Skip to content
Home » மொஸாட் #19 – மொஸாடில் இணைவது எப்படி?

மொஸாட் #19 – மொஸாடில் இணைவது எப்படி?

உளவு அமைப்புகளில் வேலைக்குச் சேர்வது எப்படி? எல்லோருக்கும் இந்தக் கேள்வி இருக்கும். திரைப்படங்களில் உளவாளிகளைப் பார்த்திருப்போம். அவர்கள் இயங்கும் விதத்தைக் கண்டிருப்போம். ஆனால் அந்த உளவு அமைப்பில் எப்படிச் சேர்வது என்று தெரியுமா?

சாதாரணமாக ஒரு வேலையில் சேர வேண்டும் என்றாலே ஏகப்பட்ட பரீட்சைகள், நேர்காணல்கள், விசாரிப்புகள் இருக்கும். உளவுத்துறையில் சேர்வது சாதாரண விஷயமா? அதுவும் உலகின் மிக ஆபத்தான உளவுத்துறையான மொஸாடில்?

மொஸாடில் இணைவதற்கு முதலில் நீங்கள் ராணுவத்தில் வேலை பார்க்க வேண்டும். அது ஒன்றும் பிரச்னை இல்லை. இஸ்ரேலில் ஒருவருக்கு 18 வயது நிறைவடைவதற்கு உள்ளாகவே 3 ஆண்டுகள் கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டும் என்கிற சட்டம் இருக்கிறது. அங்கு உங்களுக்கு எதிரிகளை வெறுப்பதற்குச் சொல்லித்தரப்படும். குறிப்பாகப் பாலஸ்தீனர்களை. அதைச் சிறப்பாகப் செய்பவர்களுக்கு உளவுத்துறையில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

விக்டர் ஆஸ்ட்ரோவ்ஸ்கிக்கும் அப்படித்தான் ஒரு கடிதம் வந்தது.

‘நீங்கள் தகுதி பெற்றுவிட்டீர்கள். உங்களுக்கு நாட்டுக்குச் சேவை செய்ய விருப்பமா? நீங்கள் ஏற்கெனவே ராணுவ சேவை செய்கிறீர்கள் என்று தெரியும். அதைவிடச் சிறந்த சேவை செய்யும் வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறோம். ஆர்வம் இருக்கிறதா?’

யார் அனுப்பினார்கள், எங்கிருந்து கடிதம் வந்தது எதுவும் தெரியவில்லை. ஆனால் விருப்பம் இருந்தால் இங்கே வரவும் என்று ஒரு முகவரி மட்டும் எழுதியிருந்தது.

விக்டரும் கிளம்பிச் சென்றார். அது முழுதாகக் கட்டப்படாத கட்டடம். ஆனால் தனியார் நிறுவனங்கள் அதிகம் புழங்கும் கட்டடம். அங்கே ஓர் அலுவலகத்திற்குள் உள் அலுவலகமாக இருந்தது மொஸாடின் கிளை. அங்கிருந்த வயதான நபர் விக்டரை அழைத்து அமர வைத்தார்.

‘உங்களுக்கு முதலில் சில பரீட்சைகள் வைப்போம். அதில் தேர்ச்சி பெற்றால் நாங்கள் யார் என்பது உங்களுக்குத் தெரிய வரும்.’

முதலில் அங்கு மனநல மருத்துவர்கள் வந்தனர். அடுத்த நான்கு மணி நேரம் விக்டருக்கு உளவியல் சோதனைகள் நடைபெற்றன. அதில் எல்லாவற்றிலும் விக்டர் தேர்ச்சி பெற்றார்.

அடுத்த வாரம் இன்னொரு சோதனைக்கு அழைக்கப்பட்டார். அதில் சில கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டு பதில்கள் கேட்கப்பட்டன.

‘தேசத்திற்காகக் கொலை செய்வதை நீங்கள் தீமை எனக் கருதுவீர்களா? மனிதர்களுக்குச் சுதந்திரம் அவசியமா? சுதந்திரத்தைவிட முக்கியமான விஷயம் என்று வேறு எதைக் கருதுவீர்கள்?’ இப்படிப் பல கேள்விகள்.

இவை அனைத்துக்கும் விக்டர் திருப்திகரமான பதிலை அளித்தார். இதிலும் தேர்ச்சி.

இப்போது மூன்று நாட்களுக்கு ஒருமுறை விக்டர் அழைக்கப்பட்டார். அங்கே அவருக்கு முழு உடல் பரிசோதனைகள் நடைபெற்றன. 10 அறைகளில் வெவ்வேறு மருத்துவர்கள் அவரது உடலை ஆராய்ந்தனர். அவருடைய உடல் அமைப்பு, குறைபாடுகள், நோய்மைகள், ஆண்மை சோதனை, பற்களின் ஆரோக்கியம் என எல்லாமும் அலசப்பட்டன.

இவை முடிந்தவுடன் அழைப்பு வரவே இல்லை. விக்டருக்கு எதுவும் புரியவில்லை. எதற்காகச் சோதனைகள் நடைபெற்றன? என்ன எதிர்பார்த்தார்கள்? ஏன் மீண்டும் அழைக்கவில்லை? முதலில், யார் இவர்கள்? விக்டர் ராணுவத்தில் இருந்ததால் தான் உளவு அமைப்புக்காகச் சோதனை செய்யப்படுகிறோம் என்று புரிந்துகொண்டார். ஆனால் அது மொஸாடா, ஷின்பெட்டா, அமானா? எதுவும் தெரியவில்லை.

சரியாக ஒரு வருடம் கழித்து விக்டர் ராணுவத்தில் இருந்து வெளியேறி, அலங்கார ஜன்னல்கள் செய்யும் பயிற்சிப் பட்டறையை நடத்தி வந்தார். அப்போது அவரது வீட்டிற்கு டெலிபோனில் அழைப்பு வந்தது. நீங்கள் கடைசி பரீட்சையில் தேறிவிட்டீர்கள். அடுத்த சோதனைக்கு வரவும்.

இஸ்ரேல் பிரதமர்கள் தங்கும் ஓய்வு பங்கலா என்று சொல்லப்பட்ட ஓர் இடத்திற்கு விக்டர் அழைக்கப்பட்டார். ஆனால் உண்மையில் அதுதான் மொஸாடின் பயிற்சி மையம். இப்போதுதான் விக்டருக்குத் தான் மொஸாட் உளவாளிகளால் சோதிக்கப்படுகிறோம் என்றே தெரிந்தது.

இந்தமுறை விக்டரின் ஆங்கிலப் பேச்சுத் திறன் சோதிக்கப்பட்டது. இஸ்ரேலிய வட்டார வழக்கு கலக்காமல் ஆங்கிலம் பேசுவாரா? அரபு மொழி தெரியுமா? கனடா, அமெரிக்கா நாடுகளின் வரலாறு தெரியுமா? அந்நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள் பற்றி அறிந்து வைத்திருக்கிறாரா? கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் இந்தச் சோதனைகள் நடைபெற்றன.

அதன்பின் உண்மை அறியும் (Polygraph) சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் விக்டர் தன்னால் முடிந்த அளவுக்குப் பொய்கள் சொல்ல வேண்டும். ஆனால் அதை எதையும் உண்மை அறியும் இயந்திரம் கண்டுபிடிக்கக்கூடாது. அந்த அளவிற்குத் துல்லியமாக, உணர்வுப்பூர்வமாகப் பொய்களைச் சொல்ல வேண்டும்.

விக்டர் சோதனைக்கு அழைக்கும்போதே அவரிடம் சொல்லப்பட்டது, ‘எந்தக் காரணத்திற்காகவும், யாரிடமும் உண்மையான பெயரையோ, விவரங்களையோ சொல்லாதீர்கள். எல்லாமும் போலித் தகவல்களாக இருக்க வேண்டும்.’ உண்மையைப் பேசக்கூடாது என்பதுதான் மொஸாட் உளவாளிகளின் முதல் விதி.

விக்டர் அந்தச் சோதனையிலும் தேறினார். அதன்பின் இறுதிக்கட்டச் சோதனைகள் நடைபெற இருந்தன. இந்தச் சோதனைகள் நான்கு நாட்கள் நடைபெறும். தேறினால் வேலை. இல்லையென்றால் வந்த வழியில் திரும்பிவிட வேண்டும்.

இத்தனை கட்டுப்பெட்டித்தனமான சோதனைகளுக்குப் பின்புதான் மொஸாட் உளவாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதாக விக்டர் சொல்கிறார். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை 5000 நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பரீட்சைகள் வைக்கப்படுகின்றன. அதில் மிஞ்சி மிஞ்சிப்போனால் வெறும் 15 பேர்தான் தேர்ந்தெடுக்கப்படுவர். சில சமயம் ஒருவர்கூடத் தேராத நிலையும் உண்டு. இவர்கள்தான் மொஸாடின் நேரடி ஊழியர்கள். இவர்களுக்கு நல்ல சம்பளமும், சகல வசதிகளும் செய்துதரப்படும்.

அதேபோல 80களில் அரசியல் நெருக்கடியால் பெண்களையும் மொஸாட் அமைப்பு தேர்வு செய்தது. ஆனால் அவர்களுக்குத் தலைமைப் பதவி கிடையாது. முதல் காரணம், பெண்களின் கட்டளையை ஆண்கள் ஏற்கமாட்டார்கள் என்று மொஸாட் கருதியது. இரண்டாவது, பெண்களைத் தேர்ந்தெடுப்பதற்கு மைய நோக்கமே எதிரி நாடுகளின் அதிகாரிகளை ஆசை வலையில் விழ வைப்பதற்குத்தான். அதற்குத் தலைமைத்துவம் கொண்ட பெண்கள் தேவை இல்லை என்பது மொஸாடின் கருத்து.

உண்மையில் மொஸாட் தலைமை எதிர்பார்ப்பது சிறந்த உளவாளிகளைக் கிடையாது, பொருத்தமான உளவாளிகளை. அவர்களுக்கு வேண்டிய திறமை ஒருவரிடம் இருந்தால்போதும். அது கொலை செய்வதாக இருக்கலாம், குண்டு வைப்பதாக இருக்கலாம், ஆள் மாறாட்டம் செய்வதாக இருக்கலாம், ஆசை காட்டி ஏமாற்றுபவராக இருக்கலாம். நிச்சயம் மொஸாடில் அவர்களுக்கு இடமுண்டு.

0

இறுதிக்கட்டச் சோதனைகள் 1983ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கின. விக்டருடன் சேர்த்து மொத்தம் 10 பேர் அந்தச் சோதனைகளுக்காக அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு முதல் பரீட்சை தொடங்கியது.

அந்தப் பத்துப் பேரும் ஓர் அறையில் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் கலந்துரையாட வேண்டும். யாரும் தங்களுடைய உண்மையான விவரங்களை அடுத்தவரிடம் சொல்லக்கூடாது. ஆனால் அதேசமயம் அடுத்தவருடைய உண்மை விவரங்களை முடிந்த அளவு கறக்க வேண்டும். இதுதான் பரீட்சை.

ஆனால் தேர்வு வைக்கும் மொஸாட் உளவாளிகளே திடீரென்று உங்களை அழைத்து, ‘ஒருநிமிடம் உங்கள் பெயரை சொல்லுங்கள், மறந்துவிட்டேன்’ என்று கேட்பார்கள். அவர்களிடம்கூட நாம் தப்பித் தவறி உண்மையைச் சொல்லிவிடாமல் நடிக்கிறோமா என்பதுதான் சோதனை. நாம் கவனச் சிதறலில் உளறிவிடுவோமா என அறிவதற்கு இந்த ஏற்பாடு. அப்போதும் உண்மையைச் சொல்லாதவர்கள் தேர்ச்சி பெறுவார்கள்.

இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாவது சோதனைக்காகக் கூட்ட நெரிசல் மிகுந்த வீதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே தேர்வாளர் ஒவ்வொருவருக்கும் தனித்தனி வேலையைக் கொடுத்தார். விக்டருக்குக் கொடுக்கப்பட்ட வேலை, எதிரில் இருக்கும் கட்டடத்தின் மாடிக்குச் செல்ல வேண்டும். அதுவும் அந்த வீட்டின் உரிமையாளரையும் அழைத்துச் செல்ல வேண்டும். மேலும் மாடியில் நின்றுகொண்டு விக்டர் தண்ணீர் குடுவையில் இருந்து நீர் அருந்த வேண்டும்.

இதுதான் உண்மையான பரீட்சை. இஸ்ரேலில் எல்லோரும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்பது சட்டம். இல்லையென்றால் போலீஸார் கைது செய்துவிடுவர். அதனால் தெரியாத நபர்கள் யார் வீட்டிலும் ஒருவரால் நுழைய முடியாது. அடையாள அட்டை கேட்டால் மாட்டிவிடுவோம் இல்லையா? இருந்தாலும் விக்டர் தைரியமாக வீட்டுக் கதவைத் தட்டினார். திறந்தது ஒரு வயதான பெண்மணி.

‘வணக்கம், என் பேர் சிமோன். நான் போக்குவரத்துத் துறையிலிருந்து வருகிறேன். இந்தச் சாலை முனையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது எனக் கேள்விப்பட்டேன். உண்மையா?’

இஸ்ரேலின் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதி அது. சட்டென்று நினைவுக்கு வந்ததை விக்டர் பயன்படுத்திக்கொண்டார். உடனே அந்தப் பெண்மணியும் ஆம் என்று தலையசைத்தார்.

‘அந்த விபத்துக்களைத் தடுப்பதற்கு நாங்கள் சில வீடுகளின் மாடியில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தலாம் என்று இருக்கிறோம். உங்கள் வீட்டிலும் பொருத்த விரும்புகிறோம். இதற்காக உங்களுக்கு மாதம் 500 டாலர்கள் வாடகை தருவோம். உங்களுக்குச் சம்மதமா?’ என்றார்.

பணம் என்றவுடன் பெண்மணி வாயைப் பிளந்துவிட்டார். உற்சாகமாகச் சம்மதித்தார்.

கேமராவைப் பொருத்துவதற்கு முன் மாடியைப் பார்க்கலாமா என்றார் விக்டர்.

பெண்மணி மகிழ்ச்சியுடன் அழைத்துச் சென்றார்.

‘தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் தருகிறீர்களா?’

அடுத்த நிமிடம் வீட்டின் மாடியில், கையில் தண்ணீர் குடுவையுடன் உரிமையாளருடன் பேசியபடி நின்றார் விக்டர்.

விக்டருடன் வந்த இன்னொரு இளைஞருக்கு ஏடிஎம்பில் நின்ற ஒரு மூதாட்டியிடம் இருந்து 10 டாலர் கடன் வாங்கும்படி வேலை கொடுக்கப்பட்டது. அவர், தன் உறவினர் மருத்துவமனையில் இருப்பதாகச் சொல்லி ஏமாற்றி பணம் வாங்கிவிட்டார். இன்னொரு நபரிடம் விக்டருக்குக் கொடுக்கப்பட்ட அதே வேலை கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் தான் கேபிள் ஆபரேடர் அலுவலகத்திலிருந்து வருவதாகச் சொல்லி, சொதப்பி மாட்டிக்கொண்டு சோதனையில் தேறாமல் வெளியேறினார்.

இரண்டாவது சோதனை ஒரு விடுதியில் நுழைந்து, அங்கே விருந்தினர்கள் வருகைப் பதிவில் இருக்கும் மூன்றாவது பெயரைக் குறித்துக்கொண்டு வர வேண்டும்.

விக்டர் நேரடியாக உள்ளே நுழைந்து தான் ஒருவரைச் சந்திக்க வந்திருப்பதாகக் கூறிவிட்டு அங்கேயே அரைமணி நேரம் காத்திருப்பதுபோல நடித்தார். அலுவலகப் பணிப்பெண் பொறுத்துப் பார்த்துவிட்டு, யாரைப் பார்க்க வேண்டும் எனக் கேட்க, எதோ ஒரு பெயரைச் சொல்லி, அவர் எந்த அறையில் இருக்கிறார் என்று கேட்டிருக்கிறார். அந்தப் பெண் பதிவு நோட்டை எடுத்துத்தேட முயற்சிக்க, அதில் இருந்த மூன்றாவது பெயரைக் குறித்துக்கொண்டு வந்துவிட்டார் விக்டர்.

மூன்றாவது கொஞ்சம் வில்லங்கமான பரீட்சை. மொஸாட் தேர்வாளர்கள் ஒரு டெலிபோன் ஒட்டுக்கேட்கும் கருவியைக் கொடுத்து அதனை ஒரு பொது தொலைப்பேசியில் வைக்கக் கூறினர். அந்த பூத்தில் அன்றைக்கு என்று போன் பேசுவதற்கு அத்தனை கூட்டம் அலைமோதியது. வரிசையாக மக்கள் நிற்கின்றனர். இத்தனை பேரையும் மீறி யாருக்கும் தெரியாமல் தொலைப்பேசியைக் கழற்றி, ஒட்டுக்கேட்கும் கருவியை வைக்க வேண்டும்.

விக்டர் தன்னை ஓர் ஆங்கிலேயர்போலக் காட்டிக்கொண்டு டெலிபோன் பூத்தில் நுழைந்தார். யாரிடமோ பேசுவதுபோல ரிசீவரைக் கழற்றி உள்ளே ஸ்பீக்கரின் அருகே இந்த ஒட்டுக்கேட்கும் கருவியை வைத்துவிட்டார். மாட்டினால் கைதுதான். ஆனால் சாதுரியமாகச் செய்துவிட்டார்.

அவ்வளவுதான். அத்துடன் மூன்று முக்கியமான தேர்வுகள் முடிந்தன. அனைத்திலும் விக்டர் தேர்ச்சி பெற்றார்.

இப்போது கடைசி பரீட்சை. இரவு எட்டு மணி. ஒரு விடுதியைக் கண்காணிக்க வேண்டும். எளிய பணி. ஐந்து மாடிகள் கொண்ட அந்த விடுதிக்கு யாரெல்லாம் வருகிறார்கள், செல்கிறார்கள், அவர்கள் பார்க்க எப்படி இருக்கிறார்கள், என்ன உடை அணிந்திருக்கிறார்கள், ஒருவர் உள்ளே சென்றால் எவ்வளவு மணி நேரம் கழித்து வெளியே வருகிறார் என எல்லாவற்றையும் கண்காணித்துக் குறிப்பெடுக்க வேண்டும். கொஞ்சம் கடினமான வேலை. ஆனால் விக்டரைப் பொறுத்தவரை சுலபமான வேலை. முதல் மூன்று கடினமான வேலையையே முடித்தாகிவிட்டது. கண்காணிப்பது ஒரு விஷயமா? செய்கிறேன் என்றார் விக்டர்.

ஆனால் ஒளிந்துகொண்டு கண்காணிக்கக்கூடாது. வெளியே சாலையில் இருந்து கண்காணிக்க வேண்டும். அதுதான் சோதனை என்றனர் நிர்வாகிகள். விக்டர் யோசித்தார். அருகில் இருந்த கடைக்குச் சென்று ஓர் ஓவியம் வரையும் அட்டையை வாங்கி வந்தார். விடுதியின் அருகே ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து படம் வரைவதுபோல நடித்தபடியே அனைத்தையும் கண்காணித்தார். எல்லாம் நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. அரை மணி நேரம் ஆகியிருக்கும். திடீரென்று ஒரு கார் வந்து அவர் அருகே நின்றது. இறங்கியது ஒரு போலீஸ் அதிகாரி.

‘இங்கே என்ன செய்கிறாய்? உன் பெயர் என்ன?’

‘என் பெயர் சிமோன். நான் ஓர் ஓவியன். படம் வரைகிறேன்.’

‘இரவு 8 மணிக்கு யாராவது படம் வரைவார்களா? நீ போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவன் தானே? வண்டியில் ஏறு.’

‘இல்லை. நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள்.. நான்..’

விக்டரின் மூஞ்சிலேயே ஒரு குத்து விழுந்தது.

‘நீ நீண்ட நேரம் இங்கு இருப்பதாக அருகில் இருக்கும் வங்கியிலிருந்து புகார் வந்திருக்கிறது. ஒழுங்காக வண்டியில் ஏறு.’

‘இல்லை. நான் ஓவியம்தான் வரைகிறேன் நீங்களே பாருங்கள்.’

அந்த போலீஸ் அதிகாரி எதையும் கேட்கவில்லை. விக்டரை அள்ளிப்போட்டுக்கொண்டு காரில் பறந்தார்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *