Skip to content
Home » மொஸாட் #8 – இறுதித் தீர்ப்பு

மொஸாட் #8 – இறுதித் தீர்ப்பு

அந்தக் கார் ஊருக்கு ஒதுக்குப்புறமான சாலையில் நுழைந்து ஆள் ஆரவாரமற்ற வீட்டின் முன் நின்றது. கண்கள் கட்டப்பட்ட ஐக்மேன் அமைதியாக அமர்ந்திருந்தார். எந்த எதிர்ப்பும் அவரிடம் இருந்து வெளிப்படவில்லை. அவருக்கு என்ன நடக்கிறது என்பது ஏற்கெனவே புரிந்திருந்தது. நடப்பதை ஏற்றுக்கொள்வதற்கான பக்குவமும் வந்திருந்தது.

இரண்டு பேர் ஐக்மேனைத் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தினர். அவரது கால்கள் கட்டிலுடன் சேர்த்து கட்டப்பட்டன. அவருடைய உடை மாற்றப்பட்டது.

ஐக்மேனிடம் விசாரணையைத் தொடங்குவதற்கு முன் உளவாளிகள் அவருடைய உடலில் குத்தப்பட்டிருந்த பச்சையைத் தேடினர். பொதுவாக நாஜிக்கள் அனைவருக்கும் அவர்களுடைய அடையாள எண்கள் அக்குளில் பச்சைக் குத்தப்பட்டிருக்கும். அதைவைத்து இது ஐக்மேன்தானா என்று இறுதியாக ஒருமுறை உறுதி செய்துகொள்ளலாம் என உளவாளிகள் முயன்றனர்.

ஆனால் அவர்கள் தேடிய இடத்தில் பச்சை எதுவும் இல்லை. வெறும் தழும்பு மட்டுமே இருந்தது. ஐக்மேன் ஏற்கெனவே தனது அடையாள எண்ணை அழித்திருந்தார். ஆனால் அது இப்போது பிரச்னையே இல்லை. இருக்கும் ஆதாரங்களே போதும். திமிங்கிலத்தைப் பிடித்தாயிற்று.

சரி அடுத்து என்ன செய்யலாம்? விசாரிக்க வேண்டும். எப்படி விசாரிக்கலாம்? என்ன கேள்வி கேட்கலாம்? அடிக்கலாமா? உதைக்கலாமா? சித்திரவதை செய்து உண்மைகளை வாங்கலாமா? உளவாளிகள் அவர்களுக்குள் குழம்பிக்கொண்டிருந்தபோது ஐக்மேன் தானாகவே பேசத் தொடங்கினார்.

‘என் பெயர் அடோல்ஃப் ஐக்மேன். என்னுடைய நாஜி உறுப்பினர் எண் 45326.’

எந்தச் சிரமமும் இல்லை, மெனக்கடெலும் இல்லை. ஐக்மேன் தாமே முன்வந்து உண்மையை ஒப்புக்கொண்டார்.

அவருக்குப் புரிந்துவிட்டது. எதிரிகளிடம் மாட்டிவிட்டோம். நிச்சயம் தப்பிக்க முடியாது. எப்படியும் கொல்லப்போகிறார்கள். முடிந்த அளவுக்கு உடலை வருத்தாமல் தம்மைக் கொலை செய்யும்படி கேட்டுவிடலாம் என்று அவர் நினைத்திருந்தார்.

ஆனால் உளவாளிகளோ மிரண்டுவிட்டனர். என்ன இவன் இந்த நேரத்திலும் அமைதியாக உட்கார்ந்திருக்கிறான்? நாம் கேட்கும் முன்பே உண்மைகளை உரக்கச் சொல்கிறான்? உண்மையில் இவன்தான் லட்சக்கணக்கான யூதர்கள் மரணிப்பதற்குக் காரணமாக இருந்தவனா? முகத்தில் பயம் இல்லை. பதற்றம் இல்லை. ஐக்மேன் இத்தனை சாந்தமானவனா?

0

ஒரு வாரம் முழுவதும் ஐக்மேன் அந்த வீட்டிலேயே அடைக்கப்பட்டிருந்தார். அவரைத் தனிமையில் வைத்து தண்டிப்பதுதான் மொஸாடின் திட்டம். அவரை யாருடனும் பேச விடாமல் செய்ய வேண்டும். தனிமையில் பைத்தியம் பிடித்து புலம்ப வைக்க வேண்டும். உளவாளிகளை ஐக்மேனுடன் பேசவிட்டால் அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லி உணர்ச்சிகளைத் தூண்டிவிடலாம். உணர்ச்சிவசப்பட்ட உளவாளிகள் ஐக்மேனைக் கொலைகூடச் செய்துவிடலாம். கொல்வதற்கா இத்தனை சிரமங்களும் மெனெக்கெடல்களும்? இந்த நாசக்காரனை நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு வைத்து கோடிக்கணக்கான மக்கள் முன்னிலையில் உண்மைகளை வாங்க வேண்டும். அதுதான் இலக்கு. அதுவரை அவனைத் தனிமையில் வாட்டி வதையுங்கள். அவன் கேட்கும் எதை வேண்டுமானாலும் வாங்கித் தாருங்கள். ஆனால் ஒருவார்த்தை பேசாதீர்கள் என்று ஐஸர் ஹரேல் உத்தரவிட்டிருந்தார்.

ஐக்மேன் கடத்தப்பட்ட நான்கு நாட்கள் கழித்து ஐஸர் ஹரேல் நேரில் வந்தார். அவராலும் அங்கிருப்பது ஒரு கொலைகாரன்தானா என நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். கொடூரர்கள் கடவுளின் தூதர் என்றுகூடத் தம்மைச் சொல்லிக்கொள்வார்கள். நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஐஸர் ஹரேலுக்கு உடல் எல்லாம் நடுங்கியது. எப்படியோ ஐக்மேனைக் கடத்தியாகிவிட்டது. அடுத்து அவரை உடனடியாக இஸ்ரேலுக்குத் தூக்கிச் செல்ல வேண்டும். என்ன செய்யலாம்?

ஹரேலின் பதற்றத்துக்கு ஒரு காரணம் இருந்தது. ஐக்மேன் கடத்தப்பட்டு 5 நாட்கள் ஆகியிருந்தது. அவரது குடும்பம் நிச்சயம் காவல்துறையிடம் சென்று புகார் அளித்திருக்கும். காவல்துறையினர் களத்தில் இறங்கினால் எப்படியும் மோப்பம் பிடித்துக்கொண்டு வந்துவிடுவார்கள். அரசாங்கத்துக்கு விஷயம் தெரிய வந்தால் உலகத்துக்கே மொஸாடின் தில்லாலங்கடி வேலை தெரிந்துவிடும். உலகிற்குத் தெரியவந்தால் அரசியல் நிலைமையைப் பொறுத்து எப்படி வேண்டுமானாலும் ஆட்டம் மாறலாம். ஐக்மேன் தப்பிக்கப்படலாம். அதற்கெல்லாம் நேரம் இல்லை. உடனடியாக ஐக்மேனைக் கொண்டு செல்ல வேண்டும். ஒருவேளை மாட்டிக் கொண்டால் கொன்றுவிட வேண்டும் என்கிற முடிவில் இருந்தார்.

ஆனால் நல்லவேளையாக ஹரேல் நினைத்தபடி யாரும் காவல்துறையிடம் செல்லவில்லை. ஐக்மேன் குடும்பத்தினருக்கும் அவரது அடையாளத்தை வெளிப்படுத்துவதில் தயக்கம் இருந்தது. அதனால் அக்கம்பக்கத்தில் இருந்த நாஜிக்களின் உதவியுடன் அவரைத் தேடலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் அந்த நாஜிக்களோ எங்கே தம்மையும் அந்தக் கடத்தல் கும்பல் தூக்கிவிடுமோ என்று அஞ்சி தலைமறைவாகிவிட்டனர்.

இதனால் மொஸாடுக்கு அப்போதைக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல்போனது. அதற்காகத் தாமதிக்க முடியாது அல்லவா? எப்படி ஐக்மேனை அர்ஜெண்டினாவைவிட்டு வெளியே கூட்டிச் செல்வது? இந்த மிகப்பெரிய கேள்வி அவர்களிடம் இருந்தது. அதற்கான பதிலை ஐஸர் ஹரேல் கண்டுபிடித்தார்.

ஐக்மேன் கடத்தப்பட்டு 9 நாட்கள் கழித்து எல் அல் எனும் விமானம் ஒன்று பியூனஸ் அயர்ஸில் இருந்து இஸ்ரேலுக்குப் பறக்க இருந்தது. அது இஸ்ரேல் நாட்டு விமானம். அந்த விமானத்தில் நுழைந்துவிட்டால் எந்தச் சட்டச்சிக்கலும் இல்லாமல் பறந்துவிடலாம். அதனால் எல் அல் நிறுவனத்திடம் பேசி நடத்தப்போகும் நாடகத்தை மொஸாட் புரிய வைத்தது.

மேலும் பயணிகளைப்போல அல்லாமல், விமானப் பணியாளர்கள்போல நுழைந்துவிடலாம் என்றும் ஹரேல் திட்டம் தீட்டினார். இதனால் விசா போன்ற சிக்கல்கள் இருக்காது. விமானப் பணியாளர்கள் பயணிப்பதற்கான அனுமதிச் சீட்டு இருந்தால்போதும்.

ஆனால் அதையும் தாண்டி இடையூறு எதுவும் வராமல் இருக்க அர்ஜெண்டினா அரசாங்க முத்திரைகள் இடம்பெறும் உண்மை ஆவணம் ஒன்றையும் பெறுவதற்கு மொஸாட் முயற்சி செய்தது.

அதற்காக உளவாளிகளில் ஒருவர் ரிக்கார்டோ கிளமென்ட் என்கிற பெயரில் விபத்தில் சிக்கி மூளையில் அடிபட்டுவிட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதியானார். அனுமதியாகும்போதே தன் சொந்த நாடான இஸ்ரேலுக்குப் பயணிக்கவுள்ளதாகவும், அதற்காக மருத்துவச் சான்றிதழ் தேவைப்படுகிறது என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். மருத்துவமனையும் அலட்சியமாக அவருக்கு மருந்து மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு கையோடு இஸ்ரேலுக்குச் செல்வதற்கு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்று அர்ஜெண்டினா முத்திரைப் பதித்த சான்றிதழுடன் அனுமதி கடிதத்தையும் வழங்கிவிட்டது. உளவாளிகள் அந்தச் சான்றிதழில் ஐக்மேனின் புகைப்படத்தை ஒட்டிவிட்டனர். இதனால் அதிகாரப்பூர்வமாகவே அவருக்குக் கடிதம் கிடைத்ததுபோல் ஆகிவிட்டது.

இப்போது ஒரு தடை விலகிவிட்டது. அடுத்ததாகப் பத்திரமாக விமானப் பாதுகாவலர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும். இதற்காகப் பாதுகாப்பு நுழைவாயிலைக் கண்காணிக்கும் பணி தொடங்கியது. பொதுவாக அர்ஜெண்டினாவிற்கு வரும் வெளிநாட்டவர்கள் அங்கு நடைபெறும் இரவு கேளிக்கை விருந்துகளில் கலந்துகொண்டு முட்ட முட்டக் குடித்துவிட்டு விமானம் ஏறுவது வழக்கம். குடித்தவர்கள் மயக்கத்தில் இருந்தாலும், சுயநினைவு இழந்த நிலையில் இருந்தாலும் அதிகாரிகள் பெரிதும் கண்டுகொள்வதில்லை. இதை வைத்தே ஒரு திட்டத்தைத் தயாரித்து ஐக்மேனை விமானத்தில் ஏற்ற முடிவு செய்தது மொஸாட். எல்லாம் தயார். இனி கிளம்ப வேண்டியதுதான் பாக்கி.

ஐக்மேனை உளவாளிகள் அழைத்துச் சென்று முகச்சவரம் செய்து குளிப்பாட்டினர். அவருக்கு விமானப் பணியாளர் சீருடை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவர் ஒருவர் மூலம் ஐக்மேனுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. மயக்க மருந்தின் அளவு கவனமுடன் பார்த்துக்கொள்ளப்பட்டது. அவர் முழுவதுமாகவும் மயங்கிவிடக்கூடாது, அதேசமயம் சுயநினைவுடனும் இருக்கக்கூடாது. உளவாளிகளுக்கு ஒத்துழைத்து அவர்கள்கூடவே நடந்துவரும் அளவுக்கு மயக்கம் இருக்க வேண்டும். பார்ப்பவர்கள் ஏதோ குடித்துவிட்டு வந்தவர் என நினைக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஐக்மேனும் எந்தப் பிடிவாதமும் இல்லாமல் மொஸாடின் மகுடிக்கு ஏற்றவாறு அசைந்தாடினார்.

மே 20 நள்ளிரவு ஐக்மேன் பாதுகாப்பாக விமான நிலையம் அழைத்துவரப்பட்டார். இப்போது எந்தப் பிரச்னையும் இல்லாமல் பாதுகாப்பு நுழைவாயிலைத் தாண்ட வேண்டும். இதுதான் கடைசி சிக்கல்.

உள்ளே நுழையும்போது திடீரென மொஸாட் குழு பாடத் தொடங்கியது. உளவாளிகளில் ஒன்றிரண்டு பேர் போதையில் மயங்கி இருப்பதுபோல நடித்தனர். காவலர்கள் விசாரித்தபோது இரவு முழுவதும் மதுபான விடுதியில் குடித்ததினால் ஏற்பட்ட விளைவு என்பது போன்ற நாடகம் அரங்கேறியது. எல்லோரும் இஸ்ரேல் விமானப் பணியாளர்களின் சீருடையை அணிந்திருந்ததால் பணி முடித்துவிட்டு நாட்டிற்குத் திரும்புகிறார்கள் என்று காவலர்கள் நினைத்துவிட்டனர். அவர்களுக்குள் ஒருவராக ஐக்மேனும் மயக்கத்தில் இருந்ததைக் காவலர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதனால் மொஸாட் குழு உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. உளவாளிகள் பத்திரமாக விமானம் ஏறினர். விமானம் கிளம்பச் சிறிது நேரமே இருந்தது. இப்போதும்கூட உளவாளிகளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இறுதி நேரத்தில் யாராவது சோதனை செய்துவிட்டால் என்ன செய்வது? திடீரென விமானம் புறப்படத் தாமதமாகி எல்லோரும் விமான நிலையத்திற்குத் திரும்ப நேர்ந்தால் என்ன செய்வது? இப்படிப் பல காட்சிகள் அவர்களுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. எல்லோரும் பரபரப்புடன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். அப்போது அந்த அறிவிப்பு வந்தது, ‘எல்லோரும் சீட் பெல்ட் அணிந்துகொள்ளுங்கள். விமானம் புறப்படுகிறது. அடுத்த சில நிமிடங்களில் விமானம் வானில் ஏறியது.

இப்போதுதான் அவர்களுக்கு மூச்சே வந்தது. எல்லோர் முகத்திலும் ஆசுவாசம். நிம்மதி. யாராலும் சாதிக்க முடியாத ஒன்றைச் சாதித்த முடித்த மனநிறைவு. அந்த விமானம் பியூனஸ் அயர்ஸில் இருந்து நீண்ட தூரம் வந்து இஸ்ரேல் நோக்கிப் பறந்துகொண்டிருந்தது.

0

விமானம் இஸ்ரேலுக்கு வந்திறங்கிய இரண்டு நாட்கள் கழித்து இஸ்ரேல் பிரதமர் டேவிட் பென்குரியன் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

‘அடோல்ஃப் ஐக்மேன் கைது செய்யப்பட்டு இஸ்ரேலில் இருக்கிறான். விரைவில் அவன் மீது விசாரணை நடைபெறும்.’

0

அடுத்த சில வாரங்களில் ஐக்மேன் மீதான விசாரணை தொடங்கி உலக அளவில் பேசப்பட்டது. ஒரு குற்றவாளியின் வழக்கு முதன் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதும் அப்போதுதான். ஐக்மேன் முன்னிலையில் அவர் செய்த அனைத்துக் குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டன.

அவர் அலட்டிக்கொள்ளாமல், எதையும் மறுத்துப்பேசாமல் ‘ஆம்’ என்று ஒற்றைப் பதிலில் முடித்துக்கொண்டார்.

ஆனால் அவை அனைத்தையும் தான் ஓர் அரசு அதிகாரியாக ஹிட்லரின் உத்தரவின் பெயரில் நிறைவேற்றியதாகவும், தன்னுடைய இடத்தில் யார் இருந்திருந்தாலும் இப்படித்தான் செய்திருப்பார்கள் என்றும் வாதாடினார். ஆனால் நீதிமன்றம் அவரது வாதத்தை ஏற்கவில்லை.

அதேபோல ஹிட்லரின் முடிவுக்குப் பிறகு பல நாஜிக்கள் கட்சி சொத்துக்களை அபகரித்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாகவும், தான் எதுவும் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும்கூட தெரிவித்தார். அப்போதும் அவர்மீது இரக்கம் காட்ட இஸ்ரேல் தயாராக இல்லை.

இறுதியாகப் பல லட்சம் யூதர்களின் மரணத்திற்கு நேரடி காரணமாக இருந்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமானதாகக் கூறி நீதிபதிகள் அவருக்கு மரண தண்டனை விதித்தனர். ஐக்மேன் மே 31, 1962 அன்று தூக்கிலிடப்பட்டார்.

ஐக்மேன் இறுதியாக தூக்கிலிடப்படுவதற்கு முன் உதிர்த்த வார்த்தைகள்… ‘ஜெர்மனி நீடூழி வாழ்க, அர்ஜெண்டினா நீடூழி வாழ்க, ஆஸ்திரியா நீடுழி வாழ்க…’

0

ஐக்மேன் கடத்தல் இன்றுவரை உலகமே வியக்கும் மொஸாட்டின் சாகசமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக மொஸாட் செய்தது மனித உரிமை மீறல், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயல் என்றெல்லாம் அர்ஜெண்டினா புலம்பியது. ஆனால் இஸ்ரேலோ ஒரு மர்மப் புன்னகையுடன் அனைத்தையும் கடந்து சென்றது.

0

ஐக்மேன் கடத்தலுக்குப் பின் மொஸாடின் சாகசங்கள் இருந்தாலும், சில மறைக்கப்பட்ட கருப்புப் பக்கங்களும் இருக்கின்றன. அதில் ஒன்று, ஐக்மேன் சம்பவத்திற்கு பிள்ளையார் சுழி போட்டுக்கொடுத்த ஹெர்மெனை மொஸாட் இருட்டடிப்பு செய்ய முயன்றதுதான்.

உண்மையில் ஹெர்மென்தான் தனி ஆளாகப் போராடி ஐக்மேனை அடையாளம் கண்டுபிடித்தார். அதுமட்டுமில்லாமல் தூங்கிக்கொண்டிருந்த மொஸாடைத் தொடர்ந்து தட்டியெழுப்பிச் செயல்பட வைத்தவரும் அவர்தான். ஆனால் மொஸாடோ 1971ஆம் ஆண்டு வரை ஹெர்மெனின் பங்களிப்பை ரகசியமாகவே வைத்திருந்தது. அதுமட்டுமில்லாமல் ஹெர்மெனுக்கு இஸ்ரேல் தருவதாக உறுதியளித்த வெகுமதியையும் தராமல் இழுத்தடித்தது. ஹெர்மென் தொடர்ந்து பல கடிதங்கள் எழுதி இஸ்ரேலிய அரசுக்கு நெருக்கடி கொடுத்தபின்தான் அப்போதைய பிரதமர் கோல்டா மெயர் வேறு வழியில்லாமல் பரிசுத் தொகையை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டார். இதற்காக ஹெர்மென் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் இஸ்ரேலுடன் போராட வேண்டியிருந்தது என்பதுதான் உண்மை.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *