Skip to content
Home » மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #32 – வேதமும் வேதாந்தமும் – 3

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #32 – வேதமும் வேதாந்தமும் – 3

இந்திய சிராத்தங்களும்
மத சிந்தனைகளின் ஆதி காலமும்

சிராத்தங்கள் இன்றும் இந்தியா முழுவதும் நடப்பது நமக்குத் தெரியும். ஆனால் பழங்கால சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டவற்றிலிருந்து  நவீன காலத்திய சடங்கு சம்பிரதாயங்கள் வெகுவாக மாறிவிட்டிருப்பதும் நமக்குத் தெரியும். சமஸ்கிருதம் படித்திருந்தாலும் பழங்கால சூத்திரங்களைப் படித்திருந்தாலும்தான் பழங்காலச் சடங்குகளில் எஞ்சியிருக்கும் அம்சங்களை நாம் புரிந்துகொள்ளமுடியும். பிரேத ஆத்மாக்கள் சாப்பிடும்படியான பிண்டங்கள் எப்படிச் செய்யப்படுகின்றன என்பது  பற்றி மிகவும் விரிவாக நமக்குச் சொல்கிறார்கள். எவ்வளவு தர்ப்பைகள் எப்படியெல்லாம் பயன்படுத்தவேண்டும்; எந்த திசையில் எப்படியெல்லாம் பிண்டங்களை உருட்டி வைக்கவேண்டும்; எவையெல்லாம் அதனுடன் சேர்க்கவேண்டும் என்பதையெல்லாம் போதும் போதும் என்று  சொல்லும் அளவுக்கு விவரித்துச் சொல்வார்கள். ஆனால் ஓர் ஆய்வாளர் அக்கறையுடன் தெரிந்துகொள்ள விரும்பும் விஷயம் கண் மறைவாக கை நழுவிவிடும். மிகப் பெரிய குப்பை மேட்டுக்குள் இருந்து நமக்குத் தேவையானதை நாம்தான் தேடி எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கும்.

சில விஷயங்களை விளக்கிச் சொல்கிறேன். கீழ்க்காணும் விஷயங்களை வேறுபடுத்திப் புரிந்துகொண்டாகவேண்டும்.

  1.   ஐந்து மஹா யக்ஞங்களில் ஒன்றான அன்றாட பித்ரு யக்ஞம்.
  2.   அமாவாசை மற்றும் பெளர்ணமிகளில் செய்யப்படும் மாதாந்தர பிண்ட பித்ரு யக்ஞம்.
  3.   கிரஹஸ்தரின் இறப்பின் போது செய்யப்படும் இறுதிச் சடங்குகள்.
  4.   சிராத்தம் எனப்படும் தவச விருந்து. அன்று இறந்தவரின் நினைவாக விருந்துணவு, தானங்கள் எல்லாம் தகுதியுள்ளவர்களுக்குத் தரப்படும்.

சிராத்தமென்ற பெயர் உண்மையில் கடைசி வகைக்கு மட்டுமே பொருந்தும். என்றாலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது வகைகளுக்கும் இந்தப் பெயர் சில நேரங்களில் வழங்கப்படும். ஏனென்றால் அவற்றிலும் சிராத்த விருந்து முக்கியமானதாக இருக்கும்.

அன்றாட பித்ரு யக்ஞம் அல்லது பித்ரு வழிபாடு ஐந்து மஹா யக்ஞங்களில் ஒன்று. திருமணமானவர் தினமும் அதைச் செய்தாகவேண்டும். கிருஹ்ய சூத்ரத்தில் தேவ யக்ஞம் (தேவர்களுக்கானது), பூத யக்ஞம் (விலங்குகளுக்கானது), பித்ரு யக்ஞம் (பித்ருக்களுக்கானது), பிரம்ம யக்ஞம் (பிராமணர்களுக்கு அதாவது வேதக் கல்விக்கானது), மனுஷ்ய யக்ஞம் (விருந்தோம்பல் – சக மனிதர்களுக்கானது) என ஐந்து யக்ஞங்கள்  வரையறுக்கப்பட்டுள்ளன.

மனு (III.70).  திருமணமானவருக்கு ஐந்து முக்கிய கடமைகள் இருப்பதாகச் சொல்கிறார்.

  1.   பிரம்ம யக்ஞம் – வேதங்களைப் படித்தல், கற்றுத் தருதல்.
  2.   பித்ரு யக்ஞம் – பித்ருக்களுக்கு பிண்டமும் நீரும் வழங்குதல்.
  3.   தேவ யக்ஞம் – கடவுள்களுக்கு பூஜை, படையல்கள் வைத்தல்
  4.   பூத யக்ஞம் – விலங்குகளுக்கு உணவு கொடுத்தல்
  5.   மனுஷ்ய யக்ஞம் – விருந்தினரை வரவேற்று உபசரித்தல்.

அன்றாட பித்ரு யக்ஞம் மிகவும் எளிமையானது. வலது  தோளில் பூணூலை அணிந்துகொண்டு பித்ரு ஸ்வதா என்று சொல்லியபடி தென் திசை நோக்கிப் படையலிடவேண்டும்.

இந்தச் சடங்கைச் செய்து முடித்த பின் உணவு உண்ணவேண்டும். உணவு தயாரிக்கும்போது ஒருவர் தன் கையால் அதைத் தொடுவதற்கு முன்பாக இறைவனுக்கு அதாவது அக்னி, சோம தேவர், தன்வந்த்ரி, ப்ரஜாபதி, தயாவா ப்ருத்வி, சொர்க்கம், பூமி, ஸ்விஸ்தாக்ரித், யாக அக்னி என  அனைவருக்கும் படைக்கவேண்டும்.

நான்கு திசைகளிலும் இருக்கும் அனைத்துக் கடவுள்களையும் திருப்திப்படுத்திய பின்னர் ஒரு கிரஹஸ்தர் ஆகாசத்தில் சில படையல்களை எறியவேண்டும். அவை விலங்குகளுக்கானவை. சில நேரங்களில் கண்ணுக்குத் தெரியாத ஆத்மாக்கள், பூத பிசாசுகள் ஆகியவற்றுக்கும் தரப்படும். அதன் பின் பித்ருக்களை மனதால் தியானித்து சிலவற்றை அர்ப்பணிக்கவேண்டும். இவற்றைச் செய்து முடித்தபின் அதிதி – விருந்தினருக்கு – அந்நியர்களுக்குக் கொடுத்த பின்னரே சாப்பிட ஆரம்பிக்கவேண்டும்.

இவற்றையெல்லாம் முடித்த பின்னர் வேதங்களில் தான் படித்தவற்றை பாராயணம் செய்யவேண்டும். அப்போதுதான் அவர் அவரைச் சுற்றியிருக்கும் பிரபஞ்ச சக்திகளுடன் ஒத்திசைவு பெறுவார். இந்த ஐந்து மஹா யக்ஞங்களைச் செய்து வருபவர், சுய நலம் மிகுந்த, அறியாமையில் உழலும் வாழ்க்கையினால் வரும் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறுவார்.

பித்ரு யக்ஞம் எனப்படுவது பிராமணம், கிருஹ்ய சூத்ரம், சாமக்கிரியை சூத்ரம், மற்றும் நீதி சாஸ்திர சம்ஹிதைகளிலும் பஞ்ச மஹா யங்ஞங்களில் ஒன்றாக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘மரபான பிராமணர்கள் இன்றும் இந்த பஞ்ச யக்ஞங்களை விடாமல் செய்துவருகிறார்கள். ஆனால், கடவுள்களுக்கும் பித்ருக்களுக்குமான படையல்கள் மட்டுமே முறையாகப் பின்பற்றப்படுகின்றன. வேத பாராயணத்துக்குப் பதிலாக காயத்ரி மந்திரம் ஜெபிக்கப்படுகிறது. விருந்தோம்பல், விலங்குகளுக்கு உணவிடுதல் எல்லாம் அத்தனை கறாராகப் பின்பற்றப்படுவதில்லை’ என்று ராஜேந்திர லால் மித்ரா குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த அன்றாட பித்ரு யக்ஞத்திலிருந்து பிண்ட பித்ரு யக்ஞம் மாறுபட்டது. அது அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் செய்யப்படுகிறது. இதன் பின்னால் இருக்கும் நோக்கம் தெளிவாகப் புரிந்துகொள்ளும்படியாக இருக்கிறது. வானில் இருக்கும் இயற்கை சக்தி (நிலா) தேய்ந்தும் வளர்ந்தும் வரும் சுழற்சியானது இந்த உலகையும் இப்படியான நிகழ்வுகளையும் ஒரு விண்ணுலக சக்தி கட்டுப்படுத்துகிறது என்ற எண்ணத்தை ஆதி மனித மனங்களில் உருவாக்கியிருக்கிறது. அன்றாடத் தேவைகள் சார்ந்த செயல்பாடுகளில் இருந்து அது மனித சிந்தனையை மேலான விஷயங்கள் சார்ந்து சிந்திக்கத் தூண்டியிருக்கிறது.

இந்த விண்ணுலக சக்தியைப் போற்றிப் புகழ்ந்தும், நன்றி தெரிவித்தும் படையல்கள் இட்டும் அதை நெருங்கி அதன் அருளைப் பெறும் ஆசையை உருவாக்கியிருக்கிறது. இந்த உலகிலிருந்து தேய்ந்து விடைபெற்றுச் சென்றுவிட்ட பித்ருக்கள் மீதான அக்கறையாக, தேய்பிறை காலச் சடங்குகள் மாறியதென்பது மிகவும் இயல்பான விஷயம்தான். அவர்களுடைய பிரகாசமான முகங்களும் இப்போது பார்க்க முடியாததாகிவிட்டனவே. எனவே புதிதாக நிலா உதிக்கும்போது அதாவது வளர்பிறை காலத் தொடக்கத்தில் பிராமணங்கள் மற்றும் சிராத்த சூத்திரங்களில் ஒரு விசேஷப் படையல் பித்ருக்களுக்குத் தரவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தக்ஷிண அக்னி தென் திசை பார்த்து அக்னி வளர்த்து நீரும் பிண்டமும் இறந்த அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா போன்ற பித்ருக்களுக்கு சமர்ப்பிக்கவேண்டும். இந்தச் சடங்கைச் செய்பவரின் மனைவி புத்ர பாக்கியம் வேண்டிப் பிரார்த்தனை செய்து இந்தப் பிண்டத்தில் ஒன்றைச் சாப்பிடவேண்டும்.

பிற யாகங்கள், பூஜைகளின் போதும் இப்படியான பித்ரு அர்ப்பணங்கள் செய்யப்படும். இவற்றில் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் செய்யப்படுவது விசேஷமானது.

இந்த பித்ரு படையல்கள், சடங்குகள் எல்லாம் ஒரே நோக்கமும் ஒரே பெயரையுமே கொண்டிருக்கின்றன என்றாலும் அவற்றின் தன்மைகள் மாறுபடும். இவையெல்லாவற்றையும் நாம் ஒன்றாகவே கருதிவிட்டால் அவை நமக்குக் கற்றுத் தரமுடிந்த பாடங்களைப் புரிந்துகொள்ளமுடியாமல் போய்விடும். இந்த இரண்டு பித்ரு யக்ஞங்களில் முதலாவது குடும்பத் தலைவரால் அதாவது எளிய சாதாரண  மனிதரால் செய்யப்படும். இரண்டாவது பிண்ட பித்ரு யக்ஞமானது முறையான புரோகிதர் அல்லது பல புரோகிதர்களால் செய்துவைக்கப்படும். தன் சார்பில் இந்தச் சடங்கைச் செய்துவைக்க இவர்களைத் தேர்வு செய்யும் உரிமை அந்தப் பிண்ட பலி கொடுப்பவரிடமே இருக்கும்.

