Skip to content
Home » மொஸாட் #9 – ஒலிம்பிக் படுகொலை

மொஸாட் #9 – ஒலிம்பிக் படுகொலை

அது 1972ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். 20வது ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனியின் மூனிச் நகரில் ஆரம்பமாகியிருந்தது. போட்டிகளைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வருகை புரிந்திருந்தனர். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எனப் பலரும் குவிந்து மூனிச் நகரமே மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது.

போட்டிகளில் பங்கேற்பதற்காகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் ஜெர்மனிக்கு விஜயம் செய்த வண்ணம் இருந்தனர். இவர்களில் ஒரு பிரிவினராக இஸ்ரேலைச் சேர்ந்த 11 விளையாட்டு வீரர்களும் வந்திருந்தனர்.

வீரர்கள் அனைவரும் ஒலிம்பிக் கிராமம் என்று அழைக்கப்பட்ட இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டிருந்தது. நல்ல சாப்பாடு, வசதியான தங்குமிடம், ஊர் சுற்றிப் பார்க்க வாகனங்கள் எனக் கவனிப்புகள் ஜோராக இருந்தது. ஆனால் ஒரே ஒருவிஷயத்தில் மட்டும் ஜெர்மனி கோட்டை விட்டிருந்தது. அது, வீரர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு.

ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தது. சரியாக ஒருவாரம் கழித்து செப்டம்பர் 5ஆம் தேதி வினை ஆரம்பித்தது.

அதிகாலை 4.30 மணி இருக்கும். இஸ்ரேலிய வீரர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த கட்டடத்திற்குள் திடீரென்று முகமூடி அணிந்த எட்டுப் பேர் திடுதிடுவென நுழைந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கிகள் இருந்தன. தூங்கிக் கொண்டிருந்த வீரர்களைத் துப்பாக்கியால் அடித்து எழுப்பினர். திமிறிய இரண்டு பேர் அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். மீதம் இருந்த ஒன்பது பேர் அறையிலேயே சிறை வைக்கப்பட்டனர்.

எல்லாம் கண் மூடி திறப்பதற்குள் கண நொடியில் நிகழ்ந்து முடிந்தது.

யார் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்? எப்படி நுழைந்தார்கள்? என்ன நடந்தது? எதுவுமே புரியவில்லை. விடிந்தவுடன்தான் விஷயம் வெளியே தெரியவந்தது. ஆயுதம் தாங்கிய குழு ஒன்று இஸ்ரேலிய வீரர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கிறது. அந்தக் குழு இஸ்ரேலிய அரசிடம் பேச்சு வார்த்தை நடத்த விரும்புகிறது.

ஒலிம்பிக் போட்டிக்காகக் கூடியிருந்த ஊடகத்தினரின் மொத்தக் கவனமும் இப்போது கடத்தல் குழுவின் பக்கம் திரும்பியது.

துப்பாக்கி ஏந்திய குழுவினர் தங்களை ‘கருப்பு செப்டம்பர்’ என அறிவித்துக்கொண்டனர்.

‘நாங்கள் பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். எங்கள் கோரிக்கைக்கு இஸ்ரேல் செவி சாய்க்க வேண்டும். மறுத்தால் ஒவ்வொரு வீரர்களையும் உங்கள் கண்முன்னேயே சுட்டுத் தள்ளுவோம்’

0

70களில் பாலஸ்தீனப் போராட்டம் வெகு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏகப்பட்ட போராளிகள் பாலஸ்தீனத்தில் உருவாகி இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்பட்டு வந்தனர். அதில் மிகப் பரவலாக மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த இயக்கம் ‘பி.எல்.ஓ’. பி.எல்.ஓ இயக்கப் போராளிகள் பாலஸ்தீனத்தைச் சுற்றியிருந்த ஜோர்டன், சிரியா, லெபனான், எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து இயங்கி வந்தனர். இந்தப் போராளிகள் ஒருகட்டத்தில் தாங்கள் இயங்கி வந்த உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முயல, அது அந்நாட்டுத் தலைவர்களுக்குத் தலைவலியாகிப்போனது.

குறிப்பாக ஜோர்டனின் மன்னராக இருந்த ஹுசைன், போராளிகளை ஒடுக்கும் பணியில் தீவிரமாக இறங்கினார். அதுவரை ஜோர்டனையே தனது இரண்டாவது தாயகமாக நம்பி வந்த பாலஸ்தீனர்களுக்கு ஹுசைனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜோர்டன் ராணுவம் தாக்குதலை அறிவித்து போராளிகளைக் கொன்று குவிக்கத் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்தக் கோரச் சம்பவம் வரலாற்றில் ‘கருப்பு செப்டம்பர்’ என அறியப்படுகிறது.

இந்தக் கருப்பு செப்டம்பர் படுகொலைக்குப் பிறகு பி.எல்.ஓவில் இருந்த சில போராளிகள் இனியும் பாலஸ்தீனப் போராட்டத்தில் அரபு நாடுகளை நம்பக் கூடாது என்று பிரிந்து சென்று தனிக் குழுவாக இயங்கத் தொடங்கினர். கருப்பு செப்டம்பர் நிகழ்வுக்குக் காரணமானவர்களைப் பலி வாங்கப்போகிறோம் என்று சபதம் எடுத்துவிட்டுக் களமாடத் தொடங்கிய இவர்கள், தங்கள் இயக்கத்தின் பெயரையும் ‘கருப்பு செப்டம்பர்’ என்றே அறிவித்துக்கொண்டனர்.

கருப்பு செப்டம்பர் குழு, ஜோர்டன் நாட்டுப் பிரதமர் வாஸ்ஃபி தாலைக் கெய்ரோவில் ஒரு விடுதியில் வைத்துக் கொலை செய்ததுடன் தன் கணக்கைத் தொடங்கியது. அதன்பின் விமானக் கடத்தல், குண்டுகள் வைத்தல் என ஆக்கிரமிப்புச் சக்திகளுக்கு எதிராக அதீத வன்முறையை அந்தக் குழு கையில் எடுத்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் மூனிச்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் ஊடுருவி இஸ்ரேலிய வீரர்களைத் தூக்கியது.

0

கருப்பு செப்டம்பர் இஸ்ரேலுக்கு எதிராகத் தன் எதிர்ப்பைக் காட்டுவதற்கு மூனிச்சைத் தேர்ந்தெடுத்தற்கு முக்கிய காரணம் இருந்தது. அந்த நேரத்தில் உலகின் கவனம் முழுவதும் ஒலிம்பிக் நடைபெறும் மூனிச் நகரில்தான் குவிந்திருக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இஸ்ரேலைத் தட்டினால் உலகமே தம்மைக் கண்டு மிரளும் எனக் கருப்பு செப்டம்பர் கணக்குப்போட்டது. எல்லாம் அவர்கள் நினைத்ததுபோலவே நடந்தது.

இஸ்ரேலிய வீரர்கள் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அப்போதைய இஸ்ரேலியப் பிரதமர் கோல்டா மெய்ர் பதறியடித்து அழைப்பில் வந்தார்.

‘இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?’

‘நீங்கள் கைது செய்து வைத்திருக்கும் 234 பாலஸ்தீன அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் நாங்கள் பிடித்து வைத்திருக்கும் ஒவ்வொரு வீரரின் தலையும் சிதறடிக்கப்படும்.’

எதற்கு வம்பு? விடுதலை செய்துவிடலாம் என்றார்கள் இஸ்ரேலிய அதிகாரிகள். ஆனால் கோல்டா மெய்ர் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார். இஸ்ரேலின் இரும்பு பெண்மனி என அறியப்பட்டவர் அவர். இதுபோன்ற மிரட்டலுக்கெல்லாம் பணிவாரா என்ன?

‘ஒன்பது பேருக்காக 200 போராளிகளை வெளியே விடுவதா? வாய்ப்பே இல்லை. இவர்களின் நிபந்தனைக்கு நாம் தலை சாய்த்தால் உலகில் எங்கேயும் இஸ்ரேலியர்கள் பாதுகாப்பாக வாழ முடியாது. ஆனதைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.

ஆனாலும், வேறு வழிகளில் பணயக் கைதிகளை மீட்க முடியுமா என்றும் யோசித்தார். நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட கமாண்டோக்களை அனுப்பி விளையாட்டு வீரர்களைக் காப்பாற்றலாம் என்று திட்டம் தீட்டினார். ஆனால் ஜெர்மனி மறுத்துவிட்டது.

‘முதலில் பேச்சுவார்த்தை நடத்துங்கள். ஏற்கெனவே 2 பேர் இறந்துவிட்டனர். சூழலை மேலும் ரத்தக் களறியாக்காதீர்கள். பேச்சுவார்த்தை வேலைக்கு ஆகவில்லை என்றால் நாங்களே அதிரடிப் படையினரை அனுப்பி இஸ்ரேலிய வீரர்களை மீட்கிறோம்’ என்றது.

ஆனால் கோல்டா மெய்ர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அவர் விடாப்பிடியாக இருந்தார். கருப்பு செப்டம்பர் குழுவினர் பொறுத்துப் பார்த்தார்கள். அதற்கு மேல் அவர்களால் தாமதிக்க முடியவில்லை. ‘நீங்கள் பொறுமையாக முடிவு செய்துவிட்டுச் சொல்லுங்கள். அதற்கு முன் எங்களுக்குத் தனி விமானம் ஒன்றை அனுப்பி வையுங்கள். நாங்கள் கிளம்பி ஊருக்குச் சென்றுவிட்டு உங்களிடம் பேசுகிறோம்’ என்று கோரிக்கையை மாற்றினார்கள்.

இதுதான் சரியான நேரம் என்று இஸ்ரேல் நினைத்தது. விமானம் தரத் தயார் என்று உடனே சொல்லிவிட்டது.

இஸ்ரேலிடம் ஒரு திட்டம் இருந்தது. போராளிகள் விமானம் ஏறுவதற்கு எப்படியும் விமான நிலையத்திற்கு வருவார்கள். அங்கு வைத்து அவர்களைச் சுற்றி வளைக்கலாம். போராளிகளைப் போட்டுத் தள்ளிவிட்டு இஸ்ரேலிய வீரர்களைக் காப்பாற்றிவிடலாம் எனக் கணக்கிட்டது. ஜெர்மனியிடம் தன் திட்டத்தை விளக்கியது.

ஜெர்மனியும் தனி விமானத்துக்கு ஏற்பாடு செய்தது. அதில் அவர்கள் பணயக் கைதிகளுடன் ஏறும்போது ஜெர்மன் கமாண்டோக்கள் தாக்குவதாகத் திட்டம். ஆனால் கருப்பு செப்டம்பர் ஆட்களோ கடைசி நேரத்தில் ஏதோ தவறாக நடக்கப்போகிறது என உஷாராகிவிட்டனர்.

விமான நிலையத்தில் ஜெர்மனி வீரர்கள் அவர்களை நோக்கிப் பாய்ந்து வர, போராளிகள் திரும்பித் தாக்க, நடைபெற்ற சண்டையில் கருப்பு செப்டம்பர் போராளிகள் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மூன்று பேர் மாட்டிக்கொண்டனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாகப் போராளிகள் பிடித்து வைத்திருந்த 9 இஸ்ரேலிய வீரர்களும் நடைபெற்ற சண்டையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அந்த நிகழ்வை கண்டு உலகமே ஸ்தம்பித்து நின்றது. இந்தப் படுகொலை சம்பவம் பாலஸ்தீனப் போராட்டத்தின் திசையையே மாற்றியமைத்தது. அதுவரை போராளிகள் என அறியப்பட்டு வந்த பாலஸ்தீனர்கள் அதற்குப் பின் பயங்கரவாதிகள் எனச் சித்தரிக்கப்பட்டனர்.

மறுபக்கம் இஸ்ரேலோ கொந்தளித்துக் கொண்டிருந்தது. அசால்ட்டாக நுழைந்து இஸ்ரேலியர்களின் உயிர்களைக் காவு வாங்கிய பாலஸ்தீனர்களைச் சும்மா விடக்கூடாது. இது நம் நாட்டுக்கே பெரிய அவமானம். எப்படியாவது இந்தப் படுகொலைக்குப் பழி தீர்க்க வேண்டும் என்று கோல்டா மெய்ர் கொந்தளித்தார். ஒலிம்பிக் படுகொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து நியாயம் கேட்க வேண்டும். இஸ்ரேலின் அவமானத்தை உடனே துடைத்து எறிய வேண்டும் என்று கர்ஜித்தார்.

கோல்டா மெய்ர் உடனடியாக அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். அதில் மொஸாட் தலைவரை அழைத்து பேசினார். இப்படி ஒரு சம்பவம் நடைபெறப்போகிறது என்பதை உளவுத்துறையாகிய நீங்கள்தான் முதலில் மோப்பம் பிடித்திருக்க வேண்டும். ஆனால் கோட்டை விட்டுவிட்டீர்கள். செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேடுங்கள் என்றார்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? இஸ்ரேலியர்கள் சிந்திய ரத்தத்திற்கு யார் பதில் சொல்வார்கள்? நீங்கள்தான் சொல்ல வேண்டும். என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ தெரியாது. கருப்பு செப்டம்பர் போராளிகளின் உயிர்கள் எனக்கு வேண்டும். இப்போதே வேண்டும். சல்லடைப் போட்டுத் தேடுங்கள். யார் யாரெல்லாம் இந்த விவகாரத்திற்குக் காரணமானவர்கள் என்று பட்டியலிடுங்கள். உடனே அவர்களைப் போட்டுத் தள்ளுங்கள் என்றார்.

ஆனால் அது அத்தனை சுலபமான காரியம் அல்ல. மூனிச்சில் தாக்குதல் நடத்தியது போராளிகள்தான். ஆனால் வெறும் பகடைக் காய்கள். அந்தத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டிக் கொடுத்த சூத்திரதாரிகள் ஏற்கெனவே தலைமறைவாகியிருந்தார்கள். தங்களை மொஸாட் எப்படியும் தேடி வரும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

பாலஸ்தீனத்தில் இருந்தாலாவது கண்டுபிடித்துவிடலாம். ஆனால் அவர்களோ வெவ்வேறு தேசங்களுக்குச் சென்று பதுங்கியிருந்தார்கள். ஒருவரை ஒரு இடத்தில் வைத்துப் பிடிப்பதே கடினம். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு தேசத்தில் வைத்துத் தேட முடியுமா? தேடித்தான் ஆக வேண்டும். பாலஸ்தீனர்களைப் பழிதீர்க்க வேண்டும்.

மொஸாட் களத்தில் இறங்கியது.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *