வேத இலக்கியங்களின் காலமும்
பித்ருக்கள் – முன்னோர்கள் – வழிபாடும்
இந்தியாவில் இலக்கியப் படைப்புகள் எழுத ஆரம்பிக்கப்பட்ட காலம் எது என்ற கேள்விக்கு நாம் திரும்புவோம். கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய ப்ரதிசாக்யாக்கள் எழுதப்பட்ட காலம் தொடங்கி, அதன் பின் ஏழாம் நூற்றாண்டில் ஐ-ஸிங் குறிப்பிட்டிருப்பவை, நம் காலத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் கையெழுத்துப் பிரதிகள்வரை என வேதங்கள் இருந்திருப்பதற்கான தடயங்கள், தரவுகளை நாம் அலசி ஆராய்ந்துவிட்டோம்.
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் பௌத்தம், வேத மதத்தின் சிதைவுகளில் இருந்து கட்டி எழுப்பப்பட்டு மரபான பிராமணர்கள் வேதங்களுக்கு என்னவெல்லாம் தெய்விக முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்தார்களோ அவை அனைத்தையும் மறுதலித்தபடி புதிய மதமாகத் தோற்றுவிக்கப்பட்டது. எனவே அந்த வகையில் புத்த மதத்தின் எழுச்சிக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் வேத இலக்கியங்கள் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்ற முடிக்குத்தான் நாம் வரவேண்டியிருக்கும்.
வேத இலக்கியங்கள் தொடர்பாக மூன்று காலகட்டங்கள் இருப்பதாகச் சொல்கிறேன். மூன்றாம் காலகட்டம் என்று சொன்னால் இரண்டாம் கால கட்டம் என்ற ஒன்று இருந்தாகவேண்டும். இரண்டாம் காலகட்டம் என்று சொன்னால் முதலாம் காலகட்டம் என்ற ஒன்று இருந்தாகவேண்டும். வேத இலக்கியங்கள் மிக மிகப் பழங்காலத்தில் எழுதப்பட்டது என்றெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் வேத இலக்கியங்கள் அதிகபட்சமாக இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 15 நூற்றாண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கமுடியாது என்றே தோன்றுகின்றன.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். அது மிக மிகக் கடுமையான விமர்சனத்தையும் சந்தேகத்தையும்கூட மீறி ஓர் உண்மையை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது.
சந்திர குப்தரின் பேரன் அசோகரின் ஆட்சி காலத்தில் அதாவது கி.மு. 259-222 க்கு முன்பாக இந்தியாவில் எந்தவொரு கல்வெட்டும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கல்வெட்டுகள் என்ன மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன?
இவை ஆதி வேதச் செய்யுள்கள் எழுதப்பட்டிருக்கும் சமஸ்கிருதம் போலவா… நிச்சயமாக இல்லை. பிந்தைய கால வேதப் பிரமாணங்கள், சூத்திரங்கள் ஆகியவை எழுதப்பட்டிருக்கும் செம்மைப்படுத்தப்பட்ட சமஸ்கிருதப் பாணியிலா… நிச்சயமா இல்லை. அவையெல்லாம் இந்தியாவில் பேசப்பட்ட எளிய மொழியில் அந்த எழுத்துகளைக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன. இந்திய உள்ளூர் மொழிகள் எல்லாம் லத்தீன் மொழியில் இருந்து இத்தாலி மொழி வேறுபட்டிருப்பதுபோல் செவ்வியல் சமஸ்கிருதத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை.
இது எதைச் சுட்டிக்காட்டுகிறது?