ஒவ்வொரு வேத சாஹாவைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தச் சடங்குகள் வேறுபடும்.

மூன்றாவது வகை யக்ஞங்கள் ஒருவகையில் தனி நபர் சடங்குபோலவே இருக்கும். ஆனால், கொண்டாடப்படும் காலங்கள் சார்ந்து அவற்றிலிருந்து மாறுபட்டது. பித்ரு சடங்குகளில் இருந்து இறுதிச் சடங்குகள் வேறுபட்டவைதானே. அன்றாட மற்றும் மாதாந்தர பித்ரு சடங்குகளுக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்ததாக இந்த இறுதிச் சடங்குகள் இருந்திருக்கும். இறந்தவர்களைப் பித்ருக்களாக உயர்நிலைப்படுத்தும் சடங்குகள் இவை.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் இறக்கும் ஒருவரைப் பித்ருக்கள் என்ற தொகுப்புடன் சேர்க்க வேண்டுமென்றால் அந்தப் பித்ரு என்ற கருத்தாக்கம் யாரோ ஒருவர் இறந்தபின் பித்ருவாக உயர்த்தப்படுவதற்கு முன்பே உருவாகியிருக்கவும் வேண்டும். அந்தவகையில் பித்ருக்களுக்கான சடங்குகளே முதலில் தோன்றியிருக்கும் என்றே கருதுகிறேன்.

இறந்தவருக்குச் செய்யப்படும் இந்தியச் சடங்குகள் பற்றி நான் இங்கு விரிவாகப் பேசப்போவதில்லை. வேதங்களில் யாகங்கள் மற்றும் உயிர் நீத்தார் சடங்குகள் என்று தனியாக ஒரு கட்டுரை 30 வருடங்களுக்கு முன் எழுதியிருக்கிறேன். கிரேக்கர்கள், ரோமானியர்கள், ஸ்லோவேனியர்கள், ட்யூடானிக்குகள் ஆகியோரின் உயிர் நீத்தார் சடங்குகளும் வேத கால இந்தியரின் சடங்குகளும் ஒரே மாதிரியானவையே. இவை அனைத்துக்கும் இடையிலான ஒற்றுமைகள் மிகவும் ஆச்சரியமூட்டுபவையாக இருக்கின்றன.

இந்தியாவில் வேத காலத்தினர் இறந்தவர்களை எரிக்கவும் செய்திருக்கிறார்கள். புதைக்கவும் செய்திருக்கிறார்கள். புனிதச் சடங்காக, நன்கு வரையறுக்கப்பட்ட சடங்குகளுடன் குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் இதைச் செய்திருக்கிறார்கள். இறந்தவர்களின் உடம்பை எரித்து அஸ்தியைப் புதைத்த பின்னர் அந்த ஆத்மாக்களின் நிலை (அந்தஸ்து) என்ன என்பது பற்றி பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. ஆனால் பூமியில் வாழ்ந்ததிலிருந்து அதிகம் மாறுபடாத ஒரு வாழ்க்கையை வேறு உலகில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் வாழும் என்பதில் அனைவருக்கும் ஒரே கருத்தே இருந்திருக்கிறது.

வாரிசுகளுக்கு இறந்தவர்கள் வழங்க முடிந்த ஆசிகள் தொடர்பாகவும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே இறந்தவர்களின் நற் கருணையையும் ஆசிகளையும் பெறுவதற்காகச் சடங்கு சம்பிரதாயங்கள், படையல்கள் செய்ய வேண்டும் என்பது மனிதர்களின் இயல்பான நம்பிக்கையாக ஆகிவிட்டிருக்கிறது. அது காலப்போக்கில் மரபாகவும், தொழில்நுட்பங்கள் நிறைந்ததாகவும் சடங்காகவும் ஆகிவிட்டிருக்கின்றன.

இறந்தவரின் உடல் எரிக்கப்படும் நாளில் உறவினர்கள் குளித்துவிட்டு, கையைக் குவித்து இறந்தவர் மற்றும் குடும்பத்தினரின் பெயரை உச்சரித்து, சிறிதளவு நீரை இறந்தவர் மீது தெளிப்பார்கள். அந்திப் பொழுதில் எரியூட்டிய பின் வீடு திரும்புவார்கள். அன்று இரவு வீட்டில் எதுவும் சமைக்க மாட்டார்கள். அடுத்த பத்து நாட்கள் பல்வேறு விதிமுறைகளுக்கு ஏற்ப பல சடங்கு சம்பிரதாயங்கள் செய்வார்கள். இவை துக்க நாட்கள். இவை தீட்டு நாட்கள் என்று பின்னாளில் அழைக்கப்பட்டன. சமூக நடவடிக்கைகள், புற உலகச் செயல்பாடுகளிலிருந்து தொழில்கள், கொண்டாட்டங்களிலிருந்து துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் இறந்தவரின் உறவினர்கள் ஒதுங்கிக்கொள்வார்கள்.

தேய்பிறை நாளில் 11,13,15 ஆகிய நாட்களில் எரித்த இடத்திலிருந்து சாம்பலைச் சேகரித்துக் கொள்வார்கள். சுடுகாட்டிலிருந்து வீட்டுக்கு வந்ததும் நன்கு குளிப்பார்கள். அதன் பின் இறந்தவர் நினைவாக சிராத்தச் சடங்குகள் செய்வார்கள்.

சிராத்தம் என்ற இந்த வார்த்தை சுவாரசியமான அர்த்தங்களைக் கொண்டது. ஆனால் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். நமக்குத் தெரிந்தவரையில் ரிக் வேத ஸ்லோகங்களில் மட்டுமல்ல; பழங்கால பிராமணங்களிலும் கூட இந்தப் பெயர் இல்லை. எனவே இது வெகு பிந்தைய காலத்துப் பெயராகவே இருக்கும். ஆபஸ்தம்ப தர்ம சூத்திரங்களில் சிராத்தங்கள் என்பதன் நவீன வேர்களைப் பார்க்க முடிகிறது. கோபில கிருஹ்ய சூத்திரங்களில் ஸ்ராத்தம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் அவை ஸ்ராத்த கல்ப என்ற தனித் தொகுப்பாக இருக்கின்றன.

’முன்னொரு காலத்தில் மனிதர்களும் தெய்வங்களும் இந்த உலகில் வசித்தனர். அதன் பின் தெய்வங்கள் தாம் செய்த யாகங்களின் பலனாக விண்ணுலகுக்குச் சென்றனர். மனிதர்கள் இங்கே தங்கிவிட்டனர். தெய்வங்கள் செய்ததைப் போலவே யாகங்களை மனிதர்களும் செய்தால் மரணத்துக்குப் பின் தெய்வங்களுடனும் பிராமணர்களுடனும் சொர்க்கத்துக்குச் செல்வார்கள். பூமியில் தங்கிவிட்டிருக்கும் மனிதர்களைப் பார்த்த மனு, சிராத்தம் என்ற சடங்கை அவர்களுக்காக வடிவமைத்தார்’.

ஸ்ராத்தம் என்பதற்குப் பல அர்த்தங்கள். மனு பெரும்பாலும் அதைப் பித்ரு யக்ஞம் என்பதற்கு இணையான அர்த்தத்தில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் தகுதியுள்ளவர்களுக்கு, குறிப்பாக பிராமணர்களுக்கு, சிரத்தையுடன் நம்பிக்கையுடன் தரப்படும் தானம் என்பதுதான். இந்த தானங்களே சிராத்தம் என்று முதலில் அழைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைக் கொடுக்கும் அந்தச் செயலுக்கும் சிராத்தம் என்ற பெயரே இருந்திருக்கிறது. பித்ருக்களுக்காக பிராமணர்களுக்குத் தரப்படும் தானமே சிராத்தம் என்று ஆஸ்வலாயண கிருஹ்ய சூத்திரத்தில் (IV.7) நாராயணர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒருவர் இறக்கும்போது செய்யும் சடங்குகளில் அல்லது எப்போதெல்லாம் மகிழ்ச்சியான காரியம் அல்லது சோகமான காரியங்கள் நடக்கும்போது இறந்தாரின் நினைவுகள் தூண்டப்பட்டு சடங்குகள் செய்யப்படுகின்றனவோ அப்போதெல்லாம் இந்த தானங்கள் மிகவும் அதிகமாகவும் இயல்பாகவும் தரப்பட்டிருக்கின்றன.  அப்படியாக இறந்தவர்களின் நினைவாகச் செய்யப்படும் புனிதச் சடங்குகள் அனைத்துக்குமே சிராத்தம் என்ற பெயர் சூட்டப்பட்டுவிட்டது.

இறப்புச் சடங்குகளில் மட்டுமல்ல; மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடக்கும்போதும் குடும்பத்தின் சார்பாக தான தர்மங்கள் செய்யப்படும்போது இறந்தவர்களின் பெயரில் செய்யப்படும்போதும் அதே பெயரில் அழைக்கப்படுகிறது.

எனவே சிராத்தம் என்றால் பித்ருக்களுக்கு நீரும் பிண்டமும் தரும் சடங்கு மட்டுமே என்று நினைக்கக்கூடாது. சிராத்தச் சடங்குகளில் பித்ருக்களுக்குப் படைப்பதும் உண்டு. ஆனால் பித்ருக்கள் நினைவாக தான தர்மங்கள் மிக அதிக அளவில் தரப்படும். அதுவே பிரதானமானது.

மத்திய கால கட்டத்தில் சர்ச்சுக்குத் தரப்பட்ட காணிக்கை போன்றது என்று இது பின்னாளில் விமர்சனத்துக்குள்ளானது. ஆரம்ப காலத்தில் இந்த சிராத்தத்தின் நோக்கம் அற்புதமானதாகவே இருந்திருக்கிறது. இந்த உலகிலிருந்து  நாம் எதையும் கொண்டு செல்லப்போவதில்லை. இந்த உலகில் இருக்கும்வரை முடிந்த அளவுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணமானது ஒருவர் இறக்கும்போது அனைவர் மனதிலும் மிகவும் அழுத்தமாகத் தோன்றும். அதன் விளைவாக இறப்புச் சடங்குகளில் தான தர்ம காரியங்கள் மிக அதிகமாகச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

தானப் பொருட்களை முன்பு அக்னியில் இட்டு அதை தெய்வங்களுக்குக் கொண்டு சென்று கொடுக்கும்படி வேண்டிக் கொண்டிருந்தனர். பின்னாளில் அந்த அக்னியின் இடத்தை பிராமணர்கள் பெற்றனர். சிராத்தச் சடங்குகளில் பிராமணர்களே அக்னி சொரூபமாக அக்னியின் பிரதிநிதியாகக் கருதப்பட்டனர். பிராமணர்கள் என்பதை புரோகிதர்கள் என்று நாம் மொழிபெயர்த்தால் பின்னாளில் சிராத்தங்களுக்கு ஏன் இந்த அளவுக்கு எதிர்ப்பு கிளம்பியது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் பிராமணர்கள் என்றால் புரோகிதர்கள் என்று புரிந்துகொள்வது மிகவும் தவறு. பிராமணர்கள் என்பவர்கள் சமுதாய அளவிலும் அறிவுரீதியாகவும் உயர்க் குடிப் பிறப்பிலிருந்து உருவான வகுப்பினர். பழங்கால இந்திய சமூகத்தின் மிக முக்கியமான அம்சமாக அவர்கள் மதிக்கப்பட்டனர். அப்படி அவர்கள் இருந்ததில் எந்த சந்தேகமும் இல்லை.

பிராமணர்கள் பிறருக்காகவே வாழ்ந்தனர். வாழ்வின் ஆதாயம் மிகுந்த செயல்பாடுகள் பலவற்றிலிருந்தும் அவர்கள் விலகி நின்றனர். முதலில் சமூகக் கடமையாக இருந்த அவர்களுடைய செயல்பாடுகள் பின்னர் மதக் கடமையாகின. அதனால் அவர்களைப் போஷிப்பது சமூகத்தின் பொறுப்பானது. சிராத்த காலத்தில் தரப்படும் தானமானது நண்பர்களுக்கோ பகைவர்களுக்கோ குடும்பத்தினருடன் எந்தவகையில் தொடர்புடையவர்களுக்கோ தரவே கூடாது. முழுக்கவும் புதிய, தெரியாத நபர்களுக்கே தரவேண்டும் என்று மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆபஸ்தம்பர் சொல்கிறார்:  சிராத்தத்தின்போது தரப்படும் விருந்துணவை உறவினர், தெரிந்தவர்களுக்குத் தந்தால் அது பூத பிசாசுகளுக்குத் தரப்பட்டதுபோலாகிவிடும். அது பித்ருக்களையோ தெய்வங்களையே சென்று சேராது’.

ஆதாயங்களை எதிர்பார்த்து சிராத்த தானங்களைத் தருபவருக்கு ஸ்ராத்த மித்ரா என்ற கேலிப்பெயர் சூட்டப்படும்.

சிராத்தச் சடங்குகள் பின்னாளில் வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், அதன் ஆதி நோக்கம் அதி தூய்மையானது. நம்முடைய இப்போதைய ஆய்வு நோக்கில் அது மிகவும் முக்கியமானது. அறிவார்ந்த தரவாகவும் அது இருக்கிறது.

சிராத்தம் என்ற பெயர் முதன் முதலில் இடம்பெற்றிருக்கும் ஆஸ்வல்யானரின் கிருஹ்ய சூத்திரத்துக்குத் திரும்புவோம். இறந்தவர்களின் அஸ்தியானது ஒரு கலசத்தில் வைத்துப் புதைக்கப்பட்டபின் அவர்களுக்குச் செய்யப்படும் சடங்குகளே சிராத்தம். ஏகோதிஸ்தா என்றும் இது அழைக்கப்படுகிறது. அதாவது தனி நபர் மற்றும் தனிப்பட்ட விஷயம். ஒரே ஒரு நபருக்கு மட்டுமே செய்யப்படும். இரண்டு மூன்று முன்னோர்களுக்குச் சேர்த்தோ முன்னோர்கள் அனைவருக்குமோ செய்யப்படும் சடங்கு அல்ல. இறந்தவர்களை பித்ரு லோகத்துக்கு அனுப்பி பித்ரு நிலைக்கு உயர்த்துவதே இதன் நோக்கம்.

ஓர் ஆண்டு முழுவதும் சிராத்தச் சடங்குகளின் அங்கமாகத் தரப்படும் தானமே இந்த உயர்ந்த நிலைக்கு இறந்தவர்களை உயர்த்தும். இதுவே பொதுவான மூலாதாரமான விதிமுறை. உயிர் துறந்தவருக்கு முதலில் ஓராண்டுக்கு தினமும் இந்த சிராத்தம் செய்யப்படவேண்டும். அதன் பின் மாதாந்தர சிராத்தம் செய்யவேண்டும். அல்லது அதன் பின் எதுவும் செய்யவேண்டாம். அதாவது இறந்த நபருக்கு இனிமே தனியாக சிராத்தம் செய்யவேண்டாம். ஏனென்றால் அதன்பின் செய்யப்படும் பார்வன சிராத்தங்களின் பங்குகள் அவருக்குக் கிடைக்க ஆரம்பித்துவிடும்.

சாங்க்யாயனரும் இதையேதான் சொல்கிறார்: தனிப்பட்ட சிராத்தம் ஓராண்டுக்குச் செய்யவேண்டும். அதன் பின்னர் கொள்ளுத் தாத்தா பட்டியலில் இருந்து விடுவிக்கப்படுவார். அதாவது பித்ரு தாத்தா, பித்ரு கொள்ளுத்தாத்தா ஆகிவிடுவார். பித்ரு தந்தை பித்ரு தாத்தாவாகிவிடுவார். இறந்தவர் பித்ரு தந்தையாகி இருப்பார். மூன்று தலைமுறையைச் சேர்ந்த முக்கிய பித்ருக்களாக இவர்களே அதன் பின் இருப்பார்கள். இது சபிண்டிகரணம் எனப்படுகிறது. அதாவது இறந்தவர்களை பித்ரு – முன்னோர் ஸ்தானத்துக்கு உயர்த்துதல்.

இதிலும் பிற எல்லாவற்றையும்போல் பல விதி விலக்குகள் உண்டு. கோபில கிருஹ்ய சூத்திரத்தில் ஒரு வருட சிராத்தம் என்பது ஆறு மாதம் என்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சில நேரங்களில் திரிபக்ஷம் அதாவது மூன்று அமாவாசை, பெளர்ணமிகள். இறுதியாக எந்தவொரு நற்காரியமும் (விருத்தி) செய்யும்போது சபிண்டிகரணமும் செய்யப்படலாம்.

சபிண்டிக்குத் தேவைப்படும் சிராத்தங்கள் 16 என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது இறந்ததும் செய்வது, அதன் பின் மாதம் ஒன்று என்று 12 மாதங்களுக்குச் செய்வது, அதன்பின் ஓர் ஆண்டுக்கு இரண்டு வீதம், இறுதியாக சபிண்டிதானம். இதில் பல மாறுதல்களுக்கு அனுமதி உண்டு. ஓராண்டுக்குள்ளாகவே சபிண்டிதனம் செய்வதென்றால் 16 சிராத்தங்கள் அதற்குள்ளாகச் செய்துமுடிக்கப்பட்டாகவேண்டும்.

பிறப்பு, திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சியின் போது சிராத்தச் சடங்கு செய்யும்போது பயங்கரமான பிரேத அசுர முகங்கள் கொண்ட முன்னோர்களான இறந்த அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா ஆகியவர்களை எழுந்தருளச் சொல்லாமல் அதற்கு முந்தைய முன்னோர்கள் (பித்ரு நிலை அடைந்தவர்கள்) அதாவது நந்திமுக முன்னோர்கள் எழுந்தருளும்படி பிரார்த்தனை செய்வார்கள்.

நவீன காலத்தில் சிராத்தம் எப்படி இருக்கிறது என்பது பற்றி அருமையான கட்டுரை எழுதியிருக்கும் கோல்புரூக்குக்கு நாம் மிகுந்த நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்.

‘உயிர் நீத்தார் சடங்குகள் எல்லாம் இறந்தவரை எரித்த பின்னர்  இறந்தவரின் ஆன்மாவுக்கு மறு உடல் கொடுக்கவைப்பதற்காக இறைவனுக்கு தானங்கள் தரும் சடங்காகவே முதலில் ஆரம்பித்தன. இந்த உலகில் வாழ்ந்து இறந்தவரின் பிரேத – பூத அம்சத்தை சொர்க்கத்துக்குச் சென்று சேரவைத்து ஏற்கெனவே அங்கு வாழும் பித்ருக்களுடன் இணைந்து தெய்வாம்சம் கொண்டதாக ஆக்கவேண்டும் என்று இரண்டாம் கட்ட சிராத்தச் சடங்குகள் பரிமாணம் பெற்றன. இது நடக்கவேண்டுமென்றால் சிராத்தச் சடங்குகள் இறந்த நாள் தொடங்கி முறையாகச் செய்துவந்தாகவேண்டும். தொடர்ந்து வரும் 12 மாதங்களில் 12 சிராத்தங்கள் இறந்தவருக்கென்று தனியாகச் செய்தாகவேண்டும். மூன்றாம் அமாவாசை, ஆறாம் மாதம், 12-ம் மாதங்களிலும் தனியாகச் செய்யவேண்டும். சபிண்டிதானம் என்பது இறந்த ஓராண்டு கழித்து இறந்தவரின் நினைவாகச் செய்யவேண்டும். இந்த சபிண்டிகரண சிராத்தத்தில்  (அதுவே தனிநபருக்கான ஏகோதிஸ்த சிராத்தங்களின் கடைசி) நான்கு பிண்டங்கள் இறந்தவருக்கும் அவருடைய மூன்று தலைமுறை முன்னோர்களுக்குமாகத் தரப்படவேண்டும்’.

நான் முன்பு சொன்னதையே விவரித்திருக்கும் கோல்புரூக் இது தொடர்பாக வேறொன்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த 16 சிராத்தங்கள் மற்றும் இறுதியான சபிண்டிகரணம் எல்லாம் இறந்த இரண்டாம் அல்லது மூன்றாம் நாளில் இறந்தவருக்கு மட்டும் செய்துமுடிக்கப்பட்டுவிடும். அதன்பின் அவை மீண்டும் முறையான காலங்களில் இறந்தவருக்கென்று தனியாக அல்லாமல், பித்ருக்கள் அனைவருக்குமாகச் சேர்த்து மீண்டும் செய்யப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

‘நான்கு பிண்டங்களில் இறந்தவருக்கான பிண்டமானது மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுப் பிற மூன்றுடன் சேர்க்கப்படும். எஞ்சியிருப்பது இறந்தவருக்கு அர்ப்பணிக்கப்படும். மூன்று தலைமுறை முன்னோர்களுடன் இறந்தவரைச் சேர்க்கும் சடங்கு இப்படியாக நிறைவுறும்’.

இந்த சிராத்தச் சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டச் சிறிது காலத்துக்குள்ளாகவே நாடு முழுவதும் வெகு விரைவாகப் பரவிவிட்டிருப்பதாகத் தெரிகிறது. இறந்தவர்களின் நினைவாகச் செய்யப்படும் மாத சிராத்தம் மட்டுமல்ல; பித்ரு யக்ஞமாக மிகவும் கட்டாயமான சடங்காக துவிஜர்களான மூவர்ணங்களைச் சேர்ந்த அக்னிமத்கள் (கிரஹஸ்தர்கள்) மட்டுமல்லாமல் மந்திர ஸ்லோகங்கள் இல்லாமல் நான்காம் வர்ணத்தினரும் அதைச் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். அமாவாசை நாளன்று மட்டுமல்ல; வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன.

பிண்ட பித்ரு யக்ஞத்தையே கோபில கிருஹ்ய சூத்திரம் சிராத்தம் என்று சொல்கிறது. அதில் பிண்டங்கள் எதுவும் படைக்கப்படவில்லையென்றாலும் பிராமணர்களுக்கு உணவு படைப்பது கட்டாயம். இந்த சிராத்தம் பிற உண்மையான சிராத்தங்களில் இருந்து வேறுபட்டது. அன்வாஹர்யா எனப்படும் இது பார்வண சிராத்தம் என்று அழைக்கப்படுகிறது.

பல்வேறு உயிர் நீத்தார் சடங்குகளின் தன்மைகளைப் புரிந்துகொள்வதில் நமக்குச் சில சிரமங்கள் எழுவது இயற்கையே. இதை வடிவமைத்த பிராமணர்களுக்குமே அப்படி இருந்திருக்கிறதென்பது ஸ்ராத்த கல்ப நூலின் உரைகளில் இடம்பெற்றிருக்கும் நீண்ட விவாதங்களில் இருந்து தெரியவருகிறது. சந்திரகாந்த தர்க்க அலங்காரத்தில் ரகுநந்தன படைப்புக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வசை மொழிகளில் இருந்தும் தெரியவருகிறது. சிராத்தச் சடங்குகளில் எது பிரதானமானது எது துணை அங்கம் (இரண்டாம் பட்சமானது) என்ற கேள்விகள் எழுந்துள்ளன. பிண்டம் சமர்ப்பிப்பதே பிரதானம் என்று சில நேரங்களிலும் பிராமணர்களுக்கு உணவு படைப்பதே பிரதானம் என்று சில நேரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. சில நேரங்களில் சபிண்டிகரணம் போல் இரண்டுமே முக்கியம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் இறந்தவர்களென்றாலும் வெகு பழங்காலத்தில் இறந்தவர்களென்றாலும்   முன்னோர்களை நினைத்துப் பார்க்காமல் இந்தியாவில் ஒரு நாள் கூடக் கழிந்ததில்லை. பித்ருக்களுக்கு குறியீட்டுரீதியில் பிண்டம் படைத்தல் என்பதாகவோ தகுதியுள்ளவர்களுக்கு, குறிப்பாக பிராமணர்களுக்கு, சிராத்த தானம் தருவதாகவோ அந்த நினைவுகூரல்கள் இருந்திருக்கின்றன. மிக எளிய பால், பழங்கள் என்பதில் தொடங்கி மிக விலை உயர்ந்த தங்கம், வெள்ளி என இந்த சிராத்த கர்ம தானங்கள் தரப்பட்டிருக்கின்றன.

சிராத்தச் சடங்குகளைச் செய்துவைக்க அழைக்கப்படுபவர்களுக்குத் தரப்படும் விருந்தானது வெகு அமர்க்களமாக இருப்பதுண்டு.  இன்று மாமிசம் முழுமையாகத் தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த சிராத்த விதிகள் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டபோது பசு மாமிசம் கூட அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடும்.

கலாவு தாவத் கவாலம்போ மாம்சாதானம் ச சிராத்தே நிஷிதம்

கோபிலேன து மத்யமாஸ்தகாயம் வஸ்துகர்மானி ச கவாலம்போ

விஹிதா மாம்சகருஸ் சன்வாஸ்தக்ய சிராத்தே  

பித்ரு யக்ஞங்களுக்குப் பிந்தைய காலத்தில் என்றாலும் இந்த சிராத்தச் சடங்குகள் இந்திய வாழ்க்கையில் வெகு ஆரம்ப காலத்திலேயே தொடங்கிவிட்டது என்பதையே இவை எடுத்துக்காட்டுகின்றன. முன்னோர் வழிபாடு சார்ந்த இந்தச் சடங்குகளின் புற வடிவங்கள் மாறிவிட்ட நிலையிலும் அவற்றின் அடிப்படையான மூல அம்சம் மாறவே இல்லை. இன்றுகூட பழங்கால தேவர்களுக்கான இந்தச் சடங்களில் நம்பிக்கை இல்லாமல் பலரும் கேலி பேசும் நிலையிலும் அவற்றில் பங்கெடுக்க யாரும் தவறுவதும் இல்லை. முன்னோர் வழிபாடும் சிராத்த தானங்களும் பழைய புனிதத் தன்மையை இன்றும் இழக்காமலே இருக்கின்றன.

கிறிஸ்தவ சர்ச்களில் நடக்கும் திரு விருந்து வழிபாடு போன்றது. இந்தியர் பலரும் இந்த இறுதிச் சடங்கு மற்றும் முன்னோர் வழிபாடுகள் தொடர்பாக மிகவும் உள்ளொடுங்கிய குரலில், மிகுந்த மதிப்பும் மரியாதையுடனே பேசுகிறார்கள். நான் இது தொடர்பாக இன்னொரு படி மேலே சென்று சொல்வேன்: நம்முடைய மதத்தில் இப்படி இறந்தோருக்கான சடங்குகளும் முன்னோருக்கான சம்பிரதாயங்களும் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய இழப்பு என்றே சொல்வேன். தாய், தந்தை, மற்றும் குழந்தைகளுக்குக் கூட அன்பான நினைவுகூரலாக எல்லா மதங்களுமே இந்தச் சடங்குகளை அங்கீகரிக்கின்றன.

பெரும்பாலான நாடுகளில் அவை பிழையான நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருப்பது உண்மையே. என்றாலும் அவர்கள் அனைவருடைய மனங்களிலும் ஓர் உயிர்த்துடிப்பான மானுட நம்பிக்கையின் ஆழ் மனக் கிணறு ததும்பிக் கொண்டிருக்கிறது. அது வற்றிப் போகக்கூடாது. ஆரம்ப கிறிஸ்தவ சர்ச்கள் இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கான பழங்காலப் பிரார்த்தனைகளுக்கு இடமளித்திருக்கின்றன.

தென் பகுதி நாடுகளில் அனைத்து புனிதர் மற்றும் அனைத்து ஆன்மாக்களுக்கான நினைவுகூரல் நாளான கல்லறைத் திருநாள் ஆகியவை மனித மனங்களின் இந்த ஏக்கத்துக்கு ஆறுதல் அளித்திருக்கின்றன. எல்லா மதங்களிலும் அந்த ஆறுதல் கிடைக்கவேண்டும். பூமிப் பந்தின் வடக்குப் பகுதியில் வாழும் நாம் சோகத்தின் அந்த வெளிப்படையான வெளிப்பாடுகளில் இருந்து நம்மைக் குறுக்கிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம் மனதில் ஆழத்தில் இது சார்ந்து ஒருவித கசப்பு நிறைந்திருப்பது நமக்குத் தெரியும்.

இறந்தவர்களின் ஆவிகளை  அன்றாடப் பிரார்த்தனைகள் மூலம் சாந்திப்படுத்தாவிட்டால் அவை நம்மை நிம்மதியாக வாழவிடாது அல்லது இறந்தவர்களின் நினைவாக தினமும் நற்செயல்களைச் செய்யவேண்டும் என்பதே இந்த உயிர் நீத்தார் நம்பிக்கை மற்றும் சடங்குகளுக்குக் காரணம் என்று நாம் மேலோட்டமாக எடுத்த எடுப்பில் நினைக்கிறோம். ஆனால் இதையும்விட ஆழமான உண்மை அதில் இருக்கும் என்றே தோன்றுகிறது.

இந்தியாவின் பழங்கால மதத்தில் இன்னொரு அப்பாலான அம்சமும் இடம்பெற்றிருக்கிறது. தேவர்கள், தெய்வங்கள், பித்ருக்கள் அல்லது முன்னோர்கள் நீங்கலாக மூன்றாவது உலகம் ஒன்று இருக்கிறது. அது இல்லாமல் இந்தியாவின் பழங்கால மதம் வேதங்களில் சொல்லப்பட்டிருப்பதுபோல் இருந்திருக்கமுடியாது. மூன்றாவது அப்பாலான அந்த அம்சத்தை வேத ரிஷிகள்  ‘ரித’ என்று அழைக்கிறார்கள். நேர் கோடு என்பதுதான் அதன் ஆரம்ப அர்த்தம் என்று நினைக்கிறேன். சூரியனுடைய அன்றாட நகர்வைக் குறிக்க அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரவு பகல் என்ற தொடர் ஒழுங்கு, பருவங்களை ஒழுங்குபடுத்தும் நேர் கோடு, பல்வேறு விலகல்கள் இருந்த போதிலும் இயற்கை நிகழ்வுகளுக்குள் இருக்கும் ஒரு நேர்கோட்டுத் தன்மை. அதையே ரிதம் என்று அழைத்திருக்கிறார்கள்.

நேர்கோடு, சரியான கோடு, நேரடியான கோடு என அதை எப்படி அழைத்தாலும் அதன் பொதுவான அர்த்தம் இயற்கையின் மாறாத ஒழுங்கு விதி என்பதாகப் புரிந்துகொள்ளலாம். இந்த ரித ஒழுங்கை நாம் ஒழுக்கம் சார்ந்த உலகுக்கும் பொருத்திப் பார்க்கும்போது நம் வாழ்க்கையின் அஸ்திவாரமாக அமையும் ஒழுங்கு விதி உருவாகிறது. உள்ளும் புறமுமாக ஓர் ஒழுங்கை அது வரையறுக்கிறது.

அப்படியாக இயற்கை மீதான சிந்தனைகள் முதலில் பிரகாசமான ஒளிமயமான கடவுள்கள் என்ற கருத்தாக்கத்துக்கு வழிவகுத்திருக்கின்றன. இறுதியில் அது ஒளியின் கடவுள் – கடவுள் ஒளி என்பதாகப் பரிணமித்திருக்கிறது.

பித்ரு – முன்னோர்கள் மீதான அன்பானது பிறர் மீதான கருணை மற்றும் அழிவின்மை மீதான நம்பிக்கையாக மாறியிருக்கிறது.

உள்ளும் புறமுமான உலகில் தென்படும் நேர் கோட்டு ஒழுங்கானது உயர்நிலை நம்பிக்கையாக மாறியிருக்கிறது.

அனைத்துக்கும் அடிநாதமாக இருக்கும் ஒன்றின் மீதான நம்பிக்கையாக, நாம் நம்ப முடியும் படியான ஒரு விதிமுறையின் மீதான விசுவாசமாக, எது பிறழ்ந்தாலும் நமக்குள் இருந்து பேசும் தெய்விக மனசாட்சியின் குரலாக இருந்துகொண்டு ‘இதுவே ரிதம்… இதுவே சரி… இதுவே சத்தியம்’ என்று நம்மை வழிநடத்துவதாக ஆகியிருக்கிறது. நம் முன்னோர்கள் வகுத்த விதிகள் எதுவாக இருந்தாலும் அல்லது ஒளிமயமான தெய்வங்களின் குரல் எதுவாக இருந்தாலும் நம் மனசாட்சியின் படி நடக்கவேண்டும் என்ற ஒழுங்கை அது முன்வைக்கிறது.

இந்த மூன்று அப்பாலான விஷயங்கள் பழமையின் மகத்தான வெளிப்பாடுகள். வேதங்களைக் கண்டுகொண்டதே நமக்கு இந்த விஷயங்கள் தெரியவர முழுக் காரணம். இந்த 19-ம் நூற்றாண்டில் மனித சிந்தனை மற்றும் மதங்களின் ஆரம்ப கட்டங்களை அதாவது எழுத்து இலக்கியங்கள் எல்லாம் உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தைப் பார்த்துப் புரிந்துகொள்ள அவையே உதவுகின்றன.

வேதங்களில் ஒரு தொல் பழங்கால உலகம் நம் கண்முன்னே பரந்து விரிகிறது.  உலக மதங்களின் வரலாற்றில் ஏராளமான பயனற்ற பொருட்கள் நிரம்பியதாகவும் புதிய சிற்பிகளால் மறு கட்டுமானம் செய்யப்பட்டதாகவும் அது திகழ்கிறது. நமது மிக மிகத் தொன்மையான ஆதி பால்யமானது நம் நினைவின் அடுக்குகளில் மீண்டும் தோன்றியிருக்கின்றன. முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக அது என்றென்றைக்குமாக அழிந்துவிட்டதுபோலவே தோன்றியும் இருக்கிறது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *