகஸ்தனிஸும் பின்னர் உறுதிப்படுத்தியிருந்தார். இந்தியாவுக்கு வந்து சென்றிருந்த கிரேக்கப் பயணிகள் மைல் கற்கள், கால் நடை பற்றிய அறிவிப்புகள் எனப் பல்வேறு உருவங்கள், எண்கள் கொண்ட அறிவிப்புப் பலகைகளைப் பார்த்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். பிற தரவுகளில் இருந்தும் இவையெல்லாம் உறுதிப்படவும் செய்கின்றன. அலெக்சாண்டருடைய படையெடுப்புக்கு முன்பாகவே இந்தியர்களுக்கு எழுத்துகள் அறிமுகமாகியிருக்கின்றன என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் இலக்கியப் படைப்புகளாக அவை பயன்படுத்தப்பட ஆரம்பித்த காலம் நிச்சயம் அதற்கு வெகு முன்னதாக இருக்க வாய்ப்பில்லை.

இந்த இடத்தில் நம்மை ஆச்சரியத்தில் உறைய வைக்கும் ஒரு விஷயத்தை நாம் நேருக்கு நேர் சந்திக்கவேண்டியிருக்கிறது. கிறிஸ்து பிறப்பதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்புவரை இந்தியர்களுக்கு எழுத்து அறிமுகமாகியிருக்கவில்லை. அப்படியிருந்தும் வேத இலக்கியங்களின் மந்திரங்கள், பிராமணங்கள், சூத்ரங்கள் என்ற மூன்று நன்கு வரையறுக்கப்பட்ட காலகட்டங்கள் எல்லாம் குறைந்தது கி.மு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நாம் நம்பவேண்டும் என்று சொல்லப்படுகிறது.

பல்வேறு தெய்வங்களைப் போற்றிப் பாடப்பட்ட 10 தொகுதிகளைக் கொண்ட ரிக்வேதம் மட்டுமே 1028 பாடல்கள், 10580 பதங்கள், 1,53,826 வார்த்தைகளைக் கொண்டதாக இருக்கிறது. இந்தப் பாடல்கள் துல்லியமான அசை, தாள, லய ஒழுங்கில் எப்படி எழுதப்பட்டன? கி.மு. 1500 வாக்கில் துல்லிய நடையில் எழுதப்பட்ட பின் கி.பி. 1500 வரை எழுத்தில் எழுதப்படாமலே எப்படித் தலைமுறை தலைமுறையாகக் கைமாற்றிக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஏனென்றால் நமக்குக் கிடைத்த முதல் ரிக் வேதக் கையெழுத்துப் பிரதி – ஓலைச்சுவடி கி.பி. 1500 ஐச் சேர்ந்ததுதான். இது எப்படி நடந்திருக்கும்?

முழுக்கவும் மனப்பாடம் செய்துதான்!

இது நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடும். இதைவிட இன்னும் மலைப்பில் ஆழ்த்தக்கூடிய விஷயம் என்னவென்றால் இன்று வேத இலக்கியங்களாக நம்மிடம் அச்சில் இருக்கும் அனைத்தும் அழிந்துபோனாலும் இந்தியாவில் இருப்பவர்களின் நினைவிலிருந்து அவற்றை மீண்டும் எழுதியெடுத்துவிட முடியும். இந்தியாவில் இன்றும் வேதங்களை எழுதாமல் குரு சொல்வதைச் செவி வழியாகக் கேட்டு மனப்பாடம் செய்தே கற்றுக் கொண்டுவருகிறார்கள். கையெழுத்துப் பிரதியைப் பார்த்துப் படிப்பதில்லை. நான் அச்சிட்ட நூலை இன்னும் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள். மீண்டும் மீண்டும் வாய்மொழியாகவே கற்றுத் தருகிறார்கள்.

ஆக்ஸ்ஃபோர்டில் என்னிடம் படிக்கும் இந்திய மாணவர்களில் கூட இந்த ஸ்லோகங்களை மனப்பாடமாகச் சொல்லும் நபர்கள் இருக்கிறார்கள். மிகத் துல்லியமான உச்சரிப்பில் சொல்பவர்கள் இருக்கிறார்கள். நான் தொகுத்து அச்சிட்டிருக்கும் ரிக் வேத நூலைப் படித்துப் பார்த்து அதில் இருக்கும் பிழைகளை எந்தத் தயக்கமும் இன்றிச் சுட்டிக்காட்டவும் அவர்களால் முடியும்.

இது பற்றி நான் இன்னும் நிறையச் சொல்ல முடியும். நான் அச்சிட்ட ரிக் வேத நூல் தொடர்பாக வேறு பத உரைகள் நம்மிடம் எதுவும் இல்லை. ஆனால் இந்தியாவில் சில குறிப்பிட்ட பத்திகளுக்குப் பல்வேறு தரிசன மரபுகளில் பல்வேறு விளக்க உரைகள் இருக்கின்றன. இந்த வெவ்வேறு விளக்க உரைகளையும் அவர்கள் மிகுந்த கவனத்துடன் தலைமுறை தாண்டிக் கொண்டு செல்கிறார்கள். எனவே சமஸ்கிருத இலக்கியங்களின் கையெழுத்துப் பிரதிகளை கிரேக்க லத்தீன் படைப்புகளைப் போல் சேகரிப்பதற்குப் பதிலாக இந்த வேத சிஷ்யர்கள் நினைவில் மனப்பாடமாகப் பாதுகாத்து வைத்திருக்கும் ரிக்வேதங்களைத் தொகுத்து, இன்றும் வாழும் குரு பரம்பரையினரிடம் அதற்கான விளக்க உரைகளைக் கேட்டுத் தொகுக்கும்படி என் நண்பர்கள் சிலரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

இங்கு நாம் வெறும் கோட்பாடுகள் மூலம் எதையும் தீர்மானிக்கவில்லை. எல்லாம் தரவுகள். யார் வேண்டுமானாலும் இதைப் பரிசோதித்துப் பார்க்கமுடியும். ரிக்வேதத்தின் பெருமளவு ஸ்லோகங்களும் இன்னும் வேறு பல சமஸ்கிருதப் படைப்புகளும் இன்றும் செவி வழி – வாய் வழி மரபின் மூலமாகக் கற்றுக் கொள்ளும் வேத பாடசாலை மாணவர்களிடமே உயிர்ப்புடன் இருந்துவருகின்றன. அவர்கள் விரும்பினால் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு அசையையும், உச்சரிப்பையும் நம் பழமையான அச்சுப் பிரதியில் நாம் அச்சிட்டு வைத்திருப்பதுபோலவே அவர்களால் மிகத் துல்லியமாக நினைவில் இருந்தே சொல்லமுடியும்.

இந்த மனப்பாடப் பயிற்சியானது மிகவும் கறாரான ஒழுங்குகளுக்கு உட்பட்டே நடக்கிறது. அது ஒரு புனிதக் கடமையாகவே மதிக்கப்படுகிறது. ரிக்வேதம் கற்றுக்கொள்ள விரும்பும் சிறுவன் அவனுடைய குருவின் வீட்டில் தங்கியிருந்து சுமார் எட்டு ஆண்டுகளுக்கு மேல் அதைக் கற்றுக்கொள்ளவேண்டும். பத்து புத்தகங்களைக் கற்றுக் கொள்ளவேண்டும். முதலில் ரிக் வேத ஸ்லோகங்கள்; அதன் பின் யாகங்கள் பற்றிய உரைநடைகள். அது பிராமணம் என்றழைக்கப்படுகிறது; அதன் பின் வன – நூல். அதாவது ஆரண்யகம்; அதன்பின் சடங்கு சம்ஸ்காரங்கள் பற்றிய விதி முறைகள்; இறுதியாக, சீக்ஷா – உச்சரிப்பு முறைகளை விளக்குவது; வியாகரணம் – இலக்கணம்; சந்தஸ் – செய்யுள் இலக்கணம்; நிருக்தம் – சொல் இலக்கணம்; ஜோதிடம் – வானசாஸ்திரம்; கல்பம் – செயல்முறை, கிரியைகளுக்கேற்ற தந்திரம், வேள்வி விளக்கம், வேள்விச்சாலை அமைக்க வேண்டிய க்ஷேத்திரக் கணிதம் ஆகியவை அடங்கியது. இந்த ஆறு வேத அங்கங்கள் பற்றிப் படிக்கவேண்டும்.

