Skip to content
Home » மொஸாட் #13 – விமானக் கடத்தல்

மொஸாட் #13 – விமானக் கடத்தல்

ஜூன் 27, 1976.

இஸ்ரேலின் டெல் அவிவிலிருந்து கிளம்பிய ஏர் ஃபிரான்ஸ் விமானம் பாரிஸ் நகரம் நோக்கிப் பறந்தது. விமானத்தில் 236 பயணிகள், 12 பணியாட்கள் என மொத்தம் 248 பேர் இருந்தனர். அது ஒரே பயணத்தில் பாரிஸ் செல்லும் விமானம் கிடையாது. வழியில் ஏதென்ஸ் நகரில் தரையிறங்கி, சில பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் பறக்க வேண்டும். அன்றைக்கும் அப்படித்தான் விமானம் ஏதென்ஸ் நகரில் இறங்கியது.

ஏதென்ஸில் நான்கு பயணிகள் ஏறினர். பயணிகள் என்பதைவிடப் போராளிகள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இரண்டு பாலஸ்தீனர்கள். இரண்டு ஜெர்மானியர்கள். அதில் ஒருவர் பெண்.

விமானம் ஏதென்ஸிலிருந்து புறப்பட்டதுதான் தாமதம். போராளிகள் தடதடவென எழுந்து துப்பாக்கிகளைத் தூக்கினர். விமான ஓட்டியின் அறையில் ஒரு போராளி நுழைய, பாரிஸுக்குச் செல்லும் விமானம் தன் பாதையை மாற்றிக்கொண்டு உகாண்டா நாட்டின் என்டபே நகரத்திற்குப் புறப்பட்டது. பயணிகளில் கர்ப்பிணிப் பெண் ஒருவரும் இருந்தார். அவரை இறக்கிவிடுவதற்காக மட்டும் வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் ஒருமுறை நின்றது. அதன்பின் நேராக என்டபேதான்.

போராளிகளை உகாண்டா நாட்டு அதிபர் இடி அமீன் அன்புக் கரம் நீட்டி வரவேற்றார். கடத்தல் நாடகம் குறித்த விஷயங்கள் ஏற்கெனவே அவருக்குச் சொல்லப்பட்டிருந்தன. இடி அமீனுக்குத் தனிப்பட்ட முறையில் இஸ்ரேலுடன் பஞ்சாயத்து இருந்ததால் அவர் முழுமனதுடன் போராளிகளுக்கு உதவிடச் சம்மதித்தார்.

மறுபக்கத்தில் இஸ்ரேல் தவியாய் தவித்துக்கொண்டிருந்தது. ஏதென்ஸிலிருந்து கிளம்பிய விமானம் ஏன் உகாண்டா போனது? யார் உத்தரவு கொடுத்தது? என்ன நடக்கிறது? எதுவும் புரியாமல் விழித்தது.

சற்றுநேரத்தில் போராளிகள் இஸ்ரேலைத் தொடர்புகொண்டனர்.

‘உங்கள் விமானம் எங்கும் போய்விடவில்லை. இங்குதான் பத்திரமாக இருக்கிறது.’

அவ்வளவுதான். அதன் பிறகு ஒருவார்த்தை இல்லை. இஸ்ரேல் பலமுறை அழைத்தபோதும் பதில் இல்லை. ஜூன் 29ஆம் தேதி மீண்டும் போராளிகளிடம் இருந்து அழைப்பு, ‘மாண்புமிகு இஸ்ரேல் பிரதமர் அவர்களே நாங்கள் பாப்புலர் ஃபிரண்ட் ஃபார் தி லிபரேஷன் ஆஃப் பாலஸ்தீன் அமைப்பைச் சேர்ந்த போராளிகள். எங்களுடன் மேற்கு ஜெர்மனி புரட்சிகர இயக்கத்தின் தோழர்களும் இருக்கிறார்கள். நாங்கள் உங்கள் விமானத்தைக் கடத்தி இருக்கிறோம். எங்களுக்குப் பணம், காசு எல்லாம் தேவையில்லை. ஒரே ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். உடனே நிறைவேற்றுங்கள்’.

என்ன வேண்டுகோள்?

இஸ்ரேல் கைது செய்து வைத்திருக்கும் பாலஸ்தீனப் போராளிகள் 40 பேரை விடுதலை செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் மேற்கு ஜெர்மனியின் செம்படைப் பிரிவு, ஜப்பானியச் செம்படை அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த போராளிகள் 6 பேர் ஜெர்மனியிலும், 5 பேர் கென்யாவிலும், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருவரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டும். இதுதான் வேண்டுகோள்.

போராளிகளை விடுதலை செய்தால் நாங்கள் கடத்தி வைத்திருக்கும் பயணிகளின் தலைகள் தப்பும். இல்லையென்றால் மொத்தமாக விமானத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்துவிட்டு வந்த வழியில் திரும்பிவிடுவோம். உங்களுக்கு ஒருநாள் மட்டும் கெடு. ஜூலை 1ஆம் தேதி மதியம் 2 மணிக்குள் போராளிகள் அனைவரும் விடுதலையாகியிருக்க வேண்டும் என்றார்கள்.

இஸ்ரேலுக்கு ஒன்றும் புரியவில்லை. இது என்ன தலைவலியாக இருக்கிறது? திடீரென்று விமானத்தைக் கடத்துகிறார்கள். என்னென்னவோ கோரிக்கை வைக்கிறார்கள். என்ன செய்வது? யாரிடம் உதவி கேட்பது?

தாமதிக்க நேரமில்லை. உடனே மொஸாடை அழைத்து விஷயத்தைச் சொல்லுங்கள் எனச் சொல்லிவிட்டார் இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ரபீன். மொஸாட் யோசித்தது. நீங்கள் பேச்சுவார்த்தை நடத்துங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

வழக்கமாக இஸ்ரேலுக்குப் பேரம் பேசப் பிடிக்காது. நாங்கள் சொல்வதுதான் தீர்ப்பு. நாங்கள் வைப்பதுதான் சட்டம் என்பதுதான் இஸ்ரேலின் பாணி. இந்தமுறையும் அதைத்தான் செய்ய நினைத்தது. ஆனால் எடுத்தவுடன் தடாலடியாக மறுக்காமல் வாருங்கள் கொஞ்சம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என நாடகம் ஆடியது.

இந்தத் தருணத்தில் என்டபேயில் மேலும் ஆறு போராளிகள் இணைந்துகொண்டனர். அவர்களுடைய பாதுகாப்புக்கு ராணுவத்தையும், ஆயுதங்களையும் அனுப்பி வைத்தது உகாண்டா அரசு. வேறு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் அத்தனையும் செய்துதரப்படும் என்று சொல்லிவிட்டார் இடி அமீன்.

0

இந்தச் சமயத்தில் மொஸாட் உளவாளிகள் உகாண்டாவுடன் தொடர்பில் இருந்தவர்களை எல்லாம் பிடித்து விசாரிக்கத் தொடங்கினர். உகாண்டா விமானப்படையுடன் இணைந்து பயிற்சி எடுத்தவர்கள், என்டபே விமான நிலையத்தைக் கட்டிய இஸ்ரேலிய நிறுவனத்தில் பணியாற்றியவர்கள், பிரான்ஸ் நாட்டின் உளவு அமைப்பு, பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்ட், அமெரிக்காவின் சி.ஐ.ஏ, எஃப்.பி.ஐ, கனடாவைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் என யாரையெல்லாம் தொடர்புகொள்ள முடியுமோ அத்தனை பேரையும் பிடித்து தகவல்களைச் சேகரித்தார்கள்.

விமான நிலையம் குறித்த எல்லாத் தகவல்களும் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டன. செயற்கைக்கோள், விமானங்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், விமானநிலையத்தின் வரைபடம் என ஒன்றுவிடாமல் மொஸாட் ஆராய்ந்தது. எப்படித் திட்டம்போட்டு பயணிகளை மீட்கலாம் என்று யோசித்தது.

இஸ்ரேல் இவ்வாறு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது போராளிகள் மேலும் சில பயணிகளை விடுவித்தனர். இப்போது இஸ்ரேலைச் சேர்ந்த 105 பயணிகள் மட்டும் பணயக் கைதிகளாக விமானத்தில் இருந்தனர்.

இஸ்ரேலியர்கள் மட்டும் இருப்பதால் தாமதிக்காமல் அந்நாட்டு அரசு முடிவெடுக்கும் என்று போராளிகள் நினைத்தனர். ஆனால் மொஸாடோ வேறுவிதமாக யோசித்தது. போராளிகளின் இந்த நடவடிக்கையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது.

விடுவிக்கப்பட்ட பயணிகளைச் சந்தித்து மேலும் சில தகவல்களைக் கறந்தது. போராளிகள் எத்தனை பேர்? என்ன ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள்? அவர்கள் தோற்றம் எப்படி இருக்கும்? உயரமா, குள்ளமா? குண்டா ஒல்லியா? விமான நிலையத்தின் எந்தத் திசையில் விமானம் நிறுத்தப்பட்டிருக்கிறது? எல்லாவற்றையும் கேட்டு வாங்கிக்கொண்டது.

கிடைத்த தகவல்களை வைத்து என்டபே விமான நிலையத்தின் மாதிரியே பாலைவனத்தில் உருவாக்கப்பட்டது. அங்கு ஒரு போலி விமானத்தைக் கட்டமைத்து, அதனுள் கமாண்டோ தாக்குதல் நடத்த ஒத்திகை பார்க்கப்பட்டது.

கமாண்டோக்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற பட்டியலைத் தயாரித்திருந்தனர். முதலில் விமான நிலையத்தில் நுழையவேண்டும், பாதுகாப்புக்கு நிற்கும் உகாண்டா வீரர்களைக் கொல்லவேண்டும், விமான நிலையத்தை வானிலிருந்து கண்காணிக்கும் விமானங்களைச் சமாளிக்கவேண்டும். இறுதியாகப் பயணிகளை மீட்கவேண்டும். இதையெல்லாம் செய்யவேண்டும் என்றால் வெளிச்சம் இல்லாத இரவு வேளையில் செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இத்தனையும் நடந்தபோது இஸ்ரேல் பேச்சுவார்த்தை என்கிற பெயரில் காலதாமதம் ஏற்படுத்தியது. போராளிகளை விடுவிக்க ஒருநாள் கெடு கொடுத்தவர்களிடம் என்னென்னவோ பேசி, குழப்பி நான்கு நாட்கள் எடுத்துக்கொண்டு எல்லாத் திட்டங்களையும் கச்சிதமாக முடித்திருந்தது. அடுத்து உகாண்டாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது மட்டுமே மிச்சம். எப்படி நுழையலாம்?

இந்தச் சமயத்தில்தான் உகாண்டாவுக்குப் பக்கத்தில் இருக்கும் நாடான கென்யா இஸ்ரேலுக்கு உதவ முன்வந்தது. கமாண்டோக்கள் வந்திறங்கத் தங்கள் நாட்டு விமான நிலையத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியது.

பயணிகளை அழைத்துச் செல்ல இரண்டு விமானங்கள் கென்யா தலைநகர் நைரோபியில் வந்திறங்கின. அதில் விமானப்படை தளபதி, 23 மருத்துவர்கள் கொண்ட குழு இடம்பெற்றிருந்தனர். தாக்குதல் நடத்த இருக்கும் கமாண்டோக்கள் கனரக விமானம் ஒன்றில் வந்திறங்கினர். இதைத்தவிர ரகசிய விமானம் ஒன்றும் அரேபியர்களின் போர் விமானங்களைச் சமாளிக்கக் கொண்டு வரப்பட்டது.

அடுத்ததாக உகாண்டா அதிபர் இடி அமீன் பயணிக்கும் காரை போன்ற மற்றொரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஆறு ராணுவ வீரர்கள் முகத்தில் கருப்பு நிறம் பூசிக்கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களிடம் சத்தமில்லாமல் சுடும் துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டிருந்தன. எல்லாம் தயாராகிவிட்டது. அடுத்து தாக்குதல் நடத்துவது மட்டுமே பாக்கி.

ஜூலை 4ஆம் தேதி இரவு 11 மணி. உகாண்டா அதிபர் இடி அமீன் போராளிகளைச் சந்திக்க வருவதாக வதந்தி பரப்பட்டது. ஆனால் உள்ளே வந்தது மொஸாட் தயாரித்து வைத்திருந்த கார். அதிலிருந்த வீரர்கள் உகாண்டா ராணுவத்தினரைச் சத்தமில்லாமல் சுட்டுக் கொன்று முன்னேறினர். அதன்பின் ஜீப்பில் பறந்து வந்த கமாண்டோ படையினர் விமானத்தை நெருங்கித் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் துப்பாக்கிச் சூடு ஆரம்பித்தது. கடுமையாக நடைபெற்ற சண்டையில் போராளிகள் ஏழு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் விசாரணைக்குப் பிடிபட்டனர். கிட்டத்தட்ட 45 உகாண்டா வீரர்களும் இந்தச் சண்டையில் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் தரப்பில் கமாண்டோக்களின் தலைவர் உயிரிழந்தார். அவர் இப்போது இஸ்ரேலியப் பிரதமராக இருக்கும் பெஞ்சமின் நேதன்யாகுவின் மூத்த சகோதரர். அதோடு சண்டையில் பயணிகள் மூன்று பேரும் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் காப்பாற்றப்பட்டு விமானங்களில் ஏற்றப்பட்டனர்.

என்டபேவிலிருந்து புறப்பட்ட விமானம் நைரோபிக்குச் சென்று பயணிகளுக்குச் சிகிச்சை எடுத்துவிட்டு இஸ்ரேல் திரும்பியது.

0

என்டபே சம்பவம் மொஸாட் வரலாற்றில் மிகப்பெரிய சாகசமாகப் பார்க்கப்படுகிறது. ஐக்மென் கடத்தல், மூனிச் பழிவாங்கல்போல என்டபே விஷயத்திலும் இஸ்ரேலின் புகழ் உலகம் பரவியது.

ஆனால் இந்தக் கடத்தலுக்கு மறுபக்கமும் இருக்கிறது.

இஸ்ரேல் விமானம் கடத்தப்பட்ட அன்று ஏமனில் இயங்கி வந்த பாலஸ்தீனப் போராளிகள் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில்,

‘இஸ்ரேலுக்கு உதவி செய்வதால் ஃபிரான்ஸ் அரசையும் அரபு நாடுகளின் விரோதியாக அறிவிக்கிறோம். எங்களுக்குப் போராளிகளை விடுவிப்பது இரண்டாம்பட்சம்தான். முதல் இலக்கு பாலஸ்தீன மண்ணைச் சுதந்திரம் அடையச் செய்வது. ஜியோனியர்களை ஒட்டுமொத்தமாக பாலஸ்தீனத்திலிருந்து விரட்டியடிப்பது. பாலஸ்தீனத்தில் ஜனநாயக, மதச்சார்பற்ற சோசியலிச அரசு உருவாக்குவது.

இஸ்ரேலியர்களும் நாஜிக்கள்தான். அவர்கள் அரபு மக்களுக்கும், அவர்களுடைய தோழர்களுக்கும் செய்யும் குற்றங்களை வரலாறு மன்னிக்காது.

நாங்கள் ஏகாதிபத்திய, ஜியோனிய எதிரிகளுக்கு எதிராகத் துப்பாக்கியை உயர்த்துகிறோம். ஜியோனியர்கள் மனிதக்குலத்தின் விரோதிகள். நாகரிகத்தின் விரோதிகள்.

முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், ஜியோனியம் இவற்றின் கைவிலங்கில் அடைபட்டிருக்கும் உலகை விடுவிக்கப் போராடுகிறோம்.’

என்று எழுதப்பட்டிருந்தது.

இங்கேதான் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இஸ்ரேலும் மேற்கத்திய உலகமும் போராளிகளைப் பயங்கரவாதிகளாகப் பார்க்கிறது. ஆனால் போராளிகளும் மத்தியக் கிழக்கு மக்களும் இஸ்ரேலியர்களை நாஜி பயங்கரவாதிகளுடன் ஒப்பிடுகிறார்களே ஏன்? இதில் யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்?

மேலும், போராளிகள் ஏன் சும்மா இல்லாமல் இஸ்ரேலைச் சுரண்டிக்கொண்டே இருக்க வேண்டும்? அப்படி இருவருக்கும் இடையே என்னதான் தகராறு? இந்தத் தகராற்றில் மொஸாட் வகிக்கும் பாத்திரம் என்ன?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை அறிந்துகொள்ள இஸ்ரேல் எனும் தேசம் உருவான குருதி மிகுந்த வரலாற்றின் பின்னணியின் மொஸாடை நாம் ஆராய வேண்டும்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *