சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இடம் கோலன் குன்றுகள். சுமார் 1800 சதுர கிலோ மீட்டர் அளவிலான இந்தப் பகுதியின் மேல் இஸ்ரேலுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு கண் இருந்தது.
இரண்டு முக்கியமான காரணங்கள். ஒன்று, கோலன் குன்றுகள் மிக உயரமான மலைகளைக் கொண்ட பகுதி. அங்கிருந்து அரபு அண்டை நாடுகளை நோட்டம்விடுவது எளிது. அன்றைக்கு இஸ்ரேலைச் சுற்றியிருந்த அத்தனை அரபு நாடுகளிலும் பாலஸ்தீனர்கள் தஞ்சம் புகுந்திருந்தனர். அங்கிருந்து புறப்பட்டு வந்த போராளிகள் நாலாபக்கமும் இஸ்ரேல்மீது தாக்குதல் தொடுத்தனர். இதனைத் தடுப்பதற்கு கோலன் குன்றுகளைத் தன் வசம் வைத்துக்கொள்ளும் கட்டாயம் இஸ்ரேலுக்கு வந்தது.
அடுத்தாக இஸ்ரேலுக்கான நீர்த்தேவையையும் கோலன் குன்றுகள்தான் பூர்த்தி செய்தன. மத்தியக் கிழக்கின் வற்றாத ஜீவநதியான ஜோர்டன் நதி, லெபனானில் உருவாகி சிரியா, இஸ்ரேல், ஜோர்டன் ஊடாகப் பயணித்து சாக்கடலில் வந்து கலக்கிறது. அந்த நதி தான் வரும் வழியில் கோலன் குன்றுகள் அருகே டேன், பனியாஸ், ஹட்ஸ்பானி என்று மூன்று கிளை நதிகளாகப் பிரிகிறது. இந்த மூன்று நதிகளும் இஸ்ரேலுக்குள் பயணித்து டைபிரியாஸில் உள்ள கின்னெரெட் ஏரியில் கலக்கின்றன.
இந்தக் கின்னெரெட் ஏரிதான் இஸ்ரேலின் பெரும்பான்மை நீர்த்தேவையைப் பூர்த்தி செய்து வந்த நீராதாரம். கின்னெரெட் ஏரியில் இருந்து குழாய்களை அமைத்துத்தான் நாடு முழுவதும் குடிநீர், பாசனத்திற்கு வேண்டிய நீரை இஸ்ரேல் பெற்றுவந்தது. இந்த நீரின்மீதுதான் சிரியா கைவைக்க முடிவு செய்திருந்தது.
கின்னெரெட் ஏரிக்கான நீர் சிரியாவைத் தாண்டித்தான் வருகிறது அல்லவா? இதனைத் தடுக்க சிரியா திட்டமிட்டது. இஸ்ரேல் செய்யும் அட்டூழியங்களுக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில் கோலன் குன்றுகளிலிருந்து பிரியும் கிளை நதிகளை இஸ்ரேல் நோக்கிச் செல்ல விடாமல் மாற்றுப் பாதைகளை அமைத்து ஜோர்டன் நாட்டிற்குள் செல்லும் யார்முக் நதியுடன் இணைத்துவிடலாம் என்று திட்டம் தீட்டியது.
குடிக்க நீர் இல்லாமல் தவிக்கவிட்டால் சியோனியர்கள் தானாக வழிக்கு வருவார்கள் என்று சிரியாவிற்கு எண்ணம். இதற்கான முன்னெடுப்புகளில் ரகசியமாக ஈடுபடத் தொடங்கியிருந்தது. இந்த ரகசியத்தைத்தான் கோஹன் மோப்பம் பிடித்தார்.
0
அப்போது கோஹன் டமாஸ்கஸிற்கு வந்து சில மாதங்கள் கழிந்திருந்தன. சிரிய அரசாங்கத்தின் உள்வட்டத்திற்குள் நுழையும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். அதற்கான சந்தர்ப்பமும் தானாக அமைந்தது.
சிரியாவுடன் எகிப்தை இணைத்து நாசர் உருவாக்கியிருந்த ஐக்கிய அரபு குடியரசு பல்வேறு உட்கட்சிப் பூசல்களால் சிதறிபோனது. இது நாசருக்கும், எகிப்துக்கும் பெரிய அவமானமாகியிருந்தது. இதனால் எகிப்து அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பெயரில் எப்போது வேண்டுமானாலும் சிரியாவில் ஆட்சிக்கவிழ்ப்பு நிகழலாம் என்ற சூழல் ஏற்பட்டு இருந்தது. இதனை கோஹன் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார்.
அப்போது சிரிய மக்களிடையே சோசியலிஸ்ட் கட்சியான பாத் கட்சியினரின் செல்வாக்கு அதிகம் இருந்தது. எப்படியும் அடுத்தாக இந்தக் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என கோஹன் யூகித்து இருந்தார். இதனால் அவர் பாத் கட்சி உறுப்பினர்களிடம் நெருங்கி பழகத் தொடங்கியிருந்தார். கட்சித் தலைவர்களுக்குப் பெரும் நிதிகளைத் தாராளமாக வழங்கினார். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்துகொடுத்தார். கட்சியின் மேல்மட்டத்தில் ஒருவர் விடாமல் கோஹனின் மாய வலையில் விழுந்தபடியே இருந்தனர்.
மே 8, 1963 அன்று கோஹன் எதிர்பார்த்ததுபோலவே சிரியாவில் கலகம் வெடித்தது. பாத் கட்சியினர் பழைய அதிபரை நீக்கிவிட்டு ஆட்சியில் அமர்ந்தனர். இப்போது முக்கியப் பொறுப்பில் பதவியேற்றிருந்த அதிகாரிகள் பலரும் கோஹனுக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர்.
இதன்பின் கோஹனின் ஊடுருவல் மேலும் தீவிரமடையத் தொடங்கியது. புதிதாகப் பதவியேற்ற பாத் கட்சியினருக்கு மோசமடைந்திருந்த சிரிய பொருளாதாரத்தைச் சரிசெய்ய வேண்டிய அழுத்தம் இருந்தது. இதற்காக அவர்கள் அயல்நாடுகளில் வாழ்ந்து வந்த சிரியர்களிடம் நிதி உதவியைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்தச் சமயத்தில் கமல் அமித் தாபேவாக நடித்து வந்த கோஹன், தானாக முன்வந்து பல்வேறு உதவிகளை வழங்கத் தொடங்கினார்.
கோஹன் தம்மை சிறந்த தேசியவாதியாகக் காட்டிக்கொண்டார். புரட்சிக்குப் பிறகு பஞ்சத்தில் துவண்டுபோயிருந்த டமாஸ்கஸ் மக்களுக்கு உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் பொது சமையலறைகளைச் சிரிய அரசு திறந்தது. இதைக் கட்டமைக்க வேண்டிய பொருட்களைக் கோஹன் தன் சொந்தச் செலவில் பெற்றுத் தந்தார். அடுத்ததாகத் தன்னுடைய அர்ஜெண்டினா வாழ் நண்பர்களிடம் பேசி பல்வேறு உதவிகளைச் சிரியாவிற்கு வரவழைத்தார். இத்தகைய உதவிகள் அவரது மதிப்பை அரசாங்கத்தின் மத்தியில் உயர்த்தியது. சிரிய அரசாங்கம் கண்மூடித்தனமாக கோஹனை நம்பத் தொடங்கியது.
சிரியர்கள் யாருக்கும் கோஹன் மேல் துளியும் சந்தேகம் வரவில்லை. கோஹன் ஒரு பணக்காரர். தேசியவாதி. நாட்டு மக்களுக்காக உதவி செய்கிறார். இதுதான் அவர்களுக்கு இருந்த அபிப்ராயம். இப்படியாக நாளடைவில் சிரிய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், மூத்த ராணுவத் தலைவர்கள், அரசியல்வாதிகள் என ஒருவர் விடாமல் கோஹனுக்கு நண்பர்களாகினர். அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பலரும் அவருக்கு வேண்டியவர்களாக இருந்தனர். இது கோஹனை இன்னும் வேகமாக சிரிய அதிகார வட்டத்திற்குள் நுழைய வைத்தது.
இதன்பின் ராணுவம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் கோஹனுக்கு அத்துப்படியாகின. சிரிய ராணுவத்தில் இடம்பெற்றிருக்கும் அதிகாரிகளின் பெயர், அவர்களுடைய பதவி, அவர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம், அவர்களுடைய பலவீனம், சிரிய ராணுவத்தின் ரகசிய உத்தரவுகள் போன்ற பலவற்றையும் அவர் கறக்க ஆரம்பித்தார். இந்தத் தகவல்கள் உடனுக்குடன் இஸ்ரேலுக்குச் சென்றுகொண்டே இருந்தது. தினமும் காலை 8 மணிக்கு அவர் தனது வீட்டின் அறையில் அமர்ந்தபடி ரேடியோ மூலம் தகவல்களை அனுப்பத் தொடங்குவார். வெறும் 9 நிமிடங்கள்தான் பேசுவார். அதற்குள் சொல்ல வேண்டியவை ரகசிய சமிக்ஞைகளாக மாற்றப்பட்டு அனுப்பப்பட்டிருக்கும். கோஹன் செய்தியனுப்பும் அதே நேரத்தில்தான் சிரிய ராணுவமும் ரகசியங்களை அனுப்பிக்கொண்டிருக்கும். இதனால் யார் யாருக்கு அனுப்புகிறார்கள் என்கிற எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியாது. இதுதான் கோஹனுக்குத் தேவையாக இருந்தது.
ராணுவ ரகசியங்களை அறிந்துகொள்ளப் பல்வேறு உத்திகளை கோஹன் கையாண்டார். அதில் சில உத்திகள் நம்மைத் திக்குமுக்காட வைத்துவிடும். பொதுவாக ராணுவ அதிகாரிகளுக்குத் தன்னுடைய மாளிகையில் கோஹன் விருந்துகள் வைப்பார். அதில் கலந்துகொள்ளப் பாலியல் தொழிலாளர்களையும் வரவழைத்திருப்பார். அந்தப் பெண்களிடம் பழகத் தொடங்கும் அதிகாரிகள் மதிமயங்கி சில ரகசிய முத்துக்களை உதிர்த்துவிடுவர். அந்த முத்துக்களை பொறுக்கி எடுத்து, கோர்த்து இஸ்ரேலுக்கு அனுப்பிவிடுவார் கோஹன். அதேபோல அதிகாரிகளின் மனைவிகள், காதலிகள் போன்றவர்களுடன் நெருங்கிய நட்புகளை ஏற்படுத்திக்கொள்வார். அவர்களுக்கு அடிக்கடி பரிசுப்பொருட்களை வாங்கி அனுப்புவார். பின் அவர்களைச் சந்திக்கும் தருவாயில் நயமாகப் பேசி கணவன்மார்கள் பகிர்ந்துகொண்ட விஷயங்களைக் கறந்துவிடுவார்.
இப்படிப் பல வித்தைகளைச் செய்து அவரால் தகவல்களைச் சேகரிக்க முடிந்தது. ஒருகட்டத்தில் கோஹனுக்குத் தெரியாத ராணுவ ரகசியமே இல்லை என்பதுபோல் ஆனது.
அதுமட்டுமில்லாமல் அதிகாரிகளிடம் பேசும்போது இஸ்ரேலைப் பற்றி அவதூறுகளை அள்ளி வீசுவார். அரபு தேசியத்தின் ஒரே எதிரி இஸ்ரேல்தான் என்று கர்ஜிப்பார். அரேபியர்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலை எதுவும் செய்ய முடியாதா? வரலாற்றுப் பாரம்பரியமிக்க சிரியாவால் ஒரு கொசுவை நசுக்க முடியவில்லையா? என்பதுபோலெல்லாம் வேதனையில் புழங்குவார். அவரது பேச்சை அப்படியே நம்பும் ராணுவ அதிகாரிகள் உணர்ச்சிக் கொப்பளிக்கத் தங்களுடைய திட்டங்களை கோஹனிடம் சொல்லிவிடுவர். இப்படியாகப் பல ரகசியங்களை அவரால் சேகரிக்க முடிந்தது. அதில் அவர் தெரிந்துகொண்ட ஒரு திட்டம்தான் நதிகளைத் திசை மாற்றுவதற்கு சிரியா செய்துவந்த ரகசிய திட்டம்.
அப்போதைய சிரிய ராணுவத் தளபதியின் மருமகன் மாஜி ஜஹரிதின் கோஹனுக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். அவருடன் கோஹன் உணர்ச்சிப் பொங்க உரையாடிக்கொண்டிருந்தபோது ஜஹரிதின் இஸ்ரேலுக்கு எதிராக சிரியா என்னவெல்லாம் திட்டம் வைத்திருக்கிறது என்பதைக் கொட்டிவிட்டார். இன்னும் ஒருபடி மேலேபோய் கோஹனை கோலன் குன்றுகளுக்கு அழைத்துச் சென்று எல் ஹாமா ராணுவக் கூடாரத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள், சிரியாவிற்குச் சோவியத் வழங்கியுள்ள விமானங்கள், டாங்கிகள் உள்ளிட்ட பல விஷயங்களைக் காட்டிக்கொடுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து ராணுவம் சார்பில் பொறியாளர்கள், தொழிலதிபர்கள் சந்திக்கும் ரகசிய நிகழ்வு ஒன்று நிகழ இருந்தது. அதில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பும் ஜஹரிதினின் புண்ணியத்தில் கோஹனுக்குக் கிடைத்தது. அப்போதுதான் இஸ்ரேலுக்கு எதிராக சிரியா மேற்கொண்டு வரும் நதிநீர் திட்டம் கோஹனுக்குத் தெரியவந்தது.
சிரியா, கோலன் குன்றுகளில் உருவாகும் கிளை நதிகளைத் திசைதிருப்பும் நோக்கில் சுரங்கங்களை அமைக்க இருந்தது. இந்தச் சுரங்கங்களைத் தோண்டும் பணிகளைச் செய்வதற்கு ஓர் ஒப்பந்ததாரரை அழைத்து வந்திருந்தது. அந்த ஒப்பந்ததாரர் சவுதியைச் சேர்ந்தவர். கட்டுமானத் துறையில் உலகப் புகழ்பெற்றவர். அவரைத்தான் கோஹன் அணுகினார். அவர் வேறு யாருமில்லை. மறைந்த அல்கயிதா தலைவர் பின்லேடனின் தந்தை முகமது பின்லாடின்.
பின்லாடின்தான் மத்தியக்கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வந்த பெரும் கட்டுமானப் பணிகளுக்குப் பின்னால் இருந்தவர். இதனால் அவரிடம் நட்பாகிக்கொண்ட கோஹன், அவருடன் பணியாற்ற வந்த லெபனானைச் சேர்ந்த மிச்சேல் சாப் எனும் கட்டுமானப் பொறியாளருடனும் அறிமுகமாகிக் கொண்டார். இந்த மிச்சேல் சாபிடம் இருந்துதான் நதி நீர் திட்டம் தொடர்பான பல விஷயங்களை கோஹன் கறந்தார். கோலன் குன்றுகளில் எந்தெந்த இடங்களில் சுரங்கங்கள் தோண்டப்படவுள்ளன, எவ்வளவு ஆழம் தோண்டப்படவுள்ளன, என்னென்ன கருவிகள் பயன்படுத்தப்படவுள்ளன என அனைத்துத் தகவல்களையும் சேகரித்தார்.
கோஹன் ஒரு தொழிலதிபர் என்று தம்மைக் காட்டிக்கொண்டதால் அவரால் தமக்கு எதுவும் பணி வாய்ப்பு உண்டாகும் என்று நினைத்த மிச்சேல் சாப், தன்னுடைய மேதாவித்தனத்தைக் காட்டுவதாக எண்ணி சுரங்கம் தோண்டப்படும் விதம், அதன் வெடிகுண்டுகள் தாங்கும் தன்மை, பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்தையும் உளறிவிட்டார். அந்தத் தகவல்கள் ஒவ்வொன்றும் அன்றைக்கே இஸ்ரேலுக்குத் அனுப்பப்பட்டன.
இஸ்ரேல் ராணுவம் சுதாரித்துக்கொண்டது. அடுத்த சில தினங்களிலேயே போர் விமானங்கள் சிரியாவிற்குள் நுழைந்து சுரங்கம் தோண்ட இருந்த பகுதிகளில் குண்டுகளை வீசின. இதில் சிரியா வாங்கி வைத்திருந்த அனைத்துக் கட்டுமான இயந்திரங்களும் அழிந்துபோயின. அத்துடன் சுரங்கம் தோண்டுவதற்காக அழைத்து வரப்பட்ட பணியாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர். பல நூறு கோடிகள் சிரியாவிற்கு நஷ்டமானது.
சிரியர்கள் அதிர்ந்துவிட்டனர். எப்படி இந்தத் தாக்குதல் நடந்தது? யார் இஸ்ரேலிடம் சொன்னது? இது மிகவும் ரகசியமான திட்டமாயிற்றே? எப்படி விஷயம் வெளியே கசிந்தது? உள்ளுக்குள் யாராவது உளவாளிகள் இருக்கிறார்களா? நாலாபுறமும் சிரிய அதிகாரிகள் தேடத் தொடங்கினர். யாராலும் கோஹனைச் சந்தேகிக்க முடியவில்லை. அவ்வளவு கெட்டிக்காரத்தனமாக அவர் காய்களை நகர்த்தி இருந்தார்.
ஆனால் அவருடைய ரகசியம் துளியும் எதிர்பார்க்காத வகையில் சிரியாவில் இயங்கி வந்த இந்தியத் தூதரகத்தால் வெளியே வந்தது.
(தொடரும்)
Photo: Eli Cohen with the entourage of Syrian President Amin Hafiz (1963-1966) © Albert Abraham Cohen