இந்தப் பத்து புத்தகங்களில் சுமார் 30,000 வரிகள் இருக்கும். ஒவ்வொரு வரியும் 32 அசைகளைக் கொண்டிருக்கும்.

வேதம் கற்றுக் கொள்பவர் அந்த எட்டு வருட காலத்தில் தினமும் (விடுமுறை நாட்கள் நீங்கலாக) இவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும். ஆண்டுக்கு 360 நாட்கள் (சந்திரமான வருடம்); எட்டு வருடங்கள் என்றால் 2880 நாட்கள். இதில் 384 விடுமுறை நாட்களைக் கழித்துவிட்டால் 2496 நாட்கள் வரும். 30,000 வரிகளை இந்த நாட்கள் கொண்டு வகுத்தால் நாளொன்றுக்கு எட்டு வரிகள் கற்றுக்கொள்ளவேண்டும். பொதுவாக முந்தின நாள் படித்த ஸ்லோகங்களை மீண்டும் மீண்டும் உச்சரித்து பயிற்சி பெறுவதற்கே அதிக நேரம் செலவிடப்படும்.

இது தான் வேதம் கற்றுக் கொள்வதற்கான வழி முறை என்று என் இந்திய நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த வழிமுறை இனியும் இப்படியே நீடிக்குமா என்பது தெரியாது. நான் சொல்பவற்றை என் இந்திய நண்பர்கள் மதித்து ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தப் பல்கலையில் படித்து இந்தியாவில் குடிமைப் பணியில் விரைவில் சேரவிருக்கும் உங்களிடமும் நான் என் செல்வாக்கைச் செலுத்த விரும்புகிறேன். நீங்கள் இந்தியா குறித்தும் வேதங்கள் குறித்தும் கற்றுக் கொள்ளவேண்டியவற்றையெல்லாம் இன்றும் இந்த நடமாடும் நூலகங்களாக இருக்கும் வேத பண்டிதர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். இந்த வேதக் கல்வி மரபினர் மறைந்துவிட்டால் பழங்கால சமஸ்கிருதப் பொக்கிஷங்களும் என்றென்றைக்குமாக அழிந்துபோய்விடும்.

சீன பெளத்தரான ஐ-ஸிங் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார். அவருடைய மதமான பெளத்தத்தின் சில புனித நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தன. அவற்றை சீன மொழிக்கு மொழிபெயர்க்க விரும்பியவர் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள இந்தியா சென்றிருக்கிறார்.  கி.பி.671-ல் சீனாவிலிருந்து புறப்பட்டார். இந்தியாவில் தாம்ரலிபி பகுதிக்கு கி.பி.673-ல் சென்று சேர்ந்தார். அதன்பின் மகத்தான கல்லூரியும் மடாலயமுமான நாலந்தாவுக்குச் சென்று சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார். சீனாவுக்கு கி.பி.695-ல் திரும்பினார். கி.பி. 703-ல் உயிர் துறந்தார்.

