புதிதாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலில் மூன்று உளவு அமைப்புகள் இருந்தன. முதல் அமைப்பின் பெயர் அமான். இது ராணுவ உளவு வேலைகளை மட்டும் பார்க்கும். அடுத்தது ஷின்பெட். உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யும் உளவு அமைப்பு. மூன்றாவது வெளியுறவு உளவு வேலைகளைப் பார்க்கும் அமைப்பு.
பொதுவாக, மூன்றாவதாக உருவாக்கப்பட்ட அமைப்பின் பெயர்தான் மொஸாட் என்று சொல்வார்கள். முதல் இரண்டு அமைப்புகள் உருவானபோது மொஸாட் இல்லை. இதை நாம் ஏன் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் பின்னாளில் மொஸாட் உருவானதற்குப்பின் இருக்கும் காரணிகளைப் புரிந்துகொண்டால்தான் அது ஏன் மற்ற நாடுகளின் உளவு அமைப்புகள்போல இல்லாமல் வானளாவிய அதிகாரம் கொண்ட, யாரும் கேள்விகேட்க இயலாத, கிட்டத்தட்ட கொலைத் தாண்டவங்களை நிகழ்த்தும் பயங்கரவாத அமைப்பாக இருக்கிறது என்பது புரியும்.
பென் குரியன் மூன்றாவதாக உருவாக்கியது ஒரு வெளியுறவு அரசியல் உளவு அமைப்பு. அவ்வளவுதான். அந்நிய நாடுகளின் அரசியல் விவகாரங்களை வேவு பார்ப்பதற்காக மட்டும் அது உருவாக்கப்பட்டது. தாக்குதல் நடத்தவோ, கொலைகள் செய்யவோ அதற்கு அதிகாரங்கள் இல்லை.
இஸ்ரேல் உருவானவுடன் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்ட இந்த உளவு அமைப்புகள் ஆரம்பத்தில் சொதப்பல்களாக இருந்தன. ஹகானாவின் உறுப்பினர்களே இங்கேயும் உளவாளிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. உட்கட்சிப் பூசல்கள் இருந்தன. நீ யார் எனக்கு உத்தரவிடுவது, நான் எதற்கு நீ சொல்வதைக் கேட்க வேண்டும் என்று அதிகாரச் சண்டை வேறு.
இத்துடன் சேர்ந்து சில உள்நாட்டுப் பிரச்னைகளும் பென் குரியனைப் படுத்தி எடுத்தன.
நாம் பார்த்த இர்குன், வெவி போன்ற பயங்கரவாத அமைப்புகள் வெளிப்படையாக பென் குரியனை எதிர்த்து வந்தன. தேசம் என்ற ஒன்று உருவானபின் பிரதமரின் உத்தரவுகளை மதிக்க வேண்டும் என்றில்லாமல் இன்னும் பழைய அதிகாரங்களுடன் தன்னிச்சையாக இயங்குவோம் என்று அடம்பிடித்து வந்தன. இது பென் குரியனுக்குத் தலைவலியானது.
குறிப்பாக இர்குன் அமைப்பு தனக்கு வேண்டிய ஆயுதங்களை ஐரோப்பாவிலிருந்து வாங்கி கப்பலில் எடுத்துக்கொண்டு வந்தது. இப்படியெல்லாம் பயங்கர ஆயுதங்களை ராணுவத்தினரைத் தவிர யாரும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி அவற்றைப் பறிமுதல் செய்ய பென் குரியன் உத்தரவிட்டார். இர்குன் தலைவர்களோ ஆயுதங்களைத் தர முடியாது என மறுப்புத் தெரிவித்து ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். நடுக்கடலில் நடந்த இந்தச் சண்டையால் கப்பல் சேதமாகி மூழ்கிவிட்டது.
மற்றொருபக்கம் லெகி அமைப்பும் பென் குரியனை எதிர்த்தது. இஸ்ரேல் உருவாக்கத்தின்போது பாலஸ்தீனர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலையை ஆராய ஐநா தூதுவர் பெர்னடேட் என்பவர் வந்திருந்தார். இவரைக் கொலை நடந்த பகுதிகளுக்குள் அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் ராணுவம் தடுத்தது. லெகி அமைப்பினர் ஒருபடி மேலே சென்று பேச்சுவார்த்தையெல்லாம் பத்தாது என்று சொல்லி பெர்னடேட்டைக் கொலை செய்துவிட்டனர். இது சர்வதேச அளவில் பிரச்னையாகி இஸ்ரேலுக்குக் கெட்டபெயரானது.
இப்படி ஒவ்வொருவரும் தனித்தனியாக ஆட, இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் காவல் அமைப்புகள் திணறின. இதுபோன்ற சம்பங்கள் நடைபெறப்போவதை முன்பே அறிந்து சொல்ல வேண்டிய உளவு அமைப்புகளோ உட்கட்சிப் பூசல்களில் சண்டையிட்டு வந்தன.
உடனே பென் குரியன் ஐஸர் ஹரேலை அழைத்தார். நாம் ஏற்கெனவே பார்த்த ஐக்மேன் கடத்தலில் மொஸாடின் தலைவராக இருந்த அதே ஐஸர் ஹரேல்தான் இவர். இஸ்ரேலில் உளவு அமைப்புகளை உருவாக்க பென் குரியனுக்கு உதவியரும் இவரே. அவரை அழைத்த பென் குரியன், உள்நாட்டு உளவு அமைப்பான ஷின்பெட்டின் தலைவராக அவரை நியமித்தார்.
இதோ பாருங்கள் ஹரேல், நீங்கள் என்ன செய்வீர்கள் என்று தெரியாது. உள்நாட்டில் இஸ்ரேல் அரசுக்குக் குடைச்சல் கொடுக்கும் அத்தனை அமைப்புகளையும் களையெடுங்கள். சுதந்திர இஸ்ரேலை அமைக்க அவர்கள் போராடி இருக்கிறார்களே என்றெல்லாம் பார்க்க வேண்டாம். இப்போதைக்குத் தேசம் ஒருங்கிணைந்து இயங்குவது அவசியம். அத்தனை எல்லைகளிலும் எதிரிகள் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நாம் உள்ளுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கக்கூடாது. ஈவு இரக்கமே பார்க்க வேண்டாம். மொத்தமாகத் தூக்குங்கள் என்று சொல்லிவிட்டார்.
அதன்பின்தான் ஹரேல் உளவு அமைப்புகளை முறைப்படுத்த ஆரம்பித்தார். யாரெல்லாம் முரண்டு பிடிக்கிறார்களோ எல்லோரையும் தூக்கினார். புதிய ஆட்களை நியமித்தார். நவீனப் பயிற்சிகளை அளித்தார். முழுக்க முழுக்க எல்லா அமைப்புகளும் கண்காணிக்கப்பட்டன. பென் குரியனின் அரசியல் எதிரிகள் அனைவரும் நோட்டமிடப்பட்டனர். குறிப்பாகக் கலகம் செய்த அமைப்புகள் உடனே கலையப்பட்டன.
இப்படியாக உளவுத்துறை உள்நாட்டுப் பிரச்னையைத் தீர்த்தவுடன் அடுத்து வெளிநாட்டுப் பிரச்னைகள் பக்கம் கவனம்போனது.
இஸ்ரேலின் வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்க வேண்டிய நேரம் அது. அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவரின் பெயர் மோஷே ஷெரெட். இவர் ஒரு ராஜதந்திரி. எல்லாவற்றுக்கும் சண்டைக்குச் செல்லாமல் சுற்றி இருந்த அரபு நாடுகளிடம் பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்தவர்.
இஸ்ரேல் எனும் தேசம் உருவானபோது அதனை எந்த அரபு நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. இதனால் வணிகம் செய்ய முடியாமல் பொருளாதாரப் பிரச்னைகள் தலைவிரித்து ஆடின. இதனைச் சரி செய்ய அந்த நாடுகளிடம் நல்லுறவை ஏற்படுத்த மோஷே ஷெரெத் முயன்றார். முதலில் ஜோர்டன் நாட்டுத் தலைவர் அப்துல்லாவையும், லெபனான் பிரதமர் ரியாத் சோலையும் சந்தித்துப் பேசினார். ஆனால் பேச்சுவார்த்தை பலனளித்ததுபோலத் தெரியவில்லை. அரேபியர்கள் முழுக்க முழுக்க இஸ்ரேல் எதிர்ப்பு நிலையிலேயே இருந்தனர்.
பென் குரியனுக்கோ இந்த அமைதி வழியில் விருப்பம் இல்லை. மேற்கத்திய நாடுகளின் உதவி இருக்கிறது. ஆயுதங்கள் கொண்டு அரேபிய நாடுகளைப் பணிய வைப்போம் என்று விடாப்பிடியாக இருந்தார். இதுவே ஷெரெத்துக்கும் பென் குரியனுக்கும் இடையே விரிசலை உண்டாக்கியது. ஒருகட்டத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையில் அமைதியிழந்த பென் குரியன், வெளியுறவு உளவுப் பிரிவை விட்டு லெபனான் பிரதமர் ரியாத் சோலைக் கொலை செய்ய உத்தரவு கொடுத்துவிட்டார்.
இது ஷெரெத்துக்குத் தெரியவந்ததும் கொதித்துவிட்டார். வெளியுறவு அமைச்சர் என் பேச்சைக் கேட்காமல் எப்படி உத்தரவு தருவீர்கள்? வெளியுறவு அரசியல் உளவுப் பிரிவு என் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனை இயக்க எனக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. உங்கள் தனிப்பட்ட விரோதங்களுக்கு எல்லாம் அமைச்சகத்தின் உளவாளிகளைப் பயன்படுத்தாதீர்கள். அதுவும் கொலை செய்வதற்கு!
ஒழுங்காக நான் சொல்வதைக் கேட்டு நடந்தால் நாட்டில் நிம்மதி நிலைக்கும் எனக் கூறி பென் குரியனின் உத்தரவைத் திரும்பிப் பெற்றுவிட்டார். இதுபோன்ற பல மோதல்கள் உருவாகின. பென் குரியனின் ரத்தம் கொதித்தது.
இனிப் பேசி பலனில்லை. நானே பார்த்துக்கொள்கிறேன். வெளிநாடுகளுடனான உறவை நிர்ணயிப்பதே வலுவான ராணுவமும், ஆழமான உளவும்தான். அதனை ஷெரெத் போன்ற கோமாளியின் கைகளில் கொடுக்க மாட்டேன். உடனே வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலிருந்து உளவுப்பிரிவை நீக்குகிறேன் என்று உத்தரவு கொடுத்துவிட்டார்.
நீக்கப்பட்ட வெளியுறவு அரசியல் உளவுப் பிரிவு 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பென் குரியனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இடம் மாற்றப்பட்ட உளவு அமைப்புக்குப் பெயரும் மாற்றப்பட்டது.
புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கான நிறுவனம் (The Institute for Intelligence and Special Operation) என்பது அதன் புதிய பெயர். சுருக்கமாக ‘நிறுவனம்’ என்று இஸ்ரேலியர்கள் அழைப்பர். நமக்கு மொஸாட்.
மொஸாட் எனும் அமைப்பு தொடங்கப்பட்டபோதே அமைதி வழிக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதால் இன்றுவரை உலக நாடுகளின் அமைதிக்கு எதிராகத்தான் செயல்பட்டுவருகிறது. அத்துடன் உள்நாட்டு அமைப்புகள் எதற்கும் கட்டுப்படாத, பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் வானளாவிய அதிகாரம் கொண்ட அமைப்பாகவும் இருக்கிறது.
இப்படித்தான் மொஸாடின் படுகொலை சரித்திரம் தொடங்குகிறது.
(தொடரும்)