வேதங்கள் எழுதப்பட்டிருக்கும் தொன்மையான சமஸ்கிருதம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பாகவே பேச்சு வழக்கில் இருந்து வழக்கொழிந்துவிட்டிருக்கிறது. பிந்தைய கால செம்மைப்படுத்தப்பட்ட இலக்கண சமஸ்கிருதம்கூட பெரும்பான்மையானவர்களால் பேசவோ புரிந்துகொள்ளவோ பட்டிருக்கவில்லை. புத்த மதம் எழுந்தபோது அல்லது அதற்கு வெகு முன்பாகவே சமஸ்கிருதம் இந்தியாவில் பேச்சு மொழி அந்தஸ்திலிருந்து வழக்கொழிந்துவிட்டது. வேத மொழியின் ஆரம்ப மற்றும் பிந்தைய வடிவங்கள் எல்லாமே புத்தர் தன் போதனைகளை ஆரம்பித்தபோது மக்களின் புரிதலுக்கு அப்பால் போய்விட்டன. புத்தருக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்கும். ஆதி வேத சமஸ்கிருதம் கூடத் தெரிந்திருக்கும். இருந்தும் அவர் தன் சீடர்களிடம் மக்களுக்குப் புரியும் மொழியிலேயே போதனைகளைப் பரப்பும்படி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
எனது உரையை முடிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் சொல்ல விரும்பியதில் பாதியைக் கூடச் சொல்லிமுடிக்கவில்லை. இது வழக்கமாக நடக்கும் விஷயம்தான். இந்தியாவின் இலக்கியங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மனித குல அறிவுத்துறையின் ஒரு பிரிவான மதங்களின் தோற்றுவாய் என்ற ஒன்றைப் பற்றிய முழு விவரங்களைக்கூட என்னால் சொல்லி முடிக்கமுடியவில்லை. எனினும் தேவர்கள் அல்லது கடவுள்களின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை பற்றியெல்லாம் வேதங்களின் வெளிச்சத்தில் உங்களுக்குப் புதியதொரு கோணத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
நேர்மறைக் கோட்பாடுகளுக்குப் பதிலாக நேர்மறைத் தரவுகள் கிடைத்திருக்கின்றன. இவையெல்லாம் உலகில் வேறு எங்கும் கிடைக்காது. வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் தேவர்கள், அவர்களின் உயரிய, உன்னத நிலையில் இருந்த காலகட்டத்தை எடுத்துக்கொண்டால் கூட அவற்றுக்கும் கிரேக்க ஜீயஸ், அப்போல்லோ, ஏதேன் போன்ற கருத்து நிலைகளுக்குமான கால இடைவெளி மிகவும் கணிசமானது. இருந்தும் பிரதான புதிரின் விடை நமக்குக் கிடைத்துவிட்டது. பழங்கால தெய்வங்கள் எதனடிப்படையில் உருவானார்கள், எப்படியானவர்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியவந்துவிட்டன.
வேதங்களில் மூன்று மதங்கள் இருக்கின்றன. ஒரே ஆலயத்தில் மூன்று சன்னதிகள் இருப்பதுபோல் என்று சொல்லலாம். கவிஞர்கள் (புலவர்கள்), இறை வழிகாட்டிகள், தத்துவ ஞானிகள் ஆகியோரால் கட்டி எழுப்பப்பட்டவையாக அவை இருக்கின்றன. இந்த இடத்தில் கூட நாம் செய்யப்பட்ட விஷயம், செய்தவர் என்பதையெல்லாம் அலசி ஆராய முடிகிறது. புரியாத சடங்குகள், விளக்கமுடியாத நம்பிக்கைகள், வெறும் சூத்திரங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி மட்டுமே பேசியாகவேண்டிய நிர்பந்தம் இல்லை. மனித மனம் மிகவும் துல்லியமான பகுத்தாராயும் முறையில் எப்படியாகப் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களுக்கு வந்து சேருகிறது என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிகிறது. இதுவே வேதங்களைப் பிற மதங்களின் புனித நூல்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
வேதங்களிலும் வேதச் சடங்குகளிலும் கூட பழைய, புரியாத, கரடு முரடான, குழப்பமானவை இருக்கின்றன. ஆனால் பல இடங்களில் பெயர்கள், கோட்பாடுகள் எல்லாம் இயற்கை அம்சங்களில் இருந்து இயற்கையைத் தாண்டிய நிலைக்கு நகர்ந்தமை, தனிப்பட்ட நிலையில் இருந்து பொதுமையை நோக்கிச் சென்றமை எல்லாம் நன்கு புரியும்படியாக இருக்கின்றன. அந்த மாற்றங்கள் இப்போதும் நடந்துகொண்டிருக்கின்றன. அதனால்தான் வேதங்கள் தொடர்பான நம் சிந்தனைகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. இதனால்தான் வேதங்கள் தொடர்பான நம்முடைய சிந்தனைகளை முழுமையாக, தெளிவாக, முழுமையாக முன்வைக்க முடியாமல் இருக்கிறது.
கடவுள்களைக் குறிக்க வேதங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மிகவும் பழமையான வார்த்தைகளில் ஒன்றான ‘தேவர்’ என்பதை எடுத்துக்கொள்வோம். லத்தீன் மொழியில் இதை ‘தேயுஸ்’ என்று சொல்கிறோம். தேவர் என்றால் கடவுள் அல்லது கடவுள்கள் என்றே எல்லா அகராதிகளும் சொல்கின்றன. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வேத ஸ்லோகங்களில் தேவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தையும் கடவுள் என்று மொழிபெயர்த்தால் அது தவறு. வேத காலக் கவிகளுடைய சிந்தனையை நாம் மாற்றி அமைப்பதாகவே அது ஆகும். நாம் கடவுள் என்று சொல்வதும் தேவர் என்ற வார்த்தை குறிப்பிடுவதும் வேறு என்ற அர்த்தத்தில் மட்டும் இதைச் சொல்லவில்லை. கிரேக்க, ரோமானியர்கள் கடவுள் என்ற கருத்தாக்கத்தின் மூலம் எதைக் குறிப்பிட்டார்களோ அதுகூட வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் தேவர் என்ற வார்த்தையை விளக்கப் போதுமானதாக இருக்காது.
தேவர் என்றால் பிரகாசமானவர்; ஒளி பொருந்தியவர் என்பதுதான் உண்மையான அர்த்தம். வேறு எதுவுமே இல்லை. ஆகாயம், நட்சத்திரங்கள், சூரியன், உஷஸ் (அதிகாலை), பகல், வசந்தம், ஆறுகள், பூமி எனப் பலவற்றைக் குறிக்கவும் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் வேத கவி ஒரே வார்த்தையால் குறிப்பிட்டிருக்கிறாரென்றால் – இதை நாம் பொதுப்படையான பெயர் என்று சொல்கிறோம் – இவற்றை தேவர்கள் என்று நாம் சொல்லவேண்டும். அப்படிச் சொல்லும்போது தேவர் என்ற வார்த்தை ஒளிமயமானவர்கள் என்பதை (மட்டும்) குறிப்பாக நின்றுவிடாது. அப்படி நினைத்தால் ஆகாயம், சூரியன், அதிகாலை என எல்லாம் தமக்குள் பொதுவாகக் கொண்டிருக்கும் அம்சத்தை மட்டுமே குறிப்பதாக ஆகிவிடும். அவற்றின் தனித்தன்மையான குணங்கள் அந்த வார்த்தையில் இருந்து வெளியேறிவிடும்.
இப்போது ஒளிமயமானவர்களாக இருந்த தேவர்கள் ஆகாயத்தில் உறையும் அன்பான, சக்தி மிகுந்த, கண்ணுக்குப் புலனாகாத, அழிவற்ற ஒருவராக கிரேக்கர்கள், ரோமானியர்கள் சொன்ன பன்னிரு கடவுள் தொகுப்பான ‘தீ’ (Di) என்பது போன்றதாக ஆகிவிட்டனர்.
அப்பால் இருப்பது, இயற்கைக்கு அப்பால் இருக்கும் ஒன்று என்ற கோட்பாடு வேத மதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தேவர்கள், அசுரர்கள், வசுக்கள், ஆதித்யர்கள் இவை எல்லாமே ஒளிமயமான, சூரிய அம்ச, விண்ணுலக, பிரபஞ்ச, இரவு பகல் ஆகியவற்றைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இயற்கை சக்திகள் எல்லாம் ஒன்றை ஒன்று முழுவதுமாக மறுதலிக்காமல், நேச மற்றும் இருண்மையான பகை சக்திகள் கூட விலக்கி வைக்கப்படாமல், இரவு, கரு மேகங்கள், குளிர் நிறைந்த காலம் எல்லாமே அந்த ஒளிமயமான நாயகர்களின் (தேவர்களின்) வலிமைக்கும் வீரத்துக்கும் கட்டுப்பட்டவை என்று சொல்கிறது.
நாம் இப்போது வேதக் கோவிலின் (மதத்தின்) இரண்டாம் அலையைப் பார்ப்போம். ‘அனைத்துக்கும் அப்பால் இருக்கும்’ ஒன்று குறித்து மங்கலான சிந்தனைகள் உருவாகின்றன. அதைப் புரிந்துகொண்டு பழங்கால ரிஷிகள் முன்னோர்களின் உலகம் என்று அதை அடையாளப்படுத்துகிறார்கள்.
உலகின் பிற பகுதிகளைப் போலவே இந்தியாவிலும் இன்னொரு சிந்தனை மிகவும் இயல்பாகவே மனிதர்களின் மனங்களில் உருவாகியிருக்கிறது. அதாவது அவர்களுடைய தாய், தந்தையர் பூவுலகில் இருந்து விடைபெற்றதும் அப்பால் இருக்கும் உலகுக்குச் செல்கிறார்கள். அது என்ன உலகம் என்பது தெரியவில்லை. அது பிரகாசமான தேவர்கள் தோன்றும் கிழக்கு திசையில் இருக்கலாம். அல்லது யம திசை என்று அழைக்கப்படும் அஸ்தமன திசையான மேற்கில் இருக்கலாம். ஒருவருடைய இருப்பு இல்லாமலாகவே முடியாது என்ற எண்ணம் இந்தக் காலகட்டம் வரையிலும் அவர்கள் மனதில் தோன்றியிருக்கவில்லை. முன்னோர்கள் எங்கோ ஓரிடத்தில் வாழ்கிறார்கள். அவர்களைப் பார்க்க முடியாது. அப்பால் இருக்கும் இன்னொரு உலகம் என்ற சிந்தனைகள் முளைவிடத் தொடங்கின. அது இன்னொரு மதத்தின் தோற்றுவாயாக அமைந்தது.