அவர் சீன மொழியில் எழுதிய படைப்புகளில் ஒன்று நமக்குக் கிடைத்திருக்கிறது. அதில் இந்தியாவில் தான் பார்த்த சக பெளத்தர்களைப் பற்றி மட்டுமல்லாமல் பிராமணர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். என்னுடைய ஜப்பானிய மாணவர்களில் ஒருவரான கே.கஸவரா, ஐ-சிங்கின் படைப்பின் முக்கிய பகுதிகளை எனக்கு மொழிபெயர்த்துத் தந்தார்.

புத்த பிக்குகள் பற்றிச் சொல்லும்போது பஞ்ச சீலம், தச சீலம் ஆகியவற்றைப் படித்த பின்னர் மாத்ரிகேத புலவர் எழுதிய 400 ஸ்லோகங்களைப் படிப்பார்களாம். அதன் பின் அவர் எழுதிய மேலும் 150 ஸ்லோகங்களையும் படிப்பார்களாம். இவற்றை ஓதக் கற்றுக்கொண்டதும் தம்மத்தின் சூத்ரங்கள் கற்றுக் கொள்வார்கள். ஜாதகமாலாவையும்  மனப்பாடம் செய்வார்கள். புத்தரின் முற்பிறவிகள் பற்றி அது பேசுகிறது.

தென் பகுதிக் கடலில் இருக்கும் தீவுகள் என்று அவர் நினைத்த பகுதியில் தான் பார்த்தவை பற்றி ஐ-ஸிங் எழுதியிருக்கிறார்: ’தென் கடல்பகுதியில் பத்துக்கு மேற்பட்ட தீவுகள் இருக்கின்றன. அங்கு புத்த பிக்குகளும் சாதாரண மக்களும் ஜாதகமாலாவை ஓதுகிறார்கள். ஆனால் இவை சீன மொழிக்கு இதுவரை மொழிபெயர்க்கப்படவில்லை’.

கி.பி.434-க்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஆர்யாசுரர் தான் ஜாதகமாலாவை எழுதியதாக புன்யு நான்ஜியோ எழுதிய சீன திரிபீடக மொழிபெயர்ப்பில் பக் 372-ல் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த ஜாதகமாலா கதைகளில் ஒரு கதைக்கு மன்னர் ஒருவர் இசையமைத்துத் தந்திருக்கிறார். மக்கள் முன்னால் பெளத்த புராண நாடகமாக அது இசை, நடனத்துடன் நடித்துக் காட்டப்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஐ-ஸிங் அப்போது இருந்த கல்வி முறை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். ஆறு வயதில் சிறுவர்கள் 49 எழுத்துகள், 10,000 கூட்டெழுத்துகள் கற்றுக் கொள்கிறார்கள். இவற்றை ஆறு மாதங்களில் படித்துவிடுவார்கள். இவை 300 ஸ்லோகங்கள் என்ற அளவில் இருக்கும்.ஒவ்வொரு ஸ்லோகமும் 32 அசைகளைக் கொண்டிருக்கும். மஹேஷ்வரா என்ற குருவால் இவை கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. எட்டு வயதில் மாணவர்கள் பாணினி எழுதிய இலக்கண நூலைப் படிக்க ஆரம்பிக்கிறார்கள். எட்டு மாத காலம் இதைப் படிக்கிறார்கள். இதில் 1000 ஸ்லோகங்கள் – சூத்ரங்கள் இருக்கும்.

அதன்பின் வேர்ச் சொல் (தாத்து) மற்றும் மூன்று துணை உறுப்புகள் கற்றுக் கொள்வார்கள். இதில் 1000 ஸ்லோகங்கள் இருக்கும். பத்து வயதில் இந்த மூன்று அங்கங்களைப் படிக்க ஆரம்பிப்பார்கள். இவற்றைப் படித்து முடிக்க மூன்று வருடங்கள் ஆகும்.

15 வயதை அடையும்போது இலக்கண உரைகள் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அதைக் கற்றுக் கொள்ள அடுத்த ஐந்து வருடங்களைச் செலவிடுகிறார்கள். ஐ-ஸிங் இந்தியாவுக்கு வந்து சமஸ்கிருதத்தைச் சரியாகக் கற்றுக்கொள்ளாத சக சீன பௌத்தர்களுக்கு இந்த இடத்தில் ஓர் ஆலோசனை சொல்கிறார்: ‘சீனர்கள் இந்தியாவுக்குக் கல்வி கற்பதற்குச் சென்றால் முதலில் சமஸ்கிருத இலக்கண நூல்களைக் கற்றுத் தேறவேண்டும். அதன் பிறகே பிற நூல்களைக் கற்கவேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய முயற்சிகள் எல்லாம் வீணாகிவிடும். இவற்றை மனப்பாடம் செய்தே கற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது. இந்த வழிமுறை உயர் தரம் நிறைந்தவர்களுக்குத்தான் பொருந்தும். இரவும் பகலும் அரும்பாடுபட்டுப் படிக்கவேண்டும். ஒரு நொடியைக்கூடச் சோம்பலுற்று வீணடிக்கக்கூடாது. யி கிங் நூலை மூன்று முறை கட்டிச் சரி செய்யும் அளவுக்கு கன்பூசியஸ் எப்படி அதி தீவிரமாகப் படித்தாரோ அதுபோல் படிக்கவேண்டும். சூயு ஷி எப்படி ஒரு புத்தகத்தை 100 முறை மீண்டும் மீண்டும் படிப்பாரோ அதுபோல் படிக்கவேண்டும். காளையின் ரோமங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். யூனிகார்னின் கொம்போ ஒன்றே ஒன்றுதான் இருக்கும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கடைசி வாக்கியம் பிற மொழியைவிட சீன மொழியில் மிக அருமையாக இருக்கும்.

ஐ-ஸிங் பெளத்த மாணவர்கள், அவிசுவாசிகள் அடைந்த அற்புதமான நினைவாற்றல் திறமை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இரண்டு பெரிய தொகுதி நூல்களின் உள்ளடக்கத்தை ஒரு முறை படித்துப் பார்த்தாலே மனப்பாடம் ஆகிவிடும் அளவுக்குத் திறமை மிகுந்தவர்களாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இங்கு அவர் அவிசுவாசிகள் என்று சொல்வது மரபுப் பிடிப்பு மிகுந்த பிராமண மாணவர்களைத்தான். அவர்களைப் பற்றி அவர் மேலும் சொன்னவை:  ‘இந்தியாவின் ஐந்து பகுதிகளில் பிராமணர்கள் மிகவும் உயர்வாக மதித்துப் போற்றப்படுகிறார்கள். பிற மூன்று ஜாதிகளுடன் அவர்கள் அதிகம் கலப்பதில்லை. பிற கலப்பு ஜாதியினர் இவர்களிடமிருந்து மேலும் விலகி இருக்கிறார்கள். பிராமணர்கள் நான்கு வேதங்களை மிகவும் போற்றுகிறார்கள். அதில் ஒரு லட்சம் பாடல்கள் இருக்கின்றன. வேதங்கள் வாய்மொழியாக, செவி வழியாகத் தலைமுறைகள் தாண்டிக் கைமாற்றித் தரப்பட்டு வந்திருக்கிறது. அது எழுத்தாக எழுதப்படவில்லை. ஒவ்வொரு தலைமுறையிலும் லட்சம் வேத ஸ்லோகங்களையும் ஓத முடிந்த சில அறிவார்ந்த பிராமணர்கள் இருந்திருக்கிறார்கள். அப்படியானவர்களை நான் நேரில் பார்க்கவும் செய்திருக்கிறேன்’.

கிறிஸ்து பிறந்து ஏழு நூற்றாண்டுகள் கழித்து ஒருவர் கண்ணால் கண்ட விஷயம் இது. இந்தியாவுக்குச் சென்று சமஸ்கிருதம் கற்றுக்கொண்டு சுமார் 20 ஆண்டுகள் பல்வேறு மடாலயங்களில் வசித்திருக்கிறார். செவி வழி மரபில் ஒரு படைப்பு காலங்களைத் தாண்டி வருவது பற்றி அவருக்கு எந்தவிதப் பரிச்சயமும் இருந்திருக்காது. சீனாவில் இருந்து வந்த அவருக்குக் காகிதத்தில் எழுதும் விஷயம் நன்கு தெரிந்திருக்கும். இருந்தும் அவர் ‘வேதங்கள் வாய்மொழியாக, செவி வழியாகத் தலைமுறைகள் தாண்டிக் கைமாற்றித் தரப்பட்டு வந்திருக்கிறது. அது எழுத்தாக எழுதப்படவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நான் ஐ-ஸிங் சொல்வதை முழுவதுமாக ஏற்கவில்லை. அவருடைய காலகட்டத்தில்  சமஸ்கிருத எழுத்துப் பிரதிகள் இருந்திருக்கவில்லை என்ற முடிவுக்கு அவர் சொல்லும் கூற்றுகளை வைத்து நாம் நிச்சயம் வந்துவிடக்கூடாது. அவை இருந்திருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். நம் யுகத்தின் முதல் நூற்றாண்டில் பல சமஸ்கிருத நூல்கள் சீனாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பதும் நமக்கு நன்கு தெரியும். வேதங்களையும் அவர்கள் எழுதி எடுத்துக்கொண்டு சென்றிருக்க வாய்ப்பு உண்டு.

ஆனால், இந்த வேதங்கள் எல்லாம் எழுத அனுமதிக்கப்படவில்லை. வேத மாணவர்கள் எல்லாம் அதை முறையான குருவிடமிருந்து செவி வழியாகக் கேட்டு மட்டுமே கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஐ-ஸிங் சொல்வது முழுக்கவும் சரிதான். வேதங்களை யாரேனும் பிரதி எடுத்தால் கையெழுத்துப் பிரதியாக்கினால் கடும் தண்டனைகள் தரப்படவேண்டும் என்று பிந்தைய சட்ட நூல்களில் சொல்லப்பட்டிருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது. வேதங்களின் கையெழுத்துப் பிரதிகள் எழுதப்பட்டிருக்கின்றன; அவை அந்தப் புனித நூல்களைக் கற்றுத் தரும் சிறப்பு உரிமை பெற்றிருந்த பிராமணர்களின் நலன்களுக்கு ஊறுவிளைவித்ததால் அந்தக் கடும் தண்டனைகள் தரப்பட்டுள்ளன என்பது அதிலிருந்து தெரியவருகின்றன.

ஐ-ஸிங் எழுதியிருக்கும் இதை மனதில் வைத்துக்கொண்டு இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகள் நாம் பின்னோக்கிச் சென்று ப்ரதிசாக்யாக்கள் அதாவது விதிமுறைகளின் தொகுப்பு என்ற நூலைப் பார்த்தால் இன்றும் இந்தியாவில் என்ன விதமான வேதக் கல்வி முறை இருக்கிறதோ அதுவே அந்த கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலும் இருந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. துவிஜர்களான பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய மூவர்ணத்தினருக்குடைய குழந்தைகள் ஒரு குருவின் வீட்டில் எட்டு ஆண்டுகள் தங்கி வேத ஸ்லோகங்களை மனப்பாடமாக செவி வழிக்கேட்டுப் படிக்கவேண்டும் என்று அதிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

இத்தனை தொல் பழங்காலத்திலேயே வேதக் கல்வி முறை இந்த அளவுக்கு நன்கு வரையறுக்கப்பட்டதாக இருந்திருக்குமென்றால் அன்று நிச்சயம் எந்தவொரு எழுத்தும் காகிதத்திலும் ஓலைச்சுவடியிலும் விலங்குத் தோலிலும் எழுதப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. எழுதுகோல், மை போன்றவையெல்லாம் அன்று இந்தியாவில் யாருக்கும் தெரிந்திருக்கவும் இல்லை என்பதே உறுதியாகிறது. நாம் இலக்கியம் என்று அழைக்கக்கூடிய (அந்த வார்த்தையைப் பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை) ஒன்று இந்தியாவில் வேத பண்டிதர்களிடம் வெறும் மனதில், நினைவில் மட்டுமே இருந்திருக்கிறது. மிகவும் அற்புதமான துல்லியமான முறையில் வாய் மொழியாகத் தலைமுறைகள் தாண்டிக் கைமாற்றித் தரப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் நான் ஏன் விரிவாகச் சொல்கிறேனென்றால், இலக்கியம் என்று நாம் சொல்லும் ஒன்று மிகப் பெருமளவிலான பாடல்கள், அதைவிட அதிக அளவிலான உரை நடைகள் எல்லாம் எழுதப்படாமலே இருந்திருக்கின்றன என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க அது மிகவும் அவசியம். இந்த இடத்திலும் உலகம் முழுவதிலுமான மனித இனம் மகத்தான நாகரிக சாதனைகளைச் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாக நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத சாதனைகளைச் சில தனி நபர்களின் குழுக்களின் மூலமாகச் சாதித்துக் காட்டியிருக்கிறது. தொல் பழங்குடிகள் என்று நாம் கருதும் நபர்கள் ஈட்டிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மரக்கட்டைகளை உரசி நெருப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.. இன்றைய மிகச் சிறந்த கைவினைக்கலைஞர்களைக் கூட மலைக்க வைக்கும் விஷயங்களைச் செய்திருக்கிறார்கள். விண்ணில் இருந்து மழையைக் கொண்டுவந்தவரும் போர்களில் வெற்றியைப் பெற்றுத் தந்தவருமான அவர்களுடைய கடவுள்களிடமிருந்து கிடைத்ததாக அவர்கள் நம்பும் பாடல்களை அவர்கள் நினைத்திருந்தால் வேறு வழிகளில் பாதுகாத்துவந்திருக்கமுடியாதா..?

பாலினீஷியாவில் தொல் பழங்குடி வாழ்க்கை பற்றிய வரலாற்றுச் சித்திரங்கள் என்ற நூலில் திரு வில்லியம் வையட் கில் அந்தப் பழங்குடிகள் கூட தமது நாயகர்கள், மன்னர்கள், கடவுள்கள் ஆகியோரைப் பற்றியும் குறிப்பாக, குறிப்பிட்ட சில குலங்கள்/குடும்பங்களின் கண்ணியம், பெருமை ஆகியவற்றையும் பாடல்களாக அல்லது சொத்துப் பத்திரங்களில் அவர்களுடைய பெருமைகளைக் குறிப்பிட்டுப் பாதுகாத்துவைப்பதில் எவ்வளவு ஆர்வத்துடன் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

அப்புறம், வேத காலத்தினர் மட்டுமே இப்படி மிகப் பெரிய இலக்கியத்தை வாய்மொழி மரபாகப் பாதுகாத்துவந்த ஒரே குழு என்று சொல்லமுடியாது.   ‘(செல்டிக் புரோகிதர்களான) ட்ரூயிட்கள் ஏராளமான பாடல்களை மனப்பாடமாகவே நினைவில் வைத்திருக்கிறார்கள். அவற்றைக் கற்றுக்கொள்ள சுமார் 20 ஆண்டுகளைக் கூட சிலர் செலவிட்டிருக்கின்றன. அந்தப் பாடல்களை எழுத்தில் எழுதி வைப்பது தவறு என்று கருதினர்’ என்று சீசர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவிலும் அதேதான் நடந்திருக்கிறது.    

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *