அந்த வாகனம் பயணித்த ஒரு மணி நேரமும் விக்டர் உடலாலும் மனதாலும் சித்ரவதை செய்யப்பட்டார்.
‘நீ யார்? இப்போதே சொல். உண்மையைச் சொல்’
அடி விழுந்தது. வசை சொற்கள் காதுகளைத் துளைத்தன. ஆனால் விக்டர் வாய் திறக்கவில்லை.
போலீஸ் அதிகாரி விக்டரின் அடையாள அட்டையைக் கேட்டார். விக்டர் வீட்டில் வைத்துவிட்டு வந்ததாகப் பொய் சொன்னார். அதற்கும் அடி விழுந்தது. பிறகு அவருடைய ஆடையை உருவி ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார். எந்தப் பதிலும் இல்லை. பின் அந்த வாகனம் விக்டரை ஏற்றிய இடத்திலேயே இறக்கிவிட்டது.
நிர்வாணமாகச் சாலையில் தள்ளிவிட்டு, அவர் உடுத்தியிருந்த உடையைச் சற்று தூரத்தில் வீசிவிட்டுப் புறப்பட்டது.
விக்டர் மெதுவாக எழுந்து ஆடைகளை உடுத்திக்கொண்டபோது மொஸாட் தேர்வாளர்கள் அவரிடம் வந்தனர்.
‘வாழ்த்துகள். நீங்கள் தேர்வில் வெற்றிபெற்றுவிட்டீர்கள்’
0
இந்தக் கடத்தல் நாடகமே ஓர் உளவாளி ஆபத்தான சூழ்நிலையிலும் தான் யாரென்பதை எதிரிகளிடம் காட்டிக்கொடுக்காமல் இருக்கிறானா என்பதைச் சோதிப்பதற்காகத்தான். விக்டர் அதில் தேர்ச்சி பெற்றார்.
இரண்டு வாரம் கழித்து அவரை அலுவலகத்துக்கு வரவழைத்தனர். அவருக்கான உளவாளி பயிற்சி தொடங்கியது.
0
‘நமது நாடு ஆபத்தில் இருக்கிறது. எந்நேரமும் ஆபத்தில் இருக்கிறது. ராணுவத்தால் மட்டும் எல்லோருக்கும் பாதுகாப்பு தர முடியாது. அதைவிட வலுவான பாதுகாப்பு வேண்டும். அதுதான் மொஸாட்.’
இதுதான் அவருக்கு முதலில் சொல்லப்பட்ட வார்த்தைகள்.
உண்மையில் அப்போது மொஸாட் என்ற அமைப்பு இஸ்ரேலில் அதிகாரப்பூர்வமாக இயங்குகிறது என்பதற்கான எந்தச் சான்றுகளும் கிடையாது. ஆனால் எல்லோருக்கும் அதைப்பற்றித் தெரிந்திருந்தது. எல்லோரிடமும் அதைப் பற்றிய பிரமிப்பு இருந்தது.
‘அகாடமி’, இப்படித்தான் மொஸாடை அழைக்க வேண்டும். இனி மொஸாட் எனும் வார்த்தையை எங்கும் பயன்படுத்தக்கூடாது. ‘வஞ்சக வழிகளில் போர் செய்வோம்’ இதுதான் நமது தாரக மந்திரம். நினைவு வைத்துக்கொள்ளுங்கள் என்றார் அகாடமியின் இயக்குநர்.
யாராவது கேட்டால் பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை செய்வதாக மட்டும் சொல்லுங்கள். வேறு விளக்கங்கள் கூடாது. யாரையும் அனுமதி இல்லாமல் நட்பு பாராட்டக்கூடாது. காதலிக்கக்கூடாது. தொலைப்பேசியில் வேலையைப் பற்றிப் பேசக்கூடாது. நாங்கள் எல்லோருடைய உரையாடலையும் ஒட்டுக்கேட்போம். பேசுவது தெரிந்தால் முடிந்தது கதை.
இன்னொரு முக்கியமான விஷயம் திருமணமாகாதவர்களுக்கு மொஸாடில் பணி கிடையாது. திருமணம் செய்யாதவர்களுக்கு நிறையக் கவனச்சிதறல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. திடீரென்று ஒரு பெண்ணிடம் ஆசை வலையில் விழலாம். அந்தப் பெண் உளவாளியாகக்கூட இருக்கலாம். அதனால் திருமணமான ஆண்களுக்கே மொஸாடில் வேலை.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உண்மையைக் கண்டறியும் சோதனை நடைபெறும். நீங்கள் வெளியூர்களுக்குச் சென்று வரும் ஒவ்வொருமுறையும் இரட்டை உளவாளி வேடம் போடுகிறீர்களா என்று சோதிக்கப்படும்.
உங்கள் சொந்த பாஸ்போர்டை ஒப்படைத்துவிடுங்கள். நாங்கள் கொடுக்கும் பாஸ்போர்டைப் பயன்படுத்துங்கள்.
மொஸாட் உளவாளிகள் வாயை மூடிக்கொண்டு உத்தரவைப் பின்பற்ற வேண்டும். ஏன், எதற்கு என்று கேள்விகள் கேட்கக்கூடாது. போ என்றால் போக வேண்டும். நில் என்றால் நிற்க வேண்டும். கொல் என்றால் கொல்ல வேண்டும். சொந்தக் கருத்துகளுக்கோ, உணர்வுகளுக்கோ இங்கு இடமில்லை. விஸ்வாசம் மட்டுமே முக்கியம்.
முதல் ஆறு வாரங்கள் எந்த வேலையும் உளவு மாணவர்களுக்குத் தரப்படவில்லை. அலுவலகத்திற்கு வந்து அமைதியாக அமர்ந்துவிட்டுச் செல்ல வேண்டும். இதுதான் வேலை. உளவாளிகளின் பொறுமையைச் சோதிப்பதற்காக இந்தப் பயிற்சி. புதிதாக இணைந்திருந்த விக்டரும் அதைத்தான் செய்தார். அதன்பின் வேறு வகையான பயிற்சிகள் தொடங்கின.
மொஸாடின் இயக்குநர் அலுவலகத்தின் வெளியே அமெரிக்க அதிபர் வாரன் ஹார்டிங்கின் வாசகம் ஒன்று மாட்டப்பட்டிருக்கும்.
‘தர்மத்திற்காக அதர்மக் காரியங்களைச் செய்யாதீர்கள்.’. அதற்கு நேரெதிரான தர்மத்தை அகாடமி போதித்தது என்கிறார் விக்டர்.
0
மொஸாட் உளவாளிகளின் முதன்மை வேலை உளவு பார்த்து தகவல் சேகரிப்பது. அதற்கான தொழில்நுட்ப விஷயங்கள் சொல்லித்தரப்பட்டன. புதிய தொழில்நுட்பங்களின் அறிமுகங்கள் கொடுக்கப்பட்டன.
அதன்பின் அவர்களுக்குப் பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதனை Shaback என அழைப்பர். அதன்பின் NAKA என்பது தகவல் தயாரிக்கும் முறைமை. அதாவது, மொஸாட் உளவாளிகள் தினசரி சந்திக்கும் நபர்கள், பேசும் வார்த்தைகள், சந்தேகிக்கும் விஷயங்கள் குறித்து தினமும் அறிக்கை அனுப்ப வேண்டும்.
அதை ஏனோதானோ என்று எழுதக்கூடாது. அதற்கென்று ஒரு முறைமை இருக்கிறது. யார் அனுப்புகிறார், யாருக்கு அனுப்புகிறார், தேதி என்ன, எத்தகைய முக்கியத்துவம் கொண்ட அறிக்கை, இப்படி எல்லாவற்றையும் பார்த்து அதற்கு ஏற்றாற்போல எழுத வேண்டும்.
அடுத்ததாகச் செய்தித்தாள்களை வாசித்து அதனை உளவுச் செய்தியாக எப்படி மாற்றுவது எனப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பின் தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மொஸாட் அகாடமியின் பயிற்சிகள் கொஞ்சம் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தன. வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே இரண்டு நபர்கள் கதவை உதைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். ஒருவரிடம் பிஸ்டல் துப்பாக்கி. இன்னொருவரிடம் இயந்திரத் துப்பாக்கி. இருவரும் சரமாரியாகச் சுட்டனர். பிறகு சட்டென்று அறையை விட்டுத் தப்பி ஓடினர்.
பயிற்சி பெறும் உளவாளிகள் பயந்துபோய் தரையில் படுத்துவிட்டனர். பயிற்சியாளர் ரத்த வெள்ளத்தில் சுவரில் சாய்ந்து கிடந்தார்.
எல்லோருக்கும் அதிர்ச்சி. ஆனால் இதுவும் ஒரு சோதனைதான். பயிற்சியாளர் திடீரென்று எழுந்தார். தாக்குதல் நடத்தியவர்களைப் பற்றிய அடையாளங்களைக் குறிப்புகளாக எழுதச் சொன்னார். அவர்கள் உயரம், தோற்றம், என்ன ஆயுதம் பயன்படுத்தினார்கள் ஒன்றுவிடாமல் எழுத வேண்டும்.
மாணவர்கள் எழுதியவுடன் தாக்குதல் நடத்தியவர்களை உள்ளே அழைத்தார். அவர்களிடம் உங்களைப் பற்றி எழுதிய குறிப்புகள் அனைத்தும் சரியாக இருக்கிறதா எனப் படித்துப் பார்க்கச் சொன்னார். உண்மையில் அங்கிருந்த யாருமே துல்லியமாக எழுதவில்லை.
இந்தப் பயிற்சி, உளவாளிகள் பணியாற்றும் சூழலின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்வாங்குவதற்கான பயிற்சி. ஆபத்து என்று வந்தால் உயிர் பிழைப்பதற்கான பயிற்சி. ஆபத்துக்களைக் கண்டு அஞ்சாமல் உணர்ச்சிகளைக் கையாண்டு சமாளிக்கும் பயிற்சி. உளவாளிகளுக்கு எத்தகைய நிலையையும் சமாளிக்கும் திறனை வளர்க்கும் பயிற்சி. இதனை APAM என அழைத்தனர்.
அடுத்ததாகப் போலிச் சான்றிதழ்கள், அடையாள அட்டைகளைப் பயன்படுத்துவது எப்படி? பணி நிமித்தமாக ஓர் ஊருக்குச் சென்றால் அந்த இடத்தைப் பற்றி இண்டு இடுக்குவிடாமல் தெரிந்துகொள்வது எப்படி? அந்த ஊர் மொழியைப் புரிந்துகொள்வது எப்படி என அனைத்தும் சொல்லித்தரப்பட்டன.
அதேபோல ஒருவரை பின் தொடர்வது எப்படி? நம்மை யாராவது பின் தொடர்கிறார்களா என அறிவது எப்படி? நம்மை யாரும் சுற்றிவளைத்துவிட்டால் தப்புவது எப்படி? எல்லாவற்றுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஒருவேளை போலீஸிடம் மாட்டினால் எப்படிப் பொய் சொல்லித் தப்பிக்க வேண்டும் என்பதுகூட சொல்லித்தரப்பட்டது.
0
இதன்பின் வேறுவிதமான பயிற்சிகள் ஆரம்பமாகின. Boutiques என அழைக்கப்படும் பயிற்சியில் உளவாளிகளுக்குத் தகவல் தரும் உள்ளூர் ஆட்களை எப்படித் தேர்வு செய்வது? அவர்களை அவ்வாறு மூளைச் சலவை செய்து நமது வேலைக்காகப் பயன்படுத்துவது? தகவல் தருபவரை எப்போது, எத்தனை முறை சந்திக்க வேண்டும்? எப்படிச் சந்திக்க வேண்டும் என அனைத்தும் சொல்லித்தரப்பட்டன.
ஒவ்வொரு உளவாளியும் கட்டாயம் 20 நபர்களுடன் தொடர்பு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
மனிதர்கள் மூன்று விஷயங்களுக்காகப் பணி செய்யச் சம்மதிப்பார்கள்: ஒன்று பணம், மற்றொன்று உணர்வுகள் (பழிவாங்குதல், தேசப்பற்று, கடவுள் நம்பிக்கை இன்னபிற..) மூன்றாவது பாலுறவு. இதில் எது ஒருவருக்குத் தேவை எனக் கண்டறிந்து செயலாற்ற வேண்டும். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யக்கூடாது. பொறுமையாக, கவனமாக, இயல்பாக நிகழ்வதுபோலப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மதுவிடுதிகளில் சந்தித்து நமக்கு வேண்டிய தகவல்களைத் திரட்டுவது எளிது.
ஒருவர் வாழ்க்கையில் நிறைவுடன் இருக்கிறார், மகிழ்ச்சியாக இருக்கிறார் என்றால் அவரைப் பணிக்கு அமர்த்தக்கூடாது. அதேபோல யாரையும் மிரட்டக்கூடாது, சாமர்த்தியமாகப் பேசி வேலை வாங்க வேண்டும். இத்தனை விஷயங்களும் உங்கள் உள்ளுணர்வுடன் கலக்க வேண்டும் என்று சொல்லப்பட்டன.
உளவாளிகள் தாங்கள் கற்றுக்கொண்டதை அறையில் செய்துகாட்ட வேண்டும். அவை ரெக்கார்ட் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படும். அதில் உளவாளிகள் செய்யும் தவறுகள் கடுமையாக விமர்சனம் செய்யப்படும். காரணம், தவறுகளை அனுமதிப்பதற்கு இது வேறு ஏதோ ஒரு தொழில் அல்ல. உளவு. இதில் நாம் செய்யும் தவறுகள் உயிரைக்கூட விலையாகக் கேட்கலாம். அதனால் அத்தனை விஷயங்களிலும் கவனம் வேண்டும்.
அதேபோல ஒருதிட்டம் திட்டமிட்டபடியே நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கடைசி நேரங்களில் திட்டங்கள் மாறலாம். அதற்கு ஏற்றாற்போல் சமயோஜிதமாக யோசித்து வேலையை முடிக்க வேண்டும்.
அதன்பின் அயல்நாட்டு உளவு பணிகள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. உதாரணமாக வேறு நாடுகளின் குடிமகனைப்போல எப்படி ஒரு நாட்டில் நுழைவது? அந்நாட்டின் அரசு வட்டாரங்களில் எப்படி ஊடுருவுவது? அரசாங்கத்தின் மறைமுக நடவடிக்கைகளில் எப்படிப் பங்குபெறுவது? ஒருநாட்டில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்களை எவ்வாறு மேற்பார்வையிடுவது? இத்தனையும் போதிக்கப்பட்டன.
ஒவ்வொரு நாட்டுடனும் உறவை ஏற்படுத்த வேண்டும். இதற்கென்று மூன்று கட்ட செயல்வடிவம் இருக்கிறது.
முதலில் அந்நாட்டின் தேவையைக் கண்டுபிடிக்க வேண்டும், அதற்கு வேண்டிய ஆயுதங்களையோ, பயிற்சியையோ வழங்க வேண்டும், இதை வைத்து முக்கிய நபர்களுடன் உறவை உருவாக்க வேண்டும்.
சில நேரங்களில் ஒரே நாட்டில் பல்வேறு குழுவினருடன் நாம் உறவு மேற்கொள்ள வேண்டியது வரும். ஒரே நேரத்தில் அரசுடனும், அரசுக்கு எதிரான குழுக்களுடனும் பணியாற்ற வேண்டிய சூழல் வரும். அதனையும் கவனமாகச் செய்ய வேண்டும் என்றது மொஸாட்.
இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் இலங்கையில் அந்நாட்டு அரசுக்கும், அதேசமயம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் ஆயுதங்கள் விற்று, பயிற்சி அளித்து வந்தது மொஸாட்.
(தொடரும்)