இறந்த பின்னரும் முன்னோர்களின் சக்திகள் அழிந்துபோவதும் இல்லை. பழங்கால சட்ட திட்டங்கள், விதிமுறைகள், குடும்பச் சடங்குகள் எனப் பலவும் முன்னோர்களின் விருப்பம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டவையாகவே இருந்தன. முன்னோர்கள் உயிருடன் வலிமையுடன் இருந்தபோது அவர்களுடைய விருப்பங்களே சட்டமாக இருந்தன. அவர்கள் இறந்த பின்னரும் அவர்களுடைய நினைவும் செல்வாக்கும் அந்த விஷயங்களைத் தீர்ப்பதில் பங்காற்றவேண்டும் என்ற எண்ணம் மிகவும் இயல்பானதுதான். அதாவது அந்தச் சட்ட திட்டங்கள் எல்லாம் முன்னோரின் விருப்பத்துக்கு ஏற்ப அப்படியே இருந்தாகவேண்டும்.
மனு IV.178-ல் சொல்கிறார்: பெற்றோரும் முன்னோரும் நடந்த பாதையில் நல்லோர்கள் நடந்த பாதையில் ஒருவரை நடக்கவையுங்கள். அவர் ஒருபோதும் தவறு செய்பவராகமாட்டார்’.
இயற்கையின் ஒளிமயமான சக்திகளின் மூலமாக தேவர்கள் அல்லது கடவுள்கள் தோன்றியதுபோல் இறந்தவர்கள் அதாவது பித்ருக்கள், பிரேதம் ஆகியவற்றிலிருந்து முன்னோர்கள், நிழல்கள், ஆவிகள், ஆன்மாக்கள் என்று நாம் சொல்லும் அன்புக்குரியவர்கள் (அவர்களின் உலகம்) உருவாகியிருக்கிறார்கள். உலகில் இந்த பித்ருக்கள் – முன்னோர்களின் வழிபாடு இந்தியாவில் முழுமையாக வளர்ந்திருப்பதுபோல் வேறு எங்கும் வளர்ந்திருக்கவில்லை. பித்ருக்கள் என்ற அந்தப் பொதுவான பெயர் முன்னோர்கள் – பெற்றோர்களிடம் இருக்கும் பொதுவான குணங்கள் அனைத்தையும் கொண்டதானது. ஒருவருடைய பெற்றோரை மட்டுமல்ல; கண்ணுக்குத் தெரியாத, அன்பான, சக்தி வாய்ந்த, அழிவில்லாத, விண்ணில் உறையும் ஆத்மாக்களாக அது பரிணமித்தது.
உலகில் உள்ள வேறு எந்தப் படைப்பைவிடவும் வேதங்களில் இந்தத் தவிர்க்கமுடியாத தொல் பழங்காலச் சிந்தையின் உருமாற்றத்தைப் பார்க்க முடிகிறது. அம்மா, அப்பா மீதான குழந்தைகளின் அன்பென்பது ஆன்மாவின் அழிவின்மைக்கான உள்ளுணர்வு சார்ந்த நம்பிக்கையாகப் பரிணமித்தது. ஹிந்துக்களின் பழங்கால மதத்தின் மிக முக்கியமான, செல்வாக்கு மிகுந்த இந்தப் பகுதியை ஆய்வுலகம் ஓரங்கட்டிவிட்டிருப்பது மிகவும் விசித்திரமாக இருக்கிறது. அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் அப்படியான ஒன்று இருந்ததா என்ற கேள்வியும் வேறு கேட்கப்படுகிறது.
இந்த நம்பிக்கை மிகவும் பிரதானமாக இருந்திருக்கிறது என்ற கூற்றுக்கு ஆதரவாக நான் மேலும் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் இந்த பித்ரு – முன்னோர் வழிபாடு தொல் பழங்காலத்திலிருந்து இன்றுவரையிலும் நீடித்துவருகிறது. திரு ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் உலகில் தோன்றிய பழங்குடி மதங்கள் எல்லாவற்றிலும் இந்த முன்னோர் வழிபாடு இயல்பான அங்கமாக இருந்திருப்பது பற்றி நிறையவே பேசியிருக்கிறார். ஆனால் அவர் ‘இந்தோ ஐரோப்பிய அல்லது செமிட்டிக் நாடுகளில் முன்னோர் வழிபாட்டிலிருந்து எந்தவொரு மதமும் உருவாகியிருக்கவில்லை என்று ஆணித்தரமாகச் சொல்லமுடியும்’ என்று சொல்லியிருக்கிறார்.
அவர் சொன்னதை நான் சந்தேகிக்கவில்லை. ஆனால் எதன் அடிப்படையில் இதைச் சொல்கிறார் என்பதை அவர் விளக்கியிருக்கவேண்டும். இந்தியா பற்றிய ஏதேனும் ஒரே ஒரு புத்தகத்தைப் படித்திருக்கும் ஒருவர்கூட நிச்சயம் இப்படியான கூற்றைச் சொல்லவே முடியாது. ரிக்வேதத்தில் இறந்த முன்னோர்களை வேண்டிக்கொள்ளும் ஸ்லோகங்கள் இருக்கின்றன. பிரமாணங்கள், சூத்திரங்கள் ஆகியவற்றில் முன்னோர் வழிபாடு தொடர்பாக மிக விரிவான விவரணைகள் இருக்கின்றன. இதிகாசங்கள், நீதி நூல்கள், புராணங்கள் எல்லாமே முன்னோருக்கான சடங்குகள், சம்பிரதாயங்களால் நிரம்பி வழிகின்றன. இந்திய சமூகத்தின் வாரிசுரிமை, திருமணம் உள்ளிட்ட மைய இழையானது பித்ருக்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. இருந்தும் எந்தவொரு இந்தோ ஐரோப்பிய தேசத்திலும் முன்னோர் வழிபாட்டிலிருந்து மதம் உருவாகியிருக்கவில்லை என்றே நம்மை நம்பச் சொல்கிறார்கள்.
பாரசீகர்கள் ‘ஃப்ராவஷி; என்ற முன்னோர் தெய்வங்களைக் கொண்டிருக்கிறார்கள். கிரேக்கத்தில் எடேமன் (நல்லாத்மா); ரோமாபுரியில் தீ மனேஸ் மற்றும் லாரெஸ் ஃபெமீலியரஸ் ஆகியவை பிற கடவுள்களைவிட மிகத் தீவிரமாகக் கும்பிடப்பட்டிருக்கின்றன. மனு (III.203) ‘பித்ருக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகள் (கடன்கள்) தெய்வங்களுக்குச் செய்யவேண்டியவற்றையும்விட மேலானது’ என்கிறார். இருந்தும் இந்தோ ஐரோப்பிய மதங்களில் முன்னோர் வழிபாடு எந்த மத நம்பிக்கையிலும் இல்லை என்று சொல்கிறோம்.
வரலாற்று ஆராய்ச்சிகளில் ஏதேனும் முன்னேற்றம் இருக்கவேண்டுமென்றால் இப்படியான பிழையான பார்வைகள் ஒருபோதும் இருக்கவே கூடாது. திரு ஹெர்பர்ட் ஸ்பென்ஸருடைய கூற்றை நான் எப்படிப் பார்க்கிறேனென்றால் ‘இந்தோ ஐரோப்பிய மதங்களில் எந்தவொன்றுமே முன்னோர் வழிபாட்டை நம்பி ஏற்றுக்கொண்டிருக்கவில்லை என்று ஒரு சில அறிஞர்கள் (பிழையாகச்) சொல்கிறார்கள் என்பதற்கு மேலாக இதில் பொருட்படுத்த எதுவும் இல்லை’ என்றே நினைக்கிறேன்.
வேறுவகையில் பார்த்தால், அது உண்மைதான். மறுக்கவில்லை. ஆனால், அப்படிப் பார்த்தால் அந்தக் கூற்று எல்லா மதங்களுக்குமே பொருந்தியாகவும் வேண்டும். இந்த விஷயத்திலும் மானுடவியலாளர்கள் வேறு எந்தவொரு நூலைவிடவும் வேதங்களில் இருந்தே அதிக விஷயங்களைக் கற்றுக்கொள்ளமுடியும் என்று நான் நம்புகிறேன்.
வேத காலத்தில் பித்ருக்களை தேவர்கள் மற்றும் தெய்வங்களுடன் சேர்ந்து எழுந்தருளும்படி வேண்டிக் கொள்வார்கள். ஆனால் அவர்களுடன் பித்ருக்களை இணைத்துச் சொல்வதில்லை. அந்த தேவர்-தெய்வங்களின் குழுவில் பித்ருக்கள் இல்லை. தேவர்கள் பித்ருக்களாவதில்லை. சில நேரங்களில் தேவா என்ற பின்னொட்டு பித்ருக்களுடன் சேர்க்கப்படும்; பித்ருக்கள் எல்லாம் தேவர்களுக்கு இணையாக உயர்த்திப் போற்றப்படுவார்கள் என்றாலும் பித்ருக்கள் மற்றும் தேவர்களின் தோற்றுவாய் முற்றிலும் வேறானது. அவை வழிபாட்டு அம்சங்கள் தொடர்பாக மனித மனங்களின் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களையே பிரதிபலிக்கின்றன. இதை நாம் ஒருபோதும் மறக்கவே கூடாது.
ரிக்வேதம் VI 52.4-ல் ‘உஷஸ் என்னைக் காக்கட்டும்; ஓடும் நதிகள் என்னைக் காக்கட்டும்; நிலை குலையாத மலைகள் என்னைக் காக்கட்டும்; பித்ருக்கள் இந்த தெய்வங்களை எழுந்தருளச் செய்யும் தருணத்தில் என்னைக் காக்கட்டும்’ என்று துதிக்கப்படுகிறது.
உஷஸ் தேவதை, நதி தேவதை, மலை தேவதை ஆகியவற்றிலிருந்து பித்ருக்கள் வேறுபட்டவர்கள் என்பதை எடுத்துக்காட்ட வேறு உதாரணம் எதுவுமே தேவையில்லை. தேவ ஆஹுதியில் அனைவரும் அழைக்கப்பட்டபோதிலும் அவர்கள் தனித்தனியானவர்களே.
இந்த இடத்தில் இரண்டு வகையான முன்னோர்கள் இருப்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். மிக மிகப் பழங்காலத்தில், பாதி அளவுக்கு மறக்கப்பட்ட, கிட்டத்தட்ட புதிரான புராணம் போலான சில குடும்பங்களின் முன்னோர்கள் அல்லது வேத கால ரிஷிகளின் முன்னோர்கள் எல்லாம் ஒருவகை. இன்னொரு வகையான முன்னோர் எல்லாம் மிக சமீபத்தில் இறந்தவர்கள்; ஒவ்வொரு குடும்பத்திலும் தனிப்பட்ட முறையில் நினைக்கப்பட்டு மதிக்கப்படும்படியான முன்னோர்கள்.
தொல் பழங்கால முன்னோர்கள் எல்லாம் கடவுள்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இறந்தவர்களின் உலகமான யமலோகத்துக்கு அவர்கள் சென்றிருப்பார்கள். அங்கிருக்கும் தேவர்களுடன் வசிப்பார்கள் ( ரிக்வேதம் VII 76.4 – தேவானாம் சதாமாதா; X.16.1 தேவானாம் வசனிஹ்).
கொள்ளுத் தாத்தாக்கள் சொர்க்கத்தில் வசிப்பதாகவும் தாத்தாக்கள் விண்ணில் வசிப்பதாகவும் அப்பாக்கள் பூமியில் வசிப்பதாகவும் வேதங்களில் சொல்லப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். முதலாமவர்களுடன் ஆதித்யர்கள் இருக்கிறார்கள். இரண்டாமவர்களுடன் ருத்ரர்கள் இருக்கிறார்கள். மூன்றாமவர்களுடன் வசுக்கள் வசிக்கிறார்கள்.
யமனுமே கூட பித்ருக்களில் ஒருவர் போல, இறந்தவர்களில் முதன் முதலில் இறந்தவர் அவர் என்பதுபோல் அல்லது முன்னோர்களின் பாதையை அமைத்தவர் என்பதுபோல் மாலையில் சூரியன் மறையும்போது மேற்கு நோக்கிக் கைகளைக் கூப்பியபடி வேண்டிக்கொள்வார்கள். இந்த இடத்திலும் யமன் ஒரு தேவர் என்ற அந்தஸ்திலிருந்து கீழிறங்கியிருக்கமாட்டார். அவரே முன்னோர்களின் அதிபதி. ஆனால் பித்ருக்களில் ஒருவர் அல்ல.
இந்த உலகில் மனிதர்கள் அனுபவிக்கும் பல நன்மைகளுக்கு பித்ருக்களே காரணம் என்று நம்பப்படுகிறது. அவர்களே முதலில் அதைப் பெற்றவர்களாகவும் அனுபவித்தவர்களாகவும் போற்றப்படுகிறார்கள். அவர்களே முதல் யாகங்களைச் செய்து அதிலிருந்து கிடைத்த பலன்களை அனுபவித்தவர்கள். இயற்கையின் மகத்தான செயல்களான சூரிய உதயம், பகலின் வெளிச்சம், இரவின் இருட்டு எல்லாமே கூட பித்ருக்களினால் நடப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
‘இரவின் (இருட்டின்) தொழுவத்தைத் தகர்த்து வெளிச்சத்தின் (பகலின்) பசுக்களை வெளியே கொண்டுவந்தவர்கள்’ என்று பித்ருக்களை மனு X.68.11 குறிப்பிடுகிறது. அவெஸ்தா நூலில் இந்த விஷயங்களையெல்லாம் ஃப்ரவாஷிஸின் உதவியுடன் அஹூர மஸ்தா செய்வதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
பித்ருக்கள் ‘இரவுகளை நட்சத்திரங்களால் அலங்கரித்தவர்கள்’ என்றும் பின்னாளைய படைப்புகளில் ‘வானில் சுடர் விடும் நட்சத்திரங்கள் எல்லாம் விண்ணுலகம் சென்று சேர்ந்த நல்லவர்களின் ஒளி’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படியான எண்ணங்கள் பழங்கால கிரேக்க, ரோமானியர்களிடமும் இருந்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. வேதங்களில் பித்ருக்கள் சத்யசந்தர்கள், சுவிதாத்ரா (ஞானவான்கள்), ரிதாவத் (நேர்மையானவர்கள்), கவிகள், பதிக்ரித் (தலைவர்கள்) என்றெல்லாம் போற்றப்படுகிறார்கள். ‘சோமய’ என்ற அடைமொழியால் அவர்கள் பல முறை குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். சோம ரசம் என்பது வேத கால ரிஷிகள் அருந்திய மது பானம். அது அழிவின்மையை நல்கக்கூடியதாக நம்பப்பட்டிருக்கிறது.
‘நாங்கள் சோம ரசம் பருகினோம். சிரஞ்சீவிகளானோம். ஒளிமய உலகுக்குச் சென்றோம். அங்கு தெய்வங்களை தரிசித்தோம்’ என்று ரிக்வேதம் VIII 48.12 கூறுகிறது.
சோமரசம் பின்னாளில் வழக்கொழிந்துவிட்டது. அல்லது பஞ்சாபுக்குச் சென்ற பின்னர் ஆரியர்களால் அதைப் பெறமுடியாமல் போய்விட்டது.
பிருகு குலத்தினர், ஆங்கிரஸர்கள், அதர்வணர்கள் எல்லாருக்கும் பித்ருக்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தர்ப்பைப் புல் பாயில் எழுந்தருளச் சொல்லி ஆகுதிகள் படைக்கப்பட்டன. பித்ரு யக்ஞ – பித்ருக்களுக்கான யாகம் பற்றி ரிக்வேதத்தில் பல இடங்களில் குறிப்பிடவும் பட்டிருக்கிறது.
ரிக்வேதம் X.15.
சோம ரசத்தை விரும்பும் கீழ், மேல், இடை உலக பித்ருக்கள் எழுந்தருளட்டும். நீதியும் நியாயமும் மிகுந்த அவர்கள் மீண்டும் உயிர் பெற்று வந்து இந்த யாகத்தில் நம்மைக் காப்பாற்றட்டும்.
இன்று நமது வந்தனம் பித்ருக்களுக்குச் சென்று சேரட்டும். வெகு முன்போ பின்போ விடைபெற்றுச் சென்ற அவர்களுக்கு அது சென்று சேரட்டும். அவர்கள் விண்ணில் வாழ்கிறார்களானாலும் மண்ணுலகுக்கு மேலே வாழ்கிறார்களானாலும் ஆசி பெற்றவர்களுடன் வசிக்கிறார்களானாலும் அவர்களுக்கு எம் வணக்கங்கள்.
யாம் பித்ருக்களை எழுந்தருளச் சொல்கிறோம். இங்கு அவர்கள் சீக்கிரம் வந்து சேரட்டும். அவர்களுக்கென்று போடப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமரட்டும். பசியாற உண்ணட்டும்.
பித்ருக்களே இந்த தர்ப்பாசனத்தில் அமர்ந்து எங்களுக்கு அருள் புரியுங்கள். உங்களுக்காகப் படைத்திருப்பவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள். அனைத்துக்கும் மேலான உங்கள் பாதுகாப்பை எங்களுக்கு நல்குங்கள். ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் தவறாமல் வழங்கிக் காத்தருளுங்கள்.
சோம ரசம் விரும்பும் பித்ருக்களே… எங்கள் பிரார்த்தனையைக் கேட்டு இந்த தர்ப்பாசனத்தில் வந்து அமருங்கள். நாங்கள் சொல்லும் புகழுரைகளைக் கேளுங்கள்; எங்களை ஆசீர்வதியுங்கள்; எங்களைக் காத்தருளுங்கள்.
மண்டியிட்டு என் வலதுபக்கம் அமர்ந்து யாக ஆஹுதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் பித்ருக்களே. ஏதேனும் குற்றம் குறை செய்திருந்தால் எங்களைத் தண்டிக்கவேண்டாம். எளிய மனிதர்கள்தானே நாங்கள்.
செந்நிற உதயங்களின் மடியில் நீங்கள் அமரும்போது எமக்கு அழிவற்ற செல்வத்தை வாரி வழங்குங்கள்… ஓ பித்ருக்களே இந்த யாகம் செய்பவரின் குழந்தைகளுக்கு உங்களுடைய அளவற்ற செல்வத்தை வழங்குங்கள்… எமக்கு வீரத்தையும் துடிப்பையும் வழங்குங்கள்.
பித்ருக்களின் நண்பரான யம தேவரே… இங்கு அளிக்கப்படுவதை விரும்பிய அளவுக்குப் புசியுங்கள். சோம ரசம் விரும்பும் பித்ருக்களுடன் இருக்கும் வசுக்களே தாகம் தீரப் பருகுங்கள்.
ஓ அக்னி தேவரே… ஞானவான்களும் சத்யசந்தர்களுமான பித்ருக்களுடன் வந்து உங்களுக்கான ஆசனத்தில் அமருங்கள். பித்ருக்கள் சோம ரச தாகம் கொண்டவர்கள்; இறைவனைக் காண ஏங்கியவர்கள்; யாகங்கள் செய்யத் தெரிந்தவர்கள்; மந்திர ஸ்லோகங்களில் சிறந்தவர்கள்.
ஓ அக்னி தேவரே… யாக அக்னி முன் அமர விரும்பக்கூடியவர்களும் தெய்வங்களைப் போற்றிப் பாடக்கூடியவர்களும் சத்யசந்தர்களும் யாகப் படையல்களை விரும்பிப் புசிக்கவும் பருகவும் செய்யக்கூடியவர்களும் இந்திரன் மற்றும் பிற தெய்வங்களுடன் இருப்பவர்களுமான பித்ருக்களுடன் வந்து எழுந்தருளுங்கள்.
பித்ருக்களே… அக்னியால் புசிக்கப்பட்டவர்களே உங்களுடைய இதமாசனத்தில் வந்து அமருங்கள். அன்பான வழிகாட்டிகளே…. உங்களுக்கென்று படைத்திருப்பவற்றைப் புசியுங்கள்… எங்களுக்குச் செல்வமும் வலிமையான வாரிசுகளையும் நல்குங்கள்.
ஓ அக்னி தேவரே… ஓ ஜாதவேதரே… எங்களுடைய பிரார்த்தனையைக் கேட்டு யாக ஆஹுதிகளை பித்ருக்களுக்குக் கொண்டு சென்று சேர்த்தவரே… நீங்களும் புசியுங்கள்.
இங்கு எழுந்தருளியிருக்கும் பித்ருக்களும் வந்திராத பித்ருக்களும் எங்களுக்குத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் யாரெல்லாம் என்று ஜாதவேதரே உமக்குத் தெரியும். யாகத்தில் அர்ப்பண உணர்வுடன் நாங்கள் படைத்தவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கும் கொண்டு சேருங்கள்.
அக்னியால் பஸ்மமாக்கப்பட்ட பித்ருக்களும் பஸ்மமாக்கப்படாத பித்ருக்களும் சொர்க்கத்தில் களிகூர்ந்திருக்கட்டும். ஓ ஸ்வராத் (தன்னைத் தானே ஆண்டுகொள்பவரே)… பித்ருக்களின் உடல் அவர்கள் விரும்பும் ஜென்மாவைப் பெற்றுக்கொள்ள அருள் புரிவாயாக.
0
முது முன்னோர்களுக்கான வழிபாட்டிலிருந்து மாறுபட்டதாக மறைந்த தந்தை, தாத்தா, கொள்ளுத்தாத்தா ஆகியோர் மீதான பக்தி, வழிபாடு என்பது அவர்களுடைய வாரிசுகளுக்கு இருந்திருக்கின்றன. இந்தத் தனி நபர் உணர்வுகள், மதிப்பு மரியாதைகள் எல்லாம் வட்டாரங்கள் சார்ந்ததாகக் குறுகிய வட்டத்துக்குள்ளானதாக இருந்திருக்கின்றன.
பிராமணங்கள், சிராத்த விதிகள், கிருஹ்ய விதிகள், சாமக்ரியை சூத்திரங்கள், நீதி சாஸ்திரங்கள் மற்றும் பின்னாளைய வழிகாட்டிக் கையேடுகள் எல்லாம் உயிர் நீத்தார் கடன் தொடர்பான பல்வேறு சடங்கு சம்ஸ்காரங்களாகச் சொல்லியிருப்பவை பற்றி உங்களுக்குப் புரியவைப்பது மிக மிகக் கடினம். இந்தச் சடங்கு விதிகள் எல்லாம் மிக மிக நுட்பமானவை. பருவங்கள், ஆண்டுகள், படையல்கள், சிராத்த கர்மாவுக்கான பொருட்கள், பலவிதமான கலசங்கள், எந்தெந்த முறையில் அமர்ந்துகொண்டு என்னென்ன மந்திரங்கள் சொல்லவேண்டும் என்ற விதிமுறைகள், பிண்ட கலசங்களை வைக்கவேண்டிய முறை இவற்றையெல்லாம் நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. நமக்கு ஒருவகையில் அவை அவசியமும் இல்லை.
இந்த உயிர் நீத்தார் சடங்குகளை இத்தனை விரிவாக வடிவமைத்த ஆதி வேத காலத்தினர் என்ன சிந்தனைகள், நோக்கங்களினால் இவற்றை வடிவமைத்தனர் என்பதுதான் நமக்கு மிகவும் முக்கியம். ஐரோப்பியர்கள் கூட இந்தச் சடங்கு சம்ஸ்காரங்கள் பற்றி விரிவாக நிறைய எழுதியிருக்கிறார்கள். இந்துக்களின் மதச் சடங்குகள் என்ற அற்புதமான நூலை கோல்புரூக் எழுதியிருக்கிறார். அது 1798-ல் ஆசிய ஆய்வுகள், கல்கத்தா தொகுதி ஐந்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் புறச் சடங்கு சம்பிரதாயங்கள் என்றிலிருந்து ஆரம்பமாகின? இதைச் செய்தால் மன நிறைவு கிடைக்கும் என்ற ஏக்கம் எப்படி உருவானது? இவற்றுக்கு ஏற்க முடியும்படியான பதில் வேதங்கள் அல்லாமல் வேறு எங்கு கிடைக்கும்?
(தொடரும்)

