Skip to content
Home » மொஸாட் #18 – பாக்தாத் குண்டுவெடிப்புகள்

மொஸாட் #18 – பாக்தாத் குண்டுவெடிப்புகள்

பாஸ்கா என்பது பழங்காலப் பண்டிகை. மத்தியக் கிழக்கில் வாழ்ந்த மேய்ப்பர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கூடி செம்மறி ஆட்டை பலியிட்டு இறைவானிடம் வழிபடுபவர். பின் ஒன்றாக அமர்ந்து விருந்துண்டு ஆடி, பாடி மகிழ்வர். இந்தப் பழக்கம் இன்றும் பல்வேறு வகையில் அரேபியர்களிடம் தொடர்கிறது. யூதர்களும் இந்தப் பண்டிகையைத் தங்கள் வழக்கப்படிக் கொண்டாடுகின்றனர்.

ஏப்ரல் 8, 1950 அன்று ஈராக்கின் பாக்தாத் நகரில் அமைந்திருந்த எல்-பெய்ட் விடுதியில் பாஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தது. அந்தக் கொண்டாட்டத்திற்காகப் பல்வேறு பகுதியிலிருந்து யூதர்கள் குழுமி இருந்தனர். இதில் பலரும் செல்வந்தர்கள். வணிகம் செய்து செழிப்புடன் வாழ்ந்தவர்கள். மேலும் சிலர் அரசு அதிகாரிகளாகவும், அறிவுஜீவிகளாகவும் இருந்தவர்கள்.

இத்தனை யூதர்கள் கூடியிருந்த அந்த நன்னாளில் இரவு 9.15 மணிக்குத் திடீரென்று பெரும் சத்தத்துடன் குண்டு வெடித்தது. நான்கு பேர் தூக்கி எறியப்பட்டுத் தரையில் விழுந்தனர். விடுதி முழுவதும் குருதியின் சிவப்பு நிறம் பூசியிருந்தது.

காரில் சென்ற மூவர் வெடிகுண்டைத் தூக்கி எறிந்ததாகச் சாட்சியங்கள் தெரிவித்தன. அப்பகுதி முழுவதும் பதற்றம் தொற்றிக்கொண்டது. மக்கள் அச்சத்தில் உலாவினர்.

அன்றிரவு பாக்தாத் நகரம் எங்கும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

‘யூதர்களே.. இப்போதே வெளியேறுங்கள். இனி உங்களுக்கு பாக்தாத்தில் பாதுகாப்பு இல்லை. இஸ்ரேலுக்கு வாருங்கள்’.

அடுத்த நாள் ஈராக்கை விட்டு வெளியேற ஒரு கூட்டம் முந்தியடித்துக்கொண்டு நின்றது. யூதர்கள் பலர் ஈராக்கில் தங்கள் குடியுரிமையைத் துறந்துவிட்டு இஸ்ரேலுக்குச் செல்லத் தயாராக இருந்தனர். கூட்டம் கட்டுக்கடங்காததால் அருகில் இருந்த யூதப் பள்ளிகளிலும் ஆலயங்களிலும் குடியேற்ற அலுவலகக் கிளைகள் தற்காலிகமாகத் தொடங்கப்பட்டன.

மே 10, காலை 3 மணி. மீண்டும் குண்டு வெடிப்பு. இந்தமுறை வெடித்தது யூதர் ஒருவருடைய நிறுவனம்.

மூன்றாவது குண்டு வெடிப்பு ஜூன் 3, 1950 அன்று பணக்கார யூதர்கள் வாழும் பகுதியில். அடுத்து இரு நாட்களில் யூதர்களின் கடைவீதியில். அடுத்த ஆண்டு ஜனவரி 14 யூதர்களின் ஆலயத்தில்.

அடுத்தடுத்த குண்டுவெடிப்புகள். பாக்தாத் நகரமே பற்றிக்கொண்டு எரிந்தது.

இந்த குண்டு வெடிப்பில் ஒரு சிறுவன் உட்பட 30 பேர் பலியாகினர். குண்டு வெடித்ததில் மின்சாரக் கம்பி அறுந்து, சிறுவன் மீது விழுந்து, மின்சாரம் பாய்ந்து கருகி இறந்திருந்தான்.

யூதர்கள் அலறியடித்து ஓடினர். தினமும் 700 பேர் வரை ஈராக்கை விட்டு வெளியேறினர். ஈராக்கிலிருந்து தப்பியவர்களை அழைத்துச் செல்ல இஸ்ரேல் விமானம் ஒன்றை அனுப்பி வைத்தது. யூதர்களைத் தாய்நிலம் அழைத்துச் செல்லும் மந்திரக் கம்பளத் திட்டம் என அதற்குப் பெயர் வைத்திருந்தது.

மக்களுக்கு யார் குண்டுகள் வைக்கிறார்கள், எதற்காகக் குண்டு வைக்கிறார்கள் எதுவும் புரியவில்லை.

அப்போது புதிதாக உருவாகி இருந்த இஸ்ரேலுக்கு மத்தியக் கிழக்கு முழுவதும் எதிர்ப்பு இருந்தது. அரேபிய மக்கள் யூதர்கள் மேல் கொந்தளிப்பில் இருந்தனர். அந்தக் கோபத்தில் குண்டுகள் வைக்கப்படுவதாகச் சொல்லப்பட்டன. ஆனால் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை. வழக்கை ஆழமாக விசாரித்த நீதிபதிகள் திடீரென மாற்றப்பட்டார்கள். புதிய நீதிபதிகள் சில இஸ்லாமிய இளைஞர்களைக் குற்றவாளிகள் எனச் சொல்லி சிறையில் அடைத்தார்கள்.

எல்லாம் சுமுகமாக முடிந்தது. ஆனால் உண்மை சில ஆண்டுகள் கழித்துத்தான் வெளியில் வந்தது.

0

அப்போது ஈராக்கில் பிரிட்டிஷ் ஆதரவு ஆட்சி நடைபெற்றது. ஈராக்கின் அரசராக இருந்த அப்தல்லாவும் சரி, பிரதமர் நவ்ரி எல் சயிதும் சரி, பிரிட்டிஷ் விசுவாசிகள். லண்டனிலிருந்து வரும் கட்டளையைக் கேள்வி கேட்காமல் பின்பற்றுபவர்கள். இஸ்ரேலுடனும் நல்லுறவில் இருந்தார்கள்.

புதிதாக உருவாகி இருந்த இஸ்ரேல் அரசு இவர்களை அழைத்துப் பேசியது.

இஸ்ரேல் எனும் தேசம் ஒருவழியாக அமைந்துவிட்டது. ஆனால் அத்தனை பெரிய தேசத்தை நிர்வகிக்க ஜனத்தொகை இல்லை. எதிரிகளோ இஸ்ரேலியர்களைவிட அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். என்ன செய்யலாம்?

இஸ்ரேல் பிரதமர் பென் குரியன், ஈராக்கின் அரசரிடம் மக்களைப் பண்டம் மாற்றம் செய்யலாம் என ஆலோசனை வழங்கினார். நாங்கள் எங்கள் நிலத்தில் இருக்கும் பாலஸ்தீனர்களை உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் எங்களுக்கு யூதர்களைக் கொடுங்கள். அவரவர் சொத்துக்களை இருவரும் எடுத்துக்கொள்வோம்.

ஆலோசனை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் திடீரென மக்களை வலுக்கட்டாயமாக விரட்டினால் அவர்கள் ஒத்துக்கொள்வார்களா? பாலஸ்தீனர்களை விரட்டுவதில்கூடப் பிரச்னை இல்லை. ஆனால் ஈராக் யூதர்களை? 2500 ஆண்டுகளாக ஈராக்கிலே வாழ்கிறார்கள். இஸ்ரேலியர்களைவிடவும் அரேபியர்களிடம் நெருக்கமானவர்கள். அவர்கள் வெளியேற ஒப்புக்கொள்வார்களா?

அதிலும் பலர் கோடிக்கணக்கில் சொத்துக்களை வேறு வைத்திருக்கிறார்கள். அத்தனை சொத்துக்களையும் துறந்துவிட்டு இஸ்ரேல் செல்லச் சம்மதிப்பார்களா?

ஒப்புக்கொள்ள வைக்கிறேன் என்றார் எல் சயித். ஈராக்கில் யூதர்கள் வாழ வழியில்லாத சூழலை ஏற்படுத்துகிறேன். வாழ்க்கை நிலை மோசமானால் தானாக வெளியேறிவிடப்போகிறார்கள் என்றார்.

முதலில் அரசு ஊழியர்களாக இருந்த யூதர்களை எல்லாம் பணியிலிருந்து நீக்கினார். யூத வியாபாரிகளுக்குத் தொழில் செய்யும் உரிமத்தை ரத்து செய்தார். போலீஸை ஏவி அற்பக் காரியங்களுக்கு எல்லாம் யூதர்களைக் கைது செய்தார். ஆனால் இத்தனை செய்தும் அவர் நினைத்த மாதிரி யூதர்கள் வெளியேறவில்லை.

வேறு என்ன செய்யலாம்?

பென் குரியன் மொஸாடிடம் வேலையைக் கொடுத்தார். மொஸாட் தரப்பில் பென் போரட் எனும் அதிகாரி ஈராக் சென்றார். நிலைமையை ஆராய்ந்தார். ஈராக் யூதர்களை விரட்ட இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

ஒன்று, யூதர்கள் வெளியேறுவதற்குச் சுலபமான வழியை ஏற்படுத்தித் தர வேண்டும். ஈராக்கிலிருந்து இஸ்ரேல் செல்ல விரும்புபவர்கள் சிரமம் இல்லாமல் வெளியேறும் வகையில் ஒருமுறை மட்டும் செல்லுபடியாகும் விசா வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவர் சொன்னபடியே மசோதா ஒன்று அவசரம் அவசரமாக உருவாக்கப்பட்டு ஈராக் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இரண்டாவதாக ஈராக்கில் ரகசியமாகச் செயல்பட்டு வந்த சியோனிஸ அமைப்புகளைச் சந்தித்தார் பென் போரட். அவ்வளவுதான். அடுத்த வாரத்திலிருந்து குண்டுவெடிப்புகள் தொடங்கின.

0

முதல் குண்டுவெடிப்பின்போது எக்கச்சக்கமான யூதர்கள் ஈராக்கை விட்டு வெளியேறினர். ஆனால் அவர்கள் அனைவரும் ஏழைகள். இஸ்ரேல் இதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் இலக்கு வைத்தது பணக்கார யூதர்களைத்தான். ஏற்கெனவே ஐரோப்பாவிலிருந்து வந்த மேற்கத்திய யூதர்கள் பலரும் வதைமுகாம்களிலிருந்து தப்பித்து வந்தவர்கள். சொத்து பத்துகள் இல்லாதவர்கள். இப்போது அரபு நாடுகளிலிருந்து வருபவர்களும் ஏழைகளாக இருந்தால் பொருளாதாரம் தாங்குமா?

அதனால் அடுத்தடுத்த குண்டுகள் பணக்கார யூதர்கள் வாழ்ந்த பகுதியில் வெடித்தன. சியோஸ அமைப்புகளும், ஈராக் அரசும் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு யூதர்களை இஸ்ரேல் தப்பித்துச் செல்லப் பிரசாரம் செய்தன.

ஈராக் யூதர்களும் வேறு வழியில்லாமல் தாங்கள் வேர் விட்டுப் பரவிய நிலத்தைவிட்டுச் செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்த தாய்நிலத்திற்குப் புலம் பெயர்ந்தனர்.

பாக்தாத் குண்டுவெடிப்பின் காரணமாகச் சுமார் 1.25 லட்சம் யூதர்கள் இஸ்ரேலுக்குள் குடியேறினர். அவர்கள் சொத்துக்களின் பெரும்பான்மையை ஈராக் அரசு முடக்கியது. எடுத்துச் சென்ற கொஞ்ச நஞ்ச சொத்துக்களின் பாதியையும் இஸ்ரேல் பிடுங்கிக்கொண்டது.

புலம்பெயர்ந்த யூதர்கள் இஸ்ரேலிலாவது நிம்மதியாக வாழ்ந்தார்களா என்றால் கிடையாது. அவர்கள் இரண்டாம் குடிமக்களைப்போல நடத்தப்பட்டனர். இஸ்ரேலில் மேற்கத்திய யூதர்களுக்கு அரசு வேலையும், கிழக்கத்திய யூதர்களுக்குக் கூலி வேலையும் கொடுக்கப்பட்டது. மேற்கத்திய யூதர்களால் கிழக்கத்திய யூதர்கள் கீழ்த்தரமாகப் பார்க்கப்பட்டனர்.

இந்தக் குண்டுவெடிப்புகளை விசாரிக்க வந்த நேர்மையான நீதிபதிகளை ஈராக் பிரதமர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்றினார். புதிய நீதிபதிகள் அவர் பேச்சைக் கேட்கும் கிளிப்பிள்ளையாய் இருந்தனர். இஸ்லாமியர்களையே குற்றம்சாட்டி உள்ளே தள்ளினர்.

குண்டு வைப்பு வைபவங்களின் உண்மை கர்த்தாவான மொஸாட் உளவாளி பென் போரட் இஸ்ரேலியப் பாராளுமன்ற உறுப்பினரானார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பான விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் 1966இல்தான் உண்மை தெரியவந்தது.

Haolam Hazeh எனும் இஸ்ரேலியப் புலனாய்வு பத்திரிகைதான் உண்மையைப் பொதுவில் போட்டு உடைத்தது. இன்றைக்கும் இஸ்ரேல் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துவந்தாலும் பல யூத ஆசிரியர்களே ஆதாரங்களுடன் இந்தக் குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் மொஸாடும் இஸ்ரேலும்தான் என்பதைப் பதிவு செய்துள்ளனர்.

உலகின் எந்த மூளையில் வாழும் யூதர்கள் மீது கைவைத்தாலும் இஸ்ரேல் உதவிக்கு வரும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேல் எனும் தேசமே யூதர்களைப் பலிகொடுத்துத்தான்  உருவானது என்பதைத்தான் அதன் உண்மை வரலாறு காட்டுகிறது.

 

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *