Skip to content
Home » மொஸாட் #17 – வெடிகுண்டு வைபவங்கள்!

மொஸாட் #17 – வெடிகுண்டு வைபவங்கள்!

உலகம் முழுவதும் இன்னல்களை அனுபவிக்கும் யூதர்கள் பாதுகாப்பாக வாழ ஓர் உறைவிடத்தை உருவாக்குகிறோம். அங்கு எந்தத் தேசத்து யூதர்களும் வரலாம். நிம்மதியாக வாழலாம். உலகில் ஏதாவது ஒரு மூலையில் வாழும் யூதர்களுக்குப் பிரச்னை என்றாலும்கூட இஸ்ரேல் துணை நிற்கும். யாராவது யூதர்கள்மீது கைவைக்க நினைத்தால் தயவு தட்சணையே இல்லாமல் தண்டிக்கும்.

இதுதான் இஸ்ரேல் உருவாக்கத்தை நியாயப்படுத்த சியோனிய யூதர்களால் முன்வைக்கப்பட்ட கூற்று. இஸ்ரேலை உலக யூதர்களின் பாதுகாவலர்கள் போலவும், அவர்களை மீட்டுத் தாய்நிலம் அழைத்து வரும் தேவதூதர்களைப்போலவும் சித்தரிக்கும் கூற்று.

ஆனால் இஸ்ரேல் எனும் தேசம் உயிர் பெறுவதற்காக பென் குரியனும் பிற தலைவர்களும் பல அப்பாவி யூதர்களின் உயிர்களைப் பலி கொடுத்தார்கள் என்பதுதான் உண்மை. அதற்காக அவர்கள் உளவுத்துறையின் துணையோடு நடத்தியதுதான் வெடிகுண்டு வைபவங்கள்.

0

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலை அமைக்க முதலில் அனுமதி கொடுத்த பிரிட்டன், இரண்டாம் உலகப்போரில் அரேபியர்களின் ஆதரவு வேண்டும் என்பதற்காக யூதக் குடியேற்றங்களை நிறுத்தச் சொல்லியது. பாலஸ்தீனத்திற்குப் பதில் வேறு ஏதாவது ஓர் இடத்தை ஏற்பாடு செய்து தருகிறோம் என்று வாக்களித்தது.

ஆனால் சியோனிய யூதர்கள் ஒப்புக்கொள்ளவே இல்லை. அது எப்படித் திடீரெனத் திட்டங்களை மாற்றலாம்? பாலஸ்தீனத்தில் மட்டும்தான் யூதர்கள் குடியேற வேண்டும். வேறு இடங்களுக்குப் பாலஸ்தீனர்கள் அனுப்பப்பட்டால் போதுமான ஜனத்தொகை இல்லாமல் தனிநாடு அமையும் திட்டம் கடினமாகிவிடும் என்று பென் குரியன் அஞ்சினார்.

இந்தச் சமயத்தில் ஹிட்லர் வேறு ஐரோப்பாவில் யூத அழிப்பை முடுக்கிவிட்டிருந்தார். ஐரோப்பாவிலிருந்து தப்பிக்கும் யூதர்கள் எப்படியும் பாலஸ்தீனம்தான் வருவார்கள் என்று பென் குரியன் நினைத்தார். ஆனால் யூதர்களோ அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் தஞ்சம் அடைய விரும்பினர்.

உடனே பென் குரியன் ஹகானா வீரர்களை அனுப்பி ஐரோப்பாவில் இருந்து தப்பிச் செல்லும் யூதர்களை எல்லாம் பிடித்து பாலஸ்தீனம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். ஹகானா வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு யூதர்களைக் கப்பலில் ஏற்றிக்கொண்டு பாலஸ்தீனம் திரும்பினர்.

பிரிட்டனோ யூதர்களை அனுமதிக்க மறுத்தது. வேண்டுமென்றால் நாங்கள் அனுமதிக்கும் எண்ணிக்கையில் குடியேறுங்கள். அத்தனை யூதர்களும் பாலஸ்தீனம் வரவேண்டும் என்று நினைத்தால் அப்படியே திரும்பிச் சென்றுவிடுங்கள் என்று எச்சரித்தது.

யூதர்களோ பிரிட்டன் என்ற ஒரே தேசத்தை நம்பித்தான் இஸ்ரேலை உருவாக்கும் திட்டத்தையே தொடங்கி இருந்தார்கள். இப்போது முதலாளியே திட்டத்தில் மண்ணை வாரி வீசினால் என்ன செய்வது?

1940ஆம் ஆண்டு 1173 யூதர்கள் சட்டவிரோதமாக இரண்டு கப்பல்களில் பாலஸ்தீனத்துக்குள் நுழைய இருந்தனர். அவர்கள் பாலஸ்தீனக் கடற்கரையை அடைந்த உடனேயே பிரிட்டன் கண்டுபிடித்துவிட்டது. கப்பல்களைத் தடுத்து நிறுத்தி, சைப்ரஸ் நாட்டில் வேறு இடம் ஏற்பாடு செய்து தருவதாகக்கூறி, திரும்பிச்செல்லச் சொன்னது. யூத அகதிகள் சைப்ரஸ் செல்வதற்கு பட்ரியா என்ற கப்பலையும் ஏற்பாடு செய்தது.

நவம்பர் 25ஆம் தேதி காலையில் சைப்ரஸுக்கு அனுப்பப்பட இருந்த யூதர்கள் பாலஸ்தீனத்தின் ஹைஃபா துறைமுகத்தில் பட்ரியா கப்பலில் ஏற்றப்பட்டனர். கப்பல் கிளம்ப இருந்த சில மணி நேரங்களுக்குமுன் திடீரெனப் பெரும் சத்தத்துடன் குண்டு வெடித்தது. கரையில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர். என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் பட்ரியா சுக்குநூறாக உடைந்து கடலுக்குள் மூழ்கியது. 257 யூதர்கள் உயிரிழந்தனர்.

எப்படி குண்டு வெடித்தது? யார் குண்டு வைத்தது? எதுவும் தெரியவில்லை. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே பிரிட்டனின் அடக்குமுறைக்கு எதிராக யூதர்கள் தங்களுக்குத் தாங்களே குண்டு வைத்து கூட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக பென் குரியன் அறிவித்தார். வாழ வழியிடம் இன்றி பாலஸ்தீனம் வருகிறோம். இங்கேயும் இனப்படுகொலை செய்கிறார்களே எனக் கண்ணீர் வடித்தார்.

அடுத்த நாள் காலை உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்கள் அனைத்திலும் குண்டு வெடிப்புச் செய்தியும், பென் குரியனின் கண்ணீரும்தான் தலைப்புச் செய்தியாக வந்தன. உடனே சர்வதேச இயக்கங்கள் பிரிட்டனுக்கு எதிராக முழக்கமிடத் தொடங்கின. பிரிட்டன் அரசு மீதமுள்ள அகதிகளைப் பாலஸ்தீனத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தன. அமெரிக்காவும் ஆட்டத்தில் சேர்ந்துகொள்ள பிரிட்டன் வேறு வழியில்லாமல் யூதக் குடியேற்றங்களை மீண்டும் அனுமதித்தது.

ஆனாலும் பிரிட்டன் ஓர் ஆணையத்தை அமைத்து கப்பல் குண்டு வெடிப்புக்கான காரணத்தை ஆராய்ந்தது. அப்போதுதான் அந்தக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதே பென் குரியனும் அவரது உளவுப்படையினரும்தான் என்கிற உண்மை தெரியவந்தது.

இஸ்ரேல் உருவான பிறகு இதுகுறித்து ஹகானாவின் தலைவர்களில் ஒருவரான ஷாவும் அபி கூர் என்பவரிடம் கேட்டபோது, பாதிக்கப்பட்டவர்களின் வலி புரிகிறது. ஆனால் எங்களுக்கு வேறு வழி இல்லை என்று சொன்னார். அதுமட்டுமில்லாமல் ஐரோப்பாவில் இருந்து தப்பித்து வேறு இடங்களில் புகலிடம் தேடும் யூதர்கள் மீதும் போர் தொடுக்க பென் குரியன் ரகசிய உத்தரவு பிறப்பித்திருந்ததையும் ஒப்புக்கொண்டார்.

இப்படியாகப் பாலஸ்தீனர்களைப்போலப் பல அப்பாவி யூதர்களின் உயிரைக் குடித்தும்தான் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது.

சரி, இஸ்ரேலை உருவாக்கிய பிறகாவது யூதர்கள் நிம்மதியாக இருந்தார்களா என்றால் அதுவும் இல்லை. புதிதாக உருவான நாட்டிற்கு உலகம் முழுவதிலும் இருந்து பல யூதர்களை அழைத்து வர வேண்டிய கட்டாயம் இருந்தது. இதற்காகப் பல பயங்கரவாதச் செயல்களை மொஸாடின் துணையுடன் இஸ்ரேல் அரங்கேற்றியது. அதில் ஒன்றுதான் உலகமே அலறிய பாக்தாத் குண்டு வெடிப்புகள்!

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *