Skip to content
Home » மொஸாட் #21 – அயல் உளவுக் கொள்கைகள்

மொஸாட் #21 – அயல் உளவுக் கொள்கைகள்

மொஸாடில் இருக்கும் மற்றொரு பிரிவு PAHA. இந்தத் துறையின் முக்கிய வேலையே எதிரிகள் கூடாரத்துக்குள் நுழைந்து குட்டையைக் குழப்புவதுதான். அதாவது எதிரிகளின் திட்டங்களை மோப்பம்பிடித்து அதனைக் கெடுத்து வைப்பது. இதற்கென்று வரைபடங்கள், கணினிகள், கண்காணிப்பு அமைப்புகள் என அனைத்தும் இருக்கும். இதை வைத்துக்கொண்டு இஸ்ரேலுக்கு எதிரான இயக்கங்களின் முக்கியப் புள்ளிகளைக் எந்நேரமும் கண்காணிக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும்.

ஒருவேளை ஏதாவது சந்தேகிக்கும்படியான நகர்வுகள் தோன்றினால் களத்தில் குதித்துக் கலைத்துவிட வேண்டும். 80களில் பாலஸ்தீன விடுதலை இயக்கமான பி.எல்.ஓ இஸ்ரேலுக்கு எதிராகத் தீவிரமாக இயங்கி வந்தது. அப்போது அந்த இயக்கத்துடன் தொடர்பில் இருந்த 15 லட்சம் நபர்களைத் தனித்தனியாகக் கண்காணித்தது மொஸாட்.

முக்கியத்துவம் இல்லாத விஷயங்களில்தான் சதித்திட்டங்கள் ஒளிந்திருக்கும் என்பது மொஸாடின் கணக்கு. அதனால் சிறுசிறு நகர்வுகள்கூட கண்காணிக்கப்பட வேண்டும். ஒருமுறை பி.எல்.ஓ கூடாரங்களுக்கு இறைச்சிகள் வந்து கொண்டிருந்தன. வழக்கமாக வெள்ளிக்கிழமை காலையில்தான் இறைச்சி வாகனங்கள் வரும். ஆனால் அன்றைக்கோ செவ்வாய்க்கிழமை. இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என மொஸாட் மோப்பம் பிடித்தது. தோண்டிப் பார்த்ததில் இறைச்சிகளுக்கு இடையில் ஆயுதங்கள். வாகனத்தைப் பாதி வழியிலேயே வெடிகுண்டு வைத்துத் தகர்த்தது மொஸாட்.

0

உளவாளிகளுக்குப் பயிற்சிக்குப் பிறகு .22 கேலிபர் அளவு கொண்ட பெரட்டா எனும் துப்பாக்கி வழங்கப்படும். இதுதான் மொஸாட் உளவாளிகள் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆயுதம். மிகச் சிறிய துப்பாக்கி. எளிதாக ஆடைகளில் ஒளித்துக்கொள்ளலாம். ஆனால் இதனை எப்போதும் பயன்படுத்தக்கூடாது. பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்தத் துப்பாகியைப் பயன்படுத்துவதே சட்டவிரோதம்.

பொதுவாக மொஸாட் உளவாளிகளுக்குச் சொல்லப்படும் விஷயம், ‘உங்கள் வேலையைச் சரியாகச் செய்தால் துப்பாக்கிகளே தேவையில்லை’ என்பதுதான். ஆபத்து என்றால் பேசியே தப்பிச் செல்பவன்தான் உண்மையான உளவாளி. வேறு வழியே இல்லை என்றால் மட்டும் துப்பாக்கியைப் பயன்படுத்துங்கள். அப்போது மிரட்டுவதற்காக இருக்கக்கூடாது, கொலை செய்வதற்காக மட்டுமே இருக்க வேண்டும்.

துப்பாக்கியை எங்கே, எப்படி ஒளித்து வைப்பது என்பதுகூட சொல்லித்தரப்பட்டன. ஒருவரைச் சந்திக்கச் செல்லும் இடங்களில் எங்கே ஒளித்துவைப்பது? பாதுகாப்பு நிறைந்த இடத்தில் கொலை செய்ய வேண்டும் என்றால் அப்போது துப்பாக்கியை எடுத்துச் செல்ல முடியாது. அதற்காக ஓரிரு நாட்களுக்கு முன்பே அங்கு துப்பாக்கியை ஒளித்து வைத்திருக்க வேண்டும். அதனை எப்படிச் செய்வது? ஒருவேளை வேறு ஓர் உளவாளி ஆயுதங்களை மறைத்துவைத்துச் சென்றிருந்தார் என்றால் அந்த இடத்தை எப்படிக் கண்டுபிடிப்பது? இப்படிப் பல பயிற்சிகள்.

உயிருக்கு ஆபத்து என்றால் அப்பாவிகளைப் பற்றிக் கவலைப்படாதே. சுயநலமாக நடந்துகொள். பிழைத்திருப்பதின் ஒரு பகுதிதான் சுயநலம் என்பது மொஸாட் சொல்லித் தரும் முக்கியப் பாடம்.

இதற்கு அடுத்து போலி ஆவணங்கள், பாஸ்போர்ட் தயாரிக்கும் வேலை. தேவையைப் பொறுத்து பல வகை பாஸ்போர்டுகள் தயாரிக்கப்பட்டன. சில பாஸ்போர்டுகள் சோதனை செய்யப்படும்போது மட்டும் காட்டுவதற்கு. இதுவே அரசு வட்டாரங்களில் நுழைய வேண்டும் என்றால் உயர்தரமான, உண்மைக்கு நிகரான பாஸ்போர்டுகள் வேண்டும். அதையும் அச்சடித்தது மொஸாட். இதற்கு என்றே இஸ்ரேலில் ஒரு கூடத்தை உருவாக்கி, அங்கு தனிச்சிறப்பு வாய்ந்த காகிதங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாட்டின் பாஸ்போர்டுகளையும், அடையாளங்களையும் அச்சிட்டு வருகிறது

0

மத்தியக் கிழக்கு குறித்து மிக ஆழமான வகுப்புகள் மொஸாட் அகாடமியில் நடத்தப்பட்டன. இஸ்லாம் பற்றி அத்தனை விஷயங்களும் சொல்லித்தரப்பட்டன. இஸ்லாமில் உள்ள பிரிவுகள் என்னென்ன, இஸ்லாமின் வரலாறு என்ன, நடைமுறைகள், விடுமுறை நாட்கள், செய்ய வேண்டியது, செய்யக்கூடாது அனைத்தும் போதிக்கப்பட்டன. இத்தனை ஆழமாகச் செல்வதன் நோக்கம், எதிரியை அத்தனை ஆழமாகப் புரிந்துகொள்வதற்குத்தான். அதேபோல சுற்றி இருக்கும் நாடுகள் அனைத்தும் இஸ்லாமிய நாடுகள் என்பதால் அந்த நாடுகளின் பிரச்னைகளை புரிந்துகொண்டு பயன்படுத்தவும் இஸ்லாம் குறித்து அறிவது அவசியம். அகாடமியில் பயிற்சி பெறும் மொஸாட் மாணவர்கள் ஒவ்வொருவரும் மத்தியக் கிழக்குப் பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து ஆய்விதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் முக்கிய விதி.

0

மொஸாடின் அம்சங்களில் ஒன்று Bodlm. அப்படியென்றால் தூதுவர்கள் என அர்த்தம். இவர்கள் உளவுத் தகவல்கள் தருபவர்கள் கிடையாது. உளவாளிகள் கொடுத்து அனுப்பும் தகவல்களை இஸ்ரேலிய தூதரகங்களுக்குக் கொண்டு செல்பவர்கள். அவர்களுக்கான பயிற்சிகளையும் உளவாளிகள்தான் வழங்க வேண்டும். அவர்களை யாரும் பின் தொடர்கிறார்களா என்று கண்காணிக்கச் சொல்லித் தர வேண்டும். தற்காப்புச் சண்டைகளையும் பயிற்றுவிக்க வேண்டும்.

மொஸாடின் கள உளவாளிகளின் பெயர் Katsas. இவர்களுக்குத் தேவையான பாஸ்போர்டுகள், ஆவணங்களைத் தூதரகங்களில் இருந்து கொண்டு செல்வதற்கும் தூதுவர்கள் உதவுவார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காகக் கள உளவாளிகள் இஸ்ரேலிய தூதரகங்களுக்குள் நுழைய அனுமதி இல்லை. தூதுவர்கள் மூலமே செய்திகளும், ஆவணங்களும் பரிமாறப்படும்.

பொதுவாகத் தூதுவர்கள் 20-25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள். அப்போதுதான் அவர்களால் துடிப்புடன் செயல்பட முடியும் என்பதால். தேர்ந்தெடுக்கப்படும் ஒரு தூதுவருக்கு ஓரிரு ஆண்டுகள் மட்டுமே வேலை தரப்படும். அதன்பின் அவர்களைப் பயன்படுத்தக்கூடாது.

பொதுவாக இஸ்ரேலியக் கல்லூரி மாணவர்கள் இந்த வேலைகளில் அதிகம் ஈடுபடுவர். அவர்கள் தங்குவதற்கு வீடு, உணவு, இதர செலவுகளுக்கான தொகை அனைத்தும் தரப்படும். பணியில் இருக்கும் உளவாளிகள் அந்த வீட்டில்தான் தங்கிச் செல்வர். அதனால் வீட்டைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வைப்பதும் தூதுவர்களின் வேலைதான். இந்த வேலைகளைச் செய்வதன் மூலம் மாணவர்களுக்கு மாதம் 1500 டாலர்கள் வரை வருமானம் கிடைக்கும். இது நல்ல தொகை என்பதால் கல்லூரியில் படித்துக்கொண்டே பகுதிநேர வேலைவாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வர்.

அதன்பின் Mishlasim. ரகசியப் பெட்டி என்பது இதன் பொருள். அதாவது மொஸாட் உளவாளி நேரடியாகத் தூதுவர்களைச் சந்திக்காமல் செய்தியைச் சொல்ல வேண்டும் என்றால் சில ரகசியப் பெட்டிகளை உருவாக்க வேண்டும். அங்கே தான் விரும்பும் தகவலை விட்டுச் செல்ல வேண்டும். வேறு உளவாளியோ, தூதுவர்களோ வந்து தகவலை எடுத்துச் சென்று வேண்டிய இடத்தில் சேர்த்துவிடுவர். பெட்டிகள் என்றால் உண்மையான பெட்டிகள் என்பதல்ல பொருள். உதாரணமாகச் சாலையில் கிழிந்து கிடக்கும் காலணி ஒரு ரகசியப் பெட்டியாக இருக்கலாம். வழக்கமாக ஒரு வீட்டின் வாசலில் நிற்கும் ஒரு வாகனம் ரகசியப் பெட்டியாக இருக்கலாம். இந்த ரகசிய இடங்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதும் பயிற்சியில் சொல்லித் தரப்படும்.

அதேபோல ‘காஃபி’ என்பது அந்நியர்களைச் சந்தித்து தகவல்களைக் கறக்கும் பயிற்சி. ‘பச்சை’ என்பது உளவாளிகளுக்குத் தகவல் தருபவருக்கு ஆபத்து என்றால் அவர்களை உஷார்படுத்தும் பயிற்சி. இஸ்ரேலின் நன்மைக்காக அத்தனை நாள் தகவல் தந்த அப்பாவிகளைப் பலி கொடுக்கும் நிகழ்வுகளும் நடைபெறும். அதற்கும் உளவாளிகள் தயாராக இருக்க வேண்டும்.

இஸ்ரேலுக்கு வெளியே வாழும் யூதர்களை ‘Sayanim’ என்று அழைப்பர். அப்படியென்றால் தன்னார்வலர்கள் என்று பொருள். இந்தத் தன்னார்வலர்களைச் சந்தித்து தொடர்பு வைத்துக்கொள்வதும் அயலக உளவாளிகளுக்கு அவசியம். ஓர் உளவாளி திடீரென்று வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அவருக்குத் தேவையான கார்கள், தங்குமிடங்கள், மருத்துவ உதவிகளைக்கூட அந்தத் தன்னார்வலர்களிடம் இருந்துதான் பெற முடியும். ஆனால் அவர்களிடம் திட்டங்கள் எதையும் சொல்லக்கூடாது. மொஸாடுக்கு லட்சக்கணக்கான தன்னார்வலர்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றுகிறார்கள். அத்தனையும் விஸ்வாசத்தின் அடிப்படையில் மட்டும்.

பொதுவாக வெளிநாடுகள் ஆபத்தானவை. குறிப்பாக ஈரான், சிரியா போன்ற நாடுகளைக் கேட்கவே வேண்டாம். அந்த இடங்களில் பெரும்பாலும் பாலஸ்தீன ஆதரவாளர்கள்தான் இருப்பார்கள். அந்தச் சூழலில் உளவாளிகள் பத்திரமாக இயங்கவும் பயிற்சி வேண்டும். அங்கே யாராவது பின் தொடர்ந்தால் எப்படிச் சுற்றவிடுவது, மாட்டிக்கொள்ளாமல் வேலையை முடிப்பது அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்தப் பயிற்சிகள் எல்லாம் முடிந்தவுடன் நிதி பயிற்சி தொடங்கப்படும்.

ஒருவரிடம் தகவல் வாங்க வேண்டும் என்றால் பெரும்பாலும் பணம் கொடுத்தால்தான் முடியும். அதற்கு முன் அவருடைய பொருளாதார நிலையை அறிய வேண்டும். ஒருவர் ஏழையாக இருந்தால் அவரிடம் கை நிறையப் பணத்தைத் தரக்கூடாது. அது சந்தேகத்தை ஏற்படுத்தும். அதேபோல சில உதவியாளர்களுக்குச் சம்பளம் பேசப்படும். அப்படிப் பேசினால் அவர்கள் வங்கிக் கணக்கைச் சம்பந்தமே இல்லாத ஒரு நாட்டில் தொடங்கி, அதில் தொகையை மொத்தமாகச் செலுத்திவிட வேண்டும். தொடக்கத்தில் முன்பணமாகச் சில தொகையைக் கொடுத்துவிட்டு, வேலை முடிந்தவுடன் வங்கி விவரங்களைத் தர வேண்டும். எக்காரணம் கொண்டும் பேசிய தொகையைத் தராமல் இருக்கக்கூடாது.

மொஸாடுக்கு தகவல் தரும் பணியாளர்கள் சில நேரங்களில் ஒரு நாட்டின் அமைச்சர்கள், அதிகாரிகள் என முக்கியப் புள்ளிகளாகக்கூட இருப்பார்கள். அத்தகையவர்களுக்கு மாதச் சம்பளமே 50,000 டாலர்கள் வரை தரப்படும்.

0

இதேபோல மொஸாடில் Komemiute எனும் பிரிவு உண்டு. இவர்கள் வேலை எல்லா உளவாளிகளையும் கையாள்வது. குறிப்பாக அரபு நாடுகளில் ஊடுருவி இருக்கும் உளவாளிகளை. அதேபோல Kidon என்கிற பிரிவு உண்டு. இவர்கள் மூன்று அணிகளாக மொத்தம் 12 பேர் இருப்பார்கள். இவர்களுடைய வேலை கொலை செய்வது. இந்தக் கொலைகார படைக்கு மொஸாடின் மற்ற பிரிவுகள் பற்றி எதுவும் தெரியாது. உளவாளிகள் தகவல் சொல்லிவிட்டுச் சென்றவுடன் படுகொலைகள் செய்வது மட்டுமே இவர்களது வேலை.

வணிக உளவாளிகளும் மொஸாடில் உண்டு. இவர்களுடைய வேலை பல்வேறு நாடுகளுக்குச் சென்று வியாபாரம் தொடங்கி ஆண்டுக் கணக்கில் அந்த நாட்டிலிருந்துகொண்டு அந்நாட்டின் பொருளாதாரத்தை, சந்தையை, அந்நாட்டு நிறுவனங்களைக் கண்காணித்து இஸ்ரேலிய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். ஒருநாட்டை வணிகத்தின் மூலமாகக் கட்டுப்படுத்த இவர்களுடைய பங்கு அளப்பரியது. இதைத்தவிர மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், கல்வியாளர்கள் என்று அனைத்து வகை உளவாளிகளும் மொஸாடில் பயிற்சி பெறுவர்.

இப்படியாகப் பயிற்சிகள் எல்லாம் முடிந்தவுடன் மொஸாட் உளவாளி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார். அவ்வாறு விக்டர் சென்ற நாடு இலங்கை. அவர் சென்றதன் நோக்கம், விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி அளிப்பது.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *