Skip to content
Home » மொஸாட் #16 – கொலைகாரப் படை

மொஸாட் #16 – கொலைகாரப் படை

Isser Harel

பென் குரியன் எல்லா உளவு நிறுவனங்களையும் தன் கட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். பிரதமர் என்ற முறையில் மொஸாடும், ஷின்பெட்டும் தானாகவே அவரது கைகளுக்குள் வந்துவிட்டன. ராணுவ உளவுப் பிரிவான அமானையும் விட்டுவிடக்கூடாது என்பதற்காகப் பாதுகாப்பு அமைச்சர் பதவியையும் பிடுங்கிக்கொண்டார். இப்படியாக உளவு, அரசியல், ராணுவம் என மொத்த அதிகாரமும் பென் குரியன் வசம் வந்தது.

ஆனால் தொடக்கத்தில் இருந்தே இந்த உளவு அமைப்புகள் பற்றிய விவரம் பொதுமக்களுக்குச் சொல்லப்படாமலேயே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் ஷின்பெட், மொஸாட் ஆகிய பெயர்களை 1960 வரை இஸ்ரேலில் உச்சரிக்கவே தடை இருந்தது.

இதற்கு ஒரு காரணமும் இருந்தது. இந்த உளவு அமைப்புகளின் இருப்பை யாருக்கும் தெரிவிக்காமல் இருப்பதன் மூலம் அந்த அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு எவ்விதச் சட்டரீதியான நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் வகுக்காமல் இருக்க முடியும் என்று அவர் நம்பினார்.

இந்த உளவு அமைப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் பிரதமரின் நேரடி உத்தரவின் கீழ் மட்டுமே செயல்படும். இதனை இஸ்ரேலியப் பாராளுமன்றமோ, வேறு வெளி அமைப்புகளோ மேற்பார்வையிட முடியாது.

இதனால்தான் இன்றுவரை இஸ்ரேலியச் சட்டங்களால் உளவு அமைப்புகளின் இலக்குகளை, திட்டங்களை, அதிகாரத்தை, நிதியை, உறவை வரையறுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியவில்லை. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் அந்நாட்டின் எந்த ஒரு ஜனநாயக அமைப்புகளில் இருந்தும் விலகி, ஒரு நிழலுகச் சாம்ராஜ்ஜியமாகவே இயங்கின. இன்று வரை இயங்குகின்றன.

இந்த உளவு அமைப்புகள் வெளிமக்களை மட்டுமல்ல உள்ளூர் மக்களையுமே அச்சுறுத்தல் எனும் நோக்கில் அணுகின. பாலஸ்தீனர்களை மட்டுமின்றி இஸ்ரேலியர்களையும் எந்நேரமும் உளவு பார்த்து அவர்களுடைய சார்புகள், அரசியல் நிலைப்பாடுகள் என்னென்ன என்பதைக் கண்காணித்தன.

இஸ்ரேலிய உளவு அமைப்புகளை யாராலும் கேள்வி கேட்க முடியாது. உளவு அமைப்புகள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். நீதிமன்றத்தின் அனுமதியின்றி நீண்டகாலம் காவலில் வைக்கலாம். விசாரணை என்கிற பெயரில் சித்திரவதை செய்யலாம்.

அதேபோல புனையப்பட்ட வழக்குகளில் நிரபராதிகளைத் தண்டிக்க நீதிமன்றங்களில் பொய் சாட்சியம் சொல்வது, வழக்கறிஞர், நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற குற்றங்களிலும் உளவு அமைப்புகள் ஈடுபடும். இதுபோன்ற அத்துமீறல்களை யாராவது கேள்வி கேட்டால் அதனை நியாயப்படுத்துவதற்காக ஒரே ஒரு வார்த்தையை மட்டும் பென் குரியன் தயாரித்து வைத்திருந்தார், அது, ‘தேசத்தின் பாதுகாப்பு!’.

ஆனால் மேற்கூறிய குற்றச் செயல்களை எல்லாம் தாண்டி மொஸாடின் தனிச்சிறப்பாக இருந்தது, அவர்கள் செய்து வந்த அரசியல் கொலைகள்.

இஸ்ரேலியச் சட்டங்களில் மரண தண்டனை கிடையாது. ஆனால் பென் குரியன் தனக்கு இருந்த ஏகபோக ஆதரவைப் பயன்படுத்தி சட்டத்துக்குப் புறம்பான கொலைகளைச் செய்வதற்கான அதிகாரத்தைத் தனக்குத் தானே வழங்கிக்கொண்டார்.

இஸ்ரேல் உருவான புதிதில் உளவாளிகளே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியது இருந்தது. இதில் உளவாளிகள் பலர் மாட்டிக்கொண்டனர். மேலும், குற்றச் செயல்கள் புரிவதற்காக அந்தந்த நாடுகளில் வாழ்ந்த உள்ளூர் யூதர்களையும் பலி கொடுக்க வேண்டியதிருந்ததால் அவர்களும் மொஸாடுக்கு உதவுவதை நிறுத்தி இருந்தனர்.

இதனால் நாசவேலைகளைச் செய்வதற்கு என்றே தனிப்படையை உருவாக்கும் கட்டாயம் மொஸாடுக்கு ஏற்பட்டது.

1954ஆம் ஆண்டு இஸ்ரேலியக் கடற்படையைச் சேர்ந்த கேப்டன் அலெக்ஸாண்டர் இஸ்ரேல் என்பவர் கடன் தொல்லையில் இருந்து மீள்வதற்காக நாட்டின் ரகசிய ஆவணங்களை ரோமில் இருந்த எகிப்தியத் தூதரகத்தில் விற்க முயற்சி செய்தார்.

மொஸாட் இந்த விஷயத்தை மோப்பம் பிடித்துவிட்டது. அலெக்ஸாண்டரை நாடு கடத்தி இஸ்ரேல் கொண்டு வந்து தேசத் துரோகத் தண்டனை கொடுக்கத் திட்டம் தீட்டியது.

அலெக்ஸாண்டரைத் தூக்கி வருவதற்கு  ஐஸர் ஹரேல் சிறந்த உளவாளிகளைப் பொறுக்கி எடுத்து அனுப்பினார். இவர்களுக்குத் தலைவராகத் தனது உறவினர் ரஃபி ஈதன் என்பவரை நியமித்தார்.

ஈதனுக்கு அலெக்ஸாண்டரைக் கொலை செய்வதில் விருப்பமில்லை. என்ன இருந்தாலும் அலெக்ஸாண்டர் ஒரு யூதர். அதனால் அவரைப் பிடித்து வந்து சட்டரீதியாகத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என விரும்பினார். இதை எடுத்துச் சொல்லி ஹரேலையும் சம்மதிக்க வைத்தார். ஹரேலுக்கு உண்மையில் யூத சார்பெல்லாம் இல்லை. ஆனால் ஈதன் மீதிருந்த நம்பிக்கையில் அவரது திட்டத்துக்குச் சம்மதித்தார்.

அலெக்ஸாண்டர் பிரான்ஸில் இருப்பது மொஸாடுக்குத் தெரிந்தது. ஈதனும் மற்ற உளவாளிகளும் பாரிஸுக்குச் சென்றனர். அங்கு ஒரு பெண் உளவாளியை ஏற்பாடு செய்து அலெக்ஸாண்டரைக் காதல் வலையில் விழ வைத்துப் பிடித்துவிட்டனர். தூக்கிக் கொண்டு வந்து ஓர் அறையில் பூட்டி வைத்தனர்.

அலெக்ஸாண்டர் தப்பிவிடக்கூடாது என்பதற்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. பிறகு அவரைச் சரக்கு விமானம் ஒன்றில் ஏற்றி இஸ்ரேல் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டது.

அந்த விமானம் நேரடியாக இஸ்ரேல் செல்லும் விமானம் இல்லை. ஐரோப்பா வழியாக ஒவ்வொரு நாடாகச் சென்று சரக்கை ஏற்றிச் செல்லும் விமானம். அந்த விமானத்தில் செல்லும்போது அலெக்ஸாண்டர் தப்பி விடக்கூடாது என்பதற்காக ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மயக்க மருந்து தரப்பட்டது.

இதனால் ரத்தத்தில் மயக்க மருந்தின் அளவு அதிகமாகி அலெக்ஸாண்டர் ஏதென்ஸ் நகரை அடைந்தபோது இறந்துவிட்டார். அவரது உடல் விமானத்தில் இருந்தே கடலில் வீசப்பட்டது.

ஒருவழியாக அலெக்ஸாண்டரின் கதை முடிந்துவிட்டது. ஆனால் ஹரேலுக்கு இது பெருத்த அவமானமாகிப்போனது. கேவலம் ஒரு துரோகியை உயிருடன் பிடித்து வருவதற்குக்கூட மொஸாட் உளவாளிகளுக்கு வக்கிலையா என்று அவர் நினைத்தார்.

இதனால் இரண்டு விஷயங்களை முடிவு செய்தார். ஒன்று உளவாளிகளை மட்டும் வைத்திருந்தால் வேலைக்கு ஆகாது. தீட்டிய திட்டங்களைச் செய்து முடிக்கத் தனி கமாண்டோ படை ஒன்று வேண்டும் என்று முடிவெடுத்தார். இரண்டாவது, இனி எதிரிகள் எந்த இனத்தவர் என்றெல்லாம் பார்க்கக்கூடாது. அது யூதர்களாக இருந்தாலும் கவலையேபடாமல் போட்டுத்தள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

ஹரேல் மொஸாடுக்குத் துணையாகக் கொலைகார படைகளை உருவாக்கத் தொடங்கினார். பிற நாடுகளில் தைரியமாகப் புகுந்து நாச வேலைகள், அரசியல் கொலைகள் செய்யுமளவுக்குப் பயிற்சி பெற்ற வீரர்களை அவர் தேடினார்.

உண்மையில் அப்போதைய இஸ்ரேலிய ராணுவத்தில் இருந்த யாருமே இந்த அசாத்தியத் துணிச்சல் மிகுந்த வேலைகளைச் செய்ய முன்வரவில்லை. வேறுநாட்டில் மாட்டிக்கொண்டு இறந்துவிட்டால் என்ன செய்வது என்று அவர்கள் அஞ்சினர். அதனால் ஹரேலுக்குப் பயிற்சி பெற்ற வீரர்கள் என்பதைத் தாண்டி பயங்கரவாதிகளைப்போலச் சதித்திட்டம் தீட்டுபவர்கள் தேவைப்பட்டனர்.

எங்கே சென்று ஆட்களைத் தேடுவது என்று அவர் குழம்பியபோதுதான், பென் குரியனால் தடை செய்யப்பட்ட இர்குன், லெஹி அமைப்பைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதிகள் ஞாபகத்துக்கு வந்தனர்.

பென் குரியன் பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்ததும் பலர் வேலை இல்லாமல் விரக்தியில் இருந்தனர். ஷின்பெட் அமைப்பு அவர்களை அச்சுறுத்தல் பட்டியலில் வைத்துக் கண்காணித்து வந்தது. அவர்கள் ரகசியமாகச் செயல்பட்டால் ஆட்சிக்கே ஆபத்து ஏற்படலாம் என்றும் எச்சரித்திருந்தது. இதனால் இவர்களைச் சமாதானப்படுத்தும் கட்டாயமும் பென் குரியனுக்கு எழுந்தது.

இதேசமயத்தில் ஹரேல் வெளிநாடுகளில் பயங்கரவாதச் செயல்களைச் செய்ய ஆட்கள் கேட்டவுடன் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்கும் செயலாக இர்குன், லெஹி அமைப்பினரையே ஏன் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது என்று பென் குரியன் யோசித்தார்.

ஹரேல் இர்குன், லெஹி தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். மொஸாடுக்காகச் சிறப்பு அணி ஒன்றை உருவாக்குகிறேன். இணைந்து பணியாற்றத் தயரா? அதில் நீங்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கப்படும், கொலை வெறித் தாண்டவங்களை நிகழ்த்தவும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

அவர்களும் முழு மனதுடன் சம்மதித்தனர்.

இதன் மூலம் இரண்டு விஷயங்கள் நிகழ்ந்தன. ஒன்று இர்குன், லெஹி வீரர்கள் இப்போது ஐஸர் ஹரேலின் கட்டளைக்குள் வந்தனர். இரண்டாவது இவர்களை இஸ்ரேலை விட்டு வெளிநாடுகளில் வைத்திருப்பதன் மூலம் உள்நாட்டில் பென் குரியனின் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் நேராமல் பார்த்துக்கொள்ள முடிந்தது. இப்படியாக மொஸாடின் முதல் கொலைகாரப் படை ‘மிஃப்ராட்ஸ்’ உருவானது.

(தொடரும்)

_______________
படம்: மொஸாட் தலைவர் ஐஸர் ஹரேல்

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *