Skip to content
Home » மொஸாட் #12 – இளவரசனின் மரணம்

மொஸாட் #12 – இளவரசனின் மரணம்

சிவப்பு இளவரசன் என்று அழைக்கப்பட்ட அலி ஹசன் சலாமே உண்மையில் சுவாரஸ்யமானவர். அவரது தந்தையும் ஒரு போராளி. பாலஸ்தீனம் பிரிட்டன் ஆட்சியின்கீழ் இருந்தபோது ஏகாதிபத்தியப் படைகளை எதிர்த்துப் போராடியவர்.

அலி ஹசன் தன் தந்தையின் சாகசக் கதைகள் எல்லாவற்றையும் கேட்டுத்தான் வளர்ந்தார். ஆனால் இளம்வயதில் ஒருநாள்கூட அவர் போராளியாகவேண்டும் என விரும்பியதில்லை.

அலி ஹசன் சிறுவயதிலிருந்தே புத்திசாலி. ஆனால் கேளிக்கை விரும்பி. பள்ளிக்கூடம் போவதாகச் சொல்லிவிட்டு சினிமாவிற்குச் செல்வார். ஆனால் வகுப்பில் முதல் மாணவராக வருவார்.

பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் பொறியியல் படிப்பதற்கு ஐரோப்பா சென்றுவிட்டார். அப்போதிலிருந்து வாழ்க்கையைக் கொண்டாடவேண்டும் என்பது மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்தது.

ஐரோப்பாவிலிருந்து திரும்பிய அலி ஹசன், தாயாரின் வற்புறுத்தலால்தான் பி.எல்.ஓ. இயக்கத்தில் இணைந்தார். ஆனால் அங்கேயும் அசைக்க முடியாத ஆளுமையாக உயர்ந்தார்.

பி.எல்.ஓவின் மக்கள் தொடர்பு பிரிவில் தன் பணியைத் தொடங்கிய அலி ஹசன், தன் அறிவாற்றலால் அடுத்த சில ஆண்டுகளிலேயே அவ்வமைப்பின் உளவுப் பிரிவுத் தலைவரானார்.

ஜோர்டனில் உள்நாட்டுப் போர் தொடங்கி பி.எல்.ஓ வெளியேற்றப்பட்ட பிறகு துரோகம் செய்த அந்நாட்டு அரசையும், இஸ்ரேலையும் பழிவாங்கவேண்டும் என்று கருப்பு செப்டம்பர் இயக்கத்தில் இணைந்தார்.

ஒருபக்கம் பி.எல்.ஓவில் அரசியல் பணிகள், மறுபக்கம் கருப்பு செப்டம்பரில் பழிவாங்கல் படலம் என இருமுனைகளிலும் தீவிரமாக இயங்கி வந்தார்.

மூனிச் கடத்தல்காரர்களுக்கு அலி ஹசன் பயிற்சி, ஆயுதங்கள் எல்லாம் வழங்கினார் என்பதில் கொஞ்சம்கூட மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அந்தத் திட்டத்திற்கு அவர் மூளை கிடையாது என்பதே பாலஸ்தீனர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

அப்போது யார் தலைவன்? உண்மையில் மூனிச் சம்பவத்தைத் திட்டமிட்டது ஜெர்மனியில் பணியாற்றி வந்த ஓர் அரபு பொறியாளர். மூனிச்சில் ஒலிம்பிக் கிராமத்தை வடிவமைத்த குழுவில் அவர் இருந்தார். அதனால்தான் அப்பகுதியின் இண்டு இடுக்கெல்லாம் தெரிந்துகொண்டு அவரால் இஸ்ரேலிய வீரர்களைக் கடத்த முடிந்தது.

இத்தனைக்கும் அவர்களைக் கொல்வது போராளிகளின் திட்டம் கிடையாது. ஒலிம்பிக்கில் இஸ்ரேலுக்கு மட்டும் பிரதிநிதித்துவம் கிடைக்கிறது, பாலஸ்தீனர்களுக்கு இடமில்லையே என்ற கோபம். இஸ்ரேலியர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்து, அந்நாட்டு அரசு கைது செய்து வைத்திருக்கும் பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்துவிடலாம் என்பதுதான் திட்டம். ஆனால் துருதிஷ்டவசமாகக் கடத்தல் கொலையாகிவிட்டது.

இஸ்ரேலிய வீரர்களைக் கடத்திய போராளிகளில் ஒருவராகவே அதன் தலைவரும் இருந்தார். ஜெர்மன் கமாண்டோக்கள் போராளிகளைக் கொன்றபோது அவரும் இறந்துவிட்டார் என்பதுதான் பாலஸ்தீனர்கள் தரப்பில் சொல்லப்படுவது.

ஆனாலும் இஸ்ரேல் அலி ஹசனைப் பலி தீர்க்க வேண்டும் என்று உறுதியாக இருந்தது. இதற்குப் பின்னணியாகச் சில காரணங்கள் இருந்தன.

முதல் காரணம், மூனிச் படுகொலை நடந்து முடிந்தவுடன் ஜெர்மன் பத்திரிகைகளெல்லாம் சேர்ந்துகொண்டு புலன் விசாரணை நடத்தி யார் இந்தப் போராளிகளின் தலைவன் எனத் தேடத் தொடங்கின. ஆளாளுக்கு பேப்பரையும் பேனாவையும் தூக்கிக்கொண்டு கையில் அகப்படும் அரேபியர்களை எல்லாம் பேட்டி எடுத்தன. இதில் கருப்பு செப்டம்பர் இயக்கத்தைச் சேர்ந்த அலி ஹசன்தான் போராளிகளுக்குப் பயிற்சி அளித்தார் என்று தெரியவந்தது. அதனால் அந்தத் திட்டத்திற்கு அவர்தான் தலைவர் என்று சொல்லிவிட்டன.

அதையே இஸ்ரேலும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டது. மேலும் மூனிச் படுகொலையைத் தாண்டி அலி ஹசனைத் தீர்த்துக் கட்டுவதற்கு இஸ்ரேலுக்கு மேலும் ஒரு வலுவான காரணமும் இருந்தது.

அலி ஹசன் சலாமே உண்மையில் பி.எல்.ஓவின் மிக முக்கியப் போராளி. அதையும் தாண்டி மிகச் சிறந்த ராஜதந்திரி.

லெபனானில் உள்நாட்டுப் போர் நடந்தபோது பி.எல்.ஓ தரப்பில் லெபனான் படைகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்தார். ஒருகட்டத்தில் மேற்கு பெய்ரூட்டில் இருந்த அமெரிக்கத் தூதரகத் அதிகாரிகளுடன் பழக்கமாகி அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏவுடன் நெருக்கமானார். இதன்மூலம் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருந்த லெபனான் பகுதிகளில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் தெரிந்துகொண்டு இஸ்ரேல் ராணுவத்திற்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

இது அனைத்தும்தான் அலி ஹசன் மீது வஞ்சம் தீர்க்கவேண்டும் என்கிற எண்ணத்தை மொஸாடுக்கு விதைத்தது. கருப்பு செப்டம்பர் போராளிகள் வேட்டையில் மொஸாட் உளவாளிகள் லெபனானில் நுழைந்து தாக்குதல் நடத்தியபோது அலி ஹசன் அங்குதான் இருந்தார். தூதரகக் கட்டடத்தில் அவரது இல்லம் இருந்ததால் மொஸாடால் நெருங்க முடியவில்லை.

ஆனால் இந்தமுறை அவருக்கு எப்படியும் முடிவுரை எழுதிவிடவேண்டும் என்று முடிவு செய்துவிட்டுத்தான் மொஸாட் களத்தில் குதித்தது. அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்தது ஒரு பெண்.

அலி ஹசனுக்கு இரண்டு பக்கங்கள் இருந்தன. ஒருபக்கம் அவர் தீவிரமான போராளி. மற்றொரு பக்கம் கேளிக்கை பிரியர். விடுதிகளில் விடிய விடிய விருந்துகள் நடத்துவது, ஆடம்பரமான கார்களை வாங்கி குவிப்பது, பெண்களை அழைத்து வந்து நடனமாடுவது என்று உல்லாச வாழ்க்கையை விரும்பினார். மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற ஜார்ஜினா ரிஜ்க் என்கிற பெண்ணைத்தான் திருமணமும் செய்திருந்தார்.

கல்யாணமான பிறகும்கூட அவர் தனது கேளிக்கை வாழ்க்கையை மறந்துவிடவில்லை. இதைப் பயன்படுத்தி மொஸாட் வலை விரித்தது.

அலி ஹசனை வேவு பார்க்க ஒரு பெண் உளவாளியை பெய்ரூட்டுக்கு அனுப்பியது மொஸாட். அந்தப் பெண் உளவாளியின் பெயர் எரிகா சேம்பர்ஸ். பிரிட்டனைச் சேர்ந்தவர். அலி ஹசன் தங்கியிருக்கும் வீட்டிற்குப் பக்கத்திலேயே அபார்ட்மென்ட் ஒன்றை வாடகைக்குப் பிடித்து அங்கு எரிகாவைக் குடிவைத்தது மொஸாட்.

எரிகா தன் வீட்டிலிருந்து அலி ஹசனின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கத் தொடங்கினார். அவர் காலையில் எப்போது எழுவார், எத்தனை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புவார், எந்த வழியில் செல்வார், எந்தக் காரில் செல்வார் அனைத்தையும் கண்காணித்தார்.

மேலும் பாலஸ்தீன அகதிகளுக்குச் சேவை செய்யும் வெளிநாட்டுப் பெண்மணிபோல நடித்து அலி ஹசனின் உள்வட்டத்திற்குள்ளும் எரிகா நெருங்கினார். இப்படித் திட்டமிட்டு ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து அலிஹசனுக்குத் தேதி குறித்தார்.

எரிகா கொடுத்த தகவலின் அடிப்படையில் மொஸாட் உளவாளிகள் சிலர் பெய்ரூட் வந்தார்கள். அங்கு வைத்து அலி ஹசனை எப்படிக் கொல்லலாம் என்று திட்டமிட்டார்கள். முதலில் சுட்டுக் கொல்வதாகத்தான் திட்டமிடப்பட்டது. ஆனால் அலி ஹசனைச் சுற்றி எப்போதும் குறைந்தது பத்துப் போராளிகளாவது இருந்தார்கள். அவர்களைத் தாண்டி அலி ஹசனை நெருங்குவது கடினம் என எரிக்கா எச்சரித்தார்.

பிறகு என்ன செய்யலாம்? குண்டு வைத்துவிடலாம் என்றார் எரிகா. ஆனால் அதுவும் சுலபம் கிடையாது. நேரடியாக அலி ஹசனின் காரில் குண்டு வைக்கும் அளவுக்கு யாராலும் நெருங்க முடியாது. அதனால் அவர் வழக்கமாகச் செல்லும் வழியில் நீண்ட நாட்களாகப் பழுதடைந்து நின்றுகொண்டிருந்த ஃபோக்ஸ்வேகன் காரில் குண்டு வைப்பதாகத் திட்டம் தீட்டப்பட்டது.

அலி ஹசன் செல்லும் கார் ஃபோக்ஸ்வேகனை நெருங்கியவுடன் குண்டை வெடிக்க வைக்கவேண்டும். குண்டு வெடித்தால் அலி ஹசனும் இறந்துவிடுவார். சுற்றி இருக்கும் போராளிகளும் ஸ்தம்பித்துவிடுவார்கள். அந்த நேரத்தில் உளவாளிகள் தப்பித்துவிடலாம். அதுதான் திட்டம். வழக்கம்போல மொஸாட் பாணி.

திட்டமிட்டதுபோலக் கச்சிதமாகக் குண்டு வைக்கப்பட்டு, ரிமோட் உளவாளிகளின் கையில் இருந்தது.

ஜனவரி 22, 1979 அன்று தன் தாயாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைச் சந்திப்பதற்காக அலி ஹசன் வீட்டிலிருந்து கிளம்பினார். எரிகா பால்கனியில் இருந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார். அலி ஹசன் சென்ற வாகனம் சரியாக மாலை 3.35 மணி அளவில் ஃபோக்ஸ்வேகன் நிறுத்தப்பட்டிருந்த இடத்தைக் கடந்தது. எரிகா உளவாளிகளுக்குச் சைகை காட்ட, ஃபோக்ஸ்வேகனில் வைக்கப்பட்டிருந்த 100 கிலோ வெடிகுண்டு பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

அலி ஹசன் தூக்கி எறியப்பட்டு பிரக்ஞையற்று விழுந்தார். குண்டு வெடித்ததில் சிதறிய இரும்புத் துண்டு ஒன்று அவரது கண்களைத் துளைத்துச் சென்றிருந்தது. உடல் முழுவதிலும் இருந்தும் ரத்தம் வழிந்தோடியது. ஆனாலும் உயிர் துடித்துக்கொண்டிருந்தது. போராளிகள் உடனே அவரது உடலை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கே சிகிச்சை அளிக்கும்போதே அலி ஹசனின் உயிர் பிரிந்தது.

அலி ஹசனுடன் சேர்ந்து நான்கு போராளிகள், பொது மக்கள் என 8 பேர் உயிரிழந்தனர். 16 பேர் குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தனர்.

குண்டு வெடித்தவுடனேயே எரிகா உள்ளிட்ட மொஸாட் உளவாளிகள் பெய்ரூட் நதி வழியாகத் தப்பித்து லெபனானை விட்டு வெளியேறினர்.

அலி ஹசனின் இறுதிச் சடங்கு ஜனவரி 24, 1979 அன்று நடைபெற்றது. இறுதிச் சடங்கில் பி.எல்.ஓ தலைவர் யாசிர் அரஃபாத் உட்பட 20,000 பாலஸ்தீனர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

உண்மையில் அன்றைக்கு அலி ஹசன் இறந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் விசித்திரம். அலி ஹசனைத் தினமும் வெவ்வேறு வழியில் செல்லச் சொல்லி அவரது தங்கை வற்புறுத்திக்கொண்டேயிருந்தார். அதனால் அவர் அன்றைக்கு மாற்று வழியில் செல்வதாகவே திட்டமிட்டிருந்தார். ஆனால் இறுதி நேரத்தில் வழக்கமாகச் செல்லும் பாதையிலேயே செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதேபோல மொஸாட் உங்களை நோட்டமிடுகிறது என சி.ஐ.ஏ உளவாளிகளும் பலமுறை அவரை எச்சரித்திருந்தனர். ஆனால் தன்னை யாராலும் நெருங்க முடியாது என்ற அசட்டுத் தைரியத்திற்கு அலி ஹசன் பலியானார்.

இப்படியாக மூனிச் படுகொலைப் பட்டியலில் இருந்த அனைத்துப் பாலஸ்தீனர்களின் பெயர்களையும் மொஸாட் அழித்தது.

மூனிச் படுகொலைக்குப் பழி வாங்குதல் எனும் பெயரில் மொஸாட் கொலை செய்த நபர்களின் சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. அதேசமயம், கொல்லப்பட்டவர்கள் எல்லாம் நேரடியாக மூனிச் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களா என்றும் தெரியாது.

மூனிச் சம்பவத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக இயங்கியவர்களை எல்லாம் மொஸாட் பழிதீர்த்தது என்பதுதான் விமர்சகர்கள் வைக்கும் குற்றச்சாட்டு.

உண்மையில் மூனிச் படுகொலையில் உயிர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கே பாலஸ்தீனர்களைப் பழிவாங்கும் திட்டத்தில் விருப்பமில்லை என்கிறார் இஸ்ரேலியப் பத்திரிகையாளரான ரோனென் பெர்க்மென். ஒருவேளை குற்றம் செய்தவர்களைப் பிடித்தால் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி வாங்கித் தந்திருக்க வேண்டுமே ஒழிய, கொலைசெய்து வெறி தீர்த்திருக்கக்கூடாது என்பதே பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கருத்து என்கிறார் அவர்.

எது எப்படியோ, மூனிச் படுகொலையை முன்வைத்துப் பாலஸ்தீன விடுதலைப் போராட்டங்களுக்கு எதிரான தனது சதுரங்கக் காய்களை இஸ்ரேல் சாதுர்யமாக நகர்த்திக்கொண்டது என்பது மட்டும் உண்மை.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *