ஜூலை 21, 1973.
லில்லிஹாமர். நார்வே நாட்டில் அமைந்துள்ள சிற்றூர். அவ்வூரின் அழகிய மாலை வேளையில் இரண்டு நபர்கள் பேருந்தின் வருகைக்காகக் காத்திருந்தனர். ஊரைச் சுற்றிலும் அமைதி. குண்டூசி விழுந்தால்கூடப் பெரிதாய் எதிரொலிக்கும் நிசப்தம். அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பேருந்து சாலையில் நுழைந்தது.
இப்போது காத்திருந்தவர்களின் கைகளில் துப்பாக்கி முளைத்தது. பேருந்து அவர்களை நெருங்கியபோது இருவரும் தயாரானார்கள். பேருந்தின் கதவு திறந்தது. இறங்கியது ஓர் இளைஞரும், அவரது கர்ப்பிணி மனைவியும்.
கணவனும் மனைவியும் இரண்டு அடிகூட நகர்ந்திருக்கமாட்டார்கள், காத்திருந்தவர்கள் தாவிச் சென்று அந்த இளைஞரின் முன் நின்றார்கள். அந்த இளைஞர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். துப்பாக்கியிலிருந்து சரியாக 16 தோட்டாக்கள் அவரது உடலில் பாய்ந்தது. இளைஞர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் விழுந்தார். அவரது மனைவி செய்வதறியாது திகைத்து நின்றார். அவரது கண்களில் நீர் மட்டும் வழிந்துகொண்டிருந்தது.
சுட்டவர்கள் சிரித்துக்கொண்டே அங்கிருந்து ஓடினார்கள்.
‘அலி ஹசனைக் கொன்றுவிட்டோம். அலி ஹசனை பழி வாங்கிவிட்டோம்.’
நொடிப்பொழுதில் அங்கிருந்து மறைந்தார்கள்.
அந்தப் பெண்மணி இன்னும் அதிர்ச்சியிலேயே இருந்தார். அவருக்கு எதுவும் புரியவில்லை. கண்முன்னே கணவர் இறந்து கிடக்கிறார். அவரைச் சிலர் சுட்டுவிட்டு ஓடுகிறார்கள். எங்கிருந்து வந்தார்கள்? ஏன் சுட்டார்கள்? ஒன்றும் விளங்கவில்லை. அழுதுகொண்டே நின்றார்.
சிறிது நேரத்தில் போலீஸ் வாகனம் அங்கு வந்தது. மனைவியிடம் விசாரித்தது.
‘என்ன நடந்தது?’
‘நானும் என் கணவரும் திரைப்படம் முடிந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டு இருந்தோம்… என் கணவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்…’ வார்த்தைகள் தழுதழுத்தன.
காவலர்கள் அவரை ஆறுதல்படுத்த முயன்றார்கள்.
‘கொஞ்சம் அமைதியாக இருங்கள். உங்கள் கணவரின் பெயர் என்ன?’
‘அஹ்மத் பெளச்சிகி.’
0
மூனிச் படுகொலைக்குப் பழிவாங்குவதாகக்கூறி மொஸாட் உளவாளிகள் வேட்டையைத் தொடங்கி சில மாதங்கள் ஆகியிருந்தன. கருப்புச் செப்டம்பரைச் சேர்ந்த போராளிகள் எனச் சந்தேகப்பட்டவர்கள் எல்லாம் சந்தேகத்துக்கு இடமின்றிப் பரலோகம் அனுப்பி வைக்கப்பட்டார்கள். மிச்சமிருந்தது அந்தக் கும்பலின் தலைவன் என்று மொஸாட் நம்பி வந்த அலி ஹசன் சலாமே மட்டுமே.
அவர் எங்கிருக்கிறார் என்று மொஸாட் வலைவிரித்துத் தேடி வந்தது. கருப்பு செப்டம்பர் ஆட்களைப் பிடித்து லஞ்சம் கொடுத்து தலைவன் இருக்கும் இடத்தின் ரகசியத்தைக் கறக்கப்பார்த்தது. இப்படியாக அல்ஜீரியாவைச் சேர்ந்த கெமல் பெனமனே என்பவர் அலி ஹசனைச் சந்திக்கப்போகிறார் என்ற துப்பு கிடைத்தது. மொஸாட் அவரைப் பின் தொடர்ந்தது. கெமல் பெனமனே முதலில் டென்மார்க் சென்றார். அங்கிருந்து ஓஸ்லோவுக்கு பயணப்பட்டார். இறுதியாக லில்லிஹேமருக்குச் சென்று ஒருவரை இரண்டு முறை சந்தித்தார். உடனே மொஸாட் அவர்தான் அலி ஹசன் என முடிவு செய்துவிட்டது.
இந்தத் தகவலை வைத்துக்கொண்டு லில்லிஹாமருக்குள் நுழைந்து, திட்டம் தீட்டி பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தவரைத் தீர்த்துக்கட்டியது. ஆனால் உண்மை என்னவென்றால் இறந்தது அலி ஹசன் கிடையாது. அஹ்மது பெளச்சிகி. மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர். லில்லிஹாமரில் ஓர் உணவகத்தில் சர்வர் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். அவரைத்தான் சம்பந்தமே இல்லாமல் போட்டுத் தள்ளியிருந்தது மொஸாட்.
பெளச்சிகியின் மனைவியிடம் இருந்து தகவலைச் சேகரித்துக்கொண்ட காவலர்கள் உடனே கொலைகாரர்களைத் தேடும் பணியில் இறங்கினர். லில்லிஹாமர் மிகச் சிறிய ஊர். மொத்தமே நூறு வீடுகள்தான் இருக்கும். யாருக்கும் தெரியாமல் அங்கு ஈ, காக்கைகூட உள்ளே வர முடியாது. உள்ளூர் மக்கள் சில மர்மநபர்கள் அங்கே நடமாடுவதை ஏற்கெனவே கவனித்து வைத்திருந்தனர். பெளச்சிகி கொலை செய்யப்பட்ட பிறகு தாங்களாகவே முன்வந்து தங்களுக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்லிவிட்டனர். போலீஸ் இன்னும் கொஞ்சம் துழாவியபோது உளவாளிகள் தங்கியிருந்த விடுதியின் விவரமும் கிடைத்து. அங்கிருந்து உளவாளிகளின் மொத்த ஜாதகத்தையும் உருவிக்கொண்டு அவர்கள் தப்பிச் செல்வதற்குள் ஓஸ்லோ நகரத்தில் வைத்துப் பிடித்துவிட்டார்கள்.
பொதுவாக உளவாளிகள் போலீஸிடம் மாட்டிக்கொண்டால் உண்மையைச் சொல்லாமல் இருப்பதற்குக் கடுமையான பயிற்சிகள் எல்லாம் வழங்கப்பட்டிருக்கும். சித்திரவதை செய்தால்கூட உண்மையைச் சொல்லிவிடாதபடி அவர்களுக்கு மன உறுதி ஏற்பட்டிருக்கும். சாதாரண உளவாளிகளே இப்படியென்றால் மொஸாட் உளவாளிகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
அப்படித்தான் போலீஸ் நினைத்தது. ஆனால் மொஸாட் உளவாளிகளோ லத்தியை எடுத்தவுடனேயே பயந்துபோய் எல்லா உண்மையையும் சொல்லிவிட்டார்கள்.
ஐரோப்பாவில் தங்கியிருக்கும் மற்ற உளவாளிகளின் பெயர்கள், அவர்களுடைய ரகசிய உறைவிடங்கள், அவர்கள் செயல்படுத்த வைத்திருக்கும் திட்டங்கள் என எல்லாவற்றையும் கொட்டிவிட்டார்கள். அப்போதுதான் மொஸாட் இப்படி ஒரு திட்டமிட்ட படுகொலைகளைச் செய்து வருகிறது என்பதே வெளி உலகிற்குத் தெரிய வந்தது.
உடனே இந்த விவகாரம் சர்வதேசப் பிரச்னையாக உருவெடுத்தது. ஐரோப்பியர்கள் கொந்தளித்துப்போனார்கள். எங்கள் நாட்டில் உழைந்து இப்படி எல்லோரையும் கொன்று வீசுவீர்களா? இது மனித உரிமை மீறல் இல்லையா? என்றெல்லாம் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள்.
மொஸாட் பதறிபோய்விட்டது. சிக்கிய உளவாளிகள் இன்னும் என்னென்னவெல்லாம் உளறி வைத்திருக்கிறார்களோ எனப் பயந்துகொண்டு ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்திருந்த உளவாளிகளை எல்லாம் திரும்பிப் பெற்றுக்கொண்டது.
லில்லிஹாமர் விவகாரம் மொஸாடுக்கு மிகப்பெரிய அவப்பெயரைத் தேடித் தந்தது. இதற்கு மேலும் ஐரோப்பாவிற்குச் சென்று அலி ஹசனைத் தேடுவது சிக்கலில்தான் முடியும். எல்லாவற்றையும் ஆரப்போட்டுவிட்டு அமைதியாகக் காத்திருப்போம் என முடிவு செய்தது. அவனே நிச்சயம் வெளியே வருவான். அப்போது பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு ஆபரேஷன் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று தந்தி அனுப்பிவிட்டது.
எஞ்சிய உளவாளிகள் நாடு திரும்பினர். திட்டத்தைச் சொதப்பிய அவமானம் மொஸாடுக்கு ஆறா வடுவாக மாறி இருந்தது. இதுவெறும் தற்காலிகப் பின்னடைவுதான். இப்போதைக்குப் பதுங்குவோம். பின்னர் பாய்வோம் எனக் காத்திருந்தது மொஸாட். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் காத்திருந்தது.
ஆனால் அலி ஹசன் அவர்கள் நினைத்ததுபோல ஐரோப்பாவில் எல்லாம் பதுங்கியிருக்கவில்லை. இஸ்ரேலின் எல்லையில் அமைந்திருந்த லெபனானில்தான் அவர் சுற்றி வந்தார். மொஸாட் உலகம் முழுவதும் தேடட்டும் நாம் உள்ளூரிலேயே ஒதுங்கியிருப்போம் எனச் சுற்றவிட்டிருந்தார். இது தெரிந்தவுடன் மொஸாட் கொதித்தெழுந்தது. இந்தமுறை அலி ஹசனை எப்படியும் தூக்கிவிட வேண்டும் என்று திட்டத்தில் குதித்தது.
(தொடரும்)