யூத தேசம். அங்கிருந்துதான் ஆரம்பித்தது பிரச்னை. உலகெங்கிலும் இன்னல்களை அனுபவித்து வந்த யூதர்கள் அந்தக் கொடுமைகளில் இருந்து தப்பிக்கத் தனி யூதத் தேசத்தை ஸ்தாபிக்க விரும்பினர். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த இடம்தான் பாலஸ்தீனம்.
பாலஸ்தீனத்தில் குடியேற நினைத்த யூதர்கள் ஒரு ஓரமாக இருந்துவிட்டுப் போயிருந்தால் பிரச்னை இல்லை. அங்கே ஏற்கெனவே வாழ்ந்து வந்த அரேபியர்களை எல்லாம் அடித்துவிரட்டிவிட்டு அந்த நிலத்தை அபகரிக்க முயன்றதுதான் சேதாரமாகிப்போனது.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சியோனிஸம் எனும் அரசியல் பதாகையின் கீழ் பாலஸ்தீனம் வந்த யூதர்கள் முதலில் அங்கிருந்த நிலங்களை விலை கொடுத்து வாங்கினர். இதுபோதாது என்று வன்முறை வழியையும் தேர்ந்தெடுத்து, அரேபியர்களை அவர்கள் சொந்த நிலங்களில் இருந்தே வெளியேற்றினர்.
என்ன ஏது என்று சொல்லாமல் தங்கள் நிலங்களைப் பிடுங்கிக்கொண்டு விரட்டும் யூதர்களைப் பார்த்துக்கொண்டு பாலஸ்தீனர்கள் சும்மா இருப்பார்களா? எதிர்த்துக் கேள்விகேட்டனர். இந்த அரேபியர்களிடம் சண்டையிடுவதற்கு உருவானதுதான் பார்-கியோரா, ஹஷோமோர் போன்ற அமைப்புகள். இந்த அமைப்புகள் ஆயுதங்கள் தாங்கி பாலஸ்தீனர்களிடம் சண்டையிட்டன. மறுபக்கம் எதிரிகளின் நகர்வுகளைப் புரிந்துகொள்ள உளவு வேலையும் பார்த்தன.
இப்படித்தான் இஸ்ரேல் எனும் தேசம் உருவாவதற்கு முன்பே யூதர்களுக்கு உளவுத்துறை அவசியப்பட்டது. அதன்பிறகு அந்த அமைப்புகள் காலப்போக்கில் மருவி முறைப்படுத்தப்பட்ட ‘ஹகானா’ எனும் பாதுகாப்புப் படையாக உருவெடுத்தன. இந்த ஹகானாதான் மொஸாடின் முன்னோடி.
ஹகானாவின் முக்கிய வேலை பாலஸ்தீனத்தில் இருந்த அரேபியர்கள், பிரிட்டிஷார்களிடையே ஊடுருவி ஒட்டுக்கேட்பதும், குடியேற்றங்களுக்கு எதிராக இருப்பவர்களைப் போட்டுத் தள்ளுவதுதான்.
முதலில் யூதக் குடியேற்றங்களுக்கு அனுமதி கொடுத்த பிரிட்டன், இரண்டாம் உலகப்போரில் ஆள் பலம் வேண்டும் என்பதற்காக அரேபியர்கள் சார்பு எடுத்தது. இதனால் அவர்களையும் எதிர்க்க வேண்டிய நிலை யூதர்களுக்கு ஏற்பட்டது. இந்தப் பிரிட்டன் படை அரேபியர்களைப்போல அல்ல. நல்ல முறைப்படுத்தப்பட்ட படை.
இவர்களிடம் சண்டையிடுவதற்காக ஹாகானாவில் இருந்து பிரிந்து இர்குன், லெஹி போன்ற தீவிரவாத அமைப்புகள் உருவாகின. இந்த அமைப்புகள் பாலஸ்தீன நிலங்களில் குண்டு வைப்பது, பிரிட்டன் படைகளைச் சிதறடிப்பது போன்ற பயங்கரவாத வேலைகளில் ஈடுபட்டன.
இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது முல் (Gmul) எனும் ரகசியப் பிரிவு உருவாக்கப்பட்டு ஐரோப்பாவிலிருந்து தப்பி வரும் யூதர்களைப் பாலஸ்தீனம் அழைத்து வரும் வேலையையும், இங்கே அரேபியர்களுக்கு எதிராகச் சண்டையிடுவதற்கு வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்கள் சேகரிக்கும் வேலையையும் செய்தது.
இந்தச் சிறிய அமைப்புகள் எல்லாம் ஒருங்கிணைந்து அமையப்போகும் இஸ்ரேல் எனும் தேசத்திற்கு ராணுவ பலத்தையும், உளவு அடித்தளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தன.
0
1947ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனம் எனும் அரேபியர் தேசத்தை உடைத்து 60 சதவிகிதம் யூதர்களுக்கு, 40 சதவிகிதம் அரேபியர்களுக்கு என்று பங்கிட்டுக் கொடுத்தது. அதுவரை பாலஸ்தீனத்தில் ஓரமாக ஒரு தேசம் அமைந்தால்போதும் என்று கேட்டு வந்த யூதர்கள், பாலஸ்தீனப் பிரிவினை அறிவிக்கப்பட்டதும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் போதாது என்று அரேபியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.
ஆனால் யூதர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். பாலஸ்தீனர்களின் எண்ணிக்கையோ அதிகம். அதனால் நேரடி யுத்தம் சரிவராது என்று யூதர்களின் தலைவர் டேவிட் பென் குரியன் நினைத்தார். ராணுவத்திற்குப் பதில் உளவு அமைப்பைப் பயன்படுத்தி பாலஸ்தீனர்களை விரட்டத் திட்டமிட்டார்.
பென் குரியன் ஹகானாவை அழைத்தார்.
‘இதோ பாருங்கள் பாலஸ்தீனர்களிடம் நேரடி யுத்தம் செய்தால் நம்மால் ஜெயிக்க முடியாது. யார் யாரெல்லாம் முக்கியத் தலைவர்கள் என்கிற தகவல்களைச் சேகரியுங்கள். அவர்களைப் போட்டுத் தள்ளுங்கள். தலையை வெட்டிவிட்டால் எவ்வளவு பெரிய உடலாக இருந்தாலும் சரிந்துவிடும். உடனே செய்து முடியுங்கள்.’
இதுதான் இஸ்ரேல் எனும் தேசம் அறிவிக்கப்பட்டபோது ஹகனாவுக்குக் கொடுக்கப்பட்ட முதல் உத்தரவு.
‘ஆபரேஷன் ஸ்டார்லிங்’ என அழைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் வாயிலாக மொத்தம் 23 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இதைத்தவிரப் பாலஸ்தீன நிலங்களில் இருந்த முக்கியப் பகுதிகளை அபகரிக்கும் வேலையும் ஹகானாவுக்குக் கொடுக்கப்பட்டது. ஹகானாவில் இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டன. முதல் அணியின் வேலை பிரிட்டிஷார் கிளம்பியவுடன் பாலஸ்தீனத்தில் உள்ள யோப்பா துறைமுகத்தைக் கைப்பற்றுவது. அங்கு ஏற்கெனவே பிரிட்டன் சேகரித்து வைத்திருந்த ஆயுதங்களையும், தொலைத் தொடர்பு கருவிகளையும் அரேபியர்கள் வருவதற்கு முன்பே களவாடுவது. இதற்காக ஹகானா வீரர்கள் பிரிட்டன் வீரர்கள்போல் மாறுவேடம் அணிந்து அரேபியர்கள் பகுதிகளுக்குள் நுழைந்தனர். துறைமுகத்தில் இருந்த அரேபியர்களைக் கொன்றுவிட்டு வேண்டிய தளவாடங்களைக் கடத்தி வந்தனர்.
ஹகானாவில் இன்னொரு அணியும் ஏற்படுத்தப்பட்டது. இந்த அணி அரேபியர்களைப்போல மாறுவேடம் அணிந்து ரகசியமாகப் பாலஸ்தீன எல்லைகளுக்குள் சென்று அவர்கள் திட்டங்களை வேவு பார்த்தது. பின் முக்கியத் தலைவர்களின் பெயர்களை எல்லாம் பட்டியலிட்டு ஒவ்வொருவராகப் போட்டுத் தள்ளியது. இதற்காகப் பெரும்பாலும் அரேபிய நாடுகளில் அவர்களுடைய கலாசாரம் அறிந்த யூதர்கள் வரவழைக்கப்பட்டனர்.
மேலும் அப்பாவி பொதுமக்களை அவர்கள் நிலங்களிலிருந்து விரட்டுவதற்கும் ஹகானா திட்டம்போட்டுக் கொடுத்தது. ஒருபக்கம் யூதப் பயங்கரவாதிகள் பாலஸ்தீனக் கிராமங்களில் நுழைந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். மறுபக்கம் உளவாளிகள் சென்று ஊரில் காலரா பரவுவதாகவும், குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் புரளியைக் கிளப்பிவிட்டு மக்களைப் பீதியூட்டி வெளியேற வைப்பார்கள்.
இப்படியாகப் பாலஸ்தீனப் பிரிவினை அறிவிக்கப்பட்டபோதே யூதர்களின் அத்துமீறல்களுக்கு உளவுப்படையின் தந்திரங்கள் அவசியமாக இருந்தன.
மே 14, 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் எனும் தேசத்தை பென் குரியன் அறிவித்தார். அறிவித்தவுடனேயே அடுத்தகட்டச் சவால்கள் வரிசைகட்டி நின்றன. இஸ்ரேல் உருவாக்கத்தை எதிர்த்துப் பாலஸ்தீனத்திற்கு உதவுவதாகச் சொல்லிக்கொண்டு அண்டை அரபு நாடுகள் போரெடுத்து வந்தன.
எப்படியும் இஸ்ரேல் எனும் தேசம் அறிவிக்கப்பட்டவுடன் இதுபோன்ற ஒரு போர் தவிர்க்க முடியாதது எனப் பென் குரியன் அறிந்திருந்தார். இதற்காகச் சில ஆண்டுகளுக்கு முன்பே அரேபிய நாடுகளுக்கு உளவாளிகளை அனுப்பி அரபு ராணுவங்களைக் கண்காணிக்க வைத்திருந்தார். இதனால் ஏழு நாடுகளின் ராணுவம் வந்தாலும் அவர்களுடைய பலவீனம் என்ன என்பது தெரிந்து பென்குரியனால் சமாளிக்க முடிந்தது. அதுமட்டுமில்லாமல் சில உளவாளிகள் அரபு மன்னர்களிடம் ரகசிய பேரம் பேசவும் செய்தனர். குறிப்பாக ஜோர்டன், சவுதி அரேபியா போன்ற நாடுகளின் மன்னர்கள் இஸ்ரேலிடம் இருந்து கிடைக்கும் லாபத்தை நினைத்து போரை ஒரு பேச்சுக்கு மட்டுமே நடத்தினர். சிரியா, எகிப்து, ஜோர்டனைத் தவிரப் பிற நாட்டு வீரர்கள் போரில் கலந்துகொள்ளவே இல்லை.
போரின் முடிவில் பாலஸ்தீனர்களிடம் இருந்த மிச்ச நிலங்களையும் இஸ்ரேல், எகிப்து, ஜோர்டன் ஆகிய நாடுகள் ஆக்கிரமித்தன.
இப்படியாகப் பாலஸ்தீனம் எனும் தேசம் இல்லாமலேபோனது.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து உருவாக்கிய இஸ்ரேலின் எல்லை பிரச்னைகள் முன்பைவிடத் தீவிரமாக இருந்தன. எப்போது வேண்டுமானாலும் எதிரிகள் தாக்கலாம் என்கிற நிலைமை. எந்நேரமும் எல்லையைக் கண்காணிக்கும் தேவை. இதற்கு வெறும் ராணுவ ஆள்பலம் மட்டும் போதாது என்று பென் குரியனுக்குத் தோன்றியது. முறைப்படுத்தப்பட்ட நவீன உத்திகளைக் கையாளும் உளவு அமைப்புகள் உருவாக வேண்டும் என்று அவர் நினைத்தார்.
ஏற்கெனவே ஹகானா என்கிற அமைப்பு இருந்தாலும் அது முழு உளவு அமைப்பு அல்ல. பாதி ராணுவம், மீதி உளவு வேலைகளைத்தான் பார்த்துவந்தது. அதனால் முழுதாக முறைப்படுத்தப்பட்ட உளவு அமைப்புகளை நிர்மாணிக்கும் வேலைகளில் இறங்கினார்.
(தொடரும்)